மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – 1917முதல் 2017 வரை


Revolution and Counterrevolution, 1917–2017

ஜான் பெல்லாமி ஃபாஸ்டர்

(மார்க்சிய அறிஞர், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் மந்த்ளி ரிவ்யூ இதழின் ஆசிரியர்)

தமிழில் : எஸ். ரமணி

கார்ல் மார்க்சின் உயரிய படைப்பான மூலதனம் வெளிவந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் 1917-ல் ருஷ்யப் புரட்சி வெடித்தது. துவக்கம் முதலே அக்டோபர் புரட்சி, மார்க்சின் ஆய்வினை உறுதிப்படுத்தியும், மறுதலித்தும் வருவதாகவே தோன்றியது. அவர் மேற்கத்திய ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கத்தின் கீழ் புரட்சி வெடிக்கும் எனக் கணித்தார். இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்பு, 1882-ல் கம்யூனிஸ்ட் அறிக்கை க்கு அவர் எழுதிய முன்னுரையில், தனது முந்தைய கருத்தை மாற்றிக் கொண்டவராக, “மேற்கத்திய நாடுகளில் தொழிலாளி வர்க்கப் புரட்சி சாத்தியமே என்பதற்கான ஓர் அறிகுறியாக” ருஷ்யப் புரட்சி விளங்குகிறது என்று சுட்டிக் காட்டியிருந்தார். மார்க்சிஸ்டுகளின் தலைமையில் தொழிலாளி-விவசாயப் புரட்சி ருஷ்யாவில் 1917-ல் வெற்றிபெற்ற போதிலும், அந்நாடு பெரும்பாலும் வளர்ச்சியுறாத ஒரு நாடாகவே இருந்தது. அதே நேரத்தில், ருஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து ஜெர்மனி மற்றும் மத்திய ஐரோப்பாவில் புரட்சிகர எழுச்சிகள் வெடித்தெழுந்தபோதிலும் அவை வலிமையற்றதாக, எளிதில் அணைத்து விடக் கூடியதாகவே இருந்தன.

அந்தச் சூழ்நிலையில் முற்றிலும் தனிமைப்பட்டிருந்த சோவியத் ருஷ்யா கடுமையான எதிர்ப்புரட்சியை சந்திக்க வேண்டியிருந்தது. முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் உள்நாட்டுப் போரில் ருஷ்ய முதலாளிகளின் வெண்படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டன. வரலாறு நெடுகிலும் சோவியத் யூனியன் முன்வைத்த பாதுகாப்பு கோஷமான “ஒரு தேசத்தில் சோஷலிசம்” என்ற புவிசார் அரசியல் எதார்த்தம் பெருமளவிற்கு வெளியில் இருந்து அதன் மீது திணிக்கப்பட்ட ஒன்றே ஆகும். ஜார் பேரரசின் பெரும்பான்மையான நிலப்பரப்பை விட்டுத் தரவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிய ப்ரெஸ்ட்-விடாவ்ஸ்க் ஒப்பந்தம் தொடங்கி ருஷ்யாவைத் தனிமைப்படுத்த உருவான வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் வரை அனைத்து ஒப்பந்தங்களுமே இவற்றுக்குச் சாட்சியங்களாக உள்ளன.

காலனிய வாதத்தின் வரலாறு முழுவதிலும் சூழ்ந்துள்ள அதன் அடிப்படையான பொருளில் அல்லாமல், முதலாளித்துவத்தின் ஏகபோக நிலையுடனான அதன் தொடர்பில்தான் லெனின் பயன்படுத்திய சொற்றொடரான அந்த ‘ஏகாதிபத்தியம்’ 20-ம் நூற்றாண்டின் வித்தியாசமான தன்மை கொண்ட முதலாளித்துவமாக, புரட்சி, எதிர்ப்புரட்சி ஆகிய இரண்டிற்குமான நிலைமைகளையும் தீர்மானிக்கும் சக்தியாக அமைகிறது. 17-ம் நூற்றாண்டிலிருந்தே ஐரோப்பாவில் நடைபெற்ற மோதல்களை பெருமளவிற்கு வடிவமைத்த காலனிகளுக்கான  போட்டி என்பதற்குப் பதிலாக 19-ம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலும் புதியதொரு போராட்டம் உருவானது: அதாவது தேசிய அரசுகளுக்கும் அதன் பெருநிறுவனங்களுக்கும் இடையேயான போட்டியாக அது அமைந்திருந்தது. இந்தப் போட்டி ஏகாதிபத்திய பகுதிகளுக்கானதாக இல்லாமல், அதிகமான அளவிற்கு ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த, ஏகாதிபத்திய உலக முறையில் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான போட்டியாக அமைந்திருந்தது. எனவே புரட்சி, எதிர்ப்புரட்சி என்பவை அந்த அமைப்பின் முழுஅளவிலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். பெருநகர ஆட்சியாளர்கள் உபரியான செல்வத்தை உறிஞ்சுவது அதிகரிக்க அதிகரிக்க சுரண்டல் கடுமையானதாக மாறி, அந்தப் பகுதியிலேயே அனைத்து வகையான புரட்சிகரமான எழுச்சிகளும் குவிந்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சிகளாக உருவெடுக்கின்றன. இவற்றை முக்கிய முதலாளித்துவ அரசுகளால் நடத்தப்படும் எதிர்ப்புரட்சிகள் எதிர்கொள்கின்றன. இச்சூழலை மேலும் சிக்கலாக்கும் வகையில் இவ்வாறு உபரி செல்வம் உறிஞ்சப்படும் செயலின்போது அதனால் மறைமுகமாகப் பயனடைந்த தொழிலாளி வர்க்கத்தின் ஒரு மேல்தட்டுப் பிரிவினர் ‘பிரபுத் தொழிலாளி’யாக உருவாகி வந்தனர் என்பதை எங்கெல்ஸ் பின்னாளில் சுட்டிக் காட்டியிருந்தார். இதனை பின்னர் லெனின் ‘ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த கட்டம்’ என்ற தனது நூலிலும் குறிப்பிட்டிருந்தார்.

1917 அக்டோபர் புரட்சி அரை நூற்றாண்டைக் கடந்த பிறகு, மார்க்சின் மூலதனம் வெளிவந்து நூறாண்டுகளுக்குப் பிறகு, 1967-ல் வியத்நாம் போர், சீனக் கலாச்சாரப் புரட்சி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில்  புரட்சிகள் சீராக மேல்நோக்கி வந்த நிலையில், அந்தப் புரட்சிகள் ருஷ்யா மட்டுமின்றி சீனா, கியூபா, இதர பகுதிகளில் வெற்றி பெற்றன என்பதை மாற்ற இயலாது எனக் கருதுவது நியாயத்திற்குப் புறம்பானதல்ல. மனித குல வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு ரத்தம் தோய்ந்த நூற்றாண்டு என்பது முன்பே நிரூபணமாகியுள்ளது. எனினும் மனித குல விடுதலையில் அதிகமான முன்னேற்றம் நிகழ்ந்த காலமும் அதுவே. உலக எதிர்ப்புரட்சி சக்திகள் குறுகிய காலத்தில் ஒன்று திரண்டபோதிலும், வெற்றி பெற்ற போதிலும், அது நிலைத்து நிற்காது.  “1972- எதிர்ப்புரட்சியும் கிளர்ச்சியும் (1972 Counter-revolution and Revolt)  என்ற தனது நூலின் முகவுரையில் ஹெர்பெர்ட் மார்க்யூஸ் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருந்தார்:

“மேற்கத்திய உலகம் தனது வளர்ச்சிப் போக்கின் புதியதொரு கட்டத்தை எட்டியுள்ளது. முதலாளித்துவ உலகைப் பாதுகாக்க, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவர்களுக்கு எதிர்ப்புரட்சி அமைப்புகள் தேவைப்படுகின்றன. அதன் தீவிர வெளிப்பாடாகவே நாஜிகளின் ஆட்சியின் போது நிகழ்த்தப்பட்ட கொடூரமான செயல்கள் மீண்டும் அரங்கேற்றப்படுகின்றன. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும், ஏகாதிபத்திய அடிவருடி அரசுகளை எதிர்த்து நடைபெறும் கிளர்ச்சிகளை ஒடுக்குவது என்ற போர்வையில், இந்தோ சீனா, இந்தோனேசியா, காங்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான் போன்ற நாடுகளில் மனிதப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாசிச, ராணுவ சர்வாதிகாரிகளால் கொடூரமான வன்முறை ஏவப்பட்டது. உலகம் முழுவதும் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்வது சர்வ சாதாரணமானதொரு நிகழ்வாக மாறிப்போனது. மேற்கத்திய கலாச்சாரம் உச்சத்தில் இருந்தபோது உருவான மதப்போர்கள் மன உளைச்சலை உருவாக்கின; பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஆயுதம் வழங்கி நிரந்தரமாக தேச, சமூக விடுதலைக்கான எழுச்சிகளை ஒடுக்க உதவி புரிந்தன. எதிர்ப்புரட்சி பெரும்பாலும் ஒரு தடுப்பு நடவடிக்கையாகவே இருக்கும்; குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் ஒட்டுமொத்தமாகவே இது தடுப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. வரலாற்றில் நிகழ்ந்த அனைத்துப் புரட்சிகளிலும் மிகத் தீவிரமான ஒரு புரட்சியின் அபாயத்தை எதிர்கொள்ள முதலாளித்துவம் தன்னையே மறுநிர்மாணம் செய்து கொள்கிறது. அதுதான் உண்மையிலேயே முதல் முதலான உலக ரீதியான- வரலாற்று ரீதியான புரட்சி ஆகும்.”

இன்று ருஷ்யப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்குப் பிறகு, மூலதனம் வெளிவந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமைகள் மாறியுள்ளன. கடிகார முள் எதிர்த்திசைக்கு திருப்பப்பட்டது போன்ற, உலகத்தின் எதிர்ப்புரட்சி சக்திகள் வெற்றி பெற்றுவிட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.1960களில் உலகின் முக்கிய பகுதிகளில் செல்வாக்கு செலுத்திய, அடிப்படையிலேயே விளிம்பில் இருந்து வந்த, விடுதலை சக்திகள் இன்று முற்றிலுமாக வீழ்த்தப்பட்டுள்ளன.

இருப்பினும் முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகள், குறிப்பாக பூமியின் சுற்றுச்சூழல் நெருக்கடி, முற்றிப் போய் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. 2007-09-ல் உருவான மிகப்பெரிய சர்வதேச நிதிச் சிக்கல் அதன் முகத்திரையைக் கிழித்துள்ளது. உலக ஏகபோக நிதி மூலதனம் இன்று எதிர்பாராத அளவிற்கு சமத்துவமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. சமூகம் பின் தங்கியுள்ளது. ஸ்திரத் தன்மை சீர்குலைந்துள்ளது. நாகரீகம் வீழ்ச்சியடைந்துள்ளது. சுற்றுச் சூழல் அழிக்கப்பட்டுள்ளது. புதிய அவதாரம் எடுத்துள்ள அரசியல் பொருளாதாரம் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. இன்றைய தலைமுறையை மட்டுமின்றி, அனைத்துத் தலைமுறையினரையும் அச்சுறுத்தும் வகையில் மனித குலம் நிலைப்பது கேள்விக் குறியாகியுள்ளது. எரிக் ஹாப்ஸ்வாம் தனது “இருபதாம் நூற்றாண்டின் சரித்திரம்” என்ற நூலின் முடிவில் இவ்வாறு தெரிவித்திருப்பார்: “தோல்விக்கான விலை என்பதை எவ்வாறு குறிப்பிடுவது எனில், மாற்றமடைந்துள்ள சமூகத்திற்கு மாற்று இருளே ஆகும்.”

உலக அளவில் எதிர்வினை

இருபதாம் நூற்றாண்டில் உருவான புரட்சி அலைகளை மீறி இறுதியில் ஏகாதிபத்தியம் வெற்றி பெற்றது எனில் அதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? உலகப் புரட்சியின் எதிர்காலத்தை எத்தகைய பொருளில் புரிந்து கொள்வது? இதற்கான விடையைக் காண கடந்த நூற்றாண்டில் ஏகாதிபத்திய புவிசார் அரசியல் வரலாற்றை முழுமையான ஆய்விற்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

1870களின் நடுப்பகுதியிலிருந்து முதல் உலகப்போர் வரையிலான காலம் முதலாளித்துவ வளர்ச்சியின் நியாயத்தன்மையில் குணாம்ச ரீதியான இடைவெளியைக் குறிப்பதாக அமைந்திருந்தது. புதிய நாடுகளை காலனிகளாக மாற்றுவது வேகமாக அதிகரித்து வந்த, புதிய ஏகாதிபத்திய சக்திகள் எழுச்சி பெற்று வந்த, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான மோதல்கள் மீண்டும் தோன்றி வருவதைக் குறிப்பிடும் வகையில் 1870களிலேயே அப்போது இருந்த சமகாலத்துப் பார்வையாளர்கள் “புதிய ஏகாதிபதித்தியம்” பற்றிப் பேசியிருந்தனர். மிகப்பெரும் தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்களின் மேலாதிக்கத்தில் இருந்த முதலாளித்துவமான ஏகபோக மூலதனம் எழுச்சி பெற்றது இந்தக் கட்டத்தில்தான். ஜெர்மனியும் அமெரிக்காவும் கனரகத் தொழில் என்ற புதிய காலத்திற்குள் நுழைந்து முதலாளித்துவத்தின் ஏகபோக கட்டத்திற்குள் மிக வேகமாக முன்னேறியது. அதே நேரத்தில் இந்த இரண்டு அம்சங்களிலுமே பிரிட்டன் பின் தங்கியிருந்தது. தொழிற்புரட்சி துவங்கிய காலத்திலிருந்தே முதலாளித்துவத்தின் உலகப் பொருளாதாரத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டன், அப்போதும் அளவில் மிகப் பெரியதாக, தன்னிகரற்றதாக இருந்த போதிலும், ஒன்றோடொன்று போட்டியிட்டு வரும் நாடுகளின் புதிய பன்முக ஒழுங்கமைப்பினால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தது. 19ஆம் நூற்றாண்டின் கடைசி முப்பதாண்டுகள் பொருளாதார ரீதியான மந்தநிலை நிலவிய காலமாகும். அந்த நாட்களில் ஐரோப்பாவில் அது மாபெரும் தாழ்வுநிலை என்று அறியப்பட்ட காலம் ஆகும். எனினும் முதலாளித்துவ அதிகாரத்தின் செயல்படும் பாதையில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கிய காலமாகவும் அது இருந்தது.

இந்தப் போக்குகளை கூர்ந்து கவனித்து வரும் முக்கிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள சில ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் புவிசார் அரசியல் என்ற புதுவிதமானதொரு போலி அறிவியலை உருவாக்கினர். அது உலக அமைப்பின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கான போராட்டங்களில் தன் கவனத்தைச் செலுத்தியது. கிளாசிவிசியன் (Clausewitzian) கருத்துப்படி புவிசார் அரசியல் பொதுவாக ஆயுத மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது. அது ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் 1890களில் துவங்கியது.  இதன் விளைவாகவே ஜெர்மனியும் அமெரிக்காவும் ஏகாதிபத்திய சக்திகளாக உருப்பெற்றன. அமெரிக்காவில் இந்தக் கண்ணோட்டத்தை சார்லஸ் கோனன்ட் (Charles Conant) எழுதிய “ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படை” (The Economic Basis of Imperialism) ப்ரூக்ஸ் ஆடம்ஸ்  (Brooks Adams) எழுதிய “புதிய பேரரசு” (The New Empire) ஆகியவை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளன. அவை உலகின் பெரும்பகுதிகளில், குறிப்பாக பசிபிக் பகுதியில், அமெரிக்காவின் மேலாதிக்கம் குறித்துப் பேசுகின்றன. அமெரிக்காவின் புவிசார் அரசியலின் நிறுவனர்களில் ஒருவரான ப்ரெடரிக் ரேஷல் (Friedrich Ratzel)  “லிபரம்”, அதாவது வாழும் இடம் என்ற புதிய சொல்லை 1890-ல் பயன்படுத்தினார். இந்தச் சிறிய கிரகத்தில் ஒரே ஒரு நாட்டிற்கு மட்டுமே போதுமான நிலப்பரப்புதான் உள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும் இடைப்பட்ட போர்க்காலம், இரண்டாம் உலகப்போர்க்காலம் ஆகியவற்றில் நடத்திய ஆய்வுகள் நவீன புவிசார் அரசியல் ஆய்வுகள் என அழைக்கப்படுகின்றன. அதன் முன்னணி பிரிட்டிஷ் தத்துவவாதி, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்சின் முன்னாள் இயக்குநர், கிளாஸ்கோவிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் பணியாற்றிய ஹால்போர்ட் மெக்கிண்டர் (Halford Mackinder) ஆவார். மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ நாடுகளுக்கு இடையிலான சமநிலையற்ற வளர்ச்சிதான் பெரும் போர்கள் உருவாவதற்கான வரலாறாகும் என்று அவர் “ஜனநாயக குறிக்கோள்களும் யதார்த்தமும்” (Democratic Ideals and Reality) என்ற நூலில் தெரிவிக்கிறார். முதலாளித்துவ புவிசார் அரசியலின் தலையாய நோக்கம் பேரரசுகளின்  வளர்ச்சியை ஊக்குவிப்பது; இறுதியில் ஒரே ஒரு உலகப் பேரரசை நிறுவுவது என்பதே ஆகும்.  “இதய நிலப்பரப்பு” (Heartland) என்ற தனது கண்டுபிடிப்பின் மூலம் மெக்கிண்டர் பிரபலமானார். (கிழக்கு ஐரோப்பா, ருஷ்யா, மத்திய ஆசிய பகுதிகளைச் சுற்றிய யூரேசிய நிலப்பரப்பு ஆகியவையே  ‘இதய நிலப்பரப்பு’ என்று அழைக்கப்படுகிறது. உலகத்தீவின்  (World Island)(ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ள கண்டங்களான ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகள்) மீது மேலாதிக்கம் செலுத்தி அதன் மூலம் உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர  ‘இதய நிலப்பரப்பை’ ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே சாத்தியம் என்று மெக்கிண்டர் தெரிவிக்கிறார். புதிய யூரேசியா காலத்தில் முந்தைய நூற்றாண்டுகளில் இருந்ததுபோல்  கடல் வலிமையைக் காட்டிலும் நிலவலிமையே தீர்மானகரமான சக்தியாக உள்ளது என்பது மெக்கிண்டரின் புகழ்பெற்ற வாசகமாகும்.

*              யார் கிழக்கு ஐரோப்பாவை ஆட்சி செய்கிறார்களோ அவர்கள் இதய நிலப்பரப்பின்மீது செல்வாக்கு செலுத்துவார்கள்;

*              யார் இதயப் பரப்பை ஆள்கிறார்களோ, அவர்கள் உலகத்தீவின்மீது செல்வாக்கு செலுத்துபவர்களாக இருப்பார்கள்;

*              யார் உலகத்தீவை ஆள்கின்றனரோ, அவர்கள் உலகத்தின் மீது செல்வாக்கு செலுத்துபவர்களாக இருப்பார்கள்.

ருஷ்யப் புரட்சியின் செல்வாக்கு மெக்கிண்டரின் புவிசார் அரசியல் உத்தி

உருவாவதற்குக் காரணமாகும். ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியை நியாயப்படுத்த அவர் இதனப் பயன்படுத்தினார். பிரிட்டிஷ் அரசு அவரை 1919-ல் தென் ருஷ்யாவிற்கான ஹைகமிஷனராக நியமித்தது. ருஷ்ய உள்நாட்டுப் போரில் ருஷ்ய வெண்படை, ஜெனரல் டெனிகினுக்கு பிரிட்டிஷ் ஆதரவை உறுதிப்படுத்தும் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டது. டெனிகின் செம்படையினால் தோற்கடிக்கப்பட்ட பின்பு மெக்கிண்டர் லண்டனுக்கு திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டார். “ஜெர்மனி தொழில்மயமாவது குறித்த பிரிட்டனின் கவலை நியாயமானதாக இருப்பினும் அதனைத் தடுக்கும் வண்ணம் வெர்செயில்ஸ் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், ஜெர்மனியின் மறுநிர்மாணம் தேவையான ஒன்று” என அவர் பிரிட்டிஷ் அரசிடம் தெரிவித்தார். மெக்கிண்டரின் கண்ணோட்டத்தில் கிழக்கு ஐரோப்பா போல்ஷெவிக்குகளின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை தடுக்கும் அரணாக ஜெர்மனி இருக்கும். அதன் மூலம் இதய நிலப்பரப்பு பாதுகாக்கப்படும் என்று அவர் கருதினார்.

 

போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இதுபோன்ற நம்பிக்கை கொண்டிருந்த பிரபலமானவர்களில், மெக்கிண்டர் மட்டுமல்லாது, வேறு பலரும் இருந்தனர். இதே கண்ணோட்டத்துடன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் நெவில் சேம்பர்லின் அரசு நாஜி ஜெர்மனியை தாஜா செய்ததுடன் அதனோடு கூட்டும் சேர்ந்து கொண்டது. ஜெர்மனி தன் துப்பாக்கியை கிழக்குப் புறமாக, அதாவது சோவியத்தை நோக்கி, திருப்பும் என்ற நம்பிக்கையில்தான் இந்தக் கூட்டணி உருவானது. ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் தோரஸ்டன் வெப்லான் கூற்றுப்படி சோவியத்தை சுருக்கும் நோக்குடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டதுதான் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம்.

 

1930-40களில் ஜெர்மனியில் முன்னணியில் இருந்த புவிசார் அரசியல் கோட்பாளர் கார்ல் ஹ்ஷோஃபர் (Karl Haushofer) ஆவார். நாஜிக்களின் ஆட்சியில் இவர் துணைத்தலைவராக இருந்தவர். அடால்ஃப் ஹிட்லரின் முக்கிய ஆலோசகரும் கூட. அவர் பிரிட்டன், அமெரிக்கப் பேரரசுகளை ஜெர்மனிக்கான அச்சுறுத்தலாகவே பார்த்தார். எனவே கண்டங்களுக்கு இடையிலான ஓர் அதிகாரக் குழுவை உருவாக்க விரும்பினார். அதன் அடிப்படையில் ஆங்கில, அமெரிக்க சக்திகளை அழிக்க ருஷ்யா, ஜப்பானுடன் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கினார். தங்களுக்கிடையில் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதில்லை என்ற ஒப்பந்தம் ஹிட்லருக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் கையெழுத்தானது. அதன்பிறகு அவர் “இப்போது அச்சு நாடுகள், தூரக்கிழக்கு நாடுகள் இணைந்து செயலாற்றுவதன் நோக்கம் ஜெர்மானிய மக்களின் கண் முன்னே தெரிகிறது. இறுதியாக மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் கழுத்தை அறுக்கும் அனகோண்டா கொள்கைகளிலிருந்து அது விடுபடும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த முன்னணி புவிசார் அரசியல் சிந்தனையாளர் நிக்கோலஸ் ஸ்பைக்மேன் (Nicholas Spikeman) ஆவார். அவர் “உலக அரசியலில் அமெரிக்காவின் உத்தி” (1942) (America’s Strategy in World Politics), அவர் மறைந்த பிறகு வெளிவந்த அமைதியின் நிலப்பரப்பு (1944) (The Geography of Peace) ஆகிய நூல்களில் மெக்கிண்டரின் ‘இதய நிலப்பரப்பு’ (Heartland) கோட்பாடான நிலம் சார்ந்து உருவான புவிசார் அரசியல் உத்தியை கடுமையாக எதிர்த்ததோடு, அதற்கு மாறான கடல்சார் ஆதிக்கத்திற்கு அழுத்தம் தந்தார். ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, கிழக்காசியா, பசிபிக் பகுதிகளை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் சோவியத் யூனியனின் பிடியிலுள்ள யூரேஷியாவின் இதய நிலப்பரப்பை சுற்றி வளைத்துக் கைப்பற்ற முடியும் என்பதே அவரது பார்வையாகும்.  அமெரிக்க-பிரிட்டிஷ் நாடுகளின் உலக மேலாதிக்கத்தின் தேவையை அவர் வலியுறுத்தினார். ஐரோப்பிய கடல் பகுதிகலின் மீது சோவியத் யூனியனின் மேலாதிக்கத்தைத் தடுப்பது குறித்து தனது நூலான அமைதியின் நிலப்பரப்பில் அவர் விவரித்துள்ளார். ஒன்றிணைந்த கடல் பகுதி கூட்டணியை எதிர்த்து சோவியத் யூனியன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் வாதிட்டார். பனிப்போர் தொடங்கிய நிலையில் ஜார்ஜ் கென்னனின் ‘கட்டுப்படுத்தும்’ உத்தியையும் தாண்டி, அதே சமயம் வெளியுறவு கவுன்சிலின் பெரும் திட்டங்களையும் மீறிய வகையில், பெருமளவு மறக்கப்பட்ட  ஸ்பைக்மேனின் புவிசார் அரசியல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் வலுவான அழுத்தத்தை உருவாக்கியது.

அமெரிக்க மேலாதிக்கத்தை விரிவாக்க:

1943-ல் மெக்கிண்டர் இப்பூவுலகில் அமெரிக்கப் பேரரசின் பங்கை வலியுறுத்திய வகையில் தெரிவித்த கருத்தான “சோவியத் யூனியனின் நிலப்பரப்பு இதய நிலப்பரப்பிற்குச் சமமானது; அதனை அவர்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது” என்ற வரிகள் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆரம்பகால புவிசார் உத்தி, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளபடி, பிரிட்டிஷ்- அமெரிக்க பேரரசுகளின் மிகப் பரந்த நிலப்பரப்பைத் தாண்டி ஐரோப்பா கண்டம், மத்தியக் கிழக்கு, ஆசியாவின் கடல் சார்ந்த பகுதிகள் உள்ளிட்டவற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை விரிவுபடுத்துவது என்பதாகும். இந்தப் புதிய கம்யூனிச எதிர்ப்புப் போரில் உலகெங்கிலும் நடைபெறும், குறிப்பாக கேந்திரமான பகுதிகளில் நடைபெறும், புரட்சிகளை எதிர்த்துப் போராட வேண்டும். வெளியுறவு அமைச்சகம் மட்டுமின்றி, பனிப்போர் காலத்திலும், பனிப்போர் விலகிய காலத்திலும், தொடர்ச்சியாக முன்னணி அரசியல் உத்தி வகுப்பாளர்களான ஜேம்ஸ் பர்ன்ஹாம் (James Burnham), யூஜின் ரோஸ்டோவ் (Eugene Rostow), ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger), ஷீக்னு பிரசன்ஸ்கி (Zbigniew Brezinski), பால் உல்ஃபோவிச் (Paul Wolfowitz) போன்றோரும் மேற்கூறிய கருத்தோடு உடன்பட்டு வாதிடுபவர்களாக இருந்தனர். உலகின் எல்லாப் பகுதிகளிலும் தானே செல்வாக்கு செலுத்த வேண்டும்; அதே போன்று கேந்திரமான வளங்கள், மூலதன இடப்பெயர்வு, நாணயச் செலாவணி, உலக வர்த்தகம் ஆகியவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை வாஷிங்டன் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரான ஏகாதிபத்திய காலகட்டத்தில் அனைத்து விழுமியங்களையும் தொலைத்து விட்டு நிர்வாணமாக நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேராசை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

உலகை ஆளவேண்டும் என்ற அமெரிக்காவின் பேரவா, கொள்கைகளை வகுக்கும் ராணுவ அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் உல்ஃபோவிச் மேற்பார்வையில் வெளியான ராணுவ திட்டமிடல் கையேடு 1994-99 (Defence Planning Guide)  (இதன் சில பகுதிகள் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கையில் அம்பலமாயின) அதிகாரபூர்வ அறிக்கையாக வெளியானபோது உல்ஃபோவிச் கோட்பாடு என அறியப்பட்டது. பொதுவாகவே இது நவீன பழமைவாதத்துடன்  தொடர்புடையது. உலக அரங்கிலிருந்து சோவியத் சோஷலிச குடியரசு மறைந்த பின்னணியில் நிரந்தரமாக ஒற்றைத் துருவ உலகை நிறுவ வெளிப்படையாக அறிவித்த அமெரிக்காவின் புவிசார் உத்தியின் புதிய குறிக்கோள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக மீண்டெழுந்து வரும் எதிர்ச் சக்திகளை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவது என்பதே ஆகும். யூரேஷியாவில் வலுவான, அதிகாரமிக்க, ராணுவ ஆற்றல்மிக்க நாடு ருஷ்யா. அது மட்டுமே அமெரிக்காவை வீழ்த்தும் திறன் படைத்தது. எனவே அந்நாடு நிரந்தரமாகக்  குறிவைக்கப்பட  வேண்டிய நாடாகும்.

1997-ல் ‘மிகப்பெரிய செஸ் பலகை’  (The Grand Chessboard) என்ற தனது நூலில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரசென்ஸ்கியின் கூற்று இது:  “அமெரிக்கா தனது ராணுவத்தை இப்போது நேரிடையாக யூரேஷியா கண்டத்தின்  மூன்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளது. மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகள், மத்திய ஆசியா, மத்தியக் கிழக்கு, கிழக்காசியா, பசிபிக் கடல் பகுதிகள் ஆகியவையே அவை. அதன் குறிக்கோள் புதுவித மேலாதிக்கம் அல்லது புவி மேலாதிக்கம். அதாவது அமெரிக்காவை ஒற்றை உலக சக்தியாக நிலைநிறுத்துவது. புதிய உலக ஒழுங்கமைப்பு என்பது அமெரிக்காவே ஒற்றைத் துருவ சக்தி. அதன் பின்புலமாக அணுஆயுத சக்தி இருக்கும். அமெரிக்கப் பேரரசுக்கு வெளியே மத்திய பகுதிகளில் ஆட்சி மாற்றம் புவிசார் அரசியலில் முக்கியமானதாக உள்ளது. பனிப்போர் காலத்தில் இவையனைத்தும் பொறுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், தற்போது அது தேவையாக மாறியுள்ளது. இங்கே குறிக்கோள் நிலையான ஜனநாயகத்தை நிறுவுவதல்ல. மத்திய ஆசியாவின் முக்கிய பகுதிகளில் இந்த நோக்கம் நிறைவேறுவது சாத்தியம் என எந்த காலத்திலும் கருதப்பட்டதில்லை. மாறாக போக்கிரித் தனமான அரசுகளை அழிப்பது, சிக்கல் நிறைந்த அரசியல் அமைப்புகளை, குறிப்பாக யூரேஷியாவின் இதய நிலப்பரப்பிற்கு வெளியிலுள்ள எண்ணெய் வளமிக்க பெர்சிய வளைகுடா நாடுகள்- இந்நாடுகள் அமெரிக்கப் பேரரசின் விரிவாக்கத்திற்குத் தடையாக, அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கருதப்படுவதால்- அழித்தொழிக்கப்பட வேண்டிய நாடுகள் ஆகும். இந்த மிகப்பெரும் அழிப்புச் செயலுக்கு எதிரான சாட்சியமாக, திருப்பித் தாக்கும் சக்தியாக, இன்று ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) என்ற தீவிரவாத அமைப்பு தலையெடுத்துள்ளது.

சோவியத் மறைவுக்குப் பின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மாபெரும் உத்தி, அதனுடைய ராணுவ திட்டமிடல் கையேட்டில் கோடிட்டுக் காட்டியுள்ளபடி அமைந்தது. அதன் ஆதிக்கச் சிந்தனை  எதிர்பாராத விதமாக மீண்டெழுந்து முதலாளித்துவ ருஷ்யாவுடன் மோதல் போக்கு இறுதியாக எழுச்சி பெறும் என்பதாக அமைந்துள்ளது. இதனை எதிர்பார்த்தே அமெரிக்கா, நேட்டோ கூட்டணி நாடுகள் தங்கள் செயல்பாடுகளை யூரேஷியா, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவுபடுத்தியுள்ளனர். ஃபால்கன் நாடுகள், மத்திய ஆசியா, மத்தியக் கிழக்கு, வட அமெரிக்க நாடுகளுடன் போரில் ஈடுபட்டுள்ளது. கால் நூற்றாண்டாக 1992லிருந்து இன்றுவரை ருஷ்யாவை மூச்சுத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் ஏகாதிபத்திய உத்தி கேந்திர பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட எதிர்ப்பு இயக்கங்களை நசுக்குவது; சீனாவை ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக தடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பதாகும்.

அமெரிக்காவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட 2001 செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் ஜார்ஜ் W. H. புஷ் அறிவித்த ‘புதிய உலக ஒழுங்கமைப்பு’, கூடுதல் தத்துவார்த்த  தீபமாக ஜார்ஜ் W. புஷ் முன்மொழிந்த ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என்பதையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. பூவுலகில் நிரந்தரமாகப் போர் நடைபெறுவதை, மனித நேயம் என்ற பெயரால் தலையிடுவதை இந்த உத்தி நியாயப்படுத்துகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தங்கள் மேலாண்மையை முழுமையாக உறுதிப்படுத்த 2003-ல் ஈராக் மீது நடத்தப்பட்ட போருக்குப் பின்பு, நேட்டோ நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா 2011-ல் லிபியாவிற்குள் அத்துமீறி நுழைந்தும், பின் சிரியா தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், அது ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அதுவே தங்கள் நோக்கம் எனவும் தெரிவிக்கிறது. இருப்பினும் மத்தியக் கிழக்கு, இதர பகுதிகளில் ஆட்சி மாற்றத்திற்கான உண்மையான நோக்கம் 1990வாக்கில் உல்ஃபோவிச், வெஸ்லி க்ளார்க்கிடம் (Wesley Clarak) தெரிவித்தது போல் உறுதியாக இது ஒரு புவிசார் அரசியல் செயல்பாடே ஆகும்.

ருஷ்யாவுடன் புதிய பனிப்போர்?

ஒபாமா ஆட்சி  நேட்டோ கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து உக்ரைனில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு இடைத்தரகராகச் செயல்பட்டது. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒரு சிறு சுயநலக் குழு அமெரிக்காவிற்கு அடிபணியும் தீவிர வலதுசாரி அரசை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதன் மூலம் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி ருஷ்யாவிற்கு எதிராகப் பனிப்போர் துவக்கியுள்ளதை அமெரிக்கா பறைசாற்றியுள்ளது. 2007 வாக்கில் விளாடிமிர் புடின்  ஒருதுருவக் கொள்கை (இப்புவியை அமெரிக்கா மட்டுமே ஆட்சிபுரியும் நிலை) ஏற்புடையதல்ல; இன்றைய உலகில் அது சாத்தியமும் அல்ல என்று கூறிய பின்னர்தான் அவர்களுக்கே உரிய பாணியில் கேந்திரமான பிரச்சார உத்தி பின்பற்றப்பட்டது. மீண்டெழுந்து வந்து இன்றைய முதலாளித்துவத்திற்கு மாறியுள்ள ருஷ்யாவிற்கு எதிராக நடத்தப்படும் நீண்ட எதிர்ப்புரட்சியின் நீட்சியாக அமெரிக்காவின் புவிசார் உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது. ருஷ்யா கிரீமியா பகுதியை ( முன்பு உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்தது) ஓட்டெடுப்பின் மூலம் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தன்னுடன் இணைத்துக் கொண்டது. கிழக்கு உக்ரைன் எல்லைப்புறத்தில் நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்குடன் அமெரிக்கா-சவூதி அரேபியா பதிலியாக இருந்து நடத்தும் ஆசாத்-இன் சிரியா அரசுக்கு எதிரான போரில் தலையீடு செய்தும் அதன் மூலம் தன் மத்தியக் கிழக்கு கூட்டாளியைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ருஷ்யா வெற்றி பெற்றுள்ளது.

கச்சா எண்ணெய் தொடர்பான தொழில்கள், நிதியமைப்புகள் போன்றவற்றால் ஈர்க்கப்படும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கம், தீவிர வலதுசாரிகள் ஆகிய பிரிவினருக்குக் கடமைப்பட்டுள்ள, சற்றே மாறுபட்ட, அமெரிக்க முதலாளித்துவப் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ட்ரம்ப் நிர்வாகம் துவக்கத்தில் ருஷ்யாவுடன் சமாதானமாகப் போகும் நோக்குடன் புவிசார் அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. அதே நேரத்தில் இஸ்லாமிய நாடுகள், ஈரான், வடகொரியா, சீனா ஆகியவை அடிப்படையில் உலக எதிரிகள் என வர்ணித்து அவர்களை எதிர்கொள்ள ஒரு கொள்கையை முன்னிறுத்தியது. இது சாமுவேல் பி. ஹண்டிங்டன் (Samuel P. Huntington) என்பவரது ‘நாகரீகங்களின் மோதல்’ என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானதாகும். (அரசியல் விஞ்ஞானியான ஹண்டிங்டன் பனிப்போருக்குப் பிந்தைய ஆயுத மோதல்கள் நாடுகளுக்கு இடையிலானதாக இல்லாமல், கலாச்சாரங்களுக்கு இடையிலான மோதல்களாகவே இருக்கும் என கணித்திருந்தார். இதன்படி இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்காவிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்) இது உல்ஃபோவிச், ப்ரசென்ஸ்கியின் யூரேஷியாதான் இதய நிலப்பரப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானதாகும். அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகின்ற அதிக செல்வாக்கு கொண்ட பிராந்திய சக்தியான சீனாதான் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக  இருப்பதால், அந்நாடுதான் ஏகாதிபத்திய உத்தியின் முக்கிய இலக்காகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத் தளவாடத் தொழில் பிரிவினரில் பெரும்பகுதியினர், பெண்டகன் தொடங்கி புலனாய்வு அமைப்புகள் வரை முக்கிய பாதுகாப்பு அமைப்புகளின் ஒப்பந்ததாரர்கள் வரை அனைவருமே ருஷ்யாதான் முதன்மையான எதிரி என்ற நிலைபாட்டிலிருந்து புதிய அரசு மாறுபடுவதை கடுமையாக எதிர்க்கின்றனர். இவர்களின் செயல்பாடு எவ்வளவு தூரம் நீண்டுள்ளது எனில் ட்ரம்ப் நிர்வாகம் ருஷ்ய அரசின் நிர்வாகிகளுடன் நடத்திய ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையை எதிரியுடன் உறவு, மறைமுகமான தேசத் துரோகச் செயலாக சித்தரிப்பது வரை சென்றுள்ளது. எனவே புதிய அமெரிக்க அரசு என்றுமில்லாத வகையில் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து பல்வேறு தகவல் கசிவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் தேர்தல் காலத்தில் ருஷ்யாவுடனான தொடர்புகள், தேர்தலுக்குப் பிந்தைய தொடர்புகள் ஆகியவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யூரேஷியாவின் இதய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள, அமெரிக்காவின் முதன்மையான அணு ஆயுத எதிரியாக உள்ள ருஷ்யாவை ஆளும் வர்க்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் ஒரு பிரிவினர் அமெரிக்காவின் முக்கிய எதிரியாக பார்க்கின்றனர். நேட்டோ கூட்டமைப்பின் ஸ்திரத் தன்மை, ஐரோப்பாவை நிரந்தரமாக அமெரிக்காவிற்கு அடிபணிந்து இருக்க வைக்கும் அமெரிக்க உத்தி ஆகியவை ருஷ்யாவுடனான புதிய பனிப்போரின் மீது கட்டப்பட்டதாகும்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு அமெரிக்க பொருளாதாரத்தின் வலிமை, டாலரின் மேலாதிக்கம், வாஷிங்டன் நிதியமைப்பின் மேலாதிக்கம் இவை அனைத்தும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தைச் சார்ந்து இருப்பது என்பதாகும். அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, முக்கிய முதலாளித்துவ நாடுகளின் உற்பத்தி ஆகியவை தேக்கமடைந்திருந்த போதிலும், வேகமாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரத்தின் முன்பு மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைந்து வந்தாலும், வாஷிங்டனிலிருந்து ஒழுங்கற்ற புவிசார் அரசியல் உத்தி வெளிப்பட்டாலும் இன்னமும் கூட அது ஒற்றைத்துருவ ஒழுங்கமைப்பையே தனது குறிக்கோளாகக்  கொண்டுள்ளது. அமெரிக்கத் தலைமையின் கீழ் உள்ள மூவர் அணியான அமெரிக்க-கனடா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய இவர்களின் பலம் புவிசார் அரசியல் மேலாண்மை, ராணுவ, தொழில்நுட்ப மேலாதிக்கம், டாலர் மூலம் நிதி மேலாதிக்கம் போன்றவற்றின் மூலம் இந்த நிலைமையை சரிக்கட்ட அது முயற்சிக்கிறது.

இப்புவியின் மீது முழுமையான மேலாதிக்கம் செலுத்தும் விருப்பத்திற்கேற்ப அணு ஆயுதத் திறனை நவீனப்படுத்துவது என்ற பெயரில் தனது அணு ஆயுதத் தொழிற்சாலையை வலுப்படுத்திடும் போக்கு அமெரிக்காவின் வெறிபிடித்த ஏகாதிபத்திய உத்தியே ஆகும். இந்த உத்தி வலிமை குன்றியுள்ள ருஷ்யா நவீனப்படுத்துவதில், பராமரிப்பதில் அமெரிக்காவை விட பல பத்தாண்டுகள் பின்தங்கியுள்ள  நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்காவை அணு ஆயுதத்தில் தீர்மானகரமான சக்தியாக முன்னோக்கி நகர்த்தும் குறிக்கோளாகும். அமெரிக்காவின் அணு ஆயுத உத்தி என்பது ஏற்கனவே ஊகிக்கப்பட்டபடி ‘பரஸ்பரம் ஒப்புக் கொண்ட அணு ஆயுத ஒழிப்பு’க்கான ஒப்பந்தம் (Mutually Asssured Destruction) சாகடிக்கப்படும்.   (பரஸ்பரம் மோதல்களில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என இருதரப்பினரும் ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தம் இது.  தம்மிடம் உள்ள அணு ஆயுதங்களை முழுமையாகப் பயன்படுத்தினால் தாக்கப்பட்ட, தாக்கிய நாடு ஆகிய இரண்டு நாடுகளுமே அழிவதற்கான வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்த வகையில் ஒரு தடுப்பு முயற்சியாகவே இந்த ஒப்பந்தம் விளங்குகிறது) அதாவது இத்துறையில் நிகழும் குற்றங்களைத் தடுக்கின்ற அனைத்து அமைப்புகளும் ஒழிக்கப்படும் என்பதாகும்.

அமெரிக்காவின் முக்கிய கோட்பாடுகளை வகுப்பவர்கள் அதீதமாக நம்புவது அமெரிக்கா உலகில் அணு ஆயுத மோதல் வெடித்தால் தனது அணு ஆயுத உற்பத்திச் சாலையில் உற்பத்தியான ஆயுதங்களில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்தி முதல் தாக்குதலிலேயே அல்லது எதிர்த் தாக்குதலில் எதிரியின், அது ருஷ்யாவாக இருந்தாலும் சரி, அணு ஆயுதங்களை பெருமளவு அழித்துவிடலாம் என்பதாகும். பெண்டகனில் உள்ள போருக்கான திட்டமிடுவோர் அமெரிக்கா தற்போது அணு ஆயுதத் திறனில் மேலாண்மை மிக்க சக்தியாக உள்ளது என நம்புகின்றனர். 1945-ல் அமெரிக்க அதிபர் ட்ரூமென் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டு வீச உத்தரவிட்டதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியானதும், அது ஒரு ராணுவ முடிவு என்பதை விட அரசியல் முடிவாகவே இருந்ததோடு, அது பனிப்போர் காலத்தில் நடைபெற்ற உண்மையானதொரு ராணுவ நடவடிக்கையுமாகும். அதற்குப் பிறகு தற்போது எதிரி மீது அணு ஆயுதத் தாக்குதல் சாத்தியம் என முதன்முறையாக எண்ணிப் பார்க்க முடிகிறது. பரஸ்பரம் ஒப்புக் கொண்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் காலி செய்யப்படவுள்ள நிலையில், அண்மையில் நிகழவிருக்கும் அபாயமான அணு ஆயுதப் பதட்ட காலத்தில் எதிர்த்தரப்பினர் கூட முதல் தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவால் தாங்கள் அழிக்கப்படுவோம் என்ற அச்சத்தையும் மீறி அத்தகைய முதல் தாக்குதலினால் தங்களுக்கு பெரும்பயன் ஏற்படக்கூடும் என்பதால் அத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவர்.

இவ்வுலகில் அதிக பலம் கொண்ட அரசுகள் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக தங்களுக்கிடையே மோதிக் கொள்வது ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பு என லெனின் குறிப்பிட்டுள்ளார். ஒரு முதலாளித்துவ அரசு, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, 21ஆம் நூற்றாண்டில் ஒரு ஒற்றைத் துருவ உலகம் அல்லது திறமையான ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பை உருவாக்க முனையும்போது மேலே கூறிய அபாயம் இரண்டு மடங்காக உயரும்.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்கள், படையெடுப்பு, எதிர்க்கிளர்ச்சி போன்றவற்றின் மூலம் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, உலகிலேயே மிகவும் நாசகரமான நாடு என்பதை அமெரிக்கா வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. அதன் ரத்தவெறி கொண்ட மரபு இன்றளவும் தொடர்கிறது. தொழிலாளர்களின் வார விடுமுறை நாட்களில் ஒரு நாள், அதாவது 2016 செப்டெம்பர் 3-5 தேதிகளுக்கு  பெரிய இஸ்லாமிய நாடுகளான ஈராக், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் மீது குண்டுகளை வீசியும், ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியது. 2015-ல் ஈராக், சிரியா மீது 22,000 குண்டுகளை அது பொழிந்துள்ளது. அமெரிக்காவிற்கு எதிரான எந்தவொரு நாடும் அமெரிக்காவின் இந்த வன்முறையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

புரட்சி: மனிதனின் எதிர்காலம்

வர்க்கப் போராட்டங்களைப் போலவே ஏகாதிபத்திய எதிர்ப்பு காரணமாகவும் 20ஆம் நூற்றாண்டில் புரட்சிகள் வெடித்தன. லெனின் அவதானித்தது போலவே பெரும்பாலான நேரங்களில் ஏகாதிபத்திய உலக அமைப்பில் வலிமை குன்றிய கண்ணிகளில்தான் இந்தப் புரட்சிகள் வெடித்தெழுந்தன. அவை தவிர்க்க இயலாமல் பெருமுதலாளித்துவ சக்திகளால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புரட்சி சக்திகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிறு எழுச்சியும் கூட உலக முதலாளித்துவ அமைப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டு கொடூரமான வன்முறை மூலம் நசுக்கி ஒடுக்கப்பட்டது. ரொனால்டு ரீகனின் ராணுவம் 1983-ல் குட்டித் தீவான க்ரெனடா மீது படையெடுத்தது. நிகரகுவாவில் சாண்டினிஸ்டா அரசை எதிர்த்து மறைமுகப் போர் தொடுத்தது ஆகியவை இன்றளவும் சாட்சிகளாக உள்ளன. போர்களில் பெருமளவிலான மனித உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியின் மீது குற்றம் சாட்டுவதற்கு மாறாக மேலாதிக்க சிந்தனைகள் புரட்சியையே குற்றம் சாட்டுகின்றன. இதன் மூலம் குற்றத்திற்கு எதிர்ப்புரட்சியே காரணம் என்பதை அவர்கள் வரலாற்றிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடுகின்றனர்.

சிலியில் பாப்புலர் யூனிட்டி அரசின் தலைவராக ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடார் அலெண்டே (Salvador Allende) சிலியில் சோஷலிசத்தை கொண்டுவருவதாக அறிவித்தார். அதன் முதல் கட்டமாக, அந்நாட்டின் பெரு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த அமெரிக்க பெருநிறுவனங்களின் சொத்துக்களை அந்த அரசு தேசியமயமாக்கியது. 1970-ல் மார்க்சிய-சோஷலிச சார்பு இதழான மன்த்லி ரிவ்யூவின் வெளியீட்டாளர்களான ஹேரி மக்டாப் (Harry Magdoff), பால் ஸ்வீசி (Paul Sweezy) ஆகியோரை அதிபர் அலெண்டே தனது அரசின் துவக்க விழாவிற்கு அழைத்திருந்தார். மக்டாப், ஸ்வீசி அலெண்டேயின் நீண்ட நாள் நண்பர்களாவர். துவக்கவிழா நிகழ்ச்சியில், அமெரிக்காவிற்கும் சிலி ராணுவத்திற்கும் உள்ள தொடர்பு, அதனால் ஏற்படக் கூடிய அபாயம், இதன் தொடர்ச்சியாக வாஷிங்டனால் ஏற்பாடு செய்யப்படும் ஆட்சிக் கவிழ்ப்பு பிரிட்டோனிய காவலர்களால் நிகழ்த்தப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அவர்கள் அலெண்டேவை எச்சரித்தனர். தற்போதுள்ள அமைப்பிற்கு குந்தகம் ஏற்பட்டால், ஏகாதிபத்தியம் எத்தகைய சட்டங்களையும் மதிக்காது எனவும் அவர்கள் எச்சரித்தனர். உண்மையிலேயே மூன்றாண்டுகளுக்குப் பின்னர் ஜெனரல் அகஸ்டோ பினோசெட் (Augusto Pinochet) மூலம்  அலெண்டேவும் ஆயிரக் கணக்கானோரும் உயிரிழந்து, ரத்த வெள்ளத்தில் ஆட்சி கைப்பற்றப்பட்டது.

இவையனைத்தும் உணர்த்தும் வரலாறு, புரட்சிகள் உருவானாலும் கூட, அவை எதிர்ப்புரட்சியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதாகும். உண்மையிலேயே கடந்த நூற்றாண்டின் புரட்சியையும் எதிர்ப்புரட்சியையும் மதிப்பீடு செய்யும்போது எதிர்ப்புரட்சியின் வலிமையையும் வீரியத்தையும் மிகுந்த அழுத்தத்துடனேயே மதிப்பீடு செய்ய வேண்டும். போராட்டங்களையும் தவறுகளையும் விரிவான வரலாற்று இயங்கியல் அடிப்படையில் பார்க்க வேண்டும்.

மேற்குலக மேலாதிக்கச் சிந்தனை, வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் தொடங்கி முக்கிய செய்தி ஊடகங்கள் வாயிலாக 1917 ருஷ்யப் புரட்சி துவக்கம் முதல் இறுதிவரை ஒரு தோல்வி என்பதாகவே சித்தரிக்கிறது. திறமையின்மை, சரி செய்யமுடியாத கோளாறுகள் போன்றவற்றால் அது வீழ்ந்ததாகவும் கூறப்பட்டது. அதே மூச்சில், அமெரிக்காவின் வலிமை, ராணுவ பலமே பனிப்போரில் வென்றது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வரலாற்றுச் சோகங்கள், சமூக-பொருளாதார முரண்கள் நிறைந்ததுதான்  ருஷ்யா என்பது மறுக்கமுடியாத உண்மை. ருஷ்யப் புரட்சி காலகட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட மனித ஆற்றல் மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் ஆயுதமும் பெற்ற ருஷ்ய வெண்படையுடன் மோதி, சீர்குலைவை உருவாக்கிய உள்நாட்டுப் போரில் அனைத்து சக்திகளையும் இழந்து நின்றது.

அதுமட்டுமின்றி, சோவியத் யூனியன், அதன் வரலாற்றில் அசாதரணமான தொழில் வளர்ச்சி கண்டது. தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகளில் பொதுவாக முன்னேற்றம் கண்டது. உலகின் இதர பகுதிகளில் கிடைக்கப் பெறாத பல சலுகைகள் மக்களுக்குக் கிடைத்தன. இரண்டாம் உலகப் போரில் மேற்கத்திய நாடுகளைக் காப்பாற்றியதும் சோவியத் யூனியன்தான். ஸ்டாலின்கிராடில் வெர்மா (Wehrmacht)வின் (முப்படைகளையும் இணைத்த ஜெர்மனியின் படை அமைப்பு) திடீர் தோல்வி, செம்படையின் மேற்கு நோக்கிய முன்னேற்றம் ஆகியவையே இந்த வெற்றிக்குக் காரணம். அந்தப் போர் இதுவரை கண்டிராத வகையில் அதிக எண்ணிக்கையில் மனித உயிர்களை பலி வாங்கியது. சோவியத் யூனியன் மட்டுமே 2 கோடி மக்களை இந்தப் போரில் இழந்த போதிலும் நிலைத்து நின்று மூன்றாம் உலக நாடுகளில் விடுதலை இயக்கங்களைத் தூண்டிவிட்டது. சோவியத் முகாமின் வளர்ச்சி, அந்தப் பகுதியில் ஏற்பட்ட பொருளாதார, தொழில் நுட்ப வெற்றிகள் உலக அரங்கில் சோவியத் யூனியன் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக 1970வரை கருதப்பட்டது. சில திறமையின்மைக் குறைபாடுகளைத் தவிர்த்து, பொருளாதாரத்தில் அதிகாரத்துவ மேலாண்மை வெளிப்படையாகச் செயல்பட்டதையும் தாண்டி, முதலாளித்துவம் அல்லாத அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டுச் செயலாற்றி வேறுபல வழிகளில் சமூக வளர்ச்சியை அது வெற்றிகரமாக்கியது.

ஆனால் சோவியத் யூனியன் சோஷலிசப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் சோவியத் யூனியன் சோஷலிசப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் தோல்வியடைந்தது. புரட்சியின் வெற்றிக்குப் பிறகு உருவான சமூக அமைப்பில் இருந்த சமமற்ற தன்மையால், தனக்கான  ஆளும் அதிகார வர்க்கத்தை அது உருவாக்கிக் கொண்டது. கிழக்கு ஐரோப்பா சுதந்திரமான வளர்ச்சி பெறுவதை சோவியத் யூனியன் உறுதியோடு மறுதலித்தது.

இறுதியில் அது தனது உள்ளார்ந்த ஆற்றலை இழந்ததற்குக் காரணம் (தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, புதிய சிந்தனை கொண்ட மனித ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுதல் போன்ற) செறிவான வளர்ச்சிக்கு மாறாக (கட்டாய உழைப்பு, ஆதாரங்கள்)ஆகியவற்றைக் கொண்ட விரிவான வளர்ச்சியை அது சார்ந்து இருந்ததே ஆகும். ராணுவம், அரசியல், பொருளாதார தளங்களில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, பல பத்தாண்டுகள் பின்தங்கியிருந்த நிலையில், அவற்றை எதிர்கொள்வதற்காக தன் சக்திக்கு மீறிய வகையில் பெருமளவிலான ஆயுதப் போட்டியை சந்திக்க வேண்டிய கட்டாயம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டது. அவர்களின் மேம்போக்கான வாக்குறுதிகளையும் தாண்டி, மிக்கயீல் கோர்ப்பசேவின் தவறான புரிதலில், கடுமையான அழிவை ஏற்படுத்தக் கூடிய க்ளாஸ்நாஸ்ட் (Glasnost ) (வெளிப்படைத்தன்மை), பெரெஸ்த்ரோய்க்கா (Perestroika)  (மறுசீரமைப்பு) ஆகிய கொள்கைகள் அந்த அமைப்பை புனரமைப்பதற்கு மாறாக சீர்குலைக்கவே செய்தது. பெர்லின் சுவர் தகர்ப்பு கிழக்கு ஐரோப்பா கைவிட்டுப் போனது என்பதை அறிவித்த போதிலும், சோவியத்தின் வித்தியாசமான ஆளும் அதிகார வர்க்கம்தான் இந்த அமைப்பு இறுதியில் தகர்வதற்கான சாட்சியமாக இருந்தது. சோவியத் அதிகார மையத்தின் சலுகை பெற்ற, ஊழல் நிறைந்த, புலனாய்வு அமைப்பு போரிஸ் எல்ஸ்டினுடனும், மேற்கத்திய நாடுகளுடனும் கூட்டு சேர்ந்து, புரட்சிக்குப் பின் உருவான சோவியத் அரசை மேலிருந்து கீழ் வரை தங்களின் தனிப்பட்ட நலன்கள், வர்க்க நலன்கள் முதலாளித்துவத்தின் கீழ் பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில் முற்றாக அழித்தனர்.

இவை அனைத்திற்கும் அப்பால், முதலாளித்துவ அமைப்பிலிருந்து உடைத்துக் கொண்டு வெளிவந்த முதல் பெரிய சோஷலிச நாடான சோவியத் ருஷ்யாவின் அனுபவங்கள் தொடர்ந்து கவனத்தை ஈர்ப்பதாக, 21ஆம் நூற்றாண்டில் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. மாறுபட்ட வகையில் உருவாகியிருந்த போதிலும், அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற எதிர்ப்புரட்சியின் ஆபத்தை சந்தித்த போதிலும், ஹ்யூகோ சாவேசின் பொலிவாரிய புரட்சி சோவியத் மாதிரிக்கு அப்பாலும் நிகழும் என்று கற்பனை செய்ய வழிவகுத்தது. பொருளாதாரத்தில், தொழில்நுட்பத்தில், கலாச்சாரத்தில் சோவியத் ருஷ்யாவில் நிகழ்த்தப்பட்ட  சாதனைகளை வரலாற்றின் நினைவிலிருந்து அவ்வளவு எளிதாக அகற்றிவிட முடியாது.

20ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் உலக முதலாளித்துவ நெருக்கடி முக்கிய முதலாளித்துவ நாடுகளையும் சுற்றி வளைத்தது. அந்நாடுகள் இந்த நெருக்கடியில் சிக்கி 1970லிருந்து பொருளாதார மந்தத்தை சந்தித்து வருகின்றன 1980-90 நிதிக்குவிப்பு ஒரு பக்கம் எதிவினை ஆற்றினாலும், 2007-09 வாக்கில் குடியிருப்பு நீர்க்குமிழி வெடிப்பிற்குப் பின்னர் அது முற்றிலுமாகத் தகர்ந்தது. பெரும் நிதிச்சிக்கல் உருவானதில் இருந்து, பொருளாதார மந்தம் முழுமையாகத் தாக்கிய பிறகு, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின், கீழ் நடுத்தர வர்க்கத்தின் நிலை வீழ்ச்சியடைந்தது. என்றுமில்லாத அளவிற்கு அசமத்துவம் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த முடிவில்லாத சிக்கல் முக்கிய முதலாளித்துவ நாடுகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலைத்துள்ளது. பல்வேறு முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கம் இந்த நிலைமைகளுக்கு எதிராக வினையாற்றும்பொருட்டு இந்த அமைப்பை நிலைத்திருக்கச் செய்ய தீவிர வலதுசாரிகளை உள்ளிழுத்து, அவர்களை தங்களின் தாங்கு தளங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே நவீன தாராளமயம், நவீன பாசிசம் (மைய வலதுசாரிகள்/தீவிர வலதுசாரிகள்) கூட்டணியாக உருவாகியுள்ளது. முதலாளித்துவத்திற்கு ஆபத்து என்ற காரணத்தால் அமெரிக்காவில் அறிவியல் நிராகரிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றம் குறித்த அறிவியல் பார்வை நிராகரிப்பு ட்ரம்ப் பின் வெள்ளை மாளிகை அரசின் நிலைப்பாடாக உள்ளது.  ‘காரணத்தை அழிப்பது’ என்பது இவ்வாறு முழுமை பெற்றுள்ளது.

வர்க்கப்போர் வரலாற்றில் பிற்போக்கு சக்திகள் வலுப்பெற்று வந்தது இதற்கு முன்பும் நிகழ்ந்ததுதான். எனினும் அவை புதிய புரட்சி அலைகள் மேலெழும்பி வரவும் வழிவகுத்தன. 1848 ஐரோப்பியப் புரட்சிக்குப் பின், ஏங்கெல்ஸ் “ஜெர்மனி : புரட்சியும் எதிர்ப்புரட்சியும்”  (Germany: Revolution and Counter-Revolution) என்ற தனது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

“கண்டங்களில் புரட்சிகரமான கட்சி அல்லது கட்சிகள் போரின் அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்திருப்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அதனால் என்ன…? எங்கு புரட்சி தோன்றுகிறதோ அங்கு ஏதோவொரு சமூகத் தேவை இருந்திருக்கும் என்பதை ஒவ்வொருவரும் நன்கறிவர். வெளி அமைப்புகள் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ள, அதைத் தடுத்திருக்கக் கூடும். நாம் தோல்வியைத் தழுவியிருந்தாலும் வேறு வழியில்லை; மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்கத்தான் வேண்டும்..”

வரலாற்று நிலைமைகள் பலமுறை மாற்றங்களைக் கண்டிருப்பினும் இதே உணர்வுதான் தொடர்ந்து நம் மனங்களில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. சமூக மாற்றத்தின் தேவை அதிகரித்துள்ள இன்றைய நிலையில், 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப, புதிய, வலிமையான, புரட்சிகர சோஷலிசம் கட்டமைக்கப்படுவது முதலில் இருந்து தொடங்கப்பட வேண்டும்.உலகம் முழுவதும் பிரம்மாண்டமான, ஜனநாயகபூர்வமான, சமத்துவமான, சுற்றுச்சூழல் பாதுகாப்பான புரட்சிகர மாற்றம்தான் உண்மையான மனிதர்களின் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமையும். இதற்கு மாறான அனைத்தும் மனிதகுல அழிவிற்கே இட்டுச் செல்லும்.

 One response to “புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – 1917முதல் 2017 வரை”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: