மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


உலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி!


பி. ராமச்சந்திரன் (செப். 2007, மார்க்சிஸ்ட்)

மீரட் சதி வழக்குக்கு பின் ஓராண்டிற்குள் கம்யூனிஸ்ட்
இயக்கத்தின் பணிகள் தீவிரமடைந்தது. திடீரென
1934இல் மே மாதம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கட்சி மீது தடை உத்தரவை திணித்தனர். வளரும் இயக்கத்தை முடமாக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். மறு பக்கத்தில் மீரட் சதி வழக்கிலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களிலும், கம்யூனிஸ்ட் இயக்கம் சாதூரியமாக ஐக்கிய முன்னணி தந்திரத்தை பரவலாக அமல்நடத்த வேண்டும் என்ற முடிவு செய்த கட்சி மிக வேகமாக பரவவும், வளரவும் தொடங்கியது. தடை உத்தரவு என்பது பல இடங்களிலும், பெயரளவுக்குத்தான் அமல் செய்ய முடிந்தது. ஆனால் எல்லா மட்டங்களிலும் இரகசிய ஸ்தாபனங்களை கட்டும் பணிகள் முறையாக நடந்தேறின. அத்துடன் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஐக்கிய முன்னணிக்கு வரவேண்டிய கட்சிகளுடன் பல இடங்களிலும், அரங்கங்களிலும் கட்சி அமைப்புகள் நெருக்கமான தொடர்புகளை வைத்துக் கொண்டனர். அதே சமயம் வெகுஜன அரங்கத்தை கட்டும் பணிகளில் தீவிரமாக இறங்கினர். 1934இல் இருந்து 1942 வரையான கால கட்டத்திலும், இந்த முறையில் ஸ்தாபனப் பணிகள் உருவாக்கம், தொழிலாளி, விவசாயி, மாணவர் இயக்கங்கள் கட்டும் பணிகள் காரணமாகவும் பரவியது. நடைபெற்ற பல மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பிரிட்டிஷ் அடிவருடிகள் படுதோல்வி அடைந்து கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன் காங்கிரஸ் அமைச்சரவைகள் பல மாகாணங்களில் உருவாகின. இந்த சூழ்நிலையில் கட்சியின் வேகமான வளர்ச்சிக்கும், விஸ்தரிப்புக்கும் பேரூதவியாக அமைந்தது.
யுத்தத்தின் தன்மையில் பெரும் மாற்றம்
இரண்டாம் உலக யுத்தம் துவங்கிய பின்னர் 1941 – 42 காலத்தில் உலக அரசியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. ஐரோப்பாவில் சில நாடுகளை கைப்பற்றினர். 1942 ஜூன் 22ஆம் தேதியன்று நாஜி படைகள் முழு பலத்துடன் முதல் சோசலிஸ்ட் நாடான சோவியத்யூனியனுக்கு எதிராக யுத்தத்தில் குதித்தனர். திடீர் தாக்குதல் காரணமாக துவக்க கட்டத்தில் நாஜி படைகள் வேகமாக முன்னேறியது. மாஸ்கோ நகரத்தையே முற்றுகையிடும் அளவில் முன்னேறியது. பிற்போக்கு சக்திகளின் தலைவனாக விளங்கிய ஜெர்மன் படைகளின் இந்த தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள முற்போக்காளர்கள், தேச பற்றுடையவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் ஆகிய அனைவருக்கும் மிகப்பெரிய சவாலாகவே அமைந்தது. தொழிலாளி வர்க்கம் காலம் காலமாக கடுமையான போராட்டங்களில் இறங்கி, வெற்றி பெற்று உருவாக்கிய முதல் சோசலிஸ்ட் நாட்டிற்கு பேரபாயம் ஏற்பட்டதானது. எல்லா கம்யூனிஸ்ட்டுகளுக்கும் பெரும் சவாலாக அமைந்தது. தொழிலாளி வர்க்கத்தின் முதல் கோட்டையான சோவியத் யூனியனியனை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் தீவிரமாக போர்க்களத்தில் பல்வேறு வகையில் குதித்தனர். இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கும் அதிர்ச்சியும், ஆத்திரமும் பெருமளவில் ஏற்பட்டது. சோவியத் யூனியனை (சோசலிசத்தின் முதல் கோட்டை) அழிக்க விடக்கூடாது என்ற தீவிரமான உறுதிப்பாட்டுடன் களம் இறங்கினர்.
சோவியத்திற்கு ஆதரவாக நின்றனர். நாஜி எதிர்ப்பு யுத்தத்தை “மக்கள் யுத்தம்” என்று கருதினர். இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான எண்ணப் பெருக்கு முழுமையாக சோசலிசத்தை பாதுகாக்கும் இயக்கத்தில் பங்கேற்க முடியாத நிலைமை இருந்தது.
இந்த நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான கசப்பான எண்ணங்கள் இருப்பினும் நாஜி தோற்கடிக்கப்பட வேண்டுமென்பது கட்சியின் கருத்தாக இருந்தது. இது ஒரு சர்வதேச கடமையாகவும் இருந்தது. சர்வதேச கடமைகளுக்கும், தேசிய நிலைமைகளுக்கும் உள்ள அரசியல் முரண்பாட்டிற்கு தீர்வுகாண வேண்டிய நிலைக்கு கம்யூனிஸ்ட் கட்சி தள்ளப்பட்டது.
ஜப்பானிய ஆக்கிரமிப்பு
ஜெர்மன் படைகளுடைய தாக்குதல்கள் கூர்மையான கொடூரமான தன்மையையும், கட்சி நினைவில் கொள்ள வேண்டி யிருந்தது. அநேகமாக ஐரோப்பா முழுவதிலும் அடிமைப் படுத்திய ஜெர்மன் படைகள் மற்ற நாடுகளையும் தன் காலடியில் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்ததும், உலக நிலைமைக்கு ஒரு சவாலாக இருந்தது. உலகம் முழுவதையும் ஜெர்மனியின் ஆதிக்கத்தில் கொண்டு வந்து ஜெர்மனியை மாபெரும் உலக வல்லரசாக மாற்றும் நோக்கத்தை நாஜிகள் மறைத்து வைக்கவில்லை. இந்த பாதையில் முன்னேறிய ஜெர்மன் படைகளும் துருக்கி நாட்டையும் தாண்டி ஈராக்கையும் கைப்பற்றி அடுத்ததாக ஈராக்கிலிருந்து ஈரான் வழியாக இந்தியாவுக்கு முன்னேறுவது என்ற திட்டத்தையும் பகிரங்கமாக அறிவித் திருந்தனர். இந்த பேரபாயம் வளரக்கூடிய சூழ்நிலையில், ஒரு திடீர் திருப்பமாக 1941 டிசம்பரில் ஜப்பானிய ஏகாதிபத்தியம் பெருமளவில் ஆசியா கண்டத்தை தாக்கியது. ஏற்கனவே 1937 அன்று ஆக்கிரமிப்பு நடத்தி சீனாவின் கணிசமான பகுதியை கைப்பற்றி வைத்திருந்தது. இது போதாதென்று 1941இல் அமெரிக்காவுக்கு எதிராக போர் பிரகடனத்தை செய்தது வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் மீதெல்லாம் மின்னல் தாக்குதலை நடத்தி ஒரு சில மாதங்களில் பர்மாவையும், தங்களுடைய பிடியில் கொண்டு வந்தது. பர்மாவிலிருந்து சில ஜப்பானி படைப்பிரிவுகள் சிட்டகாங், இம்பால் வழியாக இந்தியாவிற்குள்ளேயும் நுழைந்தது. வேகத்தில் முன்னேறிய ஜப்பானிய படைகளுக்கு முன் இந்நாடுகளில் எல்லாம் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ் படைகள் திகைப்பில் சிக்கி பல இடங்களில் எதிரிகள் முன் சரணாகதி ஆகும் நிலையும் உருவாயிற்று.
இந்த வேகமான பாய்ச்சலில் ஜப்பானிய படைகள் இந்தியாவுக்குள் நுழைந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக பெரும் தாக்குதலை நடத்தி இந்தியாவின் ஒரு பகுதி ஜப்பானிய பிடிப்பில் அமரும் நிலையும் ஏற்பட்டது. ஆக, மேற்கிலிருந்து ஜெர்மன் படைகளும், கிழக்கிலிருந்து ஜப்பானிய படைகளும் சேர்ந்து இந்தியாவை படுபயங்கரமான பாசிச பிடிப்பில் சிக்க வைக்கும் சூழ்நிலை எதார்த்தமாக இருந்தது.
நாட்டை இந்த பாசிச தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு பெயரளவுக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இருந்தபோதிலும், அக்கடமையை அவர்கள் செய்யும் நிலையில் இருக்கவில்லை. ஜப்பானிய – ஜெர்மன் படைகளை தோற் கடிப்பது என்பதைவிட தங்களுடைய ஆதிக்கத்தில் இந்தியாவை உறுதிப்படுத்துவது என்ற குறுகிய நோக்கத்துடன்தான் பிரிட்டிஷார் செயல்பட்டனர்.
கட்சியின் புதிய நிலைபாடு
இந்த இக்கட்டான நிலையில் ஜெர்மன் – ஜப்பானிய ஏகாதிபத்திய தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாப்பதுதான் இந்த கட்சியின், மக்களின் பெரும் கடமையாகும் என்ற முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வந்தது. சோசலிஸ்ட் முகாம் முற்றிலுமாக அழிந்து இந்தியா பாசிச சக்திகளின் தளமாக மாறுவதை தடுக்க வேண்டும் என்ற ஆழமான முடிவுக்கு கட்சி வந்தது. (இந்த முடிவை மேற்கொள்வதற்கு பிரிட்டன் மற்றும் பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனைகளையும், தோழமை பூர்வமான அரசியல் வழிகாட்டுதல்களையும் அளித்தது என்று இங்கு கூறவேண்டும்.) உலக மக்கள் நடத்தும் மகத்தான மக்கள் யுத்தத்தின், “ஒரு பகுதியாகவே இந்திய மக்களின் போராட்டம் இருத்தல் வேண்டும் என்ற சரியான கருத்திற்கு பெரிய விவாதத்திற்கு பிறகு கட்சி வந்தது”.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஜப்பானிய தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாப்பது என்ற நோக்கத்துடன் தங்களுடைய பிடிப்பினை பாதுகாப்பது என்ற நோக்கத்தையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. அதனால், அச்சமயம் ஜப்பானிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான தாக்குதலின் கூர்முனையை பிரிட்டிஷார் ஓரளவுக்கு குறைத்தனர். பல நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இது பிரிட்ஷாரின் தந்திரம். அதே நேரத்தில் 700க்கும் அதிகமான முக்கியமான கம்யூனிஸ்ட்டுகளை சிறையிலேயே வைத்திருந்தனர். அவர்களில் 105 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாகவே இருந்தனர். இவ்வாறு அரைகுறையான சில சலுகைகளை அளித்தும் அதே நேரத்தில் அடக்குமுறையை பல முறைகளிலும் நீடிக்க வைக்கும் தந்திரத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்தனர்.
யுத்த முயற்சியின் நல்லம்சங்களுக்கு ஆதரவு அளிப்பதுடன் பிரிட்டிஷார் இந்திய மக்கள் மீது சுமத்திய யுத்தகால சுமைகளை எதிர்ப்பது தொடர்ந்து நடைபெறும் அடக்குமுறைகளை உறுதியுடன் எதிர்ப்பது போன்ற அம்சங்கள் கொண்ட நடைமுறை தந்திரத்தை கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்தது. இதன் பயனாக பல துறைகளிலும் கட்சி பகிரங்கமாக வேலை செய்யும் வாய்ப்பினை பயன்படுத்தி கட்சி ஸ்தாபனத்தையும், வெகுஜன அமைப்புகளையும் கட்டும் பணிகளில் ஓரளவிற்கு முன்னேறிக் கொண்டது.
ஆட்சியாளர்களின் கொள்கைகள், நடைமுறைகள் காரணமாக நாடு முழுவதும் உணவு, மருத்துவம், துணிமணிகள் போன்றவற்றிற்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணியில் கட்சி பெருமளவில் இறங்கியது.
நீண்ட வருடங்களாக தடை செய்யப்பட்டிருந்த நிலை மாறி ஓரளவிற்கு பகிரங்கமாக செயல்படும் வாய்ப்பு கிடைத்ததினால் ஏராளமான தோழர்கள் மும்முரமாக வேலை செய்யத் துவங்கி, விவசாயிகள் அரங்கம், தொழிற்சங்க அரங்கம் மாணவர் அரங்கம் போன்ற வெகுஜன அரங்கங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆகஸ்ட் 5 இயக்கம் – காங்கிரஸ் அரசியல் சூதாட்டம்
பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை முதன்மைப் படுத்தி, கட்சி தன்னுடைய தந்திரோபாயங்களை வகுத்த நேரத்தில், காங்கிரஸ் தலைமையானது யுத்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியாளர்களுடன் அதிகாரத்திற் கான பேரம் பேசும் வாய்ப்பாக கண்டது. திடீரென பிரிட்டி ஷாருக்கு எதிரான தீவிரமான போராட்டம் நடத்துவதாக மிரட்டி பிரச்சாரம் செய்தன. ஆயினும், ஒரு நீடித்த பயனுள்ள வகையில் போராட்டத்தை நடத்துவதற்கான எந்த திட்டத் தையும் காங்கிரஸ் தலைமை வகுக்கவில்லை. எதிரியின் பலகீனத்தை பயன்படுத்தி பேரம் பேசும் தந்திரமாகவே அவர்கள் போராட்டத்தை பற்றி பேசினார்கள். ஆயினும், அதைப் புரிந்து கொண்ட பிரிட்டிஷார் திடீரென காந்திஜி உட்பட ஏராளமான தலைவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் சிறைப்பட்டனர். ஆனால், இந்த தாக்குதலை எதிர்த்து முறியடிப்பதற்கான எந்த பாதையையும், காங்கிரஸ் தலைமை காட்டவில்லை.
மக்கள் மத்தியில், கடும் கோபம் பொங்கி எழுந்தது. ஆயினும், அவர்களுக்கு பயனுள்ள எந்த வழிமுறைகளையும் தலைமை காட்டவில்லை.
இந்த நேரத்தில், மக்களுடைய ஆதரவைப் பெற்று ஜப்பானிய எதிரிகளை முறியடிக்கும் கடமையை செய்யும் வகையில், “கைதானவர்கள் அனைவரும் விடுதலை செய்யப் பட்ட வேண்டும்” என்றும் மக்களின் ஒத்துழைப்பு பெறுவதற் கான காரியங்களை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. அதே நேரத்தில் போர் நெருக் கடியில் பாதிக்கப்பட்ட எல்லா பகுதி மக்களுக்கும் நிவாரணம் அளிப்பதற்கான கோரிக்கைகளை முன் வைத்து ஆங்காங்கு மக்களை திரட்டும் பணியில் கட்சி ஈடுபட்டது. எல்லா தேச பக்தர்களுடனும் கட்சி நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியது.
இந்தப் பயனுள்ள பணிகள் காரணமாக கட்சியின் செல்வாக்கும் படிப்படியாக வளர்ந்தது என்பதையும் பார்க்க வேண்டும். கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 1942இல் 150இல் இருந்து 16,000ஆக இரண்டாண்டுக்குள் உயர்ந்தது மட்டுமின்றி தொழிற்சங்க அரங்கத்தில் உறுப்பினர் எண்ணிக்கை நான்கு லட்சமாகவும், விவசாயிகள் அரங்கத்தில் நான்கு லட்சமாகவும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் மாணவர், கலை – இலக்கியம் போன்ற அரங்கங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது. கட்சி நடத்தும் பிராந்திய மற்றும் அகில இந்திய பத்திரிகைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
தேசிய போராட்டத்திற்கு, “ஆதரவு அளிக்கவில்லை என்ற கடுமையான விமர்சனம்” ஒரு பகுதி மக்கள் மத்தியில் இருந்தபோதிலும், தொடர்ந்தார்போல் “தலைவர்களை விடுதலை செய்!”, “தேசிய பாதுகாப்பிற்காக தேசிய சர்க்கார் அமைக்க வேண்டும்”, போன்ற கோஷங்களுடன் நடத்திய இயக்கங்கள் காரணமாகவும் இடைவிடாத முறையில் கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டத்தின் விளைவாகவும், கட்சியும், அமைப்புகளும் வளர்ந்தன என்பதுதான் உண்மை.
இந்த வளர்ச்சியின் பின்னணியில்தான் 1943 மே மாதம் 23 முதல் ஜூன் 1 வரை கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு மும்பையில் நடத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக கருதப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பகிரங்க மாநாடாக அமைந்த முதல் மாநாடானது கட்சி முழுமையும் உற்சாகப்படுத்
தியது மட்டுமின்றி, அரசியல் கட்சியின் செல்வாக்கினையும் உயர்த்தியது.
முதல் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகள் (சட்ட திட்டங்கள்) அங்கீகரிக்கப்பட்டது. அதுநாள் வரை கம்யூனிஸ்ட் சர்வதேசீயம் வகுத்த பொதுவான விதிமுறையை கட்சி பின்பற்றியது.
தற்சமயம் நிலவி வந்த அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ற அரசியல் தீர்மானமும் ஏற்பட்டது. நடைமுறை பிரச்சனைகளில் வழிகாட்டும் தீர்மானங்களும் ஏற்கப்பட்டன. அன்றைய நிலைமைகளை சமாளிக்க இவையனைத்தும் பயன்பட்டது.
முதல் முறையாக பகிரங்க மாநாட்டில் மத்திய கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது இம்மாநாட்டில்தான். ஆக, முதல் மாநாடானது பல முறைகளிலும் வளர்ந்து வந்த கட்சிக்குள் பெரிய அளவில் உற்சாகத்தை உருவாக்கியது. அது பிற்காலத்தில் பெருக்கெடுத்து நாட்டையே உலுக்கியெடுத்த மாபெரும் எழுச்சிக்கு களத்தை தயாரித்தது என்றே கூறலாம்.
ஆயினும் அன்றைய அரசியல் நிலைபாட்டின் பெரிய குறைபாடுகள் கட்சியின் பாத்திரத்தை பலமுறைகளிலும் பாதித்ததாக அடுத்த 2வது காங்கிரசில் விமர்சனங்களும் பெரிய அளவில் எழுந்தன.

அடுத்த கட்டுரை: http://marxist.tncpim.org/2-nd-party-congress/



One response to “உலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி!”

  1. […] கட்டுரைஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல்… chakravarthy mohan var block_td_uid_1_5a0a7dc0735f8 = new td_block(); […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: