மகத்தான வளர்ச்சியின் புதியகட்டத்தில் சீனா !


 

  • இரா.சிந்தன்

நவம்பர் புரட்சி நூற்றாண்டு நிறைவுற்றுள்ளது. இக்காலகட்டத்தில் அண்மையில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது தேசிய மாநாடு, ஒரு புதிய வரலாற்றுக் கட்டத்திற்குள் நுழைவதாக  அறிவிப்புச் செய்துள்ளது. “புதிய சகாப்தத்திற்கான சீன தன்மையுடன் கூடிய சோசலிசம்” என்று அதனை குறிப்பிடுகின்றனர்.

1917 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற நவம்பர் புரட்சி, அக்காலகட்டத்தில்  ஏகாதிபத்திய ஆதிக்கப் போர்களையும், காலனியாதிக்கச் சுரண்டலையுமே கண்டுவந்த உலக மக்களுக்கு, ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியது. அடுத்தடுத்த ஆண்டுகளில்  பாலின சமத்துவம், மக்களாட்சி, சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் என, மனித நாகரீக வளர்ச்சியில் சோவியத் ரஷ்யா செலுத்திய பங்களிப்பு மிக முக்கியமானது. சோசலிசப் பாதையில் பயணிக்கும் மக்கள் சீனம், இன்றும், ஒளிகுன்றா நம்பிக்கையாக, ஒரு புதிய உலகிற்கான திறவுகோலாக இருக்கிறது.

முதலாளித்துவ உலகமோ, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதுடன், நெருக்கடியின் சுமைகளை பாட்டாளிகளின் மீது சுமத்தியும் வருகிறது. வலதுசாரி சக்திகள் அந்த பாதிப்புகளை தீவிரப்படுத்திவருகின்றனர். நெருக்கடியை எதிர்கொள்வதிலும், தன் சொந்த மக்களின் நலன்களைப் பாதுகாத்து முன் செல்வதிலும் செஞ்சீனம் நிகழ்த்திவரும் முன்னேற்றம், உலக மக்களுக்கு, புதிய நம்பிக்கையை அளிப்பதாகும்.

உலகின் மிகப்பெரிய கட்சி:

சீன கம்யூனிஸ்ட் கட்சி, 8 கோடியே 90 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட உலகத்தின்  மிகப்பெரிய கட்சியாகும். அதன் தேசிய மாநாடு பெய்ஜிங்கில் அமைந்த மக்கள் பேரரங்கில் நடைபெற்றது.மாநாட்டுப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்திட  கட்சிக்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பகுதி மாநாடுகளை ஒட்டி நடைபெற்ற தேர்தல்களில் 99.2 விழுக்காடு கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். அரசியல் பற்றுறுதிக்கும், தூய செயல்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் , உயர் பொறுப்புகள் ஏற்று நடத்தும் 3 பேர் உட்பட 27 பேர் தகுதிநீக்கம்  செய்யப்பட்டனர் என்கிறது  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட மொத்தம் 2,307 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 33.7 விழுக்காடு அதாவது 771 பேர் உற்பத்தித்துறையில் பணியாற்றுவோர் ஆவர் (198 தொழிலாளர்கள், 86 விவசாயிகள், 283 தொழில்நுட்ப பணியாளர்கள்) சீனத்தில் உள்ள 55 இனம்வழிச் சிறுபான்மையோரில் இருந்து, 44 பிரதிநிதிகளும், 24.1 விழுக்காடு பெண் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

பிரதிநிதிகளில்  70.6 விழுக்காடு பேர் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். 2000 க்கு பின்னர் கட்சியில் சேர்ந்த இளைஞர்கள் 416 பேர் . 87.8 விழுக்காடு பேர் 1978 ஆம் ஆண்டுக்கு பின் கட்சியில் சேர்ந்தவர்கள். பின் தங்கிய பகுதிகளில் இருந்தும், தொலைதூர சிற்றூர்களில் இருந்தும் பங்கேற்பை உறுதி செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பொது மாநாட்டு நடவடிக்கைகளை, உடனுக்குடன் பல்வேறு மொழிகளில் கேட்கும் வசதியை சீன ஊடகங்கள் ஏற்பாடு செய்திருந்தன.

சாதனைகளைத் தொடரும் சோசலிசம் :

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 12 லட்சம் கோடி யுவான் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 118 லட்சம் கோடி ரூபாய்கள் )  அதிகரித்துள்ள சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 80 லட்சம் கோடி யுவான் (அதாவது ஏறத்தாழ ரூ.780 லட்சம் கோடிகள்) என்ற அளவை எட்டியுள்ளது. இவ்வகையில்  உலகின் இரண்டாவது மிகப்பெரும் பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது சீனா.

உலக வங்கி அளவுகோலின்படி பார்க்கும்போது 1981 ஆம் ஆண்டிலிருந்து சீனம் 72 கோடி குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது, வியட்நாமில் 3 கோடிப்பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதாவது, உலகில் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளும் சாதித்த வெற்றியில் பார்க்கும்பொழுது 85 விழுக்காடு சோசலிச நாடுகள் அடைந்த வெற்றியாகும். 1991 காலகட்டத்தில் இந்தியாவும் சீனாவும் கிட்டத்தட்ட ஒரே தனிநபர் வருமான விகிதங்களைக் கொண்டிருந்தன. தற்போது, சீனா நான்கு மடங்கு வளர்ச்சியை சாதித்திருக்கிறது. (தோராயமாக ஒரு நபர், ஆண்டுக்கு  6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்கள் ). உலகப் பொருளாதார நெருக்கடி சூழலை எதிர்கொண்ட சீனம், 2012 முதல் 2017 வரையிலான ஐந்தாண்டுகளில் (தனது சொந்த அளவுகோலின்படி) 6 கோடி குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டிருப்பதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.

பல புதிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதிலும் சீனத்தின் வளர்ச்சி எதிரொளிக்கிறது. நீரில் மிதக்கும் சோலார் மின் உற்பத்தி திட்டம், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை, சூப்பர் பஸ் சோதனை ஓட்டம், குவாண்டம் அறிவியலுக்கான துணைக்கோள் திட்டம், உலகின் மிகப்பெரிய செயற்கைக் கோள், முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட வீடு, உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், உலகின் மிகப்பெரும் விரைவு ரயில் கட்டுமானங்கள் என்று பட்டியலிட்டால், கட்டுரையில் இடம்போதாது.

சோசலிச அரசியல் பொருளாதார நோக்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையும், சீன சமூகத்தில் அது மேற்கொண்டுவரும் இடைவிடாத போராட்டமுமே இந்த சாதனைகளுக்கு அடித்தளமாகும். 1950 முதலே இந்தப் போராட்டத்தை சீனா நடத்திவருகிறது. ‘இடது சக்திகளை ஒன்றுபடுத்துக, வலது சக்திகளை வலுவிழக்கச் செய்க’ என்ற முறையில் சீனா திறம்பட பயணிப்பதாக குறிப்பிடுகிறார் மார்க்சிய ஆய்வாளர் சமீர் அமீன்.

சோசலிசத்தின் தொடக்க நிலை:

சோசலிச சமூகத்தை நோக்கிய நீண்ட பாதையில், சீனா தொடக்க நிலையில் இருப்பதாகவே தோழர் மாவோ அறிவித்திருந்தார். சீனா இப்போதும் அதே தொடக்க நிலையில்தான் இருக்கிறது என்பதையும், உலக அரங்கில் அதுவொரு வளரும் நாடுதான் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு குறிப்பிடுகிறது. அதே சமயம் டெங் ஜியோ பிங் முன்வைத்த மூன்று எட்டு வளர்ச்சி இலக்குகளை, 15 ஆண்டுகள் முன்கூட்டியே அடைந்திடும் நம்பிக்கையை சீன கட்சியின் பொதுச் செயலாளர் ஜீ ஜின்பிங் வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்று எட்டு இலக்குகள் என்பது என்ன ? சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 13 வது மாநாட்டில் மூன்று எட்டு இலக்குகள் குறித்து விளக்கப்பட்டது. முதல் எட்டு, 1980 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்குவது. இவ்வகையில் உணவு மற்றும் உடை சிக்கல்களுக்கு தீர்வு காண்பது. இரண்டாவது எட்டு, 20 ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் மொத்த தேசிய உற்பத்தி மதிப்பை (ஜி.என்.பி) இரட்டிப்பாக்குவது. அதன் மூலம் மக்கள் வாழ்க்கைத் தரத்தை சிறப்பாக்குவது. மூன்றாவது எட்டில், சீன மக்களின் வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், வளர்ந்த நாடுகளுக்கு நிகரான தேசிய உற்பத்தி மதிப்பை உயர்த்துவது. 2050 ஆம் ஆண்டுக்குள் இதனை சாதிப்பது. இதுவே மூன்று எட்டு இலக்குகள் எனப்படும்.

திட்டமிடலை தொடர்ந்து முன்னெடுக்கும் சீனம் : 19 வது மாநாட்டு முகவுரையில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஜீ ஜின்பிங் 2020 ஆம் ஆண்டிலிருந்து 2050 வரையிலான இலக்குகளை முன்வைத்து பேசினார். 2020 முதல் 2035 வரையிலான பதினைந்தாண்டுகளில் எல்லாவகையிலும் ஓரளவு முன்னேறிய சமூகமாக சீனத்தை மாற்றியமைப்போம். சோசலிச நவீனமயத்திற்கான அடிப்படைகளை சீனாவில் கட்டமைப்போம். அடுத்த பதினைந்தாண்டுகளில் சீனா ஒரு நவீன சோசலிச தேசமாக, வளர்ந்த, வலிமையான, முன்னேறிய பண்பாட்டுடன் கூடிய, களிப்புமிக்க , அழகிய தேசமாகும்’ எனக் குறிப்பிட்டார். அழகிய சீனம் என்ற பொருளில் அவர் குறிப்பிட்டது இயற்கையும், மனிதனும் இயைந்தும், இணைந்தும் வாழ்வதைக் குறிக்கிறது.

தற்போது ஜீ ஜின்பிங் 2035 ஆம் ஆண்டில் ஒரு நவீன சோசலிச கட்டமைப்புக்கான அடித்தளங்கள் உருவாக்கப்படும் என்கிறார். 2050 ஆம் ஆண்டில் அது மனிதகுலத்திற்கு திட்டவட்டமான பங்களிப்பைச் செய்கிற மைய இடத்திற்கு வந்து சேரும் என்கிறார் அவர். திட்டமிடலின் அடிப்படையிலான நீடித்த வளர்ச்சி இந்த இலக்கினை முன்கூட்டியே எட்டும் நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

ஏற்றத்தாழ்வுகளும், உயரும் தேவைகளும்:

மேற்சொன்ன உரைகள், தன்னம்பிக்கை உரைகளோ அல்லது ஆரூடம் சொல்வதோ அல்ல. சீனத்தின் திட்டவட்டமான சூழ்நிலைகளை ஆய்வு செய்து, சிக்கல்களை அடையாளம் கண்டு முன்செல்வதை, சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற மத்தியக் குழு கூட்டத்தில் மார்க்சிய அரசியல் பொருளாதார வழிகாட்டுதல் குறிப்பை அக்கட்சி வரையறுத்தது. அதில் ஒரு வரையறுப்பு, சீன பாட்டாளிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் சரக்கின் மதிப்புக்கு ஏற்ற கூலி கிடைப்பதை உறுதி செய்வதைக் குறித்ததானது. ஏன் அதனை ஒரு முக்கிய இலக்காக வைத்தார்கள்?  … 1990களுக்கு பிறகு  உலகமய சூழலில் நீந்தியே சீனத்தின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில், உலகமயத்தின் தாக்கம் சீனத்தை பாதிக்காமல் இல்லை. 1990 களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53 விழுக்காடாக இருந்த கூலி மதிப்பு, 2007 ஆம் ஆண்டில் 42 விழுக்காடாக மாறியிருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, நிலைமைகளை உணர்ந்து அதற்கேற்ற உத்திவகுத்துச் செயல்படுகிறது. இப்போராட்டம் சாதாரணமானதல்ல.

19வது மாநாடு சீனத்தின் முதன்மை முரண்பாடு குறித்து பேசுகிறது. ‘சீன சமூகத்தில் நிலவுகின்ற சமனற்ற வளர்ச்சி, ஏற்றத்தாழ்வுகளுக்கும் – மக்களிடையே வளர்ந்துவருகின்ற தேவைகளுக்கும் இடையிலான முரண்பாடே சீன சமூகத்தின் முதன்மை முரண்பாடாக வளர்ந்திருக்கிறது’ என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருபக்கம் சீனத்தின் மக்களின் பொருளியல் தேவைகளைத் தாண்டி  சூழலியல் கவலைகளும், ஜனநாயக விருப்பங்களும், பண்பாட்டு சூழல் மேம்பாடும் புதிய பரிணாமம் எடுக்கின்றன. அவற்றிற்கு தீர்வுகாண்பதுடன், சமனற்ற சமூக நிலைமையிலிருந்து உடைப்பை ஏற்படுத்தி அதனை மாற்றியமைப்பதும்  தேவையாகும்.

முதன்மை முரண்பாடு என்பது என்ன? ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பல்வேறு முரண்பாடுகள் மேலெழுகின்றன. அதில் ‘முதன்மை முரண்பாடு’ குறித்து தோழர் மாவோ விளக்கியுள்ளார். ‘ஒரு சிக்கலான வளர்ச்சிப் போக்கில், பல முரண்பாடுகள் மேலெழுகின்றன. அவற்றில் ஒரு முரண்பாட்டில் இருப்பும், வளர்ச்சியும்  மற்ற முரண்பாடுகளில் தாக்கம் செலுத்துவதாகவும், அவற்றின் வளர்ச்சியில், மாற்றத்தில் பங்குகொள்வதுமாக இருக்கும். அதனை முதன்மை முரண்பாடெனக் காணவேண்டும்’ ‘வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும், ஒரு முதன்மை முரண்பாடு, முன்னணிப் பாத்திரம் வகிக்கும் என்பதில் ஐயமில்லை. முரண்பாடுகளில் எப்போதும் இரு வேறு  சக்திகள் மோதுகின்றன. அவை ஒரே பலத்தோடு மோதுகிறவை அல்ல.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, குறிப்பிட்டிருக்கும் முதன்மை முரண்பாட்டிற்கு, தீர்வுகாண்பதில்தான், சோசலிசத்தை நோக்கிய அவர்களின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு அதுவொரு முக்கியமான பங்களிப்பாக அமையும்.

சீனத்தின் தனித்துவமான பாதை:

சீனத்தின் தனித்துவமான பாதையை நாம் புரிந்துகொள்வது தேவை. ஜீ ஜின்பிங் உரையில், “வீடுகள் கட்டுவது மக்கள் வாழ்வதற்காக, ஊக வணிகத்திற்காக அல்ல’ என்ற நேரடியான விமர்சனம் இடம்பெற்றிருந்தது. தனித்துவமான அணுகுமுறையைப் புரிந்துகொள்ள, இந்த விமர்சனத்தையே பயன்படுத்திக் கொள்வோம்.

நிலவுடைமைப் சிக்கலில்  சீனத்தின் அணுகுமுறை மற்றும் அந்நாட்டின் தொழில் துறை கட்டமைப்பு ஆகியவை குறித்து மார்க்சிய அறிஞர் சமீர் அமீன் ஆய்வு செய்துள்ளார். ‘புரட்சி வெற்றிக்குப் பின் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிலத்தை மறு பகிர்ந்தளிப்பு செய்தது. ஆனால் அங்கே நிலம் தனியார் சொத்துரிமையாக மாற்றப்படவில்லை. அது அரசுடைமையாகவே இருந்தது, பயன்படுத்தும் உரிமை மட்டும் பகிர்ந்தளிக்கப்பட்டது. உலக நாடுகளில், சீனத்திலும், வியட்நாமிலுமே இது கைகூடலானது. அதற்கு காரணம் அந்த நாடுகளின்  விவசாயிகளிடையே காணப்பட்ட தனித்தன்மை அல்ல. மாறாக அந்த நாடுகளின் செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தனித்துவமான அரசியல் நிலைப்பாடும், தெளிந்த் சிந்தனையுமே ஆகும்.

ரஷ்ய போல்ஷெவிக்குகளின் படிப்பினையை கவனித்து, தனது சொந்த நிலைப்பாட்டை வகுத்துக் கொண்டது சீன கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியின் நிலைப்பாடுதான், அந்த நாட்டுக்கு  ‘சிறப்புத்தன்மையை’ கொடுத்தது. அது முதலாளித்துவ சமூகத்தைப் போல் அல்லாமல், நிலத்தை தனிச்சொத்தாக மாற்றுவதிலிருந்து தடுத்தது. ஜீ ஜின்பிங் உரை, வீட்டு வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஊக பாணி விலை நிர்ணயிப்பை, தீவிர சிக்கலாக அரசு கவனித்துவருவதை சுட்டிக்காட்டுகிறது. மேலும், சீனத்தின் தனித்தன்மையோடு, முதலாளித்துவ சந்தை நலன்கள் மோதிவருவதையும் காட்டுகிறது.

1970 ஆம் ஆண்டுவரை சீனத்தின் உள்ளூர் அளவிலான கம்யூன்கள், கூட்டு சமையலறை மட்டுமல்லாது, வேளாண் உற்பத்தி, கூட்டுறவு உள்ளிட்ட முடிவுகளை மேற்கொண்டன. பருவகாலங்களில் ஆலைகளுக்கு தேவையான உழைப்பாளர்கள், உள்ளூர் சமூக நல நடவடிக்கைகள் மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தின் மையங்களாக செயல்பட்டன. பின்னர் அவை நகரசபை போன்ற உள்ளாட்சி ஏற்பாடுகளால் மாற்றிடப்பட்டன.

அதன் பிறகு சீனத்தில் நிலவாடகை முறை நடைமுறையாக்கப்பட்டது, அதாவது நிலத்தை விற்க முடியாது, ஆனால் வாடகைக்கு விடலாம். நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து நகரங்களை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்தனர். நகர்ப்புற மக்கள் தொகை 20 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. நிலம் மற்றும் சிறு உற்பத்தி குறித்து சரியான கொள்கையைக் கடைப்பிடித்ததால், நகரங்களின் உணவுத்தேவை உயர்வுக்கு ஏற்ப உற்பத்தியும் உயர்ந்தது.

இவ்விசயத்தில் இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிற ‘முதலாளித்துவ’ நாடுகளுடன் ஒப்பிடுகையில், சீனம் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. உலகின் 6 விழுக்காடு சாகுபடி நிலம் மட்டுமே கொண்டிருக்கும் சீனா, தனது பலவீனத்தை சிறப்பாக சமாளித்தது. உலக மக்களில் 22 விழுக்காடு பேருக்கான உணவை, சீனம் வெற்றிகரமாக உற்பத்தி செய்கிறது. சீன நகரங்களில் வாழும் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும், வீட்டு வசதி கொண்டவர்களாகவும் உள்ளனர். ‘முதலாளித்துவ’ பொருளாதாரங்கள் இத்தோடு ஒப்பிடும் நிலையில் கூட இல்லை என்கிறார் சமீர் அமீன்.

உலகமய சூழலும், சீனாவும்:

சீன நாடு, தனது சந்தையை உலகத்திற்கு மேலும் அகலத்திறக்கும் என்ற அறிவிப்பை 19வது சீன தேசிய மாநாடு வெளியிட்டது. இது வியப்பளிக்கும் செய்தி அல்ல  என்கிறபோதிலும், முதலாளித்துவ நாடுகளில் இருந்தபடி, உலகமயத்துடனான இந்த அணுகுமுறையை நாம் எப்படி ஒப்பிட்டுப் புரிந்துகொள்கிறோம்  என்பது மிக முக்கியமானதாகும்.

சீனத்தின் வெற்றியும், பிரம்மாண்ட வளர்ச்சியும், உலகமயத்தின் சாதனைகள் என்று முதலாளித்துவ ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன. அது உண்மையல்ல. இதே உலகமயக் கொள்கைகள், இந்தியாவிலோ, பிரேசிலிலோ  அப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கவில்லை. சீனத்தில் பராமரிக்கப்படும் தனித்துவமான உள்நாட்டுக் கட்டமைப்பு தான் அவர்களின் வெற்றிக்கான ரகசியமாகும்.

சந்தைகளைத் திறக்கும்போது சீனா நவீன தொழில்நுட்ப தேவைகளை நிறைவு செய்துகொள்வதை  கவனத்தோடு உறுதி செய்கிறது. நிதித்துறை உலகமயத்திற்கு வெளியிலேயே, சீனத்தின் வங்கித்துறை நிறுத்தப்பட்டிருப்பதை இங்கே கவனிக்கவேண்டும். அவர்கள் தங்கள் பணமாகிய  யுவானின் மதிப்பை தற்சார்பில் வைத்துள்ளனர். மேலும் உற்பத்தித் துறையில் தனித்தன்மையை பராமரிக்கின்றனர். உலக வங்கியின் பார்வையில் ‘வளர்ந்துவரும்’ பொருளாதாரங்களாக புகழப்படும் நாடுகள், உலகவங்கி கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக வளைந்துகொடுக்கின்றன. ஆனால் சீனா தனது தொழில்துறையை தனித்துவமான முறையில் பராமரிக்கிறது. அதன் மூலமே உலகமயத்தை சூழலையே, தனக்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முடிந்துள்ளது.

சீனம் எதிர்கொள்ளும் சவால்கள்:

சீனத்தின் சமூக நலத்திட்டங்களில், ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டத்தில் பார்க்கும்பொழுது 84 கோடி மக்கள் பதிவுபெற்றுள்ளனர். இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது. அத்திட்டங்களில் 95 விழுக்காடு பலனடைகின்றனர். இந்தச் செலவுகள் உயர்வது ஒரு சவாலாக அமையும் என்றபோதிலும், மனித நாகரீகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தனிச் சிறப்பான பங்களிப்பாக இது அமைந்திடும்.

உலகப் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள, உள்நாட்டு கட்டமைப்புத் திட்டங்களில் பிரம்மாண்ட அரசு முதலீடுகளை சீனா மேற்கொண்டது. அது சீனத்திற்கு சிறப்பான பலங்களையே கொடுத்துவருகிறது திட்டமிட்ட பொருளாதாரப் பாதையில், சீனா தொடர்ந்து நடைபோடும் என்பதையே 19 வது சீன தேசிய மாநாடு காட்டுகிறது. 18 வது மாநாடு முடிந்த 5 ஆண்டுகளில் ஊழல், முறைகேடுகளுக்கு எதிரான வெளிப்படையான போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். அந்தச் சவால் இன்றும் தொடர்கிறது என்பதையே 19வது மாநாடும் உணர்ந்துள்ளது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் ‘மாஸ்லைன்’ கடைப்பிடித்து முன் செல்வதை கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும், மேம்படுத்தியும் வருகிறது. அழகிய சீனத்தைக் கட்டமைப்போம் என்ற முழக்கத்தில், சீனத்தின் சூழலியல் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘மனிதனும் இயற்கையும் உடன்கலந்த உறவோடு வாழ்வதை’ உறுதிப்படுத்துவோம் என அறிவித்துள்ளனர்.

ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ளல்:

பிற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடும், அதன் போராட்டமும் ஏன் முக்கியம் பெறவேண்டும்? என்ற கேள்வி எழலாம்.

இன்று நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலக முதலாளித்துவம், அதிலிருந்து மீள முயற்சித்துவருகிறது. அந்த முயற்சிகளோ மேலும் மேலும் புதிய நெருக்கடிகளையே வரவழைக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைகிறபோது, வங்கிகள் கடன் அட்டைகளைக் கொடுத்து, சந்தையை ஊக்கப்படுத்தினார்கள். இவ்வகையில் வங்கிகள் திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டன. அரசாங்கங்கள் அவற்றைக் காப்பாற்ற வரிப்பணத்தை எடுத்துக் கொடுத்தன. பல அரசுகளே திவாலாகின. முதலாளித்துவம் இப்போது சாமானிய மக்களின் சேமிப்பிலும், உரிமைகளிலும் கைவைக்கிறது.

மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவே போராடும் நிலையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள சுரண்டலுக்கு எதிரான சக்திகள் மக்களின்  இந்தப் போராட்டங்களை முதலாளித்துவ அமைப்பிற்கே எதிராக மாற்ற வேண்டும். சீன கம்யூனிஸ்டுகளின் போராட்டம், முதலாளித்துவ உலகமயத்திற்கு மாற்றைக் கட்டமைக்கும் போராட்டத்தில்  மிக முக்கியமானதாகும்.

இந்த யுகத்தில் (Epoch) , உலகில் மையப் பாத்திரம் வகிக்கும் முரண்பாடு, ‘சோசலிசத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடு’ என சரியாகவே குறிப்பிட்டுள்ளது மார்க்சிஸ்ட் கட்சியின் (14 வது காங்கிரஸ், 1992) தத்துவார்த்த தீர்மானம். எனவே நாம் உலகுதழுவிய பார்வையைக் கொண்டிருப்பதும். சர்வதே அளவில் சோசலிச சக்திகள் வலிமையடைவதை ஊக்கப்படுத்துவதும் தேவையாகும்.

2006 ஆம் ஆண்டில், சீனத்தை உள்ளடக்கி வைக்கும் (contain) கொள்கை ஒன்றை அமெரிக்கா  உருவாக்கியது. ஆசிய பசிபிக் பகுதியில் சீன வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் உத்தியை வகுத்தது. ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் ராணுவக் கூட்டினை ஏற்படுத்துவதை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இந்த முயற்சியை எதிர்கொள்வதில் சீனாவும் கவனம் செலுத்திவருகிறது.

சீனா தொடங்கியிருக்கும் பட்டுச் சாலைத் திட்டம் (One Belt One Road), சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடிய ஒன்றேயாகும். 19 வது மாநாட்டின் தொடக்க நிகழ்வில் ஜீ ஜின்பிங் பேசும்போது, ‘பொறுப்புள்ள நாடாக சீனா தொடர்ந்து தனது பாத்திரத்தை வகிக்கும், உலக ஆளுகை அமைப்பு முறைமைகளை சீர்திருத்துவதிலும் வளர்த்தெடுப்பதிலும் தனது பங்களிப்பைச் செலுத்தும்’ என்று பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஏகாதிபத்திய சவால்களை சீனா எப்படி எதிர்கொள்ளப் போகிறது, உலக அரங்கில் அது வகிக்கப் போகும் பாத்திரம் என்ன என்பது முக்கியமானதாகும். நாம் சீனத்தில் சோசலிச சக்திகள் மேலும் வலுப்பட்டு முன்னேற வேண்டுமென விரும்புகிறோம். சோசலிச சக்திகளின் இடைவிடாத போராட்டம், உலக அரங்கில் அனைத்து நாடுகளின் பாட்டாளி மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராட்டமாகும்.

மக்கள் சீனமே, சோசலிசப் பாதையில் முன் செல்க!

One thought on “மகத்தான வளர்ச்சியின் புதியகட்டத்தில் சீனா !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s