உ.வாசுகி
இதுகாறும் எழுதப்பட்ட சமூக வரலாறு, வர்க்க போராட்டங்களின் வரலாறே என்பதும், வர்க்கப் புரட்சியை மக்களே செய்கிறார்கள்; வரலாற்றை அவர்களே படைக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த பாடம். தனி நபரால் வரலாற்றின் போக்குகளை மாற்ற முடியாது. வரலாற்று நிகழ்வுகளைத் தனிநபர் தீர்மானிப்பதில்லை. அதேசமயம் தனி மனிதரின் முக்கியத்துவத்தையும் புறந்தள்ளி விட இயலாது. வரலாற்றில் தனி மனிதர்கள் வகிக்கும் பங்கினை மார்க்சியம் தெளிவாகவே அங்கீகரிக்கிறது.
புரட்சியின் மூளையாகவும் இதயமாகவும்…
ருஷ்ய புரட்சியைப் பொறுத்த மட்டில், தோழர் லெனின் வேறு, புரட்சி வேறு எனப் பிரிக்க இயலாது. இப்படிக் கூறுவதால் ருஷ்ய போல்ஷெவிக் கட்சியின் இதர தலைவர்களின் பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. புரட்சியின் மூளையாகவும், இதயமாகவும் லெனின் விளங்கினார் என்பதே அலெக்சாண்ட்ரா கொலந்தோய், கார்க்கி உள்ளிட்ட தலைவர்களின் ஒருமித்த மதிப்பீடு. திட்டவட்ட சூழலைத் துல்லியமாக ஆய்வு செய்வது என்ற மார்க்சீய ஆய்வு முறையை அவர் மிகச் சரியாகவே கடைப்பிடித்தார். அதன்படி அரசியல் நடைமுறை உத்திகளை வகுப்பது; அதை அமல்படுத்தத் தகுதியுள்ள ஸ்தாபன முறையை உறுதி செய்வது போன்றவற்றை அவர் சங்கிலித்தொடர் போல் உறுதி செய்தார். 9,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், தத்துவார்த்த நூல்களை எழுதி குவித்து, கட்சி உறுப்பினர்களின், மக்களின் அரசியல் தரத்தை உயர்த்தினார். அரசியல் எதிரிகளின் வாதங்களைத் தவிடு பொடியாக்கி, போல்ஷெவிக் கட்சியின் நிலைபாடு சரியானது என்று நிறுவினார். தோழர் லெனின் குறித்து கருத்து தெரிவித்த அனைவருமே, அவரது தொலை நோக்கு பார்வையை, அரசியல் நிகழ்ச்சி போக்குகளை முன் உணரும் திறமையைப் பாராட்டுகின்றனர். மாறிக் கொண்டே இருந்த அரசியல் சூழலை மிகச் சரியாகக் கண்காணித்து, வர்க்க சேர்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் மதிப்பீடு செய்து, கட்சியின் கடமைகளை அவர் வகுத்தார். 19 வயதில் மார்க்ஸ் எழுதிய மூலதன தொகுப்பைப் படித்து முடித்து, நான் மார்க்சிஸ்ட் என்று பிரகடனம் செய்தார். இறுதி வரை அதில் வழுவாமல் நின்றார்.
ருஷ்ய புரட்சி 3 கட்டங்களாக நடந்தது. 1905ல் ஒரு முயற்சியும், 1917 பிப்ரவரியில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சி, அதே ஆண்டு அக்டோபரில் சோசலிச புரட்சியும் நடந்து முடிந்தது. இதன் மொத்த வரலாறை இங்கு கூறுவது கட்டுரையின் நோக்கமல்ல. இவற்றில் லெனின் அவர்களின் தலையீடுகளும், உத்திகளும் எவ்வாறு இருந்தன என்பதை சுருக்கமாக உரைப்பதே இங்கு சாத்தியம்.
ரத்த ஞாயிறு
1905-ல் நடந்த எழுச்சியின் போது லெனின் வெளிநாட்டில் இருக்க வேண்டியிருந்தது. இது வெறுக்கத்தக்க, சலித்துப்போன வாழ்க்கை; என் உள்ளம் முழுதும் ருஷ்யாவில் என்று கூறிய லெனின், ருஷ்ய நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தார். இச்சூழலில் ருஷ்யாவின் அன்றைய தலைநகர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் பெரும் வேலை நிறுத்தம், மற்றும் ஜாரின் மழைக்கால அரண்மனை நோக்கிய தொழிலாளர்களின் மனு கொடுக்கும் பேரணிக்கு முன்முயற்சி எடுத்தது கபோன் என்ற பாதிரியார். இவர் காவல்துறையின் உளவாளி, ஜார் மன்னர் ஆட்சியின் கையாள். திருச்சபையிடமும், மன்னரிடமும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே இவர் நிலைபாடு. இவரது முயற்சியில் இணைவதா இல்லையா என்ற கேள்வி எழுந்த போது, பல பத்தாயிரம் தொழிலாளிகள் பங்கேற்கும் போது, போல்ஷெவிக்குகள் ஒதுங்கி நிற்கக் கூடாது; பங்கேற்கலாம்; ஆனால் ருஷ்ய சமூக ஜனநாயக கட்சியின் கருத்துக்களையும், முழக்கங்களையும் அந்த இயக்கத்தின் கோரிக்கைகளாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று லெனின் வழி காட்டினார். அந்த அடிப்படையில் கோரிக்கை மனு, பல தொழிலாளர் கூட்டங்களில் படித்து இறுதிப்படுத்தப்பட்டபோது, பேச்சு சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, சங்கம் வைக்கும் உரிமை, சட்டத்தின் முன் சமத்துவம், 8 மணி நேர வேலை, அமைச்சர்கள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இணைக்கப் பட்டன. 1905 ஜனவரி 9-ம் தேதி, 1,40,000 பேர் ஜாரின் படங்களை ஏந்திக் கொண்டு, அவரைப் புகழும் பாடல்களைப் பாடிக் கொண்டு பங்கேற்ற அமைதியான பேரணியை, ஜாரின் பாதுகாப்பு படையினர் சுட்டுத் தள்ளினர். 1,000 பேருக்கு மேல் சாவு; 5000 பேருக்கு மேல் படுகாயம். நிகழ்வு நடைபெற்ற ஞாயிறு ரத்த ஞாயிறு என்ற அவப்பெயர் பெற்றது.
இந்தச் சம்பவம் அதில் பங்கேற்ற பலரின் கண்களைத் திறந்தது. லெனின், “கபோனின் பிரமைகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்க நிலைபாட்டின் நியாயம் வலிமை மிக்கதாக இருந்தது” என்று மதிப்பீடு செய்தார். அவர் ஊகித்தபடியே, இதையடுத்து, வலுவான போராட்டங்கள் வெடித்தன. மாஸ்கோவில் வேலை நிறுத்தம், ஜாரின் புகழ் பாடிய அதே வாய்களில் எதேச்சாதிகாரம் ஒழிக என்ற அரசியல் முழக்கம், 4,40,000 பேர் வேலை நிறுத்தம் என்ற நிலை ஏற்பட்டது. டிசம்பரில் மாஸ்கோ நகரம், சோவியத்துக்களின் கையில் 9 நாட்கள் இருந்தன. பெருமளவில் போராட்டங்கள் நசுக்கப்பட்டாலும், ஜார் அரசு சில சலுகைகளை அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. மீண்டும் லெனின் கூறினார் – “சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட எழுச்சி நடப்பது தவிர்க்க இயலாதது. வரவிருக்கும் புரட்சிக்கு, இது முன்னோடி”.
ஏகாதிபத்தியம் குறித்த ஆய்வு
முதல் உலகப் போர் 1914-ல் துவங்கி நடந்து கொண்டிருக்கும் போது, 1916-ல் அதன் பரிமாணங்களை லெனின் ஆய்வு செய்து, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்ட வளர்ச்சி; அதே சமயம் அது சோசலிசத்தின் நுழைவாயில் என்று நிறுவினார். அதிகாரம், ஆதிக்கம் என்று பொருள்படும் இம்பீரியம் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவான இம்பீரியலிசம், 19-ம் நூற்றாண்டு வரை அரசியல் ரீதியான வார்த்தையாகவே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏகபோகங்கள் தீர்மானகரமான பங்கினை ஆற்றும்; அரசுகள் மீது செல்வாக்கு செலுத்தும்; வங்கி மூலதனமும் தொழில மூலதனமும் இணைந்து நிதி மூலதனமாக சிலர் கையில் குவியும்; மூலதனம் ஏற்றுமதியாகும்; உலகை பணக்கார நாடுகள் பங்கிட்டுக் கொள்ளும்; இதில் போர் தவிர்க்க முடியாதது என்ற ஏகாதிபத்தியத்தின் அரசியல் பொருளாதார அடித்தளம் குறித்த தெளிவுகளை தத்துவார்த்த ரீதியாக லெனின் முன் வைத்தார். இந்த அடிப்படையில், முதல் உலகப் போர் குறித்த கீழ்க்கண்ட மதிப்பீட்டை உருவாக்கினார் – “சந்தைக்காகவும், அந்நிய நாடுகளைக் கொள்ளை அடிக்கும் சுதந்திரத்துக்காகவும் நடக்கும் போராட்டம்தான் உலகப் போர். அவரவர் நாடுகளில் ஜனநாயகத்தையும், புரட்சிகர இயக்கத்தையும் ஒடுக்குவதற்கு இது முயற்சி செய்யும். அனைத்து நாடுகளின் பாட்டாளிகளையும் ஏமாற்றுவது; ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவது; கொல்வது… இது தான் போரின் உள்ளடக்கம்”.
ஜனநாயக புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு உத்திகள் (two tactics)
1905 ரத்த ஞாயிறுக்குப் பிறகு அவ்வப்போது வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் நடந்தன. ஆனால் அவை ஜாரால் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. கொடுத்த வாக்குறுதிகளையும் ஜார் அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையை சமூக ஜனநாயகக் கட்சி எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்; ஜனநாயக புரட்சிக்கான உத்தி என்ன என்பதைத் தீர்மானிப்பதற்காக, எழுச்சி நசுக்கப்பட்ட 6 மாதங்களில் கட்சியின் மாநாடு கூட்டப்பட்டது. அப்போதே தனி பிரிவாக இயங்கிக் கொண்டிருந்த மென்ஷுவிக்குகள், மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்தனர். தனி மாநாட்டைக் கூட்டினர். ஒரே கட்சி; ஒரே சூழல்; ஆனால் இரு வித உத்திகள் என்ற நிலையில் போல்ஷெவிக்கின் உத்தியே சரியானது என்பதை சமூக ஜனநாயகத்தின் இரு உத்திகள் என்ற பிரசுரத்தில் விளக்கினார் லெனின். ஜாரின் சர்வாதிகார ஆட்சியைத் தகர்க்க வேண்டும்; ஆனால் எப்படி என்பதுதான் விவாதம்.
விவாதத்தில் ஓர் அம்சம், முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் தலைமை எந்த வர்க்கத்திடம் என்பதுதான். இது மேல்தட்டு புரட்சி; எனவே தொழிலாளி வர்க்கம் இதிலிருந்து தள்ளி நிற்க வேண்டும்; முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து, அந்நிகழ்முறையில் தொழிலாளி வர்க்கம் வலுவான பிறகு சோசலிச புரட்சியை நடத்திக் கொள்ளலாம் என்பது மென்ஷுவிக்குகளின் நிலை. புரட்சியை அலட்சியப்படுத்தக் கூடாது; தலைமையை முதலாளிகள் கையில் விடக் கூடாது; தொழிலாளி வர்க்கம் தன் முழு சக்தியைப் பயன்படுத்தி, தலைமை ஏற்று ஜனநாயக புரட்சியை நடத்த வேண்டும்; அதுவே சோசலிசத்துக்கான வாசலைத் திறந்து விடும். முதலாளி வர்க்கம் ஸ்திரமற்று இருக்கிறது. எனவே அது ஜாருடன் சமரசம் செய்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற லெனின், தொழிலாளி வர்க்கம் வால் பிடிக்கும் வர்க்கமாக இருக்க முடியாது; வேறொரு படையின் துணை படையாக, கூலிப்படையாக இருக்கக் கூடாது என்று உறுதிபட விளக்கினார். ஆயுத புரட்சி செய்தால் முதலாளிகள் பயந்து விடுவார்கள்; எனவே கூடாது; நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மென்ஷ்விக்குகள் கூற, ஆயுத புரட்சிதான் தேவை என்று போல்ஷெவிக்குகள் நிலை எடுத்தார்கள்.
முதலாளி வர்க்கம் பலவீனமாக இருப்பதால் நேரடியாக சோசலிச புரட்சிக்கு ஏன் போகக் கூடாது என்ற கேள்வியும் எழுந்தது. லெனின் பின்வருமாறு பதிலுரைத்தார் – “மக்கள் வர்க்க உணர்வுடன் அமைப்பு ரீதியாக அணி திரள்வது, பயில்வது, கற்பது, ஒட்டு மொத்த முதலாளித்துவத்தை எதிர்த்து வர்க்க போராட்டம் நடத்துவது என்பதே சோசலிச புரட்சியை சாத்தியமாக்கும். இப்போது இந்நிலை இல்லை. எனவே, சர்வாதிகார மன்னர் ஆட்சியிலிருந்து முதலில் விடுபட வேண்டும். அதற்கு பாட்டாளி-விவசாயி கூட்டணியின் புரட்சிகர ஜனநாயக பிணைப்பு தேவை” என்றவர், “பாட்டாளி வர்க்கம் விவசாயிகளுடன் சேர்ந்து பலப் பிரயோகத்தின் மூலம் ஜாரின் சர்வாதிகாரத்தைத் தகர்த்து ஜனநாயக புரட்சியை நடத்திட வேண்டும்; முதலாளி வர்க்கத்தின் ஸ்திரமற்ற தன்மையை முடக்கி, ஸ்தம்பிக்க வைத்திட வேண்டும். அடுத்து, முதலாளித்துவத்தின் எதிர்ப்பைப் பலப்பிரயோகத்தின் மூலம் ஒடுக்கி, விவசாயி-குட்டி முதலாளித்துவத்தின் ஸ்திரமற்ற தன்மையை முடக்கி, சோசலிச புரட்சியை அரை பாட்டாளிவர்க்கத்துடன் சேர்ந்து நடத்திட வேண்டும்” என்று வழி காட்டுகிறார். அடுத்த 12 ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கம் பெரும் பங்காற்றி, முதலாளித்துவ ஜனநாயக புரட்சி நடந்து, ஜார் வீழ்த்தப் பட்டார். 1917 பிப்ரவரியில் நடந்த இப்புரட்சி பிப்ரவரி புரட்சி என்று அழைக்கப்படுகிறது. இடைக்கால அரசு, இளவரசர் ஜியார்ஜி ல்வாவ் தலைமையில் அமைந்து, பின்னர் கெரன்ஸ்கி தலைமை ஏற்படுகிறது.
ஏப்ரல் ஆய்வுரைகள் (April Theses)
மாறிக் கொண்டே இருக்கும் அரசியல் சூழலை, களச் சூழலை லெனின் சரியாக கணித்தார். பிப்ரவரி புரட்சிக்குப் பின் 6 வாரங்கள் கழித்து அவர் பின்லாந்திலிருந்து ருஷ்யா திரும்பினார். திரும்பிய உடன், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து, போல்ஷெவிக்குகளிடமும், மென்ஷெவிக்குகளிடமும் பேசினார். அந்த சொற்பொழிவின் அடிப்படையே ஏப்ரல் தத்துவத்தின் சாரமாக அமைந்தது. இரண்டு அதிகார மையங்கள் செயல்படுகின்றன என்று மதிப்பீடு செய்தார். ஒன்று கெரன்ஸ்கி அரசின் அதிகாரம்; மற்றொன்று தொழிலாளர், ராணுவத்தினரின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட சோவியத்துகளின் அதிகாரம். கெரன்ஸ்கி அரசாங்கத்துக்கு அருகில் கரு வடிவில் மற்றொரு அரசாங்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது; அதுதான் சோவியத்துகள். அவை கீழிருந்து மக்களால் அமைக்கப்பட்ட புரட்சிகர சர்வாதிகாரம் என்று ஏப்ரல் மாதம் முதலே தொடர்ச்சியாக சுட்டிக் காட்டினார். சோவியத்துக்களை பலப்படுத்த வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே என்பது அவர் முழக்கமாக அமைந்தது.
சமாதானம், நிலம், ரொட்டி
சமாதானம் – நிலம் – ரொட்டி என்ற முழக்கங்களை இக்கால கட்டத்தில் லெனின் தீவிர படுத்தினார். உலகப் போரில் தொடர்ந்து ருஷ்யாவிற்கு ஏற்பட்ட தோல்வி, துருப்புகளை விரக்தியின் எல்லையில் வைத்திருந்தது. இது எம் நாட்டுக்கான போர் அல்ல என்ற அதிருப்தி எழுந்தது. இந்நிலையில் சமாதானம் என்பது ராணுவ வீரர்களை ஈர்த்தது. கணிசமான எண்ணிக்கையில் இருந்த விவசாயிகளை நிலம் என்ற முழக்கம் உற்சாகப் படுத்தியது. ராணுவத்தில் இருந்தவர்கள் கிராமப்புற விவசாய குடும்பங்களைச் சார்ந்தவர்கள்தான். ரொட்டி என்பது அனைவரையும் ஈர்த்தது. ஏனெனில், கடும் பஞ்சத்துக்கு இடையே, கடைகளை உடைத்து ரொட்டிகளைக் கைப்பற்றும் வேலையில் (food riots) ஏராளமான பெண்கள் ஈடுபட்ட நேரம் அது.
சோவியத்துக்களைப் பலப்படுத்த வேண்டும் என்ற முழக்கத்தை லெனின் முன்வைத்த போது, சோவியத்துகளில் போல்ஷெவிக்குகளின் எண்ணிக்கை குறைவு, உதாரணமாக பெட்ரோகிராட் சோவியத்தில் 600 பேருக்கு 40 பேர் தான் போல்ஷெவிக்குகள். போல்ஷெவிக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். பின்னர் ஒரு சில சோவியத்துகளில் போல்ஷெவிக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கட்சி உறுப்பினர்கள் ஏப்ரலில் 10,000மாக இருந்தது, அக்டோபரில் 5 லட்சமாக உயர்ந்தது.
செப்டம்பரில் கார்னிலோவ் என்ற ஜாரின் விசுவாசி, ராணுவ தளபதி, போல்ஷெவிக்குகளைத் தாக்கி, அதிகாரத்தைக் கைப்பற்ற கலகம் நடத்த திட்டமிட்டார். கெரன்ஸ்கியால் அதை எதிர்கொள்ள இயலவில்லை என்பது மட்டுமல்ல; துவக்கத்தில் அதற்கு உடந்தையாகவும் இருந்தார். கார்னிலோவை முறியடித்தது போல்ஷெவிக்குகள்தான். அப்படியே கெரன்ஸ்கியை வீழ்த்தியிருக்கலாமே என்ற கேள்வி எழுந்த போது, கெரன்ஸ்கி அரசின் மீது இருக்கும் நம்பிக்கை தளர வேண்டுமானால், அவரால் கலகத்தை அடக்குவதற்கு சக்தியில்லை; பலவீனமாக அந்த அரசு இருக்கிறது; போல்ஷெவிக்குகளால்தான் இது இயலும் என்ற நம்பிக்கையை மக்கள் உணர வேண்டும், அதுதான் உடனடியான நோக்கம் என்று பதில் அளித்தார்.
இடைக்கால அரசு போல்ஷெவிக்குகளின் மீது அடக்குமுறையைப் பிரயோகித்தது. கட்சி தடை செய்யப்பட்டது. லெனின் மீண்டும் தலைமறைவாகி பின்லாந்துக்கு செல்ல வேண்டியிருந்தது. தலைமறைவு காலத்தில் செப்டம்பரில் அரசும் புரட்சியும் என்ற நூலை எழுதி முடிக்கிறார். ஆயுத புரட்சி நடத்த வேண்டும் என்ற லெனினின் நிலைபாட்டை மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பான்மை ஏற்கவில்லை. அதில் இருந்த கருத்து வேறுபாட்டை அக்டோபர் 18ம் தேதி சிலர் பத்திரிகைகளில் எழுதியதால், ரகசிய திட்டம் வெளியாகி விடுகிறது. அக்டோபர் 24 அன்று மத்திய கமிட்டி உறுப்பினர்களுக்கு, ஆயுத புரட்சியின் அவசியத்தை மீண்டும் எழுதி, அது ஏற்கப்பட்ட பின், இரவு 11 மணிக்கு பெட்ரோகிராடின் தெருக்களுக்கு லெனின் வந்தார். அக்டோபர் 25ம் தேதி (நவம்பர் 7) கெரன்ஸ்கி அரசின் தலைமையிடமாக இருந்த ஜாரின் குளிர்கால அரண்மனையை பெட்ரோகிராட் சோவியத்தின் புரட்சிகர ராணுவ கமிட்டி, சுலபமாகக் கைப்பற்றியது. போர் கப்பல் அரோராவிலிருந்து 3 குண்டுகள் அரண்மனை மீது விழுந்தன. புரட்சி நடந்து முடிந்ததாக அறிவித்த லெனின், அடுத்த நாளே, கடந்த காலத்தில் விவசாயிகளின் சோவியத்துக்கள் நிறைவேற்றிய பல்வேறு தீர்மானங்களின் அடிப்படையில், நிலங்கள் எவ்வித இழப்பீடும் இன்றி கையகப்படுத்தப்பட்டு மக்களுக்கு சொந்தமாக்கப்படும் என்ற விரிவான சட்டத்தை இயற்றுகிறார்.
புரட்சிக்குப் பின்
புரட்சிக்குப் பின் அனைத்து குடியரசுகளையும் இணைத்து சோவியத் ஒன்றியத்தை அமைக்கும் பெரும் கடமை வந்தது. பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை தேசிய இனங்களுக்கு அளித்து நம்பிக்கை ஊட்டி, அவர்களை ஒன்றிணைத்தார். விவாகரத்து உரிமை, சட்டத்தில் இடம் பெற வேண்டும் என்று சொல்கிறோம். அதற்காக அனைத்து திருமணங்களும் விவாகரத்தில் முடியும் என்று நாம் நினைப்பதில்லை; அதுபோலத்தான் இதுவும் என்று விளக்கமளித்தார்.
எல்லா நாடுகளுடனும் சமாதானம்; தனியொரு நாட்டினில் சோசலிசத்தைக் கட்டுதல்; விரைவாக மின்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளித்தல்; பெண்களின் வீட்டு வேலைகளை சமூகமயமாக்கி, பல்வேறு தளங்களில் சோவியத் அரசு அளிக்கும் சம வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்த ஏதுவான சூழலை உருவாக்குவது; ஆலைகளை தொழிலாளர்களே நடத்துவது; கூட்டுப் பண்ணை என்று பல பணிகள் தொடர்ந்தன. சமூக ஜனநாயகக் கட்சியின் (பின்னாளில் ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது) புரட்சிகர ஸ்தாபன கோட்பாடுகளை உருவாக்கியதில் லெனின் அவர்களின் பங்கு மகத்தானது.
தற்போது சோசலிச முகாமில் பாதிப்புகள் உருவாகி, பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். நெருக்கடிகளைக் கடந்து 21ம் நூற்றாண்டில் இன்னும் மேம்பட்ட சோசலிசம் உருவாகும் என்ற நம்பிக்கையை மார்க்சீயம் அளிக்கிறது. அக்டோபர் புரட்சி, அதற்கு முன் நடந்த புரட்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆட்சி அதிகாரம், சுரண்டும் வர்க்கங்களிடமிருந்து தொழிலாளி வர்க்கத்திடம் வந்தது. வளர்ச்சியடைந்த வல்லரசுகளை விட, பல்வேறு துறைகளில் சோவியத் ஒன்றியம் முன்னேறியது. அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை நினைத்துப்பார்க்கும் போது, லெனின் அவர்களின் பங்களிப்பைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியாது. அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இந்திய சூழலுக்கு ஏற்ப அசைவுகளை ஏற்படுத்த வேண்டும்.
ஆதாரம்:
Lenin and russian revol – by christopher hill
லெனினும் அக்டோபர் புரட்சியும் – கட்டுரைகளின் தொகுப்பு (சோவியத் வெளியீடு)
லெனின் குறித்து – கட்டுரைகள் தொகுப்பு
Leave a Reply