மார்க்சின் வாழ்நாள் நண்பரும் சக போராளியுமான பிரெடரிக் எங்கெல்ஸ் மார்க்சின் இறுதிநிகழ்ச்சியில் இரங்கல் உரையாற்றும்போது அறிவியலில் அவருக்கிருந்த பேரார்வத்தினை அடிப்படையாகக் கொண்டே (சமூகப்) புரட்சி குறித்த அவரது பற்றுறுதியினை விளக்க முற்பட்டது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். அப்போது எங்கெல்ஸ் குறிப்பிட்டார்:
“மார்க்சைப் பொறுத்தவரையில் அறிவியல் என்பது வரலாற்றுரீதியாக உயிரோட்டமுள்ள, ஒரு புரட்சிகர சக்தியாகும். கோட்பாட்டுரீதியான அறிவியலில் வெளிப்பட்ட புதியதொரு கண்டுபிடிப்பை, அதனை எந்த அளவிற்கு நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை ஊகிக்கவே முடியாத நிலையிலும் கூட மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் அதை வரவேற்ற அதே நேரத்தில், தொழில்துறையில் பொதுவான வரலாற்றுரீதியான வளர்ச்சியை, உடனடியான புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பைக் காணும்போது அவர் வேறுவிதமாக மகிழ்ந்தார். உதாரணமாக மின்சக்தித் துறையில் உருவான கண்டுபிடிப்புகளை, அதுவும் அப்போதுதான் வெளிவந்திருந்த மார்செல் டெப்ரசின் கண்டுபிடிப்புகளை, அவர் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்தார்.” எனினும் எங்கெல்சின் இரங்கல் உரையின் இந்தப் பகுதியை மட்டுமே சுட்டிக் காட்டுவது அறிவியல் குறித்த மார்க்சின் பார்வையை குறுக்குவதாகவே இருக்கும்.
உண்மையில் எங்கெல்சின் அந்த சுருக்கமான இரங்கல் உரை சமூகம் குறித்த ஆய்வில் மார்க்சின் பங்களிப்போடுதான் துவங்குகிறது. எனினும் சமூக அறிவியலுக்கு ஒரு பங்களிப்பு என்ற வகையில்தான் மிகுந்த தீர்மானத்தோடு அதை அவர் விளக்குகிறார். மார்க்சின் இறுதிக் கணங்களின் பின்னணியை குறிப்பிட்டுவிட்டு எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்:
“உயிரியல் உலகத்தின் வளர்ச்சி பற்றிய விதியை டார்வின் கண்டுபிடித்தது போலவே அபரிமிதமான தத்துவ வளர்ச்சிக்குள் இதுவரை மறைந்து கிடந்த மானுட சமூக வரலாற்றின் வளர்ச்சி குறித்த விதியை மார்க்ஸ் கண்டறிந்தார். அதாவது அரசியல், அறிவியல், கலை, மதம் போன்ற விசயங்களை அவர்கள் பின்பற்றுவதற்கு முன்பாக மனிதர்கள் உண்ணவும், அருந்தவும், உடுத்தவும், தங்கவும் தேவையானவற்றைப் பெற வேண்டும்.
எனவே அவர்களின் உடனடியான பொருள்தேவைகளுக்கான உற்பத்தி, அதைத் தொடர்ந்து குறிப்பிட்டதொரு பகுதியைச் சேர்ந்த மக்களிடையே, அல்லது குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியே ஒரு அடித்தளத்தை உருவாக்குகிறது. இந்த அடித்தளத்தின் மீதுதான் சம்பந்தப்பட்ட அந்த மக்களுக்கான அரசு நிறுவனங்கள், சட்டம் பற்றிய கருத்துக்கள், கலை, ஏன் மதத்தின் மீதான கருத்துக்களும் கூட உருவாகின்றன. எனவே இதுவரை செய்யப்பட்டு வந்ததைப் போலில்லாமல், இவற்றின் அடிப்படையில்தான் மனிதர்களின் வளர்ச்சியை விளக்க வேண்டும்.”
இதுமட்டுமல்ல; இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையை நிர்வகிக்கும் செயல்பாடு குறித்த சிறப்பு விதி, இந்த உற்பத்தி முறை உருவாக்கிய முதலாளித்துவ சமூகம் ஆகியவற்றையும் மார்க்ஸ் கண்டுபிடித்தார். இதற்கு முன்னால் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள், சோசலிச விமர்சகர்கள் ஆகிய இரு பிரிவினருமே மேற்கொண்ட ஆய்வுகளில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்த பின்னணியில் மார்க்ஸ் உபரி மதிப்பைக் கண்டறிந்ததானது திடீரென இந்தப் பிரச்சனையின் மீது ஒளியைப் பாய்ச்சியது.
எனவே மார்க்ஸும் அறிவியலும் என்பதைப் பற்றிப் பேசும்போது, நாம் நான்கு குறிப்பிட்ட வரம்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவது, அறிவியல் என்பது ‘வரலாற்றுரீதியாக உயிரோட்டமுள்ள, புரட்சிகரமான சக்தி’ என்ற மார்க்ஸ் கொண்டிருந்த கருத்தோட்டம். இந்த முதல் கருத்தோடு தொடர்புடைய இரண்டாவது, குறிப்பாக உற்பத்தியுடனான உறவில் அறிவியலின் பங்கு. மூன்றாவது, இயற்கை மற்றும் சமூக உலகங்கள் இரண்டையும் உள்ளடக்கிய யதார்த்தத்தின் நுண்புலமுறையே அறிவியல் என்ற மார்க்ஸ்- எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்தோட்டம். நான்காவது, அழகியல், நெறிமுறை உள்ளிட்ட இயற்கை மற்றும் சமூகம் பற்றிப் புரிந்துகொள்வதற்கான அனைத்து முறைகளுக்கும் அறிவியல்தான் அடித்தளமாக விளங்குகிறது என்ற ஆழமான பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்.
குறிப்பாக அறிவியல் என்ற வார்த்தையை பெரும்பாலும் இயற்கை உலகத்தோடு மட்டுமே தொடர்புபடுத்தியே பொதுவாக பயன்படுத்தி வரும் நிலையில், இந்த மூன்றாவது அம்சத்தின் முக்கியத்துவம் என்ன? இயற்கை உலகத்தோடு தொடர்புடைய அறிவியலின் மீதான மார்க்சின் கருத்துக்களும், சமூக உலகத்தின் அறிவியல் மீதான அவரது கருத்துக்களும் மிக ஆழமான வகையில் ஒன்றுக்கொன்று உறவு கொண்டதாகும். அவரது காலத்தில் நிலவிய கருத்துக்களை ஒப்பிடும்போது அறிவியல் குறித்த மார்க்சின் ஆழமான புரிதல், அறிவியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த அவரது தொலைநோக்கு ஆகியவற்றின் ஆழத்தை, அறிவியல்கள் குறித்த அவரது ஒன்றுபட்ட கருத்தை ஒருவரால் புரிந்து கொள்ள முடியவில்லையெனில், அரசியல் பொருளாதாரம் குறித்த அவரது ஆய்வின் மூலம் மேலும் தெளிவாக வெளிப்பட்ட இந்த அறிவியல் குறித்த தொலைநோக்கை அவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டுவிட முடியாது.
பொருள்முதல்வாத, இயக்கவியல்வாத பாரம்பரியம் இரண்டின்மீதும் தத்துவார்த்த சிந்தனையின் உள்நோக்கங்களை அவர் மிக விநோதமான வகையில் ஒன்றிணைத்துக் கொண்டுவந்த ஒரு தொலைநோக்குதான் மூலதனம் பற்றிய அவரது ஆய்வாகும். முதல் இரண்டு அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்த்த பிறகு, பொருளாதாரத்தின் இயக்கவியலுக்கும் அறிவியல் குறித்த மார்க்சின் கண்ணோட்டத்திற்கும் இடையேயான உறவு குறித்த சுருக்கமான குறிப்பின் மூலம் இந்தக் கேள்வியை நாம் மீண்டும் பார்க்கலாம்.
அறிவியல் வரலாற்று ரீதியாக உயிரோட்டமானதொரு சக்தியாக ஏன் விளங்குகிறது? இதற்கான மார்க்சின் பதில் எளிதான ஒன்றல்ல; மாறாக கவனமாகச் செதுக்கப்பட்ட ஒரு விளக்கமாகவே அது அமைகிறது. முதலாவதாக, அதன் அடிப்படையான பொருளில், இயற்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனித இனத்தின் ஆவலின் உள்ளார்ந்த அம்சமாக அறிவியல் என்பது ஒரு புரட்சிகரமான சக்தியாகத் திகழ்கிறது. இயற்கையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான மனித இனத்தின் திறனை அது அதிகரிக்கிறது. இரண்டாவதாக, அறிவியல் முன்னேற்றம் என்பது உற்பத்தியோடு இயக்கவியல் ரீதியான உறவைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதலாளித்துவ காலப்பகுதியில் இது வியக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது குறித்து மார்க்ஸ் குறிப்பிடுகையில், ஒரு புறத்தில் 17ஆம் நூற்றாண்டில் இயந்திரங்கள் ஆங்காங்கே தலைகாட்டியபோது, தொழிலுற்பத்திக் காலத்தில் அவை அடிப்படையான பங்கினை வகித்தன என்றபோதிலும், மிகுந்த முக்கியத்துவமுள்ளவையாக இருந்தன. ஏனெனில், அந்த நாட்களில் இருந்த கணிதவியல் நிபுணர்களுக்கு செயல்முறைக்கான அடித்தளத்தை அது வழங்கியதோடு, நவீன இயந்திரவியலை உருவாக்குவதற்கான ஊக்கியாகவும் இருந்தது. (வேலைப் பிரிவினையை ஒப்பிடுகையில், இதற்குக் கீழான பங்கினை வழங்கியதன் மூலம் (அன்றைய பிரபல முதலாளித்துவ பொருளாதார நிபுணரான) ஆடம் ஸ்மித் மிகச் சரியாகவே செயல்பட்டிருக்கிறார் என்றும் மார்க்ஸ் மேலும் குறிப்பிட்டார்.) எனினும் அதைத் தொடர்ந்து உருவாகும் சூழ்நிலைகளில், வளர்ச்சியைத் தீர்மானிக்கும் அம்சங்களில் ஒன்றாக, நீடித்த வகையிலான உற்பத்திச் செயல்முறையில் இயந்திரங்களின் நுழைவு, அதைத் தொடர்ந்து தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என அறிவியலானது தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
அறிவியல், குறிப்பாக இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த அறிவியல், தொழிலாளர்களின் கைகளுக்கு மாற்று வழியைத் தருகிறது; இயந்திரங்களுடனான அவர்களது உறவை எளிதாக்குகிறது. மார்க்சின் வார்த்தைகளில் கூறுவதெனில், “ இயந்திர உற்பத்தியின் குறிக்கோள், உற்பத்திச் செயல்முறையை அதனோடு உள்ளடங்கிய கட்டங்களாகப் பிரிப்பது; இதிலிருந்து உருவாகும் பிரச்சனைகளின் தீர்வாக, இயந்திரவியல், வேதியியல், முழு அளவிலான இயற்கை அறிவியல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அது இப்போது எங்கணும் தீர்மானகரமான பங்கினை வகிக்கிறது.”
இதைத் தொடர்ந்து உற்பத்தியின் தேவைகள் தான் அறிவியலின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. அறிவியல் எனது மனதின் ‘விருப்பமல்லாத’ உழைப்பிலிருந்து வருவதல்ல; மாறாக, தொழில்துறை உற்பத்தியின் விரிவாக்கத்திலிருந்தே அது இயங்குவதற்கான சக்தியைப் பெறுகிறது. ஃபாயர்பாகின் கருத்தோட்டத்தை விமர்சிக்கையில் மார்க்ஸ் குறிப்பிட்டார்: “ இயற்கை அறிவியலின் கருத்தோட்டம் குறித்தே தான் குறிப்பாகப் பேசுவதாகக் கூறிய அவர், இயற்பியல், வேதியியல் ஆய்வாளர்களின் கண்களுக்கு மட்டுமே தெரிகின்ற ரகசியங்களைப் பற்றியும் குறிப்பிட்டார். எனினும் தொழில், வணிகம் என்பவை இல்லாமல் இருந்திருந்தால், இயற்கை விஞ்ஞானம் எங்கே இருந்திருக்கும்? ‘தூய்மையான’ இந்த இயற்கை அறிவியலும் கூட ஒரு நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. அது, தன் பொருட்களோடு வர்த்தகம், தொழில் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே, மனிதர்களின் உணர்வுபூர்வமான செயல்பாடுகளின் மூலமேம் செயல்படுகிறது.
மற்றொரு இடத்தில் இதுபற்றி மார்க்ஸ் இன்னும் அழுத்தமாகவே குறிப்பிடுகிறார்: “தன்னால் தீர்க்க முடிந்த பிரச்சனைகளை மட்டுமே மனித இனம் எப்போதும் கையிலெடுக்கிறது. அந்த விசயத்தை மேலும் நெருக்கமாகப் பார்க்கும்போது, அதன் தீர்வுக்குத் தேவையான பொருளாயத நிலைமைகள் இருந்தால் மட்டுமே, அல்லது குறைந்தபட்சம் அதை (தீர்வை) உருவாக்குவதற்கான செயல்பாடுகள் துவங்கியிருக்கும்போதுதான் அந்தப் பிரச்சனை நம் கண்ணில் தென்படத் துவங்குகிறது.
நிச்சயமாக தொழில்புரட்சிக்கு முன்பாகவே செயல்படத் துவங்கியிருக்கக் கூடியஅறிவியல் ரீதியான புரட்சி உண்மையில் அந்தப் புரட்சியின் மீது உறுதியான கருத்தாக்கம் மற்றும் கோட்பாட்டுரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியதா? அல்லது பெருமளவிற்கு மூலச் சிறப்பான நடைமுறைரீதியான கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களும் நிகழ்வதற்கு முன்பாகவே அறிவியலின் கொள்கை ரீதியான அம்சத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தொழிற்புரட்சி நிகழ்ந்ததா? என்பது அறிவியல் குறித்த வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்து வந்தது. எனினும் இந்த இரண்டிற்கும் இடையிலான உறவு குறித்த வரலாற்று ரீதியான விளக்கத்தினைக் கொண்டு இந்த விசயம் போதுமான அளவிற்கு நிறுவப்படவில்லை என்று நாம் நியாயமாகவே கருதலாம். தொடர்ந்து அறிவியல் ரீதியான புரட்சியின் சமூக அம்சங்கள் குறித்து அறிவியல் வரலாற்றாய்வாளரான மார்கரெட் ஜேக்கப் மற்றும் இதர ஆய்வாளர்களின் நுட்பமான பணிகளின் மூலம் இந்த இடைவெளி நிரப்பப்பட்டது. குறிப்பாக இயந்திரங்களின் செயல்பாடுகள் என்ற புதிய அறிவியல் துறை எவ்வாறு பரவலான மக்களுக்கு (அதாவது படித்த மக்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) மட்டுமின்றி, குறிப்பாக தொழிற்புரட்சியை உந்தித் தள்ளிய தொழில் முனைவர்கள், பொறியாளர்கள் ஆகிய புதிய வர்க்கத்தினருக்கும், தனித்திறன் பெற்ற தொழில்வல்லுநர்களுக்கும் இந்தக் கருத்துக்களை எப்படிப் பரப்பியது என்பது பற்றிய விரிவான, வியப்பளிக்கும் விவரங்களை அவர்கள் வழங்கியுள்ளனர்.
மூன்றாவதாக, இது ஒற்றைப் பக்கத்தின் கதையுமல்ல. இயற்கையின் புறநிலை விதிகள் கண்டறியப்பட்டு, அவை புரிந்துகொள்ளப்பட வேண்டும். இத்தகைய முன்னேற்றம் என்பதில்லாமல் மனித இனத்திற்கு அவசியம் தேவைப்படுகின்ற கண்டுபிடிப்புகளை வெறும் விருப்பத்தைக் கொண்டு மட்டுமே உருவாக்கிவிட முடியாது. இதற்கு விவசாயம் மிகச் சிறந்த உதாரணமாகும். “தொழில்துறையை விட விவசாயத்திற்கே அடிப்படையாக அமைந்த அறிவியல் துறைகளான” நிலவியல், வேதியியல், உடற்கூறியல் போன்றவற்றில், குறிப்பாக 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் ஏற்பட்ட அவசியமான வளர்ச்சிப் போக்குகள் இல்லாமல், தொழில்துறையில் அதற்கு முன்பு ஏற்பட்டதைப் போல விவசாயத் துறையில் உற்பத்தித் திறன் இவ்வளவு துரிதமாக அதிகரித்திருக்காது. உபரி மதிப்பு குறித்த கொள்கைகள் என்ற தொகுப்பாக வெளிவந்துள்ள அவரது மூலதன நூலுக்கான குறிப்புகளில் இந்தக் கருத்தோட்டத்தை நம்மால் காண முடியும் என்றபோதிலும் அறிவியலின் வளர்ச்சி என்ற இயங்கியல் குறுக்கல் வாதமான, குரூரமான பொருளாதாய நோக்கிலான பொருளாதாரத் தேவைகளுக்கான உடனடி பிரதிபலிப்பாக உருவாகவில்லை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார் என்பது தெளிவு. அவரது சமகாலத்திய மார்க்சிய எழுத்தாளர்கள் ஒரு சிலர் இத்தகைய இயக்கவியல் ரீதியான நுட்பங்களைக் காணத் தவறிவிட்டனர். அதன் விளைவாக அறிவியல் (மற்றும் தொழில்நுட்பம்) என்பது ஏதோவொருவகையில் ஒரு வர்க்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று எனவும், இயற்கை உலகத்தின் புறநிலையான தடைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முதலாளித்துவம் தனக்குத் தேவைப்படுகின்ற அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளியே வரவழைக்கிறது என்று வாதிடும் அளவிற்கு இந்தத் தவறான புரிதல் நீண்டிருந்தது.
அறிவியலும் தொழில்நுட்பமும் சமூகத் தன்மையினை தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்போருக்கு தொழில்நுட்பம் குறித்த மார்க்சின் ஆய்வு எந்தவிதமான உதவியையும் செய்வதாக இருக்கவில்லை. தத்துவத்தின் வறுமை என்ற நூலில் “கைகளினால் இயக்கப்படும் இயந்திரம் நிலப்பிரபுவைக் கொண்ட ஒரு சமூகத்தை உங்களுக்குத் தருகிறது என்றால், நீராவியினால் இயக்கப்படும் இயந்திரம் முதலாளியுடன் கூடிய ஒரு சமூகத்தைத் தருகிறது” என்ற இந்தப் பொன்மொழியை வழங்கியபோது, நீராவி ஆலை என்பது முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுடன் ஒன்றிணைந்தது என்றோ, நீராவி ஆலையின் வளர்ச்சி என்பது முதலாளித்துவ சமூகத்தின் தன்மையை தீர்மானிக்கிறது என்றோ அவர் கூறவில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் பல்வேறு மட்டங்கள், பல்வேறு உற்பத்தி உறவுகளின் தனித்தன்மையாக, இன்னும் சொல்லவேண்டுமெனில், புதியதொரு யுகத்திற்கான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை சுட்டிக் காட்டுவதாக அமைகின்றன. தொழில்நுட்பத்தின் தன்மையே சமூகத்தின் தன்மையை தீர்மானிக்கிறது என்று மார்க்ஸ் குறிப்பிடவில்லை என்பதையும் இங்கே சுட்டிக் காட்டவேண்டும்.
முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டு தொழில்நுட்பத்தைப் பயிலும் பல தலைமுறை அறிஞர்களுக்கு மார்க்ஸ் நிச்சயமாக ஊக்கமளித்து வந்தார். எனினும் தொழில்நுட்பத்தோடு உறவு கொள்ளும் தொழிலாளி வர்க்கம் குறித்த மார்க்சின் சித்தரிப்பு முதலாளித்துவ அறிஞர்களுக்கும், மார்க்சின் அணுகுமுறைக்கும் இடையே இருந்த வேறுபாட்டை முற்றிலும் தெளிவாக எடுத்துக் காட்டியது. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது எவ்வகையிலும் சாதகமானது மட்டுமேயல்ல என்பதிலும் மார்க்ஸ் தெளிவாக இருந்தார். நேரடியாக அறிவியல் இல்லை எனினும் நிச்சயமாக தொழில்நுட்பமானது தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் சுரண்டும் தன்மையுள்ள பிடிப்பு மேலும் தீவிரமாவதற்கான வழியாக விளங்குகிறது. இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்தே மூலதனத்தின் பிடிப்பு இறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது என்று மார்க்ஸ் வாதிட்டார். உற்பத்தியின் குறிப்பிட்ட கட்டம் என்பதற்கு மாறாக “மூலதனத்தால் உழைப்பானது உண்மையிலேயே உள்விழுங்கப்படுவது” என்று மார்க்ஸ் குறிப்பிட்ட “மூலதனம் உழைப்பை முறையாக உள்ளிழுத்துக் கொள்கின்ற” காலம் என அவர் குறிப்பிட்டார். இந்தக் கட்டத்தை எட்டியபிறகு மூலதனமானது உழைப்பினை முழுமையாக தன் பிடிக்குள் கொண்டு வருகிறது. உழைப்பின் சொந்த முயற்சியின் பயனானது ஒரு பௌதீக சக்தியாக மாறி தொழிலாளர்களை எதிர்கொள்கிறது. இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் தொழிலாளர்கள் அந்நியமாகும் போக்கு முழுமையடைகிறது. ஒரு புறத்தில் அறிவியல் அதன் முன்னேற்றத்தின்போது மனித இனத்தின் நலனைத் தீர்மானிப்பதில் தனது உண்மையான திறனை வெளிப்படுத்துகிறது. எனினும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள், அதுவும் ஒரு சக்தியாக, தொழில்நுட்பத்தின் மூலம் ‘மண்ணையும் உழைப்பையும்’ இடையறாது சுரண்டுவதற்கு உதவுகிறது. அது தொழிலாக இருந்தாலும் சரி, விவசாயமாக இருந்தாலும் சரி, அல்லது மனித உடலை பேணுவதாக இருந்தாலும் சரி, உற்பத்தி உறவுகளை முழுமையாக மாற்றுவதன் மூலமே அறிவியலின் உண்மையான திறனை முழுமையாகப் பெற முடியும்.
எனினும் நாம் முன்பு துவக்கத்தில் குறிப்பிட்ட எங்கெல்ஸ் வெளியிட்ட கருத்தை நினைவு கூரும்போது அறிவியல் என்ற வார்த்தையை மார்க்ஸ் பயன்படுத்தியது சமூக, இயற்கை அறிவியல்களின் செயல்களங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகும். “அரசியல் பொருளாதாரத்தின் அறிவியல்” என்ற சொற்றொடரைப் போன்ற இடங்களில் இயற்கை அறிவியல்களை குறிப்பிடும்போது பயண்படுத்தும் ‘அறிவியல்’ என்ற வார்த்தையையே மார்க்ஸ் பயன்படுத்துவதை நாம் தெளிவாகவே காண முடிகிறது.
இந்த இரண்டுக்கும் இடையிலான வேற்றுமையை மார்க்ஸ் எங்குமே பல வார்த்தைகளின் மூலம் தெளிவாகத் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், அவரது சம காலத்திலும் அவரது காலத்திற்கு முன்பும் வாழ்ந்த செறிவுமிக்க அரசியல் பொருளாதார நிபுணர்கள் பற்றிய அவரது தொடர்ச்சியான விமர்சனங்கள் இதிலுள்ள வேறுபாடுகளை பலவகையிலும் சுட்டிக் காட்டுவதாக அமைகின்றன. இவை அனைத்திலும் மிக முக்கியமானதாக நிற்பது சமூகத்தை ஆய்வு செய்வதில் செல்வாக்கு செலுத்துகின்ற, அதன் விளைவாக சமூக அறிவியல்களின் உள்ளடக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வர்க்க அடிப்படையிலான வேற்றுமை உணர்வாகும். இயற்கை அறிவியல்களைப் பொறுத்தவரையில் அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சியின் துவக்க கட்டங்களில் மாயையிலிருந்து யதார்த்தத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கு மிகவும் அதீதமான முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மார்க்ஸ் மிக அழகாக விவரித்ததைப் போல, அறிவியலின் நோக்கம் என்பது ஒரு பொருளின் தோற்றத்திற்குக் கீழே பொதிந்துள்ள சாரத்தைக் கண்டறிவதே ஆகும். அரசியல் பொருளாதாரத் துறையிலும் கூட மூலதனம் நூலில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளிலும் இதுவே மிகவும் குறிப்பான இலக்காக இருந்தது. எனினும் அதனினும் முக்கியமான வகையில் இயற்கை அறிவியல்களைப் பொறுத்தவரையில் எதெல்லாம் மாயையாக உள்ளனவோ அவை சமூக அறிவியல் என்று வரும்போது மாயையாக மட்டுமில்லாமல், சித்தாந்தமாகவும் அமைகின்றன என்பதையும் மார்க்ஸ் கண்டறிந்திருந்தார். தவறான கருத்தோட்டங்களைக் கொண்ட கட்டமைப்பையே பெரிதும் நம்புவது அல்லது அதன் அடிப்படையில் சமூக உலகத்தை புரிந்து கொள்வதென்பது சித்தாந்தமாகும்; அல்லது போலியான உணர்வுநிலை என்ற அறிவியலுக்கு நேர் எதிரான நிலையாகும். தனிநபர்களாலும், குழுக்களாலும், வர்க்கங்களாலும் சித்தாந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவியல் ஒதுக்கித் தள்ளப்படுவது ஏன் என்பதற்கான ஆணிவேர் வர்க்கரீதியான சார்பில்தான் அடங்கியுள்ளது. எனவே சமூகம் குறித்த அறிவியலும் கூட, ஏனைய அறிவியல்களில் இருந்து அது ஏன், எப்படி வேறுபடுகிறது; சமூகத்தில் உள்ள பல்வேறுபட்ட வர்க்கங்களின் கண்ணோட்டத்திலிருந்து பல்வேறுபட்ட சித்தாந்தங்கள் உருவாவதற்கு எது வழிவகுக்கிறது என்பதற்கான விளக்கங்களை வழங்குவதற்கும் சித்தாந்தம் குறித்த கோட்பாட்டைக் கொண்டதாகவும் அது அமைய நேர்கிறது.
இயற்கை அறிவியல்கள் இத்தகைய பிரச்சனைகள் எதனாலும் பாதிக்கப்படவே இல்லை என்று நாம் இங்கே வாதிடவில்லை. அவர்களது காலத்திலேயே, டார்வினின் உயிரின் தோற்றம் குறித்த கொள்கைக்குக் கிடைத்த வரவேற்பில் மார்க்சும் எங்கெல்சும் இதனை குறிப்பாகக் கண்டறிந்திருந்தனர்.
மார்க்சும் எங்கெல்சும் தங்களது கடிதப் போக்குவரவுகளில் அவர்களுக்கேயுரிய வகையில் மிகுந்த மகிழ்ச்சியோடு இது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டபோது, விஞ்ஞானிகள் டார்வினின் படைப்பை விளக்கும்போது எவ்வாறு தங்களது சொந்த வர்க்க சார்பு கண்ணோட்டத்துடனேயே அதைப் படித்திருக்கிறார்கள் என்பது குறித்தும், நேற்றுவரையில் இயற்கையில் ஒத்திசைவு நிலவுவது பற்றியே பேசிக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் திடீரென போட்டியும் போராட்டமுமே இயற்கையின் செயல்பாட்டின் அடிப்படையாக அமைகின்றன என்று பேசத் துவங்கியதைப் பற்றியும் விரிவாகவே குறிப்பிட்டுள்ளனர். இதற்கு சார்புநிலை குழப்பத்திற்குள் ஆழ்ந்து போவதென்றோ, அறிவியல் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அறிவிக்கவோ, அல்லது முதலாளித்துவ சமூகத்தில் அறிவியல்கள் அனைத்துமே முதலாளித்துவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவைதான் என்றோ பொருளல்ல. டார்வினோ அல்லது அவரது சக விஞ்ஞானிகளோ அதை விளக்குவதைப் பற்றி குழப்பமடைந்தவர்களாகவே இருந்தாலும் கூட, டார்வினின் உயிரினங்களின் தோற்றம் குறித்த கொள்கை என்பது அறிவியலேதான். இந்த அறிவியல் மேலும் வளர்வதன் மூலமே இத்தகைய குழப்பங்களுக்குத் தீர்வு காண முடியும்.
எனினும் சமூக அறிவியல்களில் இந்தப் பிரச்சனை வேறுவகையில் எழுப்பப்படுகிறது. சமூகத்தில் உள்ள மேலாதிக்க வர்க்கத்தின் கண்ணோட்டம் அல்லது வர்க்க ரீதியான சார்பு ஆகியவற்றில் இருந்தே சித்தாந்தம் என்பது தோன்றுகின்ற அதே நேரத்தில் தற்போதைய உற்பத்தி முறையை தாண்டிச் செல்லும் வகையில், இப்போது நிலவுகின்ற சமூக, பொருளாதார அமைப்பை எவ்வாறு மாற்ற முடியும் என விழைகின்ற வர்க்கத்தைச் சார்ந்ததாகவே அறிவியல் உள்ளது. மார்க்சைப் பொறுத்தவரையில் ஒரு சித்தாந்தம் என்ற வகையில் முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடு தொடர்ந்து ‘கொச்சையானதாக’ மாறும்வகையில் தரமிறங்கிக் கொண்டே இருக்கிறது. அதாவது, வெளிப்புறத் தோற்றத்தையும் தாண்டி அதன் சாரத்தை தேடுவதை அது கைவிட்டு விடுகிறது என்பதே இதன் பொருளாகும். மாறாக, தற்போது நிலவுகின்ற பொருளாதார, சமூக, அரசியல் அமைப்பினை மாற்றுவதிலேயே தனது ஆழ்ந்த சுயநலத்தைக் கொண்டுள்ள சுரண்டப்படும் வர்க்கத்தினால்தான் அத்தகைய மாற்றத்திற்கான அவசியத்தை தன்னுள்ளே கொண்டுள்ள உண்மையான அறிவியல் போக்கினை மேற்கொள்ள முடியும். மார்க்சிய சிந்தனையின் வரலாறு நெடுகிலுமே, குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில், சமூக சிந்தனையின் வர்க்க அடிப்படைகள் என்ற கேள்வியும், இத்தகைய சிந்தனையில் ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தின் மேலாதிக்கம் ஆகிய விமர்சனமற்ற வகையிலும், தவறான வகையிலும், இயற்கை அறிவியல்கள், சமூக அறிவியல்கள் ஆகியவற்றுக்கிடையே நிலவுகின்ற குறிப்பான வேறுபாடுகள், மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோர் நன்றாக உணர்ந்திருந்த வேறுபாடுகள் ஆகியவை குறித்துக் கவலைப்படாமல் அவை இயற்கை அறிவியல்களுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டன.
எனினும் இயற்கை, சமூகம் ஆகிய இரண்டு உலகுகளிலுமே விரவியிருந்த அறிவியல் குறித்த மார்க்சின் கருத்தோட்டத்தின் உண்மையான திறவுகோல், கடந்த பல ஆண்டுகளாகவே அவரது உலகக் கண்ணோட்டம் என அடையாளப்படுத்தப்பட்ட பொருள்முதல்வாத, இயக்கவியல் தத்துவ நிலைபாடே ஆகும். ஹெகலின் தத்துவத்துடனான அவரது தொடக்க கால பரிச்சியத்தில் இருந்து துவங்கி, பின்னர் அதைத் தீவிரமாக விமர்சிப்பவராக மாறிய போதிலும், ஹெகலின் இயக்கவியலில் இருந்து அவர் பெரும் ஊக்கம் பெற்றார். ஃபாயர் பாக்கினால் அவர் பெரிதும் கவரப்பட்ட போதிலும் , குறிப்பாக மூலதனம் நூலை எழுதுவதற்கான தயாரிப்பு வேலைகளின் போதும், அந்த நூலை எழுதும் காலத்திலும் அவர் திரும்பிச் சென்று, அதை பொருள்முதல்வாத அடிப்படையில் திருத்தியமைக்கத் துவங்கினார். ஃபாயர்பாக்கின் இயந்திரத் தனமான கண்ணோட்டம், அதைப் போன்றே ஹெகல் அடிக்கடி கருத்துமுதல் வாதத்தில் சென்று விழுவது (பொருளுலகம் ஒரு குறிப்பிட்ட வகையில் சிந்தனையோடு இணைந்திருப்பது; அதில் சிந்தனைக்கே முக்கியத்துவம் தரப்படுவது ஆகியவை) ஆகிய இரண்டையுமே மார்க்ஸ் மிகுந்த உறுதியோடு தவிர்த்தார். எனினும் அவரது க்ரண்ட்ரைஸ் நூலின் காலத்திலும், மூலதனம் நூலை எழுதிய காலத்திலும் மார்க்சின் பொருள்முதல்வாத இயக்கவியல் என்பது இவை இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக நிறுத்துவதாகவோ அல்லது இந்த இரண்டின் ஏதாவதொரு அம்சத்தை மற்றொன்றோடு முறைப்படி இணைப்பது என்பதாகவோ இருக்கவில்லை என்பது தெளிவாகும். அது உள்ளீடாக ஒன்றுபட்ட ஓர் உலகக் கண்ணோட்டமே ஆகும். அதில் இயக்கவியல் என்பது பொருள்முதல் வாதத்தின் இன்றியமையாத அம்சமாகவும், பொருள்முதல்வாதம் என்பது இயக்கவியலின் இன்றியமையாத அம்சமாகவும் விளங்குகின்றன. எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில் தன் எழுத்துக்களில் இதனை விளக்குவதாக மார்க்ஸ் உறுதியளித்திருந்த போதிலும், வருந்தத்தக்கவகையில் அவர் இந்தக் கருத்தாக்கத்தை எழுத்துபூர்வமாக எடுத்துரைக்கவில்லை. எனினும் இந்தப் பொருள்முதல்வாத இயக்கவியலானது இயற்கை, சமூகம், அதன் தர்க்கநியதி ஆகியவை குறித்த ஆய்வை உள்ளடக்கியது என்ற கருத்து மூலதனம் நூலில் சிறப்பாகச் செயல்படுவதை நாம் தெளிவாகக் காண முடியும்.
இந்தப் பின்னணியில்தான் இந்தக் குறிப்பின் துவக்கத்தில் நாம் மேற்கோள் காட்டியிருந்த மார்க்சின் சாதனைகள் டார்வினின் சாதனைகளுக்கு இணையானது என்ற எங்கெல்சின் ஒப்பீட்டின் முக்கியத்துவம் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. இந்த இரண்டு கோட்பாடுகளிலுமே முக்கியமான இயக்கவியல் சார்ந்த சொற்றொடர் என்பது மேம்பாடு என்பதாகும். அரசியல் பொருளாதாரத்தை மேற்கோளாக எடுத்துக் கொண்டு, அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான பங்களிப்பு என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் அரசியல் பொருளாதார வகைமுறை என்ற தலைப்பிலான பிரிவில் மார்க்ஸ் இதை மிகத் தெளிவாக விளக்கியிருந்தார்.
மேம்பாடு என்ற வார்த்தையானது வளர்ச்சி, சேகரிப்பு, அதிகரித்து வரும் பன்முகத் தன்மை ஆகிய புரிதல்களை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அரசியல் பொருளாதாரம் மற்றும் உயிரியல் ரீதியான பரிணாமம் ஆகிய இரண்டிலுமே இது உண்மையாகும். எனினும் இன்னும் ஆழமாகச் செல்வோமெனில், இந்த இரண்டு விசயங்களிலும் இந்த மேம்பாடு என்பது மறு உற்பத்தி என்ற செயல்முறையிலிருந்தே, ஒன்றில் உற்பத்தி- விநியோகம் என்ற சுழற்சியின் மூலமும், மற்றொன்றில் மிக எளிமையான உயிரியல் மறு உற்பத்தியின் மூலமும், உருவாகிறது. என்றாலும் இந்த மறு உற்பத்தி என்பது இயக்கவியலின் மிக முக்கியமான ஆழமான புரிதலாக, அதன் சாரம், தோற்றம் ஆகியவற்றின் ஒற்றுமையின் வெளிப்பாடாக அல்லது உருவாக்கமாக அமைகிறது. எனவே முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், உற்பத்தி, விநியோகம் என்ற எளிதான, விரிவடைந்த மறு உற்பத்தியிலிருந்து மூலதன சேகரிப்பு உருவாகிறது. அதைப் போன்றே உயிரியல் உலகத்தின் பன்முகத்தன்மை மற்றும் வேறுபாட்டுத் தன்மை ஆகியவற்றின் உருவாக்கம் என்பது உயிரியல் ரீதியான மறு உற்பத்தி செயல்முறையின் மீது சுற்றுச் சூழலின் ஊடாடலில் இருந்து எழுவதாகும். இந்த இரண்டு விசயங்களிலுமே இன்றியமையாமை மற்றும் வாய்ப்பு ஆகியவற்றின் இயக்கவியல் ரீதியான இணைப்பு இந்த மறு உற்பத்தி சுழற்சியின் மூலமாகவே பெறப்படுகிறது. முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் மூலதனக் குவிப்பு ஆகியவை குறித்த மார்க்சின் கண்ணோட்டம், உயிரினங்களின் தோற்றம் குறித்த டார்வினின் விளக்கங்கள் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் குறித்த நெருக்கமான ஆய்வு “உயிரினங்களின் தோற்றம்” என்ற நூலை படித்தபிறகு மார்க்ஸ் “நமது கண்ணோட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இயற்கை அறிவியல் குறித்து எழுதப்பட்டுள்ள நூல் இது” என்று எங்கெல்சிற்கு ஏன் எழுதினார் என்பது குறித்த நமது புரிதலை மேலும் ஆழப்படுத்த உதவும்.
“இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையை கொண்டுசெலுத்தும் இயங்கியல் குறித்த சிறப்பு விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்” என்ற எங்கெல்சின் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் -எங்கெல்ஸ் ஆகியோரின் பொருள்முதல்வாத இயக்கவியல் கண்ணோட்டம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கே இயங்கியல் விதி என்பதன் சரியான பொருள் என்ன? முதலாளித்துவ உற்பத்தி முறையை வென்றெடுப்பதன் இன்றியமையாமை குறித்த மார்க்சின் கண்ணோட்டத்தில் முற்கணிப்பு அல்லது தவிர்க்கவியலாதன்மை குறித்த சார்பு தென்படுகிறது பலரும் விளக்கம் அளிக்க முனைந்து வந்துள்ளனர். இங்குள்ள எங்கெல்சின் கூற்று கூட இதன் மற்றொரு வெளிப்பாடுதான் என்று கூட எவரொருவரும் சந்தேகப்படலாம். எனினும் இந்தக் கூற்றின் வெளிப்படையான தோற்றத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்கவியல் குறித்த இந்த இருவரின் உறுதிப்பாட்டை எவரொருவரும் ஏற்றுக் கொள்வார்களேயானால், இந்த இயங்கியல் விதி என்பது மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையேயுள்ள குறிப்பிட்ட முரண்பாட்டைக் குறிக்கிறது என்பதும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒன்றுக்கொன்று எதிரான இந்த இரண்டின் ஒற்றுமையையுமே குறிக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
மூலதனம் நூலை மிகுந்த கவனத்தோடு படிப்போமானால் இதை மிக எளிதாக உறுதிப்படுத்திக் கொண்டு விடலாம். பொருள்முதல்வாத இயக்கவியலில் இயக்கம் என்பது முரண்பாடாகும். அது இயந்திர ரீதியான இயக்கமாக (அங்கே இருப்பது, அதே நேரத்தில் அங்கே இல்லாமல் இருப்பது) இருந்தாலும் சரி, அல்லது மேலும் பொதுவான அர்த்தத்திலான இயக்கமாக இருந்தாலும் சரி. எனினும் ஒரு முரண்பாட்டில் உள்ள எதிரெதிர் அம்சங்களின் ஒற்றுமை என்ற குறிப்பிட்ட தன்மை மிகத் திட்டவட்டமாக குறிப்பிடப்படவில்லையெனில் முரண்பாடென்பது தொடர்ந்து சாரமான அரூபமான கருத்தாகவே நீடிக்கிறது. மூலதனம், உழைப்பு ஆகியவற்றைப் போன்ற, எதிரெதிரான அம்சங்கள் தாங்களாகவே சுய சிந்தனையில் செயல்படுவதற்கான திறனைக் கொண்டிருக்கும் நிலையில், முற்கணிப்பு அல்லது தவிர்க்க இயலாதன்மை என்ற எதுவும் இருக்க முடியாது.
மூலதனம் நூல் வெளியான 150வது ஆண்டு, போல்செவிக் புரட்சியின் 100வது ஆண்டு, மார்க்சின் 200வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஆண்டு என்ற முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் சிறப்பான இத்தருணத்தில் அறிவியல் குறித்த மார்க்சின் கண்ணோட்டத்தை, அதன் ஆழமான இயக்கவியல் பொருளில் புரிந்து கொள்வது என்பது சோசலிசத்திற்கான போராட்டத்தின் தவிர்க்கமுடியாத அம்சமாகவே தொடர்ந்து நீடிக்கிறது.
தமிழில்: வீ.பா. கணேசன்
Need of the people develop science . The concept clearly defined in this article.
LikeLike