மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை !


ஆறுமுக நயினார்

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் உலக அமைதிக்கான தினத்தை கடைபிடிக்குமாறு 2017 ஜூலை மாதம் கூடிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்திருந்தது.

மக்கள் வாழ்வுரிமைக் கோரிக்கைகளுக்காகவும், வகுப்புவாத பேரிடரை எதிர்த்தும், சமூக நீதி காக்கவும் இக்காலத்தில் – ஆகஸ்டு பிரச்சாரமாக – நடைபெற்ற போராட்டங்களுக்கு நடுவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தையும் கூடவே நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.

இன்றைய காலகட்டத்தில், இந்திய மக்கள் சந்திக்கும் சமூக, பொருளாதார அரசியல் சிக்கல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக, பின்புலமாக சமகால முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் நெருக்கடிகளே முதன்மை காரணங்களாகத் திகழ்கின்றன. அவை சர்வதேசத் தன்மை படைத்தாக உள்ளன. ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையதாகவும் பின்னிப் பிணைந்ததுமாகவும் அவை உள்ளன.

மேலோட்டமாகப் பார்த்தால் எல்லா நாடுகளிலும் நடைபெறும் செய்திகள் தனித் தன்மை பெற்றதாகத் தோன்றினாலும் இயல்பாகவே அவை அனைத்தும் முதலாளித்துவ நலன்களை பாதுகாக்கவும், நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள இந்த அமைப்பை நிலை நிறுத்தவும் ஆகத் திட்டமிட்ட திசைவழிகளில் இயங்குகின்றன. நெருக்கடிகளை, வளர்கிற மற்றும் ஏழை நாடுகளிலுள்ள மக்களின் தோள்கள் மீது சுமத்த ஏகாதிபத்தியம்,  தேசிய அரசுகள் மூலம் வலுக்கட்டாயங்களை உருவாக்குகின்றன.

ஏகாதிபத்தியம் தனது மேலாண்மையை உலகளாவிய அளவில் நிறுவும் பொருட்டு ராணுவ நடவடிக்கைகளில் இறங்குகின்றன. எதிர்க்கிற / முரண்படுகிற அரசுகளைச் சுற்றி வளைத்து சின்னா பின்னப்படுத்துகின்றன. எனவே உலக அமைதிக்கான இயக்கமும், ஏகாதிபத்திய எதிர்ப்பும் வலுப்பட வேண்டிய ஓர் உலகச் சூழல் உள்ள பின்னணியில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அறைகூவலைப் பார்க்க வேண்டியுள்ளது.

1

முதலாளித்துவ சமூக அமைப்புதான் உலக சமூக வளர்ச்சிப் போக்கின் இறுதிக்கட்டம் எனவும், வரலாற்றின் முடிவு இதுவே எனவும் ஏகாதிபத்திய நாடுகள் கொக்கரிக்கின்றன. முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம் புரட்சிகரமானதாகவும், முந்தைய சமூக அமைப்பின் கொடூரங்களைக் கொன்று புதைத்து நவீன ஜனநாயக அமைப்பினைக் கொண்டு வருவதில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்ததாகவும், அதன் வரவு அமைந்தது. இருந்த போதிலும் வரலாற்று வளர்ச்சிப் போக்கின் ஒரு படி நிலையாகவே உலக அளவில் முதலாளித்துவ சமூக அமைப்பு விளங்குகிறது என்ற உண்மையை முதலாளித்துவம் மறுதலிக்க முயற்சி செய்கிறது. நவீன நாகரீக மனிதன் தோன்றிப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. புராதனப் பொதுவுடமை அமைப்புகளும், பல வடிவ முடியாட்சி / அடிமை சமூக அமைப்பு முறைகளும் – அப்பட்டமான நிலவுடமை சமூக அமைப்பின் கொடிய அடக்குமுறை வடிவங்களும் கடந்த 17ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சியது. மனிதனை, ‘சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம்” போன்ற முழக்கங்களுடன் – உழைப்புக் கருவிகளிலிருந்தும், உடைமைகளிலிருந்தும் கூட – விடுவித்துக் கொண்டு வந்த வரலாறு முதலாளித்துவத்துக்குச் சொந்தமானதே. பின்னர் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்த நவீன கண்டுபிடிப்புகள், கடல் கடந்த பயணங்கள், நாடுகளின் செல்வங்களைக் கொள்ளை கொண்டு போதல், காலனி ஆதிக்கம், போர்கள், உழைப்புச் சுரண்டல் என – முதலாளித்துவம் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்ததும் அந்த வரலாற்றின் அடுத்த கட்டமாகும்.

காரல் மார்க்சின் “மூலதனம்” நூல் வெளியிடப்பட்டதின் 150ஆம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மூலதனத்தின் அதீத வளர்ச்சியும், உழைப்புச் சுரண்டலும் தேச எல்லைகளைத் தாண்டி விரிவடைந்து கொண்டிருப்பதை உணர்ந்து, அதை எதிர்த்து சமூக மாற்றத்தைக் கொண்டு வர “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற முழக்கத்தை, மார்க்சும் ஏங்கெல்சும் முன்மொழிந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே உலக முதலாளித்துவம் அதன் வளர்ச்சிப் போக்கின் புதிய கட்டத்தை அடைந்திருப்பதை லெனின் கண்டார். அந்த நூற்றாண்டின் துவக்கத்தில், முதலாளித்துவத்தின் பேரரசுத் தன்மையை  – ஏகாதிபத்திய – பரிமாணத்தைப் பற்றி சில பொருளாதார வல்லுநர்கள் எழுதலாயினர்.

லெனின் நாடு கடத்தப்பட்டு ஜூரிச் நகரில் தலைமறைவில் இருந்த காலத்தில் ஏகாதிபத்தியத்தைப் பற்றிய ஒரு பிரசுரத்தை ஆய்ந்து எழுதத் துவங்கினர். அது 1917 ல் ருஷ்யப் புரட்சிக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதுதான் “ஏகாதிபத்தியம் – உலக முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்ற பிரசுர நூலாகும்.

இந்த நூலில் ஏகாதிபத்தியம் என்றால் என்ன? அது எவ்வாறு உருவானது? அதன் தன்மைகள் என்ன? அது எவ்வாறு சோசலிச சமூக மாற்றத்தின் வாயிற்படியில் நிற்கக் கூடிய, முதலாளித்துவத்தின் கடைசிக் கட்டம் என்பதை லெனின் விளக்குகிறார்.

ஏகபோகங்களின் தங்கு தடையற்ற வளர்ச்சி என்பது ‘கட்டுப்பாடற்ற போட்டியின் வளர்ச்சி’ – உச்சக்கட்டத்திலிருந்த 1860-80 காலங்களில் நடைபெற்றது. 1873ல் தொடங்கிய பொருளாதார நெருக்கடியின் அனுபவத்தில் முதலாளித்துவம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள பல கூட்டமைப்புகளை, தொகுப்புகளை கார்ட்டல் / டிரஸ்ட் / கார்ப்பரேசன் ஆகிய வடிவங்களில் துவக்கி கொழுக்கத் துவங்கினர். பின்னர் 19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலும், 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும், செல்வச் செழிப்பும் செல்வாக்குப் பகுதிகளை ஏகபோக முதலாளித்துவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1898இல் நடைபெற்ற ஸ்பானிஷ் – அமெரிக்க யுத்தம், ஆங்கிலோ – போயர் யுத்தம் (1899-1902) ஆகிய காலக் கட்டங்கள் முழுமையும் அரசியல் இலக்கியத்திலும், எழுத்திலும் ‘ஏகாதிபத்தியம்’ என்ற பதம் பரவலாகக் கையாளப்பட்டது. 1902 ஜெ.ஏ. ஹாப்ஸன் ஏகாதிபத்தியம் என்ற நூலை வெளியிட்டிருந்தார். சமூக சீர்திருத்தம் மற்றும் அமைதிவாதத்தை முன்மொழிந்த காரல் கௌட்ஸ்கி போன்றோர் ஏகாதிபத்தியம் பற்றி வெளியிட்ட கருத்துகள் – உலக முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தைப் பற்றிய பல தவறான கணிப்புகளை தளத்துக்குக் கொண்டு வந்த சூழலில், லெனின் நிலைமையைத் தெளிவு செய்து, தனது பங்களிப்பை உறுதியுடன் நிலைநாட்டி 1916 கோடை காலத்தில், இந்த நூலை வெளியிட்டார்.

அதில் உலக முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய கட்டத்தை லெனின் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

“சமூக பொருளாதார வாழ்விலும், உற்பத்தித் துறையிலும் உலகளாவிய அளவில் மூலதனக்குவிதலும் / உற்பத்திக் குவிதலும் ஏற்பட்டு ஏகபோகங்களாக முதலாளித்துவம் நிலைமாறுகின்றது.

தொழில் மற்றும் வர்த்தக மூலதனங்கள் வங்கி மூலதனத்துடன் இணைந்து ஏகபோக நிதி மூலதனங்களாக உருப்பெற்றுள்ளன.

பொருட்கள் ஏற்றுமதி – இறக்குமதி என்ற இடத்தில், நாடுகளுக்கிடையே மூலதனம் – “ஏற்றுமதி – இறக்குமதி” – என மூலதனப் பாய்ச்சல் என்பது ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மூலதனங்கள் தங்களுக்கிடையே ஏகபோக முதலாளித்துவ கூட்டமைப்புகளையும் / நிறுவனங்களையும் உருவாக்கி உலக உற்பத்தி / விநியோகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

உலக முதலாளித்துவம் இன்னொரு படி மேலே போய் தேச எல்லைகளை, தங்கள் செல்வாக்குப் பிரதேசங்களாக தங்களுக்குள் பிரித்துக் கொள்ளுகிறார்கள்”.

மேற்கண்ட படப்பிடிப்பு மூலம் பொதுவான முறையில் இன்றளவும் ஏகாதிபத்தியத்தையும், நிதி மூலதனத்தையும் அதன் அடிப்படைகளையும் புரிந்து கொள்வதற்கு மிகப்பெரிய பங்களிப்பை லெனின் செய்தார்.

2

“1914-18 ஆம் வருடங்களில் நடைபெற்ற முதல் உலகமகா யுத்தமானது ஓர் ஏகாதிபத்திய, அதாவது நாடு பிடிக்கிற, சூறையாடுகிற, கொள்ளையடிக்கிற யுத்தமாக, உலகைத் துண்டு போடுவதற்கும், காலனிகளை, நிதி மூலதனத்தின் ‘செல்வாக்கு மண்டலங்கள்’ ஆகப் பங்கிடுவதற்கும், மீண்டும் மறு பங்கீடு செய்வதற்கும் ஆகப் புரியப்பட்ட யுத்தம்” என்பதை ‘ஏகாதிபத்தியம் – உலக முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்’ என்ற அவரது படைப்பில் லெனின் விளக்குகின்றார். மேலும், …. “பொருளாதார அடிப்படையில், உற்பத்திச் சாதனங்களில் தனிச் சொத்துடைமை நீடிக்கும் வரை ஏகாதிபத்திய யுத்தங்கள் கண்டிப்பாகத் தவிர்க்க முடியாதவை” – என அதே நூலில் அவர் விவரிக்கிறார்.

எனவே, “முதலாளித்துவமும் நெருக்கடியும்”, “முதலாளித்துவமும் – போர்களும்” ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை; பிரிக்க முடியாதவை என்பதை உலக அரசியல் வரலாறு நமக்கு விளக்குகிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடி, பின்னர் 1924-39 களில் தோன்றிய பொருளாதாரப் பெரு நெருக்கடி – ஆகியவை எல்லாம் உலக யுத்தத்தில் தான் சென்று முடிந்தன.

அன்று, பிரிட்டிஷ் பிரதமர் சேம்பர்லின்னும், ஹிட்லரும் செய்து கொண்ட எழுதப்படாத உடன்படிக்கை மூலம், இரண்டாவது உலக மகாயுத்தத்தின் மூலம் (1942-45) நாஜி ஜெர்மனி கிழக்கு நோக்கி எல்லைகளை விரிக்கத் துவங்கியது. மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் மறைமுகமாக ஒத்துழைப்புக்கொடுத்த நாஜி யுத்தத்தின் உண்மையான கூர்முனை சோவியத் யூனியனை அழிக்க வேண்டும் என்பதே ஆகும்.

பொருளாதாரப் பெருநெருக்கடியில் உலக முதலாளித்துவம் மூச்சு திணறிக் கொண்டிருந்த போது, கடுமையான வறுமையிலும், அதிருப்தியிலும் தங்களது நாட்டுப் பிரஜைகள், ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய நேரத்தில், நாஜி போர் எந்திரத்தை தூண்டி விட்டு உலகப்போரை உருவாக்கியது அன்றைய ஏகாதிபத்தியம். ஹிட்லரை வீழ்த்துவதற்கு ஒரு கோடியே நாற்பது லட்சம் செஞ்சேனை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது, தலா 4 லட்சம் போர் வீரர்களை மட்டுமே அமெரிக்காவும், பிரிட்டனும் போரில் இழந்தது என்பது ஏகாதிபத்தியத்தின் நயவஞ்சக நழுவல் வேலையை உலகுக்கு வெளிப்படுத்தியது.

1929-40 காலத்தில் அமெரிக்க மூலதனம் என்பது, முழு ஐரோப்பிய கண்டத்திற்குள் முதலீடு செய்ததை விட மிக மிகுதியாக நாஜி ஜெர்மனிக்குள் மட்டும் பாய்ந்தது என்பது தற்செயலானதல்ல. வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் வழிகாட்டுதல்களை மீறி அமெரிக்க / பிரிட்டிஷ் மூலதனம் ஜெர்மானிய மறுநிர்மாணத்தை / ஏகாதிபத்திய மூலதனத்தின் ஒத்துழைப்பின் மூலம் அதேகாலத்தில் செய்தார்கள் என்பது சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆக இரண்டாம் உலக மகா யுத்தத்தின் மூலம் ஏகாதிபத்தியம் சோவியத் ரஷ்யாவை அழித்து ஒழிக்க நினைத்தது. அது நடைபெறவில்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்தியம் தன்னை மீட்டுக் கொள்ள நினைத்த நோக்கத்தை ஓரளவுக்கு அது நிறைவேற்றிக் கொண்டது.

எனவே, “ஏகாதிபத்தியம் – நெருக்கடி – போர்கள்” என்பது பிரிக்க முடியாதவை என்பது மறு நிரூபணம் ஆனது.

3

இன்றளவும், 2006-08 காலத்தில் துவங்கிய பொருளாதாரப் பெரு நெருக்கடி, பத்தாண்டுகளுக்கு மேலாகத் தீர்கிறபாடாக இல்லை. பொருளுற்பத்தி – வர்த்தகம் முடங்கிப் போய் உள்ளது. வேலைவாய்ப்பு குறுக்கப்படுகிறது. மார்க்சின் சொற்களில் சொல்வதானால், “தயாராக உள்ள வேலை வாய்ப்பற்றோரின் படை” என்பது எல்லா தேசங்களிலும் குவிந்து கிடக்கின்றது. பொருளாதார நெருக்கடியின் சிக்கலில் மாட்டியவர்கள் குறுகிய காலத்தில் பலன் வேண்டும் என்று கருதுவதனால், பொய்க் முழக்கங்களில் மயங்கிப் போவதனால், அரசியலில் உலகளாவிய அளவில் ஒரு வலதுசாரி சார்புத் திருப்பம் என்பது ஏற்பட்டுள்ளது. கடினமான பொருளாதாரக் கொள்கைகள், சலுகைகள் வெட்டு, சிக்கன நடவடிக்கை, பொதுச் செலவினத்தில் வெட்டு, பொருளாதாரக் குறுக்கம் ஆகிய நடவடிக்கைகள் மக்கள் திரளை நாடுகள் தோறும் கொதிப்படையச் செய்துள்ளன.

இதைத் திசை திருப்புவதற்கு உலகெங்கும் பலவகையான “வெறுப்பு அரசியல்” பொதுத்தளத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்தவர்கள், சிறுபான்மையினர், இசுலாமியர்கள், நிறவெறிக்கு ஆளாக்கப்படுபவர்கள், அகதிகள், பெண்கள், குழந்தைகள் என பல பிரிவினர் மீது பெரும்பான்மையின் தாக்குதல், ஏகாதிபத்தியத்தின் திருகல் நடவடிக்கையாகச் செய்யப்படுகின்றன.

ஏகாதிபத்தியம் – பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கும், தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ளவும் மேற்கொள்கிற மிதமிஞ்சிய முயற்சி, இன்றைய காலகட்டத்தில் பிராந்திய யுத்தங்களாக / யுத்த முஸ்தீபுகளாக வெடிப்பதையும் பார்க்க முடிகிறது.

சிரியாவில் அல் ஆசாத்துக்கு எதிராக நடத்தப்படும் யுத்தம், இரானுக்கு எதிராக தொடுக்கப்படும் மறைமுக யுத்தம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை தரைமட்டமாக்கியது, பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் மூலம் கொடுக்கப்படும் நெருக்குதல்கள், ஏமன் மீது சவூதிய அரேபியா தொடுக்கும் யுத்தம், லெபனார், கத்தார், எகிப்து, லிபியா, சூடான் உட்பட நாடுகளுக்குள் நடத்தும் உள்நாட்டுப் போர், ஏகாதிபத்திய இராணுவ ஆக்கிரமிப்புகள் அனைத்துக்கும் பின்னால் “வளர்ந்த முதலாளித்துவத்தின் – ஏகபோகத்தின் – பேரரசின்” ஆதரவுகள் ஆன ஏகாதிபத்தியத்தின் போர் வலைப்பின்னல் உள்ளதை நாம் அறிவோம். லத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக கியூபா, வெனிசுவேலா, பொலீவியா, ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா செய்து வரும் நச்சு பிரச்சாரம், பொருளாதாரத் தடைகள், சி.ஐ.ஏ. ஊடுருவல், நேரடி ராணுவத் தலையீடு ஆகியவற்றையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மெக்சிகோவையும், பனாமா கால்வாயையும், மத்திய தரைக் கடலையும், சூயஸ் கால்வாயையும், இந்துமகா சமுத்திரம் தெற்காசியப் பகுதியில் உள்ள தெற்கு சீனக்கடல் மற்றும் மலாக்கா  ஜலசந்தி ஆகிய கடல்வழிப் பிரதேசங்களை ஏகாதிபத்தியம் தனது முழுக் கட்டுப்பாடுகள் வைக்க முயற்சி செய்வதன் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை உற்றுநோக்க வேண்டியுள்ளது. ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் வியட்னாம், கம்போடியா, கொரியா, சீனா ஆகிய நாடுகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ஜப்பான் / தென்கொரியாவுடன் அமெரிக்கா செய்யக் கூடிய இராணுவக் கூட்டு நடவடிக்கைகள் இவையனைத்தின் பின்னாலும் வலுவான ஏகாதிபத்திய “வளர்ந்த உலக முதலாளித்துவத்தின்” – நலன்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.

4

கடந்த 25.09.2017 அன்று கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் அமெரிக்க குடியரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் ஆற்றிய உரையின் சில பகுதிகளை இதனுடன் இணைத்துப் பரிசீலனை செய்யலாம்.

‘தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வடகொரியா என்ற நாட்டினை அழித்து ஒழிப்பதைத் தவிர வேறுவழியில்லை’.

‘கியூபா அரசாங்கம் அடிப்படைச் சீர்திருத்தங்களைச் செய்யாவிட்டால், எனது நிர்வாகம் கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கப் போவது இல்லை”

“வெனிசுவேலா மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அது தொடரும். அவர்களின் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் மிகவும் உள்ள சுத்தியுடன் சோசலிசத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்..”

“சோவியத் யூனியனிலிருந்து கியூபா / வெனிசுவேலா வரை எங்கே உண்மையான சோசலிசமும், கம்யூனிசமும் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் அதிருப்தியும், தோல்வியும், அழிவுமே ஏற்பட்டுள்ளன”.

இவையெல்லாம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கடந்த வாரம் அமெரிக்க குடியரசுத்தலைவர் உதிர்த்த பொன்மொழிகள். ஆக, சிக்கல் என்ன என்பது தற்போது தெளிவாகிறது. ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையேயான முரண்பாடு முற்றுவதையே இது வெளிக்காட்டுகிறது. வரலாற்றின் இறுதிக்கட்டம் முதலாளித்துவ சமூக அமைப்புதான் என்று உலக முதலாளித்துவம் கூறும் போது – அது இல்லை சோசலிசம் தான் மாற்று – என உலகத் தொழிலாளி வர்க்கத்தின் குரல் ஒலிப்பதை ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதையே டிரம்ப்-பின் பேச்சு தெரிவிக்கிறது.

பேசித் தீர்க்க முடியாத விஷயத்தை இராணுவம் மூலமாகத் தீர்க்கும் நோக்கத்தையே அமெரிக்க குடியரசுத்தலைவரின் பேச்சு வெளிப்படுத்துகிறது.

நிலைமையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க  ஏகாதிபத்தியம் பல வழிகளில் செயல்படுகிறது. ஒன்று, பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்துவது, இரண்டாவது இராணுவ ரீதியாக போர் தொடுத்து நாடுகளை கைப்பற்றுவது, அடுத்து தனக்கு ஏதுவான சர்வாதிகாரிகளை அந்தந்த நாடுகளில் ஆதரித்து அந்த நாடுகளை தனது ஆதிக்கத்தில் நிறுத்திக் கொள்வது – இதைச் செய்ய வசதியாக உலகம் முழுவதும் தனது இராணுவ தளங்களை நிறுவி உலகப் போலீஸ்காரனாகத் திகழ்வது. இது தான் இன்று ஏகாதிபத்தியங்கள் செய்து வருகிற சர்வதேச அரசியல் பணி ஆகும்.

பிலிப்பைன்ஸ் நாட்டின ரொட்ரிகோ டியூடெர்ட்டே, எகிப்தின் அப்துல் அல்-சிசி, துருக்கியின் தாயிப் எர்டகான், தாய்லாந்தின் ப்ரயூத் சனோச்சா, பஹ்ரைன் அமீர் இசா – அல் – கலீபா, டிஜிபோட்டியின் இஸ்மாயில் ஓமர் ஆகியோர் அந்தந்த நாடுகளில் அமெரிக்க ஒத்துழைப்புடன சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்கள்.

ஏறத்தாழ 80 நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்கள் உள்ளன. அவற்றின் பல நாடுகளில் ஜனநாயக ரீதியாக ஆட்சி நடைபெற்று விடக்கூடாது; தனக்கு ஒத்துழைப்பான ஆட்களே தொடர்ந்து ஆட்சியில் நீட்டிக்க வேண்டுமென அமெரிக்கா நினைக்கிறது.

அவ்வாறான நாடுகளின் பட்டியல் – காமரூபம், சாட், எத்தியோப்பியா, ஜோர்டான், குவைத், நைஜர், ஓமன், சவூதி அரேபியா, (ஐக்கிய)அமீரகம்  ஆகியவை ஆகும். இந்த நாடுகளுக்குள் ஜனநாயகம் வந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. இவ்வாறு தனது தளங்கள் உள்ள 80 நாடுகளில் 45 நாடுகளை அமெரிக்க ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

இன்று இந்த 80 நாடுகளல்லாது, சர்வதேசக் கடல் எல்லைகளுக்குள் உள்ள தீவுகள் உட்பட ஏறத்தாழ 790க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்க இராணுவத் தளங்கள் உலகெங்கும் உள்ளன. பென்டகன் புள்ளி விபரப்படி ஜெர்மனியில் 181 தளங்களும், ஜப்பானில் 122 தளங்களும், தென்கொரியாவில் 83 தளங்களும் உள்ளன. ஆர்க்டிக் முதல் அன்டார்ட்டிக் வரை கொலம்பியா முதல் கத்தார் வரை அனைத்துக் கண்டங்களிலும், பெருங் கடல்களிலும் நினைத்தறியா நேரத்தில் யார் மீதும் போர் தொடுக்கும் ஆற்றல் பெற்ற இராணுவ வல்லரசாக அமெரிக்கா விளங்குகிறது. இவற்றை நிர்மாணிக்க அமெரிக்க வரிப்பணத்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு 150 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்படுகிறது. இதுபோக வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த நாடுகள்  என்ற அமைப்பும் அதே போல SEATO, CENTO போன்ற ராணுவக் கூட்டுகளையும் அமெரிக்கா ஏற்படுத்தி உலக அமைதி(?)க்குப் பங்களிப்பை செய்து வருகிறது.

இந்த ஏகாதிபத்திய வேலைப் பிரிவினையில் இன்னொரு வடிவமாகவே ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் வீட்டோ (எதையும் ரத்து செய்யும்) அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். பொருளாதாரத்தடை உட்பட நாடுகள் மீது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றுகிற வலிமை அவர்களுக்கு உள்ளது. 193 நாடுகள் கொண்ட சபையில் 80க்கும் மேற்பட்ட சிறிய வலுவற்ற அமெரிக்க ஒத்துழைப்பு நாடுகள் உள்ளதை நாம் பார்த்தோம்.

இது தவிர சர்வதேச நிதி ஆணையம் (IMF), உலக வங்கி , உலக வர்த்தக ஸ்தாபனம்  உள்ளிட்ட அமைப்புகள் ஏகாதிபத்திய நாடுகளின் பிடியை உலக நாடுகளின் நிதி மற்றும் வர்த்தகம் சார்ந்த தேவைகளில் இறுக்குகிறார்கள். உலக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் கூட்டங்களில் எடுக்கிற முடிவுகளை வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள்  வளர்கிற நாடுகள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கின்றன; தாங்கள் அந்த முடிவுகளை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் இல்லை எனப் பிரகடனம் செய்கிறார்கள். சர்வதேச அணுசக்தி முகைமை மற்றும்  அணு மூலப்பொருள் வர்த்தகம் செய்யும் குழு மூலமாக ஏகாதிபத்திய நாடுகள் மட்டும் அணுசக்தியை ஆயுதப்படுத்திக் கொண்டு, மற்றவர்கள் மீது கடுமையான கட்டுப்பாட்டினை விதிக்கிறார்கள். ழு-7  குழு என அழைக்கப்படும் வளர்ந்த நாடுகள் கூட்டமைப்பு, பின்னர் ழு-20  என அழைக்கப்படும் 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஆகியவை உலக அளவிலான உற்பத்தி, வினியோகம், நிதிச்சேவை, வட்டி விழுக்காடு உள்ள அனைத்து சமூக பொருளாதார விஷயங்கள் குறித்தும் உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தன்னிச்சையாகத் தீர்மானிக்கிறார்கள்.

எனவே, இந்த சர்வதேச அமைப்புகள் ஐநா. சபை துவங்கி ழு-20 வரை அனைத்துமே ஓரவஞ்சனையான, ஜனநாயகத் தன்மையற்ற, ஏகாதிபத்தியத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற, அவர்களது வரம்புமீறல்களைப் பாதுகாக்கிற/அங்கீகரிக்கிற சமனற்ற அமைப்புகளாக விளங்குகின்றன. இது ஏகாதிபத்தியத்தின் பிடி சர்வாம்சமாக உலக நடப்புகளில் ஆக்கிரமிப்பு செய்வதை உறுதிப்படுத்துகின்றன.

5

இந்தப் பின்னணியில்தான் உலகளாவிய அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தேவையையும், முனைப்பையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த மட்டிலும், இந்திய ஆளும் வர்க்கத்தின் இரட்டைத்தன்மையைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக விளக்குகிறது. இந்திய முதலாளிகள் சுதந்திரத்துக்குப் பிந்தைய காலம் துவங்கி, இயல்பாகவே ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் சோசலிச நாடுகளுக்கிடையே பேரம் பேசி, தனது அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, தன்னுடைய வளர்ச்சியை உத்தரவாதப்படுத்திக் கொண்டதை அனைவரும் அறிவர். இன்னும் கூடுதலாக இன்று, உலகமயமாக்கல் சூழலில் இந்தியப் பெருமுதலாளிகள் உலக முதலாளித்துவத்தின், சர்வதேச நிதிமூலதனத்தின் பகுதியாகவே மாறிப் போய் விட்டிருக்கிறார்கள். இந்தப் பெருமுதலாளிகளின் மூலதனம் உலக நாடுகள் பலவற்றிலும் போய் இலாபமீட்டுகின்றன. இத்தகைய சூழலில் உலக முதலாளித்துவத்தோடு இந்தியப் பொருளாதாரத்தை இணைக்கிற வேலையையும் அவர்கள் செய்கிறார்கள். அரசியல் பொருளாதாரத்தில் அந்நிய மூலதன ஆதரவு நிலைபாடு பல்கிப் பெருகி வருகிறது. நாட்டின் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படைகள் மெதுவாக அசைக்கப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் மீது, அனைத்து நாடுகளைப் போலவே, ஏகாதிபத்தியத்தின் பிடி இறுகுகிறது.

‘எந்த ஒரு தேசத்தின்/அரசின் வெளி உறவுக்கொள்கை என்பதும், இறுதியாகப் பார்க்குமிடத்து அது அந்த அரசுக்குத் தலைமை தாங்குகிற வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற  உள்நாட்டுக் கொள்கைகளின் வெளிப்பாடேயன்றி வேறல்ல’- என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 4.1-இல் கூறப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச மூலதனத்தின் பகுதியாய் மாறியுள்ள, உலகச் சந்தையுடன் இந்தியப் பொருளாதாரத்தை இணைக்க விரும்புகிற, ஏகாதிபத்தியத்தின் கூட்டுப்பங்காளிகளாக மாறிப் போய் உள்ள இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்களை ஒத்தே இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைகிறது. இதன் விளைவுகள் பல வகைப்பட்டவை.

¨           சமீப காலமாக ஆட்சிக்கட்டிலில் வீற்றிருக்கிற பாஜக ஆட்சிக்கு ஏகாதிபத்தியம் – அமெரிக்காவின் ‘முக்கிய இராணுவக்கூட்டாளி’ என்ற அந்தஸ்தை வழங்கி உள்ளது. அமெரிக்க செனட் இதுகுறித்த அறிவிப்பை ஒப்புதலுக்காக விவாதிக்க உள்ள சூழலில், இந்தியப் பாராளுமன்றத்தில் இதுபற்றிய செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

¨           இதன் பகுதியாக வரக்கூடிய துணை ஒப்பந்தங்கள் ஏராளம். தளவாடப் பரிவர்த்தனை ஒப்பந்தம், எரிபொருள் நிரப்புகிற ஏற்பாடு, தகவல் தொடர்புக்கான ஒப்பந்தம், இராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் இறங்கி உலாவ அனுமதி, இந்திய இராணுவத்தளவாடங்களை பயன்படுத்த, கூட்டுப்பயிற்சி செய்ய அனுமதி போன்ற ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

¨           கடந்த 2005ல் புஷ் வருகையை ஒட்டி போடப்பட்ட இராணுவக் கட்டமைப்பு ஒப்பந்தம் 2015ல் இருந்து மீண்டும் பத்தாண்டுகளுக்கு நீட்டித்திட பாஜக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

¨           சர்வதேசப் படைகளில் பங்கேற்பு, ஏவுகணைத்தொழில் நுட்பக்கூட்டமைப்பு, இராணுவத்தளவாட வியாபாரம், கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பு ஆகியவற்றுக்கான  ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

¨           இராணுவத்தளவாட தொழில்நுட்பம்/வர்த்தகம்  ஆகியவற்றுக்கான முன்முயற்சி ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் நமது நாட்டின் இராணுவ பலம்/தளவாடங்கள் குறித்த அனைத்து உள்விபரங்களையும் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் – ஒற்றர்களை வைத்து வேவு பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய இராணுவ இரகசியங்களை எல்லாம் தங்கத்தட்டில் வைத்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதாகும்.

¨           வருகிற 2020 ஆம் ஆண்டுகக்குள் சீனாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இந்தியா தனது  ஒத்துழைப்பை அமெரிக்காவுக்கு வழங்குவது.

¨           ஆசிய-பசிபிக் கடல் பகுதியில் வர்த்தக/இராணுவக் கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிற அமெரிக்க வேலைக்கு ஒத்துழைப்பு வழங்குவது.

¨           இஸ்ரேல் நாட்டுடன் ஒத்துழைப்பைப் பெருக்க உறுதி பூணுவது. இஸ்ரேல் நாடு மிக அதிகமான இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரத்தில் இளைஞர்கள் மீது சுடப்பட்ட “பெல்லட்” குண்டுகளை சப்ளை செய்வது இஸ்ரேல்தான்.

¨           வடகொரியாவுடன் இருந்து வரும் பாரம்பரிய உறவை அமெரிக்க நலன்களைக் கருதி படிப்படியாகக் குறைத்துக் கொள்வது.

¨           இது தவிர வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல சமரசங்களுக்கு இந்திய – அமெரிக்க உடன்பாடு வழிகோலி உள்ளது.

¨           காலாவதியாகிப் போன தொழில்நுட்பத்தைக் கொண்ட வெஸ்டிங்க் ஹவுஸ் அணுவுலையை பல கோடி ரூபாய் செலவழித்து வாங்கி கொவ்வாடாவில் அந்த அணுவுலையை நிறுவுகிறார்கள். அந்த திவாலாகிப் போன வணிக நிறுவனத்தைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை.

¨           டிஜிட்டல் பரிவர்த்தனை, அனைத்திலும் ஆதார் விரிவாக்கம், வரிவிதிப்புக் கொள்கைகளில் மாற்றம், பொதுத்துறை தனியார் மயமாக்கல்- உட்பட எல்லா நடவடிக்கைகளும் சர்வதேச நிதி மூலதனத்தின் தேவையை ஒட்டி, அமெரிக்கா உட்பட நாடுகளின் வலுக்கட்டாயத்தின் பேரிலேயே இந்தியாவில் நிறைவேற்றப்படுகின்றன.

இதுபோன்ற ஏகாதிபத்திய நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இந்திய அரசு, அவற்றை வேகமாக நடைமுறைப்படுத்திவிட்டு, மக்கள் கவனத்தை திசை திருப்ப வகுப்புவாத- பிளவுவாத வெறுப்பு அரசியலை நடைமுறைப்படுத்தி வருகிறது.

கிராமப்புற விவசாயம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இடம் பெயர்தலும், விவசாயிகள் குடும்பம் குடும்பமாகத் தற்கொலை செய்வதும் அன்றாடச் செய்தியாக மாறியுள்ளது. தொழில்வளர்ச்சி முடங்கிப் போயுள்ளது.  மூலதனம் உற்பத்திக்கு வரவில்லை. வேலைவாய்ப்பு சுருங்குவதன்  காரணமாகச் சமூகக் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வறுமையும், வேலையின்மையும்  கோரத்தாண்டவம் ஆடும்போது சலுகைகள் வெட்டு, பொதுச்செலவினச் சுருக்கம் என்பது அரசாங்கத்தின் முதன்மை முழக்கமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி வீழ்ந்து வருவது குறித்த விவாதம் அரசாங்கம்/ஆளும் கட்சி வட்டாரத்துக்குள்ளேயே அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

இருந்த போதிலும், நிதி மூலதன ஆதரவு அறிவுஜீவிகள், அதிகாரிகள், மந்திரிப் பிரதானிகள், சீர்திருத்தங்கள் மெதுவாக நடைபெறுவதன் விளைவே இது; எனவே, தீவிரச்சீர்திருத்தங்களை – ‘பெரு முதலாளிகளுக்கு’ ஒத்துழைப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலுப்படுத்துகிறார்கள். ஊடகங்களின் கள்ள மௌனம் கண்டனத்துக்குரியது. அரசின் அனைத்து செயல்களையும் நியாயப்படுத்திவிட்டு, மக்கள் விரோத, சமூக விரோத நடவடிக்கைகளைக் கண்டு கொள்வதே இல்லை. இவை அனைத்துக்கும் பின்னால், வளர்ந்த முதலாளித்துவத்தின் – ஏகாதிபத்தியத்தின் நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன.

இந்த மையமான சிக்கலை சாதாரண மக்கள் புரிந்து கொள்வதில் சிரமமிருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அனைத்து ஜனநாயகப்பகுதிகளை உழைக்கும் மக்களின் தலைமையில் திரட்ட வேண்டிய அவசரமும், அவசியமும் இடதுசாரி இயக்கங்களுக்கு முன் உள்ளன. இது ஐரோப்பாவிலும், வளைகுடா நாடுகளிலும், லத்தீன் அமெரிக்காவிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வரும் இயக்கங்களை உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக வலுப்படுத்த வேண்டும். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என மார்க்சும், ஏங்கெல்சும் 150 ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய அந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்த, இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள தேவை கிளர்ந்தெழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை ஒருங்கிணைப்பதில்தான் உள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பை தேசங்கள் ரீதியாக வலுப்படுத்துவதும், உலகளாவிய அளவில் இணைப்பதும் ஆகிய வரலாற்றுக் கடமையை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவல் ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: