டாக்டர் ஹேமலதா, தலைவர், இந்திய தொழிற்சங்க மையம்
1970களில் உருவான பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவ அமைப்பு மேற்கொண்ட எதிர்வினை நவீன தாராளமயமாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் 1980–களில் நவீன தாராளமயத்தை அமல்படுத்தும் வண்ணம் பொருளாதார மறுகட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த துவங்கின. இந்தத் திட்டங்கள், பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வங்கி போன்ற அமைப்புகளின் உதவியுடன் உலகம் முழுவதும் திணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளில் நுழையும்பொழுது உலகில் பெரும்பாலான நாடுகள் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தங்கள் திட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் துவங்கின. சோவியத் யூனியன் சிதறியதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவும், ஏகாதிபத்தியத்திற்குச் சாதகமான வகையில் வர்க்க பலாபலத்தில் மாற்றங்களை உருவாக்கின. சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசாங்கங்களும் நவீன தாராளமயக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படத் தொடங்கின. தற்போது உலகில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு மிகுந்த தத்துவமாக நவீன தாராளமயம் உருவெடுத்துள்ளது.
நவீன தாராளமயக் கொள்கையின் மிக முக்கியமான நோக்கம், முதலாளிகளின் லாபத்தைப் பாதுகாப்பதுதான். மறுகட்டமைப்பு என்பது பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறைகளில் செயல்படுத்தப்படலாம். ஆனால் பொதுவாக நவீன தாராளமய கொள்கை என்றால் தனியார்மயம் தாராளமயம், உழைப்பாளர்களை பணியமர்த்துவது அல்லது பணி நீக்குவது போன்ற விசயங்களில் முதலாளிகள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்வது, தொழிலாளர்களின் கூலி மற்றும் இதர சலுகைகளை வெட்டும் நோக்குடன் சமூக நலத் திட்டங்களுக்கு அரசு செய்யும் செலவுகளைக் கணிசமாக குறைப்பதும், மற்ற நலன்களை வெட்டுவதும்தான் அதன் அடிப்படையாகும். தொழிற்சங்கம் அமைத்தல்; தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்கள் கூட்டு பேர சக்தியைப் பயன்படுத்துதல் போன்ற உரிமைகள், எளிய மக்களின் வாழ்வுநிலை, அவர்களுடைய ஜனநாயக உரிமைகள் ஆகிய அனைத்தும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகின. இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களில் உழைக்கும் வர்க்கம்தான் பொதுவாக முன்னணிப் பாத்திரம் வகிக்கிறது. எனவே உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பு சார்ந்த வலுவை, தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துவது, மேலும் முதலாளிகளின் தாக்குதலை எதிர்த்துப் போராடமுடியாமல் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவது என்பவை நவீன தாராளமயத்தின் மிக முக்கியமான குறிக்கோள்களாகும்.
நவீன தாராளமயக் கொள்கைப்படி அரசு தலையீடு இல்லாமல் இருந்தால்தான் சந்தைப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும். ஆனால் நடைமுறையில் அரசு தலையீடு இல்லாமல் இருப்பது என்பது நிகழ்வதில்லை. மாறாக, முதலாளிகளுக்குச் சாதகமாக வெளிப்படையான அரசு தலையீடு என்பதுதான் நிகழ்கிறது. இதன் விளைவாக மக்களின் செல்வங்களையும், வளங்களையும் முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுக்க வழிவகை செய்யப்படுகிறது. தற்போது இந்தச் செயல்பாடு ஆரம்ப மூலதன சேர்க்கையின் தன்மையைப் பெற்றுள்ளது.
இந்தக் கட்டுரையில் நவீன தாராளமயத்தின் தாக்கம் தொழிலாளர்கள், தொழிற்சங்க இயக்கம் மீது, குறிப்பாக வர்க்க அடிப்படையில் இயங்கும் தொழிற்சங்கங்களின் மீது, எவ்வாறு இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம். நவீன தாராளமயத்தை செயல்படுத்தும் அனைத்து நாடுகளிலும் அமைப்பு ரீதியான தொழிலாளிவர்க்க இயக்கத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் கடுமையான, விடாப்பிடியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலாளிகளுக்குச் சாதகமான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. கடுமையான போராட்டங்களின் மூலம் உழைக்கும் மக்கள் வென்றெடுத்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் மீதும் அவர்களுடைய பணிச் சூழலின் மீதும் பல்வேறு விதமாகக் கடுமையான தாக்குதல்களை நடத்த முதலாளிகளுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது.
முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் ‘ஒழுங்குபடுத்தப்படாத பணி ஏற்பாடுகள்’ (non-standard work arrangements) பெரிதும் அதிகரித்துள்ளன. அதாவது, ஊசலாடும் (precarious) அல்லது எளிதில் இழக்கப்படக்கூடிய (vulnerable) பணியிடங்கள் அதிகரித்துவருகின்றன. பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்துகொண்டே வருகிறது. இதே சமயத்தில் பகுதி நேர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், காசுவல் ஊழியர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணி செய்வோர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் போன்ற சீரற்ற பணி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீட்டிலிருந்து பணி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நிரந்தர அல்லது எப்போதும் தொடர்ந்து நடைபெறும் வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பல மோட்டார் கார் நிறுவனங்களிலும் இதர தொழிற்சாலைகளிலும் தொழில் கற்போர் பல ஆண்டுகளுக்கு மிகச் சொற்ப சம்பளத்திற்குப் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். நிரந்தரப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தில் மிகக் குறைந்த விகித அளவு சம்பளம்தான் இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பெரிய பன்னாட்டு நிறுவனங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இந்த நிலை தனியார் துறையில் மட்டுமின்றி பொதுத்துறை, அரசுத்துறைகளிலும் உள்ளது. இத்துறைகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்களின் பணிச்சூழல், ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்படாத பணியாளர்களின் பணிச்சூழலை ஒத்திருக்கிறது. கிட்டத்தட்ட 1 கோடிப் பணியாளர்கள் இந்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களில் பணி செய்கின்றனர். இவர்களுக்குப் பணியாளர்கள் என்ற அங்கீகாரம் கூடக் கிடையாது. இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள உலக வேலைவாய்ப்பு, சமூக நிலைமை – 2017 இல் உள்ள போக்கு என்ற அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 140 கோடிப்பேர் அல்லது உலகில் மொத்த உழைப்போரில் 42 சதவீதப்பேர் 2017 ல் எந்த நேரத்திலும் வேலை பறிபோகக்கூடிய நிரந்தரமற்ற பணிகளில் வேலை செய்கிறார்கள். இந்த அறிக்கையின்படி முன்னேறிவரும் (emerging) பொருளாதாரங்களில் இரண்டு பேரில் ஒருவரும் (இதர) வளரும் நாடுகளில் 5 இல் 4 பேரும் இத்தகைய நிலைமைகளில் பணியாற்றுகின்றனர். நிரந்தர வேலைகளைக் குறைப்பதும் நிரந்தரமற்ற பணிநிலைமைகள் மூலம் வேலைகளை முடித்துக்கொள்வதும் உழைப்பாளிகளுக்கு உரிய கூலியை மறுப்பதற்கும் அவர்களுக்கு மற்ற நல உதவிகளை மறுப்பதற்கும் முதலாளிகள் கையாளும் மோசமான நடவடிக்கைகளாகும். பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் முதலாளிகளுடைய இந்தக் கொள்ளையை சட்ட ரீதியிலான நடவடிக்கையாக மாற்றுவதற்காக தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முயற்சிக்கின்றன.
உழைக்கும் மக்கள் உற்பத்தி செய்யும் செல்வங்களில் உழைப்பவர்களுக்கு உரிய பங்கைக் குறைத்து முதலாளிகளின் பங்கை அதிகப்படுத்துவதற்காகவே மேற்கூறிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டில் பன்னாட்டு நிதியம் வெளியிட்டுள்ள 2017 இல் உலகப் பொருளாதார நிலைமை என்ற அறிக்கையில் பின்வரும் விசயங்கள் தெளிவாகின்றன: 1991 ஆம் ஆண்டு முதல் 2014 வரை உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் என்று கருதப்படும் 50 நாடுகளில் 29 நாடுகளில் நாட்டு வருமானத்தில் உழைப்பவர் பங்கு குறைந்திருக்கிறது. 2014 இல் உலகின் மொத்த உற்பத்தியில் இந்த 29 நாடுகளின் பங்கு மூன்றில் இரண்டு பங்கு ஆகும். பத்து பெரும் தொழில்களில் ஏழில் உழைப்பாளர்கள் பெற்ற கூலியின் பங்கு குறைந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளரும் நாடுகளில் ஒரு நாளுக்கு 3.10 டாலர்களுக்கும் குறைவாக சம்பாதிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30 லட்சம் பேர் என்ற அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கூறிய மாற்றங்கள் கூலியின் பங்கைக் குறைப்பது மட்டுமில்லாமல், உழைக்கும் மக்களின் கூட்டு பேர சக்தியையும் பலவீனப்படுத்துகிறது. உழைப்பாளர்களின் வேலை நிரந்தரமற்றது. அவர்களுடைய குறைந்த வருமானமும் நிச்சயமற்றது. மேலும் அவர்களுடைய வேலையின் தன்மையால் பல்வேறு இடங்களில் சிதறியுள்ளனர். இதனால் இம்மக்களை தொழிற்சங்கங்களில் திரட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. ஒன்றிணைந்த உழைப்பாளர்களின் வலிமையைத் தொழிற்சங்கங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அத்தகைய தொழிற்சங்கங்கள் இல்லையென்றால் உழைக்கும் மக்களுக்கு முதலாளிகளோடு பேரம் பேசும் வலிமை இல்லை. ஆனால் முதலாளிகளோடு உரிமைக்காகப் போராடுவதற்கு மாற்றாக தொழிலாளர்கள் எப்படியாவது தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் தங்களுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவர் போட்டிபோட வேண்டியுள்ளது. இந்தச் சூழல் முதலாளிகளின் கையை மேலும் வலுப்படுத்துகிறது.
உலகமயமாதலும் தாராளமயமும் உற்பத்திப் பணிகளை உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் உலகில் மிகக் குறைந்த கூலிக்குப் பணி செய்யத் தயாராயிருக்கும் உழைப்பாளர் படை எந்த நாட்டில் அதிக அளவில் இருக்கிறதோ அந்த இடத்தில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முடியும். மேலும் தொழிற்சங்க இயக்கங்களும் தொழிலாளி வர்க்கமும் பலவீனமாக உள்ள இடங்களையும் தேர்ந்தெடுப்பார்கள். அரசாங்கங்களோ போட்டி போட்டுக்கொண்டு தங்கள் நாட்டு உழைப்பாளர்களின் சேவையைக் குறைந்த கூலிக்கு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அளிக்க முன்வருகின்றன. வெளிநாடு மற்றும் உள்நாட்டு பெரு முதலாளிகளிடம் தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவதாக உத்திரவாதம் அளித்து, அதன் விளைவாக இந்தப் பெரு நிறுவனங்கள் பாட்டாளிகளின் உழைப்பைத் தங்குதடையின்றிச் சுரண்டுவதற்கு வழி செய்கிறது. சுலபமாகத் தொழில் செய்ய உகந்த இடம் என்பதற்கான குறியீடுகளை அதிகப்படுத்துவதற்காக, பல நாடுகளின் அரசாங்கங்களும் பன்னாட்டுப் பெருமுதலாளிகள் தங்கள் நாடுகளில் முதலீடு செய்வதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
மூலதனம் பறந்துபோய்விடும்; உற்பத்தி பிற நாடுகளுக்கும் இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டு, உள்ள வேலைகள் இழக்கப்படும் என்ற மிரட்டல்கள் தொழிலாளிகளையும் அவர்கள் சங்கங்களையும் தங்கள் வேலைகளைப் பாதுகாத்துக்கொள்ள கூலி மற்றும் இதர சலுகைகள் வெட்டப்படுவதை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ள பயன்படுத்தப்படுகின்றன. சங்கங்கள் இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியும் நிகழ்வுகள் பல உள்ளன. ஐரோப்பாவில், சங்கங்கள் கம்பனிகளுடன் செய்து கொள்ளும் பல ஒப்பந்தங்களில் கூலி உயர்வு கோருவதில்லை; நீண்ட கால ஒப்பந்தங்கள் ஏற்பு, மேலும் வேலைகளைப் புதிய முறையில் மாற்றியமைக்கும் ஏற்பாடுகள் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ‘பெருந்தொழில்நிறுவன போட்டி (தந்திரம்)’ என்று கூறப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடாவில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரமும் வேலைப் பாதுகாப்பும் தேவையென்றால் தொழிற்சங்கங்கள் முதலாளிகளுடன் ‘நெகிழ்வு தரும் ஒப்பந்தங்கள்’ என்ற பெயரில் ஒப்பந்தங்கள் போட்டுகொண்டு வேலை நிறுத்தம் செய்யும் உரிமைகளைக் கைவிட வேண்டும் என்று சங்கங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. ஸ்வீடனில் “சிக்கனப் பகிர்வு” என்ற பெயரிலும் ஜெர்மனியில் ‘இணைந்து நிர்வகிக்கும் சிக்கனம்’ என்ற பெயரிலும் கனடாவிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ‘தண்டிக்கும் தன்மை கொண்ட சிக்கனம்’ என்றும் அழைக்கப்படும் இத்தகைய சில நடவடிக்கைகளை உதாரணமாகக் கூறலாம். இந்தியாவிலும் தொழிற்சங்கங்கள் பல இடங்களில் கூலி உயர்வைத் தவிர்க்கவேண்டுமென்றும் நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் வேலை இழக்க நேரிடும் என்றும் நிர்ப்பந்திக்கப்படுகின்றன என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 28 மாநிலங்கள் “வேலை செய்யும் உரிமை” சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால் அந்தச் சட்டங்களுக்கு மேற்கூறிய தலைப்பு பொருந்தாது. இந்தச் சட்டங்கள் உழைப்பாளர்களின் வேலை செய்யும் உரிமையைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் அல்ல. மாறாக அவை தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணையாமல் இருக்க ‘உரிமை’, சங்கத்திற்கு சந்தா செலுத்த மறுக்கும் ‘உரிமை’ பற்றிப்பேசுகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலாளிகள் தொழிற்சங்கத்தில் சேருவது, சங்கத்திற்கு சந்தா செலுத்துவது ஆகியவற்றை தடுத்து, தொழிற்சங்கங்களை நிதிப்பற்றாக்குறையினால் சீரழியச் செய்து இறுதியில் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களே இல்லாமல் செய்வதுதான் இந்தச் சட்டங்களின் நோக்கம். கனடாவில் “வேலைக்குத் திரும்புவோம்” என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியத் துறைகள் என்று அரசு கருதும் துறைகளில் வேலை நிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் மீதும் தொழிலாளர்கள் மீதும் பெருந்தொகைகள் அபராதமாக விதிக்கப்படுகின்றன.
இங்கிலாந்தில் நவீன தாராளமயத் தொழிற்சங்கத்தை உருவாக்க (டோனி பிளேர் தலைமையில் இருந்த) உழைப்பாளர் கட்சி ‘பங்காளித்துவம்’ (partnership) என்ற கோட்பாட்டை முன்வைத்தது. இதன் பொருள் தொழிற்சங்க இயக்கம் வர்க்கப் போராட்டம் என்ற கருத்தை கண்டனம் செய்வதும், உற்பத்தியைப் பெருக்கி முதலாளிகளின் லாபத்தை அதிகரிப்பதுமாகும். நவீன தாராளமயம் சொன்னபடியெல்லாம் செய்ய முனையும் இத்தகைய தொழிற்சங்கங்களுக்கு அரசு ஏராளமான மானியங்களை வழங்கியது. பணியிடத்தில் கற்றல், பயிற்சி, ‘நவீனமயமாக்கல்’ என்ற பல்வேறு சாக்குகள் கூறியும் பன்னாட்டு அரங்கில் செயல்படவும் ஏராளமான பணம் வழங்கப்பட்டது. இத்தொழிற்சங்கங்கள் நவீன தாராளமய அரசின் கைதிகள்; அவற்றின் ஓய்வூதியர்கள் என்று ஆக்கப்பட்டனர்.
தற்போதுள்ள பாஜக அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டங்களும் 44 மைய தொழிற்சட்டங்களை இணைத்து 4 சட்டத் தொகுப்புகளாக்கும் அதன் முயற்சியும் தொழிற்சங்க இயக்கத்தையும் தொழிலாளர்களின் கூட்டு பேர சக்தியையும் பலவீனப்படுத்தும் முயற்சியேயாகும்.
பாட்டாளிவர்க்கத்தின்மீது நவீன தாராளமயம் தொடுத்துள்ள மிக அபாயகரமானதும் மிகப்பெரியதுமான தாக்குதல், அதன் தத்துவார்த்தத் தாக்குதலாகும். நவீன தாராளமயத்திற்கு ஆதரவாகப் பேசும் கருத்தாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். சந்தைப் பொருளாதாரத்தைச் சார்ந்திருந்தால் போட்டி அதிகரிக்கும். இதனால் அரசுத் துறை சேவைகள் சிறப்படையும். தாராளமயம், மேலும் சுதந்திரமாக இயங்கும் சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றால் மேலும் செல்வம் கொழிக்கும். மேல் தட்டுகளில் இருந்தும் செல்வச் செழிப்பு கீழ்த்தட்டுக்கும் சொட்டும். இதனால் சமூகத்தின் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும். நெகிழ்ந்து கொடுக்கும் உழைப்பாளர் சந்தை, வேலைவாய்ப்பும் சம்பளமும் அதிகரிக்கும். மேலும் தொழிற்சங்கங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை; தொழிலாளர்களுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துபவை. இதனால் தொழிற்சங்கங்களை ஒழிப்பது தொழிலாளர்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் போன்றவை இத்தகைய கருத்துக்களாகும்.
அதனிடம் உள்ள ஏராளமான வளங்கள், அதன் அடிவருடியான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், அதன் பிடியில் உள்ள அரசாங்கங்கள் ஆகியவை மூலம் பன்னாட்டு நிதி மூலதனத்தால் இயக்கப்படும் நவீன தாராளமயம் தனது தத்துவத்தை பரப்பி உலகம் முழுவதிலும் கோலோச்ச வைத்துள்ளது. வர்க்கச் சமரசத்தையும், திருத்தல்வாதத்தையும் ஏற்றுக்கொண்ட பல தொழிற்சங்கங்கள் மேற்கூறிய பிரச்சாரத்திற்கு இரையாகி, நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரித்தன. ஐரோப்பாவிலும் இன்னும் பல வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் அந்தக் காலகட்டத்தில் நிலவிய நெருக்கடியின் பின்னணியில் தனியார்மயமும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும் பொருளாதாரரீதியாக நன்மை பயக்கும் என்று இச்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. பல தொழிற்சங்கங்கள் இது தவிர்க்க முடியாதது என்றும் கருதின. “(நவீன தாராளமயமாக்கத்திற்கு) மாற்றேதுமில்லை” என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அனுபவமும் இதிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. துவக்கக் கட்டத்தில் “இந்தியத் தொழிற்சங்க மையம்” போன்ற, வர்க்கக் கண்ணோட்டத்துடன் இயங்கும் சில தொழிற்சங்கங்களைத் தவிர மற்ற சங்கங்கள், நவீன தாராளமய கொள்கைகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நன்மை விளைவிக்கும் என்ற பிரமையையே கொண்டிருந்தன.
நவீன தாராளமயவாதிகள் இவ்வாறு கூறியவை அனைத்தும் தவறு என்பது தற்போது தெளிவாகியுள்ளது. ‘செல்வச் செழிப்பு மேல்தட்டில் இருந்து கீழ்த்தட்டிற்கு சொட்டும்’ என்ற கருத்து முழுமையாகப் பொய்யானது என்பது உறுதிப்பட்டுள்ளது. இன்று காணப்படுவது இச்செல்வம் முன்பைவிட அதிக அளவில் குவிந்துள்ளது என்பதுதான். உற்பத்தித்திறன் பெருமளவில் அதிகரித்துள்ளது; உழைப்பாளர்கள் தங்கள் உழைப்பைச் செலுத்தி ஏராளமான செல்வத்தை உற்பத்தி செய்துள்ளனர்; ஆனால் ஒரு சிலரால் இந்தச் செல்வங்கள் அதிகமாக கைப்பற்றப்படுகின்றன. எந்தக் காலத்திலும் இல்லாதபடி ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. ஜனவரி 2017 ஆம் ஆண்டில், ஆக்ஸ்பாம்(OXFAM) ‘99%க்கான பொருளாதாரம்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகில் 8 பேர் மட்டுமே உலகின் பாதி எண்ணிக்கையினரான மிகவும் ஏழ்மையான 362 கோடி மக்களிடம் உள்ள செல்வத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். 1988 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் – உலகில் மிக ஏழையான 10 சதவீதம் மக்களின் வருமானம் தலைக்கு 65 டாலர் என்ற அளவிற்கு உயர்ந்தது; ஆனால் உலகிலேயே பெரும் பணக்காரர்களான 1 சதவீதம் பேருடைய வருமானம் தலைக்கு 1180 டாலர் என்ற அளவில், அதாவது 182 மடங்கு, உயர்ந்தது.
இந்தியாவிலோ, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி இன்னும் அதிகம். அகில உலக புள்ளிவிபரங்களின்படி, உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களிடம் – மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதம் பேரிடம் – உலகச் செல்வத்தில் 50 சதவீதம் உள்ளது. இந்தியாவில் மிகப்பெரும் செல்வந்தர்கள் –மேல்மட்டத்திலுள்ள ஒரு சதவீதம்பேர் – நாட்டின் செல்வத்தில் 58 சதவீதத்தை வைத்துள்ளனர். ஒரு பில்லியன் (=100கோடி) அமெரிக்க டாலருக்குமேல் (கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய்க்கு மேல்) சொத்துள்ளவர்கள் இந்தியாவில் 57 பேர். அவர்களிடம் உள்ள செல்வமும் அடிமட்டத்தில் இருக்கும் 70 சதவீதம்பேரிடம் இருக்கும் உள்ள மொத்தச் செல்வமும் சமம்! ( 57 பேரிடம் 214 பில்லியன் டாலர் – 14,98,000 கோடி ரூபாய் – செல்வம் உள்ளது. )
நவீன தாராளமயத்தின் அடிப்படையில் நடக்கும் பொருளாதார வளர்ச்சி, வேலைகளை உருவாக்காத அல்லது வேலைவாய்ப்பில் இழப்பை ஏற்படுத்தும் வளர்ச்சி என்று கூறப்படுகிறது. வேலையின்மை என்பது கவலையளிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளது. முன்னர் குறிப்பிடப்பட்ட, ‘உலக தொழிலாளர் அமைப்பு’ அளித்த அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது: “வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், நீண்டகால வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் தோன்றுவதற்கு முன்பு இருந்ததோடு ஒப்பிடுகையில், இப்போது அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில், 2016 ஆம் ஆண்டின் 2 வது காலாண்டுப் பகுதியில் 12 மாதங்களாக அதற்கு மேலாக வேலைதேடுவோரின் பங்கு 47.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இவ்வாறு வேலை தேடுவோர் பங்கு 44.5 சதவீதமாக இருந்தது. 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த பிரிவைச் சேர்ந்த நபர்களில் மூன்றில் இரண்டு பேர், 2 ஆண்டுகளுக்கும் மேல் வேலையின்றி இருந்தார்கள்.”
அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் ஏற்படும் மாபெரும் முன்னேற்றங்கள், மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அவை மக்களை வேலையில் இருந்து நீக்க பயன்படுகின்றன. லாபத்திற்காக பேராசைப்படும் பெரும் கம்பெனிகள் உழைப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்கின்றன. மருத்துவம், கல்வி, விருந்தோம்பல், எடிட்டிங் – போன்ற துறைகளிலும், மோட்டார் கார் உற்பத்தி போன்ற தொழிற்சாலைகளிலும் பயன்படவல்ல செயற்கை அறிவு, ரொபாட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் இன்று உருவாக்கப்படுகின்றன. இத்தகைய தொழில்நுட்பங்கள் மிக அதிக எண்ணிக்கையிலான அளவில் தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்து, வேலையின்மையை மேலும் கடுமையாக்கப் போகின்றன.
தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறித்ததால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது என்பதற்கு எத்தகைய அத்தாட்சியும் இல்லை. உலகத் தொழிலாளர் அமைப்பின் முக்கிய அறிக்கையான ”உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக நிலை பற்றிய 2015ம் ஆண்டின் அறிக்கை” உலகின் மிக முன்னேறிய நாடுகள் மட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆப்ரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 63 நாடுகளில் இருந்து கிடைத்த 20 ஆண்டுகளுக்கான விபரங்களை ஆராய்ந்து இவ்வாறு கூறுகிறது: “வேலை வாய்ப்புகளை வலுவிழக்கச்செய்கின்ற, மிக மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்ட மாற்றங்கள் . அவை குறுகிய காலகட்டத்திற்காக இருந்தாலும் சரி, அல்லது நீண்ட காலத்திற்காக இருந்தாலும் சரி நன்மை பயக்காது; வேலைவாய்ப்புகளைப் பெருக்காது.”
உழைப்பாளிகளின் மீதும் தொழிற்சங்கங்களின் மீதும், வளர்ச்சி, முதலீடுகளைப் பெருக்குவது என்ற பெயரில் தாக்குதல்களும் நடவடிக்கைகளும் தொடுக்கப்பட்டு நவீன தாராளமயம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அம்சமான பொருளாதார நெருக்கடிகளை தடுப்பதில் தோல்வியடைந்தது. 1997ஆம் ஆண்டில் ‘கிழக்காசியப் புலிகள்’ என்று கூறப்பட்ட நாடுகளில் ஒரு பெரும் நிதி நெருக்கடி உருவாயிற்று. இது பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவி உலகப் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பொருளாதார மந்த நிலையை 2001 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து உருவாக்கத் துவங்கியது. இதிலிருந்து நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை அதிக காலத்திற்கு செயலாக்க முடியாது என்பது தெரிகிறது. அண்மைக்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில், 2008 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி உருவாயிற்று. இன்றளவும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது. நவீன தாராளமயமாக்கத்தின் ஆதரவாளர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் மீட்சிக்கான ஒரு சில அடையாளங்களாக சுட்டிக் கொண்டிருந்தாலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. உலகத் தொழிலாளர் அமைப்பு 2017 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு மற்றும் சமூக நோக்கம் பற்றிய தனது அறிக்கையில் கூறுகிறது: “2017 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சியைப் பற்றிய முன்மதிப்பீடுகள் சமீபகாலமாக ஒவ்வொரு முறையும் இறங்குமுகமாகவே மாற்றப்படுகின்றன (2012 ஆம் ஆண்டில் 4.6% என்பது 2016 ஆம் ஆண்டில் 3.4 % எனக் குறைந்தது). உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில் ஒரு கூடுதலான நிச்சயமற்ற நிலைமையே உள்ளது.”
இன்றைய காலகட்டத்தில் நவீன தாராளமயகொள்கைகளின் தாக்கத்தைக் குறித்து உலகெங்கும் அதிருப்தி அதிகரித்துவருகிறது. உலகெங்கும் உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கை நிலையின் மீதும், வேலைச் சூழலின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்தும் நவீன தாராளமயக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்தும் பெரிய போராட்டங்களை நடத்த முன்வருகின்றனர். பெருமளவிலான தொழிலாளர்களைத் திரட்டி பெரும் வேலை நிறுத்தங்கள் பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி போன்ற ஐரோப்பாவின் பல நாடுகளில் நடைபெறுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் இத்தகைய போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் 1991 ஆம் ஆண்டில் நவீன தாராளமயக் கொள்கைகள் துவக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. ஒன்றிணைந்த தொழிற்சங்கங்க இயக்கங்களின் தலைமையில் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்து 17 முறை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன.
நவீன தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் ஆகிய கொள்கைகளின் நிலையத்தகு தன்மை உலகெங்கும் அதிகமாக கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, மனித குலத்தை வாட்டும் பல சிக்கல்களைத் தீர்க்க முதலாளித்துவம் ஏற்றதுதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால், பல நாடுகளில் நம்பகமான ஸ்தாபன பலத்தோடு கூடிய ஒரு இடதுசாரி மாற்று என்பது இல்லை. இந்தச் சூழலில் பல நாடுகளில் வலதுசாரிகள் நிலவும் அதிருப்தியை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்துகிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதில் இதனைக் காண முடிகிறது. வெள்ளை இன தொழிலாளர்களிடையே தாராளமய, உலகமய கொள்கைகளுக்கு எதிராக நிலவி வந்த கோபத்தை , அக்கொள்கைகளின் விமர்சகராக தன்னை வேஷம் காட்டிக்கொண்டு டிரம்ப் பயன்படுத்திக்கொண்டார். அமெரிக்காவில் செய்யப்படவேண்டிய வேலைகளை வெளிநாட்டிற்கு அனுப்புவதை அவர் விமர்சித்தார். NAFTA, (வட அட்லாண்டிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்) TPP (பசிபிக் பகுதி பங்காளி ஒப்பந்தம்) போன்ற அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்களை விமர்சித்தார். அமெரிக்க உழைப்பாளி மக்களுக்குச் சாதகமாக பொருளாதாரத்தைச் செயல்படுத்துவதாக உறுதிகூறினார். வெள்ளைத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக தேசியம், இனவெறி பிரச்சனைகளை எழுப்பினார். மேலும் முஸ்லிம்கள், வெள்ளையர் அல்லாத மக்கள், புலம் பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள்தான் வெள்ளைத் தொழிலாளர்களின் எதிரிகள் என்று சித்தரித்தார். ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்வீடன், ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வலதுசாரிகள் தாக்கமும் இனவெறியும் அதிகரித்துவருகின்றன.
இந்தியாவிலும் இத்தகைய சூழல் நிலவுகிறது. காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளின் தாக்கத்தால் மக்களிடையே நிலவிய அதிருப்தியையும் அந்த ஆட்சிக்காலத்தில் வெளிப்பட்ட பெரிய ஊழல்களையும் வலதுசாரி ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரத்தின் ஓர் அங்கமான பாஜக பயன்படுத்திக்கொண்டது. காங்கிரஸ் அரசு பின்பற்றிய அதே கொள்ககளை பாஜக அரசு இன்னும் அதிக முனைப்புடன் செயல்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்துத்துவக் கொள்கை வகுப்புவாரியாக மக்களை மத அடிப்படையில் பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறது. ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் மக்களிடையே வகுப்புவாதத்தைத் தூண்டி ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறது. மற்றொருபுறம் வெளிநாட்டு – உள்நாட்டு பெருநிறுவனங்களுக்கும், பெருவர்த்தக நிறுவனங்களுக்கும் நன்மை பயக்கும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட நவீன தாராளமய கொள்கைகளை அமலாக்குகிறது. பாஜக/ஆர்.எஸ்.எஸ் இவை செயல்படுத்தும் வகுப்புவாதக் கொள்கைகள் நவீன தாராளமயத்திற்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சிதைக்கிறது.
தற்போது நம் நாட்டில் நிலவும் சூழ்நிலை வலிமையான இடதுசாரி அமைப்பைக் கட்டி நவீன தாராளமயகொள்கைகளுக்கு எதிராக நம்பகமான மாற்று கொள்கைகளை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது காங்கிரசின் அரசியல் அறிக்கை இந்துத்துவா மற்றும் பிற வகுப்புவாத சக்திகளை எதிர்த்த போராட்டத்தை நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள் உழைக்கும்வர்க்கத்தின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை எதிர்த்த போராட்டத்தோடு இணைக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளது. 21 வது காங்கிரசில் அரசியல் உத்திகளை மறுபரிசீலனை செய்து அளிக்கப்பட்ட அறிக்கை, இத்தகைய மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்கவேண்டுமென்றும் போராட்டங்களுக்குத் தலைமைதாங்கி நடத்தவேண்டுமென்றும் அதன் மூலம் கட்சியின் தனிப்பட்ட வலிமையை வளர்க்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது.
எனவே தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் நவீன தாராளமய கொள்கைகள் ஏற்படுத்தும் பிரச்சனைகள் மீது போராட்டங்கள் நடத்தவேண்டும். இப்பிரச்சினைகளை அரசின் கொள்கைகளோடு இணைத்து இக்கொள்கைகளின் பின்னால் உள்ள அரசியலை அம்பலப்படுத்தவேண்டும். இத்தகைய போராட்டங்கள், பிரச்சாரங்கள் மூலம்தான் நம் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் நவீன தாராளமய கொள்கைகளையும், வகுப்புவாத ஆபத்தையும் நம்மால் தோற்கடிக்க முடியும்.
முதலாளித்துவத்தில் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், உற்பத்தித் திறனிலும் மிகப்பெரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் இந்த முதலாளித்துவ அமைப்பு மக்களுடைய அடிப்படைத் தேவைகளைத் தீர்க்க உதவாது என்பதையும் தொழிலாளிவர்க்கத்திற்கும் இதர உழைக்கும் மக்களுக்கும் உணர்த்தவேண்டும். தற்சமயம் மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. இத்தகைய காலகட்டத்தில், மதிப்பு இழந்த முதலாளித்துவத்திற்கு மாற்றுப்பாதை சோசலிசம் ஒன்றே என்ற செய்தியை மக்களிடையே பரப்ப வேண்டும்.
தமிழில்: பேரா ஹேமா
Leave a Reply