– சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சி.பி.ஐ(எம்)
நேர்காணல்: இரா.சிந்தன்
கேள்வி: உலகத்தில் பல நாடுகளில் வலதுசாரித் திருப்பம் நிகழ்ந்துவருகிறது… இந்த சூழலில் நடைபெற்று முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, சோசலிசத்தின் புதிய கட்டத்திற்குள் நுழைவதாக அறிவித்திருக்கிறது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
முதலாளித்துவ உலகில் ஒரு வலதுசாரித் திருப்பம் நிகழ்ந்துவருகிறது. பொருளாதாரம் நெருக்கடியில் தள்ளப்படும்போதெல்லாம், அரசியலில் திருப்பம் நேர்கிறது. அது வலதுசாரித் திருப்பமாக அமைவதை தவிர்க்கவியலாததில்லை. இடதுசாரித் திருப்பமாக மாற்ற முடியும். அது யார் வலிமையாக இருக்கிறார்கள்? என்பதையும், இடது வலது சக்திகளுக்கிடையிலான முரண் தொடர்பு எப்படி அமைந்துள்ளது என்பதையும் பொறுத்தது அது. பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உருவாகியிருக்கிற வெறுப்புணர்வை அனுகூலமாக பயன்படுத்தி முன்னேற யாரால் முடிகிறதென்பதைப் பொறுத்தது. இடதுசாரிகள் வலிமையாக உள்ள இடங்களில் இடதுசாரிகள் முன்னேறுகிறோம். இடதுசாரிகளுக்கு வலிமை இல்லாதவிடங்களில் வலதுசாரிகள் பலனடைகிறார்கள். வலது போக்கும், இடதுபோக்கும் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கின்றன.
1930 ஆம் ஆண்டு, உலகப் பொருளாதார நெருக்கடியின்போது வலதுசாரித் திருப்பம் அதன் ஒரு வெளிப்பாடாக அமைந்ததைப் பார்த்தோம். அது ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாசிசமாக மாறியது. இடதுசாரிகள் முனைந்து அதனைத் தடுக்க முயல்கிறபோது, தடுக்கவும் முடிந்துள்ளது. இப்போதும் கூட லத்தின் அமெரிக்க நாடுகள் உள்ளிட்டு பல இடங்களில் வலதுசாரிகள் தடுக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் ஐரோப்பிய நாடுகளில், இடதுசாரிகள் வலுக் குறைவாக உள்ள நாடுகளில் வலதுசாரித் திருப்பம் நிகழ்ந்துள்ளது. அது முக்கியமானது. ஆனால் அடிப்படையாக நாம், இடது – வலது சக்திகளுக்கிடையே நடந்துவரும் போராட்டத்தை கவனிக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் சில நாடுகளில் இடது சக்திகளும், சிலவற்றில் வலது சக்திகளும் முன்னேறுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி சக்திகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறுவது முக்கியமானது. அவர்கள் சோசலிசத்தின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதாக தெரிவித்திருப்பது சரியானதே. 1970 சீனா என்ன திட்டமிட்டது. தோழர் டெங் ஜியோ பிங், தோழர் இ.எம்.எஸ் -ன் நண்பர். மார்க்சிஸ்ட் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் ஒப்பந்தத்தில் அவர்கள் இருவருமே கையெழுத்திட்டிருந்தனர். 1986 ஆம் ஆண்டு சீனாவுக்கு தோழர் இ.எம்.எஸ் உடன் பயணம் செய்தபோது, புகழ்பெற்ற தலைவர் டெங் சியோ பிங்கினைச் சந்தித்தோம்.அவரிடம் சீனாவில் நடைபெற்றுவரும் மாற்றங்களை புரிந்துகொள்வதற்காக கேள்வி எழுப்பினேன். அவர் சீன வரைபடத்தை எடுத்துவரச் செய்தார். அதில் தெற்கு பகுதியைச் சுட்டிக்காட்டி 1980 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியை வளர்த்தெடுப்போம், 1990 ஆம் ஆண்டில் கிழக்குப் பகுதி, 2000 ஆம் ஆண்டுக்குள் வடக்கு சீனம். 2020 ஆம் ஆண்டுக்குள் மேற்கு சீனம். பின்னர் நாங்கள் மத்திய சீனத்தையும், ஒட்டுமொத்த சீனத்தையும் வளர்த்தெடுப்போம் என விளக்கினார். அப்படியான திட்டமிட்ட பாதையிலிருந்து விலகாமல் சீனம் பயணிக்கிறது. மேலும், சோசலிசத்தின் மேன்மையை உயர்த்திப்பிடிக்கும் வகையில் ஒட்டுமொத்த தேசத்தையும் அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பாதையில் அவர்கள் பயணிக்கின்றனர்.
சமனற்ற வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகள் அதிகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, முக்கியமானதாக மாறியிருப்பதாக ஜீ ஜின்பிங் குறிப்பிட்டுள்ளாரே ?
சீனா ஏன் தனது சீர்திருத்தங்களைத் தொடங்கியது? … சீனத்தில் நிலவிவந்த முக்கிய முரண்பாடு – மக்களின் விருப்பங்கள் அதிகரித்துவருவதும் – அதனை நிறைவேற்றுவதில் சோசலிசத்திற்கு இருந்த போதாமையும் ஆகும். மக்களின் தேவைகளும், விருப்பங்களும் சோசலிசத்தின் காரணமாகவே அதிகரிக்கின்றன. இந்த முரண்பாட்டை சரியாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சி கணித்தது. பொருளாதார, சமூக கட்டமைப்பை மக்கள் விருப்பங்களை நிறைவேற்றுகிற வகையில் மாற்றியமைக்க வேண்டும். இந்த முரண்பாட்டிற்கு தீர்வு காணாவிட்டால் சோசலிசமே நீடித்திருக்க முடியாது. எனவே மேற்கு நாடுகளின் மூலதனத்தையும், தொழில்நுட்பத்தையும் அனுமதிப்பதன் மூலம், தனது இலக்கை எட்டுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி முயன்றது. கம்யூனிஸ்டுகளின் விருப்பமும் இலக்கும் இதுவாக இருக்கலாம். முதலாளித்துவத்தின் மூலதனம், சீனாவில் சோசலிசத்தை வலிமையாக்குவதற்காக வருவதில்லை. அது சோசலிசத்தை சிதைக்க முயற்சிக்கும். எனவே அந்த முரண்பாட்டில் இருந்துதான் சீர்திருத்த நடவடிக்கைகளும் தொடங்குகிறது. இந்த முரணும், மோதலும் சீர்திருத்தத்தில் இருந்து பிரிக்க முடியாதவை.
ஹூ ஜிந்தாவோ மற்றும் ஜீ ஜின்பிங் ஆகியோர் சொல்வது சரிதான். (உலகமயத்திற்கு சாளரத்தைத் திறக்கும்போது) மூன்று முக்கியமான சிக்கல்கள் எழுகின்றன. மக்களுக்கிடையிலான, பிராந்தியங்களுக்கு இடையிலான சமனற்ற தன்மை உருவாகுகிறது. அந்த இரண்டுமே சோசலிசத்திற்கு பகைமையானவை. இரண்டாவது நீங்கள் சாளரத்தைத் திறக்கும்போது அங்கே எல்லாமே வரும் என்பதை மறந்துவிடாதீர்கள். நல்லவைகளோடு சேர்த்து கொசுக்களும், டெங்கு, சிக்கன் குனியாவும் வரும். அப்படி வந்து சேர்ந்துள்ள ஒரு சிக்கல் ஊழல். மேற்சொன்ன மூன்று சிக்கல்களையும் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. சீர்திருத்தங்களைப் பயன்படுத்தி சோசலிசத்தை வலுப்படுத்த முயல்கிறது. ஆனால் முதலாளித்துவ சக்திகள் பலவீனப்படுத்த விரும்புகின்றனர்.
சமூக ஏற்றத்தாழ்வு, பிராந்திய ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழல் ஆகிய சிக்கல்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து போராடிவருகிறது. இந்தப் போராட்டத்தில் யார் வெற்றியடைவார்கள்? … இந்த மாநாட்டில் கூட ஜீ ஜின்பிங் பேசும்போது மார்க்சிய – லெனினிய தத்துவம், மாசேதுங் சிந்தனைகள், டெங் ஜியோ பிங் கொள்கைகள் மற்றும் நான்கு முக்கியக் கோட்பாடுகள் உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளார். இந்தப் போராட்டத்தில் யார் வெற்றியடைவார்கள் என்ற ஊகத்தைப் பற்றி நான் பேசவில்லை. மார்க்சியம் என்பது ஜோதிடம் அல்ல. எனது விருப்பம் அங்கே சோசலிசம் வலுப்படவேண்டும் என்பதுதான். நாம் சோசலிசத்தை வலுப்படுத்த நடக்கும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம்
Leave a Reply