கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு பின் பற்றி வந்த பொருளாதாரக் கொள்கைகள், இந்த தேசத்தின் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறு வனங்களின் சொத்துக்களை அபரிமிதமாக வளர்க் கும் பாதையில் சென்றிருக்கிறது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அதை, பொருளாதாரத்துறை குறித்த கட்டுரை படம் பிடித்துக் காட்டுகிறது. இதனால் வர்க்க சேர்க்கை ரீதியாக ஏற்பட்டுள்ள ஓர் அரசியல் அம்சம் என்னவென்றால், பெரு முதலாளிகள் ஏறத்தாழ முழுமையாக பாஜக பின்னால் சென்றுள்ளனர் என்பதே. பெருமுதலாளி களின் இரண்டு தேசிய கட்சிகளில் காங்கிரஸ் தேய்ந்து வருவதும், பாஜக வளர்ந்து வருவதும் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது கட்சி காங்கிரசின் அரசியல் தீர்மானம், பாஜக அரசு நவீன தாராளமயத்தையும் இந்துத் வாவையும் இணைத்து ஏகாதிபத்திய ஆதரவு திசை வழியில் செல்கிறது; இத்துடன் மக்களவை யில் அறுதி பெரும்பான்மை என்ற நிலை, பாஜக அரசை எதேச்சாதிகார பாதையில் செலுத்தும் என்பதை கவனப்படுத்தியது. 3 ஆண்டுகளில் மோடி அரசு பயணித்திருக்கும் அரசியல் பாதை இதை வலுவாக நிரூபித்திருக்கிறது.
நாடாளுமன்றம் உள்ளிட்ட தீர்மானிக்கும் அமைப்புகளை ஓரம் கட்டுதல்
பல முக்கிய முடிவுகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படுகின்றன. திட்ட கமிஷனைக் கலைத்தது முதல் இறைச்சிக்காக மாடுகளின் அனைத்து வகைகளையும் சந்தையில் விற்பனை செய்யக் கூடாது என்ற அறிவிக்கை வரை அனைத்தும் பிரதமர் அலுவலகத்தை மையப் படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. மாட்டிறைச்சி விவகாரத்தை அமைச்சரவையில் விவாதித்த தாகக் கூட தெரியவில்லை. மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பண மதிப்பு நீக்கம் குறித்த பிரத மரின் அறிவிப்பும் இந்த வகைக்குட்பட்டது தான். அமைச்சரவையைக் கூட கலந்து பேசாமல் பிர தமர் அலுவலகம் அவசர சட்டங்கள் இயற்றித் தம் ஒப்புதலுக்கு அனுப்புவதை குடியரசு தலை வர் ஒரு முறை சாடியிருந்தார்.
பிரதமர் அவைக்கு வருவதும், பேசுவதும், விவாதங்களுக்கு பதில் கூறுவதும் அரிதாகவே உள்ளன. நிலம் கையகப்படுத்தும் சட்டம் மாநிலங் களவையின் ஒப்புதலைப் பெறாத சூழலில், அதனை மீறுவதற்காக, மாநிலங்கள் தனித்தனியாக இத் தகைய சட்டங்களைப் பிறப்பித்துக் கொள்ளு மாறு வழிகாட்டப்பட்டது. ஆதார் குறித்த விவாத மும், சட்டம் நிறைவேற்றலும் நடப்பதற்கு முன்பே ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. ஆதார் சட்டம் மாநிலங்களவையால் நிராகரிக்கப்படும் என்ற சூழலில், அது, பண மசோதாவாக தாக்கல் செய்யப் பட்டு, மாநிலங்களவையின் ஒப்புதல் பெற வேண் டிய அவசியமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இப்போது வரை இதில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கள் தொடர்ந்து மீறப்படுகின்றன.
அயல்துறை கொள்கையில் அணி சேரா நிலை யைக் கைவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சாதகமாக செயல்படுதல்; இந்திய மக்களின் நலனுக்கும், இறையாண்மைக்கும் விரோதமான உடன்படிக்கைகளில் கையெழுத்திடல்; பாலஸ் தீனம் உள்ளிட்ட பிரச்னைகளில் இந்தியாவின் பாரம்பர்ய நிலைபாட்டை மீறுதல்; பாதுகாப்பு துறை துவங்கி சில்லறை வர்த்தகம் வரை 100ரூ அந்நிய முதலீடு ஏற்பு; கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு சாதகமான நிலப் பறிப்பு; பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையைத் தடுத்துநிறுத்தாமல், மருத்துவர்கள் பிராண்ட் பெயரை மருந்து சீட்டில் எழுதுவது தான் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்ற தோற்றத்தை உருவாக்குதல் போன்றவற்றில் சில காங்கிரஸ் துவங்கி வைத்ததைத் தீவிரப்படுத்துவதாகவும், வேறு சில பாஜகவின் தத்துவார்த்த நிலைபாடு களுக்கு ஏற்பவும் அமைந்துள்ளன. அரசியலில் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கமும், செல்வாக்கும் ஓங்கி வரும் போக்கு முன்னெப்போதையும் விட நிதர்சனமாகத் தெரி கிறது. பெருமுதலாளிகள் அரசை வழி நடத்தும் வரை, ஏகாதிபத்திய ஆதரவு பொருளாதார கொள் கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் வரை, அணி சேரா அணுகுமுறையும், ஏகாதிபத் திய எதிர்ப்பும் கொண்ட அயல்துறை கொள்கை உருவாவதை உறுதி செய்ய முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுவதை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
பற்றி எரியும் காஷ்மீர் பிரச்னையைப் பொறுத்த வரை, அரசியல் தீர்வை நோக்கிப் போவதற்கு பதிலாக அனைத்தையும் பாகிஸ்தான் பயங்கர வாதம் என்ற ஒற்றை கருத்தாக்கத்துக்குள் திணிப் பது, அதற்கு பதிலடி ராணுவ நடவடிக்கை தான், அதை விமர்சிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப் பவர்கள் என்ற நிலை எடுப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்பது மட்டுமல்ல; அது பிரச்னையை மேலும் மேலும் சிக்கலாக்குகிறது. சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அங்கு சென்று பார்வையிட்டு, சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தும், அரசு அவை குறித்து பாராமுகம் காட்டுகிறது. மொத்தத்தில் அங்கு பிரச்னைகள் தீர்க்கப்படுவதில் அக்கறை இல்லை. தேசியத்தையும் ராணுவ நடவடிக்கை களையும் இணைத்து வெறியூட்டி அரசியல் லாபம் ஈட்டுவதே நோக்கம்.
ஜனநாயக உரிமைகள்/மரபுகள் நொறுக்கப்படுதல்
அருணாச்சல பிரதேசம், உத்தராகண்டில் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கலைத்ததும் சரி, கோவா, மணிப்பூரில் சிறுபான்மையாக இருந்தும் குதிரை பேரம் நடத்தி ஆட்சியைப் பிடித்ததும் சரி, ஜனநாயக மரபுகளை மீறும் செயலாகும். பாஜக ஆளும் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில், உள்ளாட்சி தேர்தலில் வேட் பாளராகப் போட்டியிட கல்வி உள்ளிட்ட தகுதி களை நிர்ணயித்து, பெருவாரியான ஏழைகளை யும், தலித், ஆதிவாசி மக்களை, பெண்களைப் போட்டியிட விடாமல் தடுத்தது ஜனநாயகத்துக்கு விழுந்த பலமான அடி. உ.பி. உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டரீதியான இறைச்சி கூடங்களையும் பூட்டி சீல் வைத்ததும் சட்ட மீறலே. கிட்டத்தட்ட அனைத்து உயர்மட்ட நிறுவனங்களிலும் தலைவர் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸ். போற்றிகளும், மோடி ஆதரவாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைமைக்கேற்ற தகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஆளுநர்கள் பொது வாக மத்திய அரசின் முகவர்கள் என்ற நிலை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. அருணாச்சல பிர தேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களிலும், அண்மை காலத்தில் தமிழகம், புதுச்சேரியிலும் இதைப் பார்க்க முடிந்தது.
அதே போல் மத்திய புலனாய்வு துறை, வருமான வரித்துறையின் அமலாக்கப்பிரிவு எவ்விதத் தயக்கமும் இன்றி அரசியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இப்போக்கின் அம்சங்கள் உணரப் பட்டுள்ளன. எதிர் கருத்து சொல்வோரும், விமர் சனம் செய்வோரும் பல்வேறு வழிகளில் அச்சுறுத் தப்பட்டு, அதன் மூலம் பிற பகுதியினரின் கைகள் முறுக்கப்படுகின்றன. உதாரணமாக, என்டிடிவி யின் நிகழ்ச்சிகள் பல பாஜக அரசின் தவறான நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதாக அமைந்த பின்னணியில், ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர், பாஜகவின் சாம்பிட் பாத்ராவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு அம்பலப் படுத்தினார் என்பதற் காக நிறுவனத்தின் இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தது. ஐசிஐசிஐ வங்கியை ரூ.48 கோடிக்கு ஏமாற்றினார் என்ற ஒரு தனிநபரின் புகாரின் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட தனியார் வங்கி புகார் கொடுக்கவில்லை என்பதோ, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பெரும் கடனை அடைக்கும்போது கணிசமான வட்டி விட்டுக் கொடுக்கப்படும் நடை முறை உள்ளது என்பதோ சிபிஐயின் அராஜக நடவடிக்கையைத் தடுக்கவில்லை. ரூ.72,000 கோடி கடன் பாக்கி வைத்திருக்கும் அதானி பிரதமரின் நண்பராக இருக்க முடிகிறது என்னும் போது, இது அரசியல் பழிவாங்கும் போக்கு என்பது தெள்ளத் தெளிவாக முன்னுக்கு வருகிறது. இதர ஊடகங்கள், சக ஊடக நிறுவனத்துக்கு ஏற்பட் டுள்ள இந்த நெருக்கடியை விமர்சிக்கத் தயங்கும் நிலை உருவாக்கப் படுகிறது.
தேச பக்தி என்பது ஒரு குறிப்பிட்ட வகை தேசியமாக உருமாற்றம் செய்யப்பட்டு, அந்த அளவுகோலை மீறுபவர்கள் தேச பக்தி அற்றவர் கள் என்ற பொதுக்கருத்து உருவாக்கப்படுகிறது. குறிப்பாக மோடியை விமர்சிப்போர் தேச துரோகிகள் என்ற முத்திரை விமர்சனங்களைத் தடுக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. எந்தப் பிரச்னையை எடுத்தாலும், ராணுவ வீரர் களின் தியாகத்துக்கு முன் இது எம்மாத்திரம் என்ற ஒற்றை கேள்வியில் பதில் அளிக்கப்படுகிறது அல்லது பதில் மறுக்கப்படுகிறது. அதே ராணுவ வீரர்கள் ஒரு ரேங்க் ஒரு ஓய்வூதியம் என்று கேட்டால் கிடைப்பதில்லை. போரில் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை குறைக்கப் படுகிறது. ராணுவ வீரர்களின் தியாகம் பாஜக வின் அரசியலில் பகடைக்காயாக பயன்படுத்தப் படுகிறது. தேச விடுதலைப் போராட்டத்தில் எதிர்நிலை எடுத்தவர் களால் தேச பக்தி குறித்து உரத்து பேச முடிகிறது என்ற நிலையே அபாயகரமானது.
வரலாறு திரிக்கப்படுகிறது. இல்லாத சரஸ்வதி நதியைத் தேட கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும், கீழடி போன்ற ஆய்வுகள் இவர் களின் நிகழ்ச்சி நிரலுக்குத் தோதாக இருக்காது என்பதால் அதை சீர்குலைக்க முயல்வதும் நடக் கிறது. அரசியல் சாசனம் வலியுறுத்தும் அறிவி யல் பார்வைக்கு நேர் விரோதமான கருத்துக்கள் முன்மொழியப் படுகின்றன. பிரதமர் துவங்கி, இவர்கள் நியமிக்கும் ‘நிபுணர்கள்’ வரை, அரசாங்க துறைகளின் பொறுப்பு அதிகாரிகள், அமைச்சர் கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டு இதை செய்கின்றனர். அறிவியல், கணிதம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் இந்தியாவின் அற்புத பங்களிப்பு உண்டு. ஆனால் அதை விட்டுவிட்டு பிளாஸ்டிக் சர்ஜரி, குளோனிங், விமானம் போன்ற நவீன கண்டுபிடிப்புகள் புராதன இந்தியாவில் நடைபெற்றன என்று கற்பனைகளை அறிவியல் உண்மைகள் போல் முன்வைப்பது, சமீபத்தில், உயரமான, சிவப்பான குழந்தை வேண்டும் என்றால், குறிப்பிட்ட நேரத்தில் தாம்பத்ய உறவு வைக்க வேண்டும்; கர்ப்பிணி பெண்கள் இறைச்சி சாப் பிடக் கூடாது; பாலியல் இச்சைக்கு உட்படக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் வரை கேலிக் கூத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இன ஒதுக்கல், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட கருத்தியல் இருப்பதைக் காண தவறக் கூடாது.
பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங் கள் என்று கூறுவார்கள். அது போல, அரசு எவ்வழியில் போகிறதோ, அவ்வழியில் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜஸ் தான் உயர்நீதிமன்ற நீதிபதி, பசு ஒரு சிறந்த மருத்துவர் என்று கூறியதாகட்டும், ஆண் மயில் பிரம்மச்சாரி, அதன் கண்ணீரை உண்டு பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று கூறியதாகட்டும், பசு பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் நடத்தும் ரவுடி படைகளைக் களத்தில் இறக்க சமிக்ஞை கொடுப்பதாகட்டும், இந்தப் படைகள் செய்யும் குற்றங்களைக் கண்டு கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு போடும் காவல் துறையாகட்டும், அனை வரும் இந்தப் பட்டியலில் வருபவர்கள் தான்.
மாநில உரிமைகள் பறிக்கப்படுதல்
கூட்டாட்சி கோட்பாடு ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு எப்போதுமே உடன்பாடில்லாத விஷயம் தான். வலுவான மத்திய அரசு, மத்திய அரசை சார்ந்து செயல்படும் பலவீனமான மாநில அரசு கள் என்பது தான் அவர்களின் கோட்பாடு. மத வெறி நிகழ்ச்சி நிரலோ கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சி நிரலோ தங்கு தடையில்லாமல் நிறை வேற இது ஒரு முன் நிபந்தனை என்றே அவர்கள் கருதுகின்றனர். குறிப்பாகத் தமிழகத்தில் இதன் பாதிப்புகளைப் பார்க்கிறோம் – உணவு பாது காப்பு சட்டம், நீட், ஜிஎஸ்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, இந்தி மொழி திணிப்பு, நெடு வாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், மாட்டி றைச்சி குறித்த சட்ட திருத்தம், திட்ட கமிஷன் கலைப்பு, ஊரக வேலை உறுதி சட்டம் உள்ளிட்ட மத்திய திட்டங்களை அமல்படுத்த மாநிலங் களுக்கு அளிக்கப்படும் நிதி வெட்டிச் சுருக்கப் படுதல் போன்ற பல உதாரணங்கள் உள்ளன. தமிழகத்துக்கு, மத்திய அமைச்சகங்கள் நிலுவை வைத்திருக்கும் தொகை ரூ.17,000 கோடியை எட்டும். நிதி சிக்கலை ஏற்படுத்தி, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் மாநில அரசுகளை வைக்கும் ஏற்பாடே இது.
மார்க்சிஸ்ட் கட்சி செய்த மதிப்பீட்டை உண்மையாக்கும் நிகழ்வுகளே மோடி அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் நடந்து கொண்டிருக் கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை பலப்படுத்தும் பொருளாதார நடவடிக் கைகளும், மதவெறி நிகழ்ச்சி நிரலும்தான் பாஜக ஆட்சியின் அரசியலாக பரிணமித்துள்ளன. உழைக் கும் வர்க்கத்தின் எதிரி, ஆயுதமாக ஏந்தியிருக்கும் இந்த இரண்டு அம்சங்களின் பாதிப்புகளை எதிர்த்த போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்; பலப்படுத்த வேண்டும் என்பதுதான் சரியான நிலைபாடு. வாழ்வுரிமை பாதிப்புகளை எதிர்த்த போராட்டத்தில் சாதி, மதம் கடந்த ஒற்றுமை யைக் கட்ட முடியும். இதன் மூலம் மதவெறி நிகழ்ச்சி நிரலுக்கான எதிர்ப்பைக் கட்டமைக்க முடியும். பரந்து பட்டதாகவும் ஆக்க முடியும். பாதை தெளிவாகத் தெரிகிறது, அதில் அதிக மான பயணிகள் பயணிக்கும் நிலையை ஏற்படுத்து வதுதான் பாஜக அரசின் எதேச்சாதிகார அரசியல் நிகழ்ச்சி போக்கைக் கட்டுப்படுத்தும் பேராயுதம்.
Leave a Reply