(மே 1, தொழிலாளர்கள் தினத்தின் பின்னணியாக அமைந்தது சிகாகோ தொழிலாளர் போராட்டம். ஹே மார்கெட் சதி வழக்கு புனையப்பட்டு, அவர்களை தூக்கிலேயேற்றியது ஆளும் வர்க்கம். அந்தத் தியாகிகளின் கடைசி நாட்களை வர்ணிக்கிறது இந்தக் கட்டுரை. – ஆசிரியர் குழு)
சுகுமால் சென்
தமிழில்: இரா. சிசுபாலன்
ஹே மார்க்கெட் சம்பவத்தில் புரட்சியாளர் கள் கைது செய்யப்பட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற வழக்கில், அவர்களுக்கெதிராகக் குற்றச் சாட்டை ஜோடித்த சிகாகோ நகரக்காவல் துறைக்கு தலைவராக இருந்தவர் மைக்கேல் ஷாக், இவ்விஷயத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை அவர் முன்நின்று செயல்பட்டார். அந்த மகத்தான தியாகிகளின் இறுதி நாட்களை நேரில் கண்ட சாட்சியமாக அவர் விளங்கினார்.
பின்னாளில் ‘அராஜகமும், அராஜகவாதி களும்’ என்ற தலைப்பில் பெரும்நூல் ஒன்றை ஷாக் எழுதினார். அதில் ஹே மார்க்கெட் சம்பவம், அதன் அரசியல் பின்னணி, எட்டு மணிநேர வேலைக்காக 1886 மே 1ம் தேதி நடைபெற்ற பொது வேலை நிறுத்தம், மே 4ம் தேதி ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வுகள், புரட்சியா ளர்கள் கைது, விசாரணைகள், வழக்குகளை ஜோடித்தது, வழக்கு நடைபெற்ற விதம், மரண தண்டனை, இறுதியில் தியாகிகளைத் தூக்கி லிட்டது வரை அனைத்தையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார். புரட்சியாளர்களுக்கு எதிரான இயல்பான காழ்ப்புணர்ச்சியுடன், காவல்துறை அதிகாரி என்ற தோரணையில் உண்மையில் அன்றைய அமெரிக்க ஆளும் வர்க்கக் கண் ணோட்டத்தில் இவற்றை அவர் பதிவு செய் துள்ளார். 1889ம் ஆண்டு சிகாகோவில் இந்நூல் வெளியிடப்பட்டது.
தமது வர்க்க எதிரிகளான, புரட்சியாளர்களின் வீரம், துணிவு, பற்றுறுதி ஆகிய பண்புகளை ஷாக்கினாலும் மூடி மறைக்க இயலவில்லை. தூக்குமேடையில் நின்ற புரட்சியாளர்களின் நடத்தையை நேரடி சாட்சியமாக நின்று அவர் வருணித்துள்ளார். அவரது வருணனைகளிலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டுவது பொருத்தமாக அமையும். அவை தியாகம் புரிந்த மாவீரர்களின் தீரம், மன உறுதி, சித்தாந்தப் பிடிமானம் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
முதலாளித்துவ அமைப்பைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினர்
வழக்கு விசாரணையின் முடிவில் எட்டு தொழிலாளர்களையும் கொலைக் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, ஏழு பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு பதினைந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித் தார். அதைத் தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து பிரதி வாதிகள் அளித்த முறையீட்டை நீதிபதி தள்ளு படி செய்தார். ‘உங்களுக்கு ஏன் மரணதண்டனை விதிக்கக்கூடாது என்பதைப்பற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா?’ என நீதிபதி, ஆகஸ்ட் ஸ்பைசிடம் கேட்டார்.
ஷாக் எழுதுகிறார்: ‘வெளிறிய கன்னங்களுடனும், வீங்கிய கண்களுடனும் விளங்கிய அந்தக் கைதி எழுந்துநின்று’ நீதிபதியை நோக்கித் தடுமாறி அடியெடுத்து வைத்தார். தனக்கு ஏன் மரண தண்டனை அளிக்கப்படக் கூடாது என்பதற் கான காரணங்களை நீதிமன்றத்தில் அடுக்கத் தொடங்கியவுடன் அவரிடமிருந்த தயக்கம் விலகி, உற்சாகம் பீறிட்டது. மிகவும் தெளிவாகக் குற்றம் காட்டும் தொனியில், தொழிலாளி வர்க் கத்தின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் ஏற்றுக்கொள்ளத்தயார் என முழங்கினார். தனது முதல் வார்த்தை யிலேயே அதனைத் தெளிவாக முன்வைத்தார். ‘நீதிமன்றத்தில் வாதிடுகையில்’ ‘ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக நின்று எதிரி வர்க்கத்தின் பிரதி நிதியான உங்களிடம் பேச விழைகிறேன்’ என்றார். பிறகு தன் மீதான தீர்ப்பு குறித்துப் பேசுகையில், குண்டு வீச்சுக்கும், தனக் கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்றும், அதற் கான நிரூபணம் ஏதுமில்லை எனவும் வாதிட்டார்.
தன் மீதான குற்றச்சாட்டை நிறுவ எத்தகைய ஆதாரமும் இல்லை எனக்குறிப்பிட்ட அவர், ‘தனக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள தண்டனை திட்டமிட்ட, வன்மம் நிறைந்த, வெளிப்படை யான படுகொலையே அன்றி வேறென்ன. சமய அரசியல் கொடுமைகளைப் போல வரலாற்றில் இது தவறாக இழைக்கப்பட்ட படுகொலை யாகவே பதிவு செய்யப்படும்’ என்றார். தண்டனை வழங்க வேண்டுமென்ற உள்நோக்கத்துடனேயே பொய் சாட்சியங்களை உருவாக்கியதாக அரசுப் பிரதிநிதிகள் மீது அவர் குற்றம் சுமத்தினார்.
கம்பீரமான குரலில் பேசிய அவர் ‘இவ்வழக்கு மக்களின் பெயரால் நடைபெற்ற போக்கிரித்த மான செயல்’ எனக்குறிப்பிட்டார். துணிவுடன் உண்மையைப் பேசியதே நாங்கள் செய்த ஒரே குற்றம். திட்டமிட்டு எட்டு பேரைப் படுகொலை செய்யும் இப்படுபாதகச் செயல் துயருற்ற இலட்சோபலட்சம் மக்களின் கண்களை நிச்சயம் திறக்கச்செய்யும், அவர்களை விழிப்படைய வைக் கும். எங்கள் மீதான தண்டனை ஏற்கெனவே இத்தகைய திசை வழியில் பல அற்புதங்களை நிகழ்த்தத்தொடங்கி விட்டது. எங்கள் உயிரைக் காவு கேட்கும் ‘தெய்வ பக்தி’ மிக்க கிறிஸ்தவர் கள் தமது பத்திரிகைகளின் வாயிலாக இவ்வழக் கின் அடிப்படையான உண்மையை மூடி மறைக்க எத்தனிக்கின்றனர். எங்களை ‘அராஜகவாதிகளாக’ முத்திரை குத்தி, புதிதாகக் கண்டறியப்பட்ட ஒரு வகையான பிணம் தின்னும் கழுகுகளாக உலகுக் குக் காட்டுகிறார்கள். இருண்ட கதிகள் குறித்த அதிர்ச்சியூட்டும், பயங்கரப் புனைவுகளைக் கட்ட விழ்த்து விடுகிறார்கள் இந்தச் “சிறந்த” கிறிஸ்த வர்களே உழைக்கும் மக்களிடமிருந்து உண்மை களை மறைத்துள்ளனர்.
எரிமலையை தடுக்க முடியாது
‘மே 4ம் தேதி மாலை அமைதியாகக் கூடியிருந்த மக்கள் மீது ஆயுதம் தாங்கிய இருநூறு பேர் கொடூரமான நபர் ஒருவரின் தலைமையில் வாக்குரிமை யும் அற்ற’ இலட்சோபலட்சம் மக்களின் நலனுக்காகக் குரல்கொடுத்ததுதான் தாம் செய்த ஒரே குற்றம் என ஸ்பைஸ் ஆவேசமாகக் குறிப்பிட்டார். எங்களைத் தூக்கிலிடுவதன் மூலம் தொழி லாளர் இயக்கத்தை ஒழித்துக் கட்டி விடாலாம் என நீங்கள் கனவு கண்டால்…தாராளமாக நீங்கள் அக்காரியத்தில் இறங்கலாம்! ‘இது ஒரு எரிமலை, இதனை உங்களால் தடுத்து நிறுத்த இயலாது’ என முழக்கமிட்ட கண்ணியமும், உறுதியும் மிக்க ஸ்பைஸ் பின்வருமாறு தனது வார்த்தைகளை நிறைவு செய்தார்: ‘தற்பொழுது இவைதான் என்னுடைய கருத்துக்கள். இவை என்னுள் ஒரு அங்கமாக உள்ளன. இவற்றிலிருந்து என்னால் ஒதுங்கிச் செல்ல இயலாது, அதை நான் விரும்ப வில்லை. உண்மையைப் பேசுவதற்கு மரணம்தான் தண்டனை எனில், அதைப் பெருமையுடன் ஏற்றுக் கொள்ளத்தயார்! தூக்கு தண்டனையை நிறை வேற்றும் நபரை அழையுங் கள்! சாக்ரடீஸ், ஏசு கிறிஸ்து, கியார்னோ புருனோ, ஹஸ், கலிலியோ ஆகியோரது வழக்கு களில் சிலுவையில் அறையப் பட்ட உண்மை இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் களைப் போன்ற எண்ணற்றோர் எங்களுக்கு இப்பாதையைக் காட்டியிருக்கிறார்கள். அவர் களைப் பின்பற்ற நாங்கள் தயார்!’ என்றார்.
சுதந்திரச் சிந்தனையின் மீதான தாக்குதல்
அடுத்துப் பேச வந்த மைக்கேல் ஸ்வாப், ‘சோம் பேறித்தனமும், போலித்தனமும் நீதிபரிபாலனம் செய்கின்றன’ எனக்கேலியாகக் குறிப்பிட்டார். தொழிலாளர்களின் நிலையைப்பற்றிக் குறிப் பிட்ட அவர் ‘அவர்களது வாழ்க்கைக்கு, இயந் திரங்கள் உறுதுணையாக இருப்பதற்கு பதிலாக நிலைமைகளின் கீழ் அவர்களுக்கே சாபமாக மாறியுள்ளன. இயந்திரங்கள் திறனற்றத் தொழி லாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி யுள்ளன, நிலத்தையும்., இயந்திரங்களையும் வைத் திருப்போரைத் தொழிலாளர்களின் பெரிதும் சார்ந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளன. சேசலிசமும், கம்யூனிசமும் இந்நாட்டில் வேர் பிடித்திடித்திருப்பதற்கு அதுவும் காரணம்….‘ என்றார்.
தூக்கிலிடாதற்காக வருந்துகிறேன்
பிற தோழர்களோடு தனக்கும் மரணதண்டனை விதிக்கப்படாததற்காக ஆதங்கப்பட்டார் ஆஸ்கர் நூபே. ‘மற்றவர்களோடு சேர்த்து என்னைத் தூக் கிலிடாததற்காக நான் வருந்துகிறேன் யுவர் ஆனர்’ என நீதிபதியிடம் முறையிட்டார்.
‘நியாயத்துக்காகக் குரல் கொடுத்தோர் தண்டிக் கப்பட்டுள்ளனர். அவர்களது நியாயம் வெல்லும் காலம் விரைவில் வரும். ‘மரியாதைக்குரிய‘ பன்னி ரெண்டு பேருக்கு அநீதியான, காட்டுமிராண்டித் தனமானதீர்ப்பை வழங்கியதன் மூலம் நீதிமன்றம், எதிர்காலத்தில் அராஜகவாதத்தை பெருமள வுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்தீர்ப்பு இந்நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை, சுதந்தரச் சிந்தனைக்கான உரிமையின் மீது தொடுக்கப் பட்ட கொடூரத்தாக்குதலாகும். மக்கள் இதனை நன்கு உணருவார்கள்‘ என அடால்ப் பிஷர் ஆவேச மாகக் குறிப்பிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இளையவரான லூயிஸ்லிங்க் கடும் வெறுப்புடனும், கோபா வேசத்துடனும் காணப்பட்டார். ‘நான் வெளிப்படை யாக உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்‘ நான் பலப்பிரயோகத்தின் சார்பில் நிற்கிறேன். ‘எங்களுக்கு எதிராக பீரங்கியைத் திருப்பினால், நாங்கள் உங்களுக்கு எதிராக வெடி குண்டாக மாறுவோம்‘ என எச்சரிக்கிறேன். நான் திரும்பவும் கூறுகிறேன் எனது கடைசி முச்சு உள்ளவரைஎன்னுடைய எல்லாவித ஆற்றலை யும் கொண்டு இதனை நான் எதிர்கொள்வேன். தூக்குமேடையை நான் மகிழ்வுடன் ஏற்பேன் என உறுதியளிக்கிறேன். இந்த நம்பிக்கையில் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் உங்களை வெறுக்கிறேன். உங்களது ஆணையை, உங்களது சட்டங் களை, உங்களது ஆட்சியதிகாரத்தை வெறுக்கிறேன் அதற்காக என்னைத் தூக்கிலிடுங்கள்!’
‘மரண தண்டனைக்கு எதிராக ஏதாவது கருத்துக்கூற விரும்புகிறீர்களா என ஜார்ஜ் ஏஞ் சலிடம் நீதிமன்றம் வினவியபொழுது அதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளாதவராக அவர் காணப்பட்டார்’ என ஷாக் எழுதுகிறார். ‘சர்வதேச உழைக்கும் மக்கள் சங்கம் தொடங்கப்பட்ட வுடன்அதில் நான் இணைந்தேன். வரலாற்றில் நடைபெற்ற அனைத்து முன்னேற்றங்ளும் பலப் பிரயோகத்தின் மூலமாக மட்டுமே சாதிக்கப் பட்டதைப்போல’ முதலாளித்துவக் கொடுங் கோன்மையிலிருந்து பலப்பிரயோகத்தின் மூலமே தொழிலாளர்கள் தம்மை விடுதலை செய்து கொள்ள முடியும் என்பதில் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் உறுதிபூண்டுள்ளனர்’ என்றார் ஏஞ்சல்.
பின்னர் அமெரிக்க அரசாங்கத்தின் சட்டங்கள் பற்றிப் பேசிய அவர், ‘தொழிலாளர் களைப் புறம்தள்ளி ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே உரிமைகளை வழங்கும் அரசாங்கத்தின் மீது எவ்வாறு மரியாதை செலுத்த இயலும்?’ நிலக் கரிச் சுரங்க முதலாளி கள் அதில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த குறைவான ஊதியத்தையும் மேலும் குறைந்த அதேசமயம், நிலக்கரியின் விலையை உயர்த்தும் சதியில் ஈடுபட்டதைச் சமீபத்தில் கண்டோம். அச்சதியில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டதா? மாறாக, தொழி லாளர்கள் தமது ஊதியத்தை அதிகரிக்க வேண்டு மெனக்குரல் எழுப்பியதற்காக காவல் துறையை ஏவி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. இத்தகைய அரசாங்கத்தின் மீது என்னால் எவ்வித மரியாதை யும் செலுத்த இயலாது.
(தொடரும்)