கீழவெண்மணி எனும் வீரவெண்மணியில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வீறுகொண்டெழுந்தனர். செங்கொடி இயக்கம் விதைத்த வித்துக்கள் முளைத்துப் பயிராயின. ஆண்டைகள் எனும் நிலப் பண்ணையார்கள் முன் ‘கையது கொண்டு மெய்யது போர்த்தி’ கூனிக் குறுகி நிற்க வேண்டும்; தோளில் கிடக்கும் துண்டு இடுப்புக்குவர வேண்டும்; காலுக்குச் செருப்புமின்றி கால்வயிற்றுச் சோறுமின்றி வீணுக்கு உழைக்க வேண்டும். கேள்விக்குறிபோல் வளைந்த முதுகு கொஞ்சம் நிமிர்வதுபோல் தெரிந்தால் சவுக்கடி வாங்க வேண்டும்; சாணிப்பால் குடிக்க வேண்டும்.
இது என்னாங்கடா நியாயம் என்ற கேள்வியோடு கூலித் தொழிலாளர்களாக, பண்ணை அடிமைகளாகவும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டியது, செங்கொடி இயக்கம்.
காற்றும் மேலே பட்டுவிடாத படிக்கு தூரத்தில் நின்றே பேசிய பண்ணையார்த் தனத்திலிருந்து முழுவதும் மாறுபட்டு தோளில் கைபோட்டு தோழமை கொண்டாடியது மார்க்சிய இயக்கம். அந்தப் புல்லரிப்பில் – நெஞ்ச நெகிழ்ச்சியில் – துணிச்சல் துளிர்விட்டது.
நாம மனுசங்கடா. பண்ணையார்களைப்போல கண்ணும் காதும் மூக்கும் வாயும் காலும் கையும் கொண்டமனு சங்கடா. அதிலும் உட்கார்ந்து தின்னாமல் உழைத்து வாழ்கிற மனுசங்கடா என்ற உண்மை, ஒளியை ஏற்றியது. அதன் வெளிப்பாடாய் தஞ்சைத் தரணியின் கிராமங்களில் தென்பரை முதல் வெண்மணி வரை செங்கொடிகள் உயர்ந்தன. அடிமைவாழ்வுக்கென்றே பெற்றுப் போடப்பட்டவர்கள் அல்ல; நமக்கென உரிமைகள் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பெறவும் கிடைக்காவிட்டால் போராடிப்பெறவும் தயாராக வேண்டும் என்ற வர்க்கப்பாடத்தின் அரிச்சுவடி பயிற்றுவித்தது செங்கொடி.
பள்ளிக்குச் சென்று படிக்காதவர்களுக்கும் பாடம் நடத்தியது செங்கொடி இயக்கம். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற்று வர்க்கப்போராட்டமே வாழ்க்கையைக் கடைத்தேற்றும் என்ற முடிவுக்கு வந்தார்கள். இதனைக் கீழவெண்மணியின் வரலாறு துல்லிய மாக சொல்கிறது.
வெண்மணியும் செங்கொடி இயக்கமும்
தாங்கள் பண்ணையார்களால் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, விவசாயக் கூலித் தொழிலாளர்களும் கூட என்ற தெளிவான உணர்வு பெற வைத்தது செங்கொடி இயக்கம். அதனால்தான் வஞ்சனைக்கும் அஞ்சிடோம்; மிரட்டலுக்கும் பணிந்திடோம். உயிரையே பறிப்பதென்றாலும் செங்கொடியை இறக்கமாட்டோம் என்று சூளுரைத்து நின்றார்கள்.
இத்தகைய செங்கொடி இயக்க வளர்ச்சி கண்டு மிரண்ட பண்ணையார்கள், 1966-ல் மஞ்சள் கொடியின் கீழ் நெல்உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கினார்கள். செங்கொடியை இறக்கிவிட்டு மஞ்சள் கொடியோடு இணைந்து விட்டால் கூலி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் தருவதாக பசப்பு வார்த்தைகள் பேசினார்கள். நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை பேசுகிறார்கள் இவர்கள் என்பதைக் கண்டுணர அந்தத் தொழிலாளர் களுக்கு அதிக காலம் தேவைப்படவில்லை.
வெண்மணியில் விவசாயக் கூலியாக அரைப் படிநெல் அதிகம் தருவது பண்ணையார்களுக்குப் பெரிய பிரச்சனை அல்ல; கெஞ்சிக் கேட்டால் கொஞ்சமாவது கொடுத்திருப்பார்கள். ஒரு கொடியின் கீழ் உருக்கு போன்ற இயக்கமாகக் கேட்டதைத்தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
சேரியில் வசிக்கும் பெண்கள் சிவப்பு ஜாக்கெட் அணிந்தால் கிழித்திருக்கிறார்கள். ஆண்கள் சிவப்பு துண்டுபோட்டால் எரித்திருக்கிறார்கள். இந்த விவரங்கள் வெண்மணி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ளன.
ஆதிக்கத்தில் திளைத்த பண்ணையார்கள்
சேரியில் ஒருவன் செத்துப்போனால் தூக்கிப் போட்டுவிட்டு வேலைகெடாமல் பணிக்கு ஓடி வந்தவர்கள் இந்த அடிமைகள். இப்போது பக்கிரிசாமி மரணத்திற்காக ஒருநாள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்; இது தகுமா? என்பதுதான் பண்ணையார் களின் முதல் கேள்வி.
மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அது அவர்களின்பாடு; அரசாங்கத்தின்பாடு; நிலத்தில் கூலி வேலை செய்து கும்பி கழுவும் இவர்களுக்கு என்ன வந்தது? அந்த மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்துவிட்டு வேலை பார்க்கவில்லை; ஒருநாள் வேலை நிறுத்தமும் செய்கிறார்கள். இந்த ஒற்றுமை உணர்வு எங்கே கொண்டுபோய்விடும் என்பது அவர்களின் இரண்டாவது கேள்வியோடு கலந்த அச்சம்.
இவர்கள் வேலைக்குவராமல் ஒழியட்டும். வெளியூரிலிருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டுவந்து வேலை செய்யவும்விடமாட்டேன் என்கிறார்கள். திமிரை அடக்க அபராதம் போட்டால் அதையும் தரமாட்டோம் என ஒன்று கூடித் தீர்மானம் போடுகிறார்கள். கல்லெறிந்தால் பறந்துவிடும் காக்கைகளாக இருந்தவர்கள் இன்று சிலிர்த்தெழும் சிங்கக் கூட்டமாக மாறி யிருக்கிறார்கள். மாறவிடலாமா என்பது அவர் களின் அடுத்த கேள்வி. மாறாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்ற சதித்திட்டமும் இதோடு உருவாகிறது.
வர்க்க நீதியின் வெளிப்பாடு
15.12.68 அன்று “இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் அராஜகப் போக்கு குறித்து” சொற்பெருக்காற்ற நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ப்பி.கோபாலகிருஷ்ணநாயுடு தலைமையில் கீழ வெண்மணியில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது.
பண்ணையார்களின் பலத்தைக்காட்டி அச்சுறுத்த மணலூரில் தொடங்கி கிள்ளுக்குடி அய்யடிமங்கலம் வழியாகவும் இரிஞ்சூரில் தொடங்கி அணக் குடி, அய்யடிமங்கலம் வழியாகவும் கீழவெண் மணிக்கு இரண்டு ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்குமுன்னதாக 05.12.68 தேதியிட்டு சிபிஐ (எம்) நாகை தாலுகா செயலாளர் வீ.மீனாட்சி சுந்தரம், பண்ணையார்கள் மற்றும் நெல்உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்ட கூலித் தொழிலாளர்களை அழிக்கத்திட்டமிடுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களுடன் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆக கீழவெண்மணியில் மட்டுமல்ல தஞ்சை மாவட்டத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை நீதிபதிகள் கூட அறிந்தே இருந்தனர்.
“கடந்த பல ஆண்டுகளாக தஞ்சாவூரின் வசதியற்ற கிசான் (விவசாயி)களுக்கும் வசதி படைத்த பரம்பரை நிலப்பண்ணையார்களுக்கும் இடையே கடுமையான வர்க்கப் போராட்டம் நடந்து வருகிறது” என்று வெண்மணி வழக்குத் தீர்ப்பில் நீதிபதிகள் குறிபிட்டுள்ளனர்.
அது மட்டுமல்ல “தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் மனிதாபிமானம் அற்றதாகவும், பழிபாவங்களுக்கு அஞ்சாததாகவும் தெரி கின்றன” என்றும் கூறியிருக்கிறார்கள்.
நீதிபதிகளின் ஆரம்பகட்ட வார்த்தைகள் ஓரளவு உண்மையின் பக்கம் இருப்பதுபோல் தோன்றினாலும் கடைசியில் அவர்களின் மனங் களை வர்க்க நீதியே ஆட்கொண்டிருக்கிறது.
44 பேர் எரிப்பு கொலை அல்லவா?
கீழவெண்மணியில் ராமய்யாவின் குடிசைக்குள் தஞ்சம் புகுந்த 44 பேர் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போதும் கொலை என்பதற்கான இ.பி.கோ 302 பிரிவு முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையால் சேர்க்கப்படவில்லை என்பது முதல் சறுக்கல் என்று தோழர் கோ.வீரையன் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார். இதுவே முழுமையான சறுக்கலைக் கொண்டுவந்தது என்பதை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புப்பகுதி எடுத்துரைக்கிறது.
“அரசுசாட்சி (ராமய்யாவின்) வீட்டில் தஞ்சம்புகுந்த 42 அப்பாவி விவசாயிகள் அந்த வீட்டுக்குத் தீவைக்கப்பட்டதால் உயிர் இழந்திருக் கிறார்கள் என்பது உண்மையிலேயே வருந்தத் தக்கது. வீட்டுக்குத் தீவைத்தவர்களுக்கு அந்த வீட்டுக்குள் 42 பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாது என்பதையும் அவர்களை எரித்துக் கொல்லவேண்டும் என்றநோக்கம் இல்லை என்பதையும் அறிவது கொஞ்சம் ஆறுதல் அளிப் பதாக இருக்கிறது. இந்த அப்பாவி விவசாயி களைக் கொல்வது அந்தக் கலவரக் கும்பலின் பொதுநோக்கத்தின் பகுதியாக இருக்கவில்லை என்று மதிப்புக்குரிய அமர்வு நீதிபதி (நாகை விசாரணை நீதிமன்றம்) கண்டறிந்துள்ளார். நாங்களும் இதனை ஏற்கிறோம்……
ஆனால் குற்றவாளியை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குத் தேவையான சாட்சியம் எங்களுக்குக் கிடைக்காததற்காக வருந்துகிறோம்” தீர்ப்பின் இறுதிப்பகுதியில் இவ்வளவு வருத்தப் பட்டாலும் நடுப்பகுதியில் நீதிபதிகள் கொண் டிருந்த கருத்து வர்க்க நீதியை அடையாளம் காட்டுகிறது.
“பதிவான சாட்சியங்களைக் கொண்டு பார்க்கும்போது இருக்கை பக்கிரிசாமிப்பிள்ளை தலை மையிலான வெளியூர் கூலியாட்கனைத் தாக்கி இறுதியாக அவரைக் கொன்றதன் மூலம் விவசாயி கள் தான் வலுச்சண்டைக்கு சென்றிருப்பதுதெரிகிறது”
நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆரம்பித்தது, விவசாயக் கூலித்தொழிலாளர்களை மிரட்டியது, வீடுகளை சூறையாடியது, சிவப்பு துணிகூட ஆடையாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் கிழித்தது, எரித்தது, வேலை நிறுத்தம் செய்ததற்காக அபராதம் விதித்தது, செலுத்தா விட்டால் பின் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று மிரட்டியது போன்றவற்றுக்கான சான்றா வணங்கள் எல்லாம் பண்ணையார்களின் வலுச் சண்டைக்கு ஆதாரங்களாக நீதிபதிகளின் கண் களுக்குப்பட வில்லை என்பதுதான் ஆளும், அதிகார வர்க்கப்பார்வை
குற்றத்திற்கு ஆதரவாய் வியாக்கியானங்கள்:
இதற்கும் மேலதிகமாக ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது.
“இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர் களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக் காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப் பார்கள்(?) இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீவைத்திருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது, தங்களுக் கென்று ஏராளமான நிலங்களைக் கொண்டுள்ள மிராசுதாரர்கள் முர்க்கமான மற்றும் பட்டினி கிடக்கிற தொழிலாளர்களைவிட அதிகம் பாது காப்புடனே இருப்பார்கள் – மிராசுதாரர்கள் பின்னால் இருந்துகொண்டு கூலிக்கு அமர்த்திய தங்களின் கையாட்களைக் கொண்டே குற்றங்களைச் செய்வார்கள் என்றே எவரும் எதிர்பார்ப் பார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக எவ்வளவு வியாக்கியானம்! வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற நகைச்சுவை காட்சிபோல, அதிக நிலம் வைத்திருப்பவர்கள், சொந்தாமாகக் கார் வைத்திருப்பவர்கள் நடந்து வந்து குற்றம் செய்வார்களா என்பதொரு சந்தேகம். அடுத்தது வசதிபடைத்தவர்கள் தவறுசெய்தாலும் பாதுகாப்புடனேயே இருப்பார்கள்; யாரையாவது ஏவிவிட்டுப்பின்னாலிருந்துதான் இயக்குவார் கள். அடடா! எப்படிப்பட்ட ஆளும் வர்க்கப் பார்வை இதில் பளிச்சிடுகிறது.
இந்தப் பார்வையால் தான் முதலாவது எதிரி ப்பி.கோபாலகிருஷ்ணநாயுடு உட்பட 8 பேருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை அமர்வு நீதிமன்றம் விதித்த தண்டனையையும் கூட உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. உச்சநீதிமன்ற மும் இதனை உறுதிசெய்துவிட்டது.
ஆளும் வர்க்கக்கண்ணோட்டத்தோடு தீர்ப்பு கள் வழங்கப்பட்டாலும் தொழிலாளி வர்க்கப் பார்வையையும் பாடத்தையும் செயல்பாடுகளை யும் தான் வெண்மணி நிகழ்வுகள் தொடர்ச்சி யாகக் காட்டுகின்றன.
தாழ்த்தப்பட்டோர் என்று சாதிக் குறிப்பிடப் பட்டாலும் அவர்கள் தங்களை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என வர்க்க உணர்வோடும்அறிந்துகொண்டிருந்தார்கள். உணரவைக்கப்பட்டார்கள். அதனால்தான் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைத் தீவிரமாகவும் உறுதியாகவும் எதிர்த்து நின்றார்கள். தொழிலாளி வர்க்க உணர்வோடு இருந்ததால்தான் தங்களின் கூலி உயர்வுக்காக மட்டுமின்றி ஒப்பீட்டளவில் மாத ஊதியத்தோடு வாழ்க்கைப் பாதுகாப்புள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
42 பேர் (நீதிமன்ற ஆவணப்படி) தீயில் கருகி மாண்ட கீழவெண்மணியில் ஏற்பட்ட துயரச் சம்பவம் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கி யிருக்கிறது. இந்தச் சம்பவம் பற்றிய செய்தி இங்கிலாந்தில் உள்ள செய்தி ஏடுகளில் கூட 1968 டிசம்பர் 27 அன்று வெளியாகியிருக்கிறது.
இருசாதிகளுக்கு இடையேயான மோதலாக வெண்மணியைச் சுருக்க முயற்சி செய்ததெல்லாம் பொய்யாய் பழங் கதையாய்ப் போயேவிட்டது. அது வர்க்கப் போராட்டத்தால் ஏற்பட்ட துயர சம்பவம் என்றாலும் 50 ஆண்டுகளாக அந்த வர்க்கத் தீ உழைப்போர் மனங்களில் அணையாத் தீயாகப் பற்றிப் பரவிக்கொண்டே இருக்கிறது. அது ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத் தையும் சுட்டெரித்து தொழிலாளி வர்க்க தலைமை யிலான அரசை சமைக்க உதவும் என்பது நிச்சயம்.
One thought on “வெண்மணி வழக்கில் வெளிப்பட்ட வர்க்க நீதி”