மோடி ஆட்சியின் மூன்றாண்டு: பொருளாதாரத் துறையில் சீரழிவு …


கடந்த மக்களவை தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசியும், எதிர்கட்சிகளின் வாக்குகள் சிதறியதையும் காங்கிரஸ் தலைமை யிலான யுபிஏ அரசின் மக்கள் விரோத, ஊழல் மலிந்த ஆட்சிக்கெதிரான மக்களின் கோபத்தை யும் அறுவடை செய்தும், போடப்பட்ட வாக்கு களில் 31ரூ மட்டுமே பெற்றும் மோடி தலைமை யிலான பாஜக மத்தியில் அரசு அமைத்தது. அதன் மூன்று ஆண்டு ஆட்சியில் பாஜக தனது பொருளா தாரக் கொள்கைகளால் உழைக்கும் மக்களின் வாழ்வையும் நாட்டின் சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடி மக்கள், பெண்கள், முறைசாராத் துறை பொருளாதாரத்தை சார்ந்து நிற்போர் ஆகியோரின் வாழ்வை அழித்தொழிக்க அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது. இதன் ஆட்சி யில் இந்தியப்பெரு முதலாளிகளும் பன்னாட்டு ஏகபோகங்களும் தான் பெரிதும் கொழுத்துள்ளனர்.

செல்லாக்காசு நடவடிக்கை
ஆட்சிக்கு வந்ததும் வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்பு சொத்துக்கள் அனைத்தை யும் கைப்பற்றி, ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் பல லட்சம் ரூபாய் போடுவோம் என்று கூசாமல் பொய் சொன்ன பாஜக, கறுப்பு பணத்தை கைப்பற்றுவதற்குப் பதிலாக, பணமதிப் பிழப்பு “செல்லாக்காசு” நடவடிக்கை மூலம் பல கோடி இந்திய மக்களை ( தள்ளாத வயது முதியோர் கள், ஊனமுற்றோர், ஏழை எளிய மக்கள், அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்கள் இதில் அடக்கம்) மழையிலும் வெய்யிலிலும் நீண்ட வரிசைகளில் அவரவர் பணத்தை பெற நிற்க வைத்தது. நூறுக்கு மேற்பட்டவர்கள் – தங்கள் பணத்தை பெற வரிசை யில் நின்ற மக்கள், அவர்களுக்கு சேவை செய்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் – உயிர் இழந்தனர். அவர்களின் சாவுக்கு பொறுப்பேற்க மறுத்த மத்திய அரசு இன்றுவரை அவர்களுக்காக அனு தாபம் கூட தெரிவிக்கவில்லை. செல்லாக்காசு நடவடிக்கையால் கறுப்பு பணம் ஒழியும்; பயங் கரவாதம் முடிவுக்குவரும்; கள்ள நோட்டுகள் காணாமல் போய்விடும்; ஊழல் முற்றாக ஒழிந்து விடும் என்று அவர்களது வழக்கமான பாணி யில் பொய்களை அள்ளி வீசிய பாஜக அரசினர் இன்றுவரை இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை கணிசமாக சீர்குலைத்தது என்பதை ஏற்க மறுக்கின்றனர். உண்மை என்ன? கடந்த 2016 நவம்பர் எட்டு அன்று செல்லாக்காசு நடவடிக்கை அமலுக்கு வந்தது. அதன்பின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் பெரிதும் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு (2016-–17) நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் அரசு முன்வைத்த எதிர்பார்ப்பை விட ஒரு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களின் விவரப்படி இன்னும் சரிந்து 6.1ரூ என்ற அளவில் தான் உள்ளது. இதுவும் அரசு செய்த புள்ளிவிவர தகிடுதத்தங்களின் பின் வந்துள்ள கணக்கு. செல்லாக்காசு நடவடிக்கை யால் வளர்ச்சி விகிதம் கணிசமாக சரிந்துள்ளது. இந்த அரசு விவரமும் கூட முறை சாராத்துறை யின் விவசாயம், சிறு குறு தொழில்கள், கட்டு மானம், சிறு வணிகம் இத்யாதி – துயரங்களை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. பெரும் வேலை இழப்பு, விளைச்சல் கூடியும் வேளாண்குடி மக்களின் வாழ்வில் வீழ்ச்சி, சிறு குறு தொழில்முனை வோரின் சரிவு என்று கடுமையான விளைவுகள் நிகழ்ந்துள்ளன. கறுப்பு சொத்துக்கள் பெரும் பாலும் கறுப்பு பணக்காரர்களின் வசம் பத்திரமா கவே உள்ளன.

வளர்ச்சி விகிதம் குன்றியது மட்டுமல்ல. தொழில் மந்தம் தீவிரமாகியுள்ளது. தனியார் தொழில் துறை முதலீடுகள் சரிந்துள்ளன. தொழிலுக்கென வாங்கப்படும் கடன் தொகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிதும் சரிந்துள்ளது. ஆக, தொழில், வேளாண்மை இரண்டுமே நெருக்கடியில் உள்ளன.

வேளாண்துறை உழைப்போரின் தொடரும் துயரம்
மோடி தேர்தல் காலத்தில்: விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை கொடுப்போம், விவசாயி கள் தற்கொலைகளை முற்றிலும் தடுப்போம் என்றார். நடப்பது என்ன?
கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக, அரசின் மோசடி கணக்குப்படியே, ஆண்டுக்கு 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியுள்ளன. வேளாண் பொருட்களுக்கு உற்பத்திச் செலவை கணக்கிட்டு அதன்மீது 50ரூ லாபம் தரும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிசெய்யப்படும் என்று பொய் பேசிய பாஜக, உச்ச நீதிமன்றத்தில் இது சாத்தியமே இல்லை என்று கைவிரித்தது ஊரறிந்த ரகசியம். தற்சமயம், அதற்கும் ஒருபடி மேலே சென்று, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் என்று பரவி வரும் விவசாயிகளின் பெரும் சினம் கொண்ட போராட்டங்களை அடக்க அவர்கள் மீது ஒருபுறம் வன்முறையை ஏவுகிறது. மறுபுறம், வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், நடப்பு ஆண்டுக்கு (2017-18) மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலைகள் முக்கிய பயிர்கள் பலவற்றிற்கும் அகச் செலவை விட குறைவாக உள்ளன. காட்டுத்தீ போல் பரவி வரும் விவசாயிகளின் பெரும் போராட்டங்கள் இந்த அரசின் ஆணவத்திற்கு தக்க பதில் அளிக்கும்.

விளைபொருள் விலை மறுப்பு மட்டும் அல்ல; வேறு பல வழிகளிலும் விவசாயத்தொழிலை மோடி அரசு அழித்து வருகிறது. பன்னாட்டு பெரும் கம்பனிகள் மற்றும் இந்திய பெரும் கம்பனி களுக்கு விவசாயத்தில் நுழைந்து பெரும் லாபம் ஈட்ட பலவகை சலுகைகளையும் அனுமதிகளை யும் வழங்கியுள்ளது மத்திய அரசு. விதைத் தொழில் கிட்டத்தட்ட இன்று அரசிடம் இல்லை. முழுக்க ஏகபோக கம்பனிகளின் பிடியில் சென்றுகொண்டிருக்கிறது. இடுபொருட்கள் மீதான மான்யம் தொடர்ந்து வெட்டப்பட்டு, இவற்றை விவசாயிகளுக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்ட கம்பனிகளுக்கு கம்பெனிகளுக்கு கதவு திறந்துவிடப்பட்டுள்ளது.

வேளாண் விரிவாக்க அமைப்பு, ஆராய்ச்சி அமைப்பு, பாசன வசதி விரிவாக்கம், விளைந்த பொருட்களை பத்திரமாக சேகரித்து வைத்து விற்க வசதியான கிடங்குகள், சந்தைக்குச் செல்ல சாலை வசதிகள் போன்ற வேளாண் தொழிலுக்கான கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய மத்திய அரசு மறுக்கிறது. என்ன காரணம்? ஏகபோக கம்பனிகள், செல்வந்தர்கள் மீது வருமான, சொத்து வரி விதித்து வளங்களை திரட்ட அரசின் வர்க்கத்தன்மை இடம் கொடுக்க வில்லை. செலவு கூடி வரவு கூடாவிட்டால் அரசின் பற்றாக்குறை கூடும். உடனே அயல் நாட்டு நிதி மூலதனம் இந்தியாவை விட்டு வெளியேறிவிடும். இந்த அச்சத்தின் அடிப் படையில் செயல்பட தாராளமய கொள்கைகள் நிர்ப்பந்திக்கின்றன. மோடி அரசின் கொள்கை கள் விவசாயத்தை அழித்துவருகின்றன.

மத்தியில் மக்கள் விரோத நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போன பின்பு தனது கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசுகள் மூலம் பாஜக பழங்குடி மக்களின் நில உரிமைகளை கிடப்பில் போட்டு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பெருமுத லாளிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் தாரை வார்த்து வருகிறது. கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை சுருக்குகிறது. கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் வேலை நாட்கள் நாடு முழுவதும் பெரிதும் குறைந்துள்ளன

மார்க்சிஸ்ட் கட்சி சரியாக சொல்கிறது: விவசாயிகளின் கடன் ரத்து கோரிக்கை நியாய மானது. அதை, குறிப்பாக சிறு குறு நடுத்தர விவசாயிகள் விஷயத்தில், நாம் ஆதரிக்கிறோம். ஆனால் அது தற்காலிக நிவாரணமே. போது மான வேளாண் துறை சார்ந்த பொது முதலீடு கள் மூலம் மகசூலை உயர்த்தவேண்டும்; விளை பொருளுக்கு கட்டுபடியாகும் விலை வேண்டும்; கிராமப்புற உழைப்பாளிகளுக்கு வேலை வேண் டும், நல்ல ஊதியம் வேண்டும். இவற்றோடு சேர்த்து, பெரும்பண்ணை நிலங்களில் பெரும் பகுதியும் இதர அரசிடம் உள்ள வேளாண் நிலங்களும் நிலமற்ற கிராம குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இவை தான் வேளாண் மையை பாதுகாக்கும். கிராமங்களை பாதுகாக் கும். சாதி ஆதிக்கத்தை தகர்க்கும்.

வேலையின்மை
பாஜக ஆட்சியின் ஆகப்பெரிய துயரம் புதிதாக வேலை வாய்ப்புகளே உருவாக்கப் படாமல் உள்ளது தான். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைகளை உருவாக்குவோம் என்று பொய் முழங்கி, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என்றெல்லாம் கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து தனது மோசடி வேலையை பாஜக அரசு தொடந்தது. ஆனால், அரசால் கூட பொய்மையான புள்ளி விவரங்களை அளித்து முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைக்க முடியவில்லை. அரசின் கூற்றுப்படியே, ஆண் டொன்றுக்கு 1. 25 கோடிக்கு குறையாமல் உழைப்புப்படை அதிகரிக்கிறது. ஆனால் கடந்த ஆண்டில் (2016–- 17) மிக அதிகமாக வேலை தரும் எட்டு துறைகளின் மொத்த பணியிட அதிகரிப்பு இரண்டு லட்சத்தை கூட எட்டவில்லை என்பது அரசின் உழைப்பாளர் வாரியம் தரும் கணக்கு. ரேகா திட்டத்திலும் வேலை நாட்கள் குறைந் துள்ளன. இப்பொழுது மத்திய, உயர்மத்திய தர வர்க்கத்தினர் பெரிதும் சார்ந்துள்ள தகவல் தொழில்நுட்ப துறையிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந் துள்ளன. இதே நிலைமை தான் நிதித்துறையிலும், கட்டுமானத் திலும், ஏற்றுமதி துறையிலும் இன்னபிற துறை களிலும் உள்ளது. இப்பிரச்சினை எதிர்காலத் தில் இன்னும் தீவிரமடைய உள்ளது. ஒருபுறம் முதலாளிகள் அரங்கேற்றும் இயந்திரமயமாக் கலும், மறுபுறம் அரசின் சிக்கன நடவடிக்கை களால் ஏற்படும் கிராக்கி வீழ்ச்சியும், வேலை யின்மை பிரச்சினையை பாஜக அரசின் மீத முள்ள இரண்டு ஆண்டுகளில் மேலும் மேலும் தீவிரப்படுத்தும்.

ஜி எஸ் டி

செல்லாக்காசு, விலங்கு சந்தை நடவடிக்கைகளைத்தொடர்ந்து பொருள் மற்றும் சேவை வரி ( ஜி எஸ் டி என்ற Goods and Services Tax ) வந்துள்ளது. ஜி எஸ் டி விஷயத்தைப் புரிந்துகொள்ள அரசின் ஒட்டுமொத்த கொள்கை சட்டகம் பற்றிப் பேசியாக வேண்டும். நடப்பு பா ஜ க அரசும் அதற்கு முன் வந்துள்ள தாராளமய கால அரசாங்கங்கள் அனைத்தும் ஒரு அடிப்படை நிலைபாட்டை வைத்து செயல்படுகின்றன. வளர்ச்சி என்றால் அது இந்திய அந்நிய பெரும் கம்பனிகளின் வளர்ச்சி, அவர்கள் ஈட்டும் லாபம், அவர்கள் செய்யும் முதலீடுகள் இவற்றைத்தான் பெரிதும் சார்ந்து இருக்க முடியும்,
அரசாங்கமோ, சிறு குறு உற்பத்தியாளர்களோ, தொழில்முனைவர்களோ, நகர, கிராம உழைப்பாளி மக்களோ இதில் பங்காற்ற முடியாது அல்லது மிகச்சிறிய பங்கே ஆற்றமுடியும் என்பது தான் அவர்கள் நிலைப்பாடு.
இதில் முந்தய காங்கிரஸ் கூட்டணியை விட பாஜக அதிக முனைப்புடன் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் செல்லாக்காசு மற்றும் அதன் தொடர் நடவடிக்கைகள், நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகள், உழைப்பாளர் பாதுகாப்பு சட்டங்களை நீர்த்துப்போகச்செய்தல், விலங்குச்சந்தை தொடர்பான அறிவிக்கை, இப்பொழுது ஜி எஸ் டி -இவை அனைத்திற்கும் பொது அம்சம் இந்திய பொருளாதாரத்தை பெரு முதலாளிகளுக்குச்சாதகமான வடிவில் முறைப்படுத்துவது என்பதாகும்.

இப்பொழுது அமலுக்கு வந்துள்ள ஜி‌எஸ்‌டி. யில் ஒரு வரிவிகிதம் என்பது கிடையாது. பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன (0சதவீதம், 5சதவீதம், 12சதவீதம், 18சதவீதம், 28சதவீதம்). இதில் மிக முக்கிய அம்சம் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் சில வரிவிகிதங்களை ஜி‌எஸ்‌டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது. மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜி‌எஸ்‌டி கவுன்சிலின் ஒப்புதலை பெற வேண்டும். மத்திய அரசின் கையே கவுன்சிலில் ஓங்கி இருக்கிறது. அதனால் அது மிக கடினமான காரியமாகும்.

இதில் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும். அமெரிக்கா முன்னணி முதலாளித்துவ நாடு. ஆனால், அங்கு வரிவிதிப்பு உரிமைகள் பலவும் மாநிலங்களிடம் உள்ளன. மாநிலத்திற்கு மாநிலம் வரிவிகிதங்கள் வேறுபடுகின்றன. ஏன் இங்கு இப்படி மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒற்றை வரி விதிப்பு முறை திணிக்கப்படுகிறது? இரண்டாம் அம்சம் என்னவெனில், வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின், சட்டமன்றங்களின் கையில் இருந்தது. இப்பொழுது ஜிஎஸ்டி கவுன்சில் கைக்கு போய்விட்டது. அதிலும் மத்திய அரசின் கை ஓங்கிவிட்டது. இது ஜனநாயகத்திற்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது. கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும்.ஜி‌எஸ்‌டி அமல்படுத்திய பின்னர் வரி குறையும் என்கிறார்கள்.

ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. ஜி‌எஸ்‌டி சட்டம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், மது போன்ற பொருட்களை வெளியில் வைத்திருக்கிறது. இவற்றின் விற்பனை மூலம் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கும் வாட் வரி மூலம் மாநில அரசுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. (மதுவை ஜி‌எஸ்‌டி கீழ் கொண்ட வர தனி சட்டத் திருத்தம் தேவை). (ஜிஎஸ்டி வரிச் சுமையை குறைக்கும் என்பதில் உண்மை இல்லை.இந்த வரி விதிப்பானது நுகர்வோர்களை பாதிக்கப்படக் கூடியதாக அமையும்.பணக்காரர்களிடம் இருந்து முறையாக நேர்முக வரிகளை வசூலிப்பதற்குப் பதிலாக சாதாரண மக்களின் சுமைகளை கூட்டியிருக்கிறது. இது மட்டுமின்றி, சிறு, குறு தொழில்முனைவோர், வணிகர்கள் அரசு நிர்வாக அமைப்பின் கடுமையான தொந்தரவுக்கும் ஊழல்சார் நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாக்கப்படுவார்கள்.

மத்திய அரசு ஒற்றை மொழி ,ஒற்றை மதம் கலாச்சாரத்தை திணிக்க முயல்வதைப் போன்றே ஒற்றை வரி என்று கொண்டு வந்திருக்கிறார்கள். 8 கோடி, 20 கோடி மக்கள் கொண்ட மாநிலங்களின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நகராட்சி போல் நடத்துவது தவறு.

 

மோடி அரசும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளும்

கடந்த மூன்று ஆண்டுகளில் நேர்முக வரிகள் விகிதம் தொடர்ந்து குறைக்கப்படுகிறது, விலக்குகள் அளிக்கப்படுகின்றன, சொத்துவரி ரத்து செய்யப்படுகிறது, வரி ஏய்ப்போருக்கு மீண்டும் மீண்டும் நட்டமின்றி சரி செய்துகொள்ள பல வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

மறுபுறம், மறைமுக வரிகள் கடுமையாக கூட்டப்படுகின்றன. பெட்ரோல், கச்சாஎண்ணய் தொடர்பாக மட்டும் கலால் வரி உயர்வுகள் மூலமாக பல லட்சம் கோடி ரூபாய்கள் மக்களிடமிருந்து பிடுங்கப் பட்டுள்ளன அல்லது கச்சா எண்ணயின் பன்னாட்டு சந்தை விலை சரிவின் பயன் மக்களை சென்ற டையாமல் தடுக்கப் பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தல்; செல்லாக்காசு சாவுகள், துயரங்கள்,  வருமான வரித்துறை மிரட்டல்கள், ரெய்டுகள், ஜீ எஸ் டி — ஆகிய அனைத்துமே சிறு நடுத்தர சுய உற்பத்தியாளர்களையும் விவசாயிகளையும் கூலி சம்பள உழைப்பாளிகளையும் தாக்கும் வண்ணமே அமைந்துள்ளன.

அண்மையில் கால்நடைகள் விற்பனை தொடர்பாக, மாநிலங்களின் உரிமையை காலில் போட்டு மிதித்து, கால்நடை சந்தைகள் தொடர்பான விதிமுறைகளை தன்னிச்சையாக மத்திய அரசே அறிவித்துள்ளது. இந்த விதிகள் கால்நடை சந்தைகளில் காலம் காலமாக பங்கேற்றுவரும் சாதாரண விவசாயிகளுக்கும் கால்நடை வியாபாரிகளுக்கும் முற்றிலும் விரோதமாக உள்ளன. இந்த சந்தையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்த இந்நடவடிக்கை உதவும். அது தவிர இந்துத்வா வெறியர்களுக்கு பணம் பிடுங்கவும் கொலைவெறி நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஊக்கம் தரும். ஆனால் விவசாயிகளையும் சிறு நடுத்தர வணிகர்களையும் அதேபோல் இறைச்சி உற்பத்தி  மற்றும் ஏற்றுமதி, தோல்பொருள் உற்பத்தி தொழில்களில் உள்ள சிறுகுறு தொழில்முனைவோர்களையும் தொழிலாளிகளையும் கடுமையாக பாதிக்கும்.

சுருங்கச் சொன்னால், பாஜக ஆட்சி இந்திய மற்றும் அந்நிய பெருமுதலாளிகளுக்கும் கிராமப் புற பெரும் செல்வந்தர்களுக்கும்தான் சாதகமாக இருந்துள்ளது. வரிச்சலுகை மட்டுமல்ல. உழைப் பாளர் பாதுகாப்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது, பெரும் தொழில் நிறுவனங்களின் கடன் பாக்கிகளை விட்டுக்கொடுக்குமாறு பொதுத் துறை வங்கிகளை நிர்ப்பந்திப்பது; பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தி, அவற்றை அடிமாட்டு விலையில் இந்நாட்டு, பன்னாட்டு தனியார் பெருமுதலாளிகளிடம் விற்பது ஆகிய வையும் அரசின் பெருமுதலாளி ஆதரவு கொள் கைகளின் பகுதியாகும். பொதுத்துறை வங்கி களிடம் இருந்து அரசு நிர்ப்பந்தத்தை செலுத்தி பெருந்தொகை கடன் வாங்கி, அதனை திருப்பிக் கொடுக்க மறுக்கும் இதே கார்ப்பரேட் பெருச் சாளிகள் கையில் பொதுத்துறை வங்கிகளை ஒப்படைப்பதற்கான வேலைகளையும் பாஜக அரசு வேகமாக செய்து வருகிறது.
மொத்தத்தில் தனது மூன்றாண்டு “சாதனை” களை விமரிசையாக மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு பாஜக கொண்டாடும் இந்த வேளை யில், அதன் பொருளாதார கொள்கைகள் மக்களுக்கு பெரும் வேதனையைத்தான் அளித்துள்ளன என்பதையும், எனவே கிடைக்கும் அடுத்த வாய்ப்பில் இந்த ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாடு முழுவதும் நாம் காணும் உழைப்பாளி மக்களின் எழுச்சிமிகு போராட்டங்கள் இதைத் தான் முன்னறிவிப்பு செய்கின்றன.

One thought on “மோடி ஆட்சியின் மூன்றாண்டு: பொருளாதாரத் துறையில் சீரழிவு …

  1. இது ஊழல் ஆட்சி கொலைகாரன் ஆட்சி யூத ஆட்சி அரசியல் கொலை செய்யும் ஆட்சி

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s