- வெங்கடேஷ் ஆத்ரேயா
இந்திய அரசியல் அமைப்பில் அடிப்படையிலேயே அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ளன. விடுதலைக்குப்பின் கடந்த எழுபது ஆண்டுகளில் இந்திய பெருமுதலாளிகளின் நலன் கருதி இந்த அதிகாரக்குவிப்பை அதிகப்படுத்த ஆளும் வர்க்கக் கட்சிகள் தொடர்ந்து முனைகின்றன. கடந்த காலங்களில் மாநில உரிமை பேசி வந்த பல்வேறு மாநிலக்கட்சிகள் தாராளமய கொள்கைகளை முழுமையாக ஏற்று அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கிவரும் சூழலில் மத்திய மாநில அதிகாரப்பகிர்வு தொடர்பான ஜனநாயக கோரிக்கைகளை அவை வலுவாக முன்வைப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் இதர இடதுசாரி கட்சிகளும் மட்டுமே மாநில அதிகாரங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வந்துள்ள திமுக, அஇஅதிமுக இரண்டுமே கடந்த பல ஆண்டுகளாக மாநில உரிமைகள் பற்றி பெரும்பாலும் மௌனமாகவே உள்ளன. எப்போதாவது அவை மாநில உரிமைகள் பற்றிப் பேசினாலும் அந்த உறவுகளை ஜனநாயகப்படுத்த அவசியமான போராட்டங்களை முன்பின் முரணற்று நடத்திடவில்லை. இப்பின்புலத்தில், தமிழக அரசின் வரும் நிதி ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை பரிசீலிப்போம்.
கடும் கிராமப்புற நெருக்கடி
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை ஆகிய இரண்டுமே பொய்த்துள்ள நிலையில் தமிழகம் கடும் வேளாண், ஊரகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அல்லது பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் இறந்துள்ளனர். நெருக்கடிக்கு காரணம் இயற்கை அவர்களைக் கைவிட்டது மட்டுமல்ல; அரசுகளின் தொடரும் தாராளமய கொள்கைகளும் கிராமப்புற உழைக்கும் மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு முக்கிய காரணம். இதுமட்டுமல்ல; மோடி அரசின் செல்லாக்காசு நடவடிக்கை விவசாயத்தையும் கிராம, நகர்ப்புற முறைசாரா தொழில்களையும் பெருமளவிற்கு பாதித்துள்ளது. கிராம, நகர உற்பத்தி மட்டுமே பாதிக்கவில்லை. வேலைவாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளன. இதுவும் பட்ஜெட்டில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே வேளாண் துறையின் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நெல் உற்பத்தி தேக்க நிலையில் உள்ளது. 2001-02 இல் அரிசி உற்பத்தி 65.8 லட்சம் டன் என இருந்தது. 2013-14 வரையிலான அடுத்த 12 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், மூன்று ஆண்டுகளில் மட்டுமே இதை விட அதிகமான அரிசி உற்பத்தி நிகழ்ந்தது. 2009-10 முதல் 2013-14 வரையிலான ஐந்து ஆண்டுகளின் சராசரி ஆண்டு அரிசி உற்பத்தி 60 லட்சம் டன் என்ற அளவில்தான் இருந்தது. மொத்த தானிய உற்பத்தியின் வளர்ச்சியும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் மிக மந்தமாகவே இருந்தது. பொதுவாக வேளாண் உற்பத்தியும் விவசாயிகளின் வாழ்வும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. வேளாண் மற்றும் இதர கிராமப்புற கூலி உழைப்பாளிகளின் நிலைமையும் இதேதான். நகர்ப்புறங்களிலும் பொருளாதார மந்த நிலையின் வெளிப்பாடுகளைக் காண முடியும். கடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் முதலீடுகள் குறைந்துள்ளன. தொழில் துறை வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இல்லை. வேலை விரிவாக்கம் என்பது அமைப்புசார் துறைகளில் கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். முன்பு ரியல் எஸ்டேட்டும், கட்டுமானமும் தகவல் தொழில்நுட்பமும் நிதிசார் நடவடிக்கைகளும் ஓரளவு வருமானத்திற்கும் வேலை வாய்ப்புக்கும் நகரங்களில் கைகொடுத்தன. தற்சமயம் அங்குமே மந்த நிலைதான் உள்ளது. இத்தகைய பொதுவான மந்த நிலையை செல்லாக்காசு நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளது. பருவமழை பொய்த்ததும் டெல்டா பகுதி உள்ளிட்டு தமிழகம் முழுவதும் பரவியுள்ள வறட்சியும் மத்திய மாநில அரசின் கொள்கைகளும் சேர்ந்து தமிழகத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளன.
இப்பிரச்சினைகள் தொடர்பாக தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏதாவது நிவாரணம் அளிக்கிறதா?
பட்ஜெட்: மாநில அரசின் அணுகுமுறை
பட்ஜெட் சமர்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு மாநில அரசு பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தி மக்கள் மீதான தாக்குதலை நடத்தியது. இப்பின்னணியிலும், ஜி எஸ் டி (பொருள் மற்றும் சேவை வரி) நடைமுறைக்கு வரவுள்ளதை காரணம் காட்டியும் புதிய வரிகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. அதே சமயம், ஒட்டுமொத்த அரசு செலவும் மிகக்குறைவாகவே அதிகரித்துள்ளது.
மாநில அரசின் வரி வருமானத்தை அதிகரிப்பதில், நடப்பில் உள்ள மத்திய மாநில நிதி அதிகாரப்பகிர்வு ஏற்பாடு காரணமாக சில சிரமங்கள் ஏற்படுகின்றன. எனினும் வரி வசூல் நிர்வாகத்தில் நிலவும் ஊழல்களை ஒழித்தால், வரிவருமானத்தை மாநில அரசால் கணிசமாக உயர்த்த முடியும். வரி அல்லா வருமானத்தை பொறுத்த வரையில், மிக முக்கியமாக, தாது மணல், ஆற்று மணல், கிரானைட் உள்ளிட்ட தமிழகத்தின் இயற்கை வளங்களை ஏலம் விடுவதில் உள்ள மகாஊழல்கள் மாநில அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பை ஆண்டு தோறும் ஏற்படுத்தி வருவதை சகாயம் அறிக்கை உள்ளிட்ட பல அரசு ஆவணங்கள் புலப்படுத்துகின்றன. இவற்றை சரிசெய்யவும், மாநிலத்தின் இயற்கை வளங்களை திறம்பட நிர்வகித்து, வரி அல்லா வருமானங்களை உயர்த்தவும் எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் இல்லை.
மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான “உதய்” திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதன் விளைவாக அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது கணிசமான வட்டிச்செலவுகளை தமிழக அரசின் மீது திணிக்கும். அதேபோல், மத்திய அரசின் கெடுபிடியின் விளைவாக தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினை ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில் அனைவருக்குமான பொது விநியோக அமைப்பை தொடர்வதால் தமிழக அரசு கூடுதல் செலவுகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைமுறையில் இப்போக்கு பொதுவிநியோக அமைப்பை பலவீனப்படுத்துவதாகவே அமைகிறது. கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்த சிறப்பு பொது விநியோக திட்டம் ஒரு சில மாதங்களாகவே அமலாக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் ரேஷன் கடைகளில் கிடைப்பதில்லை. மக்கள் அரிசிக்குப் பதில் கோதுமை வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
நிதி ஆணையத்தின் கெடுபிடியை ஏற்று தமிழகம் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை (FISCAL RESPONSIBILITY AND BUDGET MANAGEMENT ACT – FRBM ACT) ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளது. தாராளமய கொள்கைகளின் முக்கிய வெளிப்பாடான – மக்களுக்கான அரசு செலவுகள் வெட்டிச்சுருக்கப்படவேண்டும் என்ற நோக்கம் கொண்ட – இத்தகைய சட்டம் அகில இந்திய அளவில் 2003 இலேயே நிறைவேற்றப்பட்டது. அதன்பின், நிதி ஆணையம் மூலமாக மாநில அரசுகளும் இத்தகைய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி மாநில பட்ஜெட்டில் நிதிசார் (FISCAL) பற்றாக்குறை – அதாவது, அரசின் மொத்த செலவுக்கும் அரசு பெறுகின்ற கடன் அல்லாத வரவுகளுக்குமான இடைவெளி – மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி. – GSDP) 3 %க்கு மிகாமல் இருக்கவேண்டும். இதன் பொருள் அரசு கடன் மூலம் பெரும் தொகை வரவு என்று கணக்கில் கொள்ளப்படாது என்பதாகும். மேலும், மொத்த செலவுக்கும் கடன் அல்லாத வரவுக்கும் இடையே உள்ள இடைவெளி சுருக்கப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மத்திய மாநில அரசுகள் அமலாக்கி வரும் பொருளாதார கொள்கைகள் இந்த இடைவெளியை குறைக்க செலவைக் குறைக்கவே பிரதானமாக முற்படுகின்றன. மறுபுறம் செல்வந்தர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் மத்திய அரசு தொடர்ந்து அளிக்கும் வரிச் சலுகைகளும் வரி விலக்குகளும் மாநிலங்களின் வரிவருமானத்தை குறைக்கின்றன. மத்திய அரசு செஸ் மூலமும் சர்சார்ஜ் மூலமும் வரி வருமானம் ஈட்டும் பொழுது, மாநிலங்களுக்கு இதில் பங்கேதும் கிடையாது. இதெல்லாம் உண்மை என்றாலும், இவற்றிற்கு மத்தியில் கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு மாற்றுக்கொள்கைகளின் அடிப்படையில் அரசின் வரவு செலவு திட்டங்களை அமைத்தும், கறாரான, ஊழலற்ற வரிவசூல் நிர்வாகத்தை உறுதிப்படுத்தியும் சமாளித்து வருவதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
ஒதுக்கீடுகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1 நடப்பு ஆண்டுக்கும் வரும் ஆண்டுக்குமான சில முக்கிய துறைகளுக்கான ஒதுக்கீடுகள் பட்ஜெட்டுகளில் அவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்த சில விவரங்களை தருகிறது.
தமிழக பட்ஜெட் நடப்பு ஆண்டு (2016-17) ஒதுக்கீடுகளில் இருந்து வரும் ஆண்டுக்கான (2017-18) ஒதுக்கீடுகள் பெரும்பாலான துறைகளில் சிறிதளவே உயர்த்தப்பட்டுள்ளன. நீர்வளம் மற்றும் பாசனத் துறை மட்டும் சற்று கூடுதல் ஒதுக்கீடு பெற்றுள்ளது. ஆற்றல் துறையில் காணப்படும் அதிகரிப்பு டான்ஜெட்கோ கடன் மீதான வட்டிக்கே செலவாகிவிகும். கல்வித்துறையில் உயர்கல்விக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு அளவிலேயே உள்ளது. சுற்று சூழல் மற்றும் வனம், மீன்வளர்ச்சி, கால்நடை, தொழில்துறை ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் வரும் ஆண்டில் நடப்பு ஆண்டை விட பண அளவில் குறைந்துள்ளன.
மாநில மொத்த உற்பத்தி மதிப்பு வரும் ஆண்டில் கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளதையும் விலைவாசி உயர்வையும் கணக்கில் கொண்டால், வரும் ஆண்டுக்கான ஒதுக்கீடுகளில் மாநில உற்பத்தி மதிப்பின் விகிதத்தில் பார்த்தால் உண்மை அளவில் முன்னேற்றம் இல்லை என்பது தெளிவாகிறது.
கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களுக்கு வேலை தரும் சிறு, குறு மற்றும் மிகச்சிறு நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15 லட்சம் என பட்ஜெட் குறிப்பிடுகிறது. ஆனால் அத்துறைக்கான ஒதுக்கீடு நடப்பு ஆண்டை விட வரும் ஆண்டில் அதிகம் என்றாலும் அளவில் அது சொற்பமான தொகை தான். மறுபுறம் , இந்நாட்டு, பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை (மத்திய அரசைப்போலவே)) மாநில அரசும் வழங்குகிறது. அச்சலுகைகளால் ஏற்பட்டுள்ள சமூக பயன் என்ன, பாதிப்பு என்ன என்பது பற்றி, இடதுசாரிக் கட்சிகள் கடந்த ஆண்டுகளில் பலமுறை கோரியும், இன்றுவரை ஒருவெள்ளை அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு சென்னையில் நடந்தபோது 2,42,000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் அமலுக்கு வந்தால் கூட, அதனால் உருவாகும் வேலை வாய்ப்பு நான்கு லட்சத்தி ஐம்பதாயிரம் என்ற அளவில்தான் இருக்கும் என்றும் தெரிகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடுக்கு ஓரிரு பணியிடங்களையே உருவாக்கும் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் தருவதும், சலுகைகளை வாரி இறைப்பதும் வேலை வாய்ப்பின் முக்கியத்துவத்தை அரசு முன்னிறுத்தவில்லை எண்பதைத் தெளிவாக்குகிறது.
கைவிடப்பட்ட திட்டமிடுதல்
கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் இடதுசாரிகள் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கணிசமான நிதி மாநில அரசால் பகிர்ந்தளிக்கப்பட்டது நாடறிந்த உண்மை. ஆனால் தமிழகத்தில் இரு கழக ஆட்சிகளுமே உள்ளாட்சி அமைப்புகளுடன் வளங்கள், நிதி ஆதாரங்கள், அதிகாரங்கள் ஆகியவற்றை பகிர்வதில் விருப்பம் காட்டவில்லை. இப்பொழுதும் அந்நிலை தொடர்கிறது.
இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் ஒரு தவறான அணுகுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிடுதலைக் கைவிடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இப்பொழுது உள்ள மாநில திட்டக்குழுவை கலைப்பதாகவும், அதன் இடத்தில் “மாநில வளர்ச்சி கொள்கைக்கான குழு“ ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. இந்தக்குழு மாநில அரசுக்கு அறிவுரைகள் வழங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பொருளாதாரம் தொடர்பான நீண்ட காலப்பார்வையும் ஒட்டுமொத்த திட்டமிடுதலும் தேச விடுதலை போராட்ட காலத்திலிருந்தே அவசியம் என கருதப்பட்டு வந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாக தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்டு வந்தாலும், அரசு தொடர்ந்து பொருளாதாரத்தில் ஆற்றும் பங்கினை கணக்கில் கொண்டும் பன்னாட்டு, இந்நாட்டு பொருளாதார புற நிலைமைகள் தொடர்ந்து மாறிவரும் சூழலில் அவற்றை எதிர்கொள்ள திட்டமிடுதல் அவசியம் என்பதை கணக்கில் கொண்டும்தான் இக்காலங்களிலும் ஐந்தாண்டு திட்டங்கள் – எட்டாம் திட்டம் (1992-97), ஒன்பதாவது திட்டம் (1997-2002), பத்தாவது திட்டம் (2002-07), பதினொன்றாவது திட்டம் (2007-12) மற்றும் பன்னிரண்டாவது திட்டம் (2012-17) ஆகியவை – தீட்டப்பட்டு அமலாக்கப்பட்டன. ஆனால் மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த உடனேயே தனது தாராளமய பொருளாதார அணுகுமுறையை பிரகடனப்படுத்தும் வண்ணம் திட்டக்குழு கலைக்கப்படும் என்று அறிவித்தது.
இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கே விடாமல் அரசே உடனடியாக அமல் படுத்தியது. மோடி அரசு அதற்கே உரிய “ஜனநாயக” பாணியில் மத்திய திட்டக்குழுவை அழித்தொழித்தது. மோடி அரசின் நிலைபாட்டை அப்படியே ஏற்று தமிழ் மாநில அரசு பின்பற்றுவது அதன் தாராளமய அணுகுமுறையை மீண்டும் தெளிவாக்குகிறது. இதற்கு நேர்மாறாக, கேரள மாநிலத்தில் மாநில திட்டக்குழு சிறப்பாக இயங்கி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுக்கான திட்டத்தை தயார் செய்யும் பணிகளை அது மேற்கொண்டுள்ளது. வரும் ஆண்டுக்கான ஓராண்டு திட்டத்தையும் சமர்ப்பித்துள்ளது.
7.2 கோடி மக்கள் வசிக்கும் தமிழ் நாடு மக்கள் தொகை அளவில் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏறத்தாழ சமம் ஆகும்.அத்தகைய ஒரு மாநிலத்தில் அதன் இயற்கை மற்றும் இதர வளங்கள், மனிதவளங்கள், தொழில்நுட்ப வாய்ப்புகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு நீண்ட கால திட்டங்களை உருவாக்குவது பலனளிக்கும் என்பதும் சாத்தியம் என்பதும் கேரளா நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். தாராளமய கொள்கைகள் நாட்டில் பின்பற்றப்பட்டு வந்தாலும், மத்தியிலும் மாநிலத்திலும் அரசுகள் பல பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து பொறுப்பேற்று செயல்படுத்திவரும் நிலையில், திட்டமிடுதலின் அவசியம் தொடர்கிறது. ஆனால் தமிழக அதிமுக அரசு இந்த வாய்ப்பை தவற விட்டுள்ளது. தனியார் பெரும் நிறுவனங்களிடம் நாட்டை ஒப்படைப்பதே அதன் வளர்ச்சி தொடர்பான அணுகுமுறையாக உள்ளது.
மக்களைப் புறக்கணிக்கும் மாமூல் பட்ஜெட்
தமிழகம் கடும் வறட்சியையும் வேளாண் மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடியையும் குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்ளும் சூழலில் இப்பிரச்சினைகளை சந்திக்க பட்ஜெட்டில் பொருத்தமான அணுகுமுறையும் இல்லை. இயற்கை வளங்கள் மூலமும் இதர வகைகளிலும் ஊழலின்றி செயல்பட்டு வளங்களை திரட்டும் முயற்சியும் இல்லை. வரி நிர்வாகத்தை சீர்செய்து வரி வருமானத்தை உயர்த்தும் அணுகுமுறையும் இல்லை. மத்திய அரசுடன் போராடி கூடுதல் வளங்களைப்பெற முயற்சியும் இல்லை. அரசின் மக்கள் சார் செலவுகளை மட்டுப்படுத்தி நிதிசார் பற்றாக்குறையை குறைக்கும் வழிமுறைதான் உள்ளது.
அட்டவணை 1: தமிழக பட்ஜெட் – சில ஒதுக்கீடுகள் (ரூபாய் கோடிகளில்)
துறை
2016-17
தி. ம.
2017-18
ப. ம.
மீன்வளர்ப்பு
744
768
கால்நடை
1,189
1,161
சூழல் மற்றும் வனம்
653
567
நீர்வளம் மற்றும் பாசனம்
3,407
4,791
ஆற்றல்
13,856
16,998
தொழில் துறை
2,104
2,088
சிறு குறு மிகச்சிறு நிறுவனங்கள்
348
532
சமூக நலம்
4,512
4,781
பள்ளிக்கல்வி
24,130
26,932
உயர் கல்வி
3,679
3,680
சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
9,073
10,158
குறிப்பு: தி. ம. –திருத்தப்பட்ட மதிப்பீடுகள், ப. ம. – பட்ஜெட் மதிப்பீடுகள்
மாநில அரசின் கடன் பற்றி
இறுதியாக தமிழக அரசின் நிதி நிலை குறித்த விவாதங்களில் பலர் மீண்டும் மீண்டும் அரசின் கடன் தொகை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, அரசின் செலவுகள் குறைக்கப்படவேண்டும் என்றும், குறிப்பாக மக்கள் நல திட்டங்களை சுருக்கவேண்டும் என்றும் வாதிடுகின்றனர். உண்மை நிலை என்ன?
மாநில அரசுகளுக்கு வரி வருமானத்தை உயர்த்துவது சாத்தியம் என்றாலும் மிக எளிதல்ல. பொருளாதார வளர்ச்சியையொட்டி வேகமாக அதிகரிக்கும் வரி இனங்கள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. மொத்த வரிவருமான பகிர்வில் அனைத்து மாநிலங்களுக்கான மொத்தப் பங்கு 32% இலிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டுள்ள போதிலும் மத்திய அரசு பிறவகை வருமான பகிர்வில் மாநிலங்களுக்கு பாதகமான மாற்றங்களை செய்துள்ளதால் நிகரமாக மாநிலங்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் வருமானம் தேச உற்பத்தி மதிப்பின் விகிதமாக பார்க்கையில் குறைந்துள்ளது. ஆனால் வளர்ச்சி தொடர்பான கூடுதல் பொறுப்புகள் மாநிலங்களிடம்தான் உள்ளன. இச்சூழல் மாநில அரசுகளுக்கு கடன் சுமையை ஏற்படுத்துகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
எனினும், இச்சூழலிலும் மாநில அரசுகள் வரிவசூலில் நிர்வாக மேம்பாட்டையும் கறாரான ஊழல் மறுப்பு அணுகுமுறையையும் பின்பற்றினால் வரிவருமானத்தை உயர்த்தமுடியும் என்பதும் உண்மை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசின் மொத்தக் கடன் வேகமாக அதிகரித்து வருகிறது எண்பது உண்மை. 2002-03இல் 43,815 கோடி ரூபாயாக இருந்த இக்கடன் 2008-09 இல் 83,144 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2014-15 இல் இது ரூ 1,95,230 கோடியாகியது. 2018 மார்ச் மாத இறுதியில் இது 3,14,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட் அறிக்கை கூறுகிறது. ஆனால் இதை எப்படி பார்க்கவேண்டும்? மாநில உற்பத்தி மதிப்பின் சதவிகிதமாக கணக்கிட்டால், கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக, மாநில அரசின் மொத்தக் கடன் தொடர்ந்து 20% ஐ ஒட்டியே உள்ளது. இது அபாயகரமான அளவு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் கேள்வி என்னவென்றால், கடனைக் கூட்டாமல் மக்கள் நல திட்டங்களை பாதுகாக்கவும், விரிவாக்கவும் முடியுமா என்பதுதான். முடியும் என்பதே நமது விடை. அதற்கு மாநில இயற்கை வளங்களை அரசே லாபகரமான வகையில் பயன்படுத்தவேண்டும். இவற்றை தனியார் கம்பனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தருவதாக இருந்தால் ஊழலற்ற முறையில் அதனைச்செய்து நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். அதுமட்டுமல்ல. வரிவசூல் நிர்வாகம் மேம்படுத்தப்பட்டு ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். இந்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் அளித்துவரும் பல்வேறு சலுகைகளால் நாட்டுக்கு ஏற்படும் பலன்களும் நட்டங்களும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அவை ஒழுங்குபடுத்தப்பட்டால், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இறுதியாக, மாநிலங்களுக்கு கூடுதல் வருமான பங்கு கிடைக்கும் வகையில் மத்திய மாநில நிதி உறவுகளில் மாற்றம் காணப்படவேண்டும். இவற்றை எல்லாம் ஆளும் வர்க்கக்கட்சிகள் பரிசீலிக்க மறுக்கின்றன. தமிழக அரசுகள் – கடந்த காலத்திலும் சரி, சமகாலத்திலும் சரி – ஆளும் வர்க்க நலன்களை காக்கும் நோக்கிலேயே பிரதானமாக வரவு செலவு அறிக்கைகளை அமைத்து வருவதால், மாநில அரசின் நிதி நிலைமையில் சிக்கல்கள் தொடர்கின்றன.
பல பிரச்சினைகள் பற்றி கூடுதல் தரவுகளுடன் விவாதங்கள் தொடர வேண்டும் என்ற போதிலும், மொத்தத்தில்தமிழக பட்ஜெட் மக்களைப் புறக்கணிக்கும் பட்ஜெட் .
Leave a Reply