மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


திருப்புமுனை மாநாடு பி. ராமச்சந்திரன் (feb 2008)


6வது கட்சி காங்கிரஸ் பற்றி சில விவரங்கள் முந்தைய
கட்டுரைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த
மாநாட்டினுடைய பின்னணியில் இருந்து வந்த ஆழமான அரசியல் பாகுபாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். எந்த அளவிற்கு இந்த வேற்றுமைகள் கட்சியை பாதித்தது அல்லது கட்சி காங்கிரஸ் விவாதங்களை பாதித்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்.
இரண்டு, மூன்று அரசியல் நகல் தீர்மானங்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டபோதிலும், மாநாட்டின் இறுதியில் தீர்மான வடிவில் எந்த முடிவினையும் மாநாடு எடுக்கவில்லை. மாநாட்டில் அரசியல் நிர்ணயிப்புகள், கருத்துகள், நடைமுறை தந்திரங்கள், தத்துவார்த் பிரச்சனைகள் போன்றவற்றில் எல்லாம் பல கருத்துக்கள் மோதின. எந்த தலைவருடைய அல்லது எந்தப் பிரிவினருடைய நகலையோ, நிர்ணயிப்புகளையோ வாக்கெடுப்பு மூலமாக முடிவு செய்ய முடியாத அளவிற்கு கருத்து மோதல்கள் இருந்தன.
சாதாரணமாக, ஒரு கட்சி மாநாட்டில் நிறைவாக வாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆழமான வேற்றுமைகள் காரணமாக, வாக்கெடுப்பு மூலமாக எந்த நகல் அறிக்கையும் மாநாடு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலை இந்த மாநாட்டில் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கட்சியில் அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடிய முடிவுதான் என்ன? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய நிர்ணயிப்புகளை ஆய்ந்து, பொதுச் செயலாளர் தோழர் அஜய்கோஷ் எந்த பிரிவும் மறுக்காத கருத்துக்களை தொகுத்து தொகுப்புரையை வழங்கினார். அந்த தொகுப்புரையில் பல கருத்துக்கள் ஏற்புடையதாக இருந்தன. அதன் காரணமாக, மாநாட்டின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படா விட்டாலும், பொதுவாக அஜய்கோஷின் சொற்பொழிவை ஆதாரமாகக் கொண்டு, கட்சிப் பணிகளை செய்வது என்ற ‘சமரசம்’ ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த விசித்திரமான முடிவானது, உடனடியாக உதவிகரமாக இருந்தபோதிலும், கட்சியிலிருந்த ஆழமான கருத்து வேற்றுமை களை தீர்ப்பதற்கு உதவிடவில்லை. உண்மையைக் கூறப்போனால், அரசியல் குழப்பமும் மேலும் தீவிரமடைந்தது என்றே கூறவேண்டும்.
ஆக, ஆறாவது கட்சி காங்கிரசிற்கு பிறகு, கட்சிக்குள் தென் பட்ட அனைத்து வேற்றுமைகளும் தீவிரமடைந்து உட்கட்சி நிலைமை மிகவும் சிக்கலாகிவிட்டது.
இந்த உட்கட்சி நெருக்கடியானது கட்சி வாழ்க்கையை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் மோசமான நிலைமைகளை ஏற்படுத்தியது. கட்சியின் செயல்பாடும் ஒற்றுமையும் பாதித்தன.
இந்தியாவில் புரட்சிகரமான இயக்கத்தின் பாதை எது என்பதைப் பற்றி கூர்மையான கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன. ஆளும் வர்க்கத்துடன் அவர்களின் ஆட்சியுடன் சமரசமாக சென்று முன்னேறுவது என்ற ஒரு பாதைக்குதான் தேசிய ஜனநாயக பாதையென்று பெயரிடப்பட்டது. மாறாக, தொழிலாளி வர்க்கத் தலைமையில் மக்கள் ஜனநாயக பாதைதான் அடிப்படையான முன்னேற்றத்திற்கு பாதை என்ற கருத்தும் வலுவாக மோதின.
இதேபோல் பெரு முதலாளித்துவத்தின் தலைமையிலான ஆளும் வர்க்கத்தின்பாலும், அதன் கட்சியின் பாலும் அனுஷ்டிக்க வேண்டிய நடைமுறை தந்திரத்தைப் பற்றியும் ஆழமான வேற்றுமைகள் வளர்ந்து வந்தன.
இது எத்தகைய வடிவங்களில் இக்கருத்து வேற்றுமைகள் தோன்றின என்ற விவரங்களுக்கு இங்கு செல்லவில்லை.
இன்னும் மிகப்பெரிய ஒரு பிரச்சினை கட்சிக்குள் பெரும் சர்ச்சைகளுக்கும் கருத்து வேற்றுமைகளுக்கும் வழிவகுத்தது. இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை மிகவும் மோசமான சூழ்நிலையை அடைந்து கட்சியின் மொத்த நிலைபாட்டினையே விவாதத்திற்கு இட்டுச் சென்றது. சமாதானமான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக எல்லைப் பிரச்சினையில் என்ற நிலைபாட்டினை கட்சியின் ஒரு சாரார் ஒருமையாக கடைப்பிடித்த நேரத்தில் எல்லைப் பிரச்சினையை ஆளும் கட்சியின் நிலை பாட்டினை முழுமையாக ஆதரிப்பது என்ற ஒரு கொள்கையை பிற்காலத்தில் வலதுசாரிகள் என்று அறியப்பட்டவர்கள் முன்வைத்தனர். இதுவும், ஒரு பெரும் கருத்து வேற்றுமைக்கு அடிகோலியது.
கட்சியில் தோன்றிய தத்துவார்த்த, அரசியல் நடைமுறை வேற்றுமைகளுக்கு மிகப்பெரிய ஒரு காரமணாக உருவானது. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வலுவாக தோன்றி பரவிய தத்துவார்த்த கருத்து வேற்றுமைகளால் உலகம் தழுவிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேற்றுமைகள் ஆழமாக பரவியதை தீர்ப்பதற்கு கட்சிகளெல்லாம் கூட்டாக, சில முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், நாளடைவில் கருத்து மோதல்கள் பெரிய அளவில் தீவிரமடைந்ததுதான் உண்மை. சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் தோன்றிய கருத்து மோதல்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலும் அணிகளிடமும் பிரபலிக்கத்தான் செய்தன. பொதுவான கருத்து வேற்றுமைகள் மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு இடையிலான உறவுகளும் சீர்குலைந்து விட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பல கட்சிகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடுகளை பொதுவாக ஆதரித்த சில கட்சிகளும் இருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற்றுமை பெருமளவில் சிதைந்துபோகும் ஒரு நிலைமையும் இருந்தது.
மூன்றாவது, இந்த வேற்றுமைகளெல்லாம் தீவிரமடைந்து வந்ததின் காரணமாக கட்சியின் செயல் ஒற்றுமையில் தோழமை உணர்வும் படிப்படியாக சிதைந்து வந்தன. பல்வேறு இடங்களிலும், அரங்கங்களிலும் கட்சித் தோழர்கள் ஒற்றுமையின்றி செயல் பட்டது மட்டுமல்ல; தனிப்பிரிவுகளாகவே செயல்பாட்டிலும், நடைமுறை வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் வகையில் பணி யாற்றினர். சுருங்கக்கூறின் அரசியலைச் சார்ந்த ஆழமான கோஷ்டி களாக, கட்சி சிதறுண்டு போகும் நிலைமையை எட்டி விட்டது.
முரண்பாடுகள் தத்துவப் பிரச்சினைகளோடு நிற்காமல் நடைமுறைப் பிரச்சினைகளிலும் இருந்தன புகுந்தன. ஸ்தாபன செயல்பாடுகளின் தவறுகள் காரணமாகவும், ஒரு கட்சியாக செயல்பட முடியாத அளவிற்கு எதார்த்த நிலைமைகள் உருவெடுத்து விட்டது.
இதைக் கண்டு கவலை அடைந்த கட்சி தலைமையிலும், அணிகளிலும் உள்ள தோழர்கள் நிலைமை சீர்படுத்துவதற்காக இரண்டு முகாம்களுக்கிடையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு தீர்வுகாண்பதற்கான முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தன.
வெளிநடப்பு
1964இல் மார்ச் – ஏப்ரல் மாத வாக்கில் கடுமையான பல ஸ்தாபன பிரச்சினைகளை, குறிப்பாக, தலைமையின் தவறான பல செயல்களை கண்டிக்கும் வகையில், கட்சியின் இடதுசாரி பிரிவுத் தோழர்கள் மிகவும் ஆழமான விவாதங்களை தேசிய கவுன்சில் கூட்டத்தில் எழுப்பினர். அவற்றின் மீது சூடான விவாதங்கள் நடைபெற்றன. தலைமையின் கட்சி விரோத போக்குகளின் விவாதத்திற்கு கொண்டு வந்தபோது, தலைமையிலிருப்பவர்கள் முற்றிலும் உட்கட்சி ஜனநாயகத்திற்கு புறம்பான முறையில் நடந்து கொண்டதினால், நிலைமை கடுமையாகி தேசிய கவுன்சிலில், ‘இடதுசாரி கருத்துக் களை’ ஆதரிக்கும் 32 தோழர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். (1964 ஏப்ரல் 14 அன்று)
இதைத் தொடர்ந்து கட்சி உடைந்து போகும் ஒரு சூழ்நிலையை தவிர்ப்பதற்கான பெருமளவில் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆயினும், அவை தோல்வியடைந்தன. ஏறத்தாழ கட்சி அமைப்புகள் இரண்டு பிரிவுகளாக செயல்படும் நிலையும் உருவாயிற்று.
இத்தகைய பின்னணியில் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசிய லையும், நடைமுறையையும், பின்பற்றி வந்த பிரிவினர் எல்லா மட்டங்களிலும் போட்டி அமைப்புகளை ஏற்படுத்தி ஒரு முழு பிளவிற்கு கட்சியை இட்டுச் சென்றனர்.
‘இடதுசாரி’ கருத்துக்களை முன்வைத்த தோழர்கள் முன்வைத்த சமரச, ஒற்றுமைக்கான யோசனைகள் நிராகரிக்கப் பட்டு, கட்சி முழுமையான அளவில் பிளவுபடும் நிலைமை எதார்த்தமாகிவிட்டது.
இந்த பின்னணியில் தேசிய கவுன்சிலில் இருந்து வெளிநடப்பு செய்த 32 தோழர்கள் கட்சியை காப்பாற்றும் நோக்கத்துடன் புரட்சி இயக்கத்திற்கு விசுவாசமான தோழர்களின் கருத்துக்களை கேட்டறி வதற்கும், நிலைமைக்கேற்ற முடிவுகளை மேற்கொள்வதற்குமாக இந்தியா முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்களையும், பொறுப்பாளர்களையும் ஒரு அகில இந்திய கூட்டத்திற்கு அழைத்தனர். இக்கூட்டம் ஆந்திராவில் உள்ள தெனாலி என்னும் இடத்தில் 1964இல் ஜூலை 7லிருந்து 11ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடுமுழுவதும் இருந்து 146 முக்கியத் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிற்காலத்தில், சி.பி.எம்.இன் தலைவர்களாக பிரபலமான தலைவர்கள் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்றனர்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தை அதன் புரட்சிகரமான தன்மையுடன் கட்டி வளர்த்து புரட்சி சக்திகளை ஆக்கமும் – ஊக்கமும் அளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தெனாலி மாநாடு அறைகூவல் விடுத்தது.
கடைசி நிமிடத்தில் கூட, கம்யூனிஸ்ட் ஒற்றுமையை மீண்டும் ஏற்படுத்த பல ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் இம்மாநாடு முன்வைத்தது. ஆயினும், வலதுசாரித் தலைவர்கள் அவற்றை முற்றிலுமாக நிராகரித்தனர். கட்சியை அதனுடைய முழு பலத்துடனும், புரட்சிகரமான உள்ளடக்கத்துடனும் புனரமைத்து முன்னேற வேண்டுமென்று தெனாலி மாநாடு இறுதியில் முடிவு செய்தது.
7வது கட்சி காங்கிரஸ்
தெனாலி மாநாட்டின் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த அறை கூவலின் அடிப்படையில் 1964 அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து நவம்பர் 7 வரை கட்சியின் 7வது காங்கிரஸ் கொல்கத்தாவில் நடைபெற்றது. தெனாலி மாநாட்டில் கல்கத்தா மாநாட்டின் ஒரு முக்கியத் தீர்மானம் திருத்தல்வாதம் எவ்வாறு கட்சியின் புரட்சிகர மான தன்மையை இழக்கச் செய்தது என்பதை சுட்டிக்காட்டி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பதாகையை உயர்த்திப் பிடிக்க இந்த மாநாடு உறுதி பூண்டது.
அதன்படி, கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரினை பயன்படுத்து வதற்கும் அதன் உண்மையான உள்ளடக்கத்தை உயர்த்திப் பிடிப்ப தற்குமான மாபெரும் புரட்சிகரமான கடமையை நிறைவேற்று வதற்கு கல்கத்தாவில் நடைபெற்ற மாநாடு, கட்சியின் 7வது காங்கிரசாக ஏற்றுக் கொள்வது என்று பறைசாற்றியது.
இவ்வாறு, கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து வழி, வழியாக வந்த உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி புதிய பொலிவுடனும், கருத்தொற்றுமையுடனும் செயல்பட தொடங் கியது 7வது மாநாட்டிலிருந்து. (1964 அக்டோபர் 31 தேதியிலிருந்து நவம்பர் 7ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடந்தேறியது.)
அடக்குமுறையுடன் துவக்கம்
7வது மாநாடு கூடியதற்கு இரண்டு நாள் முன்னதாக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதலைத் தொடுத்தது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மேற்குவங்காளத்தில், மாநிலத் தலைவர்களில் பல முக்கிய மானவர்கள் இரவோடு, இரவாக ஆட்சியாளர்களால், கைது செய்யப்பட்டனர். பிரமோத்தாஸ் குப்தா, முசாபர் அகமது போன்ற புரட்சி இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்தான் அக்டோபர் 31ஆம் தேதி மாநாடு துவங்கியது. (பிற்காலத்தில், ஏறத்தாழ ஆறு, ஏழு ஆண்டுகள் வரை கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்க வேண்டியிருந்த மூர்க்கத்தனமான தாக்குதலின் தொடக்கமாகவே இது அமைந்தது.) அந்த முறையில் அது ஒரு தெளிவானதொரு எச்சரிக்கையாகவும் இருந்தது. தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்ட நிலையில்கூட மாநாட்டின் பணிகளை முறையே நடந்தேறின.
கட்சி திட்டம்
இம்மாநாடு, ஒரு தீர்மானத்தின்படி —- 7வது காங்கிரசின் அறைகூவல் என்ற தீர்மானத்தின் வாயிலாக, இந்த மாநாட்டிலிருந்து உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாகவும் தற்சமயம் புனரமைக்கப் பட்ட கட்சியாகும் என உரக்க பிரகடனம் செய்தது.
இந்த மாநாட்டில் மொத்தம், இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளாக பதிவு செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்களில் 60 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர் என்பது மேற்குறிப்பிட்ட பிரகடனத்திற்கு வலுவை அளித்து. (422 பிரதிநிதிகள் 100442 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்த எண்ணிக்கையானது மொத்தம் கட்சி உறுப்பினர்களில் 60 சதவிகிதத்தில் பிரதிநிதிகளாக இருந்தனர்.)
மாநாட்டில் அடக்குமுறை கண்டனத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. எல்லாவிதமான அடக்குமுறைகளையும் உறுதியுடன் சந்திப்பதற்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆயத்தமாக இருப்பதை மாநாட்டின் தீர்மானம் உறுதிப்படுத்தியது.
அத்துடன், கட்சிக்கு மூலாதாரமாக இருக்க வேண்டிய “கட்சித் திட்டத்தின்” நகல் மீதான விவாதத்தை முக்கிய கடமையாக மாநாடு மேற்கொண்டது. கட்சியின் இந்தியாவின் நிலைமைக்கேற்ப ஒரு திட்டம் வேண்டுமென்ற எண்ணம் துவக்கத்திலிருந்து வலுவாக பரவியிருந்தது. ஆயினும், ஆழமான கருத்து வேற்றுமைகள் காரணமாக இதை நிறைவு செய்ய முடியவில்லை.
கருத்தாழமிக்க சர்ச்சைகள் மூலம் இறுதியில் 7வது காங்கிரஸ் கட்சியின் திட்டத்தினை ஏற்றுக் கொண்டதானது கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒரு தத்துவார்த்த – அரசியல் திருப்புமுனையை குறிப்பிட்டது என்றே கூறவேண்டும்.
அத்துடன், 1950 டிசம்பரில் கொல்த்தாவில் நடைபெற்ற இரகசிய கட்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘கட்சியின் கொள்கை அறிக்கை’ என்ற ஆவணத்தையும் மாநாடு அங்கீகாரம் செய்தது.
இம்மாநாட்டில் அடிப்படை விஷயங்கள் மட்டுமின்றி நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த உடனடி அரசியலைப் பார்வை பற்றி ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடிப்படையான அரசியல் மாற்றங்களுக்காக அயராது பாடுபடும் அதே நேரத்தில், நடைமுறை அரசியலில் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டுமென்ற அறைகூவல் மிகவும் முக்கியமாக இருந்தது. உடனடியாக சந்திக்க வேண்டிய கேரள மாநில சட்டமன்றத் தேர்தலையும் கட்சி கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. நடைமுறை தந்திரங்களைப்போல் கட்சியின் கடமைகள் என்ற தீர்மான வாயில்களாக கட்சிக்கு வழிகாட்டியது.
இந்திய அரசியலில், காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகார பெரு முதலாளி வர்க்க அரசியலை எதிர்த்து அனைத்து இடதுசாரி ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுத்தும் வகையில் கட்சி முன்னணி பாத்திரத்தை வகுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானமானது அடுத்து சில வருடங்களில் இந்திய அரசியலில் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் வேகமான முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்பதே சந்தகமின்றி கூறலாம்.
மாநாடு துவங்கியவுடன் ஆளும் வர்க்கம் தொடுத்த கொடூரமான அடுக்குமுறையை சந்தித்து உறுதியாக கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறியது. இந்திய அரசியலில் கட்சியின், கட்சித் தோழர்களின், ஆதரவாளர்களின் தியாக முத்திரை கல்கத்தா மாநாட்டிற்கு பின் ஆழமாக பதித்ததன் விளைவாக சி.பி.எம். என்ற நாமம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் பரவி இன்று சி.பி.எம். ஒரு முக்கிய அரசியல் சக்தியாக விளங்குகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் தொடர்ந்து நடைபெற்ற கட்சி காங்கிரசுகளும், அவற்றின் மூலமாக வெளிப்பட்ட கருத்தொற்றுமையும், ஸ்தாபன உறுதிப்பாடும் பெருமளவில் உதவி செய்தது 7வது கட்சி காங்கிரசுக்கு பின் கட்சி மார்க்சிசத்தினுடைய பாதையில் பெரிய அளவில் தத்துவார்த்த – நடைமுறை – பணிகளை செய்து முன்னேறியுள்ளது. 8வது காங்கிரசிலிருந்து 19வது காங்கிரஸ் வரை உள்ள நீண்ட காலகட்டத்தில் நடந்த மாநாடுகளைப் பற்றி நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய புரிதல் கட்சியின் கருத்தொற்று மையையும், போராட்ட குணத்தையும் வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய ஆயுதமாகும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: