பொதுவாகக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வர்க்க வெகுஜன அமைப்புகளின் ஸ்தாபன தேவை உண்டு. தோழர் லெனின், கட்சி உறுப்பினரின் கடமையில் ஒன்றாக, கட்சியின் அமைப்பில் ஏதேனும் ஒன்றில் செயல்பட வேண்டும் என விதிகளை வகுத்திருக்கிறார். இது குறித்த சர்ச்சை எழுந்த போது அதற்கான நியாயங்களையும் விளக்கியிருக்கிறார். இந்தியாவிலும் பிரதான இடதுசாரி கட்சிகளுக்கு வெகுஜன அமைப்புகள் உண்டு. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில், தமிழகத்தில் வர்க்க வெகுஜன அமைப்புகளை மாவட்டம் துவங்கி, அதற்குக் கீழ் வரை வலுப்படுத்துவதில் பொதுவாக பலவீனம் தொடர்கிறது. இச்சூழலில் இவை அமைக்கப்பட்ட நோக்கத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.
முக்கிய அரசியல் நடைமுறை உத்தியுடன் இணைந்தது:
மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை எட்ட தேவைப்படும் மக்கள் ஜனநாயக அணியை உருவாக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுத்திருக்கும் மிக முக்கிய அரசியல் நடைமுறை உத்தி இடது ஜனநாயக அணியைக் கட்டுவதாகும். இது அரசியல் கட்சிகளின் அணி அல்ல, வர்க்கங்களைத் திரட்டிக் கட்டப்படுவது என்பது நமக்குத் தெரியும். இடைக்கால முழக்கம் என்கிற அந்தஸ்து இதற்கு உண்டு.
கட்சியின் 10வது அகில இந்திய மாநாடு 1978ல் ஜலந்தரில் கூடி தீர்மானித்த இந்த அரசியல் நடைமுறை உத்தி, பின்னுக்குத் தள்ளப்பட்டு, மீண்டும் 21வது அகில இந்திய மாநாட்டில் மீட்டெடுக்கப்பட்டது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளின் கொள்கைகளுக்கும், அரசியலுக்கும் முற்றிலும் மாறான நிகழ்ச்சி நிரலை முன்வைத்து, இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும். மக்கள் முன் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ பாதையா, இடது ஜனநாயக பாதையா என்ற இரண்டே பிரதானமான பாதைகள் முன்னிறுத்தப்படும் போது, அவர்களுக்கு வேறுபாடுகள் புலப்படும். தீர்மானிக்கவும் முடியும்.
அரசியல் உத்திக்குத் தகுந்த ஸ்தாபன ஏற்பாடு:
1978 மாநாட்டின் அரசியல் தீர்மானம் இதை முடிவு செய்த பின், சால்கியா பிளீனம் நடத்தப்பட்டு, இந்த அரசியல் உத்தியை நடைமுறைப்படுத்த பொருத்தமான ஸ்தாபன உத்திகள் விவாதிக்கப்பட்டன. வர்க்க சேர்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும் நோக்குடன் வர்க்கங்களைத் திரட்டுவது என்பது இடது ஜனநாயக அணிக்கான அடித்தளம் என்னும் போது, அவ்வாறு திரட்டுவதற்காக வர்க்க வெகுஜன அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. தொழிற்சங்கம், மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம், எழுத்தாளர் சங்கம் மட்டுமே அக்காலத்தில் செயல்பட்டு வந்தன. சால்கியா பிளீனத்துக்குப் பிறகு தான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டு இதர அமைப்புகள், அண்மை காலத்தில் மாற்று திறனாளிகளுக்கான அமைப்பு, பாலர் சங்கம் போன்றவை உருவாக்கப்பட்டன.
எனவே நாம் அடிப்படையில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது, கட்சி திட்டத்தின் இலக்கை அடைய தேவையான இடது ஜனநாயக அணியைக் கட்டும் துல்லியமான நோக்குடன் துவக்கப்பட்டவை தான் வர்க்க வெகுஜன அமைப்புகள். இந்த நோக்கத்தை நிறைவேற்ற பொருத்தமான அமைப்பு வடிவம், முழக்கம், நடைமுறையோடு இந்த அமைப்புகளை நடத்திட வேண்டும்.
வர்க்க வெகுஜன அமைப்புகளின் ஜனநாயக, சுயேச்சை செயல்பாடு:
உதாரணமாக, கட்சிக்கு அப்பாற்பட்டும், இதர முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்குப் பின்னும் இருக்கின்ற நமது வர்க்கங்களையும், ஒடுக்கப்படும் சமூக பகுதியினரையும் திரட்ட வேண்டும் என்றால், வர்க்க வெகுஜன அமைப்புகள் கட்சியின் துணை அமைப்புகளாக இருந்திட கூடாது. ஜனநாயக தன்மையுடன் சுயேச்சையாக இயங்கும் போது தான், அவற்றின் வட்டம் விரிவாகும். சம்பந்தப் பட்ட மக்கள் திரளை ஈர்த்து, பிரம்மாண்டமான மக்கள் அமைப்புகளாக அவை இயங்க முடியும். பல்வேறு கட்சிகள் மீது பற்று கொண்டவர்கள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்புகள் வைக்கிற முழக்கங்கள், பேசுகிற அரசியல் நேரடி கட்சி மேடையைப் போல் இல்லாமல், அமைப்பின் சுயேச்சை தன்மைக்கு ஏற்ற விதத்தில் இருக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கும் வர்க்க வெகுஜன அமைப்புகளுக்கும் இடையே உள்ள உறவு குறித்து 1981, 2004ல் இரண்டு ஆவணங்கள் கட்சியின் மத்திய குழுவால் வெளியிடப்பட்டுள்ளன. 2015 கொல்கத்தா பிளீனம், வர்க்க வெகுஜன அமைப்புகளின் சுயேசை மற்றும் ஜனநாயகத் தன்மையை வலுயுறுத்துகிற சமயத்தில், அவ்வமைப்புகளின் அன்றாட பணிகளில் கூடுதலாகக் கட்சி தலையிடும் திரிபு இருப்பதாக சுட்டிக் காட்டுகிறது. கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை செயபாட்டாளர்களாகக் கொண்ட குறுகிய வட்டமாகவே வெகுஜன அமைப்புகள் தற்போது இருக்கின்ற நிலை மாற வேண்டும். கட்சியின் வழிகாட்டுதல் என்பது அரங்க பிராக்ஷன் கமிட்டிகள், கட்சி உறுப்பினர்கள் மூலமே அளிக்கப்பட வேண்டும். அமைப்புகளின் கமிட்டிகளில் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் இணைக்கப்பட வேண்டும். இது, ஓரளவு தொழிற்சங்கம், மாணவர் சங்கத்தில் நடக்கிறது. இதர அமைப்புகள் இதை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்தந்த பகுதி மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் வலுவாகத் தலையீடு செய்யும் திறன் பெற்ற அமைப்புகளாக இவை இருக்க வேண்டும். கிளை செயல்பாடு, ஸ்தல போராட்டங்களில் இவை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இப்படி அமைப்புகளை நோக்கி வருகிற மக்கள் திரளை அரசியல் படுத்துவதும், கட்சியை நோக்கி ஈர்ப்பதும், போராட்டங்களில் துடிப்போடு பங்கேற்போரைத் துணைக்குழுவுக்குள் கொண்டு வருவதும் அரங்க பிராக்ஷன் கமிட்டிகளும், கட்சி கமிட்டிகளும் செய்ய வேண்டிய அரசியல் பணிகளாகும்.
நவீன தாராளமய கொள்கைகள் வர்க்கங்களின் மீது உருவாக்கியிருக்கும் தாக்கம் குறித்தும் பிளீன அறிக்கை விரிவாகப் பேசுகிறது. அச்சூழலில் நாம் எடுக்க வேண்டிய பிரச்னைகளும் அடையாளப்படுத்தப் பட்டு, வழி முறைகள் விளக்கப்படுகின்றன. இந்தத் தாக்கம், உள்ளூர் மட்டத்தில் எப்படி பிரதிபலிக்கிறது என்று பரிசீலித்து, அதற்கு ஏற்றாற் போல் போராட்ட வடிவங்களைத் தீர்மானிக்க வேண்டும்.
எனவே, கிளை மட்டத்திலிருந்து இவற்றுக்கான முக்கியத்துவம் துவங்கப் பட வேண்டும். ஏதேனும் ஒரு வர்க்க வெகுஜன அமைப்பில் செயல்படுபவராகக் கட்சி உறுப்பினர் இருக்க வேண்டும் என்ற அமைப்பு விதி, வெறும் சம்பிரதாயம் அல்ல. வர்க்க வெகுஜன அமைப்புகளே கட்சி விரிவாக்கத்துக்கான நுழைவாயில் என்ற புரிதல் இதற்குப் பின் உள்ளது. கட்சி கிளை இருக்கும் இடங்களில், வர்க்க வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதும், அவற்றின் சுயேச்சை மற்றும் ஜனநாயக செயல்பாட்டை உறுதிப்படுத்துவதும், இவ்வமைப்புகள் செயல்படும் இடங்களில் கட்சியை உருவாக்குவதும் முக்கிய பணியாக இருக்க வேண்டும்.
Leave a Reply