காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்


 

வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கார்ல் மார்க்ஸ் பிறந்தது 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி. 2017 ஆம்ஆண்டு மே 5 ஆம் தேதி 200 ஆவது பிறந்த நாள். எனவே மார்க்ஸின் இருநூறாம் பிறந்த நாள் மற்றும் 200 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம் இந்த ஆண்டு மே 5 இல் துவங்கி அடுத்த ஆண்டு மே 5 வரை நிகழும்.

நடப்பு ஆண்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மார்க்சின் மகத்தான படைப்பான மூலதனம் நூல் முதன் முதல் பிரசுரிக்கப்பட்டது 1867 இல். இப்பொழுது மூலதனம் நூல் வெளியிட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

நவீன உலகை ஜனநாயகப்படுத்தியதில் மார்க்சுக்கும் அவரது தத்துவத்தை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ற ஸ்தூலமான ஆய்வுகளையும் யுக்திகளையும் கண்டறிந்து மார்க்சீய தத்துவத்தையும், நடைமுறையையும் இணைத்து செழுமைப்படுத்திய லெனின், ஸ்டாலின், மாவோ, ஹோ சி மின், காஸ்ட்ரோ போன்ற ஆளுமைகளுக்கும் பெரும்பங்கு உண்டு.

நவீன சமூக அறிவியலின் சிற்பி

அறுபத்தி ஐந்து ஆண்டுகள் தான் மார்க்ஸ் வாழ்ந்தார். பிறந்தது மே 5, 1818. இறந்தது மார்ச் 14, 1883. அவர் பிறந்த பொழுது இங்கிலாந்து நாட்டில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு வேகமாக சமூகத்தில் ஆதிக்கம் செய்யும் நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. ஐரோப்பிய கண்டத்து நாடுகள் சற்று பின்தங்கியிருந்தன. இருப்பினும் அங்கும் முதலாளித்துவம் விரைவாகப் பரவும் என்பதை தனது ஆய்வுகள் மூலம் எடுத்துரைத்தார் மார்க்ஸ். சொல்லப்போனால், இன்று நாம் பேசும் உலகமயத்தைபற்றி 1847 இலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் பேசினார்.

அப்பொழுது அவருக்கு முப்பது வயது கூட நிறையவில்லை. அடுத்த இருபது ஆண்டுகளில் ஆழமான ஆய்வுகளை அயராமல் மேற்கொண்டு, 1867 இல் மூலதனம் என்ற உலகையே புரட்டிப் போட்ட மாபெரும் படைப்பை மார்க்ஸ் உருவாக்கி பிரசுரித்தார். இதில் பெரும்பகுதி லண்டனில் இருந்த பிரதான நூலகமான பிரிட்டிஷ் மியூசியத்தில் தனது நேரத்தை மார்க்ஸ் செலவழித்தார். ஆனாலும் புத்தகப்புழுவாகவோ, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சமூகம் பற்றிப் பேசும் ‘அறிவுஜீவி’யாகவோ மார்க்ஸ் ஆகவில்லை. மாறாக, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பல சமயங்களில் களத்தில் நின்றார். 1844 -1850 இத்தகைய பல மக்கள் எழுச்சிகளில் பங்கேற்று பல ஐரோப்பிய அரசுகளால் பல முறை நாடு கடத்தப்பட்டார். மூலதனம் எழுதும் மிகக் கடுமையான பணியில் ஈடுபட்டிருந்த பொழுதும் கூட தொழிலாளி வர்க்கத்தின் முதல் அகிலத்தை உருவாக்குவதில், 1864இல் அதன் முதல் மாநாட்டை லண்டன் நகரில் நடத்துவதில், அதற்கான முக்கிய ஆவணங்களை தயாரிப்பதில் மார்க்ஸ் மிகப்பெரிய பங்கு ஆற்றினார். மாநாட்டின் துவக்க உரையை மார்க்ஸ் தான் எழுதினார்.

மார்க்ஸ் மறைந்து 134 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் மார்க்ஸ் இன்றும் உலகில் மிகக் கணிசமான செல்வாக்கு பெற்ற சிந்தனையாளராக உள்ளார். முதலாளித்துவ சமூக-பொருளாதார அமைப்பு பற்றி அவர் முன்வைத்த கருத்துக்களும் ஆய்வுகளும் இன்றும் முக்கிய விவாதங்களுக்கு அடிநாதமாக திகழ்கின்றன. பொருளியல், வரலாற்றியல், தத்துவம், அரசியல் என்று அனைத்து முக்கிய சமூக அறிவியல் சார்ந்த துறைகளிலும் மார்க்ஸ் தனது ஆய்வுகள் மூலமும் படைப்புகள் மூலமும் மிக முக்கிய சிந்தனையாளராக இன்றுவரை திகழ்கிறார்.

மார்க்ஸ், தனது பேராசிரியராக இருந்த, அன்றைய ஐரோப்பிய அறிவு உலகில் கொடிகட்டிப் பறந்த ஜெர்மானிய தத்துவ பேரறிஞர் ஹெகெல் முன்வைத்த கருத்துமுதல்வாத தன்மையிலான இயக்கவியல் அணுகுமுறையை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் கருத்துமுதல்வாத தன்மையை நிராகரித்தார். பொருள்முதல்வாதத்தின் உண்மையை, அவசியத்தை நிலைநாட்டினார். அதே சமயம் ஹெகெல் முன்வைத்த இயக்கவியல் அணுகுமுறையை தலைகீழாக புரட்டிப்போட்டு, பொருள்முதல்வாத அடிப்படையில் இயக்கவியல் அணுகுமுறையை உருவாக்கினார். மெய்யியலில் மார்க்சின் மிக முக்கிய சாதனை என்று இதைக் கூறலாம். மார்க்ஸ் உருவாக்கிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற மெய்யியல் அணுகுமுறை மிகச்சரியானது என்று இன்றுவரை நிகழ்ந்துவரும் நவீன அறிவியல் வளர்ச்சி நமக்கு அறிவுறுத்துகிறது.

இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையை பயன்படுத்தி மானுட வரலாற்று வளர்ச்சியை ஆய்வு செய்து, மானுட உயிரினத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய அறிவியல் பூர்வ அணுகுமுறையான வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தை நிலைநாட்டினார். முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் தன்மையையும் செயல்பாட்டையும் நீண்ட, ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் இயக்க விதிகளை உலகிற்கு எடுத்துரைத்தார். முதலாளித்துவம் மானுட சமூகத்தின் உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதில் ஒரு முக்கிய வரலாற்றுப் பங்கு ஆற்றும் என்பதையும், அதே சமயம் தனது உள்முரண்பாடுகள் காரணமாக முதலாளித்துவம் மானுட சமூகத்தின் தொடர் வளர்ச்சிக்கு எதிரியாக அமையும் என்பதையும் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே முன்வைத்தார். முதலாளித்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவந்து மானுடத்தை பொதுவுடைமை சமூகத்த்தை நோக்கிக் கொண்டு செல்லும் சக்தியாக நவீன தொழிலாளிவர்க்கம் ஆகப்பெரிய வரலாற்றுப்பணி ஆற்றும் என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் தனது மூலதனம் நூலிலும் அறிவுபூர்வமாகவும் கவித்துவமாகவும் மார்க்ஸ் விளக்கியுள்ளார்.

மார்க்ஸ்ஸின் மனித நேயம்

தனது பதின்பருவத்திலேயே – 17 வயதிலேயே – மானுடத்தின் மீதான தனது அக்கறையை, மானுடத்தை நேசிப்பவர் என்ற தனது தன்மையை, ஒரு இளைஞன் தனது தொழிலை தேர்வு செய்வது பற்றிய சிந்தனைகள்’ (Reflections of a young man on the choice of a Profession) என்ற அற்புதமான கட்டுரையில் மார்க்ஸ் வெளிப்படுத்தினார். அக்கட்டுரையின் இறுதியில் மறக்க முடியாத வரிகளில் அவர் கூறுகிறார்:

மானுடத்திற்காக நாம் சிறப்புற செயலாற்றிட பொருத்தமான ஒரு வாழ்க்கையை தேர்வு செய்தோமென்றால், எந்த சுமையும் நம்மை வீழ்த்தாது. ஏனெனில், அவை அனைத்தும் அனைத்து மக்களின் நலனுக்கான தியாகங்கள். இத்தகைய வாழ்க்கையில் குறுகிய சுயநலம் சார்ந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பதற்குப் பதிலாக, நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் சொத்தாக அமையும். நமது நற்பணிகள் சத்தமின்றி, ஆனால் நிரந்தரமாக வேலைசெய்துகொண்டே இருக்கும். நமது மறைவிற்குப்பின் நம் சாம்பலின் மீது நன்மக்களின் கண்ணீர் சிந்தப்படும்.”

இவ்வரிகள் எழுதப்பட்டது 1835 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம்தேதிவாக்கில். அப்பொழுது மார்க்சின் வயது பதினேழு முடிந்து பதினெட்டு துவங்கிய சமயம்.

பின்னர், கூர்மையான அறிவியல் அணுகுமுறையில் உலகை ஆய்ந்து அவர் எழுதிய மூலதனம் நூலிலும் இந்த மனித நேயம் பிசகின்றித் தொடர்கிறது. தனது இளம் வயதிலேயே இவ்வாறு மனித நேயத்தை வெளிப்படுத்திய மார்க்ஸ் இதையொத்த கருத்தை 1867 இல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு மூலதனம் நூலை எழுதி முடித்து பிரசுரித்த தருவாயில் கூறுகிறார். சிக்ப்ரிட் மேயர் என்ற நண்பருக்கு 1867 ஏப்ரல் 30ஆம்தேதி மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் அவர் கூறுவதைப் பாருங்கள்:

நான் ஏன் உங்களுக்கு முன்பே கடிதம் எழுதவில்லை? ஏனெனில் ஒவ்வொரு தருணத்திலும் நான் மரணத்தின் விளிம்பில் இருந்தேன். எனவே என்னால் வேலை செய்ய முடிந்த ஒவ்வொரு நொடியையும் எனது (மூலதனம்) நூலை முடிப்பதற்கு பயன்படுத்த வேண்டியிருந்தது. எனது குடும்பம், எனது உடல்நலம், எனது மகிழ்ச்சி அனைத்தையும் மூலதனம் நூலை முடிக்க நான் அர்ப்பணித்தேன். இந்த விளக்கம் தங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.நடைமுறை’ சார் மனிதர்கள், அவர்களின் ‘மேன்மையான அறிவு’ இரண்டையும் கண்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது. நிச்சயமாக, ஒருவர் எருது போல் இருக்க விரும்பினால், அவர் மானுடத்தின் கஷ்டங்களை புறக்கணித்துவிட்டு தனது நலனை மட்டுமே கவனித்துக்கொள்ளலாம். ஆனால், (எனதுபார்வையில்) மூலதனம் நூலை கைப்பிரதி வடிவத்திலாவது முடிக்காமல் வெளியேறி இருந்தால் அதை நான் (செய்யவேண்டிய) நடைமுறைக்கு விரோதமானது என்றே கருதியிருப்பேன்.

மார்க்ஸ் ஏன் இன்றும் பேசப்படுகிறார்?

அறிவுத்தளத்தில், பல்கலைக்கழகங்களில், முதலாளித்துவ அறிவுஜீவிகள் பல வழிகளில் மார்க்ஸின் சமூக அறிவியல் சாதனைகளை, கண்டுபிடிப்புகளை ஏளனம் செய்யவும் புறக்கணிக்கவும் முயன்று வந்துள்ளனர். அந்த “திருப்பணி” இன்றும் தொடர்கிறது. பல்கலை பொருளாதாரப் பாடத்திட்டத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் மார்க்ஸ் இடம் பெறுவதே இல்லை. அப்படி இடம் பெற்றால், பொருளாதார சிந்தனை வரலாறு என்ற பாடத்திட்டத்தில் ஒரு சிறிய குறிப்பிடத்தக்கவர் அல்லாத அறிஞராக சொல்லப்படுகிறார். இந்த நிலை 1991க்கு முன் நிலவியது என்றால், அதன் பின், அப்பொழுது சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு ஆளும் வர்க்க அறிவுஜீவிகளின் இறுமாப்பை மேலும் கூட்டியது. வரலாறு முடிந்துவிட்டது; சோசலிசத்தின் கதை முடிந்துவிட்டது; மானுட வரலாற்று வளர்ச்சியின் உச்ச கட்டம், இறுதிகட்டம் முதலாளித்துவம் தான் என்று அவர்கள் கொக்கரித்தனர். ஆனால் 2007ஆம் ஆண்டின் இறுதி கால்பகுதியில் தோன்றி இன்றுவரை தொடரும் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தீவிர மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை, முதலாளித்துவ உலகமயத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பு பேரலைகள் இவையெல்லாம் மார்க்சின் அவசியத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து, இன்னொரு சமயத்தில் மார்க்ஸ் கூறியதுபோல், முதலாளித்துவ அறிவுஜீவிகளின் மண்டைகளில் பேரொலியுடன் ஏறிக்கொண்டிருக்கிறது! போப்பாண்டவரில் துவங்கி நிதிமூலதன உலகின் உச்சத்தில் உலாவும் பெருந்தகைகளையும் மார்க்சை கவனிக்கவைத்துள்ளது. “முதலாளித்துவ உற்பத்தி அமைப்பில் நிகழும் மூலதனத் திரட்டலின் பொதுவிதி செல்வங்கள் ஒருபுறம் குவிவதும், பெரும் துயரங்கள் மறுபுறம் குவிவதும்தான்” என்று மார்க்ஸ் மூலதனம் நூலில் முன்வைத்த கருத்தை மறுக்க இயலாமல் பிக்கெட்டி உள்ளிட்ட அறிவுஜீவிகள் அதிகரித்துவரும் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு பற்றி பேசிவருகின்றனர். உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் வளர்ந்தநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பாகிய OECD யும் இத்தகைய ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்காவிட்டால் பெரும் கலகம் வரும் என்று அறிக்கை விடும் காலம் இது. மார்க்ஸ்சும் மூலதனம் நூலும் சோசலிச தத்துவமும் இன்று முதலாளித்துவ அமைப்பை அச்சுறுத்தும் பூதமாக உருவாக்கி வருகின்றன! இச்சூழலில் மார்க்ஸின் முக்கிய சாதனைகளை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

முதலாவதாக, மானுட சிந்தனை வளர்ச்சியில் தனது அடிப்படை பங்களிப்புகள் மூலம் புதிய தடத்தை மார்க்ஸ் பதித்தார். மனிதகுல வரலாற்று வளர்ச்சி மனித சமூகங்கள் தங்களை உற்பத்தி, மறு உற்பத்தி செய்த வழிகளை ஆய்வு செய்வதன் மூலம் அறிவியல் பூர்வமாக அறிந்துகொள்ளப்படலாம் என்பதை உலகுக்கு அவர் காட்டினார். இதன்மூலம் வரலாறு என்பது அரண்மனை சதிகள், ராஜாக்கள், அவர்களின் வம்சங்கள், அவர்களது வீர சாகசங்கள் என்ற புரிதலுக்கு சாவுமணி அடித்து வரலாறு ஒரு இயல் என்று தெளிவுபடுத்தினார். மானுட வரலாறு பற்றிய தனது ஆய்வில் மார்க்ஸ் மனிதர்களையும் அவர்களது உணர்வுபூர்வமான, நோக்கம் சார்ந்த உழைப்பையும் மையப்பொருளாக வைத்தார். மானுட உயிரினத்தின் பிரத்தியேகத்தன்மை தனது சிந்தனைபூர்வமான உற்பத்திசார் நடவடிக்கைகளால் இயற்கையை மாற்றி தனது தேவைகளை உற்பத்தி செய்துகொண்டதுதான் என்று அவர் நிரூபித்தார். இவ்வாறு செயல்பட்டு, மனிதர்கள் புதிய அறிவை தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருந்தனர். புதிய திறன்களை வளர்த்துக் கொண்டே இருந்தனர். இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி மேலும் மேலும் அறிந்தனர். இந்த அறிவை பயன்படுத்தி சமூகத்தின் உற்பத்தி சக்தியை வளர்த்தனர். இத்தகைய ஓய்வற்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி எண்பதுதான் மானுட வரலாற்று வளர்ச்சியின் நிரந்தர அம்சம்.

மானுட வரலாற்று வளர்ச்சி தொடர்பாக மார்க்ஸ் வெளிக்கொணர்ந்த இரண்டாவது முக்கிய விஷயம் இதுதான்: உற்பத்தி எனும் நடவடிக்கையில் மனிதர்கள் இயற்கையோடு மட்டும் உறவுகொள்ளவில்லை. மனிதர்கள் பரஸ்பரம் ஒத்துழைப்பதும் அவசியமாகிறது. சமூகத்தில் உற்பத்தி தொடர்பான ஏற்பாடுகள், பல்வேறு மக்கட்பகுதியினர் அந்த ஏற்பாட்டில் ஆற்றும் பங்கு போன்றவற்றை மார்க்ஸ் உற்பத்தி உறவுகள் என்று குறிக்கிறார். மிக அதிக அளவு, உலகின் பல்வேறு நாடுகளையும் உள்ளடக்கி செயல்படும் முதலாளித்துவ அமைப்பிலும் சரி , முந்தைய அமைப்புகளிலும் சரி, மானுட சமூகங்கள் உற்பத்தியை சமூக நடவடிக்கையாகவே மேற்கொண்டிருக்கின்றன. நவீன முதலாளித்துவ உலகில் ‘தனி நபர்’ என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தி, உற்பத்தியும் மனித வாழ்வும் எல்லாக் காலங்களிலும் சமூகம் சார்ந்தவையே என்ற உண்மை மறைக்கப்படுகிறது.

மூன்றாவதாக, மனித சமூகத்தின் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து தவிர்க்க முடியாமல் வளர்ந்துகொண்டே இருப்பதனால், இவை ஒரு கட்டத்தில் நிலவும் உற்பத்தி உறவுகள் என்ற கூட்டை/சட்டகத்தை உடைத்துக்கொண்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பதை மார்க்ஸ் விளக்கினார். இவ்வாறு வரலாற்றில் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமான உறவு குறிப்பிட்ட காலம் ஒற்றுமை மேலோங்கிய தன்மையிலும், பின்னர் முரண்பாடு முன்வரும் தன்மையிலும் அமையும் என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். இதன் பொருள் மானுட வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி அமைப்புகள் சாசுவதம் அல்ல; மாறாக அவை மாறிக்கொண்டே இருக்கும் என்பதும், உற்பத்தி சக்திகளின் இடையறா வளர்ச்சியின் காரணமாக புதிய உற்பத்தி அமைப்புகள் உருவாகும் என்பதும் ஆகும்.

நான்காவதாக மார்க்ஸ் சுட்டிக்காட்டியது, உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அடைவதனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மானுட சமூகம் தன் வழக்கமான மறுஉற்பத்தியை உறுதி செய்துகொள்வது மட்டுமல்லாமல் உபரி உற்பத்தியும் சாத்தியம் ஆகும் என்பதாகும். உபரி உற்பத்தி ஏற்படும் நிலைக்கு ஒரு சமூகம் வளர்ந்து விட்டால், அந்த சமூகத்தில் உழைக்கும் தகுதியுள்ள அனைவரும் உழைக்க வேண்டியதில்லை. உற்பத்தி அமைப்பை கைப்பற்ற முடிந்தால், பிறரை உழைக்க வைத்து அவர்களால் உருவாக்கப்படும் உபரி உற்பத்தியில் ஒருசாரார் உழைக்காமல் உயிர் வாழலாம் என்ற வாய்ப்பு ஏற்படுகிறது. வேறுவகையில் சொன்னால், உபரி உருவாகும் நிலையில் ஒரு சமூகம் இரண்டு அடிப்படை வர்க்கங்களாக பிரிந்து நிற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் உழைப்பது; அவர்களால் ஏற்படும் உபரி உற்பத்தியில் ஒரு சிறிய பகுதியினர் சௌகர்யமாக வாழ்வது என்பது சாத்தியமாகிறது. இத்தகைய வர்க்க சமூகம் இயல்பாக ஏற்பட்டு விடாது. உற்பத்தியின் மீதான ஆதிக்கம் ஒரு சிலர் கையில் வரும்பொழுது அவர்கள் பிறரை தங்களுக்காக உழைக்க வைக்க முடியும். உற்பத்திக் கருவிகள் ஒருபகுதியினரின் தனி சொத்தாக மாற்றப்பட்டு, பெரும்பகுதி மக்கள் இவற்றை இழந்து நிற்பதால் உடமையாளர்களிடம் அண்டி உழைத்துப் பிழைக்கும் நிலை ஏற்படுவது வர்க்க சமூகத்திற்கு அவசியம். இத்தகைய ஏற்றத்தாழ்வான சமூக ஏற்பாட்டை அமலாக்குவதற்கு வன்முறையும் தேவை. உழைக்க நிர்பந்திக்கப்படும் மக்கள் இந்த சமூக ஏற்பாட்டை நியாயம் என்றோ ஆண்டவன் செயல் என்றோ இன்ன பிற வாதங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வைப்பதும் அவசியம். வன்முறை மட்டுமே போதாது. உடைமையாளர்களையும் அவர்களின் சொத்தையும் நலனையும் பாதுகாக்கும் வன்முறை அமைப்பாக தான் ‘அரசு’ என்ற அமைப்பு வரலாற்றில் உருவகிறது. உழைப்பாளி மக்கள் இந்த ஏற்பாட்டை ஏற்க மதம், பண்பாடு, இலக்கியம் என்று பலதளங்களில் தத்துவ ஆயுதங்களும் நிறுவன ஆயுதங்களும் பயன்படுகின்றன.

வர்க்கப்போராட்டம்

மார்க்ஸ் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது; அதன்வழி உபரியும் ஏற்படும் வர்க்க சமூகங்களும் என்று விளக்கியதுடன் நின்றுவிடவில்லை. மானுட வரலாற்றில் உருவாகும் வர்க்க சமூகங்கள் இயற்கையின் படைப்பும் அல்ல; நிரந்தரமும் அல்ல என்பதை மார்க்ஸ் நிரூபித்தது அவருடைய ஆகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொரு வர்க்க சமூகமும் தன் வளர்ச்சியையும் அழிவையும் தன்னகத்தில் தாங்கியே வருகிறது என்பதை அவர் காட்டினார். இவ்வாறாக மானுடம் படிப்படியாக முன்னேறுவதற்கு வர்க்கப் போராட்டமே கருவியாக உள்ளது என்பதையும் மார்க்ஸ் விளக்கினார். மார்க்ஸின் தனிப்பட்ட பங்களிப்பு என்பது ஒவ்வொரு கட்டத்திலும் நிலவும் வர்க்க சமூகத்தை தூக்கி எறிந்து அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சமூகம் பயணிக்க முக்கிய சக்தியாக எந்த வர்க்கம் செயல்படும் என்பதை விளக்கியதாகும். இவ்வாறு மார்க்ஸ்–எங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து முதலாளித்துவ சமூகத்திற்கு மானுடம் பயணிக்கையில் முதலாளிவர்க்கம் வகிக்கும் புரட்சிகரப்பங்கை மறக்க முடியாத வரிகளில் சித்தரிக்கிறது. இன்னும் முக்கியமாக, பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வளரத்துவங்கி அடுத்த இருநூறு ஆண்டுகளில் உலகம் முழுவதும் முதலாளித்துவம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது அதன் நிரந்தரத் தன்மைக்கு சான்று அல்ல என்று மார்க்ஸ் அடித்துக் கூறினார். முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் தொழிலாளிவர்க்கம் அமைப்பு ரீதியான திரண்ட சக்தியாக உருவெடுக்கும் என்றும், இந்த வர்க்கம்தான் முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தி மானுடத்தை அடுத்த உயர்நிலை வளர்ச்சிக்கு – முதலில் சோசலிச சமூகத்திற்கும், பின்னர் அனைத்து வளங்களையும் அனைவருக்கும் சாத்தியமாக்கும் கம்யூனிச சமூகத்திற்கும் இட்டுச்செல்லும் திறன் கொண்ட வர்க்கம் என்பதை மார்க்ஸ் சிறப்பாக விளக்கினார்.

மார்க்ஸின் சமகால பொருத்தப்பாடு

சமகால முதலாளித்துவத்தின் தொடரும் நெருக்கடி மார்க்ஸின் சமகால பொருத்தப்பாட்டை காட்டுகிறது. முதலாளித்துவ வளர்ச்சி விதிகள் தொடர்பாக பல முக்கிய விஷயங்களை மார்க்ஸ் கூறியுள்ளார். முதலாளித்துவ வளர்ச்சி பெரும் அளவிலான உற்பத்திசாலைகளை உருவாக்கி மூலதனத்தை குவிக்கும். போட்டியில் பல முதலாளிகள் அழிந்து, மூலதனம் சிலர் கைகளில் மையப்படுத்தப்படும். ஏகபோகம் உருவாகும். முதலாளிகளுக்கிடையில் போட்டி, முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளிவர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக இயந்திர மயமாக்கல் வேகமாக நிகழும். இதனால் எல்லாக் காலங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் வேலையில்லா பட்டாளம் ஏற்படும். முதலாளித்துவ மூலதன சேர்க்கை செல்வங்களை ஒருசில ஏகபோக முதலாளிகளிடம் குவிக்கும். மறுமுனையில், உழைப்பாளி மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொள்வார்கள். இந்த முதலாளித்துவ மூலதன சேர்க்கையின் பொதுவிதி மீண்டும் மீண்டும் பொருளாதார மந்த நிலையையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்று மார்க்ஸ் மூலதனம் நூலில் விவரித்தார். கடந்த இருநூறு ஆண்டுகளின் வரலாறு மார்க்ஸ் கூறியதன் உண்மையை நிரூபித்துள்ளது. இன்றைய உலகில் இதை நாம் கடந்த பத்து ஆண்டுகளாக கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.2007 ஆண்டின் இறுதி பகுதியில் துவங்கிய மந்தநிலை ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக தொடர்கிறது.

மீண்டும் மீண்டும் சமகால முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்குவது மட்டுமே மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்களின் – அவரது முதலாளித்துவம் பற்றிய ஆய்வுகளின் – வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் – சமகால பொருத்தப்பாட்டிற்கு சான்றாக அமைகின்றன. ஆனால் இவை தவிர வேறு பல விஷயங்களிலும் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் நமக்கு சுற்றுச்சூழல் உள்ளிட்ட சமகாலப் பிரச்சினைகளில் வெளிச்சம் தருகின்றன. மூலதனம் நூலின் முதல் பாகத்தில் லாபவெறி அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவம் வேளாண்மையில் “சாதிக்கும்” முன்னேற்றம் உழைப்பாளியையும் அவரது மனவளத்தையும் சீர்குலைக்கின்றது என்பதை சுட்டிக் காட்டுகிறார். இன்று நாம் ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ளோம். ஏகாதிபத்தியம் வளரும் நாடுகளை மீண்டும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சித்துவருகிறது. சுற்றுச்சூழலுக்கும் நாம் வாழும் உலகிற்கும் பெரும் நாசத்தை – சீர்செய்ய இயலாத அளவிலான நாசத்தை – ஏற்படுத்திவருகிறது. இத்தகைய பின்னணியில், மார்க்சின் ஆய்வுகளும் கூற்றுகளும் நமக்கு வெளிச்சமும் உற்சாகமும் தருகின்றன. பண்பாடு தொடர்பாக, முதலாளித்துவ வாழ்க்கையில் ஏற்படும் அந்நியமாதல் தொடர்பாக, பாலின சமத்துவம் தொடர்பாக, காலனிய ஆதிக்கத்தின் கொடுமைகள் பற்றி, அவை இன்றைய மேலை நாடுகளின் வளர்ச்சியில் ஆற்றிய பங்குபற்றி என – இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் – பல பிரச்சினைகளில் மார்க்ஸ் எழுதியுள்ள நூல்களும் கட்டுரைகளும் நமக்கு, நமது களப்பணிகளுக்கு உதவும். எனவேதான் மார்க்சியம் கற்போம்; மார்க்சிடம் கற்போம் என்ற முழக்கம் சாலப்பொருத்தமாக உள்ளது.

வரலாறு பற்றிய நீள்பார்வை தேவை

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் இருந்தது. முதலாளித்துவம் சர்வ வல்லமை படைத்ததாக கருதப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் 1830இல் துவங்கி உழைப்பாளி மக்கள் பங்கேற்ற பல ஜனநாயகப் போராட்டங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கண்டு துவளாமல், 1871 பாரிஸ் கம்யூன் புரட்சி நடந்தது. ஏறத்தாழ 90 நாட்கள் பாரிஸ் நகரில் தொழிலாளி வர்க்க ஆட்சி தாக்குப் பிடித்தது. ஆனால் இறுதியில் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தாக்குதலுக்கு அது இரையானது. 1905 இல் வெடித்த முதல் ரஷ்யப் புரட்சி அடக்கப்பட்டது முதல் உலக யுத்தம் துவங்கும் வரை சோசலிசம் ஒரு தத்துவமாகவே இருந்தது. அது எங்கும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அடுத்த நாற்பது ஆண்டுகளில் உலகம் வேகமாக மாறியது. 1950 களின் பிற்பகுதியில் உலகமக்களில் மூன்றில் ஒருபங்கு மக்கள் சோசலிசநாடுகளில் வாழும் மகத்தான முன்னேற்றம் நிகழ்ந்தது. அதன்பின் 1990 களின் துவக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவையும் அதன் பின்விளைவுகளையும் நாம் இன்று எதிர்கொள்கிறோம். நமக்கு வரலாறு தொடர்பாக நீள்பார்வை தேவை.

வரலாறும் வரலாற்று சகாப்தங்களும் பத்தாண்டுகளிலும் நூறு ஆண்டுகளிலும் கூட அளவிட முடியாதவை. முதலாளித்துவ உற்பத்தி அமைப்புக்கு, உலகம் முழுவதும் பரவவும் ஆதிக்கம் செலுத்தவும் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. இவ்வளவுக்கும் இந்த அமைப்பு – லாப வெறியை அடிப்படையாக கொண்ட அமைப்பு – இயல்பாகவே விரிவாகும், ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டது. இன்று அது நீண்ட நெருக்கடியில் சிக்கியுள்ளது. வர்க்க சுரண்டலற்ற, தன்னைத்தானே உணர்வு பூர்வமாக நிர்வகித்துக்கொள்ளும் ஒரு சமூகத்தை அமைப்பது என்ற பயணத்தில் சில ஆரம்ப முயற்சிகள் கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சில முதலாளித்துவ எதிரிகளால் வீழ்த்தப்பட்டதில் சோர்வு அடைய வேண்டியதில்லை. இது ஒரு நீண்ட பயணம். அதிலும், சோசலிச நிர்மாணத்திற்கான ஆரம்ப புரட்சிகள் மிகவும் பின்தங்கிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவை உலகம் தழுவிய ஏகாதிபத்தய எதிர்முகாமை சந்திக்கவேண்டியிருந்தது. சோசலிச நாடுகளை, மானுடத்தின் அற்புத பரிசோதனைகளை முளையிலேயே கிள்ளி எறிய எல்லா யுக்திகளையும் ஆயுதங்களையும் ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது. எனினும் மானுட விடுதலைக்கான, ஒரு அறிவியல்பூர்வமான, சமத்துவ சமூகம் நோக்கிய, சுரண்டலற்ற சமூகத்தை நோக்கிய பயணம் தொடர்கிறது. இதுவரை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும் தைரியத்துடனும் சோசலிசத்தை நிர்மாணிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. கடந்த கால அனுபவத்தில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், இதர மாபெரும் சோசலிச புரட்சியாளர்கள் நமக்கு அளித்துள்ள தத்துவார்த்த வளங்களையும் நடைமுறை அனுபவங்களையும் பயன்படுத்தி பயணத்தை தொடர்வோம்.

நம் முன் உள்ள போராட்டம் நீண்ட நெடிய ஒன்றுதான். குறுக்குவழிகள் இல்லை. ஆனால் இப்பயணத்தின் இறுதிப்பரிசு அனைத்து மானுடத்தின் விடுதலை. இதைவிட பெரிய இலக்கு இருக்க முடியாது. மார்க்சின் மனித நேயத்தையும் அவர் நமக்கு தந்துள்ள அற்புதமான இயக்கவியல் வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தையும் நமது ஆயுதங்களாகக் கொண்டு முன்னேறுவோம். இதுதான் நாம் மார்க்ஸ் என்ற மாமனிதனுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

One thought on “காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்

  1. Karn marks there are worth less not even followed in China or russi Indian trators uder name of marks trying to create anarchy. These bastards are in jnu they must be sent gallows of andaman

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s