- வீ. பா. கணேசன்
நம்மில் பலரும் மார்க்சியத்தை நோக்கி அடிவைக்கும்போது ராகுல்ஜியின் ‘பொதுவுடமைதான் என்ன?’, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, ‘சிந்து முதல் கங்கை வரை’ போன்ற பல நூல்களை படித்திருப்போம். நாம் அதுவரை படித்து வந்த மாமன்னர்களின் பட்டியல் வரிசைக்கு முற்றிலும் மாறாக, இந்தியாவின் எழுதப்படாத வரலாறு பற்றிய சித்திரங்களை நம் மனக்கண் முன் கொண்டு வந்த அந்த மாமேதையின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது.
அன்று ஐக்கிய மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டத்தில் இருந்த பண்டகா என்ற கிராமத்தில், ஏழு தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்த ஒரு பிராமணக் குடும்பத்தில், 1893 ஏப்ரல் 9 அன்று கேதார் நாத் பாண்டே என்ற இயற்பெயருடன் பிறந்த அவர் ஊர் சுற்றிகளின் அரசன் என்று போற்றப்படும் அளவிற்கு பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கிருந்த கலைச்செல்வங்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்தவர். அவர் சேகரித்து வந்த புத்த மத தத்துவ நூல்கள் இன்றும் பாட்னா அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே ஜப்பான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த புத்தமத ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன. 1963 ஏப்ரல் 14 அன்று தனது 70வது வயதில் மறைந்த ராகுல்ஜி எனும் ராகுல சாங்கிருத்தியாயன் இன்றளவும் அவரது எண்ணற்ற எழுத்துக்களுக்காக இன்றுவரை போற்றப்படுகிறார்.
ராகுல்ஜியின் வாழ்க்கையை நான்கு பருவங்களாகப் பிரிக்கலாம். முதல் பருவம் அவரது துறவுக்காலத்தைக் குறிப்பிடுவதாக இருக்கும். இப்பருவத்தில் 17-18வயதிலேயே துறவு பூண்டு இமயமலைப் பகுதிகளில் சுற்றி வந்து இந்தியாவின் பல வைணவ மடங்களின் மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு ராமுதர் தாஸ், தாமோதராச்சாரி என்ற பெயர்களில் வாழ்ந்த காலத்தை, இக்காலத்தில் அவர் பெற்ற மிக ஆழமான சமஸ்கிருத அறிவாற்றலை எடுத்துக் கூறுவதாக இருக்கும்.
அதற்கடுத்த பருவம் துறவுக் கோலத்திலிருந்து வெளியேறி அவர் ஆர்ய சமாஜியாக இருந்த காலத்தைக் குறிக்கிறது. இப்பருவத்தில் மத வேறுபாடுகளைக் கடந்து, இந்திய விடுதலைக்கு கல்வியே அடித்தளம் என்ற உணர்வுடன் மக்களிடையே ஆங்கிலத்திலும், இந்தியிலும் நாவன்மை மிக்க பிரச்சாரகராய் செயல்பட்ட காலத்தை நமக்கு எடுத்துக் காட்டுவதாய் இருக்கும்.
அதற்கடுத்த பருவம் புத்தமத தத்துவங்களை அறியத்துவங்கி, அதன் ஆணிவேர் எனச் சொல்லத்தக்க திரிபீடகம் (முப்பெரும் தத்துவம்) என்ற தத்துவத்தை முழுமையாக உள்வாங்கி, அதையும் தாண்டி புத்தமத அறிவுச் செல்வங்களைத் தேடி கடும் முயற்சியுடன் திபெத் பகுதிக்குச் சென்று பெறர்கரிய சமஸ்கிருத, பாலி, பிராகிருத மொழி நூல்களை படியெடுத்துக் கொண்டு வந்து சேர்த்த பகுதியாகும். இந்தப் பருவத்தில் நேபாளத்தில் தேரவாடா என்ற புத்த மதப்பிரிவு தழைத்தோங்கவும், அங்கிருந்த மன்னராட்சிக்கு எதிராக இளைஞர்களை தட்டியெழுப்பிய எழுத்துக்களை வடித்ததும் அடங்கும்.
இதற்கடுத்த பருவம் சோஷலிச கருத்துக்களை ஆழ்ந்து கற்று, சோவியத் மண்ணில் பேராசிரியராக, ஆராய்ச்சியாளராக பணியாற்றி, அந்த நாட்டில் சோஷலிசம் விதைக்கப்படுவதை நேரில் கண்டு அதை தம் தாய்நாட்டிலும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற வேகத்துடன் பீகாரில் விவசாயிகளின் போராட்டங்களை உருவாக்கி நடத்திய கம்யூனிஸ்ட் செயல்வீரராக இருந்த, பொதுவுடமைத் தத்துவங்களை மிக எளிய முறையில் மக்களுக்குக் கொண்டு செல்ல எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்த பருவமும் ஆகும்.
தமிழ் உள்ளிட்டு மொத்தம் 33 மொழிகளில் செயல்படும் திறமை பெற்றவராக இருந்த ராகுல்ஜி தன் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அறிவுச் செல்வத்தைத் தேடி அலைபவராகவே இருந்தார். வேதாந்தக் கல்வியில் மூழ்கியிருந்தபோதும் இந்திய நாட்டின் விடுதலைக்கான இயக்கங்களில் தீவிரமாகச் செயல்பட்டு சிறைத் தண்டனை பெறும் செயல் வீரராகவும் அவர் திகழ்ந்தார். அவரது நீண்ட சிறைவாழ்க்கையும் எழுத்துப் பணிகளை மேற்கொள்ள உதவியது. முறையான பள்ளிக் கல்வியோ, பல்கலைக்கழகப் பட்டமோ பெறாதவராக இருந்தபோதிலும் அவரது ஆழ்ந்த கல்வித் திறனின் காரணமாக இலங்கையில் வித்யாலங்கார பரிவேனா என்ற பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியராக, சோவியத் யூனியனில் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. மிக நீண்ட காலமாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராகுல்ஜி 1961டிசம்பரில் கல்கத்தாவில் தன் சுயநினைவை இழந்தார். இந்தியாவிலும் சோவியத் யூனியனிலும் அவரது நிலையை மேம்படுத்த சிகிச்சைகள் செய்யப்பட்டபோதும், எவ்வித முன்னேற்றமும் இல்லை. இறுதியில் 1963 ஏப்ரல் 14 அன்று டார்ஜிலிங்கில் இருந்த அவரது இல்லத்தில் உயிர்நீத்தார்.
இந்தி மொழியில் அவர் எழுதிய ஆறு தொகுதிகளைக் கொண்ட எனது வாழ்க்கைப் பயணம், சிம்ம சேனாபதி, புத்த சரிதம், புத்த தர்ஷன், புத்த சம்ஸ்க்ருதி, மகா மனிதர் புத்தர், புத்தரின் பன்முகப் பார்வை, ஊர்சுற்றிப் புராணம், ரிக் வேத ரகசியம், இஸ்லாமிய தர்மம் என நீண்டு கொண்டே போகும் நூல்களின் பட்டியல்.
மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த பிறகு, பொதுவுடமைத் தத்துவத்தைப் பரப்புவதற்காக அவர் எழுதிய எண்ணற்ற நூல்களில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் பற்றிய அறிமுக நூல்கள், மார்க்சிய தத்துவம் குறித்த அறிமுக நூல்கள், மார்க்சிய பார்வையில் உலக வரலாற்றை, இந்திய வரலாற்றை அறிமுகம் செய்யும் நூல்கள், இதுவரை அவர் கற்றறிந்திருந்த வேதாந்த, புத்த தத்துவங்கள் குறித்த மீள்பார்வை குறித்த நூல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. அவரது வாழ்நாளில் 50,000 பக்கங்களுக்கு நூல்கள் வெளியாகி இருந்தன எனில், அவரது குறிப்புகளின் அடிப்படையில் மேலும் 25,000 பக்கங்களுக்கு நூல்கள் (அவரது மனைவியும் பேராசிரியருமான கமலாவின் முயற்சியில்) பின்னர் வெளியாயின என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் வால்காவிலிருந்து கங்கை வரை நூல் வேறெந்த நூல்களையும் விட அதிகமான மொழிகளில் வெளியாகி ராகுல்ஜியின் பெயரை இன்றும் நிலைநிறுத்தி வருகிறது.
இந்திய தத்துவ உலகில் மூழ்கி, அதன் விலைமதிக்க முடியாத செல்வங்களை மீட்டெடுத்து வந்து அறிமுகப் படுத்தி, பின்னர் மார்க்சிய தத்துவத்தில் ஈடுபட்டு, அதை இந்திய மண்ணுக்கு, இந்திய தத்துவப் பின்னணியில் அறிமுகப்படுத்தும் பணிகளில் தன் வாழ்நாளின் இறுதிவரை பாடுபட்ட தேசியவாதியாக அவர் திகழ்ந்தார் எனில் மிகையாகாது. இந்தியாவின் பண்டைய இலக்கியங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில், குறிப்பாக புத்த மத தத்துவ நூல்களை மீட்டெடுத்து வந்து அவற்றுக்குப் புத்துயிர் ஊட்டியதில் தனிச்சிறப்பு பெற்றவராகவும் அவர் திகழ்கிறார்.
ஊர் சுற்றுவதில் தனிச்சிறப்பு பெற்றிருந்த ராகுல்ஜி, தான் கண்ட செல்வங்கள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு வந்து இந்திய அறிவுலகில் பாத்தி கட்டி வளர்த்த அறிஞரும் ஆவார். இந்தியாவின் பண்டைய வரலாற்றில் ஆழக் கால்பதித்து அவர் எழுதிய எழுத்துக்கள் நமக்கு புதிய வெளிச்சத்தை தருபவையாய் விளங்குகின்றன. அவர் பிறந்து மறைந்த இந்த மாதத்தில் அவரை நினைவு கூர்ந்து அவற்றை வாசிப்போம்! அனைவருக்கும் எடுத்துச் செல்வோம்!
Leave a Reply