மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் ?


ஆர்.கோவிந்தராஜன்

சோவியத் யூனியன் மற்றும் சோஷலிச உலகம் சந்தித்த பின்னடைவுக்குப் பிறகு, உலகம் முழுவதுமே பரவலான விவாதங்கள் தொடங்கின.

மார்க்சிய – லெனினிய கோட்பாடு பற்றியும், 21-ம் நூற்றாண்டில் சோஷலிச கட்டுமானம் எப்படி இருக்கும் என்பது பற்றியும், உலக  முழுவதுமே பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

இந்த சூழலில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 14-வது காங்கிரஸ் (1992) நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தெளிவுபடுத்தியது: சோஷலிச உலகின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் சோஷலிச லட்சியத்தையோ, மார்க்சிய-லெனினிய வழிகாட்டுதலையோ நிராகரிக்கவில்லை. மனிதகுல நாகரீகத்தை ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வதில் சோஷலிசம் ஆற்றிய பங்கினை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. சோவியத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோஷலிச நடைமுறைகளிலிருந்து, பெற்ற அனுபவங்களிலிருந்து நிறைய பாடங்களை நாம் கற்றுக் கொண்டுள்ளோம். கட்சியின் 20-வது காங்கிரசின் தத்துவார்த்த தீர்மானம் குறிப்பிடுவதைப் போல், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்லும் இடைப்பட்ட காலம் அதே அனுபவங்களை அப்படியே மீண்டும் பெறுகிற வகையில் இருக்காது. அப்படியென்றால் எந்த பாதையில் பயணம் செய்வது? இக்கேள்விக்கு விடைகாண முயலும் போது சோசலிச நாடுகள் உட்பட பல நாடுகளின் அனுபவங்கள் நம் கவனத்துக்கு வருகின்றன.

மாற்றுப் பாதைக்கான 20-ம் நூற்றாண்டு முயற்சிகள்

சோவியத் புரட்சிக்குப் பிறகு ஒரு புதிய உலகம் பற்றிய பார்வை உலக மக்களுக்குக் கிடைத்தது. 14-வது காங்கிரஸ் தீர்மானம் அன்றைய சோஷலிச உலகின் மாறுபட்ட தோற்றத்தை விவரிக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலி கொண்ட காட்டுமிராண்டித்தனமான இரண்டு உலகப் போர்களிலும் , அணு ஆயுதப் போட்டியிலும், மனிதகுலத்தை தள்ளி விட்ட முதலாளித்துவம், சுதந்திர நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு எப்படி அரசுகளை கைப்பற்றும் சதி வேலைகளில் ஈடுபட்டது? பாசிச சர்வாதிகார ஆட்சிகளுக்கு எப்படி ஆதரவு கொடுத்தது? என்பதை விளக்கி விட்டு, “இன்னொரு பக்கத்தில் சோஷலிச புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும் மனித நாகரீகத்திற்கு ஒரு வளமான உள்ளடக்கத்தை சேர்த்தன. பல நாடுகளில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தேசிய அடக்குமுறை இல்லாமலும், சுரண்டலிலிருந்து விடுபட்டும் தமது வாழ்க்கையை நடத்துவதை சாத்தியமாக்கின. இதன் தாக்கம் தேச விடுதலையையும், சமுதாய விடுதலையையும் நோக்கிச் செல்லும் மனிதகுல வளர்ச்சியின் எதிர்காலப் பாதையை தொடர்ந்து வகுத்துக் கொண்டிருக்கிறது” என்று அந்தத் தீர்மானம் குறிப்பிடுகிறது. அதோடு கூடவே ஒரு எச்சரிக்கையை விடுக்கவும் அது தவறவில்லை. இந்த நடைமுறை நீண்ட காலம் பிடிக்கக் கூடியதாக, சிக்கலானதாக, மாறுதல்களும், திருப்பங்களும் கொண்டதாகத்தான் இருக்கும் என்று எச்சரித்து விட்டு,  “முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி மாறிச் செல்வதே இந்த சகாப்தத்தின் அடிப்படை திசை வழியாகும்” என்றும் பதிவு செய்திருக்கிறது.

20-ம் நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்த சோசலிசத்தின் தாக்கம் பல்வேறு அரசியல், பொருளாதார சமூக நிகழ்வுகளில் வெளிப்பட்டன. காலனி நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் (இந்தியா உட்பட) விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகம்  அளித்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா மக்கள் சோசலிச அமைப்பை தேர்ந்தெடுத்து ஏகாதிபத்தியத்திற்கு பலத்த அடியினை கொடுத்தது. பெண்களின் வாக்குரிமை உட்பட பல ஜனநாயக, குடியுரிமைகளை பெற பல்வேறு நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்களின் மீது அதன் தாக்கம் இருந்தது. உலக முழுமையும் தொழிலாளி வர்க்க அமைப்புகள் உருவாகி விரிவடையும் சூழலையும் அது உருவாக்கியது; தொழிலாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் பல்வேறு சலுகைகளையும், சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களையும் விருப்பமில்லா விட்டாலும் கூட கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு முதலாளித்துவம் தள்ளப்பட்டது என்பது வரலாற்று உண்மையாகும் (இன்றைய உலகமய செயல்பாடுகளால் அவற்றைப் பறிக்க முயற்சிகள் நடக்கின்றன என்பது இன்று நிலவும் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான சூழலின் வெளிப்பாடு). இவை யாவும் மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவுகளாகத்தான் இருந்தன.

அப்படியென்றால் இந்த பின்னடைவை எப்படி புரிந்து கொள்வது? கல்வி, சுகாதாரம், அறிவியல் வளர்ச்சி, சமூக நலம், வேலை வாய்ப்பு, ஏகாதிபத்திய சவால்களை எதிர்த்து நின்ற ராணுவ வலிமை- இப்படி அனைத்திலும் உயர்ந்து நின்று ஒரு புதிய சமூகத்திற்கான தோற்றத்தைக் கொடுத்த சோஷலிச அமைப்பு பின்னடைவை சந்தித்ததற்கான அடிப்படையான சில அம்சங்களை இந்த (20வது காங்கிரஸ்) தீர்மானம் ஆய்வு செய்கிறது.

தடையற்ற, முதலாளித்துவ சந்தை விரிவாக்கம்:

20-ம் நூற்றாண்டில் நடந்த சோஷலிஸ்ட் புரட்சிகளெல்லாம் பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளிலேயே (செக்கோஸ்லோவேகியா போன்ற ஓரிரு கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தவிர) நடந்து முடிந்திருந்தன. அதுவே உலகச் சந்தையில் மூன்றில் ஒரு பங்கை முதலாளித்துவத்திடமிருந்து பறித்தது; ஆனால் சோஷலிஸ்ட் புரட்சி வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நடைபெறவில்லை; இது முதலாளித்துவத்தின் கீழ் வளர்ந்த உற்பத்தி  சக்திகளின் அளவுகளையோ, மேலும் வளர்ச்சி பெறுவதற்கான திறனையோ பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆகவே, முதலாளித்துவ சந்தை விரிவடைய, தடை ஏதுமில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதலாளித்துவம் முன்முயற்சி எடுத்து கொண்டு வந்திருக்கும் தொழில்நுட்பப் புரட்சி அதை வெளிப்படுத்துகிறது. காலனியாதிக்கத்தின் சரிவுக்குப் பிறகு, மாறியுள்ள சூழலில், புதிய காலனித்துவ முறைகளில் அதன் சந்தையினை விரிவாக்கிக் கொள்ள முடிந்தது. “ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் முதலாளித்துவ வர்க்கத்தால் வாழ முடியாது” என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் – எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியிருந்தது சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

மிகக் குறுகிய காலத்தில், மிகப்பெரிய சாதனைகளை சோஷலிச உலகம் சாதித்துக் காட்டியிருந்தது; அதுவும் சோஷலிசத்தை வீழ்த்த சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பு உருவாக்கிய சூழலில் அவை நிகழ்ந்தன (அறிவியல் துறையில், செயற்கைக்கோளை விண்வெளியில் அனுப்பியது, மனிதனை முதன் முதலாக விண்வெளியில் அனுப்பியது உட்பட பல்வேறு சாதனைகளை குறிப்பிடலாம்). ஏகாதிபத்திய ராணுவ பலத்தை வலுவாக எதிர்கொள்ளும் ராணுவ வலிமையினை சோஷலிச உலகம் பெற்றிருந்தது. ஆனால், உற்பத்தி நடைமுறையில் பெற்ற முன்னேற்றங்களை மாறுபட்ட காலத்தை ஒட்டி, மக்களின் உணர்வுகள், தேவைகளை கணக்கில் கொண்டு பொருட்களின் தரத்தை உயர்த்தி பொருளாதார அடிப்படையினை வலுப்படுத்துவதில் அந்த முன்னேற்றங்கள் பயன்படுத்தப்படவில்லை; சோஷலிச கட்டுமானத்திற்கான மிக முக்கிய தேவையான காலத்திற்கேற்ற மாற்றங்களையும் மக்களின் தேவைகளையும் பரிசீலிக்கும் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்தப்படவில்லை. மேலும் விரைவாக கொண்டு வந்த சாதனைகள், வெற்றிகள், அடைந்த முன்னேற்றங்கள் யாவும் அந்த சமூக அமைப்பை பின்னோக்கித் தள்ள முடியாது என்ற நம்பிக்கையினையும் கொடுத்திருந்தது. விழுந்த முதலாளித்துவ வர்க்கம் தான் இழந்ததைப் பெற நூறு மடங்கு வலிமையுடன் திருப்பித் தாக்கும் என்று லெனின் விடுத்த எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

மதிப்பீட்டில் நேர்ந்த பிழைகள்!

இதில் இரண்டு அம்சங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று, முதலாளித்துவத்தைப் பற்றி குறைவான மதிப்பீடு; இரண்டாவது சோசலிசத்தின் ஆற்றல் திறன் பற்றி மிகையான மதிப்பீடு. இது 1960-ம் ஆண்டு கூடிய 81 கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து பெறப்பட்ட முடிவு.

“உலக முதலாளித்துவம் சிதைவினையும், சீரழிவினையும் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. சமூக முன்னேற்றத்திற்காக நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு முதலாளித்துவம் மேலும் மேலும் முட்டுக்கட்டை போடும்… உலக உற்பத்தியில் சோசலிசத்தின் பங்கு முதலாளித்துவத்தின் பங்கினை விஞ்சி நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை… முதலாளித்துவம் சந்திக்கும் பொது நெருக்கடியின் வளர்ச்சியில் புதிய கட்டம் உருவாகியிருக்கிறது… முதலாளித்துவத்தின் உலக பொருளாதார அமைப்பின் நிலையற்ற தன்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.”

அந்த கருத்தின் அடிப்படையில் “சோவியத் யூனியனில் மட்டுமல்ல; மற்ற சோசலிச நாடுகளிலும் கூட முதலாளித்துவம் இன்று மீட்டுருவம் பெறுவது என்பது நடைமுறை சாத்தியமல்ல” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  சுயவிமர்சனமாக பரிசீலனை செய்து (அந்த மதிப்பீட்டை நமது கட்சி ஏற்றுக் கொண்டிருந்தது) கட்சியின் 14-வது காங்கிரஸ் தீர்மானம் அந்தக் காலகட்டத்தின் மெய்யான நிலைமையினை ஆய்வு செய்வதில் அத்தகைய மதிப்பீடு மிக மோசமான தவறு என்ற முடிவுக்கு வந்தது என்றும் சோசலிசத்தின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளியது என்றும் குறிப்பிட்டது.

சோசலிசம் என்பது நேர்கோட்டுப் பயணமா?

சோசலிசம் என்பது சிக்கலும் இல்லாமல், நேர்கோட்டு பயணத்தில் வந்து விடும் என்ற கருத்தும் நிலவியது. சோசலிச அமைப்பு கம்யூனிச சமுதாயத்தை எட்டுவதற்கு முந்தைய ஒரு மாறும் இடைக்கால நிலை என்பது புரிந்து கொள்ளப்படவில்லை;  மார்க்ஸ் அதை கம்யூனிசத்தின் முதல் கட்டம் என்று குறிப்பிடுகிறார்.

கட்சியின் 14-வது காங்கிரஸ் தீர்மானம் அந்த மாறும் இடைக்காலத்தில் முதலாளித்துவம் தகர்ந்து போய் உலக அளவில் சோசலிசம் வெற்றி பெறும் என மிகவும் சாதாரணமாக புரிந்து கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டு, “வர்க்க சமுதாயத்திலிருந்து வர்க்க பேதமற்ற சமுதாயமாக மாறும் சோசலிச காலகட்டத்தில் முதலாளித்துவமும் சோசலிசமும் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும்” என்பதை குறிப்பாக சுட்டிக் காட்டுகிறது. அதன் பொருள் வர்க்க மோதல்கள் – புரட்சி சக்திகளுக்கும், முதலாளித்துவத்தை பாதுகாக்க முனையும் எதிர்ப்புரட்சி சக்திகளுக்கும் இடையே – தொடரும் என்பதுதான். இந்த மோதல் உலக அளவிலும் சோசலிச நாடுகளுக்குள்ளேயும் நடக்கும் என்றும் குறிப்பிடுகிறது. (முன்பே குறிப்பிட்டது போல) முதலாளித்துவ ரீதியில் பின்தங்கியிருந்த நாடுகளில் சோசலிச புரட்சி நடந்திருந்ததால் அங்கே இந்த நிலை இருக்கும் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

வெற்றிகளும், தோல்விகளும்:

சோசலிசத்திற்கு மாறும் இந்த இடைநிலை காலத்தில் சோசலிச சக்திகளின் வெற்றி, தோல்வியினை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. சோசலிசத்தை கட்டும் பொழுது, அந்த நாடுகளில் பெற்ற வெற்றிகள்/தோல்விகள் என்பதைப் பற்றிய மதிப்பீடும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வர்க்க சக்திகளின் பலாபலன்கள் பற்றிய மதிப்பீடும்தான் அதற்கு அடிப்படையாக அமையும். சாதனைகள், வெற்றிகள் எல்லாம் ஒருபுறமிருக்க, சோசலிசத்தின் கீழ் அரசு வர்க்க குணாம்சத்துடன் செயல்படத் தவறியது என 14-வது காங்கிரஸ் தீர்மானம் குறிப்பிடுகிறது. சோசலிச ஜனநாயகத்தை பலப்படுத்தவும், ஆழமாக்கவும் தவறியது. வர்க்க சக்திகளின் அணி சேர்க்கை சாதகமாக மாறியிருந்த நிலையில் ஜனநாயகத்தை விரிவுபடுத்த முன்முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு மாறிய நிலையிலும் எதிர்புரட்சியினையும் சுரண்டல் சக்திகளையும் ஒழிப்பதற்கு தேவைப்பட்ட அரசு அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு செயலாற்றியது மக்களை சோசலிச ஜனநாயகத்தில் பங்கு பெறச் செய்வதற்கு தடையாக இருந்தது; அதிகார வர்க்கப் போக்கு வளர்ந்தது; சோசலிச சட்ட விதிகள் மீறப்பட்டன; தனிநபர் சுதந்திரம், உரிமைகள் ஒடுக்கப்பட்டன; பொருளாதார நிர்வாக முறையில் காலத்தே செய்ய வேண்டிய மாற்றங்களும் செய்யப்படவில்லை; தத்துவார்த்த துறையிலும் திரிபுகள் வெளிப்பட்டன. இவை யாவும் மக்கள் அன்னியப்படுவதற்கான தளத்தை உருவாக்கியது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள எதிர்ப்புரட்சி சக்திகள் இணைந்து சோசலிசத்தை ஒழிப்பதற்கான தளம் உருவாக்கப்பட்டது. அதோடு கூட உலக முதலாளித்துவம் அடைந்த முன்னேற்றங்கள், அவை எப்படி உறுதிப்படுத்தப்பட்டன என்பதை கவனிக்க மறுத்த நிலையில்தான் சோசலிச உலகம் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.

கூர்மையடையும் முரண்பாடுகள்

மாறும் இடைக்கால கட்டத்தில் உலகில் நாம் சந்திக்கும் அனைத்து சமூக முரண்பாடுகளும், வெவ்வேறு அளவில் கூர்மையடைகின்றன. பொருளாதார நெருக்கடி நிலவும் இந்த சூழலில் உழைப்புக்கும், மூலதனத்திற்கும் உள்ள அடிப்படையான முரண்பாடு தீவிரமடைகிறது. வளர்முக நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொருளாதார, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏகாதிபத்தியம் தயங்குவதில்லை. சர்வதேச நிதிநிறுவனம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு , வேறு பல பன்னாட்டு நிறுவனங்களை பயன்படுத்துவதோடல்லாமல், ராணுவத்தை பயன்படுத்தி (ஈராக், லிபியா- தற்போது ஈரான், சிரியா) தன் மேலாதிக்கத்தை உறுதி செய்து கொள்ள ஏகாதிபத்தியம் முனைகிறது. இது ஏகாதிபத்தியத்திற்கும் வளர்முக நாடுகளுக்குமிடையேயான முரண்பாட்டை கூர்மையாக்குகிறது. ஏகாதிபத்திய நாடுகளிடையேயும், அவைகளின் வளர்ச்சியில், வணிகத்தில் ஏற்றத்தாழ்வு உண்டு ; டாலர் பெரியதா? யூரோ பெரியதா? என்ற மோதலில் ஈடுபட்டதும் உண்டு. ஆனால் லாபத்தை அதிகரிக்கும் நோக்குடன் மூன்றாம் உலக, வளரும் நாடுகளை சுரண்டும் திட்டங்களோடு தங்களிடையே நிலவும்  முரண்பாடுகளின் தீவிரத் தன்மையினை சற்றே மட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்குமான முரண்பாடே இந்த மாறும் இடைக்காலத்தில் மைய முரண்பாடாக நீடித்து வருகிறது. இந்த நான்கு முரண்பாடுகளில், வரலாற்று நிகழ்வுப்போக்கில் ஏதேனுமொன்று முன்னுக்கு வரும்; ஆனால் அது இந்த மைய முரண்பாட்டை நீக்கி விடுவதில்லை.

இந்த நான்கு முரண்பாடுகளைத்தான் மாறும் இடைக்காலத்தில் செல்வாக்கு செலுத்தும் முரண்பாடுகளாக சர்வதேச கம்யூனிச இயக்கம் அங்கீகரித்துள்ளது. முதலாளித்துவ அமைப்பில் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் அதன் பலனை தனியார் பறித்துக் கொள்ளும் தன்மைக்கும் முரண்பாடு உள்ளது; இது லாபத்தை அதிகரிக்கும் நோக்கோடு செயல்படுத்தப்படுவதன் விளைவு உலகச் சுற்றுப்புற சூழல் சீரழிந்து போவதில் முடிகிறது. தட்ப வெப்ப நிலைகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன; மனிதகுல வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உலகம் வெப்பமயமாவதை தடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்குக் காரணமான பசுங்கூட வாயு வெளியேற்றத்தை தடுக்கும் பொருளாதார, தொழில்நுணுக்க சுமைகளை ஏகாதிபத்தியம் வளர்முக நாடுகளின் மேல் திணிக்க முயற்சிக்கிறது. ஏகாதிபத்தியத்திற்கும் வளர்முக நாடுகளுக்குமிடையே நிலவும் முரண்பாட்டில் இது ஒரு புதிய அம்சமாக உருவெடுத்திருக்கிறது. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் சுற்றுப்புற சூழல் அழிப்பை தீவிரப்படுத்துகின்றன. பேச்சுவார்த்தைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை, ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை செயல்படுத்த மறுக்கின்றன; இதில் எழும் பிரச்சனைகளில் அனைவரும் சமநிலையில் நின்று அணுகும் முறையினை ஏற்க மறுக்கின்றன. வளரும் நாடுகளின் மீது சுமையினை ஏற்றி இந்த வகையான வர்க்கச் சுரண்டலை ஆழப்படுத்துகின்றன. ஏகாதிபத்தியத்தின் இந்த முயற்சிகளுக்கு எதிராக வளரும் நாடுகள் நடத்தும் போராட்டம் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் முக்கிய கூறாகும்.

ஒவ்வொரு நாடும் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முயற்சியின் போது, இத்தகைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கான மக்கள் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்களின் வெற்றிதான் மாறிச் செல்லும் காலத்தின் வேகத்தை தீர்மானிக்கும்.

21-ம் நூற்றாண்டில் சோஷலிசம்

வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் சோசலிச வெற்றி தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் 21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான பாதை, கடந்த கால அனுபவங்களின் பின்னணியில் பார்க்கும்போது, நெடிய சிக்கல் நிறைந்ததாக பல்வேறு திருப்பங்களையும் வளைவுகளையும் கொண்டதாக இருக்கும்;  அது நீண்ட காலப் போராட்டமாகவும் இருக்கும். முதலாளித்துவத்திலிருநது சோசலிசத்திற்காக மாறும் அந்த இடைக்காலத்தில், கம்யூனிஸ்டுகளும் தொழிலாளி வர்க்கமும் அந்த மாற்றத்தை விரைவுபடுத்த பணியாற்ற வேண்டும். ஏகாதிபத்தியம் அந்த முயற்சிகளை முறியடித்து பின்னோக்கித் தள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்ற எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் ?

மனிதனை மனிதன் சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத அமைப்பிற்காக நடத்தும்போராட்டமாக அது இருக்க வேண்டும். மக்களின்  குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தி, அந்த அமைப்பு முதலாளித்துவத்தை விட மேன்மையானது என்று நிலை நாட்டப்பட வேண்டும். ‘சக்திக்கேற்ப உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம்’ என்ற இடைக்கால கோட்பாடு “சக்திக்கேற்ப உழைப்பு, தேவைக்கேற்ப ஊதியம்” என்ற கம்யூனிச கோட்பாட்டினை நோக்கி செல்ல வேண்டும். அனைத்து துறைகளிலும் மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதன் மூலம் அதன் மேன்மை நிலை நாட்டப்படும். சோசலிச கட்டுமானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஜனநாயகம், சொத்து வடிவங்கள், திட்டமிடுதல், அதற்கும் சந்தை பொருளாதாரத்திற்குமான தொடர்பு பற்றி கட்சியின் 14-வது காங்கிரஸ் தீர்மானம் கொடுத்த வழிகாட்டுதலின் அடிப்படையில் நமது கட்சித் திட்டத்தில் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கட்சித் திட்டம் பாரா 6.5-ல் “மக்கள், ஜனநாயக அரசு பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளில் அரசுடைமை மூலம் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பதோடு, இதர துறைகளை கட்டுப்படுத்துகின்ற, வழிகாட்டுகின்ற பாத்திரத்தை அரசு வகிக்க வேண்டியுள்ளது. பொதுத்துறைக்கு மேலாதிக்கம் தரக்கூடிய, பல்வேறு வடிவ சொத்துடமை கொண்ட பன்முக கட்டமைப்பு கொண்டதாக, மக்கள் ஜனநாயக பொருளாதாரம் அமையும்” என்று குறிப்பிடப்படுகிறது. 20-வது காங்கிரசின் தத்துவார்த்த தீர்மானமும், “அரசுத்துறை என்பது சோசலிசத்தின் கீழ் உற்பத்தி சாதனங்களின் சமூக உடைமையின உறுதியான அடித்தளமாக அமைந்திருக்கும் என்ற போதிலும், அரசுக்கு சொந்தமான துறையை சோசலிசத்திற்கு சமமானதாக இயந்திர கதியில் சித்தரிக்கக் கூடாது. பல்வேறு வடிவங்களிலான சொத்துடமைகள் மூலம் சோசலிச அரசு அதன் பொருளாதார உயிர்நாடி அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று விளக்கி விட்டு “முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதாரமே (அதாவது லாப அதிகரிப்பே) அதன் அரசியலை” நிர்ணயிக்கும். இதற்கு மாறாக, அரசியலே அதன் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் என்ற கோட்பாட்டினை 21-ம் நூற்றாண்டின் சோசலிசம் நிலை நாட்டும் என்று தெளிவாக வரையறுக்கிறது.

(சோசலிச நாடுகள் பற்றிய தனித்தனியான ஆய்வு இங்கே தரப்படவில்லை)



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: