- உ.வாசுகி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது என்ற கோரிக்கைக்கான மக்கள் எழுச்சி தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. அடுத்து விவசாயத்தையும், நீராதாரத்தையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் எழுச்சி…. அதே பிரச்னைக்காகத் தொடர்ந்த வடகாடு, நல்லாண்டார்கொல்லை…. முன்னதாக உலக அளவில், இன்னும் பரந்த விஷயங்களுக்கான வால் ஸ்டிரீட் இயக்கம், அரபு வசந்தம் போன்ற லட்சக்கணக்கானோர் பங்கேற்ற தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதில் பங்கேற்றோரில் பெரும்பாலோர், போராட்ட உணர்விலிருந்து மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியிருப்பார்கள். உற்சாகமும் வடிந்திருக்கும். அவர்களைத் திரும்பவும் போராட்ட பாதைக்கு, மாற்று அரசியல் நோக்கி இழுக்க வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. தன்னெழுச்சி இயக்கங்கள் குறித்த மதிப்பீடும், புரிந்துணர்வும் இதற்கு உதவும்.
தன்னெழுச்சியான இயக்கம் என்றால் எந்த அமைப்பும் அறைகூவல் விடுக்காமல், பெருமளவு திட்டமிட்டதாகவும் இல்லாமல் நடக்கும் இயக்கம் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். தன்னெழுச்சி இயக்கம் எதற்காக வேண்டுமானாலும் நடக்கலாம். மார்க்சிஸ்டுகளைப் பொருத்தமட்டில் ஜனநாயக உணர்வுகளுக்கு எதிராக, சாதி, மத வெறிக்கு ஆதரவாக நடக்கும், பிற்போக்கு உள்ளடக்கம் கொண்ட, தன்னெழுச்சி போராட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். வர்க்க, சமூக, பண்பாட்டு பிரச்னைகள் அல்லது பொதுப் பிரச்னைகளை ஒட்டி உருவாகும் தன்னெழுச்சி இயக்கங்களை எவ்வாறு அணுகுவது என்பதை ஆய்ந்து நோக்குவது இன்றைய தேவை.
தன்னெழுச்சி நிகழ்வுகள் புதியதல்ல. உலகம் முழுதும் வரலாறு நெடுகிலும் தன்னெழுச்சியாக மக்கள் வீதிக்கு வந்திருக்கின்றனர். இது தவிர்க்க முடியாதது. முரண்பாடுகள் நிறைந்த புறச் சூழல் காரணமாக மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, எதிர்ப்பு உணர்வை, இத்தகைய தன்னெழுச்சி பிரதிபலிக்கிறது. இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட, எங்காவது ஓர் இடத்தில், வெவ்வேறு அளவில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்ட களத்துக்கு வந்து கொண்டுதான் உள்ளனர். அது திடீரென வெடிக்கும் தொழிலாளிகளின் ஒரு வேலைநிறுத்தமாக இருக்கலாம், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிர்ப்பாக இருக்கலாம், மாணவர் பிரச்னைக்காக வீதிக்கு வருவதாக இருக்கலாம், குடிநீருக்கான சாலை மறியலாக இருக்கலாம், பல்வேறு தன்னெழுச்சி நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஊடக விளம்பரத்தாலும், ஒரே இடத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடியதாலும், நீடித்து நடந்ததாலும் ஒரு சில போராட்டங்கள், தன்னெழுச்சி இயக்கங்கள் என்ற அந்தஸ்து பெற்று, கூடுதலாக கவனத்தை ஈர்த்துள்ளன; அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.
இவற்றை எவ்வாறு அங்கீகரித்து, ஒருமுகப்படுத்தி, அரசியல் திசைவழி கொடுத்து, புரட்சிகர மாற்றத்துக்குப் பயன்படுத்துவது என்று பார்ப்பதே கம்யூனிஸ்டுகளின் பணியாகும். தன்னெழுச்சி இயக்கங்களே போதும்; மக்கள் தாமாகவே பிரச்னைகளைக் கையில் எடுப்பதுதான் தீர்வுக்கு வழி; குறிப்பாக, அணிதிரட்டப்பட்ட அமைப்புகளோ, அரசியல் அறைகூவலோ தேவையில்லை என்று சிலர் கூறுகின்றனர். அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்து, இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகளும், அரசியலும் பொருத்தப்பாடற்றதாகி விட்டன என்று கூறி பரவசப்படும் பாணியும் முன்னுக்கு வருகிறது. இத்தகைய போக்குகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்.
தன்னெழுச்சி போராட்டம் … உணர்வு நிலையின் துவக்க கட்டம்:
தன்னெழுச்சி அம்சத்தை, விழிப்புணர்வின் அல்லது உணர்வு நிலையின் துவக்க கட்டம் (consciousness in an embryonic form) என்று “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலில் லெனின் குறிப்பிடுகிறார். அன்றைய காலகட்டத்தில் ரஷ்யாவில் தொழிலாளிகளால் நடத்தப்பட்ட பல்வேறு தன்னெழுச்சியான வேலை நிறுத்த போராட்டங்களின் பின்னணியில், ரபோச்சியே டைலோ என்ற பத்திரிகை எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விரிவாக பதில் அளிக்கிறார். ”தங்களை சுரண்டும் தற்போதைய சமூக அமைப்பு நிரந்தரமானது; கேள்வி கேட்க முடியாதது என்ற பல்லாண்டு கால நம்பிக்கையை, தொழிலாளிகள் கைவிடத் துவங்கியிருக்கிறார்கள். ஒரு கூட்டான எதிர்ப்பு தேவை என்று புரிந்து கொண்டு விட்டார்கள் என்று கூட சொல்ல மாட்டேன்; உணர துவங்கியுள்ளனர்” என்பது லெனினின் வார்த்தைகள்.
அதே சமயம், தன்னெழுச்சியைத் துதிபாடி, அதனிடம் சரணாகதி அடைவது உதவாது எனவும் அவர் வலுவாக எச்சரிக்கிறார். தொழிற்சங்கத் தலைவர்களின் பிடியிலிருந்து, தொழிலாளிகள் ”விடுதலை” பெற்று, தங்கள் விதியைத் தாங்களே கையில் எடுத்துக் கொண்டார்கள் என்பது போன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்களை விமர்சிக்கிறார். தொழிலாளிகளுக்கு புரட்சிகர அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது; அதை உணராமல், தன்னெழுச்சியான பொருளாதாரவாத போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளும் கண்ணோட்டத்தை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். இந்த மிக ஆரம்ப கட்ட உணர்வு மட்டத்தை உயர்த்தி, புரட்சிகர அரசியல் உணர்வைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்ட வேண்டும்; இது தொழிற்சங்கங்களால் செய்ய இயலாது, அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. தொழிலாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். எனவே அரசியல் உணர்வூட்டும் பணி வெளியிலிருந்து வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கக் கட்சியின் (கம்யூனிஸ்ட் கட்சியின்) அவசியத்தையும், அதற்கான கோட்பாடுகளையும் லெனின் முன் வைக்கிறார்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தொழிலாளிகள் மத்தியில் உருவாகும் தன்னெழுச்சியான இயக்கங்கள், சமூக ஜனநாயக சக்திகளின் அரசியல் தலையீடுகளை இன்னும் அவசியப்படுத்துகிறது என்பதுதான் தோழர் லெனின் அவரது வாதங்களின் மூலம் உணர்த்துகிற கருத்து.
தோழர் ரோசா லக்சம்பர்க், லெனின் முன்வைத்த சில அடிப்படையான ஸ்தாபன கோட்பாடுகளுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், வெகுமக்கள் பங்கேற்கும் தன்னெழுச்சி போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்தார். அன்றைய ஜெர்மனியில் தொழிற்சங்கங்களிலும், ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சியிலும் சீர்திருத்தவாதப் போக்குகளும், அதிகாரவர்க்க அணுகுமுறையும் நிலவின. மக்களை ஒருமுகப்படுத்துவதற்கான ஐக்கிய முன்னணி உத்தியின் தேவையைப் புரிந்து கொள்ளாமல், வெகுஜன திரட்டல் குறித்தும், அரசியல் உணர்வூட்டல் குறித்தும் கவலை கொள்ளாமல், ‘இயக்கம் நடத்துவது மட்டுமே குறிக்கோள்’ என்று கட்சித் தலைமையின் ஒரு பகுதி செயல்பட்டதை அவர் சாடினார். புயலென வரும் மக்களின் எழுச்சியில் இத்தகைய தலைவர்கள் காணாமல் போவார்கள் என்றுகூட எச்சரித்தார். புரட்சிகர சக்திகள், மக்களின் தன்னெழுச்சியின்பால் செயலற்று இருந்துவிடக் கூடாது என்பது அவரது வாதங்களின் முக்கிய சாராம்சம்.
தன்னெழுச்சி இயக்கங்களை அங்கீகரித்து, தலையீடு செய்து, புரட்சிகர இலக்கு நோக்கி அவற்றைப் பயணிக்கச் செய்வது கம்யூனிஸ்டுகளின் பணி என்பதைத்தான் மேற்கூறிய சர்ச்சைகள் வலியுறுத்துகின்றன.
தானாக நடப்பதல்ல:
தன்னெழுச்சி போராட்டங்களை அதன் சகல பரிமாணங்களுடனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னெழுச்சி என்பதால், ஏதோ தானாக (chance) நடந்து விட்டது; அது ஒரு விபத்து என்று பார்த்துவிடக் கூடாது. தற்செயல் என்பதற்கும், கட்டாயமான உந்துதல் அல்லது தேவை என்பதற்கும் (chance and necessity) இயக்கவியல் உறவு இருக்கிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார். சின்னச் சின்ன, முக்கியமற்றதாகத் தோற்றமளிக்கும் அளவு ரீதியான மாற்றங்கள் சேர்ந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பாய்ச்சலான குணாம்ச மாற்றமாக உருமாறும். மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டே இருக்கின்றன. பலவற்றில் ஏற்படும் அதிருப்தியும், கோபமும் பல்வேறு காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. சகிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில், வேறு வழியில்லை; இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை (necessity) உருவாகிறது, அப்போது ஒரு சின்ன விரிசல் கூட தன்னெழுச்சியாக வெடிக்கும். தற்போதைய நிலையிலிருந்து முன்னோக்கி செல்லும் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் சக்திகளும், இதே நிலை நீடிக்கட்டும் என்று விரும்பும் சக்திகளும் அனைத்து தளங்களிலும் மோதிக் கொண்டேதான் இருக்கின்றன. அகச் சூழல், புறச் சூழலின் முதிர்ச்சியைப் பொறுத்து, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் முன்னுக்கு வருகிறது. அதாவது எழுச்சி நடக்கும்; அல்லது மட்டுப்படுத்தப்படுவது தொடரும்.
தன்னெழுச்சி போராட்டங்களால் சில உடனடியான கோரிக்கைகள் வெற்றி பெறக் கூடும். உதாரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் சிறப்பு சட்டம், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட எழுச்சி, எகிப்தில் நடந்தபோது, பல்லாயிரக்கணக்கானோர் தஹ்ரீர் சதுக்கத்தை நிறைத்து 18 நாட்கள் போராடியதன் விளைவாக, 30 ஆண்டுகளாக இருந்த சர்வாதிகார ஆட்சியை வீழ்த்த முடிந்தது. “நாங்கள் 99%” என்று முழங்கிய வால் ஸ்ட்ரீட் போராட்டம், அமெரிக்காவில் ஓர் அரசியல் விவாதத்தைக் கிளப்பியது. இவை வரவேற்கத் தகுந்தவை; நம்பிக்கை ஊட்டக் கூடியவை. ஆள்வோர் எது செய்தாலும், மக்கள் மௌனமாய் தாங்கிக் கொள்வார்கள் என்ற நிலையிலிருந்து, மக்கள் ரத்தமும் சதையுமான போராட்ட வீரர்களாக ஆவது என்பது, உத்வேகத்தை அளிக்கக் கூடிய அம்சமாகும். என்றபோதிலும், இது நிச்சயம் முதல் படிதான்.
ஆனால், முதல் படியிலேயே நின்று விட்டால் இலக்கை நோக்கி செல்ல முடியாது. தன்னெழுச்சி இயக்கங்களின் பங்கேற்பாளர்களுக்கு, அவர்களின் உடனடிப் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வே இருக்கும். பிரச்சினைகள் ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பு முறையால் ஏற்படுகின்றன என்ற புரிந்துணர்வு இயல்பாக ஏற்பட்டு விடாது. குறிப்பிட்ட ஒன்றிரண்டு கோரிக்கைகளுக்கான அந்தப் போராட்டம், சமூக மாற்றத்துக்கான ஒட்டு மொத்த போராட்டத்தின் ஒரு பகுதி (partial struggle) மட்டுமே என்பதும், தீர்வுக்கு என்ன பாதை என்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அது ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் நின்று விடுகிறது. பின்னர் நீர்த்துப் போய் விடுகிறது. அவர்களின் உணர்வு மட்டம், போராட்டத்தின் துவக்கத்தில் எந்த நிலையில் இருந்ததோ, அதுவே ஏறத்தாழ போராட்டத்துக்குப் பின்னும் தொடரும். இது, அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லாது. சுரண்டப்படுவோரின் நலனுக்கும், இன்றுள்ள அரசியல் பொருளாதார முறைமைக்கும் இடையில் சமரசம் செய்ய இயலாத பகைமை நிலவுவது குறித்த புரிதலுடன் கூடிய, உணர்வு மட்டமாக இது மாற்றப்பட வேண்டும். இது தன்னெழுச்சி போராட்டங்களில் பங்கேற்பதன் மூலமாக, தானாக வந்து விடாது.
கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்கும்போது:
தன்னெழுச்சியான போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் தலைமை பொறுப்புக்கு வரும் போது, போராட்டத்தின் தன்மை மாறுகிறது; கோரிக்கைகள் கூர்மையடைகின்றன. அரசியல் உள்ளடக்கம் உருவாகிறது. உதாரணமாக, தெலுங்கானா போராட்டம் துவக்கத்தில் வெட்டி என்ற கட்டாய இலவச உழைப்பு முறைக்கு எதிரான உணர்வாகத்தான் உருவானது. கம்யூனிஸ்டுகளின் தலைமை மற்றும் பங்கேற்புக்குப் பின்தான், அதற்கு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, நிஜாம் ஆட்சி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பரிமாணங்கள் கிடைத்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. பெண்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டது. அதிகாரிகளின், நிலஉடமையாளர்களின் பாலியல் பொருளாக, மிதியடியாக அவர்கள் இருந்த நிலை மாறியது. நிலப்பிரபுத்துவத்தின் கொடுமை பெருமளவு குறைந்தது. அடிமை நிலையிலிருந்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது.
கீழ தஞ்சை போராட்டம், வார்லி ஆதிவாசி மக்களின் கிளர்ச்சி போன்றவை, மிராசுதார்கள், நில உடமையாளர்கள், ஆளுவோர்களின் நடவடிக்கைகளால் சுரண்டப்பட்டு, உரிமைகளும், மனித கவுரவமும் நொறுக்கப்பட்ட உழைப்பாளிகள்/சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டோரின் மனதில் செங்கொடி விவசாய இயக்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர அரசியல் என்ற தீ கங்குகளை விதைத்ததால் அறுவடையான இயக்கங்கள். இவற்றிலும் தன்னெழுச்சி நிகழ்வுகள் உண்டு. ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்று அரசியல் இலக்கோடு திட்டமிட்டு செயல்பட்டதால், அவற்றின் பரிமாணங்கள் மாறிப்போயின. பண்ணை அடிமை சுரண்டல் முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. குறைந்தபட்ச கூலி என்பதற்கான முகாந்திரம் உருவாக்கப் பட்டது.
கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்பது என்பதை இயந்திரகதியாகப் பார்த்துவிடக் கூடாது. கம்யூனிஸ்டுகள் சிலர் தலைமையில் இருப்பது மட்டுமே தானியங்கியாக மாற்றத்தைக் கொண்டு வந்து விடாது. திட்டவட்டமான சூழலைத் துல்லியமாக ஆய்வு செய்வது என்ற மார்க்சீய விதியை முறையாக அமல்படுத்தும்போது, கம்யூனிஸ்டுகளால் போராட்டங்களை அடுத்த தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடிகிறது என்பதுதான் அதன் பொருள். மார்க்சிய தத்துவம் என்ற ஆயுதத்துடன் தன்னெழுச்சி போராட்டங்களுக்குள் இணைவது; பல்வேறு வர்க்கங்களை, சமூகப் பிரிவினரை ஒன்றுபடுத்த ஐக்கிய முன்னணி உத்தியைப் பயன்படுத்தி போராட்ட ஒற்றுமையைக் கட்டுவது; பிரச்னைகளை அடையாளம் கண்டு பொருத்தமான கோரிக்கைகளை உருவாக்குவது; மக்களின் ஏற்புத்தன்மையைப் பெறுவது; போராட்ட உத்திகளை வகுப்பது; அவர்களை ஸ்தாபனப்படுத்துவது; அவர்களுக்கு அரசியல் உணர்வூட்டுவது போன்ற செயல்பாடுகளின் மூலமாக சுரண்டல் சமூக அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அதை மாற்ற முடியும். இவை கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பணிகள். கீழத்தஞ்சை விவசாய தொழிலாளிகள், வார்லி ஆதிவாசி மக்களின் உணர்வு மட்டம் பிற்பட்ட நிலையில்தான் இருந்தது. கம்யூனிஸ்ட் பணிகளின் மூலம்தான், அவர்களின் உணர்வு மட்டம் உயர்த்தப்பட்டது; போராட்ட ஒற்றுமை கட்டப்பட்டது; கவ்விப் பிடிக்கும் கோரிக்கைகளை உருவாக்க முடிந்தது. வர்க்க ஒடுக்குமுறையும், சாதிய ஒடுக்குமுறையும் ஒன்றாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இவற்றை ஒன்றிணைத்த போராட்ட உத்தியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் முடிந்தது.
மெரினா எழுச்சி:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோருவதை ஒட்டி எழுந்த எழுச்சியை ஒற்றைக் கோரிக்கைக்கான போராட்டமாக மட்டும் கருத முடியாது. மற்ற பிரச்னைகள் இந்த அளவு கவனிப்புக்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை எனவும் சொல்லிவிட முடியாது. வறுமை தீவிரமாகிறது; நிலங்கள் பறி போகின்றன; விவசாயம் கட்டுப்படியாகவில்லை; தற்கொலைகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன; தகுதிக்கேற்ற வேலை இல்லை; சம்பளம் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை; கல்வி, ஆரோக்கியத்தில் தனியார்மயம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; கடுமையான குடிநீர் பற்றாக்குறை பயமுறுத்துகிறது; ஊரக வேலை உறுதி சட்ட அமலாக்கத்தில் குறைபாடுகள் நிலவுகின்றன; ரேஷன் முறை சீரழிய துவங்கி விட்டது; பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிக்கிறது; சாதிய ஒடுக்குமுறை பல விதங்களிலும் வெளிப்படுகிறது. இவற்றால் சொல்ல தெரியாத வேதனையும், ஏனென்று புரியாத கோபமும் கவ்விப் பிடிக்கிறது. போராட்டமாக வெளிப்படாமல் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்த இத்தகைய உணர்வுகள், கொதிநிலை அடைந்து தமிழ் இன அடையாளம் என்ற பேரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரிய போராட்டமாக வெடித்தன. தமிழகத்தில் பிரதான முதலாளித்துவ கட்சியான அதிமுகவின் தலைவர், மக்களை ஈர்க்கும் பிம்பமாக இருந்தவர், இறந்த பின்னணியில், வலுவான அடுத்த கட்ட தலைமை உருவாகவில்லை. அதே அளவிலான பிம்பம் உடனடியாகக் கட்டமைக்கப்பட முடியவில்லை என்கிற புறச் சூழலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியை விட, இரண்டாம் குற்றவாளி மீது கூடுதல் வெறுப்பும், அதிருப்தியும் வெளிப்பட்டது இதற்கு ஒரு உதாரணம். எதிர்காலம் இன்னும் இது போல நிறைய தன்னெழுச்சி போராட்டங்களைப் பார்க்கும்.
இந்த எழுச்சி, அரசியல் கட்சிகளோ, வர்க்க அமைப்புகளோ அறைகூவல் விடுக்காமல் குவிந்த மக்கள் திரள் என்பதும், அரசியல் கட்சிகளை நிராகரித்து விட்டு நடக்கும் விஷயம் என்பதும், சில பகுதியினரால் பெருமைக்குரியதாகப் பேசப்பட்டது. அமைப்பு, கொடி, பேனர் எல்லாமே சந்தேகத்துக்கு உரியவையாகப் பார்க்கப்படும் உளவியல் உருவாக்கப்பட்டது. திரட்டப்படாமல் தாமாகவே பொது இடத்தில் கூடுவதும், முன்கூட்டியே திட்டமிடாமல், அடுத்து என்ன செய்வது என்பதை அவ்வப்போது பேசி உருவாக்கிக் கொள்வதும்தான் சிறந்த ஜனநாயக மாதிரி என்று முன்வைக்கப் பட்டது. இத்தகைய அணுகுமுறை, அதாவது அரசியல் மாற்றத்துக்கான நிகழ்ச்சி நிரல் அற்ற, திட்டமிடப்படாத அணுகுமுறை உண்மையில் ஆளும் வர்க்கத்துக்கு சாதகமாகவே அமையும். இது கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் முற்போக்கு புரட்சிகர சக்திகளுக்கு எதிரான பார்வை. மக்கள் நலனுக்கான மாற்றத்துக்குப் போராடுவது முற்போக்கு புரட்சிகர சக்திகள் தாம். இவற்றை மறுப்பது, மாற்றத்தை மறுப்பதாகும்; ஒரு தெளிவான அரசியல் திசை வழியை மறுப்பதாகும். தற்போதைய சுரண்டல் சமூக அமைப்பு நீடிப்பதை இந்த அணுகுமுறை எவ்விதத்திலும் அசைக்காது.,
மெரினா எழுச்சி, ஆட்சியாளர்களால் துவக்கத்திலேயே ஒடுக்கப்படவில்லை. அதன் நீடிக்கும் தன்மையை அரசு யூகிக்கவில்லை. தமிழகத்தில் நிலவிய தீவிரமான விவசாய நெருக்கடி மற்றும் அதன் விளைவுகளைத் திசை திருப்ப இந்த எழுச்சி பயன்படும் என்று மாநில அரசு கணக்கு போட்டிருக்கலாம். மாநில அரசின் பலவீனமான தலைமை மத்திய அரசுடன் நெருக்கத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது, மத்திய மோடி அரசுக்கு எதிரான முழக்கங்கள் தீவிரப்பட்டதும், மாநில அரசின் வாக்குறுதிகளுக்குப் பிறகும் எழுச்சி முடிவுக்கு வரவில்லை என்பதும், ஆட்சியாளர்களைக் கலவரப்படுத்தியது. இறுதி நாள் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு வன்முறை, அதன் தொடர்ச்சியாகவே பார்க்கப் பட வேண்டும்.
இந்த எழுச்சியை வெகுமக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானது. பட்டி தொட்டியெங்கும் எடுத்துச் சென்று,. அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தை விசிறி விட்டன. கார்ப்பரேட் ஊடகங்களுக்கு, ஒரு மக்கள் எழுச்சியைக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? ஆளும் வர்க்கத்துக்கு ஆபத்து உருவாக்கும் கோரிக்கை அல்ல அது. கோரிக்கைகள் வர்க்க தன்மை உடையவையாக இருந்திருந்தால் இந்த அளவு முக்கியத்துவம் கிடைத்திருக்காது. தன்னெழுச்சி இயக்கம், தற்போதைய அமைப்பு முறைக்கு சவால் அல்ல என்பதும் ஒரு யதார்த்தம். இடதுசாரிகளின் திட்டமிட்ட, முக்கியமான பல்வேறு இயக்கங்களும், போராட்டங்களும் ஒப்புக்காகக் கூட ஒளிபரப்பப் படுவதில்லை என்பதை இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, மாற்று அரசியலை முன்வைத்து மார்ச் 2-6 மார்க்சிஸ்ட் கட்சியால் நடத்தப்பட்ட மாநில அளவிலான இயக்கத்தை ஊடகங்கள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசியலுக்கு உண்மையான மாற்று இடதுசாரி அரசியல்தான் என்பது ஒரு முக்கிய அரசியல் செய்தி. அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுவது, வர்க்க அரசியலுக்கு சாதகமாகி விடும். சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடந்த அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டமாக இருக்கட்டும்; சென்னையில் ஏப்ரல் 4-ல் நடந்த சிஐடியுவின் முற்றுகை போராட்டமாக இருக்கட்டும்; அவை ஊடகங்களை அசைத்து விடவில்லை. ஏனெனில் ஊடகங்களின் வர்க்கத் தன்மை அவற்றை அவ்வாறு செயல்படுத்துகிறது.
இயக்கத்தைப் பரவலாக்கியதில் சமூக வலைத்தளமும் முக்கிய பங்காற்றியது. அதில் உள்ள வாய்ப்பு முற்போக்கு சக்திகளால் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்.
100% தன்னெழுச்சி சாத்தியமா?
100% தன்னெழுச்சி என்று ஏதாவது இருக்க முடியுமா? நிச்சயம் ஏதோ ஒரு குழு, ஏதோ ஒரு தலைமை இதற்கான முன்முயற்சியை எடுத்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இதைப் பார்த்தோம். தமிழகம் முழுதும் ஒரே தலைமை இல்லை. ஆனால், தலைமையே இல்லை என்று சொல்லி விட முடியுமா? ஒவ்வொரு மையத்திலும், ஓர் அமைப்பு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தலைமை பொறுப்பை வைத்திருந்தன. போராட்டக் குழு என்று பல மையங்களில் உருவாக்கப்பட்டது. அதன் தலைமையிலிருந்து அவர்களுக்கு வழிகாட்டுதல் வந்து கொண்டிருந்தது. பீட்டா எதிர்ப்பு முழக்கங்கள், அரசியல் முழக்கங்களாக மாறியது தற்செயலானதாக இருக்க முடியாது. சில காரணங்களால், தலைமையில் இருந்தோர், தம் அடையாளத்தை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும். இத்தாலிய மார்க்சீய சிந்தனையாளர் கிராம்சி, “ஒவ்வொரு இயக்கத்திலும் உணர்வுபூர்வமான தலைமை மற்றும் ஒழுங்குமுறை கூறுகள் உள்ளடங்கி இருக்கும்” என்றார். தன்னெழுச்சி இயக்கங்களில் இருக்கும் இந்த ஒழுங்குமுறை கூறுகளை வலுப்படுத்த வேண்டும். அதே போல் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தில் தன்னெழுச்சியும் இருக்கும்; அதனை அரசியலாக மாற்றிட வேண்டும்.
”கூடி நிற்பவர்களை வெளியேற்றி விடலாம், ஆனால் எங்கள் கருத்தை விரட்டி அடிக்க முடியாது” என்பது வால் ஸ்ட்ரீட் முழக்கத்தில் ஒன்று. ஆனால், சிறந்த முழக்கத்தைக் கூட நடைமுறையாக்க வேண்டும் என்றால், அதற்குத் தத்துவமும், அமைப்பும், வெகுஜன பங்கேற்பும் தேவை. மக்கள் பங்கேற்பில்லாமல் எதுவும் வெற்றி பெறாது. அவர்களின் ஈடுபாடு மிக முக்கியம். அதைத் தன்னகத்தே கொண்ட தன்னெழுச்சி இயக்கம் கம்யூனிஸ்டுகளால் புரட்சிகர திசைவழியில் பயன்படுத்தப்பட வேண்டும்.
சிறு விரிசல்… பெரு வெடிப்பு:
தன்னெழுச்சி இயக்கங்கள் வெற்றிடத்தில் உருவாவதில்லை. போராட்டத்துக்கான விதைகள் தூவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதற்கான வாசல்கள் திறந்து கொண்டே இருக்கின்றன. சில சமயம், சில இடங்களில், சில பிரச்சினைகள் பற்றிக் கொள்கின்றன. சமூக உளவியல் மிக சிக்கலானது. எது அதனைக் கவ்விப் பிடிக்கும் என்று யூகிப்பது கடினம். நிர்பயா மீதான பாலியல் வல்லுறவு சம்பவம், டெல்லியில் 2012ல் நடந்த 634வது சம்பவம். 633க்கு ஏற்படாத எதிர்வினை இதில் ஏற்பட்டது. பல பிரச்னைகளின் மீது எழுந்த அதிருப்தி, மாற்றம் வேண்டும் என்ற உணர்வு, நிர்பயா பிரச்னையில் வெடித்தது. பெரும் மக்கள் பங்கேற்புடன் கூடிய தன்னெழுச்சி போராட்டங்கள் பரவலாகும்போது, அவற்றை ஆய்வு செய்து, ஒரு ‘முறை’ (pattern) இருக்கிறதா எனப் பார்க்க முடியும். ஒன்றிரண்டு மட்டுமே நடக்கும்போது, இத்தகைய ஆய்வும் எளிதல்ல.
அதிருப்திகளும், எதிர்ப்பும் ஒடுக்குமுறையால் மட்டுமே மட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆளும் வர்க்கங்கள் பல்வேறு வழிகளைக் கையாளுகின்றன. ஆளும் வர்க்கக் கருத்துக்களைத் தம் கருத்தாக மக்களை வரித்துக் கொள்ள வைப்பது; அதுதான் இயல்பானது என்ற உணர்வை உருவாக்குவது என்பது இதில் அடிப்படையான ஒன்று. ஆளும் வர்க்கத் தலைவர்கள் மக்களை ஈர்ப்பவர்களாகத் தோற்றமளிப்பது; அந்த மாயத் தோற்றத்துக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் பிரம்மாண்டமாக முட்டுக் கொடுப்பது; அரசு நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிப்பது; பிரச்சினைக்குக் காரணம் பிற மதங்கள் அல்லது சாதிகள் என்று மடை மாற்றி விடுவது; ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையின் காரணமாக, உடனடிக் கஷ்டங்கள் இருந்தாலும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது; அதற்குரிய முழக்கங்களைக் கவர்ச்சிகரமாக முன் வைப்பது (வறுமையே வெளியேறு/அனைவரின் வளர்ச்சிக்காகவும் அனைவருடனும் இணைந்த செயல்பாடு/ மோடி வந்தால் நல்ல காலம் வந்து விடும் / பண மதிப்பு நீக்கம் கருப்பு பணத்தை மீட்க உதவும் /தூய்மை பாரதம்/டிஜிட்டல் இந்தியா) இப்படி பல உதாரணங்களைக் கூற முடியும். எனவேதான், இவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பணி முக்கியத்துவம் பெறுகிறது.
”வர்க்க உணர்வு என்பது பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் ஒரு மின் அதிர்ச்சியைப் போல் உணரப்படும். முதலாளித்துவ சங்கிலி பிணைத்து வைத்திருந்த இந்த சமூக, பொருளாதார நிலைமை சகித்துக் கொள்ள முடியாதது என்ற புரிதல் ஏற்படும். சங்கிலியை உடைப்பதற்கான முயற்சிகள் ஆங்காங்கே நடக்கும்” என ரோசா லக்சம்பர்க் குறிப்பிடுகிறார். பரந்த அளவில் இந்த உணர்வு நிலை உருவாக தேதி குறிக்க முடியாது. ஓர் அமைப்பு அறைகூவல் கொடுத்து, நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் சீரான ஒழுங்குடன் இதை எட்டி விட முடியாது. அதற்கான பணிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். மக்களின் உணர்வு மட்டம் கொதி நிலையை எட்டாத வரை, புரட்சிகர தத்துவத்துடன் கூடிய அமைப்புகளாலோ, திறமையான தலைமையினாலோ கூட வெடிப்பை ஏற்படுத்த முடியாது. அல்லது கொதி நிலையை எட்டும்போது, அவற்றைத் தலைமை தாங்கி வழி நடத்தும் திறன் ஸ்தாபனத்துக்கு இல்லை என்றாலும் அதனை வழி நடத்த முடியாது.
வெடிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, உள்ளூர் மட்ட போராட்டங்களை மக்கள் பங்கேற்புடன் உருவாக்கிட மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்ததும் இந்தப் புரிந்துணர்வுடன்தான். கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டங்களைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டும் என்பதும் பிளீனத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இதற்கான தயார் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும்.
சலனங்களை அலைகளாக்குவோம்; அலைகளை ஆயுதமாக்குவோம்!
கொதிநிலை எட்டப்படுவதற்கான தயாரிப்புகளை கம்யூனிஸ்ட் அமைப்புகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். சின்னச் சின்ன திட்டமிட்ட போராட்டங்கள்; சின்னச் சின்ன வெற்றிகள்; தன்னெழுச்சி பாய்ச்சலில் தலையீடு; பொருத்தமான முழக்கங்களை முன்வைத்தல்; உணர்வுகளைக் கடைந்து கொண்டே இருத்தல்; ஜனநாயக உணர்வூட்டுதல்; வர்க்க உணர்வு மட்டமாகவும், சோஷலிச உணர்வு மட்டமாகவும் அதை உயர்த்துதல் போன்றவற்றை செய்துகொண்டே இருக்க வேண்டும். சிறு சலனங்கள் பெரும் அலைகளாக மாறும். முதலாளித்துவத்தின் ஒவ்வொரு நெருக்கடியும் புரட்சிக்கான வாய்ப்புகளை முன்வைத்துக் கொண்டேதான் இருக்கிறது. மின்னல் வேகத்தில் கிரகித்து எதிர்வினை ஆற்றுகிற திறன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத்துக்குத் தேவை. ஜனநாயக மத்தியத்துவம் உள்ளிட்ட மார்க்சிய – லெனினிய ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிற கட்சி அமைப்பு இதற்கு அவசியம்.
இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட, இடதுசாரிகள் செய்யும் போராட்டங்களுக்கும், அரசியல் பிரச்சாரத்துக்கும் பலனே இல்லை என்று கூறிவிட முடியாது. சில சமயம் பலன்களை அளவீடு செய்ய முடியாது. ஊடகங்கள் இடதுசாரிகளை உதாசீனப்படுத்தினாலும், போராட்டங்களுக்கும், அரசியல், சித்தாந்த பிரச்சாரத்துக்கும் தாக்கம் நிச்சயம் உண்டு. அது, மக்களைப் போராட்டத்தில் ஈடுபட உந்தித் தள்ளும். தன்னெழுச்சி இயக்கம், ஏற்கனவே சமைக்கப்பட்டு, உண்ண தயாராக வானத்திலிருந்து விழுகிற பொருள் அல்ல. பல்வேறு தள இயங்குதலின் சாரம். இந்த நிகழ்முறையில் புதிய இயக்கங்கள் உருவாகலாம்; புதிய சிந்தனைப் போக்குகள் மலரலாம்; புதிய செயல்பாட்டாளர்களும், போராட்ட வடிவங்களும் முன்னுக்கு வரலாம். கடந்த காலத்துடன் தொடர்பற்றதாக அல்ல; ஏற்கனவே கடையப்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வு மட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இவை துளிர்க்கும்.
எகிப்தில் ஜனநாயகத்துக்காக நடந்த எழுச்சி, எங்கிருந்தோ துவங்கவில்லை. அதற்கு முன் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பல்வேறு இயக்கங்கள், வேலை நிறுத்தங்கள், அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவற்றின் தாக்கத்தில் உருவானதுதான். வால் ஸ்ட்ரீட் இயக்கம், 2008-லிருந்து சமூக நல திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுக் கொண்டே வருவதை எதிர்த்து இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் நடத்திக் கொண்டே இருந்த போராட்டங்களில் முகிழ்த்ததுதான். ஒவ்வொன்றுக்கும் இப்படி நம்மால் போராட்டப் பின்னணியைக் கூற முடியும். இவற்றில் பெரும் திரளாகப் பங்கேற்றவர்களும் சுரண்டப்படும் வர்க்கங்களையும், ஒடுக்கப்படும் சமூகப் பிரிவுகளையும் சேர்ந்தவர்களே.
ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, மத்திய – மாநில அரசுகள் மீதான விமர்சனம், விவசாய பிரச்சினை, வறட்சி போன்றவை முன்வைக்கப்பட்டன என்றால், கடந்த காலத்தில் இடதுசாரிகள் நடத்திய பிரச்சாரங்கள், போராட்டங்கள், முழக்கங்களின் பாதிப்பே இவற்றின் மீது இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவ்வாறு கூறுவது, எல்லாம் நன்றாக நடக்கிறது என்று மனநிறைவு அடைந்து விடுவதற்காக அல்ல; இன்னும் திறனுடன் செய்ய வேண்டும் என்பதற்காக. வர்க்கமாக ஒன்று சேர வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம்; ஜனநாயகம் மறுக்கப்படுதலுக்கும் சரி, வாழ்வுரிமை மீதான தாக்குதலுக்கும் சரி, அதற்கான காரணங்கள் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு உள்ளே இருக்கின்றன என்பது புரியாமல் இருக்கலாம். இப்படியான பிரச்சினைகளுக்காக போராடும் இதர பகுதி உழைப்பாளிகளுடன் இணைந்த போராட்டத்தை நடத்துவது வீச்சை அதிகரிக்கும் என்ற புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அவர்கள் வீதிக்கு வர சூழல் நிர்ப்பந்திக்கிறது. அதனைப் பயன்படுத்தி, வர்க்க அரசியல் புரிதலை உருவாக்கிட வேண்டும். போராட்டங்களும், வரலாறும் வெறும் கூட்டல் கழித்தல் அல்ல. மக்களின் மனநிலையை முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரானதாக மாற்ற வேண்டும் எனில், கம்யூனிஸ்ட் கட்சி தேவை; அதன் அரசியல் தேவை; திட்டமிடல் தேவை; அதனை நடைமுறைப்படுத்துகிற மார்க்சிய லெனினிய ஸ்தாபன அமைப்பு தேவை.
எனவே, கம்யூனிஸ்ட் அமைப்புகள் மற்றும் அரசியலின் தேவையை, தலையீட்டைத்தான் தன்னெழுச்சி இயக்கங்கள் அவசியப்படுத்துகின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு பெரும் திரள் எழுச்சியாக நடக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இத்தலையீடும், இணைந்த பணிகளும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இதை கம்யூனிஸ்டுகள் செய்ய தவறினால், ஒதுங்கி நின்றால் அல்லது எழுச்சியைப் பயன்படுத்தும் திறனும், வலுவும் போதுமான அளவு இல்லாதிருந்தால், இந்த அதிருப்தியும், எதிர்ப்பு உணர்வும் வலதுசாரி பிற்போக்கு சக்திகளால் அறுவடை செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம்; அவை சாதிய, மதவாத மோதலாகவும் மடைமாற்றம் செய்யப்படும் அபாயமும் உள்ளது. உலக அளவில் பிற்போக்கு வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியும் சரி, இந்திய அளவில் சாதிய அமைப்புகளும், சங் பரிவாரங்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருப்பதும் சரி, இதற்கான உதாரணங்களாகும்.
எனவே, ஜல்லிக்கட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் உருவான எழுச்சிகளிலிருந்து படிப்பினைகள் கற்று, சிறிய அளவிலும், பெரிய அளவிலும் நடக்கும் இத்தகைய எழுச்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன பணிகள் இணைக்கப்பட வேண்டும். மக்களே புரட்சியை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்களைப் புரட்சிக்கான அரசியல் திசைவழியில் கொண்டு செல்லும் தயாரிப்பு பணியைக் கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும்.
Leave a Reply