சர்வதேச மகளிர் தினம் – கற்பனைகளும் உண்மையும் !


ஆர்.சந்திரா

“தெளிவான தத்துவார்த்த அடிப்படையில் நாம் ஒரு வலுவான சர்வதேச மாதர் இயக்கத்தை உருவாக்க வேண்டும். தெளிவான மார்க்சிய சித்தாந்த அடிப்படை இல்லை என்றால், சரியான செயல்பாடு இருக்காது. இந்த விஷயத்தில் கம்யுனிஸ்ட்டுகளாகிய   நமக்கு மிகுந்த தெளிவு இருக்க வேண்டும் நமக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே இந்த விஷயத்தில் இருக்கும் வேறுபாடு நன்கு தெரிய வேண்டும்…”
[1920ல் கிரெம்ளினில்  க்ளாரா  ஜெட்கினுடன்  லெனின் உரையாடிய பொழுது குறிப்பிட்டது]
            மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் கடைப்பிடிப்பது/கொண்டாடுவது  என்பது   இப்பொழுது பரவலாக நடை பெற்று வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என மகளிர் தின நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசு தரப்பிலும் இத்தகைய நிகழ்வுகள் நடை பெறுகின்றன. ஆனால், இவற்றில் எத்தனை நிகழ்சிகளில், இந்த தினத்தின் பின்னணி பற்றி பேசப்படுகிறது  என்பதும், அவற்றில் பொதிந்துள்ள  உண்மையான செய்தி  என்ன என்பதிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன.
பல முதலாளித்துவ அமைப்புகள் மகளிர் தின பின்னணி  பற்றி பேசாமல், தத்தம் துறையில் சாதனைகள் படைத்த பெண்கள் பற்றி பேசி, அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பதை  செய்கின்றன.  உலகமே நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி விட்ட சூழலில், இந்த நிகழ்வு மட்டும் விதி விலக்காகி விடுமா? இல்லை. எனவே தான்,  இந்த தினத்தன்று துணிக்கடைகளும், நகை கடைகளும் மகளிருக்கு தள்ளுபடி விற்பனை என்று அறிவித்து விற்பனையை அதிகரிக்கின்றன.
“நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து சமூக உற்பத்தியில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் ஆண்கள் மீதான அவர்கள் சார்பு தன்மை குறையும் என்றும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெண்கள் சமூக உற்பத்தியில் பங்கேற்று தமது பங்களிப்பை செலுத்துவது அவசியம்” என  தோழர். லெனின் வலியுறுத்தினார். ஆனால், மகளிர் தினத்தன்று கூட பெண்களுக்கு சமையல் போட்டியும், கோலப் போட்டியும் நடத்துவது என்பது மீண்டும் பெண்கள் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்ற  காலம் காலமாக நிலவி வரும் பிம்பத்தையே வலுப்படுத்துவதாக உள்ளது. அதை உடைக்கும் வகையில் ஆண்களுக்கான துறைகள் என்று அழைக்கப்படும் துறைகளில் தடம் பதித்த பெண்கள் பற்றிய தொகுப்புகள் ஒன்றிரண்டு வருவதையும் காண முடியும்.
மகளிர் தின வரலாற்று பின்னணி என்ன?
 
மார்ச் 8 என்ற தேதி எவ்வாறு நிச்சயிக்கப்பட்டது என்பது பற்றியும், அதற்கு மூல காரணமாக சொல்லப்படும் போராட்டங்கள் பற்றியும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இணையதளத்தில் முரண்பாடான பல கருத்துக்கள் வெளிவந்துள்ளன. இத்தகைய பின்னணியில் தான், தோழர். இரா. ஜவஹர் அவர்கள் எழுதி, ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ள ” மகளிர் தினம் உண்மை வரலாறு” [டிசம்பர் 2016] என்ற நூலை வாசிப்பது அவசியமாகிறது.
80 பக்கங்களைக் கொண்ட இந்த சிறிய நூல், சில வரலாற்று பிழைகளை சுட்டிக்காட்டுகிறது. கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை புறந்தள்ளும் நோக்குடன் வரலாறு திரித்து எழுதப்பட்டதை நூலாசிரியர் விளக்குகிறார். மகளிர் தினம் என்பது சோஷலிச வரலாற்று பின்னணியைக் கொண்டது.  அதை நூலாசிரியர் அழுத்தமாக, போதிய ஆதாரங்களுடன் தெளிவு படுத்தி உள்ளார். இடதுசாரி இணையதள கட்டுரையில் கூட தவறான தகவல் இடம் பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் ஆடை மற்றும் துணி 1857ல் தொழிற்சாலைகளில் பெண்கள்   செய்த வேலை நிறுத்தம் மகளிர் தினத்திற்கு வித்திட்டது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று., தவிர, ஐ.நா. சபையின் குறிப்புகளிலும் இதுவே இடம் பெற்றுள்ளது. இதைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகையில்,   “இதில் ஆச்சரியம் என்னவென்றால், மார்ச் 8  என்ற தேதியை அளித்த  உலக  கம்யூனிஸ்ட் பெண்கள் இயக்கமே தனது சொந்த பெருமையை மறந்து விட்டு, இந்த கற்பனையை நம்பி விட்டது ” என்கிறார்.
அப்படி ஒரு போராட்டம் நடை பெற்றதற்கான எந்த வித ஆதாரமும் இல்லாத சூழலில், இந்த கற்பனை கதை வலுவாக வேரூன்ற காரணம் என்ன என்பதன் பின்னணியை விளக்குகிறார். ரஷ்யாவில் 1917   மார்ச் 8  அன்று பெண்கள் தொடங்கிய புரட்சி தான் சர்வதேச மகளிர் தினம் கடைப்பிடிக்கப்பட உண்மையான  காரணம். ஆனால், பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான ‘மானுடம்’,  உலக மகளிர் தினம் கம்யூனிஸ்ட் ரஷ்யாவுடன் தொடர்பு கொன்டிருப்பதை விரும்பாததே இத்தகைய கற்பனை கதை வெளிவர காரணம் என பிரான்சு நாட்டு பெண் ஆய்வாளர்களே[1982] தெளிவுபடுத்தி உள்ளனர்.
1908ல் வேலை நிலைமைகளை எதிர்த்து ஆடை தொழிலாளர்கள் செய்த வேலை நிறுத்தம் காரணமாக , அதை நினைவு கூறும் வகையில் மார்ச் 8  தினம் நிச்ச்சயிக்கப்பட்டதென ஐ.நா.சபை இணையதள வெளியீட்டிலும் உள்ளது. ஆனால் 1908 ஆண்டில் வேலை நிறுத்தம் நடைபெறவில்லை என்றும், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியே இதை நம்பிவிட்டதென நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
அது மட்டுமல்ல. உலக மகளிர் தினத்தை தொடங்கி வைத்தவர் க்ளாரா  ஜெட்கின் அவரே உலக மகளிர் தினத்துக்கான நாள்  மார்ச்8  என்று1910 ல்    நடந்த உலக  சோஷலிஸ்ட் மகளிரின் இரண்டாவது மாநாட்டில் குறிபிட்டதும் தவறான தகவல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நினைவு பிசகின் காரணமாக இப்படி க்ளாரா  எழுதி உள்ளார் என்றே கருத வேண்டி உள்ளது என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். கிளாரா ஜெட்கின் மட்டுமல்ல. அலெக்சாண்ட்ரா கொலலந்தாயும்  தனது கட்டுரையில் உலக மகளிர் தினமானது மார்ச்2 ம்தேதிக்கு 1913  ம் ஆண்டில் மாற்றப்பட்டது என்ற தகவலும் தவறானதே என நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  உண்மையில் ரஷியாவில் 1921   ஆண்டில் மார்ச் மாதம்  நடந்த மாநாட்டில் தான் தேதி மாற்றப்பட்டது. என்ற தகவலை தருகிறார்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, வரலாறு திருத்தப்பட்டதை போதிய ஆதாரங்களுடன் நூலாசிரியர் விளக்கி இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும். இந்த நூலில் பல சுவாரஸ்யமான தகவல்களை தொகுத்து வழங்கி உள்ளார். உலக மகளிர் தினம் என்பது பெண்கள் எந்த அளவுக்கு முன்னேறி உள்ளனர் என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும், வருங்காலத்தில் எவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்து செல்வதென்பதை திட்டமிடுவதற்கான நாளும் கூட என்பதை எடுத்துரைக்கிறார்.
உலக தொழிலாளர் சங்கத்தின் தோற்றம் உருவான பின்னணியை  காரல் மார்க்சின் எழுத்துக்கள் மூலம் விளக்குகிறார். முதல் அகிலத்தின் கொள்கை அறிக்கை என்பது மார்க்ஸ்  உருவாகிய ஒன்று. “அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது, தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான கடமை ஆகி விட்டது. உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் ..” என்ற மார்க்சின் அறைகூவல் பிறகாலத்திலும் எத்தகைய பிரதிபலிப்பை ஏற்படுத்தியது  என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
இரண்டாவது அகிலம் தோன்றிய பொழுது கிளாரா ஜெட்கின் ஆற்றிய உரை பெண் தொழிலாளர் நிலையை விளக்கியதுடன் எதிர் காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகளையும் உள்ளடக்கி இருந்தது. மே தின தீர்மானமும் அதில் நிறைவேறியது. தவற சோஷலிஸ்ட் பெண்கள் இயக்கம் தோன்றவும்  இரண்டாவது அகிலம் அடித்தளம் அமைத்தது  சோஷலிஸ்ட்  பெண்கள் இயக்கத்தில் கிளாரா ஜெட்கின் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.அமெரிக்காவிலும் பல போராட்டங்கள் நடைபெற்றன.1908 மே 3 அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சிப் பெண்கள் மகளிர் தின கூட்டத்தை நடத்தியது முதல் முறையாக நகர , அளவில் மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது என்பதற்கு சான்று என்று ஆசிரியர் கூறியுள்ளார்.
மகளிர் தினம் உருவாக  உண்மையான காரணம் என்ன என்ற பகுதியில், மகளிர் தின தீர்மானம் உட்பட பல்வேறு அம்சங்களை நூலாசிரியர் சுட்டிக்காட்டி உள்ளார். 1910 ம ஆண்டு ஆகஸ்டில்      உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு டென்மார்க் தலைநகர்பகோன்ஹெகனில்  நடைபெற்றது.அதில் மகளிர் தின தீர்மானம்  நிறைவேறியது. “அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த சோஷலிஸ்ட் பெண்கள், ஒரு தனி சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தை கடைபிடிக்க வேண்டும். அவரவர் நாட்டில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஒப்புதலோடு இதை செய்ய வேண்டும். பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில் முன்னுரிமை கொடுத்து இந்த தினத்தை கடைபிடிக்க வேண்டும். சமூக பிரச்சினைகள் பற்றிய சோஷலிச கண்ணோட்டத்துடன் பெண்கள் பிரச்சினை முழுவதுடனும் வாக்குரிமை கோரிக்கையை இணைத்து விவாதிக்க வேண்டும். இது தொடர்பான் மாநாடு சர்வதேச தன்மையுடனும், கவனமான தயாரிப்புடனும் நடத்தப்பட வேண்டும்”என்ற இந்த தீர்மானம் கிளாரா ஜெட்கின்,கேட் டங்கர் மற்ற சில தோழர்கள் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த தீர்மானத்தில் தேதி குறிப்பிடவில்லை. இந்த தீர்மானம் தான் சர்வதேச மகளிர் தினத்தின் உண்மையான மூலகாரணம் என்பதை நூலாசிரியர் அழுத்தமாக தெரிவிக்கிறார். தொடர்ந்து பல நாடுகளிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பல ஐரோப்பிய நாடுகளில்  பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதும் வரலாற்றில் பதிவாகியது. ஜெர்மனியில் 1912ல் நடைபெற்ற கூட்டத்தில் சிறந்த புரட்சியாளரான ரோசா லக்சம்பர்க் எழுச்சி மிகுந்த உரையாற்றினார். அடுத்த ஆண்டிலேயே ரஷ்யாவில் மகளிர் தின கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. பெண் தொழிலாளி அலேக்சிவா பேசியதை நூலாசிரியர் அழகாக மேற்கோள் காட்டி தொழிள்ளர்களின் மன உணர்வுகளை பிரதிபலித்துள்ளார்.
மகளிர் தினத்தில் பெண்கள் வாக்குரிமை கோரி மட்டும் போராடவில்லை. முதல் உலக போர் காலத்தில், போரினால், குடும்பங்கள் நாசம் ஆவதை கண்டித்து, போருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 1917  மார்ச் 8 அன்று ரஷ்ய தலைநகர் பெட்ரோகிராடில்துணி ஆலைகளில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தம் செய்தனர். லட்சகணக்கில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஜார் மன்னனின் ஆட்சிக்கு எதிராக கோஷமிட்டு  போரை நிறுத்தும்படியும், உணவு வேண்டியும் போராடினர்.  இந்த போராட்டம் தான் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதர்கான் உண்மையான மூல காரணம் என்பதை தெளிவுபடுத்துகிறார். அத்துடன் மன்னராட்சி வீழ்ந்து, மக்களாட்சி மலர்ந்ததையும், முதல் சோஷலிச புரட்சி உலகுக்கு உணர்த்திய பல நல்ல அம்சங்களை நூலாசிரியர் விளக்குகிறார்.
1919ல் லெனின் தலைமையில் கம்யூனிஸ்ட் அகிலம் உருவான பின்னணி அதனுடைய இரண்டாவது மாநாடு  1921 ல் நடைபெற்ற பொழுது தான்  மார்ச்  8 என்ற தேதி நிச்சயமாகியது  என்று விளக்குகிறார். அந்த மாநாட்டில் பல்கேரிய தோழர்கள் உலக மகளிர் தினத்தை மார்ச் 8 அனைத்து நாடுகளும் நடத்த வேண்டும் என்று கூறிய யோசனை ஏற்கப்பட்டு அதன் பிறகு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இப்புத்தகத்தில் பெண்ணியம் பற்றிய சிறிய விளக்கம் தந்ததுடன், ஐ.நா. சபை உலக மகளிர் தினம் தொடர்பாக வெளியிட்ட தீர்மானம் பற்றி குறிப்பிட்டுள்ளார். உலக மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு அடிப்படை காரணம் அதன் உண்மையான பின்னணியை எடுத்துகூற வேண்டியது நம் கடமை . குறிப்பாக, உலகின் பல நாடுகளிலும், வலதுசாரி அரசியல் கட்சிகள் அவற்றின் ஆதரவாளர்கள் கம்யூனிசத்தின் மீதும், கம்யூனிஸ்டுகளின் மீதும் வெறுப்பை உமிழும் இந்த கால கட்டத்தில், சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும்  போருக்கு எதிராக, ஆண் பெண் சமத்துவத்திற்கு ஆதரவாக, தொழிலாளர்களின் , விவசாயிகளின் உரிமைகளுக்காக , அனைத்திற்கும் மேலாக, மனித குலத்தின் வளர்ச்சிக்காக குரல் கொடுத்ததையும், போராடியதையும் நினைவு கூற வேண்டிய தினம் ஆகும்.
ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க, மனிதர்கள் கௌரவமாக மனிதர்களாக வாழ வகை செய்யும் சமூகத்தை படைக்க மார்க்சும்,லெனினும் காட்டிய பாதையில் செல்ல வேண்டியதை அறிவுறுத்த வேண்டிய தினம் ஆகும்.இந்த ஆண்டு சோவியத் புரட்சி நடை பெற்று நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் ஆண்டு ஆகும். எனவே, இந்த ஆண்டு மகளிர் தினக் கூட்டங்களில், சோவியத் யூனியன் பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் கொண்டு வந்த அறிய திட்டங்கள், அவற்றின் செயலாக்கம், அக்டோபர் புரட்சி மேற்கத்திய பெண்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் உட்பட பேசுவது அவசியம்.
இன்றைய சூழலில், இந்தியாவில், பெண்கள் பற்றிய பிற்போக்குத்தனமான கருத்துக்கள்  பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரத்தால் முன்னிறுத்தப்படுகிறது. போராடி பெற்ற உரிமைகளை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. உழைக்கும் மக்களின் உரிமைகள் பாலின சமத்துவ கருத்துக்களை வலுவை கொண்டு சேர்க்க வேண்டிய தருணம் இது.  அது மட்டுமல்ல. கடந்த  காலத்தில், பெண்களின் உரிமைகளுக்காக , உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்களையும், அவற்றிக்கான  போராட்டங்களில் உயிர் தியாகம் செய்தவர்களையும் நினைவு கூற வேண்டிய தினம் ஆகும்.
இந்த நூல் சர்வதேச மகளிர் தினம் பற்றிய கற்பனைகளை உடைக்க பயன்படுகிறது என்பது மட்டுமல்ல. இணையதளங்களில்  [ஐ.நா.சபை உள்ளிட்ட] வெளிவரும் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களை பயன்படுத்தும் பொழுது எவ்வளவு எச்சரிக்கை தேவை என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது. சிறிய நூல் என்ற போதிலும் ஆதார பூர்வமாக அதை எழுத  நூலாசிரியர் மேற்கொண்ட சிரமங்கள் அதிகம் என்பது வெளிப்படுகிறது. இதை எழுதிய தோழர்.இரா.ஜவஹர் அவர்களுக்கும், அதை வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்திற்கும் பாராட்டுக்கள். 

One thought on “சர்வதேச மகளிர் தினம் – கற்பனைகளும் உண்மையும் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s