முப்பெரும் எதிரிகள்
ஆர்.சந்திரா
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முன்வைக்கும் மிக முக்கிய அம்சம் புரட்சியின் கட்டத்தை பற்றிய நிர்ணயிப்பு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது திட்டத்தை முதலில் தனது ஏழாவது மாநாட்டில் 1964 இல் உருவாக்கியது. பின்னர் 2௦௦௦ ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கட்சி திட்டம் சமகாலப்படுத்தப்பட்டது. புரட்சியின் கட்டம் பற்றிய 1964 ஆம் ஆண்டு நிர்ணயிப்பைத்தான் சமகாலப்படுத்தப்பட்ட திட்டமும் முன்வைக்கிறது.
புரட்சியின் கட்டம் மக்கள் ஜனநாயக கட்டம் என்பது கட்சி திட்டத்தின் நிர்ணயிப்பு. மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் வர்க்கங்கள் எவை; மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள் எவை என்பதை திட்டம் நமக்கு எடுத்துரைக்கிறது.
சோஷலிச சமுதாயத்தை அடைவதற்கு படிக்கட்டான மக்கள் ஜனநாயகத்தை அமைப்பதற்கு தொழிலாளர்களும், விவசாயிகளும், அனைத்து பகுதி உழைக்கும் மக்களும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் [கட்சி திட்டம் 1.11] என்று திட்டம் கூறுகிறது.
புரட்சியை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்றால், சமுதாயத்தில் எந்தெந்த வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அவைகளிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற எந்தெந்த வர்க்கங்களுடன் இணைந்து போராட வேண்டும்; எந்த வர்க்கம் அதற்குத் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இந்திய புரட்சியின் இத்தகைய பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ள கட்சி திட்டம் நமக்கு உதவுகிறது. நமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை இனம் காண வேண்டி உள்ளது. எதிரி வர்க்கங்கள் எவை என்று கண்டு பிடித்து அவற்றை வீழ்த்தும் தந்திரங்களை வகுக்க வேண்டி உள்ளது.
இந்தியா விடுதலை பெற்ற பின்னர் கடந்த எழுபது ஆண்டுகளில் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருவதால், பெரு வாரியான மக்கள் சொல்லொணாத் துயரில் அல்லல்பட்டு வருகின்றனர். ஏழைகள் வசம் இருக்கும் நிலம் மிகவும் குறைவானதாகும். நிலக்குவிப்பு தொடர்கின்றது. கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்கள்–பணக்கார விவசாயிகள் – பெரும் வணிகர்கள் இடையே பலமான இணைப்பு இருப்பதை நமது கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அவற்றிற்கு சாதகமான கொள்கைகளை கடைப்பிடிப்பதால் நகர்ப்புறங்களிலும் உழைக்கும் வர்க்கம் அப்பட்டமான சுரண்டலுக்கு ஆளாகி உள்ளதை காண முடியும். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றுவதுடன், அந்நிய மூலதனத்தின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளைப் போல இல்லாமல், முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் மீது முதலாளித்துவம் உருவாகி உள்ளதை பார்க்க முடியும். இந்திய சமூக அமைப்பு வினோதமான ஒன்று என்பதை கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகின்றது: “… ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட வினோத கலவையாக உள்ளது.”
புரட்சியின் கட்டம் பற்றி திட்டம் பின்வருமாறு கூறுகிறது:
“நமது நாட்டில் சோசலிசத்தைக் கட்ட வேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி இலக்காக ஏற்றுக்கொள்கிறது. அதேசமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையையும் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல்–தத்துவார்த்த பக்குவத்தையும் அதன் அமைப்பு வலுவையும் கணக்கில் கொண்டு, உடனடி இலக்காக மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதை மக்கள் முன் வைக்கிறது. உறுதியான தொழிலாளி–விவசாயி கூட்டணி அடிப்படையில், தொழிலாளிவர்க்கத்தின் தலைமையில், அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் கூட்டணி என்ற அடிப்படையில் இது நிகழும்.” (திட்டம், பத்தி 6.2)
மக்கள் ஜனநாயக புரட்சிகட்டத்தில் இந்திய சமுதாயத்தில் மூன்று முக்கியமான முரண்பாடுகள் உள்ளன. அவை வருமாறு:
அ] நிலப்பிரபுத்துவத்திற்கும், பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயிகளுக்குமிடையிலான முரண்பாடு;
ஆ] ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான முரண்பாடு;
இ] முதலாளிகளுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு
இந்த மூன்று முரண்பாடுகள் இன்றும் இருப்பதனால்தான், மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை அடைவதற்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக முதலாளித்துவ எதிர்ப்புப் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டுமென கட்சித் திட்டம் வலியுறுத்துகிறது.
நிலப்பிரபுக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான முரண்பாடு அடிப்படை முரண்பாடு என்பதை கட்சி திட்டம் தெளிவாக கூறுகிறது.
பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவும், அதை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஏற்ப கொள்கைகளை வகுத்து கடைபிடித்து வருகிறது. எனவே,..” மக்கள்ஜனநாயக புரட்சி நிலப்பிரபுத்துவம், அந்நிய ஏகபோக முதாளித்துவத்தை சமரசமின்றி எதிர்ப்பதோடு மட்டுமின்றி, அதனுடன் சேர்ந்து அந்நிய நிதி மூலதனத்துடன் சமரசம் செய்து ஒத்துழைக்கும் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு வைத்திருக்கும் அரசுக்கு தலைமை தாங்கும் பெரு முதலாளித்துவத்தையும் எதிர்க்கிறது” என்பதை கட்சி திட்டம் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. முதலாளி – தொழிலாளி வர்க்க முரண்பாடு மேலே மூன்றாவது முரண்பாடாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நாம் குறிப்பாக ஏகபோக முதலாளிகளை–பெருமுதலாளிகளை–எதிர்க்கிறோம் என்றும் திட்டம் தெளிவுபடுத்துகிறது.
ஆக கட்சி திட்டம் நமக்கு வலியுறுத்துவது, நமது இன்றைய மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நிலப்பிரபுக்கள், ஏகபோக முதலாளிகள், ஏகாதிபத்தியம் ஆகியவையே இந்திய மக்களின் முப்பெரும் எதிரிகளாக அமைகிறார்கள் என்பதாகும்.
Leave a Reply