பேராசிரியர் கே.என்.பணிக்கர் உண்மையான, அறிவியல்பூர்வ, இந்திய வரலாற்றை வழங்கிய வரலாற்றாளர்.வகுப்புவாத எதிர்ப்பு,மதச்சார்பின்மை இலட்சியங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அறிஞர்.இதனால் வகுப்புவாதிகளின் பழிவாங்கலுக்கும் ஆளானவர்.
இந்திய பண்பாடு பற்றிய அவரது சிறந்த கட்டுரையை ‘ப்ரணட்லைன் ‘ வெளியிட்டுள்ளது. அதன் தழுவல் இந்த இதழில் பிரசுரிக்கபட்டுள்ளது.இந்திய மறுமலர்ச்சியின் போக்கை விவரிக்கிறார், பணிக்கர். அதன் சமுக காரணங்களை தெளிவாக விளக்கியுள்ளார்.
இன்றைய நிலையில் இந்திய மறுமலர்ச்சி , நான்காவது கட்டத்தை எட்டியுள்ளது என பணிக்கர் குறிப்பிடுகின்றார். பண்பாட்டு நடவடிக்கைகளொடு இணைந்ததாக இடதுசாரி அரசியல் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென வழிகாட்டுகிறார்.இதில் செயல்படுவதற்கான திட்டங்களையும் மக்கள் திரட்டலுக்கான வியூகங்களையும் வகுக்க வேண்டும்.
தமிழக பண்பாட்டு வரலாற்றை ஆராய பணிக்கர் வரையறுத்துள்ள சிந்தனைகள் உதவிடும்.
இக்கட்டுரை ஆழமாக வாசித்து விவாதிக்க வேண்டிய ஒன்று. மார்க்ஸிஸ்ட் வாசகர் வட்ட கூட்டங்களில் இக்கட்டுரைக்கு முக்கிய இடம் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அன்வர் உசேன், பணிக்கர் கட்டுரையைத் தழுவி எழுதியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மார்க்ஸிஸ்ட் இதழ் தயாரிப்பில் முக்கிய பங்கினை வகித்த தோழர் ஆர்.கோவிந்தராஜன் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது நினைவாக அவர் உருவாக்கிய முக்கியமான பாடக்குறிப்பு கட்டுரை வடிவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
புதிய, மக்கள் நலன் சார்ந்த பாதையில் கேரள அரசு செயல்பட்டு வருகிறது. அது பற்றிய தோழர் ராஜிவ் அவர்களின் உரை ,மாற்று இடதுசாரி கொள்கைப் பிரச்சாரத்திற்கு உதவும்.கட்சி திட்டம் தொடர், கேள்வி பதில் பகுதியில் தோழர் தமிழ்செல்வன் பதிலும்,பெண்கள் தினத்தையொட்டிய கட்டுரையும், தற்கால முதலாளித்துவ போக்குகள் குறித்த கட்டுரையும்,இந்த இதழில் வெளிவந்துள்ளன.
இதழ் அச்சாகிறது, விரைவில் கைகளில் கிடைக்கும். கட்டுரைகளை வாசிப்பதுடன், மறக்காமல் உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்.