நா.வா.வின் மார்க்சிய தமிழ் சமூகவியல்
தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் , இலக்கியத்தையும் அறிவியல்ரீதியாக, ஆராய்ந்து ஆராய்ச்சி உலகில் புதிய பாதை ஏற்படுத்தியவர் நா.வானமாமலை அவர்கள். திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில், 7.12.1907-ல் பிறந்தவர்.
திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் புதுமுகப் படிப்பு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிப்பு, சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியல் பட்டம், முதுகலை படிப்பு என தனது கல்வி வாழ்க்கையை அமைத்து,சில வருடங்கள் ஆசிரியர் பணியிலும் இருந்தார். நாங்குனேரி விவசாயிகள் இயக்கம், நெல்லை தொழிலாளர் இயக்கம்,கோயில் நுழைவு, சாதிக் கொடுமைகள் எதிர்ப்பு, நில மீட்புப் போராட்டங்கள் என போராட்ட வாழ்க்கை கொண்டவர். நெல்லைச் சதிவழக்கு விசாரணைக் கைதிகளில் இவரும் ஒருவர். தமிழில் அறிவியல் பாடநூல்கள் குறித்து அக்கறை கொண்டு,’தமிழில் முடியும்’ என்னும் தொகுப்பு நூல் வெளியிட்டார்.
நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், அடித்தள மக்கள் ஆய்வு போன்றவற்றை தமிழில் அறிமுகம் செய்த பெருமை இவரைச் சாரும்.மார்க்சிய அடிப்படையில் தமிழ்மொழி, இலக்கிய ஆய்வுகளை வரலாறு, தொல்லியல், மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பிற துறைகளுடன் இணைத்து, கூட்டாய்வுகளாக வளர்த்தெடுத்தார்.இந்த துறைசார் பிரச்னைகளை,மார்க்சிய நோக்கில் அணுகி ஆராய்ந்திட அவரது எழுத்துக்கள் இன்றும் துணை புரிகின்றன.அவர் 1980-ஆண்டு மறைந்தார். அவரது, நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய கட்டுரை இந்த இதழில் வெளிவருகிறது.
கட்சித்திட்டம் விளக்கத் தொடரின் இரண்டாவது பகுதியை மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவரான தோழர் சங்கரய்யா நினைவுகளிலிருந்து பகிர்ந்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் சீனிவாச ராவ் திருப்பூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சிக் கல்வி பயிற்சி முகாமில் ஆற்றிய உரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.இது முக்கியமாக மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டு வரும் கட்சி கல்விப் பணிகள் குறித்தது.
மத்திய பட்ஜெட்டின் மக்கள் விரோத தன்மையை ஆத்ரேயா விளக்கியுள்ளார். ரஷ்ய புரட்சி வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் லெனின் எழுதிய நூலை என்.குணசேகரன் மார்க்சிய செவ்வியல் நூல் வரிசையில்அறிமுகப்படுத்தியுள்ளார்.
“பகத்சிங் கடிதம் பிரசுரித்துள்ளொம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் கொண்ட அற்புதமான படைப்பு.” கேள்வி பதில், இதர பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளை வாசிப்பதுடன், மறக்காமல் உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்.
– ஆசிரியர் குழு