கே.பாலகிருஷ்ணன்
ஒரு மாநிலத்தின் மக்களோடு தொடர் புடைய நிர்வாகம் நடத்திட வேண்டுமெனில் அந்த மாநிலத்தின் மொழியினை ஆட்சி மொழி யாக கொள்வதே உகந்ததாகும். அந்த வகையில் தான் 1924 கான்பூர் மாநாட்டில் காந்தி முன் மொழிந்த ஆட்சி மொழி சம்பந்தமான தீர்மானத் தில் மாநில அளவில் அந்தந்த வட்டார மொழி கள் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதிலும் இந்தி திணிப்பை எதிர்த்து பெரும் போராட்டம் தமிழ கத்தில் நடைபெற்றது. ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ், இங்கும் தமிழ், எங்கும் தமிழ்’ என்ற முழக்கங்கள் எழுந்தன.
இந்திய விடுதலைக்குப் பின் மொழிவழி மாநிலங்கள் ஏற்படுத்துவதற்காக மக்கள் போராட்டங் கள் வெடித்தன. 1956 ஆம் ஆண்டு மாநிலங்களின் எல்லை மறுவரையறைச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. அரசியல் சட்டத்தின் பிரிவு 345 மாநிலங் களில் வட்டார ஆட்சி மொழியை உருவாக்கு வதற்கான வாய்ப்புகளை அளித்துள்ளது. 1955 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கேர் தலைமை யிலான ஆட்சிமொழிக்குழு மொழி அடிப்படை யில் மாநிலங்கள் அமைக்கப்பட்டால் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்கிக் கொள்ள லாம் என பரிந்துரைத்திருந்தது. அதன்படி 1956-ல் சென்னை மாநிலம் அமைக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம் சட்டமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ் மொழியே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கென பயிற்சி வகுப்புகள், இதனை நடைமுறைப்படுத்த ஆட்சி மொழி குழுக்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் கடந்த ஆட்சிமொழி சட்டம் நிறை வேற்றப்பட்ட 1956 முதல் தற்போது 2017 வரை தமிழ் ஆட்சிமொழி மற்றும் பயிற்று மொழியின் செயலாக்கம் பற்றி ஆய்வு செய்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆர்ப்பாட்டமான அறிவிப்புகளை யும், அவை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்தும் ஒப்புநோக்கினால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை காண முடியும். இன்றைக்கும் தமிழக அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக சொன்னாலும், அது 40 விழுக்காட்டுக்கும் குறைவாகவே செயல் படுத்தப்படுகிறது. ஆனால் அண்டை மாநிலங் களான கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் அவர்களின் ஆட்சி மொழித் திட்டம் 75 சதவிகித அளவுக்குச் செயல்படுவதாக பத்திரிகையாளர் ஞாநி கூறியுள்ளார்.
தமிழ் ஆட்சிமொழி – சட்டம்
இந்நிலை ஏற்படுவதற்கான காரணங்களை பரிசீலிக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் பிரிவு 345 அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியை ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வகை செய்கிறது. அதேசமயம், மாநிலங்களுக்கு இடையிலோ, இந்திய ஒன்றியத்துடனோ தொடர்பு கொள்ள ஒன்றிய மொழியே இருக்க வேண்டும் என்ற பிரிவு உள்ளது. அதாவது அந்தந்த மாநில மொழிகளில் தொடர்பு கொள்ள முடியாது. மாறாக, இந்தி (அல்லது) ஆங்கிலத்தில்தான் தொடர்பு கொள்ள முடியும். அடுத்தடுத்த பிரிவுகளில் உள்ளவை அதை விட மோசமானது. சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்து மசோதாக்கள், அவற்றுக்கான திருத்தங்கள், அனைத்து சட்ட முன் வரைவுடன், ஆளுநர் பிறப்பிக்கும் அவசர சட்டங்கள், மாநில சட்டமன்றம் வெளியிடும் ஆணைகள், ஒழுங்குமுறைகள், விதிமுறைகள் ஆகிய அனைத்துக்குமான அதிகாரபூர்வமான பிரதிகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என (348(1)ஏ)என்ற பிரிவு) குறிப்பிட்டுள்ளது. இவை அனைத்தும் மாநில மொழியில் கொண்டு வந்தா லும், இதற்கான ஆங்கில மொழி பெயர்ப்புகளே அதிகாரப்பூர்வமான பகுதிகளாக கருதப்படும். தமிழ்ப் பிரதிகளை புறந்தள்ளி ஆங்கில பிரதிகள் தான் அதிகாரப்பூர்வமானவை என்று கூறுவதன் மூலம் அதிகாரபூர்வமான ஆட்சி மொழி ஆங்கில மாகத்தான் இருக்கும் என்பதற்கு மேலும் விளக் கம் தேவையில்லை.
மேலும் 1956-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத் தில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின் மூன்றாம் பிரிவு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
“2-ம் பிரிவில் என்ன கூறப்பட்டு இருப்பினும், அரசியலமைப்பு சட்டத்தின் 346, 347 பிரிவுகட்கு ஊறின்றி இந்த சட்டத்தின் தொடர்புக்கு முன்பு ஆங்கிலம் பயன்பட்டு வந்த அலுவல்முறை காரியங் கள் அனைத்துக்கும் ஆங்கிலத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.” இதே சட்டத்தின் 2வது விதி தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்கும் என அறிவிக்கிறது. அதற்கு மாறாக 3வது விதி ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அனைத்து காரியங்களுக்கும் ஆங்கிலத்தையே பயன்படுத்த வேண்டும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆம்! வலதுகையால் தமிழ்மொழிக்கு வழங்கப் பட்ட உரிமை இடதுகையால் தட்டி பறிக்கப் பட்டு விட்டது.
இதேசட்டத்தின் 4வது பிரிவு ‘மாநில அரசு அவ்வப்போது வெளியிடுகிற அறிவிக்கையின் மூலமாக, அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படு கின்ற அலுவலக நடைமுறை செயல்களுக்கு தமிழை பயன்படுத்த வேண்டும் என கட்டளையிடலாம்’ என கூறுகிறது. அதாவது, ஆங்கிலத்தை நிரந்தர மாக வைத்துக் கொண்டு அவ்வப்போது தமிழை பயன்படுத்தலாம் என கட்டளையிடலாம். அவ்வளவு தான். இந்த சட்டத்தை வைத்துக் கொண்டுதான் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என நாம் மார் தட்டிக் கொள்கிறோம்.
மேற்கண்ட இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இந்திக்கு வக்காலத்து வாங்குபவர்கள் என்பது அறிந்ததே. ஆனால் தமிழ்நாட்டில் தமிழுக்கு ’போர் முரசு’ கொட்டி 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இந்த நிலைமையில் ஏதும் மாற்றம் கொண்டு வந்ததா? மேற்கண்ட சட்டத்தில் தமிழ் தான் ஆட்சி மொழி என வற்புறுத்தும் வகையில் உரிய திருத்தங்களை மத்திய அரசின் அனுமதி யின்றி திமுக நிறைவேற்றி இருக்க அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் அவர்கள் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை.
தாய்மொழிக் கல்வி
தாய்மொழிக் கல்வியே சிந்தனை திறனை வளர்ப்பதற்கு அடிப்படையானது. 1949-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விக் கமிஷன் தாய்மொழிக் கல்வியின் அவசியம் பற்றி “கல்வி கண்ணோட்டத்தைக் கொண்டு பார்த்தாலும் சரி, ஜனநாயக சமூகத்தின் பொது நலனைக் கொண்டு பார்த்தாலும் சரி, கல்வி பிரதேச மொழியில் இருக்க வேண்டியது அவசியமா கும். இவ்வாறு கல்வி பயிலுவதுதான் அவர்களுடைய இலக்கியத்தை செழுமைப்படுத்தவும், கலாச் சாரத்தை வளர்க்கவும் உதவும். இவ்வாறு இயற் கையாக கல்வி பயின்ற மக்கள் கல்வியிலும், கற்பனையிலும் உயர்ந்த மட்டங்களை எட்டுவது சாத்தியமாகும். ஆராய்ச்சிக்கும் அறிவின் எல்லையை விஸ்தரிப்பதற்கும் பலமான ஆதிக்கத்தை இது அவர்களுக்குக் கொடுக்கும்” என குறிப்பிட்டது.
யுனெஸ்கோ போன்ற சர்வதேச நிறுவனங் களே தாய் மொழிக் கல்வியையே வற்புறுத்துகின் றன. ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் அனைத்திலும் அந்நிய மொழியை தூக்கி எறிந்து விட்டு உடனடியாக சொந்த மொழியை ஆட்சி மொழியாகவும், தாய்மொழிக் கல்வியை நிலைநிறுத்தும் பணியை நிறைவேற்றியுள்ளதை பெரும்பாலான நாடுகளில் பார்க்க முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏற்படவில்லை.
தற்போது தமிழ் பயிற்று மொழி பெருமளவு குறைந்து வருகிறது. உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்த ஆங்கில பயிற்றுமொழி என்பது தற்போது ஆரம்பக் கல்வியிலும் புகுத் தப்பட்டு விட்டது. புற்றீசல் போல் ஆங்கில மழலையர் பள்ளிகள் தமிழ்நாட்டில் நடத்தப் பட்டு வருகின்றன. தமிழ்வழி கல்வி பயில்வதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவ தில்லை. தமிழ்வழிக்கல்வி வகுப்புகளில் மாணவர் கள் சேர்வதில்லை என கருத்து தெரிவிக்கப்படு கிறது. வேலை வாய்ப்புக்கும், நவீன வாழ்க்கைத் தேவைக்கும் அடிப்படையாக உள்ள பொறியி யல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இப்போது வரை தமிழ் வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட வில்லை. இதற்கான தமிழ் புத்தகங்கள் உருவாக் கப்படவில்லை. இலங்கையில் கூட இப்பிரிவு வகுப்புகளை தமிழ் வழிக்கல்வியில் படிக்க வாய்ப்பு உள்ள போது தமிழ்நாட்டில் இதற்கான வாய்ப்பு கள் இல்லாதது யாருடைய குற்றம்?
மேலும், வேலைவாய்ப்புக்கு உகந்த கல்வி ஆங்கில வழிக்கல்வி என்ற எண்ணம் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் படித்த பல லட்சம் பேர் வேலையின்றி தவித்துக் கொண் டுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
தமிழ்மொழிக் கல்வியை கட்டாயமாக்கி விட்டு மாற்று மொழிகளில் கல்வி பெறுவோர் விதிவிலக்கு அல்லது அனுமதி பெற்று படிக்க வேண்டும் என்ற நிலையை ஆரம்பத்திலேயே உருவாக்கி இருந்தால் நிச்சயம் தமிழ் வழிக்கல்வி பலமடைந்திருக்கும்.
தற்போது தாராளமய பொருளாதார கொள் கையின் விளைவாக கல்வி என்பது வியாபார மாக்கப்பட்ட சூழலில் கல்வி வியாபாரிகள் தங்களது லாப வேட்டைக்கு ஆங்கில வழிக் கல்வியை திணிப்பது அசுர வேகத்தில் நடந்து கொண்டுள்ளது. தமிழ் பயிற்று மொழியாக மாறாதவரை தமிழ் ஆட்சி மொழியாவது கற்பனையாகவே இருக்கும்.
நீதிமன்ற மொழி
அரசியல் சட்டம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதின்றங்களில் ஆங்கிலமே நீதிமன்ற மொழி யாக இருக்க வகை செய்துள்ளது. உயர்நீதிமன்றங் களுக்கு கீழ் உள்ள கீழமை நீதிமன்றங்கள், தீர்ப் பாயங்கள் அனைத்திலும் தமிழே நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டுமென பல அரசாணை கள் வெளியிடப்பட்டுள்ளன. தீர்ப்புரைகள் தமிழிலேயே வழங்கிட வேண்டுமென வற்புறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில், இது சொற்ப அளவே நடந்து வந்தது. ஆங்கிலத்தில் தீர்ப்புரை எழுதிட வேண்டுமாயின் உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிட வேண்டுமென விதி வகுக்கப்பட்டிருந் தது. ஆனால் அடிக்கடி அனுமதி கேட்டு நீதிமன்ற நடுவர்கள் விண்ணப்பிப்பதால் அந்த ஆணையை மாற்றி தமிழில் (அ) ஆங்கிலத்தில் தீர்ப்புரை எழுதலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. அதைதொடர்ந்து பெரும்பாலான தீர்ப்பு களும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டு வருகின்றன.
அரசியல் சட்டப்பிரிவு 348 (1) உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஆங்கிலம் நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டுமென குறிப்பிட் டுள்ளது. அதேசமயம் 348(2) பிரிவும் 1963-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 7-ன்படி உயர்நீதிமன்ற தீர்ப்புரைகள் மற்றும் உத்தரவுகள் இந்தி (அ) அந்த மாநிலத் தின் ஆட்சி மொழியில் வெளியிடுவதற்கு, சம்பந் தப்பட்ட மாநில ஆளுநர், குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று வழங்கிட உத்தரவிடலாம் எனவும், அவ்வாறு அந்த மொழிகளில் வழங்கப்படும் தீர்ப்புரைகள் அல்லது உத்தரவுகளின் ஆங்கில மொழி பெயர்ப்பும் இருக்க வேண்டும் என தெளி வாக கூறப்பட்டுள்ளது.
இந்த பிரிவுகளை பயன்படுத்தியே பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிர தேசம் ஆகிய மாநிலங்களில் இந்தியில் தீர்ப் புரைகள் மற்றும் உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாடு, குஜராத், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இதே உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக ஆளும் கட்சிகள் மத்திய அரசில் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருந் தன. இக்கட்சி தலைவர்கள் நினைத்திருந்தால், மத்திய அரசிடம் வற்புறுத்தி மேற்கண்ட அனு மதியை பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்புரைகள் மற்றும் உத்தரவுகளை வழங்குவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஏற் பாட்டினை செய்து முடித்திருக்க முடியும். இதன் மூலம் கீழமை நீதிமன்றங்களில் தமிழ் முழுமை யான நீதிமன்ற மொழியாக உயர்த்தப்பட்டிருக் கும். ஆனால் இக்கட்சித் தலைவர்கள் இந்தப் பிரச் சனையில் கொஞ்சமும் அக்கறை செலுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
தமிழும் திமுக – அதிமுகவும்
தமிழ்நாட்டில் 1967 முதல் தொடர்ந்து ஆட்சி யில் நீடித்து வரும் திமுக, அதிமுக அரசுகள் மேற்கண்ட நிலைமைக்கு முக்கிய காரணமாகும். “இந்திக்கு ஒரு இந்தியத் தகுதியை தேடிக் கொடுக் கும் காங்கிரஸ் இயக்கமும், இந்தி எதிர்ப்பை கேடயமாக்கி ஆங்கிலத்தை ஆதரிக்கும் திராவிட இயக்கமும் தமிழுக்கு ஒரு தனி இடத்தை மறுக் கின்றன” என பேராசிரியர் கோ. கேசவன் கூறி யுள்ளார். துவக்க காலம் முதலே இந்தி திணிப்பை எதிர்த்த திராவிட இயக்கம், அந்த இடத்தில் தமிழை அரங்கேற்றுவதற்கு மாறாக ஆங்கிலத்தை வழிமொழிந்தார்கள்.
நாடு விடுதலையடைந்த பின்னர், தமிழ் பிர தேசங்களை கொண்டு தமிழ்நாடு மாநிலத்தை உருவாக்கிட வேண்டுமென கம்யூனிஸ்ட்டுகள், ம.பொ.சி. போன்றோர் போராடியபோது மொழி வழி மாநிலம் அமையக்கூடாது என குரல் கொடுத்த வர்கள் தந்தை பெரியாரும், ராஜாஜியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டம் எழுச்சி யுடன் நடைபெற்ற காலத்தில் திராவிட முன் னேற்றக் கழகம் உதயமாகி இருந்தது. ஆனால் இப்போராட்டங்களில் இடம்பெறாமல் திமுக ஒதுங்கியே இருந்தது கவனிக்கத்தக்கது. அப்போ தெல்லாம் திமுக திராவிட நாடு எண்ணத் திலேயே மிதந்து கொண்டிருந்தது.
இந்த காலம் முழுவதும் திமுக என்ன நிலை மேற்கொண்டது எழுத்தாளர் தோழர். சு. வெங்கடேசன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“தமிழே இன்றி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு நிர்வாகத்துக்கு எதிராக திமுக மௌனம் சாதித்தது. ரயில் நிலையங்களில் இந்தியை அழித்தும், டால்மியாபுரத்திற்கு தமிழ்ப்பெயர் வைக்கப்பட வேண்டுமென்றும் கோரி போராட்டம் நடத்திய திமுக கன்னித் தமிழை ஆட்சி மொழி யாக்கவோ, பயிற்று மொழியாக்கவோ வலி யுறுத்தி எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை. குறிப்பிட்ட சில மாவட்டங்களிலாவது தாய் மொழியில் நிர்வாகம் நடைபெற வேண்டும்; பயிற்று மொழியாக தாய்மொழி இருக்க வேண் டும்; குறைந்தபட்சம் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு மொழி பெயர்ப்பு வசதியாவது செய்து தரப்பட வேண்டும் என ஐந்தாண்டு காலம் சட்ட மன்றத்திலேயே எழுப்பப்பட்ட குரலை திமுக கண்டுகொள்ளவில்லை. காரணம், அன்றைய சென்னை மாகாணத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டுமென்பதே திமுகவின் நிலைப்பாடு.”
தமிழ் மொழியும் கம்யூனிஸ்டுகளும்
சென்னை மாநில சட்டசபையில் நீண்டகால மாகவே மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க வேண்டும்; மற்றமொழிகளில் பேசுபவர்களது உரையை மாநில மொழியில் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டு மென தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதனை ஆதரித்து பேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான பி. ராமமூர்த்தி – விடு தலைபெற்று ஐந்தாண்டு காலம் கடந்த பின்னரும் நாம் இன்றும் இந்த அந்நிய பாஷையை வைத்துக் கொண்டு, அந்த பாஷையில் பேசுவது, வேடிக் கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் சுதந்திரம் வந்த பின்னர் இப்படிப்பட்ட ஒரு காட்சியை காண முடியாது” என தீர்மானத்தை ஆதரித்து, வரலாற்றில் முதன் முறையாக தமிழில் பேசினார். அதனை தொடர்ந்து பேசிய ஜீவானந்தம் அவர்களும் சென்னை மாநில சபையில் தமிழ் குரல், கன்னட குரல், தெலுங்கு குரல், மலையாள குரல் தான் ஒலிக்க வேண்டும் என வாதிட்டார்.
அதன் பின்னர் ஆளுநர் உரையின் மீது பேசிய ஜீவானந்தம் அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியே அரசு மொழியாக இருக்க வேண்டும். இந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டுமென வற்புறுத்தினார். ஆங்கிலத் தில் மட்டுமே பேச முடியும் என்ற சென்னை மாநில சட்டசபையில், நிதிநிலை அறிக்கையின் மீது தோழர் பி.ராமமூர்த்தி தமிழில் நீண்ட உரை யாற்றி புதிய வரலாறு படைத்தார். இவரது தமிழ் உரையை நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் வெகு வாக பாராட்டினார். அதன் பின்னர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமென அனல் பறக்க சட்டமன்றத்தில் வாதாடினார்கள். தமிழக வரலாற்றில் தமிழுக் காக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அழுத்தமான குரல் கொடுத்தவர்கள் கம்யூனி ஸ்ட்டுகள் என்பது வரலாற்று உண்மையாகும்.
தீவிர போராட்டத்தின் விளைவாக 1956-ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பெற்று 1956 டிசம்பர் அன்று தமிழ் ஆட்சி மொழி மசோதாவை, சென்னை மாகாண சட்டமன்றத்தில் அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் முன்மொழிந்தபோது, அதனை வரவேற்று பேசியதுடன் இதனை படிப்படியாக கிராமங்கள் வரை விரிவுபடுத்திட வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அழுத்தமாக வாதாடினார்கள்.
ஒட்டுமொத்தத்தில், பலமொழி பேசும் இந்திய நாட்டில் இந்தியை திணிப்பதும், அதை எதிர்த்து நியாயமாக குரல் கொடுத்த திமுக மறுபக்கத்தில் ஆங்கிலத்தை திணிப்பதும் நடைமுறையாகி விட்டது. இந்நிலையில், இந்தியாவின் மொழிப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதில் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே. நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற விவாதங்களை சற்று சீர்தூக்கி பார்த்தாலே இதனை புரிந்து கொள்ள முடியும்.
1968-ம் ஆண்டு மத்திய அரசு, ஆட்சிமொழி சட்ட திருத்தத்தையும் தீர்மானத்தையும் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியதை முன்பு குறிப்பிட் டிருந்தோம். இம்மசோதா நிறைவேற்றப்பட்டதை யொட்டி தமிழ்நாட்டில் மாணவர்கள் மீண்டும் இந்தி திணிப்பை எதிர்த்து போராடத் துவங் கினார்கள். போராட்டக் களத்திலே இருந்த மாண வர்களை முதலமைச்சர் அண்ணாதுரை நேரில் சந்தித்து பேசினார். மேற்கண்ட சட்டதிருத்தத்தை யும் – தீர்மானத்தையும் எதிர்த்து சட்டமன்றத் திலே தீர்மானத்தை நிறைவேற்றுவேன் என மாண வர்களிடம் வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறு தியின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவை யின் சிறப்புக் கூட்டம் 23.1.1968 அன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத் தின் மீது முதலமைச்சர் அண்ணாதுரை உட் பட பல கட்சித் தலைவர்கள் திருத்தங்களை முன்மொழிந்ததுடன் சட்டப்பேரவையில் உரையாற்றினார்கள்.
ஏ.பாலசுப்ரமணியம் உரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற கட்சித் தலைவர் தோழர் ஏ. பாலசுப் பிரமணியம் விரிவான திருத்தங்களை முன்மொழிந்து நீண்ட உரையாற்றினார். இதனை வழிமொழிந்து தோழர் என். சங்கரய்யா உரையாற்றினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்த திருத் தங்களும், தோழர்கள் ஏ. பாலசுப்பிரமணியம், தோழர் என். சங்கரய்யா ஆகியோரது உரைகளும் மிகச் சிறந்த ஆவணங்களாகவும் இந்தியாவின் மொழிச்சிக்கலுக்கு தீர்வுகளை முன்மொழியும் வழிகாட்டிகளாகவும் சட்டப்பேரவை ஆவணங் களில் உள்ளன. அதன் முக்கிய பகுதிகள் கீழே: தோழர் ஏ.பாலசுப்ரமணியம் அவர்கள் முன்மொழிந்த திருத்தத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு:-
“பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட இந்நாட்டில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்டத்தில் உருவான நாட்டின் ஒற்றுமையை பேணிப் பாதுகாத்து, மேலும் உறுதிப் படுத்துவதற்கு இந்நாட்டில் வழங்கும் எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்தை எல்லா மட்டங் களிலும் நல்குவது இன்றியமையாதது என்பதே இச்சபையின் திடமான கருத்து”.
இதற்கென கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண் டும் என்றும் இச்சபை வலியுறுத்துகிறது:-
1. அரசியல் சட்டத்தில் இந்திக்கு பிரத்யேக மான அந்தஸ்து அளித்திருப்பது அகற்றப்பட்டு, நாட்டின் பிற மொழிகளுக்கு கீழ்நிலையை அளிக்கும் பிரிவுகளையெல்லாம் நீக்கி, எல்லா இந்திய மொழிகளுக்கும் சம அந்தஸ்து நல்கும் வகையில் திருத்தப்பட வேண்டும்.
2. அரசியல் ஷரத்தின் 8வது ஷெட்யூலில் குறிப் பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல்மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
3. பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் அரசி யல் சட்டத்தின் 8வது ஷெட்யூலில் உள்ள மொழி களில் நடப்பதற்கும், ஏககாலத்தில் மொழி பெயர்ப்புக்கும் ஏற்பாடு செய்திட வேண்டும்.
4. மத்திய அரசின் மசோதாக்கள், சட்டங்கள், உத்தரவுகள் போன்றவை அனைத்தும் 8வது ஷெட்யூலில் குறிப்பிட்டுள்ள மொழிகளில் பிரசுரிக்க வேண்டும்.
5. மத்திய அரசின் பணிமனைகள் (அலுவலகங்கள்) இருக்கும் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி களிலேயே மக்களுடன் தொடர்பு வைத்து பணி யாற்ற வேண்டும்.
6. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு தத்தம் மாநில மொழியிலேயே கடிதம் எழுதுவதற்கும் அம்மொழியிலேயே பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கிட வேண்டும்.
7. ஒவ்வொரு பிரiஜைக்கும் தன் தாய் மொழி யிலேயே மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதற்கும் பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கிட வேண்டும்.
8. எட்டாவது ஷெட்யூலில் உள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு சமமாக நிதிவசதிகளை வழங்கிட வேண்டும்.
9. எல்லா மாநிலங்களிலும் கல்வி நிலையங் களில் உயர்நிலை வரையிலும் அந்தந்த மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
10. அதேபோன்று அந்தந்த மாநிலத்தின் மொழியே மாநிலங்களில் நிர்வாக மொழியாகவும், உயர்நீதி மன்றம் வரை நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும். இவை யாவும் அடுத்த பத்தாண்டுகளில் முழுமையாக அமலாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
11. மொழிவழி சிறுபான்மையினருக்கு உயர் கல்வி வரை தங்கள் தாய்மொழியிலேயே கல்வி பயிலுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
12. மும்மொழித் திட்டம் என்பது பயனற்றது. அதேசமயத்தில் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தாய்மொழியைத் தவிர இதர இந்திய மொழிகளையும், ஆங்கிலம் அல்லது வேறு அந்நிய மொழிகளையும் மாணவர்கள் இஷ்டம் போல் கற்பதற்கு வசதியளிக்கப்பட வேண்டும்.
இத்தகைய விரிவான திருத்தத்தை சட்டமன்றத் தில் மொழிந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் முன்மொழிந்த திருத்தத்தில் கூட மத்தியில் ஆட்சி மொழி குறித்து குறிப்பிடப்பட்டதே தவிர, மாநிலத் தில் அந்தந்த மாநில ஆட்சி மொழியே இருக்க வேண்டுமென்றோ, அந்தந்த மாநிலங்களில் கல்வி நிலையங்களில், அந்தந்த மாநிலத்து மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்றோ குறிப்பிடப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசும் போது “இந்தியாவில் இருக்கிற எல்லா தரப்பு மொழிகளுக்கும் சம அந்தஸ்து அளிக்கும் கொள் கையை எல்லோருக்கும் முழு உரிமையை வழங் கும் கொள்கையை முன்வைத்தால் கட்டாயமாக அதன் அடிப்படையில் எல்லா தரப்பு மக்களை யும் ஒருமித்த கருத்துக்கு கொண்டு வர முடியும்….” எந்த நாடும் சுதந்திரம் அடைந்தவுடன் அந்நிய மொழியை தூக்கி எறிந்து விட்டு தன்மொழிக்கு உரிய இடத்தை கொடுப்பதைத்தான் பார்க் கிறோம். அதற்கு மாறாக, எந்த மொழியில் சொல்வது, எந்த மொழியை நீதிமன்ற மொழியாக கொள் வது, எந்த மொழியை நிர்வாக மொழியாக கொள்வது என்பதை கேள்விக்குரிய விஷயமாக வைத்திருப்பதற்கு காங்கிரஸ்தான் பிரதானமாக பொறுப்பேற்க வேண்டும்.
“இந்த விசயத்தில், இங்கு பேசும்போது, சிலர் ஆங்கிலமே நீடிக்க வேண்டுமென்று விரும்புகிறார் கள். ஆங்கிலத்தை அதை விரும்பாத மக்கள் மீது கட்டாயமாக திணிக்கப்படும் ஏற்பாடு இருந்தால், அந்த ஏற்பாடு இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும்.”
நமது அரசியல் சட்டத்தில் இந்திக்கு தனி சிறப்பு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என எங்கள் திருத்தம் வற்புறுத்து கிறது. இந்திக்கு தனி உயர்ந்த இடம் அளிக்கப்பட் டுள்ளதை ஏற்க முடியாது. எந்த ஒரு மொழிக்கும் தனிச்சலுகை இருக்கக்கூடாது; அந்த நிலைமையை மாற்றுவதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பது அவசியமானதாகும்.
எங்களைப் பொறுத்தவரையில் 14 மொழிகளும் (தற்போது 22 மொழிகள்) சம அந்தஸ்து பெற வேணடும் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட ஏற்பாடு வரும் வகையில் இடைக்காலத்தில் ஆங்கிலம் துணை அலுவல் மொழியாக நீடிக்கலாம் என்பது தான் கருத்து. கடந்த காலத்தில் கட்டாயமாக ஒரு ஆட்சி மொழி வேண்டுமா என்ற கேள்வி கேட்கப் பட்டுள்ளது. ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் வழிகாட்டிய லெனின் இதற்கும் வழி கூறியிருக்கிறார். கட்டாய ஆட்சி மொழி தேவையா என்பது கேள்வி. தேவையில்லை என்று அவரே எழுதியுள்ளார். தடியால் அடித்து சொர்க்கத்துக்கு எவரையும் அனுப்ப முடியாது என கூறியுள்ளார். இணைப்பு மொழி எப்படி உருவாகும் என்பதற்கும் அவரே பதில் சொல்கிறார் “ஜனநாயகம் வளர வளர, தொழில்கள் பெருகப் பெருக, மக்கள் போக்குவரத்து அதிகரிக்க அதிகரிக்க, தானாகவே வரலாற்றுப் போக்கில் எந்த மொழி பயனுள்ளதாக உள்ளதோ அது இணைப்பு மொழியாக அமையும்”. அது தான் சரி. அதற்கு மாறாக, ஏதாவது ஒரு மொழிக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து அது கட்டாயமாக ஆக்கப்பட்டால், அது இந்தியாவிற்கு ஆபத்தாகவே முடியும்.
இதனை தொடர்ந்து பேசிய தோழர் என்.சங்கரய்யா அவர்கள் முதலமைச்சர் அவர்கள் 14 மொழிகளும் மத்திய ஆட்சி மொழியாக வேண்டும். அதற்கு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்ற திருத்தத்தை நாங்கள் ஆமோதிக்கிறோம். அதே போல் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள திருத் தத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை தமிழில் எழுதுகிறவர்கள் இந்திய தேசிய மொழி களான 14 மொழிகளிலும் எழுதலாம் என சேர்த்துக் கொள்வது ஒரு முன்னேற்றமாக இருக்கும்.
மும்மொழித் திட்டம்
மும்மொழி திட்டம் நிச்சயமாக தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தமிழை தவிர வேறு மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்ல நமக்கு உரிமையில்லை. அண்டை மாநில மொழிகளைக் கூட கற்றுக் கொள்ள சொல்ல நமக்கு உரிமை இல்லை. அப்படியிருக்க 6,000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஆங்கில மொழியை நம்முடைய மாணவர் கள் கட்டாயமாக படிக்க வேண்டுமென நாம் ஏன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்? அவரவர் களின் தாய் மொழியைத் தவிர வேறு ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, ஆங்கிலம்தான் படிக்க வேண் டும்; இந்திதான் படிக்க வேண்டுமென்று சொல்லக் கூடாது. மற்ற மொழிகளை படிப்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். இதற்கு அரசாங்கமும், கல்வித்துறையும் எந்த அளவுக்கு ஏற்பாடு செய்ய முடியுமோ அந்த அளவு ஏற்பாடு களை செய்து தர வேண்டும்’ என ஆணித்தரமாக சட்டமன்றத்தில் கருத்தினை பதிவு செய்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயகம் குறித்து செயல்பாட்டை விவரித்த கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:
நாடாளுமன்றம், மத்திய நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் கள் அவரவர் தேசிய மொழியில் பேசும் உரிமை வழங்கப்படுவதோடு, மற்ற அனைத்து மொழிகளி லும் அதே நேரத்தில் மொழிபெயர்க்கவும் ஏற் பாடு செய்யப்படும். அனைத்துச் சட்டங்கள், அரசு உத்தரவுகள், தீர்மானங்கள் அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைக்கும். மற்ற மொழிகளை விலக்கி விட்டு, இந்தி மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்குவது என்பது கட்டாயப்படுத் தப்பட மாட்டாது.
கல்வி நிலையங்களில் உயர்நிலை வரை தாய் மொழியில் பயிலும் உரிமை உத்தரவாதப்படுத்தப் படும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியிலேயே அனைத்து பொதுத்துறை, அரசு நிறுவனங்களில் நிர்வாகம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். மாநிலத்தில் மாநில மொழியின் தேவையை ஒட்டி ஒரு பகுதியிலுள்ள சிறுபான்மை அல்லது சிறுபான்மையினரின் மொழியையும் இணைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
மிக நீண்ட காலமாகவே தந்தி, மணி ஆர்டர் போன்றவற்றுக்கான படிவங்களை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுத வேண்டிய நிலையில் இருந்ததை மாற்றி, ஆங்கிலம் அறிந்தவர்களின் உதவியை நாடாமல், தமிழிலேயே இந்தப் படிவங் களை எழுதுவதற்கான உரிமையை தமிழ் மக்களுக் குப் போராடிப் பெற்றுத் தந்தவர் மார்க்சிஸ்ட் கட்சியின் அந்நாள் செயலாளரான தோழர் ஏ. நல்லசிவன்.
அதைப் போன்றே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கோரி தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம் தொடர்ச்சியான போராட்டங்களை தில்லி வரை சென்று நடத்திய தன் விளைவாகவே இந்தப் பெருமை தமிழுக்கு வந்து சேர்ந்தது. இப்போதும் கூட கீழடி அகழ் வாராய்ச் சிக்கான போராட்டத்தை அது நடத்தி வருகிறது.
நாட்டின் மொழிப்பிரச்சனைக்கு தீர்வு காண எத்தகைய அணுகுமுறையினை கையாள வேண் டும் என்ற விவாதத்தில் ஏராளமான கருத்து முரண்பாடுகள், வேறுபாடுகள் இருந்த போதி லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முன்மொழிந்துள்ள தீர்வே இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாத்திடவும், பல மொழி பேசும் மக்கள் இரண்டற இணைந்து வாழ்ந்திடவும், இந்திய நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்திடவும் அடியுரமாக அமையும் என்பது தெளிவு. இதற்கு மாறாக தற்போது பாஜக முன்மொழிந்துள்ள இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு இந்தியாவின் ஒற்றுமைக்கும், பன்முக கலாச்சாரத்திற்கும் விடப்பட்டுள்ள சவாலாகும்.