முக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்!


பி. ராமச்சந்திரன் (அக். 2007, மார்க்சிஸ்ட்)

முந்தைய கட்டுரை: http://marxist.tncpim.org/1st-party-congress/

முதல் கட்சி காங்கிரஸ் 1943 இல் முறையாக நடந்தேறிய விபரங்கள் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இரண்டாவது கட்சி காங்கிரசானது (முதல் மாநாடு முடிந்து) இரண்டு ஆண்டுகளுக்குள் நடத்த வேண்டிய கட்டாயம் கட்சிக்கு ஏற்பட்டது. வேகமாக மாறி வந்த அரசியல் சூழ்நிலைகளும் கட்சிக்குள் தோன்றிய ஆழமான கருத்து வேற்றுமைகளும் மொத்தத்தில் சிக்கலான சூழ்நிலைகளும் காரணமாக அவசரமாக இரண்டாவது மாநாட்டினை நடத்த வேண்டிய சூழ்நிலைமை ஏற்பட்டது. (அரசியல் – ஸ்தாபன – தத்துவார்த்த பிரச்சனைகள் காரணமாக)
பாசிச சக்திகள் தோல்வி
இரண்டாவது உலகப் போரில் பாசிச ஏகாதிபத்திய சக்திகள் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. ஜெர்மன், ஜப்பான், இத்தாலி ஆகிய கொடூரமான ஏகாதிபத்திய நாடுகள் படுதோல்வி அடைந்தன. அவர்களுக்கு எதிராக போராடிய சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளும் வெற்றி பெற்றதின் காரணமாக உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. உலக சூழ்நிலைகள் கொந்தளிப்பான ஒரு நிலையை அடைந்தது. இந்த மாற்றமானது, இந்தியாவிலும் இங்குள்ள மக்களின் போராட்ட உணர்வுகளிலும் தாக்க்ததை ஏற்படுத்தின. அதுவே ஒரு முக்கிய அரசியல் திருப்பமாக அமைந்தது. சோசலிச சக்திகள் உலகம் முழுவதும் வேகமாக முன்னேறி புரட்சிகரமான மாற்றங்கள் உலகில் நிகழ்ந்தன. சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் நெடு நாட்களாக நடந்து வந்த புரட்சிகரமான இயக்கங்கள் வெற்றிப் பாதையில் வேகமாக முன்னேறின. கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தாக்கத்தின் விளைவாக பல சோசலிச குடியரசுகள் தோன்றின. உலகம் முழுவதும் உள்ள ஏகாதிபத்திய கிடுக்கிப் பிடியில் சிக்கி தவித்து கிடந்த நாடுகளில் எல்லாம் தேச விடுதலைப் போராட்டங்கள் தழைத்தோங்கின. சிலவை வெற்றியும் பெற்றன.
புரட்சிகரமான எழுச்சிகள்
இத்தகைய ஒரு சூழலில் இந்தியாவுக்குள்ளும் சுதந்திரப் போராட்டத்தின் அலைகள் எழுச்சியுடன் பொங்கியெழுந்துக் கொண்டே இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வளர்ந்து வரும் எழுச்சியினை சந்திக்க முடியாமல் திணறிக் கொண் டிருந்தது. புகழ் பெற்ற ஆர்.ஐ.என். (கப்பற்படை) வீரர்களின் வரலாற்று சிறப்பு பெற்ற புரட்சிகரமான போராட்டங்கள் அதைத் தொடர்ந்து இராணுவத்தில் பல பிரிவுகள் கொந்தளித்து முன்னேறிய எழுச்சிகளும், ஆட்சியாளர்களுக்கு எதிராக ஐ.என்.ஏ. எனும் இராணுவப் பிரிவினை சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் உருவாக்கி முன்னேறிய கட்டத்தில் அதில் பங்கேற்ற வீரர்களை (ஐ.என்.ஏ. வீரர்கள்) விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து நடைபெற்ற நாடு தழுவிய பெரும் போராட்ட அலைகளும், எழுச்சியும் உயிரோட்டமான விடுதலை இயக்கத்தின் சான்று களாக அமைந்தன. இப்போராட்டங்களுக்கு எல்லாம் ஆதரவாக பல லட்சம் மக்கள் நடத்திய வீரமிக்க ஆதரவு இயக்கங்களும், அவற்றில் பங்கேற்று உயிர் நீத்த ஆயிரக்கணக்கான வீரர்களின் தியாகமும் புரட்சிகரமான கொந்தளிப்பின் எடுத்துக்காட்டுச் சின்னங்களாக விளங்கின.
இவற்றின் எதிரொலியாக இந்தியா முழுவதும் புரட்சிகரமான அனல் காற்று வீசியதென்றே கூறலாம். இவற்றையெல்லாம் சமாளிக்க முடியாமல், திணறிக் கெண்டிருந்த ஆட்சியாளர்கள் வேறு வழியின்றி தேசிய இயக்கத்தின் தலைவர்களுடன் சமரச பேச்சுகள் நடத்தத் துவங்கினர். காங்கிரஸ் தலைமையும், முஸ்லீம் லீக் தலைமையும் இதைப் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான சமரச முயற்சிகளில் இறங்கவும் செய்தனர்.
வரலாற்றில் சுவடு பதித்த போராட்டங்கள்!
இது தவிர இரண்டாவது உலகப் போர் காலத்தில், வேறு வழியின்றி தங்களுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் அடக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான மக்கள் புதிய சூழ்நிலையில் வேகமாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங் களில் குதித்தனர். ஐ.என்.ஏ – ஆர்.ஐ.என். எழுச்சிகளைத் தவிர இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், போர்க்குணமிக்க போராட்டங்களும் வெடித்தன நாடு முழுவதும், தொழிலாளி வர்க்கம் – விவசாயிகள் – மாணவர்கள் போன்றோரின் எழுச்சியாகவும் குறிப்பிடத்தக்க தன்மை கொண்டதாக அமைந்தது. அனைத்து போராட்டங்களையும் இங்கு பட்டிய லிட்டு குறிப்பிட முடியாமல் இருப்பினும், கோவை, மகா ராஷ்டிரா, (மும்பை உட்பட) கான்பூர், மற்றும் பல பஞ்சாலைத் தொழிலாளர்களின் நீடித்த வேலை நிறுத்தங்களை இந்த நேரத்தில் பார்கக் முடிந்தது. அதே போல் ரெயில்வே தொழி லாளர்களின் மிகப் பெரிய போராட்டங்களின் பட்டியலில் முன்னிற்கும் பொன்மலை ரெயில்வே போராட்டமும், அதில் நமது வர்க்கம் அளித்த தியாகத்தையும் மறக்கவே முடியாது.
தெலுங்கானாவும் – தேபாகாவும்
இதே போல் வரலாற்று சிறப்பு மிக்க தெலுங்கான போராட்டம் இந்திய புரட்சி வரலாற்றில் இந்த காலகட்டத்தில்தான் பல ஆண்டுகள் வரை நீடித்து நடந்தன. நிஜாமின் மன்னர் ஆட்சி எழுச்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளை கொன்று ஒடுக்கியதும், இவ்வடக்குமுறையெல்லாம் கையில் ஆயுதம் ஏந்தி எதிர்த்துப் போராடிய விவசாய இயக்கத்தில் புரட்சிகரமான எழுச்சியும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளவை. தஞ்சை மாவட்டம், தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் ஆந்திராவில் சில மாவட்டங்களிலும் மகாராஷ்டிராவில் மலைவாழ் மக்களும், ஓர்லி பகுதியில் காட்டிய எழுச்சிமிகு புரட்சி உணர்வுகளும் வரலாற்றின் பகுதிகளேயாகும்.
இவற்றுடன் ஒப்பிடக்கூடிய ஒரு மாபெரும் விவசாயிகள் இயக்கம் அந்தக் காலத்தில் வங்காளத்தில் நடைபெற்றதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு தங்களுக்கே சேர வேண்டும் என்று கோரி, போர்க்களத்தில் இறங்கிய விவசாய வீரர்கள் தங்கள் பங்கினை பெறுவதற்கு அடக்குமுறைகளை எதிர்த்து, பல இடங்களிலும் ஆயுதங்களுடன் போராட வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது, ஆவேசத்துடனும், துணிவுடனும் போராடினர். இதுவே தெபாகா (போராட்டம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றில் இரண்டு என்ற பொருளில்) இப்போராட்டம் வெற்றி பெற்றது.
இதே காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், ஆட்சியின் அடி வருடிகளாக இருந்த மாநில (சமஸ்தானம்) ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், அவர்களின் கையாட்களாக இருந்த முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு எதிராகவும், அவர்களின் கொடூரமான அடக்கு முறைகளை எதிர்த்து உறுதியுடன் போராடிய மகத்தான புன்னப்புரா வயலார் போராட்டமும் கேரள பகுதியில் நடந்தது.
கம்யூனிஸ்ட்டுகளின் பங்கும் அரசியல் திரிபுகளும்
இவ்வாறு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, நாடு முழுவதும் நடந்தேறிய இப்போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் உறுதியுடன் பங்கேற்றனர். ஆயினும், அரசியல் ரீதியான தெளிவின்மை காரணமாகவும், முதல் கட்சி காங்கிரசுக்கு முந்தைய காலத்தில், கட்சிக்குள் ஊடுருவிய திருத்தல்வாத, மிதவாத எண்ணப் போக்குகளின் காரணமாகவும் எழுச்சியை பயனுள்ள முறையில் தலைமை தாங்கி நடத்துவதில், கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்கு பல தயக்கங்களும் இருந்தது என்பதும் உண்மை. இந்த மிதவாத போக்கானது அரசியல் ரீதியான ஒரு திரிபாவே பார்க்க வேண்டும் என்று பிற்காலத்தில், இரண்டாவது கட்சி காங்கிரசில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த கடுமையான அரசியல் திரிபுக்கு பின்னணியாக பல அரசியல் காரணங்களும் இருந்தன என்பதை பார்க்க வேண்டும். அடக்க முடியாத எழுச்சி நிலைமையை சமாளிப்பதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், காங்கிரஸ் கட்சியினருக்கும் பூர்ஷ்வா தலைமையுடன் சமரச முயற்சிகளில் இறங்கியது பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தோம். இப்பேச்சுவார்த்தைகள் நடை பெறும் போது, வளர்ந்து வரும் எழுச்சியை முடமாக்க வேண்டும் என்ற நோக்கம் ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அதே நேரத்தில், வெகுஜன எழுச்சியை பார்த்து பயந்து நடுங்கிய தேசிய இயக்கத் தலைவர்களும், முஸ்லீம் லீக் தலைவர்களும் நிலைமையை சமாளிப்பதற்கு எப்படியாவது ஒரு சமரசம் வேண்டும் என்று விரும்பினர். இந்த பின்னணியில்தான் 1947 இல் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது என்ற பெயரில் ஏகாதிபத்தியத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு சமரசம் ஏற்பட்டது. இந்த நிலை உருவான போது கட்சித் தலைமை கருத்தொற்றுமையை இழந்தது. கட்சிக்குள் தலைமையில் ஒரு பகுதியினர் போராட்டங்களை மேற்கொண்டு வளராமல் தடுத்தும், அதன் மூலம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மற்றும் காங்கிரஸ், லீக் போன்ற கட்சிகளுக்கும் இடையில் “தேசிய ஒற்றுமையை” வளர்ப்பதுதான் கடமை என்ற ஒரு எண்ணப் போக்கு வலுவாக இருந்தது. மறுபக்கம், பெற்றிருக்கும் சுதந்திரத்தை வெற்று சுதந்திரம் என்ற கருத்தும் தலைமையில் இருந்தது. ஆக, போராட்டங்களை புரட்சிகரமான எழுச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தும், மறு பக்கத்தில் அனைத்து கட்சிகளின் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் ஒரு மிதமான போக்கினை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணப் போக்கும் கட்சித் தலைமையில் வலுவாக தோன்றின. ஆக, 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர பிரகடனத்தின் பால் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய தந்திரோபாயத்தைப் பற்றியும், போராட்ட அலைகளை நீடித்து நடத்திச் செல்ல வேண்டுமா? வேண்டாமா? என்ற ஒரு கருத்து, கட்சிக்குள் காட்சியளித்தன. இந்த கடுமையான சூழ்நிலைமை யில்தான் 1947 டிசம்பர் மாதத்தில் கூடிய கட்சியின் மத்தியக் குழுவானது ஆழமான கருத்து வேற்றுமைகள் இருப்பதால் கட்சிக்குள் எழுந்த பிரச்சனைகளை கட்சி காங்கிரசில் வைத்து தீர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. இந்த முடிவு காரணமாகத்தான் மூன்று மாதத்திற்குள் – 1948 மார்ச் மாதத்தில் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் கூட்டப்பட்டது.
அவசரமாக கூட்டப்பட்ட கட்சி காங்கிரசானது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் உடைய ஒன்றாயிருந்தது என்று மாநாட்டின் நிகழ்ச்சிகளும், விவாதங்களின் தன்மையும் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகளும் நிரூபித்தன. இந்த நேரத்தில் அன்றைய சூழ்நிலைகளை திரும்பி பார்ப்பது உதவிகரமாக இருக்கும். முன்பு குறிப்பிட்டிருப்பது போல மிகப் பெரிய போராட்ட அலைகள் நாடு முழுவதும் எழுந்து பரவி வந்த காலம். பல சந்தர்ப்பங்களில் இந்தப் போராட்டங்கள் ஆயுதங் தாங்கிய போராட்டங்களாக வடிவம் பெற்றன. இரண்டாவதாக, இப்போராட்டங்களை கொடூரமான முறையில் அடக்கி, ஒடுக்குவதற்கான கடுமையான முயற்சிகள் ஆட்சியில் அமர்ந்திருந்த ஆட்சியாளர்கள் எடுத்தனர். எல்லா மட்டங்களிலும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலைகளை மேற்கொண்டு பயங்கரமான அடக்குமுறைகளை ஏவிவிட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் சுதந்திரமாக நடமாடவோ, செயல்படவோ முடியாத ஒரு சூழ்நிலையில் கட்சி காங்கிரஸ் நடைபெற்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டி யுள்ளது. ஏனெனில், அடக்குமுறை ஒரு பக்கம், தாக்குதல்கள் இன்னொரு பக்கம், ஆட்சியாளர்களின் மிகப் பரவலான தாக்குதல்களை – இவற்றிற்கு மத்தியில்தான் கட்சி காங்கிரஸ் நடந்தேறியது.
ஆக, தீரமிக்க போராட்ட அலைகளின் மத்தியிலும் கொடூரமான அடக்குமுறைக்கு மத்தியிலும் இவற்றையெல்லாம் சந்தித்து முறியடிக்க வேண்டும் என்ற உறுதியான மனோ திடத்தில் கட்சி தோழர்கள் மாநாட்டை கூட்டினார்கள். இவற்றின் விளைவாக இரண்டாவது கட்சி காங்கிரஸ் கூடிய நேரத்தில் போர்க்குணமிக்க புரட்சிகரமான உறுதிப்பாடுதான் மாநாட்டில் மேலோங்கிய சிந்தனை போக்கு என்பதையும் பார்க்க வேண்டும்.
இதன் விளைவாக, கட்சி காங்கிரசின் முடிவுகளை புரட்சிகரமான ஒரு எழுச்சிக்கு வழிவகுக்கும் என்ற எண்ணம் கட்சி முழுவதும் வேகமாக பரவியது. இந்த எண்ணத்திற்கு பின்னால் உள்ள உறுதிப்பாடும் – வீரமும் கட்சி காங்கிரசின் சின்னங்களாக திகழ்ந்தன. அடக்குமுறைகளை உடைத்தெறியும் மன உறுதியுடன் திரும்பிய தோழர்கள் நாட்டில் பல்வேறு பகுதியில், பல்வேறு அரங்கங்களில் தீவிரமாக செயல்களில் நெஞ்சுறுதியுடன் – இறங்கினர். இதனால்தான், இரண்டாம் கட்சி காங்கிரசுக்கு பிந்தைய காலகட்டத்தில், தோழர்கள் இம்மாநாட்டினை “புரட்சிக்கு அறைகூவல் விடுத்த மாநாட்டாகவே பார்த்தனர்.”
ஆக, மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது கட்சி மாநாடு கூடிய சூழலைப் பற்றி இதற்கு முன்பு குறிப்பிட்டிருக்கிறேன். தலைவர்களும், பிரதிநிதிகளும் (அகில இந்திய தலைவர்கள் உட்பட) அரசு பிடிவாரண்டு போட்டதால் தலைமறைவாக செயல்படுபவர்கள். இந்த மாநாட்டில் பங்கேற்றனர். போலீசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மாநாட்டில் பங்கு பெற்று தலைமறைவு தலைவர்கள் திரும்பிய நிகழ்சிகள் புரட்சிகர இயக்கத்தின் அடையாளமாக இருந்தது. சுற்றிலும், தலைமறைவு தோழர்களை தேடிப் அரசு பிடிப்பதற்கான உளவு இலாகா நடமாடிக் கொண்டிருந்த சூழ்நிலையில், மிகக் கூர்மையான, தத்துவார்த்த பிரச்சனைகள் தொடங்கி, நடைமுறை தந்திரங்கள் வரை அத்தனை விஷயங்களிலும் சாங்கோபாகமாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. மாநாட்டிற்கு பிந்தைய காலத்தில், இயக்கத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்கான பயங்கரமான முயற்சிகளை ஆயிரக்கணக்கான தோழர்கள் சந்தித்தனர். உறுதி மிக்க அஞ்சா நெஞ்சர்களாக கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட்டனர். ஆயினும், அரசியல் – தத்துவார்த்த ரீதியாக சிறுபிள்ளைத் தனமான போக்குகளால் இயக்கம் பாதிக்கப்பட்டது என்பது உண்மை. இவைப் பற்றியெல்லாம் பொதுவாக படிப்பினைகளை அளித்த ஒரு மாநாடாக இம்மாநாடு திகழ்ந்தது. பலகீனங்கள் ஒரு பக்கம், கம்யூனிஸ்ட் உறுதிப்பாடு மறுபக்கம் – இவையிருந்த போதிலும், வரலாற்று ரீதியாக கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னேறிக் கொண்டே இருந்தது என்பதும் ஒரு மிகப் பெரிய உண்மையாகும். தவறுகளை திருத்தி முன்னேறும் இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பதை பின்னர் நடந்த கட்சி மாநாடுகள் நிரூபித்து வருகின்றன.
இரண்டாவது, கட்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்ட தத்துவார்த்த அரசியல் பிரச்சனைகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் சந்திக்கும் இடர்பாடுகளை புரிய இன்றும் உதவுகிறது. தவறு நேரும் சந்தர்ப்பங்களை கண்டறிய உதவுகிறது.

 

One thought on “முக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s