இந்துத்துவம் என்கிற கருத்தாக்கத்தில் இந்து என்ற சொல் இடம் பெற்றிருந்தாலும், உண்மையில் இந்துத்துவம் என்பது மதம் அல்ல; அது ஒரு பாசிச அரசியல் இலட்சியம்.
இந்து மதம் என்று கருதப்படும் பல பிரிவுகளின் நம்பிக்கையாளர்களை ஒருமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கை நலனுக்கும், மற்ற பிரிவினருக்கும், எதிரான, சமத்துவமற்ற கொடுங்கோன்மை அமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டம்தான் இந்துத்துவம்.
இதில் நிச்சயமாக தலித் மக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் நிலை மேலும் வலுப்படும். சமூக அடுக்கில் அடிமைத்தனம் என்பதே அந்த உழைக்கும் மக்களின் அந்தஸ்தாக இருக்கும். தற்போது உள்ளதை விட தனி மனித உரிமைகள் மேலும் மறுக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகும் நிலையும் இருக்கும்.
இந்நிலையில், இந்திய சமூகத்தில் சாதியின் பாத்திரத்தை நன்கு புரிந்து கொள்வது அவசியமாகிறது. மார்க்சிய நோக்கில் அதைப் புரிந்து கொள்ள உதவிடும் முக்கியமான படைப்பாக தோழர் பிரகாஷ் காரத் கட்டுரை விளங்குகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் அவர் எடுத்த வகுப்பு இது. முதல் பகுதி சாதி பற்றிய தத்துவார்த்த நிலைகளை விவாதிக்கிறது.
உனா போராட்டத்தின் தலைவரான ஜிக்னேஷ் மேவானி மாற்றினை முன்வைத்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நிலமற்ற தலித் குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் வேண்டும் என்று அவர் கோரிக்கை எழுப்புகிறார். இது போன்று சாதிப் பிரச்னைக்கு ஒரு மாற்றுச் சித்திரம் தேவைப்படுகிறது. வெறும் எதிர்ப்பு போதுமானதல்ல; பிரகாஷ் காரத் கட்டுரையின் அடுத்த பகுதி இப்பிரச்னையை களத்தில் அணுகுவது பற்றி விவாதிக்கும். அப்பகுதி அடுத்த இதழில் இடம்பெறும்.
இந்தி திணிப்பு பிரச்சனையை ஒட்டிய முக்கிய கட்டுரை இதில் இடம்பெறுகிறது. தோழர் பாலகிருஷ்ணன் இப்பிரச்சனையின் வரலாற்றுப் பின்புலத்தை ஆராய்ந்துள்ளார். இப்பிரச்சனை தேசிய இனங்களின் ஜனநாயக உரிமை என்ற பார்வையிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கம் அணுகியுள்ள வரலாற்றையும் அவர் விளக்குகிறார். மொழிப் பிரச்னையை பயன்படுத்தி பல கட்சிகள் மேற்கொண்ட சந்தர்ப்பவாத நிலைபாடுகளையும் கட்டுரை வெளிக்கொண்டு வருகிறது.
சங்க பரிவாரங்கள் மேற்கொள்ளும் மொழித் திணிப்பு ஜனநாயக உரிமை மறுப்பு மட்டுமல்ல; இனங்களின் பண்பாட்டு தனித்தன்மைகளை அழித்து, ஒரு பாசிச ஒற்றைப் பண்பாட்டை கட்டியமைக்கும் நோக்கம் கொண்டது. இந்தப் பின்னணியில் இது முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை. 1967 வரையான வரலாற்றுப் பகுதி இந்த இதழிலும், அதற்கு பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் அடுத்த இதழிலும் இடம் பெறுகிறது.
இந்துத்துவ நிகழ்ச்சி நிரல் இந்தியாவில் அரங்கேறும் நிலையில் அமெரிக்காவில் ஜனாதிபதி டொனல்டு டிரம்ப்-இன் வலதுசாரி நிகழ்ச்சி நிரல் திணிக்கப்பட்டு வருகிறது. இது உலக அளவில் தாக்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. கேள்வி பதில் பகுதியில், உலகமறிந்த இடதுசாரி சிந்தனையாளரான அமெரிக்கப் பேராசிரியர் விஜய் பிரசாத் மார்க்சிஸ்ட் இதழுக்கு அளித்த விசேச பேட்டியில் இந்த பிரச்னையை அலசியுள்ளார் ஆர்.பிரசாந்த் இந்த பேட்டியை எடுத்திருந்தார்.
மோடியின் மூன்றாண்டு பற்றி விவாதம் ஓய்ந்திருந்தாலும், அதில் மோடி அரசின் பல தோல்விகள் மீடியாக்களால் அடையாளம் காட்டப்படாமல் மறைக்கப்பட்டன. அவற்றை வெளிக்கொணரும் வகையில் வாசுகி, ஆத்ரேயா, கனகராஜ் ஆகியோரின் கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.
சாதி, மொழி பற்றிய மார்க்சியப் பார்வையுடன் இந்த இதழில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ள நிலையில், தேசிய இனம் பற்றிய மார்க்சிய புரிதலும் அவசியமானது. செவ்வியல் நூல் வரிசையில் ஸ்டாலின் எழுதிய தேசிய இனப்பிரச்சனை பற்றிய நூலின் உள்ளடக்கத்தை சிந்தன் விளக்கியுள்ளார்.
கட்சித்திட்டம் தொடரினை தோழர் ச.லெனின் எழுதியுள்ளார்.
மார்க்சிஸ்ட் இதழ் சார்பில் 5-வது நிறைவு கருத்தரங்கம் மதுரையில் சிறப்புடன் நடைபெற்றது. மார்க்ஸ் பிறந்த 200-ம்ஆண்டு சிறப்பு நிகழ்வாகவும் இது நடைபெற்றது. மறைந்த தோழர் ஆர். கோவிந்தராஜன் அவர்கள் மார்க்சிஸ்ட் இதழில் எழுதிய முத்தான கட்டுரைகளைத் தொகுத்து நூல் வெளியிடப்பட்டது.
ஜூலை இதழை வாங்கிப் படிப்பதுடன், சந்தா சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக்குங்கள்.
— ஆசிரியர் குழு.
Leave a Reply