அக்டோபர் புரட்சி அல்லது நவம்பர் புரட்சி என்றழைக்கப்படும் ருஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு நிறைவு உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது.
இந்த இதழில் தோழர் வாசுகி ருஷ்யப் புரட்சியின் உருவாக்கத்தில் லெனினின் நீங்காத பங்களிப்பை “மகத்தான சோசலிச புரட்சியில் தோழர் லெனின் பங்களிப்பு” என்ற கட்டுரையில் சிறப்பாகச் சுட்டிக்காட்டுகிறார். வரலாற்றில் தனி நபர்களின் பங்கினை மார்க்சியம்தான் சரியாக விளக்குகிறது. உலக, ருஷ்ய சமூகத்தை சோசலிசத்தை நோக்கிய நகர்வுக்கு எடுத்துச்சென்ற புறக்காரணிகளை துல்லியமாக ஆராய்ந்த மாமேதை லெனினின் பங்களிப்பை விரிவாக எடுத்துக் கூறும் கட்டுரை இது.
சர்வதேச அளவில் மார்க்சிய தத்துவத்தை முன்னெடுத்துச் செல்லும் இதழ் மந்த்லி ரிவ்யூ. இதன் ஆசிரியர் ஜான் பெல்லாமிஃபாஸ்டர் எழுதிய புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – 1917 முதல் 2017 வரை என்ற கட்டுரை எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு எதிரான இடைவிடாத போரின் வர்க்கப் பின்னணியையும், அவற்றைத் தெரிந்துணர்ந்து புரட்சியை நிலைக்கச்செய்வதன் தேவையையும் எடுத்துக்கூறுகிறது. தோழர் எஸ்.ரமணி இக்கட்டுரையை தமிழில் வழங்கியுள்ளார்.
சோவியத் புரட்சிக்குப் பிறகு தனிப்பெருமை பெற்றது சீன புரட்சி. அதற்குத் தலைமைதாங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19வதுதேசிய மாநாடு அண்மையில் முடிவடைந்தது. உலக முதலாளித்துவத்தின் இன்றைய ஒற்றைத் துருவ முயற்சியின் பின்னணியில் சீனாவில் சோசலிசக் கூறுகளை மேலும் ஆழமாகப் பதியவைப்பது, சோசலிசத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் சவாலை உலகளாவிய அளவில் எதிர்கொள்வது என்ற நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் 2021 முதல் 2050 வரையிலான 30 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் குறித்த விரிவான விவரங்களை தோழர் இரா. சிந்தன் எழுதிய “மாபெரும் புரட்சியும் மகத்தான வளர்ச்சியும்” என்ற கட்டுரை விளக்குகிறது.
மார்க்ஸ் :200 தொடரின் ஒரு பகுதியாக பேராசிரியர் ட்டி. ஜெயராமன் எழுதிய “அறிவியலைப் பற்றி மார்க்ஸ்” என்ற கட்டுரையின் இரண்டாவது பகுதி வெளியாகிறது. சமூக அறிவியலும் இயற்கை அறிவியலும் இணைந்த இயக்கத்தை அறிந்திட மார்க்சிய இயங்கியலே வழிகாட்டுகிறது என்பதை எடுத்துக் காட்டும் இக்கட்டுரை மார்க்சிஸ்ட் வாசகர்களின் தீவிர வாசிப்பிற்கு உரியது.
கட்சித் திட்டம் பற்றிய தொடரில் இந்த இதழில் அயல்துறை கொள்கை குறித்த கட்சியின் பார்வையை எஸ்.பி. ராஜேந்திரன் விளக்கியுள்ளார்..
கேள்வி-பதில் பகுதி கட்சி ஊழியர்களின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறது.
வாசகர் வட்டத் தோழர்கள் இக்கட்டுரைகளை ஆழ்ந்து படித்து, விவாதிக்கவும், கட்டுரைகள்குறித்த கருத்துகளை தெரிவிக்கவும் வேண்டுகிறோம். இதழை மேலும் செழுமைப் படுத்த ஆலோசனைகளும் தேவைப்படுகிறது.
மார்க்சிஸ்ட் இதழை விரிவாகக் கொண்டு செல்ல சந்தா சேகரிப்பு இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று வலுப்படுத்தி மார்க்சிஸ்ட் இதழ் மேலும் சிறப்பாக வருவதற்கு உதவி புரிய வேண்டுகிறோம்.
இனிவரும் நாட்களில் மார்க்சிஸ்ட் இதழ் கட்டுரைகள் ஒலி வடிவிலும் கிடைக்கும். வாசிக்க சிரமமுள்ளோர், பார்வை குறையுடையோர் மற்றும் பயணத்தில் வாசிப்பவர்கள் இந்த வசதியால் சிறப்பாக பயனடைய முடியும். marxist.tncpim.org தளத்திலும், செயலியிலும் இந்த வசதி கிடைக்கும்.
Leave a Reply