கார்ல் மார்க்ஸ் 200-வது ஆண்டில், மார்க்சிய வாசிப்பை பரவலாக்கவும். மார்க்சிய விவாதங்களை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழு திட்டமிட்டுள்ளது. சென்ற இதழில் ‘தத்துவ வாசிப்பு’ என்ற தலைப்பில் வெளியான சிறப்புக் கட்டுரை, இம்மாத வாசகர் வட்டங்களில் வாசிக்கப்படும். இந்த இதழிலும், கார்ல் மார்க்சும் : விவசாய பிரச்சனைகளும் என்ற தலைப்பிலான கட்டுரை பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதியுள்ளார்.
முதலாளித்துவ ஆளுகையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வளர்ச்சிப்போக்கில் எழும் தீர்க்கவியலா முரண்களைக் குறித்து மார்க்சுடைய சில வாதங்களை இக்கட்டுரை தொகுத்துக் கொடுக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் இத்துறையில் புகுத்தப்பட்டாலும், அறிவியல் அடிப்படையிலான விவசாயம் சாத்தியமாக வேண்டுமெனில் அதற்கு மார்க்சியத்திடமே தீர்வு இருக்கிறது. இக்கட்டுரை, ஒரு பருந்துப்பார்வையை வாசகர்களின் முன் வைக்கிறது.
சோவியத் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டை ஒட்டி பல்வேறு சிறப்புக் கட்டுரைகளை இந்த ஆண்டில் வெளியிட்டுள்ளோம். ஆங்கில மார்க்சிஸ்ட் இதழில் தேசிய இயக்கமும் நவம்பர் புரட்சியும் என்ற ஒரு கட்டுரையை வரலாற்றுத்துறை பேராசிரியர் அமர் பரூக்கி எழுதியிருந்தார். அதன் சுருக்கப்பதிப்பு இந்த மாதம் வெளியாகிறது. மார்க்சிய – லெனினிய சித்தாந்தம் உலகெங்கும் தாக்கம் செலுத்துவதற்கு புரட்சியின் வெற்றி ஒரு காரணமாக அமைந்தது. ஒரே முகமான மாற்றங்களை அல்ல, ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சூழல்களுக்கு ஏற்ப – பன்முகத் தன்மை கொண்ட விளைவுகளை அது உலகமெங்கும் ஏற்படுத்தியது. தேசிய இயக்கங்களுக்கு அதுவொரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக எழுந்தது. வரலாற்றுத் தரவுகளோடு, இந்தியா பல்வேறு நாடுகளின் தேசிய இயக்கங்களில் ஏற்படுத்திய தாக்கங்களையும் இக்கட்டுரை வழங்குகிறது.
இதுவரையிலும் இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்றிருந்த வரலாற்று ஆய்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அகழ்வாய்வாக ‘கீழடி’ அமைந்திருக்கிறது. அறிவியல் பூர்வமான வரலாற்று முடிவுகளுக்கு வந்தடைய அகழ்வாய்வுப் பணிகள் முழுமையடைவது அவசியம். இவ்வாய்வில் இதுவரையிலும் வெளிவந்துள்ள முடிவுகளே இந்துத்துவ சக்திகள் விரும்பிக் கட்டமைத்திருந்த புனைவுக் கதைகளுக்கு எதிராக இருந்தன எனவே, அரசியல் காரணங்களோடும், உள்நோக்கத்தோடும் தடைகள் எழுப்பப்பட்டன. பூர்வ குடிகள், பூர்வ மதம் போன்ற போலியான புனைவுகள், வெறியூட்டல் அரசியலுக்கு அடிப்படையாக இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்மைத்துவத்தை, அறிவியல் அடிப்படையிலான வரலாற்று வாசிப்பை ஊக்குவிக்க விரும்பும் நாம் – மேற்சொன்ன அரசியலை எதிர்கொண்டு தடுப்பதும் அவசியம், ஆய்வு தொடர்ந்து நடப்பதை உறுதி செய்வதும் அவசியம்.
இதே காலகட்டத்தில், ஆரிய மொழிக்குடும்பம் மற்றும் இடம்பெயர்தல் தொடர்பான டி.என்.ஏ ஆய்வு முடிவுகளும் கிடைத்துள்ளன. இவ்விரண்டையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் தரவுகள் கொண்ட கட்டுரையை எஸ்.கண்ணன் எழுதியுள்ளார்.
வெளியுறவுக் கொள்கை தொடர்பானதொரு கட்டுரையை தில்லியில் செயல்படும் மார்க்சிஸ்ட் கட்சியின் வெளியுறவு விவகாரங்களை கவனிக்கும் குழுவில் முழுநேரப் பணியிலுள்ள அருண் குமார் எழுதியிருக்கிறார்.
கட்சித் திட்டம் குறித்தான தொடரின் 9 வது பகுதி இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. ஒடுக்குமுறை செலுத்துகிற ‘ஆளும் வர்க்கங்களை’ துல்லியமாக சுட்டிக்காட்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்ட பகுதியை விளக்குகிறது இக்கட்டுரை. ஆளும் வர்க்கங்களின் நலன்களே இன்றைய அரசையும், ஆட்சியாளார்களையும் வழிநடத்துகின்றன. அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னும் ஒழிந்திருக்கும் ஆளும் வர்க்க நலன்களும், சுரண்டலைத் தீவிரப்படுத்தும் நோக்கத்தையும் உணர்ந்துகொள்ள கட்டுரை வழிகாட்டுகிறது.
Leave a Reply