ஏ.கே.பத்மநாபன்
அழித்தொழிக்கப்பட வேண்டிய நிலப்பிரத்துவமும், அதனுடன் இணைந்த சாதீயமும், பத்தாம்பசலித்தனமான பழக்கவழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் ஆழமாக வேரூன்றியதாக உள்ளதே நமது சமூக அமைப்பு. இந்திய மக்களில் மிகப்பெரும்பகுதியினர் இந்த பிற்போக்குத்தனமாக கருத்துக்களில் கட்டுண்டு கிடப்பவர்களே. இருக்கின்ற வர்க்கங்களில் மிகவும் புரட்சிகரமான வர்க்கம் நவீன தொழிலாளி வர்க்கம்தான் என்ற அடிப்படையான கருத்தில் எவ்வித வேறுபாடும் இல்லையென்றாலும், மேற்கூறிய பிற்போக்கு சிந்தனைகளிலிருந்து தொழிலாளிவர்க்கம் இன்னமும் விடுபட்டு விடவில்லை என்பதை யதார்த்தத்தில் காண்கிறோம். இந்த பிற்போக்குக் கருத்துக்களின் தாக்கத்திலிருந்து இந்திய தொழிலாளி வர்க்கத்தை விடுபடச் செய்யும் பணி, அந்த வர்க்கத்தின் முன்னணியினராக செயல்படுவோரின் முதற்பெரும் கடமையாகும்.
நிறைய முதலாளித்துவத்தின் கோரமான சுரண்டல், மதம் சார்ந்த நம்பிக்கையையும், அதன் அடையாளங்களின் கொண்டாட்டங்களையும் தூண்டுகிறது. குறிப்பாக அமைப்பு சார்ந்த உற்பத்தி, சேவைத்துறைகளில் நிரந்தரம் செய்யப்படாத காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் அதிகரித்து வருகிறது. இந்த நிரந்தரமற்ற தொழிலாளி வர்க்கத்திடம், போராட்ட உணர்வை விட, விதி, வேண்டுதல், சாஸ்திரம், பரிகாரம் ஆகியவையே மேலோங்கி நிற்கிறது. இது சுரண்டல் நீடிக்கவும் சுரண்டல் ஒழிப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கடவுளின் கருணையால் இன்றைய பொழுது சுபமாக முடிந்தது என அன்றாடம் காய்ச்சிகளான உடலுழைப்புத் தொழிலாளர்கள், சுரண்டலைச் சகித்துக் கொள்ள பழக்கப்படுத்தப்படுகின்றனர். அதாவது கம்யூனிஸ்ட்டுகள் வாதிடுகிற நவீன பாட்டாளி வர்க்கமே, முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டும் மாபெரும் சக்தியில், ஒருபகுதி, சமூகத்தின் பிற்போக்குக் கருத்துக்களாலும், பெரும் பகுதி திரட்டப்படாததாலும், ஆற்றல்படுத்தப் படாமல் உள்ளது. இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில்தான் தொழிலாளி வர்க்கம் பெருமளவில் நடத்தும் போராட்டங்களும் தலையெடுக்கின்றன.
ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் தத்துவார்த்த பிடிமானத்திலிந்து அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களையும் மீட்டெடுக்க வேண்டிய தொழிலாளி வர்க்கத்தை புரட்சிகரமான கோட்பாடுகளோடு இணைந்து நிற்பவர்களாக மாற்றுவதுஎன்ற கடமையை நிறைவேற்றாமல், சுரண்டல் அமைப்பிற்கு முடிவுகட்டுவது என்ற உன்னதமான லட்சியத்தை நிறைவேற்ற இயலாது.
இந்திய தொழிலாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி, அவர்களுக்கான அமைப்புகளுடன் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப நாட்களிலேயே துவங்கிற்று. கடந்த 110 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுக்குள்ளேயே, இந்தியத் தொழிலாளி வர்க்கம் அரசியல் முதிர்ச்சி அடைந்து விட்டது என மாமேதை லெனின் பாராட்டியதும், வரலாற்று ஏடுகளில் பதிவாகியுள்ளன. இருப்பினும், ஆதிக்கம் செலுத்தும் முதலாளிவர்க்க நிலப்பிரபுத்துவ கருத்துக்களால் திசை திருப்பப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் நிலையிலிருந்து மாற்றம் காண்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுத்துவதே தொழிலாளி வர்க்க முன்னணியினரின் கடமையாகும்.
இந்தியா சுதந்திரமடைந்த காலகட்டம், ஏகாதிபத்தியங்கள் வீழ்ச்சியடைந்த காலமாக இருந்தது. சோசலிச நாடுகள், குறிப்பாக சோவியத் யூனியன், செயல்படுத்திக் காட்டிய புதிய சமூக அமைப்பு, உலகளாவிய ஈர்ப்பு சக்திகொண்டதாக இருந்தது. முதலாளித்துவ ஆட்சியாளர்கள் கூட சேமநல அரசு என தம்பட்டமடித்து மக்களை திசைதிருப்ப வேண்டிய சூழல் அது. முதலாளித்துவத்தின் அடிப்படை குணாம்சங்களான லாபவெறி, சுயநலம், பெருகிவரும் வேலையின்மை போன்றவற்றுக்கெல்லாம் மாற்றான ஒரு சமூக அமைப்பு – சுரண்டலற்றதும் பொதுநலனில் அக்கறைகொண்டதுமான ஒரு சமூக அமைப்பு – சாத்தியமானது என சாதாரணத் தொழிலாளி கூட பொதுவாக உணர முடிந்த காலகட்டம் அது. அந்தப் புரிதலை உள்வாங்கி, சமூகமாற்றத்திற்காக போராடும் சக்திகள் நம்பிக்கையோடு முன்னேறும் சூழல் அன்று இருந்தது. அத்தகைய சூழலிலும், புரட்சிகரமான சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் பல்வேறு விதமான தடைகளும், அச்சுறுத்தல்களும், அடக்குமுறைகளும் மேலோங்கியே இருந்தன.
இன்று சோவியத் யூனியன் சிதறுண்டு, சோசலிசக் கருத்துக்கள் பின்னடைவை சந்தித்து வரும் காலம். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகளாவிய முறையில் நிதிமூலதனம் அதன் வெறித்தனமான தாக்குதலை நடத்திவரும் காலம். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் இன்று அவர்களது தத்துவார்த்த நிலைகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில், தங்களது இந்த ஆதிக்கத்தை முன்னெடுத்து செல்ல, அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார அரங்குகளில் பெரும் பிரச்சாரத்தை அவை கட்டவிழ்த்துவிட்டுள்ள காலமிது. இந்த சூழலில், இந்திய உழைப்பாளி மக்களும் இந்தப் பிரசாரப் புயலின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.
ஆனால் இந்திய உழைப்பாளி மக்களின் மிகப் பெரும்பான்மையானவர்கள் இன்றளவும், தங்களது பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக போராடும் அமைப்புகளில் கூட திரட்டப்படவில்லை. சங்க ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளிகளில் கூட மிகப்பெரும்பான்மையினர் இப்போது முதலாளித்துவ கருத்தாளர்களாலேயே திரட்டப்பட்டுள்ளனர்; வழிநடத்தப்படுகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் இந்திய தொழிற்சங்க இயக்கம் ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி நாடுதழுவிய வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. அந்த இயக்கங்களின், போராட்டங்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிக் கூடாதுதான். ஆனால், இந்த போராட்டங்கள் எந்த அளவிற்கு உணர்வுநிலையில் மாறுதலை உழைப்பாளி மக்களிடையே உருவாக்கியுள்ளது என்பதை ஆராய்ந்தால் நமது தொழிற்சங்க இயக்கத்தின் அடிப்படையான பலவீனத்தை நம்மால்உணரமுடியும். எந்தக் கொள்கைக்கு எதிராக போராடுகிறோம் என்பதை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முழுமையாக உணரவைப்பதில் நாம் வெற்றி பெறவில்லை. இன்றும் சொல்லப்போனால் ஆட்சியாளர்களின் கொள்கைகளின் விளைவுக்களுக்கு எதிராக உருவாகும் கோபத்தை கொள்கைகளுக்கு எதிரான கோபமாக மாற்றுவதில் நாம் இன்னமும் மிகவும் பின்தங்கியே உள்ளோம்.
பிரச்சனைகளை கொள்கைகளோடும் அந்தக் கொள்கைகளை ஆளும் வர்க்கத்தின் அரசியல் நிலைபாடுகளோடும் இணைத்து பார்க்க இயலாத நிலைதான் இன்று உள்ளது. இதன் பிரதிபலிப்புகளின் ஒரு பகுதிதான் “ஆளை மாற்றிப் பார்ப்பது” என்ற நிலை தொடருவதற்கான காரணம். மாற்றுக்கொள்கைகளுக்கான போராட்டமாக, நமது போராட்டங்களை மாற்றுவதுஎன்கிற கடுமையான அரசியல் பணியில் நாம் பின்தங்கியே உள்ளோம். இன்னும் சொல்லப்போனால், அதன் ஆரம்பநிலையில்தான் உள்ளோம். மிகப் பரவலாக நடைபெறும் பொருளாதாரப் போராட்டங்களிலேயே இந்த நிலை என்று நாம் சொல்லும்போது, பொருளாதாரக் கொள்கைகளிலும் கூட ஆளும் வர்க்க கருத்துக்கள்தான் உழைப்பாளி மக்களிடையே ஆதிக்கம் செலுத்துகிறது என்பதே அதன் பொருளாகும்.
சமூகம் சார்ந்த இதர பிரச்சினைகள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் வெளிபாடுகளான ஜாதீய ஒடுக்குமுறையும், ஆண் ஆதிக்க – பெண் அடிமைத்தன கருத்துக்களும் உழைப்பாளி மக்களிடையே இன்னமும் ஆழமாக வேரூன்றியே உள்ளன. மூடநம்பிக்கைகளும் கேடுகெட்ட பத்தாம்பசலித்தனமான பழக்க வழக்கங்களும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் முற்போக்கான கருத்துக்களை முன்னெடுத்து செல்வதில் பெரும் தடைகள் உள்ளன.
சமீபகாலமாக வலுப்பெற்று வரும் மதவாத கருத்துக்களையும், சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நிற்பதில் தொழிலாளி வர்க்கமும் இதர பகுதி உழைப்பாளி மக்களும் எந்த அளவிற்கு பங்காற்றியுள்ளனர் என்பதை சுயவிமர்சன ரீதியாக பார்க்கத் தவறக்கூடாது. சொல்லப்போனால், இன்றைய சூழலில், நாம் கடமை தவறியவர்களாக இருக்கிறோம். உலகளாவிய முறையில் வலதுசாரி கருத்துக்களும் பிற்போக்கு சிந்தனைகளும் ஓரளவு வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தியாவிலும் ஆளும் வர்க்கங்கள் மென்மேலும் வலதுசாரி, பிற்போக்கு நிலைபாடுகளை மேற்கொள்கின்றன. இந்திய அரசியலில் வலதுசாரி, மதவாதக் கருத்துக்களின் மேலாதிக்கமும், பெருமுதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடுகளின் அமலாக்கமும்உருவாக்கியுள்ள நெருக்கடிகள் ஆழமான பாதிப்புகளை ஏற்பத்தியுள்ளன. இவற்றை எதிர்கொள்ள இந்தியத் தொழிலாளிவர்க்கம் தனது அமைப்புகளில், செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைக் கண்டாக வேண்டும். மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று, நாம் வெற்றிபெற வேண்டுமானால் இன்று நாம் சென்றடைந்துள்ள மக்களிடையே கூட நமது கருத்துக்கள் முழுமையாக எட்டவில்லை என்பதை உணர்ந்துகொண்டு நமது செயல்முறைகளில், அமைப்புகளை இயக்கும் முறைகள் உட்பட, மாற்றம் காணவேண்டும்.
நமது அமைப்புகளிலே உள்ளவர்களில் கணிசமான பகுதியினர் பெயரளவிலேயே நம்மவர்களாக உள்ளனர். நம்முடன் இணைந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடுபவர்களில் மாற்று அமைப்புகளில் உள்ளவர்களும், எந்த அமைப்புகளிலும் இல்லாதவர்களும் உள்ளனர். இவர்களையெல்லாம் தொடர்ச்சியாக அணுகவும், மாற்றுக்கொள்கைக்காக ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் முடிந்தால்தான் இன்றைய சவால்களை நாம் எதிர்நோக்க இயலும்.
ஆளும் வர்க்க கருத்துக்கள், பத்தாம்பசலித்தனமானதும், பிற்போக்குத் தன்மை வாய்ந்ததும் மக்களின் அடிப்படை நலன்களுக்கு விரோதமானதுமாக உள்ள போதிலும், மிக நுட்பமானதும்நவீனமானதுமான தொழில்நுட்ப உதவியுடன் அவை மக்களுக்கானவை என்ற போர்வையில் எடுத்து செல்லப்படுகின்றன.
இந்த சூழலில்தான் சுதந்திரப் போராட்ட காலம் முதற்கொண்டு இந்திய தொழிலாளிவர்க்கமும் உழைப்பாளி மக்களும் ஆற்றியுள்ள பணிகளையும் தியாகங்களையும் முன்னிறுத்தி மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் அவசியத்தை, சமூகத்தில் அடிப்படைமாற்றம் காண்பதின் தேவையை, தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைப்பாளி மக்களிடையே கொண்டு செல்லும் ஸ்தாபன வலிமையை நாம் பெற்றாக வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைப்பதற்கும் அவர்களது ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் தடையாக உள்ளவற்றை அடையாளம் காணவும், அத்தகைய சக்திகளை அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தவும் வேண்டும். இந்த ஒன்றுபட்ட வலிமையை ஆதாரமாக்கி பிரம்மாண்டமான மக்கள் இயக்கங்களை, போராட்டங்களை முன்னெடுத்து செல்வது, வலதுசாரி ஆதிக்க நிலையை முறியடிப்பதற்கு மிக அவசியம். எதிரிகளை அடையாளம் காணவும் தோழமை சக்திகளுடன் இணைந்து நிற்கவும் வர்க்க முன்னணியினர் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கான தத்துவார்த்தப் பயிற்சியின்மை, தற்போதைய பிரதான பிரச்சினையாக உள்ளது.
மாபெரும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு விழாக்களும், இந்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான பணிகளுக்கான காலமாக மாற்ற வேண்டும். இது இன்றைய சவால்களை சந்திப்பதற்கான தயாரிப்பு பணிகளின் துவக்கமாக அமைய வேண்டும்.