மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் – 3
பொய்த்துப் போன விடுதலை இலட்சியங்கள்
செ.முத்துக்கண்ணன்
சுதந்திரப்போராட்டத்தில் பெருமளவிலான இந்திய மக்கள் உற்சாகத்தோடு பங்கேற்று அதை வெற்றிகரமாக்கினார்கள். சுதந்திர இந்தியாவில் தங்களுக்கான சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மக்கள் விரும்பினார்கள். துயரம் மிகுந்த வறுமைக்கும், சுரண்டலுக்கும் ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்த்தனர். நிலம், நியாயமான ஊதியம், வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என்பதே சுதந்திரம் என மக்கள் கருதி வந்தனர். சமூக தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றிலிருந்து விடுதலை ஜனநாயக கட்டமைப்புக்குள் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் எனக் கருதினர்.
இந்திய ஆளும் வர்க்கம்:
சுதந்திர இந்தியாவில் பெரு முதலாளி வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் ஒரு கூட்டை அமைத்துக் கொண்டதோடு ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் செய்து கொண்டது. இதன் பிரதிபிலிப்பாகவே இன்று வரை காங்கிரஸ், பிஜேபி கட்சிகள் மத்திய அரசில் இருந்து வந்துள்ளது. அதே நேரத்தில் ஏகாபத்தியத்துடன் ஒட்டி உறவாடியும், முரண்பட்டும் தங்கள் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்தியது. சர்வதேச நிதி மூலதனத்துடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள இந்திய பெருமுதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்து முயன்று வருகிறது.
இதற்காக பொதுத்துறைகளையும், ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தனியார் மயமாக்க வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இன்று இந்தியாவின் நவரத்னாவை கொஞ்சம் கொஞ்சமாக கூறு போட்டு விற்று வருகிறது. ஏகாதிபத்தியத்திற்கு நமது பொருளாதார கட்டமைப்பை திறந்து விட்டதால் இந்திய சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஊடுருவி செல்வாக்கு செலுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தது. குறிப்பாக நிர்வாகத்துறை, கல்வி அமைப்பு, தகவல் தொடர்புசாதனங்கள் மற்றும் பண்பாட்டுத்துறை போன்றவை இலக்காகியுள்ளன.
பொருளாதாரக் கொள்கை:
திட்டமிட்ட பொருளாதாரம் என்பதே இந்திய பெருமுதலாளித்துவத்தின் தேவையில் இருந்து பாதைகள் வகுக்கப்பட்டது. பெருமளவிலான திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு தேவையான பெரும் நிதியாதாரம் தனியாரிடம் இல்லாதிருந்த நிலையில் கனரகத் தொழில்கள், கட்டமைப்புத்துறை ஆகியவை பொதுத் துறை மூலம் வளர்க்கப்பட்டன. இது ஏகாதிபத்திய ஏகபோகங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து ஒரளவு தொழில்மயமாக்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்களைக் கட்டுவது உதவியது.
இக்காலத்தில் சோவியத்யூனியனின் தொடர்ச்சியான உதவியோடு வங்கி, காப்பீட்டுத்துறை போன்ற நிதிதுறையையும், எண்ணெய் மற்றும் நிலக்கரித் தொழிலையும் தேசியமயமாக்கியதன் மூலம் அரசுத்துறை விரிவுபடுத்தப்பட்டது. தொழில்மயக் கொள்கையை பாதுகாக்க ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புதிய காப்புரிமைச் சட்டம், அன்னியப் பொருட்கள் மற்றும் மூலதனம் நுழைவதற்கான கட்டுப்பாடு, சிறு தொழில்களுக்கு பாதுகாப்பு என்பது போன்ற நடவடிக்கைகள் அன்று மேற்கொள்ளப்பட்டது. 1990 களுக்குபின் நிலைமை தலைகீழாக நவீன தாராளமய புதிய பொருளாதாரக்கொள்கை, ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கை காரணமாக மாறியுள்ளது.
சோசலிச பின்னடைவுக்குப் பின்:
ஏனெனில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக உலகில் பழமைவாத, பிற்போக்கு மற்றும் இனவெறி சக்திகளின் வளர்ச்சி இந்தியாவிலும் பிரதிபலிக்கின்றன. ஏகாதிபத்தியம் இந்த சக்திகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. இன்று இந்திய சூழலில் மதவாதம், சாதியம் இதற்கு பேருதவி செய்துவருகின்றன.
இன்றைய நிலையில் மோடி தலையிலான மதவெறி சக்திகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து காங்கிரஸ் கடைபிடித்த அதே நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை மிக வேகமாக அமலாக்கி வருகின்றது.
பலனடைந்த பெருமுதலாளிகள்:
தாராளமய, தனியார்மயப் பாதை பெருமுதலாளிகளுக்கு ஏராளமான பலனை கொடுத்துள்ளது. இக்காலத்தில் புதிய வர்த்தக நிறுவனங்கள் பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்துள்ளன. 1957ல் 22 ஏக போக நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ 312.63 கோடியாக இருந்தது. 1997ல் ரூ 1,58,04.72 கோடியாக 500 மடங்கு வரை உயர்ந்துள்ளது. தற்போது 2016 ஜூலையில் இந்தியாவின் முதல் 5 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 80.4 பில்லியன் டாலர் ( 5.40 லட்சம் கோடி ரூபாய் ) ஆகும். இன்று வரை பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் வசதி படைத்த பகுதியினருக்கும் வருமான வரி விகிதம் குறைப்பு, செல்வவரி போன்றவை ரத்து என ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாய நெருக்கடி:
தொழிற்துறையில் மட்டுமல்லாது பசுமைப்புரட்சிக்கு பின் விவசாயத்துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தற்போது வேளாண்துறை கடும் நெருக்கடியில் உள்ளது. வேகமான நகரமயமாதல் சூழல் காரணமாக வேளாண் நிலங்களின் அளவு சுருங்கி வருகிறது. அரசின் கொள்கைகள் காரணமாக இடுபொருள் விலையுயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, அரசு தரும் குறைந்தபட்ச ஆதார கொள்முதல் விலை கட்டுப்படியாகாத நிலை, விவசாயத்திற்கான மானியம் சுருங்கி வருவது காரணமாக கடும் பாதிப்பை இந்திய விவசாயத்துறை சந்தித்து வருவது மட்டுமல்லாது தாதுவருஷ பஞ்ச காலத்தை விட அதிகளவில் விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணங்களை சந்தித்து வருகின்றனர்.
கிராமப்புற வேலைநாட்கள் 1990க்கு முன்பு 180 முதல் 200 வரை இருந்தது. தற்போது 30 முதல் 40 வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் 1991 முதல் 2011 வரையான காலத்தில் மட்டும் 150 லட்சம் பேரும், 2011க்கு பின் கடந்த ஐந்தாண்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளும். விவசாயத் தொழிலாளர்களும் விவசாயத்தைவிட்டு வெளியேறி அருகிலுள்ள நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டதாக மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறையின் புள்ளிவிபரம் வெளிப்படுத்துகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 2,500 பேர் விவசாயத்தை கைவிடுவதாக தெரிவிக்கிறது. இதே காலத்தில் கிராமப்புற தொழிலாளிகள் 23.75 சதவீதத்திலிருந்து 29.96 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் கூலி, வேலைநாள் அளவு குறைந்தவண்ணமே உள்ளது.
கிராமப்புற அதிகாரப் படிநிலை:
அரசின் கொள்கைகள் காரணமாக பெரும்பாலான கிராமப்புற பகுதியில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், பெரும் வர்த்தகர்களிடையே பலமான இணைப்பு ஏற்பட்டு இவர்கள் தான் கிராமப்புற செல்வந்தர்களாக உள்ளனர். இடதுசாரிகள் பலமாக உள்ள இடங்களை தவிர பஞ்சாயத்து அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற வங்கி மற்றும் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் போன்றவையும் இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளதோடு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கிராமப்புறத் தலைவர்களாகவும் இவர்களே உள்ளனர்.
இந்த கிராமப்புற செல்வந்தர்கள் கந்துவட்டி, ரியல் எஸ்டேட், ஊக வாணிபம், விவசாயம் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்வது என அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். மேலும் கிராமப்புற சாதிய கட்டமைப்பை தங்களது ஆதிக்கத்திறகு பயன்படுத்திக்கொள்கின்றனர். உலகில் உள்ள சமூக அமைப்பு முறைகளில் இந்திய சாதிய அமைப்பு முறை சிக்கலானது. செய்யும் வேலை, பின்பற்றும் சடங்கு, பழக்கவழக்கம், திருமணம் தொடர்பான தடை( அகமணமுறை), பிற சாதியோடு சமமாக உட்கார்ந்து உண்ணதடை போன்றவைகளால் கட்டமைக்கப்படுகிறது. இதன் மூலம் வர்க்கச் சுரண்டலை நடத்த உதவுகிறது.
பற்றாக்குறையில் சாமானியர்கள்:
இதனுடைய விளைவு மேலும் மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது. ஊட்டச்சத்து மிக்க உணவு இல்லாத நிலை, இரவு ஒரு வேளை உணவு இல்லாமல் தூங்கசெல்வோர் எண்ணிக்கை என்பது கோடிகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. மருத்துவ தேவை என்பது முழுக்க வணிகமயமாகிவிட்டது. 70 சதவீதம் பேர் கடன் வாங்கி வைத்தியம் பார்ப்பதும், 50 சதவீதம் பேருக்கு அடிப்படை மருந்து கூட கிடைக்காத நிலையும், குடும்ப வருமானத்தில் 40 சதவீதம் மருத்துவத்திற்கே செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் புதிய நோயாளிகளில் 24 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். அதனால் இன்று உலகின் பார்மஸி இந்தியா என்று அழைக்கப்படும் அளவிற்கு நிலைமை சிக்கலாகியுள்ளது. கிராமப்புற எழுத்தறிவு மிகக்குறைவாகவே உள்ளது. சுகாதாரமற்ற மோசமான வீடு, குடிப்பதற்கு நீரும் கிடைக்காத நிலையில்தான் கிராமப்புற ஏழைமக்கள் வாழ்கின்றனர்.
இந்திய நாட்டின் அரசியல் சாசனம் “ ஒவ்வொரு குடிமகனுக்கும், வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் மற்றும் வேலை செய்யும் உரிமை, அபரிமிதான சொத்துகுவிப்புக்கு வழியில்லாத பொருளாதார முறை, குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி பெறும் உரிமை, தொழிலாளர்களின் வாழ்க்கைக்கான ஊதியம், ஆண், பெண் இருவருக்கும் சமவேலைக்கு சம ஊதியம்“ என்ற அரசியல் சாசன வழிகாட்டும் நெறிமுறைகள் ஒன்று கூட அமலாக்கப்படவில்லை. அரசியல் சட்ட நடைமுறைக்கும், முதலாளித்துவ ஆட்சியாளர்களின் நடைமுறைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. இது சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ முறையின் மீதான கடுமையான கண்டனமாக திகழ்கிறது.
இன்றைய நிலையில் ஏகபோ பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் தலைமையின் கீழ் இந்திய அரசின் செயல்பாடுகள் உழைக்கும் மக்களுக்கு எதிராக எத்தகைய தாக்குதல்களை தொடுத்து வருகிது என்பதை கட்சித்திட்டம் மிகச் சரியான முறையில் சுட்டிக்காட்டுகிறது.
Leave a Reply