இந்தியக்கல்வி யாருக்கானது? ஒரு மார்க்சியப் பார்வை


– இல. சண்முகசுந்தரம்

தமிழகத்தின் சமீபகால கல்விப் போராட்டங்களும், மத்திய அரசின் நீட் பிடிவாதமும் இந்தியக் கல்வி மீதான ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்பியுள்ளது.  தரமான கல்வி என்ற வாய்ப்பு யாருக்கானது, எந்த நோக்கத்திற்கானது என்பதே அந்தக் கேள்வியாகும்.

பள்ளிக்கல்வியில் எந்த மாற்றமும் முன்மொழியாமல், நாடெங்கும் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தைப் பற்றிச்  சிறிதும் அக்கறையும் கொள்ளாமல், வெறுமனே ஒரு நுழைவுத்தேர்வின் மூலம் இந்தியக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறோம் என்று சொல்கிறார்களே, அதுவெப்படி சாத்தியம்? உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளால் இந்தியக் கல்வியின் தரம் உயருமெனில், ஏன் இன்று வரை அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் தரம் உயரவில்லை? கல்விக்காக செலவழிக்கும் ஆற்றல்மிக்கவர்களான  தரமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கான தொழிற்கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அரசு செய்யப்போவதென்ன?

இங்கேதான் அடிப்படையான அந்தக் கேள்வி எழுகிறது. ஏனிந்த நிராகரிப்புகள்? ஏனித்தனை வடிகட்டித் தேர்வுமுறைகள்? இப்படி வடிகட்டித் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்குக் கொடுக்கப்படும் தரமான கல்வியும், உயர் வேலைவாய்ப்பும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டியை எடுத்துக்காட்டுகிறதே, ஏனிந்த போட்டியை உருவாக்குகிறார்கள்? சம்பாதிக்கவேண்டுமெனில் இதுதான் ஒரே வழி எனத் தனது பொருளாதாரத் தேவைக்காக பலரை முந்திச் செல்லும் மனநிலையை உருவாக்குகிறார்களே, இதுதான் கல்வியின் நோக்கமா? அப்படியெனில், கல்வி என்பது மனிதநேயத்தைப் போதிப்பது, தனிமனித ஒழுக்கநெறிகளைக் கற்றுத்தருவது, சமூக நோக்கில் ஒருவரைத் தயார் செய்வது, தேச நலனில் அக்கறை கொள்ளச் செய்வது என்று காலங்காலமாக வியாக்கியானம் தருகிறார்களே, அதற்கான கல்வி எங்கு, யாருக்கு தரப்படுகிறது?

கல்வியைப் பொறுத்தவரை அளவு மற்றும் தரம் குறித்த விவாதம் எப்போதும் புதியதல்ல. ஆளும் வர்க்கம் தனது நலனுக்கு எது பொருந்துகிறதோ அதை எப்போதும் எடுத்துக்கொள்கிறது என்பதே உண்மையாகும்.  இந்தியப் பல்கலைக்கழகங்களில் இந்தியத் தேசியத்திற்கான போராட்டம் எழுந்தபோது, 1902ல், தரத்தை மட்டுமே நாம் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும் அளவை அல்ல எனச் சொல்கிறார் கர்சன் பிரபு. இங்கு அவர் தரம் என்று குறிப்பிடுவது உயர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக கல்விநிலையத்தில் அனுமதித்தால் போராட்டம் அதிகரிக்காது என்ற பொருளில் இருந்தே ஆகும்.  அவர் அமைத்த குழுவும் பின்வருமாறு கூறியது.

 

உயர்கல்வியைப் பொறுத்த அனைத்து விசயங்களுக்கும் திறனைத்தான் முதலும், முக்கியமுமான விசயமாகக் கருதவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, ஒப்பீட்டளவில் ஒரு குறைந்தபட்ச எண்ணிக்கை கொண்ட இளைஞர்கள் மட்டுமே நல்ல தரமான தாராளமான கல்வியைப் பெறவேண்டும். மற்றபடி, பெருமளவிலான இளைஞர்கள் போதுமான வழிகாட்டுதல்கள் இல்லாத கீழ்த்தரமான பட்டங்களைப் பெறும் அளவில் தேர்ச்சி மட்டுமே பெறவேண்டும்.  ( ராலே குழு 1902, பக்கம் 14).

ஆக, இதுதான் உயர்கல்வியைப் பொறுத்தவரை இன்றுவரை நமது அரசுகளின் கொள்கையாகும். இலட்சக்கணக்கான மாணவர்கள் சாதாரணப் பட்டங்களை வாங்கிக்கொண்டு வேலையற்றவர்களாக மாறிக்கொண்டிருக்க, ‘தரமான சிலரையோ இலட்சங்களில் ஊதியம் பெறும் தகுதியுடையவராக அரசே உருவாக்குகிறது.

வர்க்க சமூகத்தில் கல்வி;

சமூகத்தின் பொருள்சார் சக்தியை எந்த வர்க்கம் ஆள்கிறதோ அந்த வர்க்கம்தான் அறிவுசார் சக்தியையும் ஆள்கிறது. பொருள் உற்பத்திக்கான ஆதாரங்களைத்  தனது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கம், அதன் விளைவாகவே அறிவுசார் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகிறது என ஜெர்மன் தத்துவ நூலில் மார்க்சும், எங்கெல்சும் வரையறுத்ததுதான் கல்வி குறித்த அடிப்படை மார்க்சியப் பார்வையாகும்.

ஆதிகாலம் தொட்டு கல்வியின் நோக்கத்தை மார்க்சின் பார்வையில் அணுகினால், காலங்காலமாகவே கல்வியின் உள்ளடக்கமும், நோக்கமும், வடிவமும் எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது எளிதில் புரியும். எந்த  வர்க்கம் நாட்டை ஆள்கிறதோ அந்த வர்க்கத்திற்குச் சேவை செய்யும் பணியாளர்களை, தொழிலாளர்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கட்டமைப்பே கல்விநிறுவனங்கள் என்பதும், அதற்கேற்ப ஆட்சியாளர்கள் உருவாக்கிய கொள்கைகளே கல்விக்கொள்கைகள் என்றும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக, கல்வியின் விழுமியங்கள் எனச்சொல்லப்படும் கூற்றுகளும், வர்க்க சார்புள்ளவையே ஆகும். ஆளும் வர்க்கம் தனக்கு ஆதரவான சிந்தனைகளை மட்டுமே ஒழுக்கம் என்ற பெயரில் கல்வியில் அனுமதித்துவந்துள்ளது என்பதையும் காலங்காலமாக நாம் காணமுடியும். ஒழுக்கம் என்பது பொதுவானது, நியாயத்தின் அடிப்படையிலானது என்ற எதிர்பார்ப்பே வர்க்கமாக இருக்கும் சமூகத்தில் பெரும் மோசடியாகும். இது குறித்து எங்கல்ஸ் கூறுவது கல்வியின் உள்ளீடு குறித்த மார்க்சியப் பார்வையின் மிக அடிப்படை அம்சமாகும்.

இதுவரை சமூகம் வர்க்கப்பகைமைகளோடுதான் முன் நகர்ந்து சென்றுள்ளது. எனவே, ஒழுக்கநெறி என்பது எப்போதும் வர்க்கச்சார்பு ஒழுக்கநெறியே ஆகும். ஒடுக்குதலையும், ஆளும் வர்க்கத்தின் நலன்களையும் நியாயப்படுத்துவதாகவே அந்த ஒழுக்கநெறிகள் கட்டமைக்கப்பட்டன என்று எங்கல்ஸ் கூறுவதுதான் கல்விநிலையங்கள் தோறும் போதிக்கப்பட்டுள்ள ஒழுக்கமாகும்.

சோசலிசக் கல்வி மற்றும் முதலாளித்துவக் கல்விமுறைக்கு இடையிலான அடிப்படை வர்க்க வேறுபாட்டை அறிய மருத்துவக்கல்வி சிறந்த உதாரணமாகும். சோசலிசத்தைப் பொறுத்தவரையில் மருத்துவம் என்பது ஒரு அடிப்படை உரிமை. ஆனால், முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை மருத்துவம் என்பது இலாபங்கொழிக்கும் ஒரு துறை. அவ்வளவுதான்.  இந்தியாவின் மருத்துவக்கொள்கை உணர்த்தும் சில உண்மைகளை இப்போது காணலாம்.

மருத்துவம்- சேவையா, தொழிலா?

அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. இந்திய மருத்துவர்கள் இல்லாத நாடே உலகில் கிடையாது எனவும் அத்தகவல் கூறுகிறது. இவர்களில் எவரும் சோசலிச கியுபா மருத்துவர்கள் போன்று சேவை செய்ய வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் கிடையாது. அனைவரும் சம்பாதிக்கச் சென்றவர்களே ஆவர். இவர்களில் கணிசமானோர் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற அரசு நிறுவனங்களில் பயின்றவர்கள்தான்.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் உயர் மருத்துவமனைகளில் தொழில் செய்வோர் மற்றும் தனிப்பட்ட கிளினிக் வைத்து தொழில் செய்வோர் என மொத்த மருத்துவர்களில் கணிசமானோர் அரசின் நிதியில் படித்தவர்கள்தான். தங்களது திறமையால் தாங்கள் சம்பாதிப்பதாக சொல்லிக்கொள்ளும் இவர்களுக்கான இப்படியான கட்டுப்பாடற்ற சுதந்திரத் தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுதான் முதலாளித்துவ சமூக அமைப்பு முறையின் அடிப்படையாகும்.

அரசின் நிதியில் படித்தவர்களைக்கொண்டு அரசின் சார்பான சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவது மட்டுமே அரசின் நோக்கமெனில், இன்று என்னவாகியிருக்கும்?? தனியார் கிளினிக், நடுத்தர மருத்துவமனைகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் வளர்ந்திருக்காது. மாறாக, அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பு பலமாகியிருக்கும். அதுதான் சோசலிச நாடுகளில் நிகழ்கிறது. சோசலிச நாடுகளின் செல்வாக்கினால் வெளியிடப்பட்ட அல்மா ஆட்டா பிரகடனமும், மருந்து சாராத, சிகிச்சை சாராத பொது சுகாதாரக் கட்டமைப்பைத்தான் எடுத்துரைக்கிறது. ஆனால், அப்படி நிகழ்ந்திருந்தால், மருந்து சார்ந்த,  மருத்துவமனை சார்ந்த தொழிலாக இன்றைய மருத்துவம் வளர்ந்திருக்காதே. இதை பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமா, ஏற்றுக்கொள்ளாதல்லவா. எனவே, மருத்துவத் துறையை ஒரு இலாபங்கொழிக்கும் தொழிலாக மாற்ற என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்துள்ளார்கள்.

ஏனெனில், இந்திய மருந்துத்துறையின் வர்த்தகம் 2015-16ல் 36.7 பில்லியன் டாலர் மதிப்புள்ளதென புள்ளிவிபரம் சொல்கிறது.  அதாவது இந்திய மதிப்பில், 2354305000000  ரூபாயாம். வருடத்துக்கு 17 சதம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறது 2017, மே17 தி இந்து தமிழ் நாளிதழ் கட்டுரை. ஆக, பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ள மருந்துக் கம்பெனிகளும், பணக்கார நாடுகளின் ஆதிக்கத்தில் உள்ள உலகவங்கியும் தனது ஏகபோக ஆதிக்கத்திற்கு ஏற்ப மருத்துவக் கொள்கைகளை வகுத்து, அதை அமல்படுத்தும் வகையில், திறமைக்கேற்ற சம்பாத்தியம் என்பதை கல்வியின் நோக்கமாக, வேலைவாய்ப்பின் நோக்கமாக முன்னிறுத்துகிறது.

அப்படியெனில், இந்திய நாட்டின் மருத்துவக் கல்வியையும், நாட்டின் மருத்துவக் கொள்கையையும் தீர்மானிக்கையில் மருத்துவத்தை ஒரு இலாபங்கொழிக்கும் தொழிலாகப் பார்க்கும்  முதலாளித்துவத்தின் நலன்தானே முன்னிறுத்தப்படும். ஆக, நடப்பது அதுதான். ஒவ்வோராண்டும் இலக்கு வைத்து வியாபாரம் செய்யத்துடிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் மருந்துவிற்பனைப் பிரதிநிதிகள் முதல் பரிசோதனை மையம்வரை அதற்கான கல்வியையும், கட்டமைப்பையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். தரமான மருத்துவக்கல்வி என்று அதற்குப் பெயரிட்டுக் கொள்கிறார்கள்.

பள்ளி இறுதித்தேர்வில் பொதுத்தேர்வையே சந்திக்காத கியூபா மாணவர்களால் தரமான மருத்துவர்களாக மாறமுடிகிறது. அதே போன்று, கியூபா நாடும் சுகாதாரக் கட்டமைப்பில் உலகின் சிறந்த நாடாக மாறமுடிகிறது. ஆனால், உலகெங்கும் தன் மருத்துவர்களை சம்பாதிப்பதற்காக அனுப்பும் இந்தியாவால் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு கொண்ட நாடாக மாறமுடியவில்லை. இதுதான் சோசலிச கியூபா மற்றும் முதலாளித்துவ இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான மருத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் பொதிந்திருக்கும் வர்க்க நோக்கமாகும்.

மருத்துவக்கல்வியை மட்டுமல்ல,  பொறியியல் கல்வி உள்பட, எத்துறையின் கல்வியை எடுத்துக்கொண்டாலும் அதை இக்கண்ணோட்டத்தோடு அணுகிப்பார்த்தால், எந்த வர்க்கத்தின் நலனுக்காக பொறியாளர்களும், பட்டதாரிகளும் உருவாக்கப்படுகிறார்கள் என்று புரியும்.

ஆக, படிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் போட்டியை உருவாக்கி, பிறரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வரவேண்டும் என்ற மனநிலையை உருவாக்கும் கல்விமுறையையும், வேலை வாய்ப்புச் சூழலையும் வைத்துக்கொண்டு மனித மாண்புகளை உயர்த்துவதே கல்வியின் நோக்கம் எனக் கூறுகிறார்களே, அது பொய்யுரை அல்லவா. வாய்ப்பு அனைவருக்கும் தரப்படுகிறது. ஆனால், அவரவர் தகுதிக்கேற்பவே கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்ற புரிதலை ஏற்படுத்தி பாகுபாட்டை நிருபணம் செய்யும் இந்த அமைப்புமுறையே முதலாளித்துவ அமைப்பை நிலைநிறுத்தும் கல்விமுறையாகும்.

மாறாக, அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை எனப் பாகுபாடற்ற கல்வியமைப்பு மற்றும் வேலைவாய்ப்புச் சூழலை முன்மொழிவதே சோசலிசத்தின் அடிப்படையாகும். ஆக, முதலாளித்துவம் முன்மொழியும் கல்வி முறை மற்றும் சோசலிசம் முன்மொழியும் கல்வி முறை என இரண்டையும் வர்க்க அடிப்படையில் புரிந்துகொண்டால்தான் கல்வித்துறையில் ஏற்படும் பிரச்னைகளின் போதும், போராட்டங்களின்போதும் சரியான பாதையை மாணவர் சமூகத்திற்குக் காட்டமுடியும். குறிப்பாக, கல்வி குறித்த அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவின் பின்னும், எந்த வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது என்பதையும் அதை மறைக்கும் வண்ணம் எப்படி வண்ணக் கலவையில் கவர்ச்சிகரமான மேல்பூச்சை செய்திருக்கிறார்கள் என்பதையும் மாணவர் சமூகத்தின் முன்  வெளிச்சம்போட்டு காட்டவேண்டுமெனில், கல்வியின் வர்க்கச் சார்பு குறித்த பார்வை மிக அவசியமாகும்.

வங்கிக்கடன் திட்டம் கொண்டுவருகையில் அது கல்விக்கான கடனுதவித் திட்டம் என்றொரு மாயையை உருவாக்கினார்கள். ஆனால், உண்மை என்ன? கல்விக்கட்டணத்தை வங்கி ஏற்றுக்கொள்ளும் என்ற நினைப்பில், உயர்கல்வியின் கட்டண உயர்வில் ஏற்பட்ட உயர்வையும் மக்கள் உணரவில்லை, தொடர் விளைவையும் உணரவில்லை. மொத்தத்தில், வங்கிக்கடன் மூலம் உயர்கல்வியை முழுவதும் தனிநபர் பொறுப்பாக்கி அரசு அதிலிருந்து முற்றிலும் விலகி விட்டது. 2005ல் 63.2 சதம் மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கின்றனர் என்கிறது புள்ளிவிபரம். இன்று இது சுமார் 75 சதம் வரை ஆகிப்போயிருக்கும்

ஆக, உயர்கல்வி தனியார் மயம் மற்றும் அதிகக் கட்டணம் என்ற இரண்டு விதமான மோசடிகளை மறைத்து, தனியார் முதலாளிகளின் கல்லாவை நிரப்புவது மற்றும் மாணவர்களை கடனாளி ஆக்குவது என்பதே அந்தத் திட்டத்தின் பலனும், நோக்கமும் ஆகும். முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்யும் அரசு எனும் இயந்திரத்தின் அடிப்படைக் குணாம்சத்தைப் புரிந்துகொண்டால்தான் இதுபோன்ற திட்டங்களின் வர்க்க நோக்கத்தை அறிந்துகொண்டு மக்களிடையே பேச இயலும். அதை அறிந்துகொள்ள வேண்டுமெனில் மார்க்சியப் பார்வையில் கல்வியின் வரலற்றையும் அறிந்துகொள்ள வேண்டும்.

வர்ணாசிரம நோக்கில் கல்வி;

இந்தியாவில் காலனி ஆட்சிக்கு முந்தைய காலத்தில் கல்வியமைப்பு முறை என்றொரு கட்டமைப்பைக் காண இயலாது எனினும், வர்ணாசிரமக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட குலக்கல்வி முறையே இந்திய நிலப்பிரபுத்துவ அமைப்பின் கல்வி முறையாகும். வேதம் ஒதுவதும், நாட்டை ஆள்வதும் மட்டுமே கற்பித்தலுக்கு உரியவையாக பார்க்கப்பட்ட வர்ணாசிரமத்தில், இவையிரண்டும் பிராமணர், ஷத்திரியர் என அவரவருக்குண்டான வர்ண அடிப்படையில் பிரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் மட்டுமே வழங்கப்பட்டன. சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை சமூகத்தில் நிலைநிறுத்திடவும் இக்கல்விமுறைதான் உதவியது. இதர பிரிவினர் கற்கவே கூடாது எனச் சொன்ன இந்தக் கல்விமுறையை மீறுவது  குற்றம் என சட்டமும் சொல்லியது. வேதமும் சொல்லியது.

குறிப்பாகதிறமையிருப்பினும், ஆர்வமிருப்பினும்  வேறொரு குலத்தில் பிறந்தவன் வில்வித்தை கற்றால் கூட குற்றம் என்பதே அன்றைய தனிமனித ஒழுக்க நெறியாகும். அடிமைப்பட்டுக் கிடப்பதே அன்றைய ஒழுக்கநெறியாகும். ஏகலைவனின் கட்டைவிரல் பறிக்கப்பட்ட அநீதி கல்வி மறுப்பின் சூழலை எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சம்பவம் மட்டுமல்ல, ஒழுக்க நெறிகள் என்பது எப்போதும் சமூகத்திற்கு பொதுவானதாக முன்வைக்கப்படவில்லை, ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே முன்வைக்கப்பட்டன என்பதற்கும் அதுவே சரியான உதாரணமாகும்.

ஆடை, மண்பாண்டம், உணவு உற்பத்தி என எல்லாத் தொழில்களும் அன்று இருந்தாலும் இயந்திரமற்ற உற்பத்திச் சூழல் இருந்தததால் உற்பத்திக்கான தனித்த தொழிலாளர்கள் தேவை எழவில்லை. எனவே, இத்தொழில்களுக்கான கல்வியை குலக்கல்வியாக வாய்மொழியாக பரம்பரை அறிவு மூலம் கற்றுக்கொண்டனர். நீண்ட காலத்துக்கு வர்ணாசிரமம் இக்கல்விமுறையைத்தான் உறுதிப்படுத்தியிருந்தது.

காலனியாதிக்கத்தில் கல்வி

ஆனால், ஆங்கிலேயரின்  வருகையினால், இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை எழுந்தபோது, ஆளும் வர்க்கம் சில நெகிழ்வுகளை இந்த வர்ணாசிரமத்தில் செய்துகொண்டனர். குறிப்பாக, சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்போருக்கு உயர்ந்த வாய்ப்புகள், தாழ்ந்த நிலையில் இருப்போருக்கு அவர்களுக்கு ஏற்ற வாய்ப்புகள் என வழங்கப்படும் முதலாளித்துவ அமைப்பு முறையை ஒத்திருந்த இந்தியச் சமுக அமைப்பு முறையை, அப்படியே ஒரு கல்வி அமைப்பு முறையாக மாற்றி, அதனடிப்படையில் புதியதோர் சமூக அமைப்புமுறையையும் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

ஆங்கிலேயர்கள் மற்றும் அன்றைய முதலாளிகள் உருவாக்கிய தொழிற்சாலைகளில் பணி புரிய திறன் மற்றும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வேலைத் தன்மைக்கு ஏற்ப பல மட்டங்களில், அதாவது, இயந்திரங்களை இயக்க, சீர் செய்ய, பராமரிக்க, உருவாக்கிட என தகுதி வாரியாகப் பிரித்து உருவாக்குவது, அவர்களை நிர்வாகம் செய்யும் நிர்வாகிகளை உருவாக்குவது, வியாபாரத்திற்கான, பரிவர்த்தனைக்கான நபர்களை உருவாக்குவது, ஆட்சியில் உதவுவதற்கான நபர்களை உருவாக்குவது என கல்வித்திட்டங்களை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் வர்ணாசிரமம் சார்ந்தே பல அடக்குமுறையோடு இதை வகுத்தெடுத்தனர்.

ஆயினும், தொழில்புரட்சியினால் ஏற்பட்ட ஒரே மாற்றம் என்னவெனில், இயந்திரங்களோடு நேரடி உழைப்புத்தொழிலில் ஈடுபட வேண்டியிருந்ததால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை பயிற்சி பெற்ற தொழிலாளர்களாக கல்வி அமைப்பினுள் அனுமதிக்க வைத்ததே ஆகும். இந்த மாற்றமும் உழைப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டிய முதலாளித்துவத்தின் தேவையில் இருந்து குறிப்பாக,  உடல் உழைப்பை தொழில்நுட்பக் கல்வியோடு இணைக்கவேண்டிய தேவையில் இருந்து  எழுந்ததே ஆகும். ஆக, காலனி ஆட்சியில் கல்வி என்பது ஆங்கிலேயரின் நலனில் இருந்தே திட்டமிடப்பட்டதே ஆகும்.

சுதந்திர இந்தியாவில் கல்வி;

இதை மூன்று கட்டங்களாக பிரித்தறிவது எளிதாக அமையும். சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் இரண்டு கல்வி ஆணையங்கள் நேருவின் காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டன. தொழில்நுட்பம், மூலதனம், திறன் என இந்திய முதலாளித்துவம் அடிப்படைக் கட்டமைப்பைக்கூட பெறாத காலகட்டம் அது. எனவே, தகுதிவாய்ந்த தொழில்நுட்பப் பட்டதாரிகளை உருவாக்க மட்டுமல்ல, பள்ளிக் கல்வியில் பத்து பைசா செலவழிக்கக்கூட எந்தவொரு முதலாளியும் அன்று முன்வரவில்லை.

இந்திய முதலாளித்துவம் குழந்தைப் பருவத்தில் உள்ளது என்று கூறிய நேரு அதை ஊட்டி வளர்ப்பதற்கு எல்லா வழிமுறைகளையும் கல்விக்கொள்கை மூலம் திட்டமிட்டுக் கையாண்டார். அரசியல் சுதந்திரத்தை பொருளாதார சுதந்திரமாக மாற்றவேண்டும் என்று அடிக்கடி கூறிய நேரு அதையே கல்விக்கொள்கையின் அடிப்படையாக்கினார். இரண்டு கல்விக்குழுக்களும் அதைத்தான் செய்தன.

பயிற்சி மற்றும் திறன் பெற்ற தொழிலாளர்களை அதிகம் உருவாக்குவதன் மூலம் நாட்டை பொருளாதாரச் சார்புள்ள நாடாக மாற்றலாம் என்று முன்மொழிந்த அரசின் கல்விக்கொள்கை, இதன் மூலம் பொதுவான தேச வளத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினாலும், இதன் நோக்கம் முதலாளித்துவத்தின் தேவையான அதிக உற்பத்திக்கான பயிற்சி பெற்ற  தொழிலாளர்களை உருவாக்குவதே ஆகும்.

1948ல் பல்கலைக்கழக கல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட டாக்டர். ராதாகிருஷ்ணன் கல்விக்குழு பொருளாதாரச் சார்புள்ள நாட்டிற்கான உடனடித் தேவை பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களை அதிகம் உருவாக்குவதே என்று அறிவித்தது. அத்தோடு தனியார் கல்விநிலையங்களை உள்ளூர் குழுமம் மூலம் உருவாக்கி அதற்கு அரசின் மானியத்தைப் பெறலாம் எனவும் பரிந்துரைத்தது. குறிப்பாக, கல்வி வாய்ப்புகளை திறமையின் அடிப்படையில் வழங்கவேண்டும் என பரிந்துரை செய்ததும் இக்குழுவே ஆகும். தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்கவேண்டும் என்று சொன்னதன் நோக்கம் முதலாளித்துவத்தின் தேவையே ஆகும்.

பொருளாதார சுதந்திரத்தை அடைவதே தேசிய அளவிலும், சமூக அளவிலும் மிகப்பெரும் பிரச்னையாகும். பொதுவான செல்வச் செழிப்பை அதிகப்படுத்துவது, பயனுள்ள ஜனநாயக சமூகத்தைக் கட்டமைப்பது, சாதி மற்றும் மதப் பாகுபாடுகளைக் கடப்பது, ஏழை மற்றும் பணக்காரன் ஆகியோருக்கு இடையிலான வேறுபாடுகளைக் கடப்பது, கலாச்சார மட்டத்தின் உயரம் செல்வது ஆகியவை நம் முன்னுள்ள முக்கியப் பிரச்னைகளாகும். இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து நம்முன் உள்ள இலட்சியத்தை நாம் வேகமாக அடையவேண்டுமெனில், பொதுநலனை முன்னிறுத்தி மிகச் சீராகவும் வலுவாகவும் திட்டமிட்டுச் செயல்பட்டால் கல்வியே மிகச்சிறந்த ஆயுதமாகும். நாகரீகமுள்ள சமூகமாக நாம் செயல்பட விரும்பினால், உயர்கல்வியை வருங்கால தலைமுறையின் மிக முக்கிய அடிப்படை அக்கறைக்குரியதாக மாற்றவேண்டும் என ராதாகிருஷ்ணன் குழு  கூறுகிறது.( பக்கம் 411)

1952ல் இடைநிலைக் கல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட லஷ்மணசுவாமி முதலியார் குழுவும், நாட்டின் செல்வத்தை அதிகப்படுத்த வேண்டுமெனில் உற்பத்தி செயல்திறன் மிக்க தொழிலாளர்களை, தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்கவேண்டும் என்றே முன்மொழிந்தது. நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை மறுசீரமைப்பு செய்வது என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு அக்குழு கூறியது. இந்தியாவின் மிக முக்கியமான பிரச்னை என்னவெனில், நாட்டின் செல்வவளத்தை அதிகரிக்கும் பொருட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதே ஆகும். இதன் மூலம் மக்களின் வாழ்நிலையையும் உயர்த்தமுடியும் என பக்கம் 23ல் குறிப்பிட்டது.

கல்விக் குழுக்களும், முதலாளித்துவத்திற்கான கல்வியும்

அடுத்ததாக, 1968ல் வெளியான கோத்தாரி கல்விக்குழு பல நல்ல ஆலோசனை அளித்தாலும் ஆளும் வர்க்கம் அதை முற்றிலும் நிராகரித்துவிட்டு தனக்குச் சாதகமான தரம் வாய்ந்த கல்விமையங்கள், பல்கலைக்கழக நிர்வாகம் போன்றவற்றை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டது. இக்காலத்தில் வேலையின்மைக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் மாநில அரசியல் சூழல் மாற்றத்தில் மாணவர்களின் பங்கு ஆகியவற்றையும் கவனித்த ஆளும் வர்க்கம், கல்வியில் புதிய மாறுதல்களை முன்மொழிந்தது.

இதன் விளைவாகவே, 1969ல் ஐடிஐ, பாலிடெக்னிக்குகள் அதிகம் உருவாக்கப்பட்டன, பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஐஐடி, என்.ஐ.டிக்கள், அப்போதைய ஆர்இசிக்களும் இக்காலத்தில் அதிகம் திறக்கப்பட்டன.  அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்ட இத்தொழில்நுட்பக் கல்விநிலையங்கள் மூலம் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டது. இவர்களுக்கு வேலை கொடுக்கும் விதத்தில் தனியார் மூலதனம் திட்டமிட்டுச் செயலாற்றி தனது தேவையைப் பூர்த்தி செய்துகொண்டது.

ஆக, உற்பத்தி செயல்திறன்மிக்க தொழிலாளர்கள் மற்றும் தரம் மிகுந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்று நாட்டில் அதிகம்தான். சந்தேகமில்லை. ஆனால், இதனால் யாருக்குப் பலன் கிடைத்திருக்கிறது? ஏனெனில்,  அரசின் வருமானம் மற்றும் செல்வத்தை விடவும் இன்று  பல மடங்கு வளர்ந்திருப்பது இந்திய முதலாளித்துவத்தின் செல்வ மதிப்பே ஆகும். ஆக,  இந்த 70 ஆண்டுகளில் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்குத் தேவையானதை திட்டமிட்டதோடு, அதை உருவாக்கிக்கொடுத்ததும் முதலாளித்துவ வர்க்க சார்புள்ள இந்தியக்கல்வி அமைப்பு முறைதான் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

ஏற்றத்தாழ்வை ஒழிப்பது, சாதிமத வேறுபாடுகளைக் களைவது என்று ஒவ்வொரு குழுவும் எழுதி வாசித்த வசனங்களெல்லாம் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஆக, இவ்வசனங்கள் எல்லாம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்கு எழுதப்பட்டவை அவ்வளவே என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தீவிர தனியார்மயத்தின் தேவையிலிருந்து, 1978ல் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப்பட்டியலுக்கு மாற்றும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டது. இதன் மூலம் மத்திய அரசு கல்வியில் எந்தக் கூடுதல் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, தொழில்நுட்பக்கல்வி, மருத்துவக்கல்வி, பல்கலைக் கழக என அறிவுசார் சக்தியை தீர்மானிக்கும் அதிகாரத்தையும், பள்ளிக்கல்வி உள்பட கல்வி குறித்த புதிய மாறுதல்கள் மற்றும்  சட்டமியற்றும் அதிகாரத்தையும் தன்னிடம் எடுத்துக்கொண்டது அவ்வளவுதான். எனவே, கல்வி ஒத்திசைவுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பின்புதான், மத்திய அரசின் கொள்கைகளின் காரணமாக தொழில்கல்வி தனியார் மயம் தீவிரப்படுத்தப்பட்டது.

தொழில் வளர்ச்சியின் ஒரு பகுதியாக உருவான தொழிலாளர் இயக்கங்கள், இந்திய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக செலுத்திய தாக்கமும், வேலையின்மைக்கு எதிரான இளைஞர் போராட்டமும் இக்காலம் வரை குறிப்பிடத்தக்கதாகும். எனவே, பள்ளி முதலே தனியார் பள்ளியில் படித்தால் கீழ்ப்படிதல் மனோபாவம் மற்றும் சமூகமயமற்ற சந்ததியினராக மாணவர்கள் உருவாவர் என இக்காலத்தில் திட்டமிட்டனர்.  சமூக நோக்கமற்ற ஒரு புதிய இளைஞர் சமூகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டதே இராஜீவ் அரசின் புதிய கல்விக்கொள்கையாகும்.

1986ல் புதிய கல்விக்கொள்கையை இராஜீவ்காந்தி அறிமுகப்படுத்தினார்.  நவோதயா பள்ளிகளைத் திறந்து அறிவாற்றல் மிகுந்த மாணவர்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் கல்விமுறையே அரசின் இலக்கு என்று அறிவித்ததோடு, மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனப்பாடக் கல்விமுறையை ஊக்கப்படுத்திய இக்கல்விக்கொள்கை ஆங்கில ஆங்கில வழிக் கல்வியையும் ..

இதன் மூலம், பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையானத் தொழிலாளர்களை உருவாக்கும் நோக்கத்தை அரசு செவ்வனே செய்தது. கட்டுப்பாடற்று திறக்கப்பட்ட தொழில்கல்வி நிலையங்களால் வேலையின்மையும் பரவலாகத் தொடங்கியது. எனவே, பயிற்சி பெற்றால் மட்டும் போதாது, திறமை அதிகமாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும் எனும் கண்ணோட்டம் தீவிரமாய் பரப்புரை செய்யப்பட்டது. வேலைக்கான தேர்வு முறைகள் இன்னும் கடினமாக்கப்பட்டதன் காரணமாக, கணிசமான இளைஞர்கள் திறனற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டனர். நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு என அறிமுகப்படுத்தப்பட்டு கல்வியும், வேலைவாய்ப்பும் முற்றிலும் திறமை சார்ந்ததாக மாற்றப்பட்டது. இவ்வாறாக, பாகுபாடுகள், அநீதிகள் நியாயப்படுத்தப்பட்டன.

சில புதிய படிப்புகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காகவே நிறைய உருவாக்கப்பட்டன.  உதாரணத்துக்கு, இப்போது ஹோட்டல் மற்றும் மருத்துவமனைகளை கார்ப்பரேட் தொழிலாக கட்டமைக்கிறார்கள் என்பதால், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், மருத்துவமனை நிர்வாகப் படிப்பு, கேட்டரிங் என புதிய வகை பயிற்சிகளை, திறனைப் பெற்ற தொழிலாளர்களை உருவாக்குகிறார்கள். தனது திறமைக்கான  வேலைவாய்ப்பு இதுவே என்றும் இவ்வளவு செலவழித்துப் படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்றும் எவ்வித எதிர்ப்புமின்றி மாணவர்களை ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறார்கள். உணவு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடத் தொடங்கிய முதலாளித்துவம் உணவுப் பரிந்துரை, ஊட்டச்சத்து பரிந்துரை, உணவுத்தயாரிப்பு என சுமார் 40 படிப்புகளை இதில் மட்டும் உருவாக்கியுள்ளது. இதுதான் சந்தைமுறை கல்வியமைப்பாகும்.

 

குறைந்த மதிப்பெண் பெற்றவர் ஐஐடியில் படித்தால் அதற்கேற்ற ஊதியம், நடுத்தர மதிப்பெண் பெற்றவர் பாலிடெக்னிக் படித்தால் அவருக்கேற்ற ஊதியம், நல்ல மதிப்பெண் பெற்றவர் பொறியியல் படித்தால் அதற்கேற்ற ஊதியம், உயர்ந்த மதிப்பெண் பெற்று ஐஐடியில் படித்தால் அதற்கேற்ற அதிக ஊதியம் என்பது தான் தொழில்நுட்பக் கல்விக்கொள்கையின் அடிப்படையாகும். முதலாளித்துவத்தின் தேவையை இப்படித்தான் பூர்த்தி செய்கின்றன நமது கல்வியமைப்பு.

 

ஆக, கல்வி வரலாற்றை வாசிக்கையில், ஆளும் வர்க்கம் என்பது எப்போதும் உழைக்கும் மக்கள் மீது தனது அதிகாரத்தைத் தக்கவைக்க ஒடுக்குமுறையை மட்டும் பயன்படுத்துவதில்லை, மாறாக தனது ஆளும் வர்க்கக் கருத்தியலையே பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலும். இதுவே மார்க்சியம் எடுத்துரைக்கும் மாபெரும் உண்மையாகும்.

முதலாளித்துவ சமூகத்தில் கல்வி

முதலாளித்துவ சமூகத்தில் கல்வியின் அடிப்படை நோக்கமே திறன் வாய்ந்த மற்றும் படியத் தகுந்த தொழிலாளர்களை மீளுற்பத்தி செய்வதே ஆகும் என கல்வியை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்த லூயிஸ் அல்தூசரின் கணிப்புகள் மிக முக்கியமானதாகும். தொழிலாளர் வர்க்க மாணவர்களை அவர்களின் துணை வர்க்கநிலையான மத்திய தர வர்க்கத்துக்கு கொண்டு சென்று ஏற்க வைத்து சமூகப்படுத்தும் நிகழ்வை மட்டுமே கல்விக்கொள்கைகள் செய்துள்ளன என்று கூறும் இவர், கல்வி என்பது முதலாளித்துவ சமூகத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் விதத்தில் ஒவ்வொரு தனிநபரையும் உழைப்பு எனும் உலகிற்கு தயார் செய்கிறது, பள்ளியின் மூலம் இதுதான் நிகழ்கின்றன என்கிறார்.

பள்ளி என்பது முதலாளித்துவ சமூகம் போல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் சொல்வதை மாணவர் அடிபணிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுபோல், எஜமானர் சொல்வதை அடிபணிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என முதலாளித்துவ சமூகத்தைப் புரிந்துகொள்ளச் செய்யப்பட்டிருக்கிறது. முதலாளித்துவம் என்பது இயல்பானது, நியாயமானது என்ற தோற்றமே இத்தகைய கல்வி மூலம் கிடைக்கப்பெறுகிறது என்கிறார் அல்தூசர்.

 

பவ்லஸ் மற்றும் ஜிண்டிஸ் ஆகியோரின் மார்க்சிய நோக்கிலான கல்வி ஆய்வுகளும் மிக முக்கியமானதாகும். பணி புரியும் இடத்தைப் பிரதிபலிப்பதைப்போல்தான் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதையும் கடின உழைப்பு மனநிலையோடு செய்து பழகுதல், கீழ்ப்படிதல் ஒழுக்கம் சார்ந்து செயல்படுதல் ஆகியவை தொழிற்சாலையின் தேவைக்கேற்ற பயிற்றுவிப்புகளாகும். பள்ளிகள் நம்மிடம் என்ன கருத்தை உருவாக்குகின்றன என்றால் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டிருக்கின்றன. யாருக்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணமும், கடின உழைப்பும், திறனும் இருக்கிறதோ அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எடுத்துரைக்கின்றன. இதன் மூலம் அனைவரும் சமம் கிடையாது. சிலர் தகுதி, திறமை என அறிவில் உயர்ந்தவராக இருக்கிறார்கள், எனவே அவர்கள் உயர்ந்த பணிகளுக்குச் செல்கிறார்கள் எனச்சொல்லி அசமத்துவத்தை நியாயப்படுத்துகிறது பள்ளிக்கல்வி அமைப்பு என்கிறார்கள்.

 

கல்வி வளமான வாழ்வுக்கானது என்கிறார்கள். ஆனால், நல்ல கல்வி பெறவேண்டுமெனில் குழந்தை முதலே குடும்பத்தை விட்டுப் பிரியவைத்து விடுகிறார்கள். குழந்தமைப் பருவத்தையே பிடுங்கிவிடுகிறார்கள். சற்று வளர்ந்து விபரம் தெரிந்தவுடன் தொலைதூரப் படிப்புக்கும் அனுப்பிவிடுகிறார்கள். அப்புறம், வேலை. அதுவும் தொலைதூரத்தில், குடும்பம் ஒரிடம், தந்தை ஒரிடம், தாய் ஒரிடம், பெற்றோர் ஒரிடம், குழந்தை ஒரிடம் என்பதெல்லாம் இன்று தரமான கல்வியின் பொருட்டும், தரமான வேலைவாய்ப்பின் பொருட்டும் சாதாரணமானதாக மாற்றப்பட்டிருக்கிறது. உறவுகளைப் பிரித்துவிட்டு தாய் தினம், தந்தையர் தினம் எனக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது முதலாளித்துவம்.

 

பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு முன்வைக்கும் கல்வி சீர்திருத்தங்கள், பாசிசம் எப்போதும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் வர்க்கக்குணம் கொண்டது என்பதை மிகத் தெளிவாய் சொல்கின்றன. அந்நியப்பல்கலைக்கழகங்கள், அதிக அளவில் மத்தியப்படுத்தப்பட்ட மத்திய கல்வி நிறுவனம் எனத்தொடரும் ஆபத்துகளின் உச்சம் கல்வியை முழுவதும் சந்தை சார்ந்ததாக மாற்றுவதே ஆகும். கல்வியை காவிமயமாக்கி, தனது இந்துத்துவா அரசியல் நலனுக்கான கல்வியைத் திணிப்பது பாஜகவின் செயல்களில் ஒன்றெனினும், நோக்கம் உலகவங்கியின் ஒப்பந்தங்களில் கையொப்பமிடக் காரணமாய் இருந்த முதலாளித்துவ அடிவருடலே ஆகும்.

ஒன்று, கல்வியை மறைமுகமாக வழிநடத்திய இந்திய முதலாளித்துவம் இப்போது வெளிப்படையாக வழிநடத்தத் துவங்கியுள்ளது. இரண்டு, இந்திய அரசை விடவும் செல்வாக்கு மிகுந்ததாக, செல்வவளம், திறன், தொழில்நுட்பம் என பலமிக்கதாக இந்திய முதலாளித்துவம் வளர்ந்து நிற்கிறது. ஆக, இந்திய மனித வளம் யாருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மார்க்சிய நோக்கில் கவனிக்கையில் மட்டும்தான், முதலாளித்துவத்தின் இந்த மட்டற்ற வளர்ச்சி புரிபடும்.

கல்வியில் எந்த ஒழுக்கம் போதிக்கப்பட்டிருக்கிறது? ஏன் மனித மாண்புகள் சிதைந்துவருகின்றன? பெண்கள் ஏன் சக மனுசியாய் பாவிக்கப்படவில்லை? சாதியும், தீண்டாமையும் ஏன் ஒழியவில்லை? பாகுபாடுகளும், அநீதிகளும் ஏன் தொடர்கின்றன? இயற்கை வளம் கொள்ளை போகையில் சமூகம் ஏன் உணர மறுக்கிறது? என்ற எல்லாக் கேள்விகளுக்குமான விடை இந்தக் கல்வியமைப்பிற்குள் தான் குவிந்துகிடக்கிறது.

சோசலிசச் சிந்தனையாளரும், விஞ்ஞானியுமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பின்வரும் கூற்று,  முதலாளித்துவம் கல்வி முறையை எப்படி சீர்கெடுக்கிறது என்பதையும், சோசலிசக்கல்வி முறையை அதற்கான மாற்றாக ஏன் முன்னெடுக்கவேண்டும் என்பதையும் தெளிவாய் எடுத்துரைக்கிறது.

தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாதாய வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன்.

ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவருக்கும் இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும்.

ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும் என்கிறார் ஐன்ஸ்டீன்.(1949 மே மன்த்லி ரிவிவ்யூ, சோசலிசம் எதற்காக கட்டுரை)

அப்படியெனில், இப்போதிருக்கும் பள்ளி, கல்லூரி அமைப்புமுறைகளை மீறி சோசலிசத்திற்கான போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பதும்  இயல்பான ஒரு கேள்வியாய் எழும். கம்யூனிஸ்டு அறிக்கை அதற்குத் தெளிவான பதில் சொல்லுகிறது.

முதலாளித்துவ வர்க்கமே, பாட்டாளி வர்க்கத்துக்குத் தன் சொந்த அரசியல் கல்வியின் கூறுகளையும், பொதுக் கல்வியின் கூறுகளையும் வழங்குகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான படைக்கலங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவமே வழங்குகிறது என்று சொல்லும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் அறைகூவல், ஆங்கிலேயர்கள் அளித்த அடிமைக் கல்வியையும், அதிலிருந்தே உதித்தே இந்திய விடுதலை போரையும் நமக்கு அனுபவமாய் உணர்த்துவதோடு, இன்னும் நம்பிக்கையாய் முன்செல்லவும் வெளிச்சம் பாய்ச்சுகிறது.

One thought on “இந்தியக்கல்வி யாருக்கானது? ஒரு மார்க்சியப் பார்வை

  1. It is a wonderful review about our education system seen through Marxist ideology. In that i am having one question: how education system works in socialist world and how it is related to socialist jobs.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s