மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நவீன தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்


தமிழில் : இளங்கோவன்

புகழ்பெற்ற மார்க்சிய அறிஞரும் நவீன ஊடக சித்தாந்தியுமான கிறிஸ்டியன் ஃபக்ஸ்  தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல் என்றதொரு புத்தகத்தை எழுதியுள்ளார்.  வெஸ்ட்மினிஸ்டர் கம்யூனிகேஷன் அண்ட் மீடியா ரிஸர்ச் இன்ஸ்டியூட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், இயக்குனராகவும் இருந்து வரும்  கிறிஸ்டியன் ஃபக்ஸ் எழுதிய புத்தகத்தின் அறிமுகப் பகுதியை இங்கே தருகிறோம்.  அந்த புத்தகம் மூலதனம் முதல் பாகத்தின் மீதான ஓர் ஊடக, செய்தித் தொடர்பு ஆய்வுகளின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது.  மூலதனத்தில் மார்க்சின் அச்சாணி கருத்துக்களை ஃபக்ஸ் இந்த  புத்தகத்தில்  ஊடக, செய்தித் தொடர்பு கண்ணோட்டத்தில்,  இன்றைய இணையம், டிஜிட்டல் உழைப்பு, சமூக ஊடகம், ஊடக தொழில் துறை, டிஜிட்டல் வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.  இன்றைய அன்றாட சர்வதேச உதாரணங்களுடன் மார்க்ஸ் மற்றும் மார்க்சின் படைப்புகளின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை  அவர் வலியுறுத்துகிறார். உலக முதலாளித்துவத்தில் அமேசான், கூகுள், முகநூல் முதலிய பன்னாட்டு ஊடக வர்த்தக நிறுவனங்கள்  அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மார்க்சின் படைப்புகளின் தொடர்ச்சியான  முக்கியத்துவத்தை அவர் தனது புத்தகத்தில் வலியுறுத்துகிறார். அவர் தனது புத்தகத்தில் கொடுத்துள்ள அறிமுகப் பகுதியை இங்கே தமிழில் தருகிறோம்.

அறிமுகம்

தகவல் யுகத்தில் மார்க்சை வாசித்தல்:

மூலதனம் முதல் பாகத்தின் மீது ஊடக, தகவல் தொடர்பு ஆய்வுகளின் அடிப்படையிலான ஒரு கண்ணோட்டம்

  1. மார்க்சை நான் ஏன் வாசிக்க வேண்டும்?

மார்க்சை நான் ஏன் வாசிக்க வேண்டும்?  அதைவிட நான் முகநூலில் நுழைந்து மகிழலாமே!  என்று இந்த புத்தகத்தை படிப்பவர் கேட்கலாம்.  மூலதனம் முதல் பாகத்தை நான் ஏன் வாசிக்க வேண்டும்?  அதுவும் தகவல் தொடர்பு விசயத்தில் அதன் பயன் என்ன? மார்க்ஸ் மூலதனத்தை மடிக்கணினியிலா எழுதினார்?  என மேலும் கேள்விகளை எழுப்பலாம்.  அவருக்கு இணைய இதழோ (Blog) முகநூலோ கிடையாது.  ட்விட்டரும் கிடையாது.  அத்தகைய ஊடகங்கள் நமது இன்றைய வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளன.  நாம் நமது வேலையிலும், அரசியலிலும், அன்றாட வாழ்விலும் இவற்றை பயன்படுத்துகிறோம்.  அவர்களில் பெரும்பாலோர்   தாங்கள் லாப நோக்குள்ள வர்த்தக நிறுவனங்களால் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதைத்தான் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மார்க்ஸ் “மூலதனச் சேர்க்கை” என்று பெயரிட்டதன் வெளிப்பாடுதான் அவை.  அதே நேரத்தில் அவை நமக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளவதையும், சமூக உறவைப் பேணுவதையும்  சாத்தியமாக்குகின்றன.  தகவல், செய்தித் தொடர்பு, சமூக வாழ்வு ஆகியவை அவற்றின் “பயன் மதிப்பு” ஆகும்.  எப்படி பொருள்கள் மனிதத் தேவையை திருப்தி செய்கின்றன என்பதை விவரிக்க மார்க்ஸ் பயன்படுத்தும் சொற்றொடர்தான் இந்த பயன் மதிப்பு.

செய்தித் தொடர்பு வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் லாப நோக்கம் கொண்டவர்கள் என்பதை எப்போதும் முகத்தோற்றத்தில் காட்டுவதில்லை.   அவற்றின் பயன் மதிப்பையே முன்னிலைப்படுத்துகின்றன. முகநூலையே எடுத்துக் கொள்வோம்.  அது சொல்வதென்ன?  “உங்கள் வாழ்வில் மற்றவர்களுடன் இணைந்திடவும், பகிர்ந்து கொள்ளவும் இது உதவுகிறது”.  ட்விட்டர் “உங்கள் நண்பர்களுடனும், இதர கவர்ச்சிக்குரியவர்களுடனும் இணைந்திட அனுமதிக்கிறது” என்று வாதிடுகிறது.  இப்படி அவர்கள் உரிமை கொண்டாடுவது உண்மையற்றது என்று கூறிவிட முடியாது. ஆனால் அவை கதையின் ஒரு பக்கம்தான்.  மார்க்ஸ் சொல்வதைப் போன்று அவை மிகைப்படுத்தப்பட்ட தத்துவங்கள் ஆகும். அல்லது அவர் சொல்வது போல செய்தி தொடர்பு வர்த்தக நிறுவனங்கள்  பரிவர்த்தனை மதிப்பிலிருந்தும், பெரும் செல்வம் கொழிக்கவே  கிளம்பி இருக்கிறார்கள் என்ற உண்மையிலிருந்தும்,   நமது கவனத்தை திசை திருப்புவதற்காகவே அவர்கள் பயன் மதிப்புக்கு “மாந்திரீக சக்தியை கற்பிதம்” செய்கிறார்கள்.  மார்க்ஸ் மேலும் கவனத்துக்குரியவராக இருக்கிறார்.  ஏனென்றால் நாம் முதலாளித்துவ செய்தித் தொடர்பு உலகில் வாழ்கிறோம்.  செய்தித் தொடர்பின் பல வடிவங்கள் தத்துவங்களை பரப்புகின்றன.  அவை லாபத்துக்கானது போன்ற  வர்த்தகங்களாக ஒன்றிணைந்துள்ளன.

இன்றைய முதலாளித்துவம் என்பது மார்க்ஸ் வாழ்ந்த 19-ம் நூற்றாண்டு முதலாளித்துவம் போன்றதல்ல.  சற்றே வித்தியாசமானது.  அது உலக மயமாகி உள்ளது.  நிதி, தொழில் நுட்பம், போக்குவரத்து, நுகர்வோர் கலாச்சாரம், விளம்பரம் ஆகியவை பெரும்பங்கு வகிப்பது போன்ற பல அம்சங்களில் அது வேறுபட்டது.  இருந்தாலும் இந்த அனைத்து நிகழ்வுகளின் அடித்தளங்களையும் மார்க்ஸ் ஏற்கனவே பார்த்திருந்தார்.  அவற்றின் எதிர்காலப் பொருத்தப்பாட்டை எதிர்பார்த்திருந்தார்.  சமூகம் வரலாற்று பூர்வமானது என்பதை அவர் வலியுறுத்தினார்.  முதலாளித்துவம் வளர்கிறது.  புதிய குணாம்சங்களை கைக்கொள்கிறது.  சிலவற்றை தொடராமல் விடுகிறது.  அதன் அடிநாதமான அடித்தளக் கட்டமைப்பான “மூலதனச் சேர்க்கை” என்ற கட்டமைப்பை புனர் நிர்மாணம் செய்வதற்காக இவற்றை செய்கிறது.

மார்க்ஸ் பண்பாட்டியல், அரசியல் ஆகியவை குறித்தும் கவனம் செலுத்தினார்.  சாத்தியமான சிறந்த உலகில் நாம் வாழவில்லை என்பதால் முதலாளித்துவத்திற்கு மாற்று நமக்கு தேவை என்பதில் மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார்.  எனவே தற்கால முதலாளித்துவ ஊடகத்தின் சமூக கோணத்தை அவர் வரவேற்பார்.  ஆனால் அதன் முதலாளித்துவ உள்நோக்கத்திலிருந்தும் பயன்பாட்டிலிருந்தும்  மாற்றி அதனை வெற்றி கொள்ள வேண்டும் என்று வாதிடுவார்.  அத்தகைய மாறுபட்ட உலகை படைப்பதற்கான போராட்டங்களையும் அவர் ஆதரித்திருப்பார்.  எனவே தற்கால செய்தித் தொடர்புகள் பற்றி சொல்வதற்கு மார்க்ஸ் ஏராளமான வகையில் நமக்கு பொருந்தி வருகிறார்.  மடிக்கணினிகள், கைபேசிகள், ட்விட்டர், முகநூல் போன்றவற்றை புரிந்து கொள்ள நாம்  மார்க்சுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது.  தகவல் மற்றும் இணைய யுகத்தை விமர்சன பூர்வமாக புரிந்து கொள்ள அவரது சிந்தனை இன்றியமையாதது ஆகும். எனவே மார்க்சும் முகநூலும் எதிரெதிரானவை அல்ல.  முகநூலை மார்க்ஸ் இன்றி உங்களால் புரிந்து கொள்ள முடியாது.  முகநூலின் மீதான மார்க்சின் விமர்சன பூர்வமான கண்ணோட்டத்தை நமக்கு தருகிறது.  அப்படி புரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் ஒரு தோழனாக  விளங்கும்.  ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு கண்ணோட்டத்தில் மூலதனம் முதல் பாகத்தை எப்படி வாசிப்பது என்பதற்கு இது படிப்படியான வழிகாட்டியாகும்.

ஊடக, செய்தித் தொடர்புகள் கண்ணோட்டத்தில் மூலதனத்தை ஏன் வாசிக்க வேண்டும்?

1867ல் மூலதனம் முதல் பாகத்தின் முதல் பதிப்பு வெளியானதிலிருந்து அதற்கு பல அறிமுக நூல்கள் எழுதப்பட்டுள்ளன.  மிகவும் பரந்து பட்டவர்களால் வாசிக்கப்பட்ட மார்க்சின் நூல் பற்றிய  அறிமுகம் எப்படி சாத்தியமானது என்பதும், உதவிகரமானது என்பதும், ஒவ்வொருவரின் சொந்த முடிவுக்குரியது.  உங்கள் கையில் உள்ள இந்த புத்தகம் சற்றே வேறுபட்ட நோக்கம் கொண்டது.  இது இன்னொரு பொது அறிமுகமோ அல்லது துணை நிற்கும் வழிகாட்டியோ அல்ல.

முதலாளித்துவத்தில் ஊடகம், தகவல் தொடர்பு, செய்தித் தொடர்பு, கணினி, இணையம் ஆகியவற்றின் பங்கு குறித்து மார்க்சின் மூலதனம் முதல் பாகத்தை வாசிப்பவரிடையே கேள்விகள் எழுப்பிட உதவி செய்வதே இதன் பணியாகும்.  ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பில் அக்கறை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் மூலதனம் முதல் பாகத்திற்கு ஒரு அறிமுகம் தருவதோடு, அதற்கு துணை நிற்கும் வழிகாட்டியாகவும் உள்ளது.  ஊடகம், தகவல் தொடர்பு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் அரசியல் பொருளாதார விமரிசனத்திற்கான அடிப்படைகளுக்கு இது ஒரு பங்களிப்பாகும்.

அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தின் தேவை என்ன?  ஏன் ஒருவர் ஊடகம், செய்தித் தொடர்பை மையப்படுத்தி அதன் கண்ணோட்டத்தில் மார்க்சின் மூலதனத்தை வாசிக்க வேண்டும்? தகவல் தொடர்பு, அறிவு அல்லது வலைப்பின்னல் போன்ற பொருளாதாரத்திலும் சமூகத்திலும் நாம் வாழ்கிறோம் என்பவர்கள் மெய்யென வாதிடுவது பெரும்பாலும் மிகைப்படுத்த்ப்பட்ட கூற்றாகும்.    நாம் வாழும் பொருளாதாரமும் சமூகமும் முற்றிலும் புதியது. அதற்கும் மார்க்ஸ் பகுத்தாய்ந்த 19வது நூற்றாண்டு முதலாளித்துவத்துக்கும் பொதுவான அம்சங்கள் எதுவும் இல்லை என்ற கருத்தை அவர்கள்முன் வைக்கிறார்கள்.  இத்தகைய வலியுறுத்தல்கள் பெரும்பாலும்  முதலாளித்துவத்தில் புதிய தொழில் நுட்பங்கள் ஒவ்வொருக்குமான மாபெரும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதோடு முதலாளித்துவ உற்பத்தி முறை, ஜனநாயகம், செல்வம், சுதந்திரம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான உள்ளார்ந்த ஆற்றல்களை கொண்டுள்ளது என்றும் பரப்புவதற்கும் தான் சேவை செய்கிறது.  ஆனால் முதலாளித்துவ வரலாறு என்பது யுத்தங்கள், அசமத்துவம், ஆதிக்கம் (Hegemony), நெருக்கடி ஆகியவற்றின் வரலாறாகும். முதலாளித்துவ யதார்த்தம் முற்போக்கு கருத்துக்களை கீழறுக்கிறது. கேள்விகளுக்கு உட்படுத்துகிறது.  தகவல் சமூக பெருமைப் பேச்சு ஒரு பட்சமானது.  விமர்சன பூர்வமற்றது.  அதை சந்தேகிக்க வேண்டும்.

முதலாளித்துவத்தில் தகவல் தொடர்பு, ஊடகம், செய்தித் தொடர்பு ஆகியவற்றின்  பங்கை சிறுமைப்படுத்துவதும் உதாசீனப்படுத்துவதும் இருந்து வருகிறது.  இது தகவல் சமூக பெருமைப் பேச்சுக்கு தவறான எதிர்வினையாகும்.  உலகில் உள்ள மிகப் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபங்கள், வரவுகள், மூலதனச் சொத்துக்கள், பங்குச் சந்தை மதிப்புகள் ஆகிய புள்ளி விபரங்களை நோக்கினால் அவற்றில் ஒரு சில நிறுவனங்கள்தான் கீழ்க்கண்ட பொருளாதார துறைகளிலும் பிரிவுகளிலும் உள்ளதைக் காண முடியும்.

விளம்பரம், ஒலிபரப்பு, கேபிள், செய்தித் தொடர்பு சாதனங்கள், கணினி வன்பொருள், கலாச்சாரம், பொழுது போக்கு, ஓய்வு நேரம்,  கணினி சேவைகள், கணினி சேமிப்புக் கருவிகள், மின்னணு இணைய மேடைகள், புத்தகம் அச்சிடல், வெளியிடுதல், செமி கண்டக்டர், மென்பொருள், தொலைத் தொடர்பு.  தகவல் பொருளாதாரம் ஆகியவை முதலாளித்துவத்தின் ஆதிக்கம் செலுத்தும் பிரிவாக இல்லாமல் இருக்கலாம்.  என்றாலும் அது மற்ற முதலாளித்துவ தொழில்களைப் போலவே முதலாளித்துவத்தை புரிந்து கொள்ள முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நிதி முதலாளித்துவம், ஏகாதிபத்திய முதலாளித்துவம். நெருக்கடி முதலாளித்துவம், அதீத தொழில் முதலாளித்துவம் (புதை எரிபொருள் தொழில், ஓரிடத்தில் ஸ்திரமாக இல்லாது பல்வேறிடங்களுக்கு  நகரும் தொழில் ஆகியவற்றின் முக்கியத்துவம்) முதலியவை போலவே தற்கால முதலாளித்துவம் என்பது தகவல் முதலாளித்துவமாகும்.

முதலாளித்துவம் என்பது பல பரிமாணங்கள் கொண்ட பொருளாதார சமூக அமைப்பாகும்.  தகவல் என்பது அதன் பல பரிமாணங்களில் ஒன்றுதான்.  தகவல் முதலாளித்துவத்தில் தகவலின் பங்கும் முரண்பாடுகளும்  பற்றிய  ஆய்வு என்பது சமூகத்தின் விமர்சன கண்ணோட்டத்தின் ஒரு முக்கிய  பணியும் பரிமாணமுமாகும்.

ஊடகம், செய்தித் தொடர்பு ஆகியவற்றின் அரசியல் பொருளாதார விமர்சனம்

ஊடகம், செய்தித் தொடர்பு ஆகியவற்றின் ஆய்வுகளின் ஒரு துணைப் பிரிவுதான் அதன் அரசியல் பொருளாதார விமர்சன உரையும்.  இது குறிப்பிடத்தக்க வகையில் ஆய்விலும் அது சார்ந்த துறைகளிலும்  அடித்தளக் கட்டுமானம் உருவாகிட  காரணமாகியுள்ளது.

உதாரணமாக

@அறிமுக பாட புத்தகங்கள் (மோஸ்கோ 2009, ஹார்டி 2014)

@கற்றறிந்தவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கல்விசார்ந்த வலைப் பின்னல் அமைப்பு (சர்வதேச ஊடக, செய்தித் தொடர்பு ஆய்வு சங்கத்தின் அரசியல் பொருளாதார பிரிவு)

@கையேடுகள் (வாஸ்கோ, முர்டோக், சௌசா 2011)

@இதழ்கள் (triple C: Communication, Capitalism &Critique – http://www.triple-c.at; The Political Economy of Communication – http://www.polecom.org);

@அறிமுக பாடங்கள் (Mattel art and Sidgelaub 1979, 1983; Golding and Murdock 1997)

@ மிக முக்கியமாக, சிறந்த உலகு தேவை எனும் அரசியல் அக்கறை உள்ள,  முதலாளித்துவம், செய்தித் தொடர்பு பற்றி புரிந்து கொள்ளும் கல்வி அக்கறை உள்ள, ஒரு செயலூக்கமுள்ள அறிஞர்கள் சமூகம் உள்ளது.  அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.  அவர்களுடன் விவாதங்கள் செய்திருக்கிறேன்.  ஏராளமான விசயங்களை தெரிந்து கொண்டேன்.  அவர்களுக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.  ஊடக, செய்தித் தொடர்பு குறித்த அரசியல் பொருளாதார விமர்சனத்தை நிலை நிறுத்தவும் வளர்த்தெடுக்கவும் இந்த சமூகத்தின் முயற்சி முக்கியமானது.  ஆர்வமூட்டுவது.

கிரகாம் முர்டோக்,  பீட்டர் கோல்டிங் (1993)   ஆகிய இருவரும் “வெகுஜன செய்தித் தொடர்புகளின் அரசியல் பொருளாதாரத்திற்காக” என்ற கட்டுரையை வெளியிட்டார்கள்.  அதில் அவர்கள் செய்தித் தொடர்புகளின் அரசியல் பொருளாதார விமர்சனம் எனில் முதலாளித்துவத்தையும், செய்தித் தொடர்பையும் விமர்சன பூர்வமாக ஆய்வது என்பதே அதன் பொருள்  என்றார்கள். “வெகுஜன செய்தித் தொடர்புகளின் அரசியல் பொருளாதாரத்திற்கு கண்கூடான தொடக்கப் புள்ளி எது?   எல்லாவற்றுக்கும் முதன் முதலாக  சரக்குகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் தொழில் வர்த்தக நிறுவனங்கள், வெகுஜன ஊடகம் என்பதை அங்கீகரிப்பதுதான் அது.”  (முர்டோக் மற்றும் கோல்டிங் 1993 பக்கம் 206-207)

முர்டோக், கோல்டிங் ஆகிய இருவரைப் பொறுத்தமட்டில்  முதலாளித்துவத்தில் ஊடகம் என்பது சரக்கு மயமாக்குவதையும் தத்துவங்கள் பரப்புவதையும் ஊட்டி வளர்க்கும் இரட்டை வேடம் கொண்டதாகும்.  இந்த பகுப்பாய்வானது மூலதனம் முதல் பாகத்தில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்துக்கு முக்கியமானது என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டிய இரண்டு முக்கிய அம்சங்களோடு ஒத்துப் போகிறது.

(அ) சரக்குகளின் தர்க்கம்

முதலாளித்துவ உற்பத்தி முறை பிரதான உற்பத்தி முறையாக நிலவுகிற சமூகங்களின் செல்வமானது “சரக்குகளின் அளவிட முடியாத திரட்சியாக” தோன்றுகிறது.  தனிப்பட்ட சரக்கானது அதன் ஆதார வடிவமாக தோன்றுகிறது.  எனவே நமது விசாரணை சரக்கை பகுப்பாய்வதிலிருந்து தொடங்குகிறது. செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார விமர்சகனானவன்  எப்படி செய்தித் தொடர்புகளையும் முரண்பாடுகளையும், அதனுடன் தொடர்புடைய போராட்டங்களையும் சரக்கு வடிவம் வடிவமைக்கிறது என்பதைப் பற்றி கேள்விகள் எழுப்புகிறான்.

(ஆ) சரக்கின் மீது “மாந்திரீக சக்தி கற்பிதம் செய்தல்”

சரக்குகள் என்றும் இருக்கும்.  அவை மனிதன் வாழ்வதற்கு பரிபூரண தேவை.  இத்தகைய  நிகழ்வுகளை தத்துவங்கள் முன் வைக்கின்றன. சமூக நிகழ்வுகள் சமூக உறவில் மனிதனால் உருவாக்கப்படுபவை. எனவே அவற்றை மாற்றிட முடியும் என்பதை அவர்கள் தேவையற்றது என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.  முதலாளித்துவ ஊடகங்கள் முக்கிய இட வெளிகளாகும்.  அங்குதான் தத்துவங்கள் கட்டமைக்கப்படுகின்றன. பரப்பப்படுகின்றன. மறு உற்பத்தி செய்யப்படுகின்றன. மறுக்கப்படுகின்றன. விவாதத்தில் இழுக்கப்படுகின்றன.

“மனிதர்களுக்கிடையேயான திட்டவட்டமான சமூக உறவுதான் பொருள்களுக்கிடையேயான உறவாக எல்லையில்லா கற்பனை வடிவமாக அவர்கள் பார்வையில் உருவெடுக்கிறது.  எனவே ஓர் ஒப்புமையை காணும் பொருட்டு நாம் பனி மூடிய மத ராச்சியத்தில் நுழைய வேண்டும்.  அங்கே மனித

மூளையின் உற்பத்திப் பொருட்கள் அவற்றுக்கே சொந்தமான ஒரு வாழ்வு பெற்று சுயேச்சையான வடிவங்களாக தோன்றுகின்றன.  அந்தப் பொருட்கள் ஒன்றோடொன்றும் மனித இனத்தோடும் என இரு வகையிலும் உறவு கொள்கின்றன.  சரக்குகளின் உலகத்தில் மனிதக் கரங்களின் உற்பத்திப் பொருட்களும் அப்படித்தான் தோன்றுகின்றன.  இதை நான் கற்பிதம் செய்யப்பட்ட மாந்திரீக சக்தி (Fetishism) என அழைக்கிறேன். உழைப்பின் உற்பத்திப் பொருட்கள் சரக்குகளாக உற்பத்தி செய்யப்பட்ட தருணமே அதன் மீது இந்த சக்திதானே ஒட்டிக் கொள்கிறது.  எனவே இந்த சக்தி சரக்கு உற்பத்தியானதிலிருந்து பிரிக்க முடியாதது.”  (மூலதனம்)

 

மோஸ்கோ “செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதாரம்” என்ற தான் தொடங்கிவைத்த அறிமுகப் புத்தகத்தில் இந்த ஆய்வுப் பிரிவுக்கு இப்படி வரையறை செய்கிறார்.  “செய்தித் தொடர்பு செல்வாதாரங்கள் உள்ளிட்ட அனைத்து செல்வாதாரங்களின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு ஆகிய ஒன்றுடன் ஒன்று இயைந்த, குறிப்பாக ஆளுகை உறவுகளான சமூக உறவுகளை ஆய்வது” என்பதே அது.   (மோஸ்கோ,2009)

ஊடகம் செய்தித் தொடர்பு ஆகியவற்றின் விமர்சன பூர்வமான அரசியல் பொருளாதாரம் என்பது “ஊடகம் செய்தித் தொடர்பின் சூழலில் முதலாளித்துவ சமூகங்களுக்குள் செல்வாதாரங்களை ஒதுக்கீடு செய்வதோடு தொடர்புடையது என்றும்,    உடமை கட்டுப்பாடு, அதிகாரம், வர்க்கம், அமைப்பு ரீதியான அசமத்துவங்கள், முரண்பாடுகள், எதிர்ப்பு, தலையீடு ஆகியவற்றின் மீது  அது சிறப்பு கவனம் செலுத்துகிறது” என்பதையும்  ஜேனட் வாஸ்கோ வலியுறுத்துகிறார்.

முர்டோக், கோல்டிங் ஆகிய இருவரின் அணுகுமுறைப்படி செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார விமர்சனம் என்பது ஒவ்வொரு நாள் செயல்பாடுகளையும் உள்ளடக்கி வடிவம் தரும் விரிவான கட்டமைப்புகளை ஆராய்வதாகும்.  ஊடக தொழில் துறையின் பொருளாதார நிறுவனங்கள் அர்த்தங்களின் உற்பத்தி மற்றும் சுற்றுக்கு விடுவது ஆகியவற்றின் மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறார்கள் என்பதை இந்த ஆய்வு பார்க்கிறது.  பொதுவான பொருளாதர அமைப்பில் தங்களது இடத்தை வைத்துக் கொண்டு மக்களின் கருத்துக்கள் நுகர்வுக்காகவும் பயன்பாட்டுக்காகவும் எத்தகைய வழிகளில் கட்டமைக்கப்படுகிறது என்பதை அது ஆய்வு செய்கிறது. சமூக உறவுகள் மற்றும் ஆதிக்கத்தின் ஆட்டத்துடன் அது தொடங்குகிறது.  சமூக உறவுகளில் கட்டமைக்கப்பட்ட ஒத்திசைவுகள் மூலம் ஒவ்வொரு மட்டத்திலும் எப்படி அர்த்தம் உருவாக்கப்படுகிறது என்றும் பார்ப்பதில் அந்த ஆய்வு அக்கறை கொண்டுள்ளது. விமர்சன அரசியல் பொருளாதாரத்தை தனித்துவம் மிக்கதாக ஆக்குவதை குறிப்பது என்னவென்றால் அது எப்போதும் நிர்ணயிக்கப்பட்ட  நடவடிக்கைக்கும் அப்பால் சென்று எப்படி குறிப்பிட்ட நடப்பு சூழல்கள் பொதுவான பொருளாதார இயக்க ஆளுதலாலும் அவை தாங்கிப் பிடிக்கும் விரிந்த அமைப்புகளாலும் வடிவமைக்கப்படுகின்றன என்பதையும் காட்டுகின்றன.

  1. மூன்று அம்சங்கள்

மோஸ்கோ (2009) என்பவர் செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார விமர்சனமானது ஆய்வின் மூன்று அம்சங்களில் கவனம் செலுத்துகிறது என்கிறார்.  அவை சரக்குமயமாக்குதல் (Commodification),இடவெளி உடைத்தல்(Spatialisation)  அமைப்புருவாக்கம் (Structuration) என்பதேயாகும்.

சரக்குமயமாக்குதல்

பயன்பாட்டில் மதிப்பு மிகுந்த பொருட்களை பரிவர்த்தனையில் அவை என்ன கொண்டு வருமோ அந்த வகையில் மதிப்பு மிகுந்த சந்தைப்படுத்துவதற்கேற்ற பொருளாக உருமாற்றும் போக்குதான் இது.  ஊடக ராச்சியத்தில், உதாரணமாக, உள்ளடக்கத்தையும் ரசிகர்களையும் (Audidnce) உழைப்பையும், பயன்படுத்துவோரையும், நுழைவு உரிமையையும் (access), தொழில் நுட்பங்களையும் சரக்கு மயமாக்குவது நடைபெற்று வருகிறது.

இடவெளி உடைத்தல்

மற்றவர்களோடு வெகு ஜன ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு தொழில் நுட்பங்கள் துணை கொண்டு பூகோள இடை வெளி தடைகளை வெற்றி கொள்ளும் போக்குதான் இது.  அதன் இந்த பரிமாணம் ஊடகத்தின் வணிகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், சர்வதேசிய மயமாக்கல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமைப்புருவாக்கம்

பிரதானமாக சமூக வர்க்கம், பால், இன அடிப்படைகளில் திரண்டிருப்பவர்களிடம் சமூக உறவுகளை உருவாக்கும் போக்கு, வர்க்கம், பால், இனம் அவை ஒன்றுடன் ஒன்று சந்திக்கும் புள்ளிகள் ஆகிய சூழலில் நவீன ஊடகம் கவனத்துக்குரியதாக உள்ளது.

நான்கு கொள்கைகள்

மோஸ்கோ, முர்டோக்,  கோல்டிங் ஆகியோரின் அரசியல் பொருளாதார விமர்சனமானது  நான்கு அணுகுமுறை (methodological)கொள்கைகளை குறிப்பிடத்தக்கவிதத்தில் மையப்படுத்துகிறது என்று வலியுறுத்துகிறார்கள்.  அவை வரலாறு, சமூக முழுமை, தார்மீக நெறிகளின் தத்துவம், சமூக நடைமுறை ஆகியவையே ஆகும்.

  1. வரலாறு

பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் வரலாற்று பூர்வ வளர்ச்சி, முதலாளித்துவத்தின் இயக்க ஆற்றலும் அதன் மாற்றங்களும், ஊடகம், நாகரீக சமூகம், சரக்கு மயமாதல் அரசு ஆகியவற்றின் வரலாறு, அத்துடன் இந்த பரிமாணங்கள் எப்படி உட்தொடர்பு கொண்டுள்ளன என்பதில் இந்த ஆய்வு அக்கறை கொண்டுள்ளது.

  1. சமூக முழுமை

சமூகத்தைப் பற்றி பெரும் தோற்றம் உள்ளது.  அரசியல் பொருளாதார நிபுணர் கேள்விகளை எழுப்புகிறார்! அதிகாரமும் செல்வமும் எப்படி தொடர்புடையன? அவை எவ்வாறு கலாச்சாரத்தோடும் சமூக வாழ்வோடும் தொடர்புடையன?   இவை அனைத்தும் நமது வெகு ஜன ஊடகம், தகவல் தொடர்பு, மற்றும் பொழுது போக்கு சாதனங்களின் மீது எப்படி செல்வாக்கு செலுத்துகின்றன?  இவற்றின் செல்வாக்கு அதிகாரம், செல்வம், கலாச்சாரம் சமூக வாழ்வை எப்படி பாதிக்கின்றன? என்று செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார நிபுணர் அறிந்து கொள்ள விரும்புகிறார்.  (மோஸ்கோ, 2009)

  1. தார்மீக நெறிகளின் தத்துவம்

அரசியல் பொருளாதாரம்  “சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் ஜனநாயகத்தை விரிவுபடுத்த வேண்டும்” என்று வாதிடுகிறது.  அரசியல், பொருளாதாரம், வேலையிட கலாச்சாரம், அன்றாட வாழ்வு அத்துடன் ஊடகத்துக்கும் விரிவுபடுத்திட வாதிடுகிறது.  அது “நீதி, நடுநிலைமை, பொது நலன் பற்றிய அடிப்படை தார்மீக வினாக்களை” எழுப்புகிறது.    இன்றைய முன்னோடி பிரதான நீரோட்ட பொருளாதார நிபுணர்கள் அவர்களது பொருளாதார உரைகளில் தார்மீக மொழிiயைப் பயன்படுத்துவதற்கு அவ்வளவு வெறுப்புடையவர்கள் அல்ல.  ஆனால் பிரதான நீரோட்டத்திலிருந்து மாறுபடும் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த அரசியல் பொருளாதார நிபுணர்கள்தான் தார்மீக கவலையை எழுப்புகிறார்கள். தார்மீக நெறி தத்துவத்தின் இடம் குறித்து மார்க்சிய நிபுணர்களும் நிறுவனமாகிப்போன பாரம்பர்ய நெறிமுறைககளும் விவாதங்களில் மூழ்கி உள்ளன.

  1. சமூக நடைமுறை

இருப்பதைவிட ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்காக, உலகை மாற்றும் நோக்கோடு நடக்கும் போராட்டங்களை ஆய்வு செய்யவும் அவற்றின் தகவலை பரப்பவும் இக்களம் அக்கறை கொண்டுள்ளது.

ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார விமர்சனம் என்பது “செய்தித் தொடர்பின் மார்க்சிய தத்துவமாகும்”. (ஸ்மித், 1994)  “பொதுவாக குணாம்சத்தில் மார்க்சிய அனுதாபிகள்” (அயசஒளையவே) அவர்.  (முர்டோக் மற்றும் கோல்டிங்) ஜோனேட் வாஸ்கோவின்படி (2014) , ஊடகம், செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதாரம் என்பது பெரும்பாலான சமயங்களில் “மார்க்சிய அல்லது நவீன மார்க்சிய தத்துவார்த்த வரையறையை பயன்படுத்துகிறது.” 21ம் நூற்றாண்டில் இக்களம் குறித்த பரிசீலனையின் முடிவை இப்படி கூறுகிறார். “ஜீன் பால் சார்த்தர் ஒருமுறை சொன்னது போல “மார்க்சியம் நமது காலத்தின் தத்துவமாக விளங்குகிறது.  ஏனென்றால் அது தோன்றுவதற்கு காரணமாக இருந்த சூழ்நிலைகளைத் தாண்டி நாம் போகவில்லை”.  ஊடகத்தின் அரசியல் பொருளாதார ஆய்வுக்கும் அதே மாதிரியான வாதங்களை முன் வைக்க முடியும்.  (வாஸ்கோ, 2014)

கிரகாம் முர்டோக் (2006) மார்க்ஸ் நமது சம காலத்தவர் என வாதிடுகிறார்.  இன்றைய முதலாளித்துவத்தின் கலாச்சாரத்தின் பல பரிமாணங்கள் பற்றிய  சரியான விமர்சனபூர்வமான பகுப்பாய்வு மார்க்ஸ் எழுத்துக்களின் மூன்ற மையக் கருத்துக்களோடு ஈடுபட்டு தொடங்க வேண்டும்.  சரக்குமயமாதல், முரண்பாடு, உலகமயம் ஆகியவையே அந்த மூன்று மையக் கருத்துக்கள்.  அத்தகைய ஒரு பகுப்பாய்வானது மார்க்சின் அனைத்து வகை எழுத்துக்களின் ஊடேயும் ஈடுபட்டு தொடங்கப்பட வேண்டும்.

வின்சென்ட்  மோஸ்கோ சொல்கிறார்! மார்க்சின் எழுத்துக்கள் பல்வேறான வழியில் செய்தித் தொடர்பை விமர்சன பூர்வமாக புரிந்து கொள்ள பொருத்தமானது.  “உலக செய்தித் தொடர்பை புரிந்து கொள்ள மார்க்சின் மூலதனம் அரசியல் பொருளாதாரம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.  இருந்தும் இன்னொரு மார்க்ஸ் இருக்கிறார்.  முதலாமவர்க்கு தொடர்பில்லாதவர் அல்ல.  அவரது கலாச்சாரம், தத்துவம் குறித்த எழுத்துக்கள் ஜெர்மன் தத்துவம், பொருளாதார தத்துவார்த்த கைப்பிரதிகளில் பிரசுரிக்கப்பட்டது.  இளைய மார்க்சின் இதர எழுத்துக்களும் கலாச்சார ஆய்வுகளிலும் விமர்சனத்திலும் பகுப்பாய்வை உத்வேகமூட்டின.  அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சார ஆய்வுகளின் மார்க்ஸ், செய்தித் தொடர்பு விமர்சன ஆய்வின் தூண்களை உயர்த்தி நிறுத்துகின்றன என்று தீர்மானிப்பது மிகைபடக் கூறுவதல்ல.  அரசியல் பொருளாதார மார்க்ஸ், கலாச்சார ஆய்வுகளின் மார்க்ஸ் இதற்கும் கூடுதலாக புகழ்மிக்கதும்  புகழுக்குரியதல்லாததுமான அவரது தி கிரன்டிரிஸ் குறிப்பு புத்தகங்கள் உள்ளன.  ஒருதொழில்முறை பத்திரிக்கையாளன் மார்க்சும் இருக்கிறார்.  உண்மையில் தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிக்கையாளனாக செயல்பட்ட போதிலும் தி கிரன்டிரிஸ் மற்றும் மார்க்சின் பத்திரிக்கையாளனாக வாழ்ந்த சிறந்த பகுதி இண்டும் அவர் தொழிலின் முந்தைய மற்றும் பிந்திய முக்கிய காலகட்டங்களுக்கு பாலம் அமைத்தன. ஊடகம், செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார விமர்சனம் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்புகளின் ஆய்வுகளுக்கு குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கின்றன.  முதலாளித்துவத்தில் ஊடகம் செய்தித் தொடர்பின் பங்கை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியுள்ளது.  மார்க்சின் படைப்புகள் அதன் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியுள்ளன.  இந்த புத்தகம் இந்த பாரம்பரியத்துக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.  அந்த பாரம்பரியத்தின் பாகமாக தன்னை புரிந்து கொள்கிறது.

செய்தித் தொடர்புகள்: மார்க்சியத்தின் கண்ணுக்குப் புலப்படாத பகுதி

ஊடகம், செய்தித் தொடர்பின் அரசியல் பொருளாதார களத்தில் கலாச்சாரம், தகவல் தொடர்பு, செய்தித் தொடர்பு, ஊடகம்,

இணையம் ஆகியவற்றின் பங்கு அத்தோடு  முரண்பாடுகளுக்கு தொடர்புடைய அம்சங்கள் விமர்சன பூர்வமாக பகுத்தாயப்பட்டுள்ளன.  இருந்தாலும் அவை பெரும்பாலும் தீவிர அக்கறையுடன் கவனிக்கப்படவில்லை.  மார்க்சிய தத்துவத்தில் சொல்வதானால் போதிய அக்கறையுடன் கவனிக்கப்படவில்லை.  அவை மேற்கட்டுமானம், இரண்டாம் பட்சமானது, உற்பத்தியுடன் தொடர்பற்றது, வெறும் சுற்றுக்கு விடுவதற்கும் நுகர்வதற்குமான அம்சங்கள்தான், அடித்தளத்தால் தீர்மானிக்கப்பட்டது, பொருள்தன்மையில்லாத புறக்கணிக்கத்தக்கது, வெறும் கருத்துக்கள், சார்புடையது, சுரண்டலின் ஆதரவு கட்டமைப்பு என்றெல்லாம் கருதப்பட்டது.  இந்த தகவல் தொடர்பு ராச்சியம் பற்றிய இந்த புறக்கணிப்பும் அவமதிப்பும்தான் டல்லஸ் டபிள்யு ஸ்மித் என்ற கனடாவின் அரசியல் பொருளாதார விமர்சகரை 1977ல் செய்தித் தொடர்பு மேற்கத்திய மார்க்சியத்தின் கண்ணுக்கு புலப்படாத பகுதி என்று சொல்ல வைத்தது.

“செய்தி தொடர்புகளின் வெகுஜன ஊடகமும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களான விளம்பரம், சந்தை ஆய்வு, பொதுமக்கள் உறவு, உற்பத்தி அது சார்ந்த பொட்டலங்களின் (packages) வடிவமைப்பு ஆகியவை ஐரோப்பிய மற்றும் அட்லாண்டிக் பகுதி நாடுகளில் மார்க்சிஸ்ட் தத்துவத்துக்கு கண்ணுக்குப் புலப்படாத பகுதிகளாக விளங்குகின்றன.” (ஸ்மித் 1977).  பிரிட்டிஷ் மார்க்சிஸ்ட் கலாச்சார தத்துவ நிபுணர் ரேமண்ட் வில்லியம்ஸ் அதே ஆண்டு “கலாச்சார பொருள்முதல்வாதம்” என்ற சொற்றொடரை உருவாக்கினார்.  மார்க்சியமும் இலக்கியமும் என்ற அவரது கட்டுரையில் கலாச்சார படைப்பும் நடவடிக்கையும் மேற்கட்டுமானம் அல்ல என்ற கருத்தையும் முன் வைத்தார்.  (வில்லியம்ஸ், 1977)கலாச்சாரத் தொழில் தகவல் தொடர்பு பொருளாதாரம், தகவல் ஆகியவை கலாச்சாரமும் செய்தித் தொடர்பும் கவனத்துக்குரியவை, பொருளார்ந்தவை, முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருளாதாரத்தின் பகுதி என்பதை கண்கூடாக காட்டியுள்ளன.  (ஃபக்ஸ்,2015)

எனது வாழ்வில் பல மார்க்சிஸ்ட் விமர்சன ஆய்வு கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன்.  அங்கெல்லாம் ஊடகமும் செய்தித் தொடர்பும் எந்த பங்கும் ஆற்றவில்லை அல்லது இரண்டாம்பட்ச பங்கே ஆற்றின.  ஒரு உதாரணம் போதும்.  மே 31, 2013ல் டேவிட் ஹார்வி ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.  கலக நகரங்களிலிருந்து நகர்ப்புற புரட்சிக்கு என்ற தலைப்பில் அந்த உரை.  நூற்றுக் கணக்கானவர் கலந்து கொண்டிருந்தனர்.  விவாத பிரிவில் நான் ஒரு கேள்வி எழுப்பினேன்.  ஏன் ஹார்வியின் இட வெளியின் மார்க்சிஸ்ட் தத்துவத்தில் செய்தித் தொடர்பு என்பது கண்ணுக்கு புலப்படாத பகுதியாக இருக்கிறது.  மனித செய்தித் தொடர்பில்தான் அதன் மூலமாகத்தான் சமூக இடவெளி இருக்க முடியும்.  அது சமூக இடவெளியால் (Social Space)  வரையறுக்கப்பட்டு  சமூக இட வெளியை உற்பத்தியும் மறு உற்பத்தியும் செய்கிறது. ஹார்வி தனது பதிலில் இடவெளி மற்றும் செய்தித் தொடர்பின் உறவை கவனத்தில் கொள்ளவில்லை.  ஆனால் ஊடகம், செய்தித் தொடர்பு முழுவதும் அதீக அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன என்றார்.  அரேபிய வசந்தம் என்பது முக நூல் புரட்சி அல்ல; தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைபெற்றது என்றார்.  ஹார்வி எப்போதும் திருப்பித் திருப்பி செய்யப்படும் மார்க்சிஸ்ட் தவறைத்தான் செய்கிறார்.  மார்க்சிஸ்ட் அல்லாதவர்கள் அதன் பங்கை அதீத மதிப்பீடு செய்கிறார்கள் என்பதால்  முதலாளித்துவத்தில் செய்தித் தொடர்பு குறித்த பகுப்பாய்வை ஹார்வி ஒதுக்கித் தள்ளுகிறார்.

எனது வாழ்வில் பல மார்க்சிஸ்ட் புத்தகங்களையும் கட்டுரைகளையும் வாசித்தேன்.  அவற்றில் ஊடகமும் செய்தித் தொடர்பும் எந்த பங்கும் வகிப்பதில்லை அல்லது இரண்டாம் பட்ச பங்கே வகிக்கும்.  இதனால்தான்  triple C இதழின் ஆசிரியர்களான நாங்கள் மார்க்சின்  படைப்புகளால் உத்வேகமுற்ற அல்லது அந்த படைப்புகளை பயன்படுத்துகிறவர்களுக்கு முதலாளித்துவத்தில் செய்தித் தொடர்பு குறித்த படைப்புகள் விவாதங்களுக்கு இடவெளி வழங்குகிறோம்.

தகவல் தொடர்பு, ஊடகம், செய்தித் தொடர்பு என்பவை என்ன?

தகவல் தொடர்பு, ஊடகம், செய்தித் தொடர்பு என்ற கலைச் சொற்கள் சுயவிளக்கம் தருபவை அல்ல.  அவை பிரிக்கப்படுவதற்கான போக்குகள் உள்ளன.  இதனால் தகவல் தொடர்பு விஞ்ஞானம், ஊடக ஆய்வுகள், செய்தித் தொடர்பு ஆய்வுகள் என்ற சிறப்புக் களங்கள் உருவாகி உள்ளன.  எனது பார்வையில்  இந்த நிகழ்வுகளின் ஆய்வு பிரிக்கப்பட முடியாதது.  பிரிக்கவும் கூடாது.  பிரிப்பதற்கான எந்த முயற்சியும் செயற்கையானது.  அப்படி பிரிப்பது, உள்ளார்ந்து ஒன்றாக தொடர்புற்று இருந்து தோன்றும் நிகழ்வுகளை கிழித்தெறிகிறது.

பொருள் என்பது செயல்முறை. உலகின் உள்ளடக்கம்.  அதுவே அதன் காரணம்.  பொருள் தானே உற்பத்தி செய்கிறது. ஒன்று திரள்கிறது.  உலகில் இருத்தலின் புதிய மட்டங்களை உருவாக்க அதற்கு சக்தி உள்ளது.  இக்கருத்தை சொன்னதால் பொருளுக்கு வெளியே உலகை உருவாக்கியவர் இருப்பதாக கூறும் மதத்திற்குரிய, ஆவிக்குரிய விளங்காத விளக்கங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை.  தகவல் தொடர்பு பொருளற்றது என்றோ அல்லது பொருளுக்கு வெளியே இருப்பது என்றோ கருதுவது ஒவ்வொரு நிகழ்வும் போதுமான காரணமும் அடித்தளமும் கொண்டிருக்க வேண்டும் என்ற பூமியின் தத்துவார்த்த விதியை மீறுகிறது.  உலகில் இரு பொருள்கள் இருக்கின்றன என்போம்.  பொருளும் தகவலும் (உணர்வும்) அப்படி என்றால் இங்கே பூமியின் விதியை மீறுகிற, பூமியிலிருந்து விலக்கப்பட்ட இரு நிகழ்வுகள் இருக்க வேண்டும்.

ஒரு ஆன்ம சக்தி – கடவுள் – பொருளை உருவாக்கியது என்று கருதினால் அப்போது ஒரு வெளியிலுள்ள சக்தி உலகின் பூமியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.  அது ஏதுமில்லாததிலிருந்து ஒன்றை உருவாக்கியது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  இருந்தாலும் கடவுளை படைத்தது யார் என்ற கேள்விக்கு பகுத்தறிவு பூர்வமான பதிலை கொடுக்க முடியாது.  ஆகையினால் கூட கருத்து முதல்வாதமும் ஆன்மிக வாதமும் பூமியிலிருந்து விலக்கப்படுகின்றன.  பூமியின் விதியை மீறுகிறது.  தகவல் தொடர்பு என்பது ஸ்தூல உலகின் அங்கமாகும்.  அது இயக்கத்தில் உள்ள பொருளாகும்.  செயல்முறையாகும்.  குறைந்த பட்சம் இரு பொருள் சார் அமைப்புகளின் உறவும் ஒன்றுடன் ஒன்று இடைச் செயல்பாடும் ஆகும்.  அத்தகைய இடைச் செயல்பாடுகள் உற்பத்தி செய்பவையாகும்.  அதாவது பொருள்சார் அமைப்புகளின் மறு உருவாக்கத்துக்கு அவை உதவுகின்றன.  இவ்வமைப்புகளின் புதிய அக குணங்களை உருவாக்குகின்றன.  உலகில் புதிய பொருள் சார் அமைப்புகள் உற்பத்திக்கு தேவையான சக்தியை முன் நிறுத்துகின்றன.  அது இருக்கும் பொருள் அமைப்புகளின் இடைச் செயல்பாடுகளிலிருந்து எழுகிறது.

மனிதர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள்.  சமூகம் மனிதர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தாங்கிப் பிடிக்கப்படுகிறது.  சமூகம் பொருள் அமைவின் ஒரு மட்டம் ஆகும்.  சமூகத்தில் தகவல் தொடர்பு என்பது மனிதர்களின் சமூக இடைச் செயல்முறையாகும்.  மனிதர்கள் வேலை செய்கிற, சிந்திக்கிற பிராணி.  அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  பண்பாட்டியல் முடிவுகளை எடுக்கிறார்கள்.  சமூகத்தை உருவாக்கவும் மறு உருவாக்கமும் செய்கிறார்கள்.  மனித மூளை அறியக்கூடிய தகவலை சேர்த்து பத்திரப்படுத்தி வைக்கும் அமைப்பாகும்.  அது சிக்கலான வகையில் உலக நிலைமையையும் மனித வியாக்கியானத்தையும் உலகின் அரசியல் மற்றும் தார்மீக மதிப்பீடுகளையும் பிரதிபலிக்கிறது.  செய்தித் தொடர்பு செயல் முறையில் மனிதனின் அறிதலுக்குரிய தகவலின் பாகங்கள் இன்னொரு மனிதனுக்கு கிடைக்கச் செய்கிற அடையாள வடிவத்தில் உள்ளன.  இந்த இன்னொரு மனிதர் உலகின் வியாக்கியானத்தின் தங்கள் பாகங்களை முதலில் தகவல் அளித்தவருக்கு கிடைக்கச் செய்கிறார்.

செய்தித் தொடர்பு மற்றவர்களின் அறியக்கூடிய தகவல்களில் அவை அங்கீகரிக்கப்பட்டவுடன் மாற்றங்களை உருவாக்குகிறது.  அதாவது செய்தித் தொடர்பின் மூலம் புதிய அர்த்தங்களும், வியாக்கியானங்களும் முடிவுகளும் எழுகின்றன.  அறிதலுக்குரிய தகவலும் செய்தித் தொடர்பும் பொருள் சார்ந்தவை ஆகும்.  அவை மூளையின் நரம்பு மண்டலத்தின் நிலைமையையும் செயல்பாட்டு முறைமைகளையும் மாற்றுகின்றன.  நம்மால் தகவலை தொடவோ உணரவோ முடியாது.  ஏனெனில் அது தொட்டுணர முடியாதது.  பருண்மை அல்லாதது.  இதனால் அதனை பொருளல்லாததாக ஆக்கிடவில்லை.  தகவல் செயல் முறையின் விளைவுகளை நம்மால் கவனிக்க முடியும்.  எப்படி அர்த்தங்களின் மாற்றங்களையும் உலக வியாக்கியானங்களையும் கொண்டுவருகிறது என்பதை கவனிக்க முடியும்.  செய்தித் தொடர்பு காற்று என்ற ஊடகத்தின் உதவியுடன் ஒலியை கடத்தும். இணையம், தொலைக் காட்சி, வானொலி, புத்தகங்களும் இதர அச்சேறியவையும் மின்னணு புத்தகங்கள், சுவரொட்டிகள், ஸ்டிக்கர், ஓவியங்கள், கலை வேலைப்பாடுகள் ஆகியவை ஊடகங்களின் உதவியை எடுத்துக் கொள்கிறது.  எங்கெல்லாம் செய்தித் தொடர்பு இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு ஊடகம் இருக்கிறது.

செய்தித் தொடர்பை உருவாக்கி சாத்தியப்படுத்தும் கட்டமைப்புதான் ஊடகம்.  அவை மனிதர்களிடையே ஊடாடி செய்தியை பகிர வைக்கின்றன.  மனித செய்தி தொடர்பு இடைவிட்டோ, அல்லது அதிக தொடர்ச்சியாகவோ நடக்கலாம்.  அனைத்து செய்தி தொடர்பும் சிந்தனை முறையில் மாற்றங்களை உருவாக்குகின்றன.  தொடர்ச்சியான செய்தி தொடர்பு புதிய சமூக அமைப்பை உருவாக்குவதற்கான சக்தியைக் கூடுதலாக கொண்டிருக்கிறது.  இருக்கிற சமூக அமைப்பிலும் கூட புதிதாக எழும் குணாம்சங்களை உருவாக்குவதற்கான சக்தியை கொண்டிருக்கிறது.  அத்தகைய சமயங்களில் மனிதர்கள் புரிந்து கொண்டு, செய்தித் தொடர்பு கொள்வது மட்டுமின்றி, தங்களுக்குள் ஒத்துழைக்கவும் செய்கிறார்கள்.  ஒன்றிணைந்து புதிய சமூக அமைப்பையோ அல்லது சமூக அமைப்பின் புதிய கட்டமைவு குணாம்சங்களையோ உருவாக்குகிறார்கள்.  எனவே தகவல் தொடர்பு என்பது அறிதல், செய்தித் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய மூன்றடுக்கு கூட்டிசை செயல்முறையாகும்.

முதலாளித்துவம் உயிருடன் இருக்கும் வரை மார்க்ஸ் உயிருடன் இருக்கிறார்

நெருக்கடி, சுரண்டல், அசமத்துவம் ஆகியவை தற்கால சமூகத்தின் தொடர்ச்சியான அம்சங்களாக நீடிக்கின்றன.  அவை தொடரும் வரை முதலாளித்துவத்தின் மீதான மார்க்சின் பகுப்பாய்வில் நமது அக்கறை நீடிக்கும்.  ஏனெனில் மக்கள் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விளக்கமும் பிரச்னையிலிருந்து மீள வழி முறைகளையும் தேடுகிறார்கள்.  ஊடகம், தகவல் தொடர்பு, செய்தித் தொடர்பு, இந்த சூழ்நிலையில் முக்கியமானது.  ஏனெனில் அவை முதலாளித்துவத்தின் குறிப்பிட்ட ஒரு தொழிலாக உள்ளன.  கலாச்சாரம் என்பது சுரண்டலையும் ஆதிக்கத்தையும் நியாயப்படுத்தும் தத்துவங்களை பொதுமக்களிடையே பரப்பவும் அதே நேரத்தில் முதலாளித்துவத்தை விமர்சிக்ககூடிய கருவியாகவும் உள்ளது.

மார்க்சின் மூலதனத்தை ஊடக செய்தித் தொடர்பு ஆய்வு கண்ணோட்டத்தில் படிப்பது முதலாளித்துவ ஊடகத்தை புரிந்து கொள்ளவும் அதை விமர்சிக்கவும் நமக்கு உதவும்.  முதலாளித்துவ வணிக நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படாத ஆனால் மக்கள் தமக்கான மாற்று ஜனநாயக செய்தித் தொடர்பு அமைப்புக்கான போராட்டங்களுக்கான ஞானத்தை மூலதனம் வாசிப்பு நமக்கு கொடுக்கும்.

 



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: