- கே.பாலகிருஷ்ணன்
இந்திய வரலாற்றில் இந்தி திணிப்பும் அதனை எதிர்த்த போராட்டமும் தொடர்நிகழ்வாக உள்ளன. விடுதலைப் போராட்டக் காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஆட்சிப் பொறுப் பேற்றிருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் இந்தி மொழி கட்டாயமாக திணிக்கப்பட்டது. அதனை எதிர்த்த போராட்டங்களும் வலுவாக நடை பெற்றன. 1967-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத் திற்கு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களும் ஒரு காரணியாக அமைந்தன.
எனினும், இந்தி திணிப்புக்கான முயற்சிகள் நின்றபாடில்லை.
தற்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு, புதிய வேகத்துடன் இந்தி திணிப்பில் இறங்கியுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் படி அமைக்கப்பட்ட “ஆட்சிமொழிக்கான பாராளுமன்றக்குழுவின்” சிபாரிசுகள் அரசுக்கு முன்மொழியப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழு வின் 117 சிபாரிசுகளுக்கும் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சிபாரிசுகளை நாடு முழுவதும் அமலாக்கும் பணியினை பாஜக அரசு மேற்கொள்வது என்பது இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்கும் நடவடிக்கையே ஆகும்.
புதிய சிபாரிசுகளின் அம்சங்கள்
“அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தி மொழி எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்பதை மேற்பார்வையிட ஒரு இந்தி அலுவலர் பணியிடம் உருவாக்கிட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே இருக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை மாற்றி, அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி வழிக் கல்வியை புகுத்தும் வகையில் விதிகளை உருவாக்கி நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விஞ்ஞான கல்வி கூடங்கள், ஆராய்ச்சி நிலையங்களின் நூலகங்களுக்கு புத்தகங்கள் மற்றும் இதழ்கள் வாங்குவதில் இனி 50 சதவிகிதம் இந்தி புத்தகங் கள் மற்றும் இதழ்கள் வாங்கிட செலவழிக்க வேண்டும்.”
பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்கு வதன் முதற்படியாக, சிபிஎஸ்இ மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்குவது; அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இந்தி மூலம் பயில்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது; குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரி கள் இனி இந்தியில்தான் பேசவும், எழுதவும் வேண்டும்; நாடாளுமன்றத்தில் இந்தி தெரிந்த மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் பேசவேண் டும்; மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோர் இந்தி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்; மத்திய அரசின் விளம்பரங்களில் பாதி அளவு இந்தியில் தான் இருக்க வேண்டும் போன்றவை உள்ளிட்ட பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.
மேற்கண்ட சிபாரிசுகள் அமலாக்கப்படும் போது அது இந்தித் திணிப்பு நடவடிக்கையாகவே அமைந்திடும். இந்தி பேச, எழுத தெரிந்தவர்கள் நாடாளுமன்ற விவாதங்களில் இந்தியில்தான் பேச வேண்டும் என்று கூறுவதன் மூலம், இந்தியை அனைவரும் கட்டாயமாக படிப்பதற்கான வற் புருத்தல் வெளிப்படுகிறது.
பாஜகவும் அதன் குருபீடமான ஆர்.எஸ். எஸ் – ம் இந்தியாவின் பன்முகத்தன்மையை நிராகரிக்கும் அமைப்புகள் என்பது மட்டு மின்றி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண் பாடு, ஒரே மதம் என்பதை அரங்கேற்றுவதை லட்சியமாக கொண்டவை. இந்தி திணிப்பு என்பது இவர்களை பொறுத்தவரை ஒரு இடைக்கால ஏற்பாடுதான். இந்தியை அரங்கேற்றுவதன் மூலம், படிப்படியாக சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக வும், தேசிய மொழியாகவும் நிறுவ வேண்டும் என்பதே இவர்களின் இலக்கு. உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதமே என்பது ஆர்.எஸ்.எஸ். குருவான கோல்வால்கரின் தவறான தத்துவ போதனை. இதனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிறைவேற்றுவது என்ற நோக்கிலேயே 1999 – 2000 ம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக வாஜ்பாய் அரசு அறிவித்தது. தற்போது மோடி அரசு சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தப் பின்னணியில் பல மொழிகள், பல இனங்களைச் சார்ந்த மக்கள் இணைந்து வாழும் இந்திய திருநாட்டின் மொழிச்சிக்கலுக்கு தீர்வு குறித்தும் இந்தி மொழி திணிப்பு குறித்தும் வரலாற்று நோக்கில் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு பல்வேறு பகுதி களுக்கிடையே கலாச்சார தொடர்புகள் இருந்த போதிலும் இந்திய நாடு முழுமையாக ஒருங் கிணைக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர் களால் இந்தியா ஒரு நாடாக ஒருங்கிணைக்கப் பட்டது என்றாலும், முழுமையான ஒருங் கிணைப்பு என்பது அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட ஒற்றுமை யில் உருவானதாகும். இது அனைத்து தேசிய இன மக்களுக்கும் விடுதலை, அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்த ஒற்றுமை உருவானது.
விடுதலைப் போராட்ட காலத்தில் மொழிவழி மாநிலங்கள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்றெல்லாம் வலியுறுத்தப்பட்டது. அந்தந்த மொழிகளில் உணர்ச்சி ததும்பும் உரைகள், கவிதைகள் மூலம் விடுதலை உணர்ச்சி தட்டி எழுப்பப்பட்டது. எனவே அனைத்து மொழி களுக்கும் சமவாய்ப்பு, சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தியாவின் பன்முகத்தன்மை பாது காக்கப்படுவதன் மூலம் மட்டுமே இந்திய ஒற்று மைக்கு உரமிட முடியும் என்றெல்லாம் வற்புறுத் தப்பட்டது. இத்தகைய எழுச்சியின் மூலம் இன,மொழி,மத வேறுபாடுகளைக் கடந்து ஏற் பட்ட ஒன்றுபட்ட எழுச்சியின் விளைவாகவே நாடு விடுதலை பெற்றது.
மகாத்மா காந்தி முன்மொழிந்த தீர்மானம்
விடுதலை பெற்ற இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை பாதுகாப்பதில் அக்கறை காட்டப் பட்டதா? தேசிய இன மக்களின் உரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதா? தேசிய இனங் கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மொழி வாரி மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப் பட்டதா? பலமொழிகளைக் கொண்ட இந்திய நாட்டில், மொழி பிரச்சனைக்கு ஜனநாயக அடிப் படையிலான தீர்வு காணப்பட்டதா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு எதிர்மறையான பதிலைத்தான் காண முடிகிறது. விடுதலைக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இந்திய தேசிய காங்கிரஸ் – விடுதலை போராட்டத் தின்போது தான் முன்மொழிந்ததை நிறைவேற்று வதில்கூட அக்கறை காட்டவில்லை. அந்நிய ஏகாதிபத்தியத்தை வெளியேற்றுவதற்கு மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டிய அவசியத்தின் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுத்தது. அதே காங்கிரஸ், விடுதலைக்கு பின்னர், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பெருமுதலாளித்துவ நலனுக்கு முன்னுரிமை கொடுத்து இந்திய மக்களின் உணர்வு களை காலில் போட்டு மிதித்தது என்பதே வரலாறு.
காந்தியின் நிலைப்பாடு
விடுதலைப் போராட்டத்தின்போது ஆங்கில மொழியை கொண்டு இந்திய நாட்டு மக்களை தட்டி எழுப்புவது சாத்தியமானதல்ல என்ற சரியான முடிவுக்கு மகாத்மா காந்தி வந்தார். ஆனால் அதே சமயம் இந்தி மொழியை பரப்பு வதன் மூலம் இந்திய மக்களை அணிதிரட்டவும், ஒன்றுபடுத்தவும் இயலும் என்ற நிலைபாட்டி னையும் அவர் மேற்கொண்டார். இந்து – இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் இந்தி – உருது மொழி இணைந்து உருவாகியுள்ள இந்துஸ்தானி மொழியை இந்தியாவின் பொது மொழியாக்க வேண்டும் என வற்புறுத்தியதுடன், 1925-ம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இதையே தீர்மானமாகவும் நிறை வேற்றினார். இம்மாநாட்டில் துவங்கிய மொழிப் பிரச்னை இன்றுவரையில் தீர்வு காணப்படாமல் தொடர்ந்து வருகிறது.
காந்தி இந்துஸ்தானி மொழியை முன் மொழிந்தார். காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் இந்தி மொழியின் மீதே ஈர்ப்பும், கவனமும் இருந்தது. இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் கூட, சில விதிவிலக்கு களை தவிர, இந்தி மொழி பிரச்சாரத்தில் அக் கறை கொண்டவர்களாக இருந்தார்கள். தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியாரும் கூட, இந்தியை பிரச்சாரம் செய்வதை, இந்தி பள்ளிக்கூடம் நடத்தும் பணியை மேற் கொண்டிருந்தார்.
மெட்ராஸ் மாகாணத்தில் இந்தி திணிப்பு
பிரிட்டிஷ் அரசு முன்மொழிந்த புதிய அரசியல மைப்பின் அடிப்படையில் 1937-ம் ஆண்டு தேர்தல் கள் நடைபெற்றன. மெட்ராஸ் மாகாணத்தில் நடை பெற்ற தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சி அமைத்தது. ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். ஏற்கனவே இந்தி மொழியை எல்லொரும் படிக்க வேண்டுமென் பதை தொடர்ந்து வற்புறுத்தி வந்தவர் ராஜாஜி. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியை புகுத்த நடவடிக் கைகள் தொடங்கின. 1938-39 நிதிநிலை அறிக்கை யில் சென்னை மாகாணத்தில் தமிழ் மொழி பகுதிகளில் 60 பள்ளிகளிலும், தெலுங்கு மொழி பகுதிகளில் 54 பள்ளிகளிலும், கன்னட மொழி பகுதிகளில் 4 பள்ளிகளிலும், மலையாள மொழி பகுதியில் 7 பள்ளிகளிலும் என ஆக மொத்தம் 125 பள்ளிகளில் 6,7,8-ம் வகுப்புகளில் இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்படும் என அறிவித்ததோடு அதற்கான அரசாணையையும் வெளியிடப் பட்டது.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு தியாகங்கள்
இந்தி மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்த முதல் போராட்டம் அன்றைய ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் துவங்கியது. தந்தை பெரியார், கி.ஆ.பெ. விஸ்வநாதம், டபிள்யூ. பி.ஏ. பாண்டிய நாடார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட பலரையும் கொண்ட இந்தி எதிர்ப்பு வாரியம் என்ற போராட்டக்குழு அமைக்கப்பட்டு போராட்ட அறைகூவல் விடப்பட்டது. பள்ளிகள் புறக் கணிப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டங் கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, ஓராண்டு வரை தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தந்தை பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். ஆண்கள் மட்டு மின்றி, போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் களுக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. குறிப்பாக, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள், மலர்முத்தம்மையார், பட்டம்மாள், சீத்தாம்மாள் ஆகிய ஐந்து பெண் களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை யிலடைக்கப்பட்டிருந்த நடராசன் என்ற தலித் இளைஞர் சிறையில் மரணமடைந்தார். இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் உயர்நீதித்த முதல் தியாகி இவரே. இவரை தொடர்ந்து தாள முத்து என்ற இளைஞர் சிறையில் மரணமடைந்தார்.
போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இரண்டாவது உலக யுத்தத்தில் பிரிட்டனுடன் இணைந்து இந்தியாவும் பங்கேற் கும் என பிரிட்டிஷ் ஆட்சி அறிவித்தது. இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி, தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் 8 மாநிலங்களில் ஆட்சி யிலிருந்த அமைச்சரவைகளிலிருந்து ராஜினாமா செய்வது என முடிவு செய்தது. அதன்படி ராஜாஜி யும் ராஜினாமா செய்தார். இந்தி கட்டாய பாடம் என்ற அரசாணையும் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.
இதனை தொடர்ந்து 1947, மார்ச் மாத்த்தில் மெட்ராஸ் மாகாண முதல்வராக பொறுப்பேற்ற ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் மீண்டும் இந்தித் திணிப்பு நடவடிக்கையை மேற்கொண் டார். இதனை எதிர்த்து, மீண்டும் இந்தித் திணிப் புக்கு எதிரான கிளர்ச்சி வெடித்து கிளம்பியது.
அரசியல் நிர்ணய சபை
இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவின் அரசியல் அமைப்பை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில், இந்தியாவின் ஆட்சி மொழி குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகவும், இந்திக்கும், இந்துஸ்தானிக்கும் ஆதரவாகவும், ஆங்கிலத் துக்கு ஆதரவாகவும், இதர தேசிய மொழிகளுக்கு ஆதரவாகவும் நிர்ணயசபை உறுப்பினர்களிடையே ஆழமான, எதிரும், புதிருமான விவாதங்கள் நடை பெற்றன. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதற்குள்ளும் ஒருமித்த கருத்து ஏற்படாமல் மீண்டும் அரசியல் நிர்ணய சபையே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மொழியியல் துறையில் டெல்லி பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய திரு ராமா காந்த் அக்னி ஹோத்ரி என்ற பேராசிரியர், அரசியல் நிர்ணய சபையில் மொழி தொடர்பான விவாதங்கள் பற்றி எழுதியுள்ள கட்டுரையில், மொழி அடிப்படை யில் மாநிலங்களை பிரிப்பது, தேசிய மற்றும் அலுவல் மொழியை தீர்மானிப்பது, அதன் எழுத்து வடிவம், தாய்மொழிக் கல்வியின் பாத்திரம், நீதிமன்றம் மற்றும் நிர்வாக மொழி, சிறுபான்மை மக்களது மொழி பிரச்சனைகள் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதங்கள் போற்றத்தக்க அளவிற்கு அறிவுகூர்மையோடு நடைபெற்ற போதிலும், இறுதியில் இந்தியாவின் பெருமைப்படத்தக்க பன்மொழி மற்றும் பல கலாச்சார அம்சங்களை நிராகரிக்கும் வகையிலேயே முடிவு மேற்கொள்ளப் பட்டது. மொழி சிறுபான்மையினரின் உரிமை கள் சமரசம் செய்து கொள்ளப்பட்டன. பன் மொழி பேசும் மக்களின் உணர்வுகளை கணக்கில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட முடிவு எதிர் காலத்தில் மொழி மற்றும் கலாச்சார அடிப்படை களில் மோசமான விளைவுகளுக்கு இடமளிக்கும் என குறிப்பிட்டார். அதுதான் நடந்து வருகிறது.
முடிவாக, அரசியல் நிர்ணய சபையில் மொழி பிரச்சனையின் மீதான அணுகுமுறை தீர்மானிக் கப்பட்டு அரசியல் சட்டத்தின் 17 வது பாகமாக இணைக்கப்பட்டது. அரசியல் சட்டப் பிரிவு 343 முதல் 351 வரையிலான பிரிவுகள் மொழி குறித்த அம்சங்களை விளக்குகின்றன. இந்த பிரிவுகளை மேலொட்டமாக ஆய்வு செய்தாலே, இப்பிரச் சனையில் எத்தகைய பாரபட்சமான அணுகு முறை கடைப்பிடிக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இந்தி திணிப்புக்கு வழிகோலிய அரசியல் அமைப்பு
பிரிவு 343-ன் படி தேவநாகரி வடிவத்தில் எழுதப்பட்டுள்ள இந்தி மொழியே மத்திய அரசின் ஆட்சி மொழியாகும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு (1965 வரை) ஆங்கிலம் அலுவல் பயன்பாடுகளுக்காக தொடர்ந்து பயன்படுத்தப் படலாம். இதன்படி 1965-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தி மொழி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும். இருப்பினும் இடை யிலேயே தேவைப்படும் தருணங்களில் இந்திக்கு குடியரசு தலைவர் சிறப்பு ஆணை வழங்கி உத்தரவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகமான மக்களால் பேசப்படுவதால் இந்தி ஆட்சி மொழியாக தீர்மானிக்கப்பட்டதாக நிர்ணய சபையின் தலைவரான ராஜேந்திர பிரசாத் கூறினார். எனினும் அன்றைய கணக்குபடியே, இது முழு உண்மையல்ல. இருப்பினும் இந்தி மொழி ஆட்சி மொழியாக தீர்மானிக்கப்பட்டது.
பன்முகத்தன்மைக்கு விரோதம்
பலமொழி பேசும் மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் ஒரு மொழியை மத்திய ஆட்சி மொழியாக தீர்மானிப்பது, இதர மொழி பேசும் மக்களின் உணர்வுகளை நிராகரிப்பதாகும். ஒரு மொழிதான் ஆட்சிமொழியாக இருக்க வேண் டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உலகின் பல மொழி பேசும் நாடுகளில் இத்தகைய நிலை பாடு மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் திரு. மா. ராசேந்திரன் அவர்கள் பல மொழி பேசும் நாடுகளில், பல மொழிகள் ஆட்சி மொழிகளாகவும், அந்நாடு களின் நாட்டுப் பண் பாடலே பல மொழிகளில் பாடப்படுவதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் பதினொரு ஆட்சி மொழிகள் உள்ளன. சிங்கப்பூரில் ஆட்சி மொழி கள் (தமிழ் உள்ளிட்டு) நான்கு. சுவிட்சர்லாந்தில் தேசிய மொழிகள் நான்கு. நியூசிலாந்தில் ஆட் மொழி இரண்டு. பிஜியின் தேசிய மொழி இரண்டு. கனடா நாட்டில் ஆங்கிலமும், ஃப்ரெஞ் சும் ஆட்சி மொழிகள். இலங்கையில் ஆட்சி மொழிகள் இரண்டு என பட்டியலிட்டது மட்டு மின்றி அந்நாடுகளில் உள்ள தேசிய கீதம் (நாட்டுப் பண்) அவற்றின் மொழிகள் அனைத்திலும் பாடப் படுகிறது எனவும் விளக்கியுள்ளார். ஆனால் இந்தியாவில் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி. தேசிய கீதமும் இந்தியில் மட்டுமே பாடப் படுகிறது. பல மொழிகள் பேசும் நாடுகளில், பலமொழிகள் பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில்தான் அந்நாடுகளில் ஆட்சி மொழிக் கொள்கைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இயற்கைக்கு மாறாக இந்தி மட்டுமே ஆட்சிமொழி என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிக்க் குறுகிய கால வரலாறு கொண்ட இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அங்கீகரித்து, அதற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப் பதானது அதைவிட பல நூற்றாண்டு நீண்ட வரலாறு கொண்ட தமிழ் உள்ளிட்ட, இதர இந்திய மொழிகளை புறக்கணிக்கும் செயல் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
பிரிவு 344 ஐந்தாண்டுகளுக்கு பிறகு இந்தி மொழி வளர்ச்சிக்கு உதவிட, ஆட்சி மொழி ஆணையம் ஒன்றினை அமைத்திட, குடியரசு தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது. அதாவது, அரசு துறையில் முழுமையாக இந்தியை பயன் படுத்துவதற்கும், அதற்கேற்ப ஆங்கில பயன் பாட்டை கட்டுப்படுத்துவதற்குமான வழிமுறை களை கண்டறிந்து, இந்த ஆணையம் குடியரசு தலைவருக்கு தனது சிபாரிசுகளை வழங்கும். இந்த ஆணையத்தின் சிபாரிசுகளுக்குத்தான் தற்போது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து அவற்றைச் செயல்படுத்துவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
பிரிவு 345 அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழிகளை தீர்மானித்துக் கொள்வதற்கான விளக்கங்களை தருகிறது. 351வது பிரிவுதான் ஆழ்ந்து சிந்திக்கதக்கது. இந்தி மொழி வளர்ச் சிக்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இந்த மொழியை பரப்பி செழித்தோங்கச் செய்வது இந்திய அரசின் கடமையாகும் என வற்புறுத்துகிறது இந்த பிரிவு.
ஆக, இந்தி மொழிக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவின் இதர தேசிய மொழிகள் பற்றி இந்திய அரசியல் சட்டம் கண்டுகொள்ளவில்லை. உண்மையில் இதர மொழிகள் இரண்டாந்தர மொழிகளாக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அரசியல் சாசனம் 8வது பட்டியலில் இதர மொழிகள் கொண்ட ஒரு பட்டியல் இணைக்கப்பட்டு தற்போது 22 மொழி கள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உண்மையில் 8வது பட்டியலில் உள்ள மொழிக்கு எந்த சலுகையும் சிறப்பு அந்தஸ்துகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த மொழிகள் தேசிய மொழிகள் என்று கூட அழைக்கப்படாமல், வட்டார மொழிகள் என்றே அரசியல் சாசனத் தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேருவின் வாக்குறுதி
அரசியலமைப்பின் மேற்கண்ட பிரிவுகள்தான் தொடர்ந்து இந்தி திணிப்புக்கும் அதனை எதிர்த்த போராட்டத்திற்கும் அடிப்படை காரண மாக அமைந்துள்ளன. பிரிவு 344-ன் படி குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன் படுத்தி ஆட்சி மொழிக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு விரிவான ஆய்வுகள் நடத்தி இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கும், ஆங்கிலத்தின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்குமான சிபாரிசு களை நாடாளுமன்றத்துக்கு அளித்தது. இந்தச் சிபாரிசுகள் நாடாளுமன்றத்தில் சூடான விவாதத்தை கிளப்பியது. நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் நேரு 7.8.1959 அன்று நாடாளு மன்றத்தில் ஒரு வாக்குறுதியை அளித்தார்.
முதலாவதாக, 1965-க்கு பிறகு இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி ஆன பிறகும் ஆங்கில மும் மத்திய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் சம்மதத்தைப் பெறாமல் இந்த நிலை மாற்றப்படாது. இரண்டாவதாக, மத்திய அரசின் பணிகளைப் பொறுத்தவரையில், இந்தி பேசாத மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். இந்தி பேசாத மக்களுக்கு இது ஒருவித நம்பிக்கையை அளித்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களும் சற்று அடங்கின.
ஆனால், வேடிக்கை என்னவெனில் பிரதமரின் வாக்குறுதியை நிராகரிக்கும் வகையில், அடுத்த ஆறுமாதங்களுக்குள், குடியரசு தலைவர் ஆட்சி மொழி குறித்த பாராளுமன்ற குழுவின் சிபாரிசு கள் மீது ஒரு அறிக்கை வெளியிட்டார். இதில் பிரதமரின் வாக்குறுதி நிறைவேற்றப்படும். அதற் குரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மேலும் மத்திய அரசு பணிகளுக்கு ஆங்கிலத்தில் நடைபெறும் தேர்வுகள் சில காலத்துக்கு பிறகு இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுவும் அரசுப் பணிகள் சம்பந் தமான நேருவின் வாக்குறுதிகளுக்கு எதிரானதா கும். மேலும், இத்தேர்வுகளை பிரதேச மொழி களில் நடத்துவதற்கு பெரும் கஷ்டங்கள் உள்ளன என கூறியதன் மூலம், வரும் காலத்தில் இந்தி மொழி படித்தவர்கள் மட்டுமே இத்தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலையினை உருவாக்கியது.
இதுகுறித்து 20.07.1960 அன்று சென்னையில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் பின்வருமாறு கூறியது:
“ஜனாதிபதியின் உத்தரவில் உள்ள சில அம்சங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. அதேசமயம், மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்காத ஜனாதிபதியின் உத்தரவு, தமிழ் மக்களுக்கு மட்டுமில்லாமல், இந்திபேசாத இதர மாநில மக்களுக்கும் பாதிப்பாக முடியும். மேலும் 1965-க்கு பிறகும் ஆங்கிலத்தையும் மத்திய அரசு விவகாரங்களுக்கு உபயோகிப்பதற்கு வேண்டிய சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வரப் போவதாக பிரகடனம் செய்ய வேண்டுமென” தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. பிரதமர் நேருவின் வாக்குறுதியால் ஓரளவு சமாதனமடைந்திருந்த இந்தி பேசாத மக்களை குடியரசுத் தலைவரின் ஆணை ஆத்திரப்படுத்தியது. மீண்டும் இந்தி எதிர்ப்பு குரல்கள் வலுவடைந்தன.
ஆட்சி மாற்றம்
இதனை தொடர்ந்து 1963-ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆட்சி மொழி மசோதாவை தாக்கல் செய்தார். இதில் 1965-க்கு பின்னர் இந்தியாவின் ஆட்சி மொழி யாக இந்தி இருக்கும் என்றும், ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் எனவும் பட்டும் படாமலும் கூறப்பட்டது. நேருவின் வாக்குறுதி அழுத்தமாக இடம் பெறாததால், 1965-க்கு பின்னர் இந்தி ஆட்சி மொழியாகி விடும் என்ற அச்சம் பரவ ஆரம்பித்தது. ஆட்சி மொழி மசோதா நாடாளு மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விளைவு – தொடர்ந்து இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிகள் வெடித்தன. 1965-ம் ஆண்டு போராட்டம் தீவிர மடைந்து தமிழ்மாநிலம் முழுவதும் துப்பாக்கிச் சூடு, தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு நடந்தது. இப்போராட்டத்தில் மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றார்கள். இப் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்சியை சார்ந்தவர்களும் திரண்டார்கள். ஆரம்பத்தில் இந்தியை கட்டாய பாடமாக திணித்த ராஜாஜி இப்போது இந்தியை எதிர்த்து குரல் கொடுத் தார். அரசமைப்பு சட்டம் 17வது பிரிவுதான் இந்தித் திணிப்புக்கு வழி வகுக்கிறது. அதை தூக்கி கடலில் போடுங்கள் என்றார். இந்தித் திணிப்பை கண்டித்து மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியம், அழகேசன் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள். எனினும் பின்னர் ராஜினாமாவை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். தமிழகம் போராட்டக் களமாக மாறியது.
இதனைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை சந்தித்தது. 8 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, எதிர்க்கட்சிகள் ஆட்சி யைக் கைப்பற்றின. தமிழ்நாட்டில், திமுக வெற்றி பெற்று அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப் பேற்றார். காங்கிரஸ் ஆட்சியில் மக்களது அடிப் படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாதது; ஏற்பட்ட உணவு பஞ்சம் உள்ளிட்ட பிரச்சனை களோடு, இந்தி திணிப்பால் உருவான மக்கள் எழுச்சி அனைத்தும் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி யின் படுதோல்விக்கு காரணமாக அமைந்தன.
லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்கு பின்னர், இந்திரா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றிருந் தார். இந்தி பேசாத மக்களிடம் ஏற்பட்ட சரி வினை மீட்டெடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை இறங்கியது. இந்தி மீதான எதிர்ப்புணர்வை கணக்கில் எடுத்துக் கொண்டு அலுவல் பயன் பாட்டில் ஆங்கிலம் நீடிக்கும் வகையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி சட்டத் திருத்த முன்வடிவினை நாடாளுமன்றத்தில் 1967 நவம்பர் 27 அன்று மத்திய அரசு முன்மொழிந்தது.
முன்னாள் பிரதமர் நேருவின் வாக்குறுதியை நிறைவேற்ற அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கொடுப்பதற்காக, இந்த சட்டத் திருத்தம் கொண்டு வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த நோக்கம் முழுமையான அளவில் திருத்த முன் வடிவில் இல்லை. மேலும், இந்த திருத்த முன்வடி வோடு சேர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீண்டும் இந்திதான் ஆட்சிமொழி என்பதற்கான உள்ளடக்கம் கொண்டதாக இருந்தது.
இந்த சட்டத்திருத்த முன்வடிவை ஏற்க முடி யாது என தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் நீண்ட உரையாற்றினார். இந்த திருத்த முன்வடிவு எந்த தீர்வையும் அளிக் காது என சுட்டிக்காட்டியதுடன், நாட்டின் மொழிச்சிக்கலை தீர்க்க வழிகளையும் விளக்க மாக சுட்டிக்காட்டினார். மேலும் இந்திய அரசியல் அமைப்பில் உள்ள மொழி குறித்த பிரிவுகளை படித்து காட்டி ‘பல மொழி ராஜ்ய அமைப்பில் எவ்வாறு ஒரு மக்களது மொழி மட்டுமே அரசாங்க மொழி ஆகமுடியும்? சகல மொழிகளுக்கும் உரித்தான இடத்தை அளிக்க வேண்டும் என்பதை அரசியல் சட்டத்தை உருவாக்கியுள்ளவர்கள் மனதில் கொள்ளவே இல்லை’ என ஆணித்தரமாக சுட்டிக்காட்டினார்.
இச்சட்டத்திருத்தம் மற்றும் தீர்மானம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அப்போது நிறைவேற்றிய தீர் மானத்தில்:
“காலஞ்சென்ற பிரதம மந்திரியின் வாக்குறு தியை அமலாக்குவதற்கு கூட, போதுமானபடி திருத்த மசோதா இருக்கவில்லை. யூனியனின் எல்லா அரசாங்க காரியங்களுக்கும் நாடாளு மன்றத்தில் அலுவல் நடத்துவதற்கும், இந்தியுடன் ஆங்கிலத்தின் உபயோகத்தையும் அது கட்டாய மாக்கவில்லை. இந்தி பேசாத மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துக்கும், வேறு சில காரியங்களுக்கும் மட்டுமே இந்தியுடன் ஆங்கிலத்தை உபயோகிக்க அது வழி செய்கிறது.
இத்துடன் அரசாங்கம் கொண்டுவந்துள்ள தீர்மானமும் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் மேலும் அது எடுக்கவுள்ள நடவடிக்கைகளும் இந்தியை ஆட்சி மொழியாக்கு வதுடன், திணிப்புக்கு வழிவகுக்கிறது. நிர்ப்பந்திக் கவும், முன்பு ஆங்கிலம் இருந்த இடத்தில் அதை வைக்கவும், உறுதி பூண்டுள்ளதை தெளிவாக காட்டுகிறது.
இந்தியை ஒரே ஆட்சி மொழியாக திணிக்கும் இந்த முயற்சியை நம் கட்சி எதிர்க்கிறது என்று அரசியல் தலைமைக்குழு அறிவித்தது. இந்திய யூனியனின் ஐக்கியத்தை குலைக்கவே இந்த முயற்சி வழி வகுக்கும்” என தெளிவாக சுட்டிக்காட்டியதுடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அரசியல் தலைமைக்குழு தீர்மானம் பட்டியலிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட இந்தி எதிர்ப்புணர்வை கணக்கில் கொண்டு முன்மொழியப்பட்ட சட்டத்திருத்த முன் வடிவும் தீர்மானமும் கொல்லைப்புற வழியாக இந்தியை திணிக்கும் நோக்கிலே இருந்தன என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையில்லை.
(தொடரும்)
Leave a Reply