சிந்தா, மலையாள இதழிலிருந்து தமிழில்: நந்தகுமாரன்
(கேரள கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு திட்டமிட்ட அணுகுமுறையை கேரள அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயன் விளக்குகிறார்)
கல்வி உட்பட எல்லாவகை உரிமைகளுக்குமான சொந்தக்காரர்கள் என தங்களுக்குத் தாங்களே சுயமாக அறிவித்துக் கொண்ட சிறு பிரிவினர் ஒரு காலத்தில் இருந்தனர். அவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என முத்திரை குத்தப்பட்ட ஒரு பெரும் பிரிவினரை சமூகத்தின் அனைத்து துறைகளிலிருந்தும் விலக்கி வைத்திருந்தனர். இத்தகைய சமத்துவமின்மை தாழ்த்தப்பட்ட மக்களின் அறிவு தேடும் உரிமையை மிகக் கடுமையாக பாதித்தது. ஆசிரியரிடம் நேரடியாக சென்று கல்வி கற்கும் உரிமையை மறுத்தது மட்டுமல்லாமல், மறைமுகமாக அறிவைத் தேடும் முயற்சிகளுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டது. கல்வி கற்க முடியாமல், பொது வழியில் நடக்க முடியாமல், விருப்பப்பட்ட உணவை உண்ண இயலாமல், ஆலயங்களில் நுழைய இயலாமல் இருந்த அத்தகைய நிலைமைகளைத் தான் ஸ்ரீ நாராயண குரு, அய்யங்காளி, அய்யா வைகுண்டர், சட்டம்பி சுவாமிகள் போன்ற சீர்த்திருத்த வாதிகள் கேள்வி எழுப்பினர்.
இருண்ட காலத்தை திரும்ப விடோம்!
சாதிப் பாகுபாடுகளாலும், மூட நம்பிக்கைகளாலும், பழக்கவழக்கங்களாலும் நிறைந்து காணப்பட்ட அன்றைய சூழல்களை முன்னிறுத்தி தான் சுவாமி விவேகானந்தர் கேரளத்தை “பைத்தியக்காரர்களின் நாடு “ எனக் குறிப்பிட்டார். அத்தகைய நிலைமைகளை மாற்றவே, ஸ்ரீ நாராயண குரு கல்வி அறிவின் தேவையைப் பற்றி எழுதியதுடன், சிவிகிரியில் பள்ளிக்கூடம் ஒன்றையும் துவக்கினார். கல்விக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து வந்த குழந்தைகளை பள்ளிக் கூடங்களை நோக்கி அய்யாங்காளி அழைத்து சென்றதென்பது நமது மண்ணில் பீடித்திருந்த கறையை துடைத்த அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே. கல்வி வளர்ச்சிக்காக மிஷனிரிகளும், சமூக அக்கறை கொண்ட இயக்கங்களும் அளித்த பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை. மறுமலர்ச்சி இயக்க நாயகர்கள் அன்று பற்றவைத்த நெருப்பினை அணையவிடாமல் கேரளத்தில் பாதுகாத்தது நாம் இடதுசாரிகளே என பெருமையுடன் கூறிக் கொள்ள முடியும்.
கல்வி வாய்ப்பை மறுத்த அந்த இருண்ட காலத்திற்கு கேரளா இனி ஒருபோதும் திரும்பி போகக் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியுடன் இருந்து வருகிறது. அதன் காரணமாகவே பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், சமூக உயர்வுக்கும் அடிப்படையாக இருப்பது கல்வியே. அதோடு, தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான அறிவு, ஊக்கம் மற்றும் மதிப்பினை வழங்கவும் கல்வியால் மட்டுமே முடியும். அதனால் கல்வி அனைவருக்கும் கிடைத்தாக வேண்டும். இது மாணவர்களுக்கு வழங்கும் தானமல்ல. மாறாக, அவர்களின் உரிமையாகும். இதனை உறுதிப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். அத்தகைய உணர்வின் அடிப்படையில் தான், பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தை அரசு முன்னெடுத்து வருகிறது.
அறியாமை தொடர விரும்பும் ஆளும் வர்க்கம்
குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவருக்கும் இலவச கல்வி என்பது நமது அரசியலமைப்பு சட்ட சிற்பிகள் கண்ட கனவாக இருந்தது. ஆனால் அவர்கள் நிச்சயித்த காலஅளவைத் தாண்டி எத்தனையோ ஆண்டுகள் கடந்து போய்விட்டன. இன்றும் எழுத்துகளின் ஓசைகளைக் கேட்டேனும் கற்கவியலாத நிலையில் லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கூடங்களைவிட்டு ஒதுங்கி இருக்கின்றனர். அவர்கள் கல்வி கற்க வேண்டிய வயதில் மிகக் கடுமையான வேலைகளை செய்து வருகின்றனர். இந்தநிலை மாற வேண்டுமெனில் வருடந்தோறும் மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதியின் விழுக்காடு அதிகரிக்கப்பட வேண்டும்.
எண்ணற்ற கல்விக் குழுக்கள் இது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கியுள்ளன. இருப்பினும், கல்விக்கான ஒதுக்கீட்டில் சொல்லும்படியான அதிகரிப்பு ஒன்றும் செய்யப்படவில்லை. இதற்கு காரணம், குழந்தைகளுக்கு கல்வி வழங்காமல் இருப்பது தங்களுக்கு அரசியல் ரீதியாக பயனளிக்கும் என கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் நினைத்திருக்கக் கூடும். எழுத்தும் அறிவும் இல்லையெனில் சிந்திக்கமாட்டார்கள் அல்லவா ? அவ்வாறு சிந்திக்கும் சக்தி இல்லையெனில் தாங்கள் செய்யும் தவறுகளை எதிர்க்காமல் இருந்துவிடுவார்கள். எங்கேயிருந்தும் ஒரு எதிர்ப்பும் எழும்பாதவிதத்தில் புதிய தலைமுறையை மயக்க நிலைக்குட்படுத்தி ஆட்சியை தொடர வேண்டுமெனில் கல்வியறிவற்ற இருண்ட சமூகத்தை நிலைநிறுத்தி கொண்டால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.
பழம்பெருமை பிதற்றுவதால் பலனில்லை
பாரம்பரியத்தைப் பற்றி வறட்டுப் பெருமைகளைக் கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை. முற்காலத்தில் நாளந்தா பல்கலைகழகம் இருந்தது ; தக்ஷசீலம் உண்டாயிருந்தது; என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பதால் எந்தவித பயனும் இல்லை. இன்றைக்கு என்ன இருக்கிறது என்பது தான் பிரச்சினையே. நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் புனரமைத்திட பிரபல பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்ற அறிஞருமான டாக்டர் அமர்த்தியா செனை பொறுப்பாக மத்திய அரசு பணியமர்த்தியிருந்தது. ஆனால், மத்திய அரசால் திணிக்கப்பட்ட வகுப்புவாத பிடிவாதங்களையும், கட்டுப்பாடுகளையும் சகிக்க முடியாமல் அவர் அந்த பொறுப்பிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
தேசிய அளவில் கல்வியானது அனைவருக்கும் உரியதாகவும், கட்டாயமானதாகவும் உருவாக்கப்பட புதிய காலத்தில் பெரிய அளவிலான போராட்டத்திற்கான தேவை எழுந்துள்ளது. நமது நாட்டில் போராட்ட வழிகளின் மூலமல்லாது யாரும் பெரிய அளவில் ஒன்றும் சாதித்துவிடவில்லை. கேரளத்தில் கூட ஏழை மாணவர்கள் பெரிய அளவிலான கட்டண சுமை இல்லாமல் கல்வி கற்க வழி ஏற்பட்டதற்கான காரணம், மாணவர் இயக்கத்தினரின் கடுமையான போராட்டங்களும், முற்போக்கு அரசுகளின் தலையீடுமே ஆகும்.
இவ்வாறு கேரளா முழுவதும் அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியப்பட்ட கல்வியை தகர்க்கும் வகையில் அத்துறையில் உலகமயமாக்கலின் வரவு அமைந்துள்ளது. இத்தகைய நிலையை தடுத்து, ஏற்கனவே உருவாக்கிய கல்வி உரிமைக்கான நலன்களை பாதுகாப்பதுடன் அவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச தரத்திற்கு இணையாக நமது கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதில் இடது ஜனநாயக முன்னணி அரசு முனைப்பு காட்டி வருகிறது.
திட்டமிட்ட அணுகுமுறை
இனி வருங்காலங்களில் உலகம் முழுவதும் ஒரே சந்தையாக மாற்றப்படும். அந்த பொது சந்தையில் வளர்ந்த நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுடன் போட்டியிட்டு தனது திறமையை நிரூபித்து வாழ வேண்டிய சூழலே நமது குழந்தைகளுக்கு ஏற்படும். அதற்கு அவர்களை தகுதியுடையவர்களாக மாற்றும் விதத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உள்ளதா என்பதனை ஆய்வுசெய்தோம். அதற்கு இல்லை என்ற பதிலே எங்களுக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, நம்முடைய அரசுப் பள்ளிகளை உலகத் தரத்திற்கு இணையாக மேம்படுத்தவும், நமது குழந்தைகளை உலகின் எந்த பகுதியில் உள்ள மாணவர்களுடனும் போட்டியிடும் அளவிற்கான தரத்திற்கு உயர்த்தவும் தேவையான திட்டங்களை வகுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போது பொது கல்வி பாதுகாப்பு இயக்கத்தை முன்னெடுத்து செல்கிறோம். ஏற்கனவே, நிரந்தரமாக மூடும் நிலையில் இருந்த பள்ளிக் கூடங்களை மீண்டும் திறந்து அவற்றை பாதுகாத்த நிகழ்வுகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நவீன காலத்திற்கேற்ப தொழில் நுட்ப அறிவியல் துறையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதற்கு தேவையான திட்டங்களையும், செயல்முறை நிகழ்ச்சிகளையும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கேரளம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
கேரளம் ஒரு முன் மாதிரி
நமது மாநிலத்தில் பெரும்பாலான குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் இன்றும் கல்வி கற்று வருகின்றனர். சாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் இல்லாமல் எல்லா மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது தான் கேரளத்தை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டு, பேசப்பட்டு வந்த கேரள மாதிரி வளர்ச்சியில் கூட நமது பொதுக் கல்வியும், அரசுப் பள்ளிகளும் பெரிய அளவிலான பங்கு வகித்திருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
பலதரப்பட்ட சாதி,மதப் பிரிவு மக்கள் தங்களுக்கிடையே கலந்து ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையுடனும், நட்புறவுடனும் வாழும் நிலையை உருவாக்கியெடுத்ததில் பொதுக் கல்விக்கு பெரிய அளவிலான பங்கு உண்டு. சாதி மற்றும் பொருளாதார வேறுபாடுகளையும் கடந்து நம்முடைய புதிய தலைமுறையை சமத்துவ கலாச்சாரத்தில் வளர்த்தெடுப்பதில் அரசுப் பள்ளிகளும் அவற்றில் நிலவும் சூழல்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தன. அவற்றிலிருந்து நாம் தொடர்ந்து முன்னோக்கி பயணிக்க வேண்டிய தேவையுள்ளது. அதோடு, முன்னோக்கித் தான் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டு செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நமது மாநிலத்தில் அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமலிருக்கின்றன என்ற விமர்சனம் சமீபகாலம் வரை முன்வைக்கப்பட்டது. அதிக ஆசிரியர்களும், மேசைகளும், பெஞ்சுகளும் மட்டும் இருந்தால் போதாது. கூடவே நவீன வசதிகளும் அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் அத்தகைய விமர்சனத்தின் அடிப்படை. ஆனால், இந்த இயக்கம் துவக்கப்பட்ட முதல் வருடத்திலேயே அத்தகைய விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருந்த பிரச்சினைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் தீர்வு காணப்பட்டுள்ளது.
நவீன வசதிகள் உருவாக்கம்
பெரிய கட்டிடங்கள் மட்டுமல்ல, சகலவித வசதிகளுடன் கூடிய ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ் அறைகள் பொதுக் கல்வி இயக்கம் மூலம் செயல்படுத்த அரசு கலந்தாராய்ந்து வருகிறது. நூலகங்கள், கணினி சோதனைக் கூடங்கள், பல்லுயிர் பூங்காக்கள் முதலிய வசதிகளை எல்லாம் இதன் ஒரு பகுதியாக நமது அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று என்ற கணக்கில் அரசுப் பள்ளிகளில் சர்வதேச தரத்துக்கு இணையாக உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கும் நடவடிக்கைகள் தற்போது வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள மற்ற பள்ளிக் கூடங்களிலும் அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தக்கட்டமாக, கீழ்நிலை மற்றும் மேல்நிலை தொடக்கப்பள்ளிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாற்பதாயிரம் வகுப்பறைகளை ஹைடெக் ஆக்குவதன் மூலம் இந்தியாவில் பூரணமாக டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கல்வித் துறை என்ற கனவுத் திட்டத்தினை நோக்கி கேரளம் நடைபோடுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அடிப்படை வசதியற்ற ஒரு பள்ளியும் கேரளத்தில் இருக்கக் கூடாது என்பதுடன், அனைவரும் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலமே கல்வி கற்கின்றனர் என்பதனையும் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்படிப்பட்ட வசதிகள் உண்டாக்கப்படுவதன் எதிரொலியாக அதற்கான நற்பலன்கள் தற்போதே பள்ளிகளில் கிடைக்க துவங்கியுள்ளன. இக்கல்வியாண்டின் துவக்கத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே அதற்கு சான்று. இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஏறத்தாழ ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கடந்த ஆண்டை விட கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்ந்தனர். இப்படிப்பட்ட கூடுதலான மாணவர் சேர்க்கை கடந்த பத்தாண்டுகளில் இதுவே முதல் முறை என புள்ளி விபரங்கள் கூறுகையில் பொதுக் கல்வி குறித்த நமது உணர்வுகள் குறித்து நான் கூடுதலாக ஒன்றும் விளக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் உள்ள மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் நமது குழந்தைகள் கல்வி தொடர்பாக தொடர்பு கொள்ளுகின்றனர். ஆங்கிலத்தில் உள்ள நூல்களை வாசித்து புரிந்து கொள்கின்றனர். கூகுள் போன்ற இணைய தேடு பொறிகளை தங்களது அறிவுத் தேடலுக்காக போதிய அளவில் பயன்படுத்துகின்றனர். விக்கிபீடியா போன்றவற்றில் கேரளாவைப் பற்றிய விலைமதிப்பற்ற விபரங்களை எழுதுகின்றனர். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் ஒரே போன்று தொடர்பு கொள்ள அவர்களால் முடிகிறது. இவைகள் மூலம் நமது கல்வித் துறையில் புதியதொரு உணர்வு எதிரொலிக்கிறது.