முத்தலாக் – விவாதங்களும், விளக்கங்களும் !


முத்தலாக் பிரச்சினை தற்சமயம் சமூக அரசியல் தளங்களில் வலுவாக விவாதத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில் மத சுதந்திரம் அரசியல் சாசனத் தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் மதம் சார்ந்த ஒரு நடைமுறை, அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரண்பட்டதாக இருந்தால், எது மேலோங்கும் என்பதுதான் முக்கிய கேள்வி. முத்தலாக் பிரச் னையில் முன்னுக்கு வந்திருக்கும் விவாதத்தின் பெரும் பகுதி இதை சுற்றியே அமைந்துள்ளது.

ஷயாரா பானு வழக்கு
35 வயது ஷயாரா பானு, 15 ஆண்டு கால திருமணத்துக்குப் பிறகு, தன் கணவர் தன்னை கடிதம் மூலம் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்து விட்ட பின்னணியில் உச்சநீதிமன்றத்தை 2016 ஏப்ரல் மாதம் நாடினார். முத்தலாக் முறை ஒழிக்கப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந் தார். அத்துடன் இணைந்த ஹலாலா முறையை யும், பலதார மணத்தையும் கூட ரத்து செய்ய வேண்டும் என்பது அவரது வழக்கின் சாராம்சம். மத்திய அரசு, முத்தலாக்குக்கு எதிரான கருத்துக் களைப் பதிவு செய்தது. அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம், இம்முறை தொடர வேண்டும் என்று எதிர்வாதங்களை வைத்தது. வெவ்வேறு மத நம்பிக்கை கொண்ட 5 நீதிபதி களின் அரசியல் சாசன அமர்வு வாத பிரதிவாதங் களைக் கேட்ட பின், தீர்ப்பை ஒத்தி வைத்திருக் கிறது. இந்த விவாதங்கள் முன்வைக்கும் அரசியல் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.

சமத்துவம் எனது உரிமை
கடந்த காலத்தில் முத்தலாக் முறை குறித்து பல வழக்கு கள் போடப்பட்டிருக்கின்றன. ஓரளவு வெவ்வேறு அளவில் நீதிமன்றம் தலையிட முயற்சிகள் நடந் திருக்கின்றன. ஷயாரா பானுவின் வழக்கறிஞர், இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள சமத்துவ கோட்பாடு முத்தலாக் முறையில் மீறப்படுகிறது, ஒரு இந்திய பிரiஜை என்கிற முறையில், சட்டத்தின் முன் அனை வரும் சமம் என்ற அடிப் படையில், சமத்துவம் எனது உரிமை என்பதையே பிரதான அம்சமாக அவர் முன்வைத்திருந்தார். பொது சிவில் சட்டம் குறித்தோ, இசுலாமிய சட்டங்கள் வரையறுக்கப் பட வேண்டும் என்பது பற்றியோ அவர் கேள்வி எழுப்பவில்லை.

மூன்று வடிவிலான விவாகரத்துக்கள்
மூன்று வெவ்வேறு வடிவில் வாய்மொழி தலாக் விவாகரத்து முறை இருப்பதாகக் கூறப் படுகிறது. ஒன்று தலாக்-இ-ஆசன். இரண்டு மாதவிடாய் காலத்துக்கு இடையே ஒரு முறை தலாக் சொல்ல வேண்டும். 3 மாத காலம் கழித்து அது அமலுக்கு வரும். அடுத்தது, தலாக்-இ-ஹசன். இது 3 மாதங்களில் ஒவ்வொரு முறை சொல்லப்பட்டு, 3 முறையானதும் விவாகரத்து ஆகும். இந்த இரண்டுமே, இடையில் தாம்பத்ய உறவு ஏற்பட்டால் ரத்தாகி விடும். அல்லது, பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால், சேர்ந்து வாழலாம். இந்த இரண்டு வித தலாக் முறைக்கும் 3 மாத கால அவகாசம் உண்டு.

மூன்றாவதான தலாக்-இ-பித்தத் (பரவலாக முத்தலாக் என்று அழைக்கப்படுகின்ற முறை) தான் இப்போது கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக் கிறது. இதுதான் இந்தியாவில் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது. இது ஒருதலைபட்ச மானதும், தன்னிச்சையானது மாகும். ஏனெனில், இதில் மனைவியின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டிய அவசியமில்லை. பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பே இல்லை. கணவன் எப்போது நினைத் தாலும் நொடியில் விவாகரத்து செய்து விட முடியும். மூன்று முறை சொன்ன உடன், விவா கரத்து அமலுக்கு வந்து விடும். வாய் தவறி சொல்லி விட்டாலோ, கோபத்தில் சொல்லி விட்டாலோ கூட, திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு வேளை தவறை உணர்ந்து அல்லது போதை தெளிந்து, மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தால், ரத்து செய்வது அவ்வளவு சுலபமல்ல.

இங்கு நிக்கா ஹலாலா பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தலாக்-இ-பித்தத் மூலம் விவாகரத்து செய்து விட்ட மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் அது சுலபமல்ல. மனைவி வேறு ஒருவரைத் திருமணம் செய்து, தாம்பத்ய உறவு கொண்டு, அந்தக் கணவரால் தலாக் செய்யப்பட வேண்டும். பிறகே இவருடன் சேர்ந்து வாழ முடியும். இது சம்பந் தப்பட்ட பெண்ணுக்கு எத்தகைய மன உளைச் சலையும், அவமானத்தையும் ஏற்படுத்தும் என்று உணர்வது கடினம் ஒன்றும் இல்லை. சில சமயம் இரண்டாவது கணவர் தலாக்குக்கு மறுத்து விடுவார்.
ஹலாலா என்பது ஏதோ ஆண் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் என்பது போல காட்சியளித்தாலும், பெண்ணின் விருப்பம் அங்கு மீறப்படுகிறது. கணவன் தவறுதலாக சொல்லி விட்டார் என்பதற்காக, விருப்பமில்லாமல் இன்னொருவரை மணந்து, அவருடன் உறவு கொண்டு, அவரால் தலாக் செய்யப்பட வேண்டும் என்பது மனைவி மீதான தண்டனையாக இருக்கிறது.

ஆணாதிக்க அடிப்படை
மொத்தத்தில், மனைவியின் உணர்வுகள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை. பெண்ணை உடைமைப்பொருளாகக் கருதும் ஆணா திக்க கருத்தியல் தலாக் இ பித்தத், ஹலாலா, பலதார மணம் போன்றவற்றில் ஆழமாக பதிந் திருப்பதை கவனிக்கத் தவறக் கூடாது.
மனைவி, கணவனை விவாகரத்து செய்ய குலா என்கிற முறை இருக்கிறதே, எனவே சமத்துவம் உண்டு என்று வாதிடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், குலா செய்யும் போது, கணவன் அதை ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக அவர் எதையாவது கேட்பார். அநேகமாக, திருமணத்தின்போது வாக்குறுதி அளிக்கப் பட்ட மெஹர் தொகையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் முன்னுக்கு வரும். மொத்தத்தில் தலாக் என்பது கணவனின் உரிமை, குலா என்பது எதையாவது விட்டுக் கொடுத்து இறைஞ்சி பெற வேண்டும் என்பது தான் நிலை. அல்லது முஸ்லிம் பெண்கள் விவா கரத்து சட்டம் (1939)ன் படி விவாகரத்து பெற வேண்டும். 9 குறிப்பிட்ட காரணங்களுக்கு உட் பட்டு இருந்தால் மட்டுமே விவாகரத்து கிடைக் கும். மனைவி நீதிமன்றம் செல்கிறார் என்பது தெரியவந்தாலே, கணவன் முத்தலாக்கைக் கையில் எடுத்து விடுவார். பொதுவாக, இது மனைவியின் கழுத்துக்கு மேல் தொங்கும் கத்தியாகவே இருக் கும். எதை செய்தாலும், கணவனை கோபப்படுத்தி விடுவோமோ, முத்தலாக் செய்து விடுவாரோ என்ற அச்சுறுத்தப்படும் மனநிலை நீடிக்கும்.

தலாக் இ பித்தத் முறையில் பேச்சுவார்த் தைக்கு இடம் இல்லை என்பதால் ஜீவனாம்சம், குழந்தை கஸ்டடி போன்றவற்றை விவாகரத் துடன் இணைந்து தீர்த்துக் கொள்ள முடியாது. தனியாக வேறு சட்டங்களின் அடிப்படையில் கோர வேண்டும். இது எவ்வளவு காலம் பிடிக்கும் என்றும் கூற முடியாது. எனவேதான், அரசியல் சாசனத்தின் சமத்துவ கோட்பாட்டின் அடிப்படை யில் நியாயம் கேட்பது பொருத்தமானதாக இருக்கிறது.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்
உச்சநீதிமன்றத்தில், தனிநபர் சட்ட வாரியம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம், முத்தலாக் முறை மதத்தின் ஒரு பகுதி; எனவே அரசியல் சாசன பிரிவு 25 உறுதி செய்துள்ள மத சுதந்திரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது; அது ஜனநாயக உரிமை மீறல் என்பதையே பிரதான வாதமாக முன்வைத்தது. ஆனால் சுதந்திரம் எல்லையற்றது அல்ல. அனைத்துக்கும் ஒரு நியாயமான வரம்பு உண்டு. மேலும் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள அடிப்படை உரிமைக்கு மத சுதந்திரம் முரணாக இருக்க முடியாது. மத சுதந்திரம் என்ற பெயரில் நரபலியை அனுமதிப்போமா? குழந்தைத் திருமணத்தை அனுமதிப்போமா? தீண்டாமையை அனுமதிப் போமா? உடன்கட்டை ஏறுதலை ஏற்றுக் கொள் வோமா? இவற்றைத் தடை செய்து சட்டங்களே வந்து விட்டன.

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 14, 15, 21 போன்றவை சமத்துவ கோட்பாடுகளையும், கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையையும், பாகுபாடற்ற வாழ்க்கையையும் அடிப்படை உரிமைகளாக உறுதி செய்கின்றன. தனிநபர் சுதந்திரம், சமத்துவம் இவற்றில் உள்ளுறைந்து உள்ளன. இவற்றுக்கு முரணாக எது வந்தாலும், அது ஏற்கப்பட முடியாதது. விரும்பிய மதத்தை பின்பற்ற சுதந்திரம் வேண்டும்; ஆனால் அதைப் பின்பற்றும் மனிதர்களில் ஒரு பகுதியினருக்கு சுதந்திரம் இல்லை என்பது எந்தவிதமான தர்க்கம்?
தலாக்-இ-பித்தத், அரசியல் சாசனத்தின் சமத்துவ கோட்பாட்டை நிராகரிக்கிறது. இயற்கை நீதி கோட்பாட்டுக்கும் எதிராக உள்ளது. எனவே அதை ஏற்கக் கூடாது.

நடைமுறையா? சட்டமா?
இன்றைக்கு எழுந்துள்ள பிரச்னை மத நடை முறை சம்பந்தப்பட்டதா அல்லது மதம் சார்ந்த சட்டம் சம்பந்தப் பட்டதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. நடைமுறை என்றால், அது அந்த சமுதாயத்தில் உள்ள அனைவரையும் கட்டுப்படுத்தாது. சட்டம் என்றால், ஆகப் பெரிய சட்டமான அரசியல் சாசனத்தை விட அது உயர்ந்ததா என்ற கேள்வி எழுகிறது.

வி. ஆர். கிருஷ்ணய்யர், மதம் சார்ந்த தனிநபர் சட்டம் (personal law) சட்ட அந்தஸ்து பெற்றது என்றுதான் வரையறுத்திருக்கிறார். அப்படியா னால் அது குறித்த சர்ச்சை நீதிமன்றத்துக்குத் தான் வர வேண்டும். அரசியல் சாசன கோட் பாடுகளுக்கு உட்பட்டதாகவே அது அமைய வேண்டும்; தீர்க் கப்பட வேண்டும். தனிநபர் சட்ட வாரியம், இந்த பிரச்னையில் நீதிமன்றம் தலை யிடக் கூடாது என்று சொல்கிறது. தீர்வுக்கு வேறு எந்த வழியை யும் தனி நபர் வாரியம் முன்வைக்க வில்லை. இது எங்கள் மத கோட்பாடு; யாரும் தலையிடக் கூடாது என்ற தொனி தான் மேலோங்கு கிறது. பல முஸ்லிம் நாடுகளில் இம்முறை தடை செய்யப் பட்டு விட்டது. எனவே, மதம் என்ற வியாக் கியானத்தை இதற்கு அளிப்பது கூட பொருத்தமல்ல.

குடும்பமும் சட்டமும்
குடும்பத்துக்குள் சட்டம் நுழையக்கூடாது என்றொரு வாதம் உலவுகிறது. குடும்பம் புனித மானது; அனைத்துக்கும் அப்பாற்பட்டது என்ற பின்னணி இந்த வாதத்துக்கு உண்டு. ஆண் மேலா திக்க அல்லது ஆண் மைய கட்டமைப்பாக குடும்பம் இருக்கிறது என்ற யதார்த்தம் கணக்கில் எடுக்கப் படுவதில்லை. இதற்கு முட்டுக் கொடுப்பதுபோல், 1984ல் ஹர்வீந்தர் கவுர் எதிர் ஹர்மந்தர் சிங் சவுத்ரி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம், ”அரசியல் சட்டத்தை வீட்டுக்குள் அமல்படுத்துவது பொருத்த மற்றது; இது பாத்திர கடைக்குள் யானையை நுழைய விடுவதைப்போல. அனைத்தையும், குறிப் பாக திருமண உறவு, அது பிரதிபலிக்கும் மாண்பு கள் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கி விடும். எனவே, வீடு,திருமணம், குடும்பம் போன்றவற்றில் அரசியல் சட்ட பிரிவுகள் 14, 21க்கு இடமில்லை” என்று தீர்ப்பு வழங்கியது.
குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் வந்த போதும் இத்தகைய வாதங் கள் வந்தன. வீட்டுக்குள் நடப்பதை அரசாங்கம் எட்டிப்பார்க்குமா; அந்தரங்கம் என்பது இல்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப் பட்டன. ஆனால் நல்ல வேளையாக இவை அனைத்தையும் தாண்டி, தனிநபர் சுதந்திரமும், சமத்துவமும் அடிப்படை உரிமைகள்;எங்கு அவற்றிற்கு ஆபத்து வந்தாலும் அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் வந்தது. அதே கோட்பாடு, இன்றைய பிரச்னைக்கும் பொருந்தும்.

அபத்தமான வாதங்கள்
தனிநபர் சட்ட வாரியத்தின் பிரமாண பத்திரத் தில் ஆணாதிக்கம் முழுக்க முழுக்க உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. “இந்திய சமூகமே ஆணாதிக்க சமூகம்தான். எனவேதான் அனைத்து மதங்களுமே ஆணாதிக்க கோட்பாட்டின் அடிப்படையில் சட்டங்களை வைத்துள்ளன” என அனைத்து மதங்களையும் இதற்குத் துணைக்கு அழைத்திருக் கிறார்கள். ஆணுக்கு சாதகமாகவே வாதங்கள் முழுக்க இடம் பெற்றிருக்கின்றன. ”முடிவெடுப்ப தில் அதிக அதிகாரம் ஆணுக்கு இருப்பதால் விவாகரத்து உரிமையை ஷரியா சட்டம் அவருக்கு அளிக்கிறது. அவர் எளிதில் உணர்ச்சி வசப்பட மாட்டார்” என்பதுடன், “விவாகரத்துக்காக நீதிமன்றம் சென்றால் செலவாகும்; நீண்ட காலம் பிடிக்கும். கணவன்மார்கள் இதை விரும்பாமல், மனைவியை கொலை செய்து விடலாம்; எரித்து விடலாம் என்ற முடிவுக்குப் போய் விடுவார்கள்” என்று ‘உணர்ச்சிகரமான’ வாதங்கள் முன்னெடுக்கப் பட்டன.

அதே போல், “பலதார மணம் என்பது ஒரு வரம் தான். இல்லை என்றால், சட்ட விரோத மான தொடர்பை ஆண் வைத்துக் கொள்வான்” என்ற வாதம் எதை முன் வைக்கிறது? அடிப்படை யில் கணவனுக்குப் பல பெண்களுடன் தொடர்பு கொள்ள உரிமை உண்டு; பலதார மணம் இருந் தால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களைத் திருமணம் செய்து கொள்வான். இல்லை என்றால் முறை தவறிய தொடர்பை வைத்துக் கொள்வான் என்பதுதானே இதன் பொருள்? வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பல தார மணம், இஸ்லாமிய கோட்பாடுகளால் அங்கீ கரிக்கப்பட்டது. யுத்தத்தில் பல ஆண்கள் இறந்து போன பின்னணியில், விதவைகளின் எண்ணிக்கை அதி கரித்தது. அதனை எதிர் கொள்ள இது உத்தேசிக்கப்பட்டது. இன்றைய மாறுபட்ட நிலையிலும், இதனைப் பாதுகாத்து பராமரிப்பது எதற்காக? முஸ்லிம்கள் பலர், இதனைப் பயன்படுத்துவ தில்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் இதை உயிரோடு வைக்க வேண்டாமே? தனிநபர் வாரியம், ஒரு படி மேலே போய் அதனை நியாயப் படுத்துகிறது. அகில இந்திய முஸ்லிம் ஆண் சட்ட வாரியம் என்று பெயர் மாற்றமே செய்யலாம் என்ற பிருந்தா கராத் அவர்கள் கருத்து தெரிவித் திருப்பது பொருத்தமானது.

சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், மதம் சார் சட்டங்களைத் திருத்தி எழுத முடியாது என்பது தனி நபர் சட்ட வாரியத்தின் அடுத்த முக்கியமான வாதம். இதை யார் முடிவு செய்வது? அந்த சமூகத்திலேயே இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் திருத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். சமத்துவத்துக்கான அவர்களது குரலுக்கு என்ன பதில்? நீதிமன்றம் தலையிடக் கூடாது; இதர சமூகத்தினர் தலையிடக் கூடாது…. இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பகுதி எழுப்பினாலும் ஏற்க மாட்டோம் என்பது நியாயத்தின் வெளிப்பாடு அல்லவே! இதர நாடுகள் பலவற்றிலும் சட்டங் கள் திருத்தப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் ஏன் கூடாது?

பாஜக அரசின் நிலைப்பாடு
பெண்ணுரிமை முக்கியம்; இஸ்லாமிய பெண் களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் மத்திய அரசு பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்தும் பாஜகவுக்கு பாலின சமத்துவத்தின் மீதான அக்கறை வந்து விட்டது என்று நினைத்தால் அது உண்மைக்குப் புறம்பானது. மதவெறியின் சாய்மானமே அவர் களின் குரல். ஏனெனில் சமத்துவ கோட்பாட்டில் நம்பிக்கை இருந்தால் அது அனைத்து நிலைபாடு களிலும் பிரதிபலிக்கும். அதில் சௌகர்யமான மறதி (செலக்டிவ் அம்னீசியா) வரக் கூடாது. அதில் ஒரு நிலைத்த தன்மை தெரிய வேண்டும்; தொடர்ச்சி தெரிய வேண்டும். குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள், குரூரமான பாலியல் வல்லுறவுகள் இஸ்லாமிய பெண்களின் மீதான அக்கறையைக் காட்டுகிறதா? மிகச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய பில்கிஸ் பானுவின் அனுபவம் இதற்கு நேர் எதிர் உதாரணமாக இருக்கிறது.

உ.பி. முசாஃபர் நகரை மறந்து விட முடியுமா? யோகி ஆதித்யநாத், உ.பி. முதல்வரான பிறகு, இசுலாமிய பெண்கள் மத்தியில் முத்தலாக் முறை குறித்து ஓர் ஆய்வு செய்ய போவதாக அறிவித்திருக்கிறார். பாலின சமத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதாகக் கூறிக்கொண்டார். ஆனால் இந்து பெண்களின் நிலை என்ன? சாதி ஆணவக் கொலைகளில் பெண்கள் பலியாகும் சம்பவங்கள் உபி மாநிலத்தில் கணிசமாக அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற பதிவு ஆணைய தகவல்களின்படி, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் பெண்கள் மீது நடப்பது, நாட்டிலேயே இங்குதான் அதிகம். இம்மாநில நிலச்சீர்திருத்த சட்டப்படி, பெண் களுக்கு நிலத்தில் பங்கு கிடையாது. இந்து பெண் களுக்கு இவ்வாறு பல வகைகளில் பாலின சமத்து வம் மறுக்கப் படுகிறது.

சமத்துவம் மறுக்கும் பாஜக சித்தாந்தம்
இந்திய அளவில் பார்த்தாலும், பூர்வீக சொத் தில் இந்துப்பெண்ணுக்கு சம பங்கு என்பது தேசிய சட்டமாக இல்லை. தத்தெடுக்கும் உரிமை யில் சமத்துவம் இல்லை. சாதி ஆணவக் கொலை களைத் தடுக்க தனி சட்டம் இயற்ற முன்வர வில்லை. பெண் எப்படி உடை உடுத்த வேண்டும்; என்ன படிக்க வேண்டும்; யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெண்ணின் வாழ்க்கை முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன. கோவா திருமண கோட்பாடு சட்டம், மனைவி தனது 30 வயதுக்குள், ஓர் ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை என்றால், அவளை விவாகரத்து செய்ய கணவனுக்கு உரிமை உண்டு என்கிறது. இவற்றில் மோடி அரசின் தலையீடு என்ன?

இவர்கள் முன் வைக்கும் இந்துத்வ தத்துவத் தில் பெண்களுக்கு சம உரிமை கிடையாது. அன்றிலிருந்து இன்று வரை அதில் ஒரு தொடர்ச்சி உண்டு. 1950களில் இந்துமத கோட்பாட்டு மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, இந்து பெண்களுக்கு சொத்துரிமை, திருமணம், விவாகரத்து உரிமை கள் கொடுக்கப்படக் கூடாது என்று கடுமையாக எதிர்த்து வாதாடிய வர்கள் பாஜகவின் முன் னோடிகள் என்பது ஆவணங் களில் இருக்கிறது. ஆதர்ச புருஷனாக பாஜக முன்னிறுத்தும் சியாமா பிரசாத் முகர்ஜி தான், அன்று நாடாளு மன்றத்தில், பலதார மணத்தை வலுவாக ஆதரித் தார். இந்து திருமணத்தின் புனிதத்தை, அஸ்தி வாரத்தை ஏன் தாக்குகிறீர் கள்? என்று கேட்டார். அம்பேத்கர் அவர்கள், புனிதம் என்பது என்ன? ஆணுக்கு பல தாரம், பெண்ணுக்கு நிரந்தர அடிமைத்தனம் என்பது தானா என்று பதிலடி கொடுத்தார்.

1980களில் சதி என்கிற கொடிய உடன் கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல் கள் எழுந்த போது, சதி இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதி; எனவே அதை சட்டம் போட்டுத் தடுக்கக் கூடாது என்று சதியைப் பாதுகாக்க புறப்பட்டவர்கள் பாஜக வினர் தான். ஹரியானா பாஜக முதல்வராக இருந்த மனோஹர் லால் கட்டார், காப் பஞ் சாயத்துக்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்று சான்றிதழ் வழங்கினார். சுய விருப்பப்படி திரு மணம் புரிந்த தம்பதிகளைத் தேடிப்பிடித்து தீர்த் துக் கட்டுவது சிறப்பான செயல்பாடா? பாஜக ஆளும் மாநிலங்களில் பாட புத்தகங் களில், பெண்கள் வேலைக்கு போவதால்தான் வேலை யில்லா திண்டாட்டம் உருவாகிறது, பெண்கள் இயக்கங்கள் குடும்ப அமைதியை சீர்குலைக் கிறார்கள் என்று திருத்தங் கள் செய்தனர். பெண்கள் வீட்டோடு, சமையலறையோடு தங்கள் செயல்பாடு களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பல பிள்ளைகளை பெற்றுத் தருவது தான் அவர்கள் வேலை என்றும் சங்க பரிவாரத்தின் முக்கிய தலைவர்கள் பலமுறை பேசியுள்ளனர்.

கணவன் மனைவியைப் பாலியல் வல்லுறவு செய்தாலும் அது குற்றம் (marital rape) என்ற சட்ட ஷரத்து வேறு பல நாடுகளில் அமலில் இருக்கிறது. ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் இயக்கங்கள் அதை ஆதரித்தன. பெண்ணின் சம் மதம் இல்லாமல் அல்லது விருப்பத்துக்கு விரோ தமாக நடப்பது பாலியல் வல்லுறவு என்பதுதான் சட்ட வரையறை. அதைக் கணவன் செய்தாலும் குற்றம் என்பதுதான் பெண்கள் இயக்கத்தின் நிலைபாடு. குடும்ப வன்முறை சட்டம், வன்முறை என்பதன் வியாக்கியானத்தின் ஒரு பகுதியாக பாலியல்சார் வன்முறையையும் இணைத்திருக் கிறது. நிர்பயா கொலைக்குப் பின் உருவாக்கப் பட்ட வர்மா குழு அயசவையட சயயீந என்பதைக் குற்ற மாக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்த போது, ஐ.மு.கூ. அரசும் ஏற்கவில்லை. பின்னர் பாஜக அமைச்சரவையில் இடம் பெற்ற மேனகா காந்தி, இது இந்திய சூழலுக்குப் பொருந்தாது என்று நிராகரித்தார்.

பெண்ணடிமை புனிதமா?
குடும்பம் என்ற நிறுவனத்தின் புனிதத்தன்மை கெட்டு விடும்; குடும்ப அமைதி சீர்குலையும் என்பது அதற்கு சொல்லப்பட்ட ஒரு காரணம். பெண்ணடிமைத்தனம் என்பதே அந்த புனிதத்தின் மையம். அதுதான் அமைதியின் அஸ்திவாரம். மனுவின் வழி வந்தவர்கள் மனுவாதம் தான் பேசுவார்கள். மதத்தின் பேரால் ஒருகாலத்தில் மேல் சாதியினர் என்று கருதப்பட்ட பகுதியினர் மத்தியில் மட்டும் மேலோங்கியிருந்த இத்தகைய ஆணாதிக்க மதிப்பீடுகளை இந்து தர்மம் என்ற பெயரில் சங்க பரிவாரம் அனைத்து இந்துக்கள் மத்தியிலும் புகுத்த அன்றாடம் முனைகிறது. எனவே பாஜக அரசின் தலையீடு, மதவெறி அரசியலை முன்வைக்கிறதே தவிர, பெண்கள் மீதான அக்கறை இதில் கிஞ்சிற்றும் வெளிப்பட வில்லை. முத்தலாக் பிரச்னை பாஜகவுக்கு இஸ்லாமிய சமூகத்தை மோசமாக சித்தரிக்கவும் தாக்கவும் ஒரு தடி. அவ்வளவு தான்.

பெண்களின் உரிமை என்று வரும்போது பாஜகவும், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் ஒரே குரலில்தான் பேசுகின்றன. பெண்ணுக்கு சம உரிமை கோரினால், மதத்துக்கு ஆபத்து வந்து விட்டது என்றுதான் முழங்குகின்றன.

முற்போக்கு இயக்கங்கள்
முத்தலாக் முறை ஒழிக்கப் பட வேண்டும் என்ற இஸ்லாமிய பெண்களின் குரலை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. ஷா பானுவுக்கு அவரது கணவன் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முறியடித்து, ராஜீவ் காந்தி அரசு, குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 125 இஸ்லாமிய பெண்களுக்குப் பொருந்தாது என்று நிலை எடுத்து, அவர்களின் ஜீவனாம்சம் குறித்த பிரச்னைக்கான ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வந்தது. கணவன் 3 மாத காலத்துக்கு ஜீவனாம்சம் கொடுத்தால் போதும்; அதற்குப் பின் உறவினர் களும், வக்ஃபு வாரியமும் கொடுக்க வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பை அப்போதே, மத அடிப் படைவாதிகளுடன் காங்கிரஸ் சமரசம் செய் கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனநாயக மாதர் சங்கமும் விமர்சித்தன.

பின்னர் ஜனநாயக மாதர் சங்கம் இனி வரக் கூடிய புதிய சட்டங்கள், மத சார்பற்ற சட்டங் களாக, அதாவது அனைத்து மதங்களுக்கும் பொருந்துவதாக வரவேண்டும் என்பதை வலியுறுத் தியது. பின்னர் வந்த குழந்தை திருமண தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் போன்றவை அனைத்து மதங்களை சார்ந்தவர் களுக்கும் பொருந்தக் கூடியவையாகவே உருவாக் கப் பட்டன. 15 வயதில் திருமணம் செய்வதை எங்கள் மதம் அனுமதிக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். தனது கருத்தைக் கேட்காமல் தன்னை விவா கரத்து செய்வது, ஜீவனாம்சம் மறுப்பது போன்ற வற்றைக் கூட, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத் தின் கீழ் இஸ்லாமிய பெண்களால் கொண்டு வர முடியும் என்று பிளேவியா ஆக்னஸ், கீதா ராமசேஷன், கீர்த்தி சிங் போன்ற வழக்கறிஞர்கள் கருத்து கூறுகின்றனர்.

சம உரிமை – சமமான சட்டம்
தற்போதைய பிரச்சனையில் கூட, இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து சட்டத்தை இருபாலாருக் கும் பொருந்துவதாக மாற்றினால் (gender neutral) தீர்வு கிடைக்கும் என்பது வழக்கறிஞர் கீதா ராமசேஷன் போன்றவர்களின் ஆலோசனை.

அடுத்து, பொது சிவில் சட்டம் என்பது முன்னுக்கு வந்த போது, ஜனநாயக மாதர் சங்கம், ‘பொது’ என்பது எப்படி வேண்டுமானாலும் வரையறுக்கப்படும். இந்து மத சட்டங்களின் அடிப்படையில் கூட இருக்கலாம். அனைத்து மத சட்டங்களிலும் உள்ள ஆணாதிக்க கோட்பாடு கள் தொடரக்கூடும் என்று விமர்சித்து, பாலின சமத்துவத்தின் அடிப்படையில் சட்டங்கள் சமமாக்கப்படுவது பற்றி சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில் சம உரிமை – சமமான சட்டம் என்ற ஆலோசனையை முன்வைத்தது. மார்க்சிஸ்ட் கட்சி, ஒரே மாதிரி ஆக்குவது (uniformity) என்பது சமத்துவத்தை (equality) உறுதி செய்வதாகாது என்று பாஜகவின் பொது சிவில் சட்ட ஆலொ சனையை விமர்சித்தது. இந்து மதம் உட்பட அனைத்து மதங்களிலும் சீர்திருத்தங்கள் வர வேண்டும் என்று கூறியது. சீர்திருத்தங்கள் கோரும் குரல்கள் அந்தந்த சமூகத்துக்குள்ளிருந்து வெளிவர வேண்டும் என்பது உணரப்பட்டது.

உச்சநீதிமன்றம், தற்போது, முத்தலாக் பிரச் சனையை மட்டும் எடுத்துக் கொள்ளப் போவ தாகவும், பலதார மணம், நிக்கா ஹலாலா ஆகியவற்றை எடுப்பதில்லை எனவும் தீர் மானித்திருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது.
மதங்கள், சமத்துவ கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதில்லை. பெண்ணைத் தாழ்ந்த அந்தஸ்து கொண்டவராகவே கருதுகின்றன. அனைத்து மதங்களிலும் இருந்து இதற்கான எண்ணற்ற உதாரணங்களை எடுக்க முடியும். மதம், ஆதிக்க சக்திகளால், ஒடுக்குமுறையாளர்களால் ஆதிக்கத் தையும், ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மதம் ஒடுக்கப்பட்டவர் களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும் இருப்பது ஒரு வகை யதார்த்தம் என்பதை தெளிவுபடுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ் அதே சமயம், ஒடுக்கப்படுபவர்கள் புற உலகில் அனுபவிக்கும் கொடுமைகள், சுரண்டல் கள், பிரச்னைகளின் உண்மையான பின்புலத்தை உணர்வதிலிருந்து அவர்களை மதம் அப்புறப் படுத்துகிறது; மரத்துப் போக வைக்கிறது என்ப தையும் ‘மதம் மக்களின் (உணர்வை மழுங்கடிக் கும், வழியை மறக்கடிக்க முனையும்)அபின்’ என்ற தனது வரிகள் மூலம் குறிப்பிட்டுள்ளார்..

மறு உலகில், அடுத்த பிறவியில் நல்லது நடக் கும்; இந்த பிறவியில் தற்போது இருப்பதே நீடிக் கும் (status quo); எனவே இந்த உலகில் போராட வேண்டியதில்லை என்று நம்ப வைக்கின்றன பல மதங்களின் போதனைகள்.
மதம் ஒரே நேரத்தில், நிஜமான துன்பங்களின் வெளிப்பாடாகவும், அந்த துன்பங்களின் எதிர்ப்பு குரலாகவும் இருக்கிறது. பெண்ணடிமைத்தனம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதிய பாகுபாடு களில் நொந்து, அவற்றிலிருந்து விடுபட மதத்தை மக்கள் நாடுகின்றனர். மறுபக்கம், மதம் என்ற போர் வையில் இந்த ஒடுக்குமுறைகளை மூடி மறைக்க, தலைவிதி என்று நியாயப்படுத்த ஆண்டாண்டு காலமாக முயற்சிகள் நடந்து கொண்டே இருக் கின்றன. இந்த சிக்கலுக்கு நடுவே பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து இஸ்லாமிய சமூகத்துக்குள் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன என்பது வரவேற்கத் தகுந்தது. இது, இன்னும் அனைத்து மதங்களுக்குள்ளும், சமத்துவத்தை நோக்கிய கூடுதலான சீர்திருத்தங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும். சமத்துவத்துக்கான ஒட்டு மொத்த போராட்டத்தின் ஒரு பகுதியே இது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s