– எஸ்.பி.ராஜேந்திரன்
“முதலாளிகளும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களும் ஏகாதிபத்திய சக்திகளுடன் கைகோர்த்து கூட்டணி சேர்ந்து கொள்வது என்பதையே தங்களது அயல்துறைக் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்; அவர்கள் எப்போது தங்களது நாட்டின் சுயசார்பை ஏகாதிபத்திய சக்திகளிடம் அடகு வைப்பார்கள்.
ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் அயல்துறைக் கொள்கை என்பது எப்போதுமே முன்னேறிய நாடுகளில் உள்ள புரட்சிகர சக்திகளுடனும் உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களது நாடுகளுடனும்தான் கூட்டணியே தவிர ஒருபோதும் எந்தவொரு ஏகாதிபத்திய சக்தியுடனும் அல்ல.”
– 1917 நவம்பர் புரட்சிக்கு முன்பு, மாமேதை லெனின் எழுதிய வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளின் விரிவாக்கம் தான், புரட்சிக்கு பிறகு சோவியத் ஒன்றியம் பின்பற்றிய அயல்துறைக் கொள்கை. சோவியத் ஒன்றியம் உலகெங்கிலும் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஊக்குவித்தது. அடிமை நாடுகளாக சிக்கிச் சிதைந்து கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட எண்ணற்ற நாடுகளின் விடுதலைக்கு உந்துசக்தியாக திகழ்ந்தது. இதன் தாக்கம்தான், விடுதலைக்குப் பிறகு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அயல்துறைக் கொள்கையில் பிரதிபலித்தது.
ஆனால் இரண்டு உலகப் போர்களுக்கு பின்னர் – குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் உலக முதலாளித்துவமானது தனது கைகளில் நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் மிகப் பெரும் அளவில் மூலதனத்தை குவித்தது. ஒருபுறம் சோவியத் ஒன்றியம் பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியது; மறுபுறம் சோவியத் ஒன்றியத்தை வீழ்த்துவதையே இலக்காக கொண்டு முதலாளித்துவம் சர்வதேச பொருளாதார அரங்கிலும் அரசியல் அரங்கிலும் எண்ணற்ற சதிராட்டங்களை அரங்கேற்றியது.
1990களில் சோவியத் ஒன்றியம் பின்னடைவை சந்தித்தபிறகு முதலாளித்துவத்தின் மூலதனக் குவிப்பு இன்னும் தீவிரமடைந்தது, அது 20ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில்தான் இந்தாண்டுகளில் தான் தாராளமயம்- தனியார்மயம் – உலகமயம் ஆகிய கோட்பாடுகளை உள்ளடக்கிய நவீன தாராளமயக் கொள்கைகளை சர்வதேச நிதி மூலதனம் உலகெங்கிலும் உந்தித் தள்ளியது. இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளின் சந்தைகளை குறிவைத்து ஆக்டோபஸ் கரங்களாக மிகப்பெரும் லாப வேட்கையுடன் சர்வதேச நிதி மூலதனம் பாய்ந்து வந்தது. இந்தியாவின் சந்தைகள் அந்நிய மூலதனத்திற்காக – அந்நிய உற்பத்தி பொருட்களுக்காக திறந்துவிடப்பட்டன. லாபம், மேலும் லாபம் என்பதையே மட்டும் குறியாக கொண்ட சர்வதேச நிதி மூலதனம், இந்தியாவின் உள்நாட்டு தொழில்களை அழித்தொழித்தது. வளர்முக நாடுகள் அனைத்திலும் இதுதான் நடந்தது.
இத்தகைய தன்மையுடன் கூடிய உலகமயம் என்பது, முதலாளித்துவச் சுரண்டலின் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியம் என்பதை நோக்கிய ஏகபோக முதலாளித்துவத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாகும். கடந்த 30 ஆண்டு காலத்தில் இந்தக் கட்டம் தீவிரமடைந்துள்ளது. மேலும் மேலும் மூலதனக்குவிப்பு- லாபவெறி என்ற இந்த பயணத்தில் தடையாக இருக்கிற அனைத்தையும் தகர்ப்பது என்பதே ஏகபோக முதலாளித்துவத்தின் வேட்கை.
சோவியத் ஒன்றியம் வீழ்ந்து விட்டதால், இனி எதிர்ப்பதற்கு ஆள் இல்லை என்ற எண்ணத்துடன், எண்ணெய் வளமிக்க இராக்கில் துவங்கி ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா உள்பட கடந்த 30 ஆண்டு காலத்தில் எண்ணெய் வள பூமிகளில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் எண்ணற்ற போர்களை நடத்தியுள்ளன. லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்துள்ளன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கியுள்ளன. இயற்கை பேரிடர்களை விட தனது லாப வேட்கைக்காக ஏகாதிபத்திய சக்திகள் நடத்திய படுகொலைகளும் இரத்த வெறியாட்டங்களும் மனிதப் பேரழிவுகளுமே அதிகம்.
சோவியத் ஒன்றியம் இல்லாத பின்னணியில், இன்றைக்கு ஏகாதிபத்திய சக்திகளுக்கு சவால் விடும் சக்திகளாக – ஏகாதிபத்திய சக்திகளிடம் அடிபணிந்து போகாத பிரம்மாண்டமான சக்திகயாக சோசலிசம் சீனா திகழ்கிறது. அத்துடன் நிலவிய ரஷ்யாவும் அமெரிக்க அடாவடித்தனத்தை எதிர்க்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் ஆழத்திலிருந்து மீண்டுவருவதற்கு இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற நிலையில், சீனாவின் பொருளாதாரம் பிரம்மாண்டமான வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகாலத்தில் எட்டியுள்ளது. புடின் தலைமையிலான ரஷ்யா – அது இன்றைக்கு முதலாளித்துவ அரசியலமைப்பு நிலவுகிற நாடாக உள்ள போதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்க மறுக்கிற – அமெரிக்காவின் சூழ்ச்கிகளை அனைத்து நிலைகளிலும் எதிர்க்கிற சக்தியாக நீடிக்கிறது.
ஒருபுறம் அமெரிக்கா மற்றும் அதன் தலைமையிலான ஏகபோக முதலாளித்துவ சக்திகள்; மறுபுறம் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு முற்போக்கு மற்றும் புரட்சிகர சக்திகள். பளிச்சென்று இந்த உலகைப் புரிந்து கொள்வதற்கு இது போதுமானது. ஆனால் இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையில் நடக்கிற மோதலில் இந்தியா எங்கே இருக்கிறது என்கிறகேள்விதான் இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் – நரசிம்மராவ் துவங்கி – வாஜ்பாய் வழியாக – இன்றைய மோடி வரை -அனைவருமே தங்களுக்கு பாதுகாப்பு அரண் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளிடம்தான் இருக்கிறது என்று தப்புக்கணக்கு போட்டு நகரத் துவங்கிவிட்டார்கள். இந்த சாய்மானத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் கவ்விப்பிடித்துக்கொண்டது. சீனாவையும் ரஷ்யாவும் பல வழிகளில் நிர்ப்பந்திப்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் புவி அரசியல் ரீதியாக இந்தியாவை பயன்படுத்த முடியும் என்று கணக்கு போட்டது. முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்ப்பார்கள் என்று லெனின் சொன்னதுபோல இந்தியாவின் முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோடி அரசின் ஏகாதிபத்திய ஆதரவு
இந்த நிலை, இந்தியாவைப் பாசிச பாதையில் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ள மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தபிறகு கடந்த 3 ஆண்டு காலத்தில் இன்னும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இதை விளக்குவதற்கு இரண்டு உதாரணங்கள் பொருத்தமாக இருக்கும்.
ஒன்று அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடுகள்; மற்றொன்று இஸ்ரேலுடனான ஆயுத பேரங்கள்.
1990களில் நரசிம்மாராவ் ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் அமெரிக்காவுடன் ராணுவப் பயிற்சி மற்றும் கூட்டு ராணுவ ஒத்துழைப்புக்கு இந்தியா உடன்பட்டது. அது 1998இல் வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபிறகு, அமெரிக்காவின் இளைய கூட்டாளி என்று சொல்லும் அளவிற்கு நிலைமை சென்றது.
2015இல் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அமெரிக்காவுடன் 10 ஆண்டு காலத்திற்கு பாதுகாப்பு வரையறை ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் அடுத்தடுத்து 3 உடன்பாடுகள் கையெழுத்தாகின. தளவாடங்கள் கையாளுவதற்கான உடன்பாடு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்ற புரிந்துணர்வு உடன்பாடு, அடிப்படை விபரங்களை பரிமாறி கொள்வது மற்றும் ஒத்துழைப்பு உடன்பாடு ஆகியவையே அவை.
இதன் அர்த்தம் என்ன?
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் அனைத்திற்கும் இந்தியாவின் துறைமுகங்கள், ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்; அமெரிக்க ஆயுதப்படைகள் போரில் ஈடுபடும் போது தேவைப்பட்டால் இந்திய ராணுவ தளவாடங்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்; அமெரிக்க ராணுவப் படைகளோடு இந்திய ராணுவப் படைகளும் ஆயுதமேந்தி எந்த விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்பதுதான் மேற்கண்ட உடன்பாடுகளின் சாராம்சம்.
இதைப் பளிச்சென்று புரிந்து கொள்ள வேண்டுமானால், இந்தியா ஒட்டுமொத்தமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவத் தளமாக மாறப் போகிறது என்று அர்த்தம். இந்தியாவில் தங்களது படைகளை இறக்கி, இங்கிருந்து கொண்டு சீனாவையும் ரஷ்யாவையும் மிரட்டுவதற்கோ அல்லது தாக்குவதற்கோ அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு நீண்டகால ராணுவ சூழ்ச்சி திட்டத்தோடு தயாராகிறது என்று அர்த்தம். இந்தியாவின் அமைதியை சீர்குலைத்து இதை ஒரு போர் பூமியாக மாற்ற போகிறது என்று அர்த்தம்.
இது அப்பட்டமான தேசவிரோதம்
மற்றொரு முக்கிய அம்சம், இஸ்ரேலுடனான ராணுவ பேரங்கள். அரபு பிரதேசத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டை நாயாகவே செயல்பட்டு வருகிறது இஸ்ரேலிய இன வெறி அரசு. பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இஸ்ரேலிடம்தான் கடந்த 15 ஆண்டுகாலமாக ஏராளமான ஆயுதங்களையும் தளவாடங்களையும் இந்திய பாதுகாப்புத்துறை கொள்முதல் செய்திருக்கிறது. இஸ்ரேலிய ராணுவமே வாங்காத அளவிற்கு அதிகமான விலையில் இஸ்ரேலிய ஆயுதக் கம்பெனிகளிடமிருந்து இந்திய ராணுவத்திற்கு – இந்திய படைகளுக்கு ஆயுதம் வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல். இதில் மிகப்பெரும் ஊழல்கள் நடக்கின்றன என்பது தனிக்கதை.
இதுமட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி ஆயுத பேரங்கள், அதானி- அம்பானிக்கான பேரங்கள் ஆகியவற்றை மேற்கொண்டதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அனைத்துப் பயணங்களிலும் பயங்கரவாத ஒழிப்பு மட்டுமே அவரது பேச்சுக்களில் பிரதானமாக இருந்திருக்கிறது. உலகெங்கிலும் பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்ட ஏகாதிபத்திய சக்திகளுடன் கூடிக் குலாவிக் கொண்டே அவர் பேசுகிறார்.
மறுபுறத்தில் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் உறவுகள் நாளுக்குநாள் மோசமடைகின்றன. குறிப்பாக சீனாவுடனான நல்லுறவு கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக சீர்குலைந்து, பரஸ்பரம் நம்பிக்கையின்மை என்ற நிலைமைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இவை எதுவும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.
ஏகாதிபத்திய சக்திகளுடன் மேலும் மேலும் நெருங்கும் போது உலகின் முற்போக்கான சக்திகளிடமிருந்து இந்தியா தனிமைப்படுகிறது. மகத்தான இந்தியாவின் வரலாற்றில் இப்படி நிகழ்ந்ததே இல்லை. அணி சேராக் கொள்கையின் ஆதர்ச நாடுகளில் ஒன்று இந்தியா. சமீப காலங்களில் பிரிக்ஸ் என்ற பெயரில் பிரேசில்- ரஷ்யா- இந்தியா – சீனா – தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளது கூட்டமைப்பு பலமான சக்தியாக உருவான போதிலும், ஏகாதிபத்திய ஆதரவு நேட்டோ ராணுவ கூட்டணிக்கு இணையாக பசிபிக் மற்றும் வளர்முக நாடுகளின் வலுவான கூட்டணியாக வளர்ந்து கொண்டிருக்கிற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவுக்கும் இடமளிக்கப்பட்ட போதிலும் மோடி அரசின் நகர்வு மேலும் மேலும் ஏகாதிபத்தியத்தின் ஏவலாளி என்ற நிலையை நோக்கியே இருக்கிறது. சீனாவின் முன்முயற்சியில் கிட்டத்தட்ட நூறுநாடுகள் இணைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான வர்த்தக கூட்டணியான “பிஆர்ஐ” என்று சொல்லப்படுகிற ஒரே சாலை திட்டத்தில் இந்தியா மட்டும் இணையவில்லை. இதன் விளைவு, ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே இந்தியா மட்டும் தனிமைப்பட்டு நிற்கிறது. பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனும் உறவுகள் மோசமடைந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளுடனும் சொல்லிக்கொள்ளும்படியான நல்லெண்ண உறவு இந்தியாவுக்கு இல்லை. ஆப்பிரிக்க மாணவர்கள் மீது தில்லியிலும் இதர பல இடங்களிலும் இந்துத்துவா மதவெறியர்கள் நடத்திய தாக்குதல்களை மோடி அரசு அலட்சியமாக கையாண்டது. அது எதிர்த்து இந்தியாவில் உள்ள 44 நாடுகளின் தூதர்கள் கூட்டம் நடத்தி தீர்மானம் போட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.
இந்திய ஆட்சியாளர்கள் தங்களது அயல்துறை கொள்கையை தொடர்ந்து ஏகாதிபத்திய ஆதரவு நிலையில் கொண்டு செல்வதும் உலகளவில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் தொலைநோக்கு அடிப்படையிலான சூழ்ச்சிகளுக்கு இந்தியா ஒரு களமாக மாறுவதும் நமது அயல்துறை கொள்கைகளுக்கும் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் விளக்குகிறது. கட்சித்திட்டத்தின் பத்தி 4.4 இல் இதன் சாராம்சம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாதையை கைவிட்டு இந்தியா ஒரு சுயேட்சையான அயல்துறை கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கட்சித்திட்டம் வலியுறுத்துகிறது.
Leave a Reply