தொடர்ந்து நீடித்துவரும் எதேச்சாதிகார அபாயம் …


தமிழில்: வீ.பா.கணேசன்

1975 ஜூன் 26 துவங்கி 1977 மார்ச் வரை 19 மாதங்களுக்கு நீடித்த உள்நாட்டு அவசரநிலைக் காலம் இந்திய வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக அமைந்தது. அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருந்த உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, தனிமனிதன் உயிர் வாழ அரசால் உத்தரவாதம் அளிக்க முடியாது என அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதி மன்றத்தில் வெளிப்படையாகக் கூறிய தருணம் அது.
நாடாளுமன்றத்திற்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசின் நடவடிக்கைகள் பற்றிக் கருத்து கூறுவதற்கு அதுவரை இருந்து வந்த உரிமைகளும் கூட பறிக்கப்பட்டு அவை தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. எனினும் வெடித்தெழுந்த மக்களின் கோபத்தால் காங்கிரஸ் அரசு மத்திய ஆட்சியை இழந்து நின்றது. காங்கிரஸ் கட்சியால் தனது ஏகபோக அதிகாரத்தை நிலைநாட்ட முன்பு போல் முடியவில்லை. அவசர நிலை காலத்தை எதிர்த்ததாக பீற்றிக்கொள்ளும் சங் பரிவாரம், உண்மையில் அவசர நிலை மீது கள்ள நேசம் கொண்டிருந்தது.
இன்றைய பாஜக அரசின் கடந்த மூன்றாண்டு காலச் செயல்பாடுகள் அதன் ஒற்றைக் கலாச்சார நோக்கத்தை நாட்டில் படிப்படியாக நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளாகவே இருப்பதைக் காண முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமையேற்று ஆட்சியமைத்தபோதும் சரி, இப்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும்போதும் சரி, அறிவிக்கப்படாத அவசரநிலையை நிலைநிறுத்தி வருகிறது. நவீன தாராளமய, தனியார் மய, உலக மயமாக்கலை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மாநிலங்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்படுகிறது. மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகள் அவசரச் சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்களின் வழியே பறிக்கப்படுகின்றன.
பசுப்பாதுகாப்பின் பெயரிலும், காதலர்களை மிரட்டும் கும்பல்களின் பெயரிலும் – தனியார் ராணுவங்களின் வன்முறைகள் அனுதினமும் அரங்கேற்றப்படுகின்றன. இத்தகைய பின்னணியில் நாட்டின் அவசர நிலைக்கான முயற்சி 1977ஆம் ஆண்டோடு முடிந்து விடவில்லை; அதன் எதேச்சாதிகாரக் கூறுகள் ஏகபோக, பெருமுதலாளித்துவ ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கையாளப்பட்டு வருகின்றன என்ற உண்மையை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், 2003 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இக்கட்டுரையை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

– ஆசிரியர் குழு

ஜூன் 26, 1975 . இதே நாளில்தான் இந்தியாவில் உள்நாட்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக குறிப்பிடத்தக்க தொரு நிகழ்வாக, மிகக் குறைந்த காலத்திற்கே என்றாலும் கூட, நாட்டில் எதேச் சதிகார ஆட்சியைக் கொண்டு வந்ததாக இந்தச் சம்பவம் எப்போதும் இருந்து வருகிறது. 19 மாத காலம் நீடித்த இந்த அவசரநிலை காலத்தில் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான தலைவர் களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப் பட்டிருந்த ஜனநாயக உரிமைகளும், மனித உரிமைகளும் நிறுத்தி வைக் கப்பட்டன.
நாடாளுமன்றம் கிட்டத்தட்ட செயலற்ற நிலையில் இருந்ததோடு, நாடாளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைகளும் கூட தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. உள்நாட்டில் ஏற்பட்ட இடையூறுகளின் விளைவாக இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்ற அடிப்படையில்தான் இந்திரா காந்தி இத் தகைய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற் கொண்டார்.

1970 களின் பிற்போக்கு ஆட்சி
முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப் பிற்குள் நிலவிய ஆழமான நெருக்கடியின் வெளிப் பாடாக, ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சி யாகவும் உள்ள முதலாளித்துவ – நிலப் பிரபுத்துவ கட்சி களுக்கிடையே ஏற்பட்ட கூர்மையான மோதலே ஜனநாயகத்தின் மீதான இத்தகைய மோசமான தாக்குதலுக்கு வழி வகுத்தது. வெட்டிக் குறைக்கப்பட்ட ஜனநாயகத் துடன் கூடிய பிற்போக்குத்தனமான ஆட்சி என்ற இந்தப் பரிசோதனை நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியவில்லை. ஜன நாயக உரிமைகள் நெறிக்கப் பட்டதும், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் கட்டவிழ்த்து விடப் பட்ட கொடுமைகளும் ஒரு வெகுஜன எழுச்சிக் கான சூழ்நிலைகளை உருவாக்கின.

மார்ச் 1977-ல் நடைபெற்ற, திருமதி. காந்தி திடீ ரென அறிவித்த, பொதுத்தேர்தலில் எதேச்சதி கார ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் வெடித்தெழுந்தது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் பயமுறுத்தி அடக்கி வைக்கப்பட்டுள்ள நிலை யில் காங்கிரஸ் மிக எளிதாக மீண்டும் ஆட்சியதி காரத்திற்கு வந்துவிட முடியும் என்று அவர் தவறாகக் கணக்குப் போட்டார். அதற்கு மாறாக, இந்திய விடுதலைக்குப் பிறகு முதன்முறையாக காங்கிரஸ் கட்சி மத்திய அரசு ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனதா கட்சியின் தலைமையில் காங்கிரஸ் அல்லாத முதல் கூட்டணி அரசு பொறுப்பேற்றது. ஒரு வகையில் பார்க்கும்போது மிகவும் மதிக்கப்படும் மக்களின் உரிமைகளின் மீது தாக்குதல் தொடுப் பது என்ற இந்த அதிரடியான முடிவிலிருந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து மீளவே முடியவில்லை.

தொடரும் அச்சுறுத்தல்
கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு இன்று பார்க்கும்போது நாட்டில் நிலவும் அரசியல், தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்த முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசுகளின் தன்மை ஆகியவை ஜனநாயகத்திற்கான அச்சுறுத் தல், எதேச்சாதிகாரம் தலையெடுப்பதற்கான வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது. அவசரநிலையின் அனுபவம் குறித்த பரிசீலனையை மார்க்சிஸ்ட் கட்சி மேற் கொண்டபோது, அவசர நிலைக்குப் பிறகு நடை பெற்ற 10வது காங்கிரசின் அரசியல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு எச்சரித்தது.
“மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் உதவி, உலக முதலாளித்துவ சந்தை ஆகியவற்றின் மீது அதிகரித்துக் கொண்டே போகும் சார்பு நிலை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் அழைப்பு ஆகியவை எதேச்சதிகார சக்திகளை வலுப்படுத்துவதே ஆகும். ஏகபோகவாதிகள், பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகிய பிரி வினரின் மேலாதிக்கமானது இந்தியப் பொருளா தாரத்தை அதன் பிடிக்குள் தொடர்ந்து வைத் திருக்கும் நிலையில், அதில் ஏதாவதொரு குழு நாட்டில் சர்வாதிகாரத்தை நிறுவி தனது ஆட்சியை நீடித்திருக்கச் செய்ய முயற்சிகளை செய்து கொண்டே இருக்கும். இதில் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினரையோ அல்லது கட்சியையோ ஜனநாயகத்திற்கு விசுவாசமானதாக, சர்வாதிகார எதிர்ப்புணர்வில் உறுதி பூண்டதாக இருப்பதாக அடையாளப்படுத்துவது தவறானதாகும்.”

இந்தத் தீர்மானத்தில் குறிப்பாக விடுக்கப் பட்டுள்ள எச்சரிக்கை இன்றும்கூட பொருத்த மானதே. அவசர நிலையை எதிர்த்த போராட்டம், அந்த அவசர நிலை ஆட்சியை நிரகாரித்தது ஆகியவை எழுபதாம் ஆண்டுகளில் மக்களிடம் நிலவிய ஜனநாயக உணர்வை சுட்டிக் காட்டுவ தாக இருந்தது. ஜனநாயக உரிமைகள், நாடாளு மன்ற ஜனநாயக அமைப்பு ஆகியவற்றின் மீதான எந்தவொரு தாக்குதலும் மக்களால் உறுதியோடு எதிர்க்கப்படும் என்று ஆளும் வர்க்கங்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் அது இருந்தது.

எனினும் கடந்த இருபதாண்டுகளில் முதலா ளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியின் தாக்கத் தின் விளைவாக நாடாளுமன்ற ஜனநாயக நிறு வனங்கள் தொடர்ந்து அரித்துப் போகத் தொடங் கியதோடு, வகுப்புவாத, பிரிவினைவாத சக்தி களின் வளர்ச்சிக்கு ஏற்ற செழிப்பான அடித்தளத் தையும் வழங்கியது.

பிஜேபியின் எதேச்சாதிகாரப் போக்கு
அவசரநிலை அமல்படுத்திய நாளை நினைவு கூறும் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி அவசர நிலைக்கு எதிரான தங்களது சான்றாவணங்களை எடுத்துக் கூறுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. எனினும் இன்று எதேச்சதிகார அபாயம் இந்த ஆதாரத்திலிருந்துதான் வெளிப் படுகிறது என்ற உண்மையிலிருந்து நம்மால் விடுபட்டு விட முடியாது. 1998ஆம் ஆண்டிலி ருந்து கடந்த ஐந்தாண்டுகளாக பிஜேபி தலைமை யிலான அரசுதான் நாட்டை ஆண்டு வந்தது. அடிப்படையிலேயே ஜனநாயக விரோதமான, எதேச்சதிகாரப் போக்கு கொண்டுள்ள ஆர்.எஸ். எஸ். அமைப்பின் ஒரு கருவிதான் பிஜேபி. அதன் பாசிச தத்துவம் பலவந்தமான வகையில் பெரும் பான்மை ஆடசியையும், ராணுவ வாதத்தையும் போற்றுவதே ஆகும்.

தாராளமயக் கொள்கையை செயல்படுத்த வும், சர்வதேச நிதி மூலதனத்திற்கு ஏற்ற வகையில் தனது பொருளாதாரக் கொள்கை களை உருவாக் கவும் நமது நாடு செயல்படத் துவங்கிய நேரத்தில் தான் இந்துத்துவாதத்து வம் வலுப்பெறத் துவங்கியது. சர்வதேச மூல தனம், அதனோடு கூட்டு சேர்ந்துள்ள உள் நாட்டுப் பெருமூலதனம் ஆகியவற்றின் கோரிக் கைகள் ஜனநாயகத்திற்கு மேலும், மேலும் வரம்பிட்டு, தனது நடவடிக்கைகளுக்கு உகந்த வகையிலான சூழ்நிலையை உருவாக்க, அவை ஜனநாயகத்தை மேலும் குறுக்கு கின்றன. எதேச் சதிகாரத்தின் செயல்பாட்டுத் திறன் கீழ்க்கண்ட இந்த இரண்டு ஆதாரங்களி லிருந்துதான் எழு கின்றன. பெரும்பான்மை வகுப்பு வாத எழுச்சி, தாராள மயவாதத்தின் தாக்குதல் ஆகியவையே அவை.

பெரும்பான்மை இல்லாத நிலை
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிஜேபி ஒரு கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கி வந்தது. நாடாளுமன்றத்தில் தனக்கேயான அறுதிப் பெரும்பான்மையை அதனால் பெற முடிய வில்லை. இத்தகைய பலவீனம் இருந்த போதிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொலைநோக்குத் திட்டத்தை முறையாக முன்னெடுத்துச் செல்வ தில் பிஜேபி தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இவ்வாறு செய்யும்போது ஜனநாயகத்தை நிலை குலையச் செய்வது அல்லது தனது அதிகாரத்தை ஜனநாயகத்திற்கு விரோதமான வகையில் நிலை நிறுத்திக்கொள்ள உதவும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதிகளை பயன்படுத்திக் கொள்வது ஆகியவற்றில் பிஜேபி எவ்வகையிலும் தயக்கம் கொள்ளவே இல்லை. மாநில அரசு களில் அங்கம் வகிக்கும் தனது அரசியல் எதிரி களுக்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவு பயன்படுத்த அது முயற்சிக்க வில்லை என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் இத்தகையதொரு நடவடிக்கையை நியாயப்படுத் தும் வகையில் மாநிலங்களவையில் அதனால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை என்பதே அதற்குக் காரணம்.

மாநிலங்களவையில் பிஜேபிக்கு அத்தகைய பெரும்பான்மை மட்டும் இருந்திருக்குமானால் பிஜேபி அல்லாத மாநில அரசுகளில் பெரும் பாலானவை அபாயத்திற்கு ஆளாகியிருக்கும். அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி எழுத வேண்டும் என்ற தனக்கு மிகவும் விருப்பமான நோக்கத்தையும் பிஜேபியினால் நிறைவேற்ற முடியாததற்கும் நாடாளுமன்றத்தில் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததே காரணமாகும். அவ்வாறு செய்யக் கூடிய நிலையில் மட்டும் அது இருந்திருக்குமானால், நாடாளுமன்ற வகைப்பட்ட அரசுமுறையை மாற்றிவிட்டு, அதிபர் முறையிலான ஆட்சி அமைப்பை பிஜேபி உருவாக்கியிருக்கும். தேவை யான பலம் மட்டும் நாடாளுமன்றத்தில் அதற்கு இருந்திருக்குமானால், அரசியல் அமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய் வதற்கான கமிஷனின் ஒரு சில பரிந்துரைகளை மட்டும் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து அது மேற் கொண்டிருக்கும். மாநில சட்டமன்றங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெளிப்படையான வாக்கெடுப்பு என்ற சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம் தேர்தலுக் கான ரகசிய வாக்கெடுப்பு என்ற குறிக்கோளும் கூட நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது.

அடக்குமுறை – சட்டங்கள்
வகுப்புவாதத்தினால் உந்தப்பட்டதோர் ஆட்சி தன் அதிகாரத்தைச் செயல்படுத்துவது என்பது மேலும் அபாயகரமான விஷயமாகும். சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முடுக்கி விடப்பட்டு நடத்தப்படும் அழித் தொழிப்பு நடவடிக்கைகள் எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை குஜராத் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. நாட்டின் குடிமக்களுக்கான ஜன நாயக உரிமைகள் பொதுவாகவே நீர்த்துப் போய்க் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இரண் டாந்தர குடிமக்களாக வாழ்வதற்கு அவர்கள் தயாராக இல்லையெனில் உயிர் வாழ்வதற்கான உரிமையும் கூட சிறுபான்மையினரிடமிருந்து பறிக்கப்படுகிறது.
மிசா சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் சிறை யிலடைக்கப்படுவது அவசர நிலை காலத்தில் மிகப் பரவலான ஒன்றாக இருந்தது. மிசா சட்டத்தையும், பின்னர் வந்த தடா சட்டத்தையும் முனைப்போடு எதிர்த்து நின்ற பிஜேபி ஆட்சி யாளர்கள்தான் இப்போது அவற்றை விட மிக வும் கொடூரமான, அடக்குமுறைத் தன்மை கொண்ட பொடா சட்டத்தை இயற்றி இருக் கிறார்கள். இதைச் சட்டமாக ஆக்குவதற்காக வாஜ்பேயி அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தின் கூட்டுக் கூட்டத்தை கூட்டுமளவிற்குச் சென்றது. அதிகாரத்தில் உள்ள அரசுகளால் விரும்பப்படாதவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்படுவதற்கு பொடா சட்டம் பயன் படுத்தப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியோ அல்லது தமிழ்நாட்டில் ஜெயலலிதாவோ, தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக பொடாவைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை. பிஜேபியை பொறுத்த வரையில், சிறுபான்மையினருக்கு எதிரான வலுவான ஆயுதமாக பொடா திகழ் கிறது என்பதை குஜராத் மாநிலத்தில் பெரு மளவில் அதைப் பயன்படுத்தியதிலிருந்து புலப் படுகிறது.

ஊடகங்கள் மீது தாக்குதல்
பிஜேபி ஆட்சியின்கீழ் எதேச்சதிகாரத்தின் அறிகுறிகள் வளர்ந்துள்ளன என்பதோடு அனைத்துத் துறைகளிலும் அவை ஊடுருவி யுள்ளன. ஊடகங்களின் மீதான தாக்குதல்கள் மேலும் மேலும் மோசமாகி வருகின்றன. அதனை முன்னின்று நடத்தியவர்கள், பத்திரிகையாளர் கள் மீது துன்புறுத்தல், தனிமைப்படுத்தல் ஆகிய வற்றை ஓர் இயக்கமாகவே நடத்தி தெஹல்கா. காம் இணையதளம் இழுத்து மூடப்பட்டது. பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் மீதான பல்வேறு மாநில அரசுகளின் தாக்குதல்களின் எண்ணிக்கையும் கூட அதிகரித்துள்ளது.

பிஜேபி ஆட்சி மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமை களை மிக மோசமான வகையில் தடுப்பதற்கு வழிவகுக்கின்ற பல்வேறு எதேச்சதிகார நட வடிக்கைகளை நிறுவனமயமாக்குவதே ஆகும்.

சங்க உரிமைகளுக்கு வெட்டு
தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமை களுக்கு தடை விதிக்கின்ற வகையில் சட்டங்களை திருத்துவதற்கான முன்வரைவுகள் தயாரிக்கப் பட்டுள்ளன. இதற்கிடையே வெளிநாட்டு மூலதனத்தை திருப்திப்படுத்துவதற்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்க உரிமைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
சங்கம் அமைத்து, எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை யைக் கூட கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறை அதிகாரிகளின் தலையீடுகளும் அதிகரித்துள்ளன. பல்வேறு பொது இடங்களி லும் ஆர்ப்பாட்டங்களை, கூட்டங்களை நடத்து வதற்கு எதிராக தடையுத்தரவுகளை பிறப்பிப்பது வழக்க மானதொரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

தாராளமயச் சூழலானது அரசின் அனைத்து நிறுவனங்களிலும் ஊடுருவியுள்ளன. இதில் நீதித் துறையும் விதிவிலக்கல்ல. சமீப ஆண்டுகளில் மேல்மட்ட நீதிமன்றங்கள் முழு அடைப்பிற்கும் வேலைநிறுத்தங்களுக்கும் தடைவிதித்துள்ளன. சில நீதிமன்றத் தீர்ப்புகள் எப்போது கிளர்ச்சிகள் நடத்தப்பட வேண்டுமென்று, அதற்கான நேரத் தையும் கூட குறுக்கியுள்ளன. ஒன்று கூடுவதற் கும், அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை அளிப்பதற்குமான மிகவும் அடிப்படையான ஜனநாயக உரிமையும் கூட மிக மோசமான வகையில் வெட்டிக் குறுக்கப்பட்டுள்ளது.

கேரள உயர்நீதிமன்றம் சமீபத்தில் வெளி யிட்ட உத்தரவு ஒன்றில் கல்வி வளாகங்களில் மாணவர் அமைப்புகளின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை தடை செய்வதற்கான அதி காரத்தை அந்தந்த கல்வி நிறுவனங்களின் நிர்வா கங்களுக்கு வழங்கியுள்ளது. தனியார் கல்வி நிறுவன நிர்வாகங்கள் இந்த உத்தரவை மிகுந்த ஆர்வத்தோடு செயல்படுத்தத் துவங்கியுள்ளன.

தேசிய வெறி
தேசிய வெறியையும் மூர்க்க குணத்தையும் வளர்த்தெடுப்பதற்கானதொரு சூழ்நிலையை பிஜேபி திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. எல்.கே. அத்வானியின் கூற்றுப்படி இந்தியா நிரந்தர மாகவே போருக்கான முனைப்புடன்தான் இருந்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட் டத்தை, குறிப்பாக ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்று அமெரிக்கா அறிவித்த பிறகு அரசின் அடக்குமுறைக்கான கருவிகள் அனைத் தையும் வலுப்படுத்தவும், தங்கள் வழியில் குறுக்கே நிற்பவர்கள் அனைவருக்கும் எதிராக அவற்றைப் பயன்படுத்தவும் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி முயன்று வருகிறது.
எதேச்சாதிகார அபாயம் என்பது ஜன நாயகத்தின் மீதான இந்த நேரடியான தாக்குத லோடு முடிந்து விடுவதில்லை. மாறாக, தத்து வார்த்த கலாச்சாரத் துறைகளிலும் அது மறை முகமாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வரு கிறது. இந்துத்துவாவின் நலன்களுக்கு ஏற்ற வகையில் கலாச்சாரத்தை திருத்தி அமைப்பதற் கும், கல்வி அமைப்பை தமக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதற்கும், முரளி மனோகர் ஜோஷி, அவரது அடிவருடிகளின் முயற்சிகள் அறிவுக்கான சுதந்திரம், ஜனநாயகப் பூர்வமான கலாச்சார மதிப்பீடுகள் ஆகியவற்றுக்கு மிக மோசமான அச்சுறுத்தலாக அமைகின்றன. இந்துத்துவா சக்திகளின் உலகக் கண்ணோட்டத் துடன் ஒத்துப் போகாத அறிவுஜீவிகள், கலைஞர் கள், நிறுவனங்களின் மீது அவிழ்த்து விடப்படும் அவதூறுகள் இத்தகைய எதேச்சதிகார முயற்சி களின் பக்க விளைவே ஆகும்.

முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்பின் பங்கு
எதேச்சதிகாரத்தின் பரவலான அபாயமானது முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்பின் செயல்முறையிலிருந்தே முகிழ்கிறது. தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற் கெனவே வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் மூலம் ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய கட்டாயத் திற்கு ஆளும் வர்க்கங்கள் அதிகமான அளவில் ஆளாகின்றன. எனவேதான் இந்துத்துவ திட்டத் தின் எதேச்சதிகாரமானது, அவர்கள் அளவில் இந்துத்துவ கண்ணோட்டத்தை பகிர்ந்து கொள் ளாதவர்களாக இருந்தபோதிலும் ஆளும் வர்க் கங்களின் பல்வேறு பிரிவுகளின் தேவைகளுக்காக கூடுதலாக்கப்பட்டு வலுப்படுத்தப்படுகிறது. ஜன நாயக ரீதியான, வெகுஜன, பொது நடவடிக்கை களுக்கு நடுத்தர வர்க்கத்தின் சில பிரிவினரிடையே அதிகரித்து வரும் எதிர்ப்புணர்வின் பின்னணி யில் ஜனநாயக ரீதியான அமைப்புகள், பொது வாழ்வு ஆகியவை சீர்கேட்டிற்கு ஆளாவதும் நடந்து வருகிறது. தாராளமயத்தினால் கொண்டு வரப்பட்ட மிகவும் ஏற்றத் தாழ்வான அமைப்பை நீடித்திருக்கச் செய்ய விரும்பும் வசதி படைத் தோரின் விருப்பத்தை இத்தகைய ஏற்றத் தாழ்வில் ஏற்பட்டுள்ள கூர்மையான அதிகரிப்பு மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

உழைக்கும் மக்களின் நகர்ப்புற, கிராமப்புறப் பிரிவினரிடையே, குறிப்பாக கிராமப்புற ஏழை களிடையே, ஆழமான துயரநிலை நிலவி வரும் நேரத்தில் இந்த மக்களை ஒன்றுதிரட்டி, அவர் களது உரிமைகளுக்காக, அவர்களை அணி திரட்டுவதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் கடும்விரோதப் போக்கையும், அடக்கு முறையையுமே எதிர்கொள்கின்றன. பிஜேபி தனது மாபெரும் எதேச்சதிகார திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் அதே நேரத்தில் பல முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளும் தங்களுக்கே உரிய வடிவங்களில் சிறிய அளவி லான எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலம் பிஜேபியின் பெரும் திட்டத் திற்கு உடந்தையாகச் செயல்படுகின்றன.
சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிகழ்வுப் போக்கு களின் விளைவாக ஜனநாயகத்திற்கான அபாயம் அதிகரித்துக் கொண்டே போவது குறித்து இந்தியாவிலுள்ள இடதுசாரி – ஜனநாயக சக்தி கள் நன்குணர்ந்திருந்த போதிலும் அகில இந்திய அளவில் இடதுசாரிகளின் பலவீனத்தை பயன் படுத்திக் கொண்டு பிஜேபி தலைமையிலான அரசும் இதர வலதுசாரி சக்திகளும் ஜனநாயகத்தை மேலும் அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கை களை துணிவுடன் மேற்கொண்டு வருகின்றன. ஜனநாயக விரோதக் கொள்கைகளைப் பொறுத் தவரை காங்கிரஸ் கட்சி அதற்கேயுரிய சாதனை யைக் கொண்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் பிஜேபியை சிறப்பாக எதிர்த்துப் போராடும் நிலையில் அக்கட்சி இல்லை.
எனவே, பல்வேறு வடிவங்களில் ஜனநாயகத் தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், இந்துத் துவா அடிப்படையிலான எதேச்சாதிகார ஆட்சி ஒன்றை நாட்டின் மீது சுமத்துவதற்கான நீண்ட காலத் திட்டம் ஆகியவற்றை நமது பலமனைத் தையும் திரட்டி எதிர்த்துப் போராட வேண்டியது அவசியக் கடமை ஆகிறது. இந்த முயற்சியில் மார்க்சிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி சக்தி களும் முக்கிய பங்கினை வகிக்க வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்தில் விரிவான அளவில் சக்திகளை அணிதிரட்டுவதற்கான அவற்றின் திறமை, முயற்சி ஆகியவற்றில்தான் இந்தப் போராட்டத்தின் வெற்றி அடங்கியுள்ளது.

2003, ஜூன் 29, “பீப்பிள்ஸ் டெமாக்கரசி”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s