வெண்மணித் தியாகிகளின் 50 வது ஆண்டை நோக்கி இந்த இதழில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன., வெண்மணித் தீர்ப்பில் வழங்கப்பட்ட நீதி எப்படி வர்க்க நீதியாக அமைந்தது என்பதை தோழர் மயிலை பாலு விளக்குகிறார். வெண்மணி சம்பவத்தைத் தொடர்ந்த இயக்கங்களில் முக்கிய பங்கு வகித்த தோழர் கோ.வீரய்யனின் நேர்காணலை இந்த இதழ் பதிவு செய்கிறது.
சமீப நாட்களில் இந்தியாவெங்கும் நடைபெற்றுவரும் தலித் எழுச்சி குறித்த கட்டுரையை தோழர் சுபாஷிணி அலி எழுதியுள்ளார். கேரளத்தில் நடைபெற்ற இ.எம்.எஸ் நினைவு கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரைக் குறிப்பை, மார்க்சிஸ்ட் இதழுக்காக மேம்படுத்திக் கொடுத்துள்ளார். சாதியும், வர்க்கமும் பின்னிப் பிணைந்த இந்திய சமூகத்தில், மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டிய அரசியல், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சமரசமற்ற போராட்டம் குறித்த விவாதத்திற்கு இக்கட்டுரை உதவியாக அமையும்.
வகுப்புவாதிகள் நிகழ்த்திக் காட்டிய பாபர் மசூதி இடிப்பு, இந்திய அரசியலில் தாக்கம் செலுத்திய நிகழ்வாகும். 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மத்தியில் இந்துத்துவவாதிகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி,, பெரும்பான்மையோடு ஆட்சி நடத்திவருகின்றனர். வகுப்புவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது, மதச்சார்பின்மையை வலுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை பேராசிரியர் கே. என். பணிக்கரின் கருத்துக்களை அடியொற்றி என்.குணசேகரன் தனது கட்டுரையில் விளக்குகிறார்.
பிரண்ட்லைன் இதழில் வெளியான, ‘இந்தியா உருவான விதம்‘ என்ற ஷிரீன் மூஸ்வியின் உரை, இந்த இதழில் இடம்பெறுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள் சிந்துவெளி நாகரீகத்தில் அடைந்த வளர்ச்சியும், அதன் மறைவுக்கு ஒட்டிய காலப்பகுதியில், நாடோடிகளாகத் திரிந்த குல மரபைக் கொண்ட மனிதர்களின் ரிக் வேதப் பாடல்கள் என தேடித்தேடி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வழியே, இந்தியா ஒரு தேசமான பரிணமித்துக் கொண்டிருக்கும் நீண்ட வரலாற்றை விளக்குகிறார். இக்கட்டுரையின் ஒரு பகுதி இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. ஆழ்ந்த வாசிப்புக்கான கட்டுரையாகவும், வரலாற்றை வகுப்புவாத அடிப்படையில் திரிக்கும் முயற்சிகளுக்கான பதிலாகவும் இக்கட்டுரை அமைகிறது.
கட்சித் திட்டம் குறித்த தொடரின் இப்பகுதியை ஆர்.எஸ்.செண்பகம் எழுதியிருக்கிறார். மக்கள் ஜனநாயகத் திட்டம் குறித்துப் பேசுகிறது இக்கட்டுரை. கேள்வி பதில் பகுதியை உ.வாசுகி எழுதியுள்ளார். வர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்த பதிலாக இது அமைந்திருக்கிறது.
வாசகர் வட்டங்களில் இக்கட்டுரைகள் ஆழ்ந்து வாசிக்கப்படுவதை உறுதி செய்வதும், விவாதங்களின் குறிப்புகளை ஆசிரியர் குழுவிடம் பகிர்ந்துகொள்ளவும் வேண்டுகிறோம். இதழை மேலும் செழுமைப்படுத்திட ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. மார்க்சிஸ்ட் இதழை விரிவாகக் கொண்டு செல்ல சந்தா சேர்ப்பு இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று வலுப்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்.
வரும் ஜனவரி மாத இதழில் இருந்து, மார்க்சிஸ்ட் இதழின் கட்டுரைகள் ஒலி வடிவிலும் செயலியில் இடம்பெறும். இணையம் மற்றும் செயலி வழியே புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும்.
– ஆசிரியர் குழு
Leave a Reply