மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்துத்துவாவை எதிர்கொள்வது எப்படி?


(வரலாற்று அறிஞர் கே.என். பணிக்கரின் பார்வையில்)

– என்.குணசேகரன்

இந்துத்துவா இயக்கம், தமிழ்நாட்டின் முற்போக்கு  பாரம்பரியம், கலாச்சாரக் கூறுகளுக்கு  முரணானது. தமிழகத்தில் உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வில் பொதுவாக, மனிதநேயமும் மத நல்லிணக்கமும் காலம் காலமாக நிலைத்திருந்தது. இவற்றை அழித்து  வலுவாக இங்கு  காலூன்றிட சங்கப் பரிவார இயக்கங்கள் தீவிரமாக முயற்சிக்கின்றன. இந்த இயக்கங்களும், இவை ஏற்படுத்திடும் வகுப்புவாத உணர்வுகளும் வளர்வது, தமிழகத்தின் தொன்மையான கலாச்சார சிறப்புகளுக்கெல்லாம் விடப்பட்டுள்ள சவால். அது மட்டுமல்ல; நமது பாரம்பரியத்தின் மகத்தான கூறுகள் அனைத்தையும் சுவீகரித்து வளர்ந்து வரும் மதச்சார்பற்ற, இடதுசாரி உணர்வுகளுக்கும் இயக்கங்களுக்கும் இது எதிர்காலத்தில்  பெருந்தடையாக அமைந்திடும்.

சமூகத்தில் மதச்சார்பற்ற உணர்வுகளை மக்கள் நடுவில் வலுவாக வேரூன்றச் செய்திட வேண்டும். இதற்கான கருத்துப் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்படல் வேண்டும். இது மட்டும் செய்தால் போதாது. மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். தெரு, ஊர், ஊராட்சி, நகர அளவில் உள்ளூர் வடிவிலான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படல் வேண்டும். இத்தகு நடவடிக்கைகளில் பெருந்திரளான மக்களை ஈடுபடச் செய்திடும் போது, மதச்சார்பற்ற உணர்வுகள் வலுப்பெற்றுவிடும்; வகுப்புவாத விஷக்காற்று பரவிடாமல் மக்களே தடுப்புச் சுவர்களாக மாறிவிடுவார்கள்.

இந்த நிலையை தமிழகத்தில் எவ்வாறு ஏற்படுத்துவது?மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை? வகுப்புவாதம் குறித்து இப்போதுள்ள புரிதல்கள் யாவை? உண்மையில்,வகுப்புவாதம் எத்தகையது?

இந்த கேள்விகளுக்கு பேராசிரியர் கே.என். பணிக்கரின் எழுத்துகள் வழிகாட்டுகின்றன. வகுப்புவாதம் குறித்த அவரது ஆழமான பார்வையை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

வகுப்புவாதம் எவ்வாறு வளர்கிறது?

வகுப்புவாதம் வளர்கிறது என்பதற்கு அடையாளமாக மூன்று வகையான நிகழ்வுகளை மையமாக வைத்துத்தான் பலர் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

முதலாவதாக ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகள் தங்களது பகுதியிலோ அல்லது மாநிலத்திலோ பரவலான அளவில் செயல்பட்டு வருகின்றன என்றால் அதனை வகுப்புவாத வளர்ச்சியாக பலர் கருதுகின்றனர்.

இந்தப் பார்வை வகுப்புவாத அமைப்புகள் செயல்படாத இடங்களில் வகுப்புவாதம் வளராது என்றும், செயல்படும் சில பகுதிகளில் தான் அந்த உணர்வு இருப்பதாகவும்  கருதிட  இடமளிக்கிறது. இது தவறானது.

இரண்டாவதாக, இரண்டு மதப்பிரிவினருக்கு இடையில் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்று உயிரிழப்புகள், பொருட்சேதம் போன்றவையெல்லாம் ஏற்பட்டால், அந்தக் கலவரம் நடந்த இடத்தில் வகுப்புவாதம் வளர்ந்துள்ளது என்று பலர் கருதுகின்றனர். ஆக மதக்கலவரம் நடக்கும்போது தான் வகுப்புவாதம் வளர்கிறது என்ற முடிவுக்கு பலர் வருகின்றனர். இந்தப் பார்வையிலும் குறை உள்ளது. கலவரம் நடக்கும் இடங்களில் மட்டுமே வகுப்புவாதம் இருப்பதாகவும், இதர இடங்களில்  இல்லை; அந்த இடங்களில் வகுப்புவாதம் வளர வாய்ப்பில்லை என்ற முடிவுக்கும் இட்டுச் செல்லுகிற குறைபாடு இதில் உள்ளது.

மூன்றாவதாக பா.ஜ.க போன்ற வகுப்புவாதக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவது, ஆட்சி அமைப்பது போன்ற அரசியல் மாற்றங்கள் நடந்தால் வகுப்புவாதம் வளர்ந்துள்ளதாக பலர் கருதுகின்றனர். இது, வகுப்புவாதத்தை வெறும் அரசியல் நிகழ்வாக மட்டும் பார்க்கிற பார்வை. இதுவும் பலரின் அணுகுமுறையாக உள்ளது.

இதில் உள்ள தவறு எது?, வகுப்புவாத அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு சங்கப்பரிவாரம் மற்றும் இதர வகுப்புவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தப் பார்வை கவனத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, அண்மையில் பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவிற்கும் தற்போதைய அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரக் கொள்கை சிக்கல்களில் கடுமையான கருத்துச் சண்டை நடந்தது. நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தி விட்டதாக அருண் ஜெட்லியை சின்ஹா குற்றம் சாட்டினார். இந்த கருத்துச் சண்டைகளை விளக்கி பல வார, தினசரி பத்திரிக்கைகள் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டன. இதையொட்டி பலர் இந்த சண்டை பா.ஜக. வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என கருதினர்.

ஆனால் இதுபோன்ற கட்சிக்குள் உள்ள சண்டைகள் என்பன சங்கப்பரிவாரத்தின் ஏராளமான வகுப்புவாத ஸ்தாபனங்களில் ஒன்றான பா.ஜ.க.வில் மட்டும்தான். இதே காலத்தில், பல சங்கப்பரிவாரங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. பசுப்பாதுகாப்பு என்ற முறையில் நடைபெறும் வன்முறைகள், பத்மாவதி திரைப்படத்தையொட்டி கிளப்பப்படுகிற இந்து மதவெறி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடந்து வருகிற தாக்குதல்கள், வெறுப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மட்டத்தில்  மதவெறி தூண்டப்படுகிற அவர்களது பிரச்சாரங்கள் பெரிதாக பலரின் கவனத்தை ஈர்ப்பதில்லை.

வகுப்புவாதத்தை அரசியல் நிகழ்வாக மட்டும் பார்ப்பதில் மற்றொரு குறைபாடும் உள்ளது. வகுப்புவாத அரசியல் கட்சிகள் தேர்தலில் தோல்வி அடைந்தால் வகுப்புவாதம்  தடைபட்டு விட்டது என்ற முடிவுக்கு இந்தப்பார்வை இட்டுச் செல்கிறது. 1984ம் ஆண்டு வெறும் இரண்டு பாராளுமன்ற இடங்களை மட்டும் வென்ற பாரதீய ஜனதா ஆட்சிக்கு அந்தத் தேர்தலோடு அதன் வளர்ச்சி தடைபடவில்லை. அதன் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்தது. எனவே வகுப்புவாத வளர்ச்சி என்பது வெறும் அரசியல் நிகழ்வாக மட்டும் பார்ப்பது சரியல்ல.

தற்போது கூட பிரதமர் மோடி அரசு மக்களிடையே வெறுப்பை வேகமாக ஈட்டி வருகிறது. முந்தைய காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகளை மோடி அரசு மேலும் முனைப்புடன் அமலாக்கி வரும் நிலையில் ஏமாற்றம் அதிகரிக்கிறது. அத்துடன் சங்கப் பரிவாரங்கள் வகுப்புவாத தாக்குதல்களை அதிகரித்து வருவதும் வெறுப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலைமைகளை கண்டு சிலர் வகுப்புவாத எதிர்ப்பினை மெல்லியதாக,மேலோட்டமாக மேற்கொண்டால் போதும் என கருதுகின்றனர். இது தவறானது.

ஆக, வகுப்புவாதம் குறித்த பார்வைக்கு மூன்று அளவுகோல்களை எடுத்துக்கொள்கின்றனர். 1. வகுப்புவாத சங்பரிவாரங்களின் வளர்ச்சி, 2. மதக்கலவரங்கள் 3. அரசியல் நிகழ்வுகள். இந்த மூன்றுமே வகுப்புவாத வளர்ச்சியின் பல்வேறு வெளிப்பாடுகள்தான். ஆனால் இவை மட்டுமே வகுப்புவாதம் என்று கருதுவது தவறு. இவை வகுப்புவாதத்தின் முழுமையான உண்மைத் தன்மையை வெளிப்படுத்தவில்லை.

வகுப்புவாதம் என்பது இதைவிட ஆழமானது; மிக நுண்ணிய அளவில், உடனடி பார்வைக்கு தென்படாதவாறு, அடிமட்டத்தில் மக்களின் உணர்வில் சிறிது சிறிதாக வளர்ந்து வரும் தன்மை கொண்டது.

இதன் வளர்ச்சி இரண்டு கட்டங்களில் நிகழ்கிறது.

வகுப்புவாதத்தின் முதற்கட்டம்

சமூகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் உண்டு. தந்தை, தாய், சகோதரி, சகோதரன் என உறவு ரீதியிலும், தொழிலாளி, விவசாயி என தொழில் ரீதியிலும் பல அடையாளங்கள் உண்டு. இந்த பல வகையான அடையாளங்களில் ஒன்றுதான், இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்ற மத அடிப்படையிலான  அடையாளம். இது ஒவ்வொரு மனிதனின் வழிபாட்டுமுறை, சடங்குகள் போன்ற செயல்பாடுகள்  வழியாக வெளிப்படுகிறது. தொன்றுதொட்டு, இந்த வழிபாட்டு முறைகள், சடங்குகள் அனைத்தும் பெரும்பாலும் குடும்பம் அல்லது கோயிலை மையமாகக் கொண்டு கடைபிடிக்கப்படுகின்றன.

ஆனால் இதில் பெரும் மாற்றம் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. ஊர்வலம், கூட்டங்கள் போன்ற வடிவங்களில் மதச்சடங்குகள், நடத்தப்படுகின்றன. அவை பொது இடங்களில் மக்களை பங்கேற்கச் செய்து நடத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக விநாயகர் வழிபாடு என்பது குடும்ப வழிபாடாக இருந்த நிலை மாறி விநாயகர் ஊர்வலம் என்று பிரம்மாண்டமாக மக்களைக் கூட்டி, நடத்திடும் நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகின்றன.இது போன்று எல்லா மாநிலங்களிலும் பொதுத்தளத்தில் வழிபாட்டு முறைகள் நடத்துகிற வழக்கம் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு பொது நிகழ்ச்சியாக இந்த வழிபாட்டு முறைகள் மாறுகிறபோது மத நம்பிக்கை அல்லது வெறும் மத அடையாளம் மட்டும் உள்ள ஒருவருக்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்துவாக இருக்கும் நான் இந்துக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்வது கட்டாயம் அல்லவா? ராமருக்கு கோயில் கட்ட வேண்டுமென்று ஊர்வலம் நடக்கிறபோது, அதை ஆதரிப்பது இந்துவாகிய எனது கடமை அல்லவா? என்கிற கேள்விகள் இந்துவாகிய  ஒருவரின் மனத்தை நெருக்குகின்றன. அவர் இதையெல்லாம் ஆதரிக்க வேண்டிய மனரீதியான அடக்குமுறைக்கு (Coercion) ஆளாகிறார்.

இதுபோன்ற தருணங்கள் அதிகரிக்கிற போது, ஒவ்வொருமுறையும் அவருக்கு தான் இந்து என்ற உணர்வு வலுப்பெறுகிறது. சிறிது சிறிதாக இந்து என்ற மத அடையாளத்தோடு மட்டும் வாழ்ந்து வந்த ஒருவர், சடங்குகளும்,வழிபாடுகளும், பொது நிகழ்ச்சிகளாக மாறுகிற போது, மிகுந்த மதப்பிடிமானம் (Religiousity) கொண்டவராக மாறுகிறார். இவ்வாறு மத அடையாளம் என்ற நிலை முற்றி, மதப்பிடிமானமாக மாறுவது வகுப்புவாத உணர்வின் முதற்கட்டம்.

வகுப்புவாதமும் சமூகப் பிளவும்

இந்து என்ற மத அடையாள உணர்வு சிறிது சிறிதாக கெட்டிப்படுத்தப்பட்டு மதப்பிடிமானம் என்ற உணர்வு நிலைக்கு ஒருவர் வருகிறபோது அவரிடம் பல்வேறு கருத்துகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது ‘இந்து மதத்திற்கு முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் எதிரிகள்’ என்கிற பிரச்சாரம். இந்த ‘எதிரி’ எனும் பிரச்சாரம் மிக வலுவான அளவில் ஒருவரை வகுப்புவாதியாக மாற்றுகிறது.

ஒவ்வொரு சிக்கலிலும் இந்து என்கிற கோணத்திலேயே அணுகும் நிலை ஏற்படுகிறது.கிரிக்கெட் விளையாட்டு கூட மத அடிப்படையில் சங்கப் பரிவாரத்தினர் பாகிஸ்தானுக்கு எதிராக வெறி ஏற்படுத்துவதற்கு பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே. மோடியும் பல தேர்தல் பிரச்சாரங்களின் போது எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்,இந்து எதிரிகள் என பிரச்சாரம் செய்வதுண்டு.

வகுப்புவாத ஸ்தாபனங்கள் எடுக்கும் ஒவ்வொரு சிக்கலும், ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த சமூகப் பிளவை வேகமாக்குகிறது. இரு மதப்பிரிவினருக்கும் இடையே இதர அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத அடையாளமே மேலோங்கி நிற்கும் நிலை வலுப்பெறுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். ஒரு விழா எடுத்தது பலருக்கு நினைவிருக்கும். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லீம் மதவெறியர்களிடமிருந்து இந்துக்களை காப்பாற்றியவர்கள் என்று ஏறத்தாழ எழுபதுபேரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் விழாவை நடத்தினர்.அதனை முஸ்லீம்களைத் தூற்றிடவும், அன்றைய பிரிவினையின் போது அனைத்துத் தரப்பிலும் மதவெறியர்கள் இருந்தார்கள் என்ற உண்மையை மறைத்து, வெறுப்பு உணர்வுகளை மீண்டும் பெரிதுபடுத்தவும் அப்பிரச்சனையை பயன்படுத்தினர். இவ்வாறு அவர்கள் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேலாக இதே போன்ற பல பிரச்சினைகளை எடுத்து சமூகத்தை பிளவுபடுத்தும் வேலையை இடைவிடாது செய்து வருகின்றனர்.

வேறு எங்கோ நடந்திடும் மதக் கலவரங்கள், பற்றிய செய்திகள் தொலைக்காட்சி,செய்தித்தாள்களில் வரும் போது,இந்துவாக இருப்பவர் மதக் கண்ணோட்டத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக நிலை எடுக்கவும், இஸ்லாமியராக இருப்பவர் இஸ்லாமியர்களுக்கு  ஆதரவாக நிலை எடுப்பதும் வழக்கமாக மாறிவிடுகிறது. சட்ட ரீதியாக அல்லது  ஜனநாயகக் கோட்பாடுகள் அடிப்படையில் அணுகிடும் பார்வை கைவிடப்படுகிறது. அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து சட்டப்பூர்வமான தீர்ப்பினை மதிக்க வேண்டியதில்லை என்ற கருத்து பலருக்கு ஏற்படுவதற்கு இந்த வகுப்புவாத உணர்வே காரணம்.

கல்வி, வரலாறு, ஆன்மீகம், கோயில், உடற்பயிற்சிக்கூடங்கள், ஷாகாக்கள் என பல வகைகளில் செயல்பட்டு வரும் ஏராளமான இந்துத்துவா ஸ்தாபனங்கள் சமூகப் பிளவை ஏற்படுத்தி வகுப்புவாத உணர்வை நீண்டகாலமாக மக்கள் நடுவில் வேகமாக பரப்பி வருகின்றனர். பொதுவாக ஏற்படும் மதப்பிடிமானம் வகுப்புவாத ஸ்தாபனங்களால் வகுப்புவாதம் என்ற நிலைக்கு உயர்ந்து, சமூகம் பிளவுபடும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு பிளவுபட்ட சமூகத்தில் இந்து உணர்வு மேலோங்கி நிற்பதுதான் இந்தியாவை மத அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் என்ற பாசிச அரசை உருவாக்கிட வழிவகுக்கும்.இதுவே அவர்களது தொலைநோக்கு.

1990ம் ஆண்டுகளில் உலகமயம், தாராளமயம் தீவிரமாக பின்பற்றப்பட்ட போது, வகுப்புவாத உணர்வுகளும் வேகமாக வளர்ந்தன. உலகமயம் நுகர்வுக் கலாச்சார உணர்வுகளை வலுப்படுத்தியது.

வாழ்க்கை வசதிக்கான பொருட்களை அடைய வேண்டுமென்ற மோகம், வெறி, குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகரித்தது. விரும்பிய பொருட்களை அடைய இயலாதபோது. தனது வரலாற்று வேர்களை மகத்தானதாக கருதிடும் உணர்வு உருவாக்கப்பட்டது. ‘ இந்துக்களின் வரலாற்றுப் பாரம்பரியம், வேத காலத்தில் இந்து ராஷ்டிரம் கோலோச்சி ஆண்ட பொற்காலம்’ போன்ற கருத்துகளுக்கு நுகர்வு கலாச்சாரத்தால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே ஈர்க்கப்பட்டனர். தங்களுக்கு நுகர்ப் பொருட்கள் கிடைக்க இயலாமைக்கு வேற்று மதத்தினர்தான் காரணம் என்று சிந்திக்கின்றனர். பெரும்பான்மை வகுப்புவாதம் மட்டுமல்ல, சிறுபான்மை வகுப்புவாதமும் இதே காலகட்டத்தில் விரிவாகவும் வேகமாகவும் வளர்ந்தது. எனவே உலகமயமும், வகுப்புவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக விளங்குகின்றன.

தமிழ்நாட்டில் வகுப்புவாதம்

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இந்து முஸ்லீம் வகுப்புவாத ஸ்தாபனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மதச் சார்பற்ற பாரம்பரியம் வலுவாக இருந்த வந்த போதிலும், 1990ம் ஆண்டுகளில் உலகமயச் சூழலில் சமூகப் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் தமிழ்ச் சமூகத்திலும் நிகழ்ந்து வந்துள்ளது.1980ம் ஆண்டுகளில் மண்டைக்காடு கலவரம் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற வகுப்பு மோதல்கள்,கோவையில் நடைபெற்ற நிகழ்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் வேகமாக வளரத் துவங்கின. பிறகு, தேர்தல்களில் தங்களது திராவிட கருத்தோட்டங்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் அதிமுக, திமுக இரண்டும் மாறி மாறி பா.ஜ.க.விற்கு அளித்து வந்துள்ள ஆதரவு, போன்ற பல காரணங்களால் தமிழக அரசியல், சமூக தளத்தில் முக்கிய இடத்தை சங்கப்பரிவாரம் பிடித்துள்ளது.

எனினும், திராவிட கட்சிகளின் வெகுமக்கள் செல்வாக்கு நீடித்து வருவது அவர்களுக்கு முக்கிய தடையாக இருந்து வருகின்றது. இதற்காக அவர்கள் பல கபடத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தமிழக அரசியலில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்று அஇஅதிமுக பிளவுபட்டிருக்கிற நிலையில் எடப்பாடி – பன்னீர்செல்வம் குழுக்களை பயன்படுத்தி தமிழகத்தில் வகுப்புவாதக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதனை உணர்ந்து எதிர்கொள்ள  வேண்டியது கட்டாயமானது.

திராவிட இயக்கத்தை கடத்திட சூழ்ச்சி

பாஜகவின் தமிழகத் தலைவர் அண்மையில் “இந்துத்துவா, திராவிட கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல” என்று கூறினார். இதற்கு ஒரு பின்னணி உண்டு. பத்தாண்டுகளுக்கு முன்பு பாரதீய ஜனதா கட்சியின் ஊழியர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. டெல்லியிலிருந்து வந்த ஒரு தலைவர் கீழ்க்கண்டவாறு ஊழியர்களுக்கு அறிவுரை கூறினார்.

“தமிழக அரசியல் மாறிக் கொண்டு வருகிறது. இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் திராவிட இயக்க பாரம்பரியத்தை கிண்டல் செய்திடக் கூடாது. நாத்திகம் தான் திராவிட இயக்க பாரம்பரியம் என்று கருதுவது தவறு”.

“ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் பரவலாக மக்கள் வழிபடும் தெய்வங்களான அய்யனார், மாரியம்மா – போன்ற அனைத்தையும் திராவிட இயக்க பாரம்பரியம் இல்லையென்று நாம் புறக்கணிக்கலாமா? தெய்வ பக்தியையும், தெய்வத்தின் முன் அனைவரும் சமம் என்ற வலியுறுத்தும் திராவிட பாரம்பரியத்தின் அந்தப் பகுதி உண்மையில் இந்துத்துவாவை சேர்ந்ததாகும்.”

இதுவே தமிழகத்தில் அவர்களது உத்தியாக இருந்து வருகின்றது. திராவிட இயக்கப் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொண்டு இந்துத்துவாவை பரப்பிடும் சூழ்ச்சி இதன் அடிப்படையில் தான் நடைபெற்று வருகின்றது.

திராவிட பாரம்பரியத்தையும், ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாரம்பரியத்தையும் ஒருங்கே சேர்த்து இந்துத்துவாவை நோக்கி மக்களை கொண்டு செல்லும் கபடத்தனம் இங்கே வெளிப்படுகிறது. திராவிட இயக்கம் சமுதாயத்தின் அடித்தட்டில் இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து பிராமணியத்திற்கு எதிராக அவர்களைத் திரட்டியது. அவ்வாறு திரட்டிடும் போது, பிராமணியம், மதப்போர்வையில் பாதிக்கப்பட்ட மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி, அறியாமைக் கடலிலிருந்து அவர்கள் வெளியே வாராமல் தடுத்திருந்தது. எனவே திராவிட இயக்கம் மதத்திற்கு எதிராகவும், மதச்சாயம் பூண்டு கடைபிடிக்கப்பட்டு வந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. எனவே, மத எதிர்ப்பும் நாத்திகமும், மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து பிராமணியத்திற்கு எதிராக அவர்களைத் திரட்டிட பயன்பட்ட கருவிகள். இத்தோடு ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் இணைப்பது திருகல் வேலை அல்லவா?

தமிழக ஆன்மீக பாரம்பரியத்திற்கும் விரோதமானது இந்துத்துவா

ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களில் உள்ள  சொற்செறிவும்,ஆன்மீகக் கருத்துச் செறிவும் பல பகுதி தமிழ் மக்களை ஈர்த்தவை. அவர்களது பாடல்களின் அடிநாதமாக விளங்கும் ஒரு கருத்தை தமிழறிஞர் டாக்டர் தெபொ.மீனாட்சி சுந்தரனார் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“அன்பேசிவம் என்பது திருமூலர் துணிபு. இந்தத் துணிபுடன் அகப்பாட்டு என்ற பெயர்ப் பொருத்தத்தை நாம் அணுக வேண்டும். அதனை ஆராய்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் தாம் அனுபவித்த கடவுள் இன்பத்தை நமக்கு விளக்க வரும்போது. இத்தகைய அகப்பாடல்களாகவே பாடிக் காட்டுகிறார்கள்.

“ஆண்டவனே காதலனாக, தொண்டர்கள் காதலியாக பாடுகின்ற பாட்டையெல்லாம் வெறும் காதல் கதைகள் என்று கொள்வதற்கில்லை.காதற் கதையையும், தாண்டி விளங்கும் கடவுள் இன்ப அன்பின் காட்சியே அங்கெல்லாம் காண்கிறோம்”

நமது கேள்வியெல்லாம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் விளக்குகிற, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழறிஞர்களுக்கெல்லாம் உயரியதாக விளங்கிய ‘அன்பின் காட்சிக்கும்’ இந்துத்துவாவிற்கும் என்ன தொடர்பு? அன்பு என்கிற மனித நேய குணத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத – மனிதர்களை, அவர்கள் சிறுபான்மையினர் என்பதற்காகவே கண்ட துண்டமாக வெட்டிப் படுகொலை செய்திடும் இந்த மதவெறிக் கூட்டத்திற்கும் ஆழ்வார்கள் நாயன்மார் பாரம்பரியத்திற்கும் என்ன உறவு? ஆக, திராவிட இயக்க பாரம்பரியத்திற்கும் முரணானது இந்துத்துவா. அதே நேரத்தில் அன்பு, மனிதநேயம் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழகத்தின் ஆன்மீக பாரம்பரியத்திற்கும் முரணானது இந்துத்துவா. இரண்டையும் ஒன்று சேர்த்து இரண்டு தரப்பினரையும் வென்றெடுக்க முனைகிறது. இந்துத்துவா கூட்டம் இந்த இரண்டு தரப்பாரும் சேர்ந்து தமிழகத்தை இந்தத் தீமையிலிருந்து பாதுகாக்க வேண்டியது முக்கிய கடமையாக தற்போது முன்நிற்கிறது.

அன்றாட வாழ்க்கையில் தலையிடும் சங்கப்பரிவாரம்

மாநில ரீதியாக, திராவிட இயக்க சித்தாந்தத்தை கடத்திட இந்துத்துவா கூட்டம் முயல்கிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள மக்களின் சாதி, மத, கலாச்சார நடவடிக்கைகளை அறிந்து அதற்கேற்ற உத்திகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர்.

ராமர் கோயில் கட்டும் இயக்கத்தை பிரச்சாரம் செய்யும் போதே ஸ்தல அளவில் இருக்கும் மாரியம்மன், காளியம்மன் தெய்வங்களுக்கும் விழா எடுக்கும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர் ஒரே கடவுள் ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என்ற பாசிச கொள்கையை அடைய, தனி தனி கலாச்சாரங்களை அழித்தொழிக்கும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது மிகவும் தந்திரமாக மேற்கொள்ளப்படுகிற கலாச்சார ஒடுக்குமுறை. இந்த ஒடுக்குமுறைக்கெதிராக பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டுவது கட்டாயம்.

இத்துடன், சமூகத்தில் உள்ள பல பிரிவினர்களிடம் செயல்பட்டு இந்துத்துவாவிற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். குடும்பம் மற்றும் உள்ளூர் பகுதி மட்டங்களில் மக்களோடு பிணைப்புகளை ஏற்படுத்தி, தங்களது அமைப்புகளின் நடவடிக்கைகளில் மக்களை பங்கேற்கச் செய்து வருகின்றனர். கோயிலை மையமாக வைத்து மக்களைத் திரட்டும் பணி நடைபெற்று வருகின்றது. பெண்கள், மாணவர்கள் இளைஞர்கள் போன்றோரை ஆன்மீகம், கல்வி சேவைப்பணிகள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என பல்வேறு செயல்பாடுகள் மூலமாக திரட்டுகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. சாதியரீதியில் மக்கள் திரண்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ற முறையில் சாதியத் தலைவர்களை அரவணைப்பது, உள்ளிட்ட பல உத்திகளைக் கையாண்டு மக்களைத் திரட்டுகின்றனர். தலித் மக்களைத் திரட்ட விசேட கவனம் செலுத்துகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆதரவு இல்லாமல் ஓட்டுகளைப் பெற இயலாது. சங்கப்பரிவாரம் தீண்டாமைக்கெதிரானது என்ற தோற்றம் வரும் வகையில் பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கலாச்சாரத்தில் தலையீடு

அன்றாட வாழ்க்கையின் அத்தனைச் செயல்பாடுகளும் கலாச்சாரத்தில் அடங்கும். தமிழக மக்களின் வாழ்வில் மாறுபட்ட பல வாழ்க்கை நடைமுறைகள் உள்ளன. எனினும் சில பாரம்பரிய நடவடிக்கைகள், மதச் சடங்குகள் போன்றவற்றில் பொதுவான தன்மைகள் அதிகமாக உள்ளன. சங்கப்பரிவாரம் கலாச்சாரம் என்பது மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது என்ற பார்ப்பதில்லை. கலாச்சாரம் என்பது முழுக்க முழுக்க மதம் சார்ந்ததாகவே அவர்கள் அணுகுகின்றனர். மதம் சார்ந்த சடங்குகள், பாரம்பரிய நடவடிக்கைகளில் மக்களைத் திரட்டி மக்களது உணர்வில் மதப்பிடிமானத்தை ஏற்படுத்துகின்றனர். விளக்குப் பூஜை, விநாயகர் ஊர்வலம், கோயில் திருவிழா போன்ற அவர்களது பல நடவடிக்கைகள் இந்த நோக்கில்தான் நடத்தப்படுகின்றன. இதற்காகவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவர்கள் கலாச்சார ஸ்தாபனம் தான் என்று சொல்லிக் கொள்கின்றனர். உண்மையில் மனித வாழ்க்கையின் பல்வேறு வகையான இசை, நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் மக்களின் ஆர்வங்களையெல்லாம் அடக்கி ஒடுக்கிவிட்டு மதக் கலாச்சார நடவடிக்கைகளில் மனிதர்கள் அதிக கவனம் செலுத்திட வற்புறுத்தப்படுகின்றனர்.

மதம் தவிர்த்த இதர துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதையும் பயன்படுத்த சங்கப்பரிவாரத்தினர் தயங்குவதில்லை. உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளோரை ஈர்க்கவும் அவர்கள் வாய்ப்பு ஏற்படுத்துகின்றனர். உடற்பயிற்சிக்கான இளைஞர், மாணவர்களின் ஆர்வத்திற்கு தீனிபோடவும், அதே நேரத்தில் அவர்களுக்கு மூளைச் சலவை செய்து இந்துத்துவா கருத்துகளை புகுத்தவும் ஷாகாக்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

மதம் போன்றே, சாதியும் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கினை ஆற்றுகிறது. இன்றைய தேர்தல் ஜனநாயக அமைப்பில் சாதிய ரீதியாக மக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொள்வது தங்களது நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும், பதவி, அந்தஸ்து உள்ளிட்ட பல நன்மைகள் பெற்றிடவும் உதவிகரமாக இருக்கிறது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது. சாதிய நடைமுறைகள், ஒவ்வொரு சாதியையும் அடையாளப்படுத்துகிற பாரம்பரிய நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் கலாச்சாரத்தில் முக்கிய அங்கமாக இருப்பதால்,அதனையும் சங்கப்பரிவாரத்தினர் பயன்படுத்த முனைகின்றனர். சாதிய நடைமுறைகளோடு இணைந்து தங்கள் பக்கம் இழுத்திட அவர்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.

ஆக, சாதி, மதம், பாரம்பரியம் உள்ளிட்ட கலாச்சாரத்தின் அத்துணை அம்சங்களிலும் தலையிட்டு வகுப்புவாத உணர்வை உறுதியாக நிலைபெறச் செய்திட சங்பரிவாரத்தினர் முயற்சிக்கின்றனர். இந்த உண்மைகளை உணர்ந்து மதச்சார்பற்ற சக்திகள் தங்களது அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மதம்: மார்க்சிஸ்ட்களின் அணுகுமுறை

மதம் ஒரு சித்தாந்தம்; அது சுரண்டுகிற வர்க்கங்களின் கருவியாக செயல்படுகிறது என்பதே மார்க்சியத்தின் மையமான கருத்து. அதே நேரத்தில் மதம் இரண்டுவித, செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒரு புறம், மக்களுக்கு தங்களது துன்ப துயரங்களுக்குக் காரணமாக இருக்கின்ற எதார்த்த நிலையை மறைக்கிறது. உண்மை நிலைமைகளை மக்களிடமிருந்து மறைக்கச் செய்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறது. இதையொட்டியே மார்க்சின் வாசகங்கள் – ‘மதம் ஒரு அபின்’ ‘அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சு’ – பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால்,இது, மதத்தின் இரண்டு வித செயல்பாடுகளில் ஒன்று.

மற்றொரு வகை செயல்பாடும் மிக முக்கியமானது. சமூகத்தில் உள்ள நிலைமைகளை எதிர்க்கவும், எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு தேவையான துணிவையும் மதமே வழங்குகிறது. இது பல தருணங்களில் நிகழ்கின்றது. மக்களின் மத நம்பிக்கையே சமூக நிலைமைகளை மாற்றவும், தங்களது துன்ப துயரங்களுக்கு மாற்றினை நாடவும் மக்களுக்கு உறுதியையும், நம்பிக்கையும் வழங்குகிறது.

இதற்கு ‘’ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. இந்திய நாட்டில் வேளாண்மை அமைப்புகள் உருவாவதற்கு முன்பே விவசாயிகளின் எழுச்சிகள், குறிப்பாக ஆதிவாசி மக்களின் போராட்டங்கள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் அவர்களது மத நம்பிக்கை உத்வேகம் அளித்துள்ளது. அதே போன்ற கிறித்துவ மத போதனைகள் இலத்தீன் அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மக்கள் எழுச்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கின்றன.

இந்தியாவில் மத்திய காலத் துவக்கத்தில் நடைபெற்ற பல விவசாயிகளின் புரட்சிகளைப் பற்றி ஆய்வு செய்துள்ள வரலாற்றுப் பேராசிரியர் ஆர்எஸ் சர்மா, “… இந்தப் புரட்சிகளின் தன்மையை ஒருவர் ஆராயும் போது, அடக்குமுறையாளர்களுக்கு எதிராக விவசாயிகள் திரண்டதற்கு மதம் ஆற்றிய பங்கினையும் சரியாக உணர வேண்டும்.” என்று வலியுறுத்துகிறார். மதம் முக்கிய பங்காற்றுவது என்பது விவசாய வர்க்க எழுச்சியின் தனி சிறப்பியல்பாகத் திகழ்கிறது. இது பல நாடுகளில் நிகழ்ந்துள்ளதை வரலாற்றில் காண முடியும்.

இந்த வகையான மதத்தின் செயல்பாட்டில் மார்க்சிஸ்ட்கள் தலையீட்டிற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன. மத நம்பிக்கை உள்ளவர்களோடு தொடர்பு வைத்து, அவர்களது உள்ளத்தில் இதர மதத்தினர் மீதான வெறுப்பை வகுப்புவாதிகள் ஏற்படுத்துகின்றனர். வகுப்புவாதிகளின் இந்தக் கருத்துகள் எல்லாம் உண்மையில் குறிப்பிட்ட மதத்தின் கருத்துகளாக இருக்காது. மக்களை திரித்துக் கூறும் வழக்கம் எல்லா மத வகுப்புவாதிகளிடமும் உண்டு. எடுத்துக்காட்டிற்கு இந்து முன்னணி சார்பில் இராம கோபாலன் பிரச்சாரம் செய்திடும் கருத்துகள் பெரும்பாலும் உண்மையான மதக் கருத்துகள் இல்லை. அதைப்போல முஸ்லீம் தீவிரவாதிகள் பலர் அவ்வப்போது பரப்பிடும் வன்முறை கருத்துகள் குரானில் இருப்பதில்லை. மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் விரும்புகிற சாதாரண மத நம்பிக்கை கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வகுப்புவாதிகள் திசை திருப்புகிறபோது, ஏன் இவற்றை மார்க்சிஸ்ட்கள் அம்பலப்படுத்தக் கூடாது? உண்மையான மதக் கருத்துகளுக்கு பகைமையானது என்பதை ஏன் நிறுவிடக் கூடாது? இதன் மூலம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை வகுப்புவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக மாற்றிட முடியும்.

இதைச் செய்திட வேண்டுமென்றால் மார்க்சிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பெருந்திரள் மக்களோடு தொடர்பும் பிணைப்பும் கட்டாயம் என்பது, மட்டுமல்ல; அவை வலுப்பெற வேண்டும். மத நம்பிக்கை கொண்டோருடன் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் (Dialogue) தேவை. இதைச் செய்வதற்கு மார்க்சிஸ்ட்கள் தங்களது மதம் பற்றிய பார்வையை கைவிட வேண்டும் என்பதில்லை. மதம் ஒரு சித்தாந்தம் எனும் வகையில் அதற்கான சித்தாந்த ரீதியான எதிர்ப்புக் கொள்கையை கைவிடாமலே மேற்கண்ட அணுகுமுறையை பின்பற்ற முடியும்.

மக்களிடையே மதச்சார்பின்மையை வளர்த்திட..

மக்களிடையே மதச் சார்பற்ற உணர்வுகளை மேம்படுத்திட ஏராளமான மதச்சார்பற்ற நடவடிக்கைகள் நடைபெற வேண்டும். இந்த நடவடிக்கைகள் வழியாக மக்களிடம் வகுப்புவாத, மதப்பிடிமான உணர்வுகள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இயலும். மதச்சார்பற்ற உணர்வுகள் நிரந்தரமாக குடிகொள்ளும் நிலையை உருவாக்க மதச்சார்பற்ற நடவடிக்கைகள் தான் மிகவும் அவசியமானது.

ஆனால் பல நேரங்களில் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எப்போதாவது ஒரு முறை எடுக்கப்படும் நடவடிக்கையாக உள்ளது. எங்காவது கலவரம் நடந்தால் அதைக் கண்டித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அல்லது கருத்தரங்கங்கள், விஸ்வஹிந்து பரிஷத் கோயில் கட்ட வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதனை எதிர்த்து ஒரு நாள் தர்ணா எனும் வகையில்தான் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மிக முக்கியமானது, அவை தொடர்ச்சியான தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டிற்கு, ஒரு கிராமத்தில் ஒரு படிப்பகம் திறப்பது என்று முயற்சி துவக்கப்படுகிறது என்றால் இது தொடர் முயற்சிகளுக்கு இட்டுச் செல்லும் படிப்பகத்திற்கான இடம் கண்டுபிடிப்பது, செய்தித்தாள்கள், புத்தகங்கள் அளிப்பற்கான கொடையாளிகளை அணுகுவது, படிப்பகத்தில் வந்த மக்களை படிக்கச் செய்வதற்கு ஆர்வத்தை தூண்டுவது. அவ்வப்போது படிப்பகத்தில் பல கட்டுரைகளை கூட்டாக படித்துக் காட்டுவதற்கும், அதனை கேட்பதற்குமான மக்களை திரட்டுவது – என வகைகளில் இந்த ஒரு சிறிய முயற்சி தொடர் முயற்சிகளுக்கு இட்டுச் செல்லும். எனவே தளராத தொடர்ச்சியான முயற்சிகள் என்பது மதச்சார்பற்ற நடவடிக்கைக்குரிய ஒரு முக்கிய சிறப்பியல்பு.

மற்றொரு மிக முக்கியமான குறைபாடு களையப்படல் வேண்டும். பொதுவாக தற்போது நடைபெறும் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் மக்களை வெறும் பார்வையாளராக இருக்கச் செய்கிறது. ஆர்ப்பாட்டம், தர்ணா தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம் உள்ளிட்ட இந்த வடிவங்கள் மக்களிடம் கருத்துகளை கொண்டு செல்கிற வழக்கமான வடிவங்கள். இந்த வடிவங்கள் முக்கியமானவையே. அவற்றை கைவிட வேண்டியதில்லை. ஏனெனில் இவை ஜனநாயக நடைமுறைகள்.

ஆனால் மக்களின் மதச்சார்பற்ற உணர்வை நிரந்தரமாக அவர்கள் மனதில் நிலை நிறுத்துவதற்கு இந்த வடிவங்கள் போதுமானதல்ல. இதற்கு உள்ளூர் மட்டத்தில், உள்ளூர் மக்களை செயல்பாடுகளில் ஈடுபட வைத்திடும் வடிவங்கள் தேவை. எடுத்துக்காட்டாக, முன்பு குறிப்பிடப்பட்ட படிப்பகம். அதனை நிறுவிட வேண்டுமென்றால் அந்த பணியில் ஏராளமான உள்ளூர் மக்களை ஈடுபடுத்த வேண்டியிருக்கும். இதுபோன்ற உள்ளூர் மக்கள் ஈடுபடும் பல வடிவங்களை கையாள வேண்டும். அவற்றையொட்டி எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் இருக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் அகில இந்திய மாநில, மாவட்ட அளவிலான இயக்கங்கள் அவசியமானவையே. ஆனால் மக்கள் நடுவில் மதச்சார்பற்ற, உணர்வை ஏற்படுத்திட, எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் இருத்தல் கட்டாயம். மாநில மாவட்ட இயக்கங்களை பாதிக்காமலே அவற்றை நடத்திட இயலும். உள்ளூர் அளவிலான செயல்பாடுகளில்தான் அதிக அளவிலான மக்களை ஈடுபடச் செய்திட இயலும். தொடர்ச்சியாகவும் அவர்களை ஈடுபட வைக்க முடியும்.

எண்ணற்ற வாய்ப்புகள்

பல்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் இணக்கமாக வாழ்வதற்கு “மத நல்லிணக்கம் காப்போம்” என்ற முழக்கம் எழுப்பப்படுவதுண்டு.பல கட்சிகள், அமைப்புக்கள்  பல்வேறு மதச் சின்னங்களை அணிந்து, நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

அனைத்து மதம் சார்ந்தவர் களும், பொருளாதார , கலாச்சார உறவுகளால் காலம் காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அன்றாட வாழ்வில் பல சர்ச்சைகள் , கருத்து மோதல்கள் இருந்தாலும், உள்ளுரில் மத அடிப்படையில் மோதல்கள் குறைவு .ஆனால் 1990-க்குப் பிறகு இந்த நிலை மாறி, மத நல்லிணக்கம் மிகவும் பலவீனப்பட்டுப் போனது. மத நல்லிணக்கம் காக்க அடையாளப்பூர்வ பிரச்சாரம் நிகழ்ச்சிகள் போதுமானவை அல்ல.
மதம் சாராத வாழ்வாதாரத் தேவைகளுக்காக, ஒன்றுபடுகிற போதுதான் மத நல்லிணக்க உணர்வை ,  நிலையான மதச்சார்பற்ற கண்ணோட்டம் மக்களிடம் வளரும். எனவே, மக்களிடம்  நெருக்கமாக மேற்கொள்ளப்படும்,தொடர்ச்சியான மதச்சார்பற்ற  நடவடிக்கைகள் அவசியம்.

மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் விரிந்து பரந்துள்ளன. தமிழகத்தில் பாரம்பரியமாக இது போன்ற பல நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. மக்கள் திரளாக கூடுகிற விழாக்கள், நிகழ்ச்சிகள் ஏராளமாக கிராம, நகர அளவில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் தலையிட்டு மதச்சார்பற்ற உணர்வுகளை வளர்ப்பதற்கு திட்டமிட்ட பல முன்முயற்சிகள் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்கள்; கிராமம், தெரு அளவில் ஏராளமானோர் இயல்பாகவே பாடல் இயற்றும் திறன் படைத்தவர்கள் இருக்கின்றனர். ஆறு மாதம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ வர இருக்கின்ற கோயில் திருவிழாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தி அதில் பாட இருக்கும் பாடல்களை அங்கிருப்போரை வைத்து உருவாக்குவது. இதே போன்று விழாவின் போது ஒரு நாடகம் நடத்திட அங்குள்ளவர்களையே தேர்ந்தெடுத்து உருவாக்குவது. விழாவின்போது கண்காட்சி வைப்பதற்கான ஓவியங்களை வரைவதற்கான ஒரு குழுவை உருவாக்குவது – இவ்வாறு விழா என்கிற வாய்ப்பை மட்டும் வைத்து பலரது பங்கேற்புக்கு வழி வகுக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

குடிநீர், சுகாதாரம் போன்ற பலவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் இயக்கங்களை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கும் ஆற்றுப்படுகைச் சார்ந்த மக்களை மையமாக வைத்து அந்த ஆற்றின் வளத்தை பாதுகாக்கும் நீடித்த இயக்கம் ஒன்றை உருவாக்கிடலாம். மக்களின் அடிப்படைப் சிக்கல்களுக்காக நிலைத்து நீடிக்கும் மக்கள் இயக்கங்கள் உள்ளூர்மட்டத்தில் உருவாக்கும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளே. சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பலரை ஈடுபடுத்தி செயலாற்றக்கூடிய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

குடும்ப விழாக்கள் ஏராளமானோர் பங்கேற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவற்றில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. எனினும் பல பாரம்பரிய நடவடிக்கைகளில் கலந்து கொள்வது மதச்சார்பற்றவாதிகளுக்கு அந்த மக்களோடு தொடர்பு கொள்ளவும் அவர்களோடு ஒன்றிணையவும் வாய்ப்பாக அமையும். சடங்குகள் எனும் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கையோடு கூடிய செயல்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் ஈடுபடும் மக்களோடு உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது. அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சடங்குகள் பெயரால் நடக்கும் பல அநீதிகளுக்கு இந்த சடங்குகளை கையாளும் மக்களே தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தவறான இந்த நடைமுறைகளை எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த மக்களிடமிருந்து மதச்சார்பற்றவாதி தனிமைப்பட்டுவிடக்கூடாது.

இவ்வாறு சமூகத்தில் நிலவும் எண்ணற்ற வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்துகிறபோது, வகுப்புவாதத்தை முறியடிக்க முடியும். அதுமட்டுமல்லாது, மதச்சார்பற்ற இடதுசாரி சிந்தனைகளுக்கும் இயக்கங்களுக்கும் தளமாக சமூகத்தை மாற்றிட முடியும்.மதச்சார்பற்ற சமுகமே சோசலிசத்தை அமைப்பதற்கான அடித்தளம்.



One response to “இந்துத்துவாவை எதிர்கொள்வது எப்படி?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: