அண்மைக்காலங்களில் பாஜகவும் சங்க பரிவாரத்தின் சில அமைப்புகளும் டாக்டர் அம்பேத்கரை பெரிதும் மதிப்பதாக கூறி வரு கின்றனர். அவருக்கு நினைவு சின்னங்கள் எழுப்புவது, அவரது உருவச்சிலைகள் அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அம்பேத்கர் இந்துத்வாவை எதிர்க்கவில்லை என்றும் அவர் முன்வைத்த தத்துவங்களுக்கும் ஆர் எஸ் எஸ் தத்துவங்களுக்கும் முரண்பாடே இல்லை என்றுகூட பேசுகின்றனர். உண்மை யில் அம்பேத்கர் அவர்களை சங்கபரிவாரத்தின் மூலவர்களுடன் ஒப்பிட்டு அவரை தங்கள் இயக்கத்தின் இலக்கண இலட்சிய நபராக சித்தரிப்பதில் ஏதேனும் உண்மை உண்டா?
பா ஜ க / ஆர் எஸ் எஸ் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வது நகைப்புக்கு உரியது. சங்க பரிவாரம் அம்பேத்கரை தங்களுக்கு தத்துவார்த்த அடிப்படையில் நெருங்கியவர் என்று சித்தரிக்க முயல்வது தலித் மக்கள் மத்தியிலும் அம்பேத்கர் அவர்களை மதிக்கும், போற்றும் கோடிக்கணக் கான மக்கள் மத்தியிலும் சங்க பரிவாரத்தின் செல்வாக்கை புகுத்தும் குறுக்குவழி முயற்சிதான். சில ஆண்டுகளாகவே இது நடக்கிறது. பா ஜ க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு முயற்சிகள் அதிகமாகியுள்ளன. 2015ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆங்கில வெளியீடான ஆர்கனைசர் பத்திரிக்கையும் இந்தி ஏடான பாஞ்சஜன்யாவும் பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களை புகழும் சிறப்பு மலர்களை வெளி யிட்டனர். மோகன் பகவத் பிப்ரவரி 2015 இல் ஆற்றிய ஒரு உரையில் அம்பேத்கர் சங்க பரி வாரத்தின் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் என்றே ஒரு போடு போட்டார்! இன்றும் ஆர் எஸ் எஸ் இந்த தன்மையில் தனது பிரச்சாரத்தை தொடர்கிறது. ஆனால் உண்மை முற்றிலும் வேறு.
பா ஜ க இந்துத்வா கோட்பாட்டை ஏற்று கடைப்பிடிக்கிறது. தனது பொருளாதாரக் கொள்கைகளை பொருத்தவரையில் நவீன தாராளமய கொள்கைகளை மிகத்தீவிரமாக அமலாக்குகிறது. இந்த இரண்டையுமே டாக்டர் அம்பேத்கர் முழுமையாக எதிர்த்தவர்.
அம்பேத்கரும் இந்துத்வாவும்
இந்துத்வா தத்துவம் பிராமணீய இந்து மத கோட்பாடுகளை முன் நிறுத்துகிறது. சாதி அமைப்பையும் சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்கு முறையையும் ஒரு போதும் பா ஜ க எதிர்த்ததில்லை. மதசார்பற்ற இந்தியா என்ற கோட்பாட்டை நிராகரித்து இந்து ராஷ்டிரம் என்ற முற்றிலும் தவறான கோட்பாட்டை முன்வைக்கிறது. இந்திய மக்களை நேசித்த, தலித் மக்களுக்காக மட்டுமின்றி அனைத்து இந்திய உழைப்பாளி மக்களின் மேம்பாட்டிற்காக அரும் பாடுபட்ட அம்பேத்கர் எந்த மதத்தினரையும் வெறுக்கவில்லை. ஆனால் மிகத்தெளிவாக ஒன்று சொன்னார்: “பிராமணீய இந்துமதம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதன் அடிப் படையில், இந்த மதம் ஜனநாயகத்திற்கு முற்றிலும் முரணானது.”
சாதி அமைப்பை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முன்பின் முரணற்று முழங்கியது மட்டுமின்றி அதற்காக தனது வாழ்நாளில் கணிசமான பகுதியை செலவழித்தவர் அம்பேத்கர். அற எஸ் எஸ் இயக் கத்தின் மூலவர்களில் முக்கியமான நபரான சவர்க்கார் பற்றி அம்பேத்கர் கூறுகிறார்: “சவர்க் கார் இந்தியாவில் முஸ்லிம், இந்து என்று இரு பிரிவினர் உள்ளனர். இருந்தபோதிலும், இந்தியா இருதேசங்களாக பிளவுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறார். இருவரும் ஒரு நாட்டில் வாழ வேண்டும். அந்த நாட்டின் அரசியல் சாசனம் இந்துக்களின் ஆதிக்கத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும். அவர்கள்கீழ் இஸ்லாமியர்கள் இருக்கவேண்டும் என்பது சவர்க்கரின் நிலைப் பாடு.” இவ்வாறு ஆர் எஸ் எஸ் சின் இந்துராஷ்டிரா தத்துவத்தை அம்பலப்படுத்தி, இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், புத்திஸ்ட் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் இணைந்து சமமாக வாழும் நாடாக இந்திய இருக்கவேண்டும் என்று வாதாடுகிறார், அம்பேத்கர். “இந்து ராச்சியம் ஒன்று உருவானால், அதைவிட மிகக்கொடிய துயரம் இந்த நாட்டுக்கு வர முடியாது” என்று கூறினார்.
அம்பேத்கர் தலைமையில், அவரது மிகச் சிறந்த பங்கின் அடிப்படையில் உருவான இந்திய அரசியல் சாசனத்தை ஆர் எஸ் எஸ் கடுமையாக சாடியது. நவம்பர் 26, 1949 அன்று அரசியல் சாசனம் இறுதி செய்யப்பட்டது. நான்கு நாட்கள் கழித்து நவம்பர் 30 அன்று ஆர் எஸ் எஸ் அமைப்பு மனுஸ்மிருதி தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக இருந்திருக்க வேண்டும் என்று பொருள் பட தனது ஏட்டில் தலையங்கம் தீட்டியது.
ஆர் எஸ் எஸ் தத்துவத்திற்கு நேர் மாறாக, ‘சமூக, பொருளாதார மறுமலர்ச்சிக்கான திட்டத்தின் அடிப்படையில், பல பிரிவினரும் கலந்த அரசியல் கட்சிகள் உருவாவது அவசியம். இதன் மூலம் இந்து ராச்சியம், முஸ்லிம் ராச்சியம் என்ற இரு அபாயங்களையும் தவிர்க்க முடியும்.’ என்று அம்பேத்கர் வலியுறுத்தினார்.
தத்துவ அடிப்படையில் ஆர் எஸ் எஸ் அமைப்பை அம்பேத்கர் நிராகரித்தார் என்பது தெளிவாக உள்ளது. நடைமுறையில் நமது அனுப வம் என்னழூ அம்பேத்கர் பெயரை பயன்படுத்த முயன்றுவரும் பா ஜ க வின் கடந்த மூன்றாண்டு ஆட்சியிலும் சாதி ஒடுக்குமுறைக்கு பக்கபலமாக மத்திய அரசும் பா ஜ க தலைமையிலான மாநில அரசுகளும் செயல்படுவதை நாம் பார்க்கிறோம். அவர்களின் தலித் விரோத, முஸ்லிம் விரோத போக்குகள் அம்பலமாகி வருகின்றன. சமூக நீதிக்கு எதிர்ப்பு, இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அவ்வப்பொழுது அதன் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள், நிலச்சீர்திருத்தத்தை கிடப்பில் போடுவது மட்டுமின்றி நில ஏகபோகத்தை ஊக்குவிப்பது உள்ளிட்ட பா ஜ க கொள்கைகளும் நடைமுறைகளும் அம்பேத்கர் அவர்களுக்கும் சங்க பரிவாரத்திற்கும் இடையே நிலவுவது முழு முரண்பாடு தான் என்பதை காட்டுகிறது.
அம்பேத்கரும் தாராளமயமும்
பா ஜ க ஆர் எஸ் எஸ் அரசாங்கத்தின் தீவிர தாராளமய கொள்கைகளை அம்பேத்கர் பல பத்தாண்டுகளுக்குமுன்பே தத்துவ அடிப்படையில் நிராகரித்தார். பொருளாதார வளர்ச்சியில் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முழு மையான நிலசீர்திருத்தம் வேண்டு மென்றார். முதலாளித்தவ பொருளா தார அமைப்பில் அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வுகளை அவர் அறிந்திருந்தார். அவற்றை சாடினார்.
“நிலம் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். அரசு கூட்டு உறவு அடிப் படையில் பாடுபடும் விவசாயிகளின் குழுக்களுக்கு நிலத்தை குத்தகைக்கு தர வேண் டும். வேளாண் வளர்ச்சிக்கு அனைத்து உதவி களையும் அரசு செய்ய வேண்டும்” என்று அம்பேத்கர் கூறியுள்ளார். இந்திய அரசியல் சாசன வரைவு கட்டத்தில் சில முன்மொழிவுகளை அம்பேத்கர் வைத்தார்:
பொருளாதார சுரண்டலை அரசு எதிர்க்க வேண்டும்
முக்கியமான தொழில்கள் அரசுடமையாகவும், அரசால் நடத்தப்படுபவையாகவும் இருக்க வேண்டும்.
இதர அடிப்படையான தொழில்கள் அரசால் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்பட வேண்டும்.
வேளாண் தொழில், அரசு நிலங்களை கையகப்படுத்தி, விவசாயிகளின் கூட்டமைப்பு களுக்கு குத்தகை கொடுத்து, நடந்த்தப்பட வேண்டும்.
அம்பேத்கர் தெளிவாக சொன்னார்: “அரசு சோசலிசம் இந்தியாவின் வேகமான தொழில் வளர்ச்சிக்கு மிக அவசியம். தனியார் துறை இதனை செய்ய இயலாது.”
தாராளமய தத்துவத்தை அம்பேத்கர் கடுமையாக தாக்கினார். “அரசு தலையிடாவிட்டால் சுதந்திரம் (வெல்லும்) என்ற கூற்றை பற்றி அவர் சொல் கிறார்: யாருக்கு இந்த சுதந்திரம்? நிலபிரபுக் களுக்கு குத்தகையை கூட்டவும், முதலாளி களுக்கு வேலை நேரத்தை கூட்டவும் கூலியை குறைக்கவும் தான் இந்த சுதந்திரம்!”
எனவே சங்க பரிவாரம் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வது முற்றிலும் அபத்தமானது. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு என்று அனைத்து தளத்திலும் அம்பேத்கர் ஆர் எஸ் எஸ் /சங்க பரிவாரத்திலிருந்து முற்றிலும் முரண்படுபவர். முற்போக்கு முகாமிற்கு அவரது சிந்தனைகள் பேராயுதமாக அமையும்.
Leave a Reply