“வாழ வைத்தது இந்த செங்கொடிதான்!”


நவம்பர் 20 அன்று 86 வயதை எட்டிய தோழர் கோ.வீரய்யன் தமிழக விவசாய சங்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் ஆவார். 1968 டிசம்பர் 25 அன்று இரவில் கீழத்தஞ்சையில் கீழ்வெண்மணி கிராமத்தில் ராமய்யாவின் குடிசையில் ஒளிந்திருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனிதாபிமானம் மிக்க அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கி, உருக்கிய கோர சம்பவம் ஆகும். தமிழகத்தின் மீது ஆறாக் கறையை படிய வைத்த  இந்தச் சம்பவம் குறித்த தன் அனுபவத்தை தோழர் கோ.வீரய்யன் நம்முடம் பகிர்ந்து கொள்கிறார்:

கோ. வீரய்யன்:  வெண்மணியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அது மிகப்பெரிய தொரு கோர நிகழ்ச்சி. மனிதன் என்ற பெயரில் இருந்த மனித மிருகங்களால் நிறைவேற்றப்பட்ட ஒன்று. இது மனிதர்களால் செய்யக் கூடிய ஒரு செயலல்ல.  மிராசுதார்கள் கூலித் தொழிலாளிகளிடம் வெச்ச கோரிக்கை ஒண்ணே ஒண்ணுதான். நீங்க கேக்கற கூலியைத் தர்றோம். அதுக்குப் பதிலா நீங்க செவப்புக் கொடியை எறக்கிட்டு, நெல் உற்பத்தியாளர் சங்கக் கொடியை ஏத்துங்க என்பதுதான். அதுக்கு அந்த ஜனங்க  இதைத்தான் பதிலாச் சொன்னாங்க: “  பண்ணை அடிமைகளா இருந்த எங்களை விடுவிச்சி, சுதந்திர மனிதர்களா நடமாட வெச்ச, வாய் பேச முடியாம இருந்த எங்களை உரிமைகளுக்காக பேச வெச்ச, நடக்க முடியாம இருந்த எங்களை நடக்க வெச்ச, துண்டை இடுப்பிலும், வேட்டியை தலையிலும் கட்டிட்டு இருந்த எங்களை வேட்டியை இடுப்பிலும், துண்டை தோளிலும் போட வெச்சி எங்களை வாழவெச்சது இந்தச் செங்கொடிதான். அதை எக்காரணம் கொண்டும் நாங்க கீழே இறக்க மாட்டோம்.  அவங்களுக்கு நல்லாவே தெரியும். இவங்க ஏமாத்துறாங்கன்னு. கொடியை கீழே எறக்கினாலும் சொன்ன மாதிரி கூலி ஒண்ணும் தரமாட்டார்கள் என்பதை அனுபவத்திலிருந்தே அந்த மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள்.

அதுக்கு முன்னால (தஞ்சை) மாவட்டம் முழுவதிலும் தொடர்ந்து கூலிக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 1967 நவம்பரில் மன்னார்குடியில் ஒரு முத்தரப்பு மாநாடு நடந்தது. அதில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மிராசுதாருக்கும் கூலித்தொழிலாளிக்கும் பிரச்சனை ஏற்பட்டால் அரசு நிர்வாகம் தலையிட்டு அதைப் பேசித் தீர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் கிசான் தாசில்தார் என்ற பதவி. இது அதற்கு முன்னால் இருந்ததில்லை. அதே மாதிரி உருவானதுதான் கிசான் போலீஸ். இந்த அமைப்புகள் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக கிசான் என்ற பெயரில் அமைந்திருந்தாலும் கூட அவை கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. மிராசுதார்களுக்கு ஆதரவாகவே இருந்தன.

அதே போலத்தான் வெண்மணியிலும் பிரச்சனை இருந்தது. ஒரு கலம் நெல் என்பது 48 படி. இப்படி ஒரு கலம் அறுவடை செய்வதற்கு கூலியாக 6 படி வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அதே மாவட்டத்தில்  மன்னார்குடி தாலுக்கா பூந்தாழங்குடிக்குப் பக்கத்தில் கருப்பூர் என்று ஒரு கிராமத்தில் இருந்த மிராசுதார்கள் அனைவரும் முஸ்லீம்கள். அந்த கிராமமே முஸ்லீம்களின் கிராமமாக  இருந்தது. இவர்களுக்கு கூத்தாநல்லூரில் இருந்தவர்கள் உறவினர்கள். பலர் அங்கிருந்து வந்தவர்களும் கூட. இவர்களின் பண்ணைகளுக்கு பெயர் எதுவும் கிடையாது. நெம்பர்தான். ஒண்ணாம் நெம்பர் பண்ணை; ரெண்டாம் நெம்பர் பண்ணை இப்படி. இதில் கருப்பூர் ஆறாம் நெம்பர் பண்ணையில் அறுவடை. அந்த மிராசுதார் கூலித் தொழிலாளிகள் கேட்ட 6 படி நெல்லை கூலியா கொடுத்திட்டாரு. மறுநாள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தப்பு அடித்தபடி வர, அடியாட்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆண், பெண்கள் எல்லோரையும் அடித்து கரையேற்றினார்கள். கண்ணில் பட்ட செங்கொடிகளை எல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள். இப்படி செய்து கொண்டிருக்கும்போதே, பூந்தாழங்குடி கிராமத்துல இருந்த செங்கொடியை வெட்டி வீழ்த்த வந்தபோது, அங்கிருந்த மக்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து அதைத் தடுத்தாங்க. அப்போ அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில்  அந்த கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி என்பவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் முதல் களப்பலியானவர் பூந்தாழங்குடி பக்கிரி. இதில் வரலாற்றுச் சிறப்பு என்னவென்றால் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தபிறகு காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய போராட்டத்தில்  களப்பலியானவர் ஆதனூர் நடேசன். அவரும் செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். அவங்க மோசமானவங்கன்னு சொல்லி 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதே போன்ற தாக்குதலில் தோழர் பக்கிரி களப்பலி ஆனார். பின்னர் ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக ஆட்சியிலும் களப்பலியானவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர்தான். அதுவும் கூட பூந்தாழங்குடியில்தான். இது ஒரு வரலாற்று நிகழ்வு.

1967 நவம்பரில் நடந்த பூந்தாழங்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாங்கூர் பழனிச்சாமி தலைமையில் நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம். அதில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய சிக்கல் பக்கிரிசாமி இரவு 10-11 மணிக்கு சிக்கல் கடைத்தெருவில் வைத்தே வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்துதான் வெண்மணி வருகிறது. அங்கும்கூட கூலித் தொழிலாளர்கள் ஆறுபடி கூலிதான் கேட்டார்கள். வேறு எதுவும் கேட்கவில்லை. நிலம் வேண்டுமென்றோ, வீடு வேண்டுமென்றோ அவர்கள் கேட்கவில்லை. இப்போ ஐந்தே கால் படி, ஐந்தரை படின்னு கூலி இருக்கு. அதை ப்ளாட் ரேட்-ஆ ஆறு படியா குடுங்க. உள்ளூர்காரங்களுக்கு வேலை குடுங்க. இதுதான் அவங்க கேட்டது. கூலிப் பிரச்சனை எழுந்த உடனேயே மிராசுதார்ங்க ஜாதிப் பிரச்சனையை கொண்டு வந்தாங்க. மத்த ஜாதி குடியானவங்க கிட்ட தலித்துங்க தான் இந்த மாதிரி கூலியை உசத்தி கேக்கறாங்க. அவங்கள அடக்கி வைக்கணும்னு தூண்டி விடப் பாத்தாங்க. அதே மாதிரி வெளியூர்ல இருந்து ஆளுங்கள கொண்டு வந்தும் இதை உடைக்கப் பார்த்தாங்க. உள்ளூர் ஆளுங்கள பட்டினி போட்டாங்க. இவங்கள பட்டினி போட்டே பணிய வெச்சிட முடியும்ங்கிறதுதான் மிராசுதார்களோட நெனப்பு. இதையெல்லாம் மீறித்தான் அந்த மக்கள் போராடிக் கொண்டிருந்தாங்க… இதுல என்ன விசேஷம்னா… ஏன் வெண்மணியை குறிவெச்சாங்கன்னா… நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கோபால கிருஷ்ண நாயுடு…. அவருடைய சொந்த ஊர் இரிஞ்சூர். அங்கு போகணும்னா வெண்மணியைத் தாண்டித்தான் போகணும். அதனால இந்த ஊரை (வெண்மணியை) நம்ம கையில் வெச்சிருந்தாதான் நமக்கு பாதுகாப்பு என்கிறது அவர் எண்ணம். அதுக்கு முன்னால் டிராக்டர்ல அடியாட்கள் வருவாங்க… தலித் மக்கள் இருக்கும் குடிசைகளை எரித்து நாசமாக்குவாங்க… இப்படி பல ஊர்ல நடந்தது.

கடைசியா வெண்மணில கட்சிக் கிளைச் செயலாளர் அந்த கிராமத்துல ஒரு டீக்கடை வெச்சு நடத்திட்டு இருந்தார். அவர்கிட்ட கோபால கிருஷ்ண நாயுடுவோட அடியாளுங்க போயி, “அய்யாவிடம் 250 ரூபா கடன் வாங்கியிருக்க இல்ல. அதைத் திருப்பிக் குடு” ன்னு கேட்டிருக்காங்க. அவர் பதிலுக்கு “ நான் கடன் எதுவும் வாங்கலியே. நீங்க எங்கிட்ட தப்பா வந்து கேக்கறீங்க” என்று சொல்லியிருக்கிறார். அதுக்கு அந்த அடியாளுங்க : நல்லா யோசிச்சு வை. சாயந்திரம் வர்றோம். அப்போ அய்யா கிட்ட வாங்கின கடனை வட்டியோட குடுக்கணும். இல்லேன்னா நடக்கிறதே வேற”ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அவங்க மீண்டும் சாயந்திரம் வந்தாங்க.. கடைக்காரர் “நான் கடன் எதுவும் வாங்கவில்லையே. அப்புறம் எப்படி கொடுப்பது?” என்றபோது , அவரை கட்டிப் போட்டு தூக்கிச் சென்று பக்கத்து குடியானவத் தெருவுல ஒரு வீட்டில கொண்டு அறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்று விட்டாங்க.

இதைக் கேள்விப்பட்டவுடனே ஊர்ஜன்ங்க எல்லாம் திரண்டெழுந்து அந்த வீட்டுக்கு முன்னால திரண்டுட்டாங்க. ஜனங்க  மொத்தமா திரண்டு வந்ததைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்கள் அவரை அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து வெளியே அழைத்து கொல்லைப் புறமாக வீட்டுக்குப் போய் விடும்படி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். பின்பு வாசலுக்கு வந்து தங்கள் வீட்டில் யாரையும் அடைத்து வைத்திருக்கவில்லை என்றும் வேண்டுமானால் நீங்களே உள்ளே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கதவைத் திறந்து விட ஊர் மக்கள்  வீட்டில் யாரையும் காணாமல் திரும்பி விட்டனர்.

இந்தச் செய்தி கோபால கிருஷ்ண நாயுடுவுக்குப் போகிறது. நாம அடைச்சி வெச்சிருந்த ஆளை இவங்க மீட்டுக் கொண்டுட்டு போறதா? என்று அவருக்குக் கோபம். உடனே டிராக்டர்ல அடியாளுங்க ஏறினாங்க. கூடவே கத்தி, வேல்கம்பு, பெட்ரோல், தீப்பெட்டி எல்லாம் எடுத்துட்டு வெண்மணியை நோக்கி வரும்போதே வழியெல்லாம் வீடுகளுக்கு தீவைத்துக் கொண்டே வந்தாங்க. தெருவில வரச்சே 26 வீடுங்க தீப்பத்தி எரியுது. இதைப் பார்த்த உடனே 19பெண்கள், 19 குழந்தைகள், 6 முதியவர்கள் எல்லாம் ராமய்யாவோட வீட்ல போய் ஒளிஞ்சிகிட்டாங்க. வந்த அடியாளுங்க கண்மண் தெரியாம சுட்டுகிட்டே வந்தாங்க. மொத்தம் 17 பேருக்கு குண்டுக் காயம். ஒவ்வொரு உடம்பிலேயும் 12 குண்டு, 17 குண்டு, 23 குண்டுன்னு இருந்தது. இப்படி குண்டுக்காயம் பட்டவங்க ஓடி ஒளிஞ்சிக்க முயற்சித்தபோது நல்லா வெளஞ்சிருந்த வயல்ல நினைவில்லாம உழுந்து கிடந்தாங்க. மறுநாள் காலைல விடிஞ்ச பெறகுதான் அவங்களைத் தேடிக் கண்டெடுத்து நாகப்பட்டினம் பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனோம்.

இங்க ராமய்யா குடிசையில ஒளிஞ்சிக்க போனவங்க தங்களை காப்பாத்திக்கிறதா நெனச்சி உள்ளே தாழ்ப்பா போட்டுகிட்டாங்க. நமக்கு பாதிப்பு ஏதும் வராதுன்னு அவங்க நம்பிக்கை. வீடுங்களை வரிசையா கொளுத்திட்டு வந்தவனுகளுக்கு இது வசதியா போச்சு. அந்த வீட்டு வெளி தாழ்ப்பாளை போட்டுட்டு அந்த வீட்டு மேல பெட்ரோலை ஊத்தி கொளுத்தி உட்டுட்டானுங்க… உள்ளே இருந்த 44 பேரும் கதறி கூச்சல் போடறாங்க. ஊரே நிசப்தமா இருக்கு. அதுல ஒரு தாய் தன்னோட்ட குழந்தைய மார்போட அணைச்சுகிட்டே கருகி செத்திருந்தா. மற்றொரு தாய் தன் குழந்தையாவது பிழைக்கட்டும்னு குழந்தையை வெளியே வீசி எரிஞ்சிருக்கா… வெளியே இருந்த அடியாளுங்க அந்தக் குழந்தைய ரெண்டா வெட்டி திரும்பவும் எரியற தீயில போட்டிருக்கானுங்க…  ராத்திரி 11 மணிக்கு ஆரம்பிச்சு விடிகாலை 3 மணிக்கு இதுவெல்லாம் அடங்கி முடிஞ்சுது.  அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில இருக்கிற போலீஸ் காலைல 5 மணிக்கு மேலதான் ஊருக்குள்ள வந்தது. அப்போ கீழ்வேளூர்ல இருந்த இன்ஸ்பெக்டர் பரமசாமி தான் இந்த கேஸ்-ஐ எழுதினவர். 26 வீடுங்க தீப்பிடிச்சு எரிஞ்சதுன்னு எழுதியவர் …. வீடு தீப்பற்றி எரிந்தது…. வீடு தீப்பற்றி எரிந்தது…அப்படீன்னு தான் எழுதினாரே தவிர தீவைக்கப்பட்டதுன்னு எழுதல. இப்படித்தான் அப்போ போலீஸ் நடந்துகிட்டது.

அப்போ போலீஸ் லாரில்லாம் நீல கலர்ல இருக்கும். அதேபோல இந்த அடியாட்கள் வந்ததும் நீல கலர் லாரியிலதான். ஜனங்க  போலீஸ் லாரிதான் நம்ம பாதுகாப்புக்கு வருதுன்னு நெனச்சிட்டு இருந்தாங்க… போலீஸ் லாரி மாதிரி வேஷத்துல அடியாளுங்க வர்றாங்கன்னு அவங்களுக்குத் தெரியல…  காலைல 5 மணிக்கு போலீஸ் வந்த போது ஊர்ல இருக்கற வீடு பூரா தீப்பிடிச்சி எரிஞ்சி சாம்பலா கெடக்கு.  பின்னால வழக்கு தொடுத்தாங்க… கீழ்க்கோர்ட்ல 10 பேருக்கு தண்டனை கொடுத்தாங்க. அவங்க மேல உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் பண்ணாங்க. உயர்நீதிமன்றமோ இந்த வழக்குல சம்பந்தப்பட்டவங்க எல்லாம் பெரிய மிராசுதார்கள். அவங்க இவ்ளோ தூரம் எறங்கி வந்து அடிக்கிறது, கொளுத்தறது மாதிரியான வேலையெல்லாம் செய்ய மாட்டாங்க… வேணும்னா ஆளுங்கள வெச்சு ஏதாவது செய்யலாமே தவிர நேரடியா இந்த மாதிரி செய்திருக்க வாய்ப்பில்லைன்னு சொல்லி அவங்க  எல்லோரையுமே விடுதலை செஞ்சிட்டாங்க… இப்படி முடிஞ்சது அந்த வழக்கு…

அப்புறம் இதை கொலைவழக்கா போடறதா? நீதிவிசாரணை வைப்பதா? என்ற சர்ச்சை எழும்பியது. அப்போ கல்யாணசுந்தரம் கூட நீதிவிசாரணை வேணும்னுதான் கேட்டார். ஆனால் பி.ஆர்.தான் ( தோழர் பி. ராமமூர்த்தி) தெளிவா சொல்லிட்டார். நடந்தது பூராவும்  கொலை. எனவே கொலை வழக்காத்தான் பதிவு பண்ணனும்னு. பின்னால் கணபதியாப் பிள்ளை என்பவரை வைத்து ஒரு கமிஷனை வைத்து ஊர்ல சாட்சி விசாரணை செஞ்சாங்க.. அதுல இரண்டு பிரதான வரிகள் ரொம்ப முக்கியமானது. உள்ளூர் ஆளுங்களுக்கு வேலை; ஒரேமாதிரியான கூலி என்பதைக் கேட்டது முழுக்க முழுக்க நியாயமானது. ஒண்ணு ஒரே ஊர்ல பலவிதமான கூலி; ரெண்டு வெளியூர்ல இருந்து ஆட்களைக் கொண்டுவந்து இறக்குவது இந்த இரண்டும்தான் பிரச்சனைக்கு அடிப்படையான காரணம்னு அவர் சொல்லியிருந்தாரு… அவங்களோட கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது என்று கணபதியாப் பிள்ளை கமிஷன் கூறியிருந்தது.

26ஆம் தேதி காலைல காணாமல் போன ஆட்களை தேடி வயல்ல இருந்து அவர்களின் குண்டுகள் பாய்ந்த உடம்புகளை எடுத்து வந்தோம். அப்போது கொச்சியில் கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்து கொண்டு இருந்த நேரம். என்றாலும் தகவல் கிடைத்ததும் பி.ஆர்., மாவட்ட செயலாளர் ஞான சம்பந்தம், தாலுக்கா செயலாளர் மீனாட்சி சுந்தரம் எல்லோரும் வந்து சேர்ந்தாங்க. அந்தப் பகுதியில் அப்போது 144 தடையுத்தரவு போடப்பட்டு இருந்ததால டிசம்பர் 30 ஆம் தேதியன்று திருவாரூரில் இந்தச் சம்பவத்தைக்  கண்டித்து கண்டனக் கூட்டம் நடைபெறும் என்று பி. ஆர். அறிக்கை விட்டார்.  30ஆம் தேதியன்று காலையில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. 44 உயிர்கள் கொடூரமாக எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த மனையிடத்தை  விலைக்கு வாங்கி அந்த இடத்தில்  தியாகிகள் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்புவது; 2. முடிந்தால் அந்த கிராமத்தையே விலைக்கு வாங்கி அதில் வீடுகளை கட்டி மீண்டும் அவர்களை குடியமர்த்துவது; 3. மிராசுதார்களுக்கு எதிரான போராட்டத்தை  அனைத்து வழிகளிலும் தொடர்வது: 4. ஜனவரி 16ஆம் தேதிக்குள் முத்தரப்பு மாநாட்டைக் கூட்டி சம்பா அறுவடைக்கான கூலியை தீர்மானிக்க வேண்டும். இல்லையெனில் ஜனவரி 17லிருந்து வயல் கரைகளில் இருந்து போராட்டம் தொடரும். 1967 டிசம்பர் 30ஆம் தேதி மாலை திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  இந்த நான்கு தீர்மானங்களை  விளக்கி நான் பேசினேன்.

இந்த சம்பவத்தில் கிடைத்த விளைவு என்பது தேவையான நேரங்களில் தாக்குதலை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியம் உறுதிப்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்தமாக காலியானது. நாயுடு ஏற்படுத்தியிருந்த மிராசுதார்களின் ஒற்றுமையையும் காணாமலே போனது. மக்கள் மத்தியிலும் அவர்களின் தீய நடவடிக்கைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம்.

கேட்டு எழுதியவர்:  வீ.பா.கணேசன்

One thought on ““வாழ வைத்தது இந்த செங்கொடிதான்!”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s