மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 1


வெங்கடேஷ் ஆத்ரேயா

1917 அக்டோபரில் நிகழ்ந்த மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சியைத்தொடர்ந்து, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை நோக்கி சோவியத் ஒன்றியம் பயணித்த பொழுது முதலாளித்வ பொருளாதார அறிஞர்கள் ஒரு நாடு தனது பொருளாதாரத்தையோ வளர்ச்சியையோ திட்டமிடுவது சாத்தியமே இல்லை என்று கூறினர். சந்தை தான் பொருளாதார வளங்களை பல்வேறு பயன்பாடுகளுக்கு தக்க முறையில் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று வாதிட்டனர். சோவியத் ஒன்றியத்தின் திட்டமிடும் முயற்சிகளை கிண்டல் செய்தனர். ஆனால் இறுதியில் அவர்கள் கருத்துகள் முற்றிலும் தவறு என்று வரலாறு நிரூபித்தது.

முதலாளித்வ சந்தைப்பொருளாதாரத்தின் புகழை இவர்கள் பாடிக்கொண்டிருந்தபொழுதே 1929 இல் துவங்கி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உலக முதலாளித்துவம் கடும் சரிவை சந்தித்தது. கிராக்கி முடங்கி சந்தைகள் செயலற்று நின்றன. விவசாயிகள், ஏனைய சுய  உற்பத்தியாளர்கள், பல கோடி தொழிலாளிகள் என்று முதலாளித்வ உலகின் பெரும் பகுதி உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு உலக முதலாளித்துவம் அம்பலமாகி நின்றது. மறுபுறம், இதற்கு நேர்மாறாக, சோசலிச சோவியத் ஒன்றியம் உற்பத்திக்கருவிகளை சமூகமயமாக்கி, நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றம் காணவும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் துறைவாரியாகவும் விரிவான, திட்டவட்டமான திட்டங்களை தீட்டியது. மேலை நாடுகள் விதித்த பொருளாதார, தொழில்நுட்ப தடைகள், அவர்களது ராணுவ முஸ்தீபுகள், அச்சுறுத்தல்கள், மற்றும் பன்னாட்டு உறவுகளில் சோவியத் ஒன்றியத்தை தனிமைப்படுத்தும் முயற்சிகள் ஆகியவற்றையும் எதிர்கொண்டு வளர்ச்சியை சாதிக்கவும் மக்கள் வாழ்வை வளப்படுத்தவும் திட்டமிட்ட பொருளாதாரம் பெரும் உதவியாக இருந்தது.

1917 அக்டோபரில் சோசலிச புரட்சி ரஷ்யாவில் நிகழ்ந்தது. ஆனால், 1928 இல் தான் சோவியத் ஒன்றியத்தின் ரஷ்ய பகுதியின் பொருளாதாரம் 1913 இல் இருந்த நிலையை எட்டமுடிந்தது. இடைப்பட்ட காலத்தில் சோசலிச புரட்சியை வேரோடு அழிக்க மேலை நாடுகள் எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிற்குள் நுழைந்து உள்நாட்டுப் போரை மக்கள் மீது திணித்தன. இதில் பெரும் இழப்புகளை சந்தித்தாலும் இறுதியில் செஞ்சேனை வெற்றிபெற்று எதிர்புரட்சிசக்திகளை முறியடித்து விரட்டியது. இதனைத்தொடர்ந்து மூன்று ஆண்டுகாலம் அமலாக்கப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் மீட்சி, பின்னர்   தோழர் லெனின் அவர்களின் மறைவு, அதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பம்,  உட்கட்சி போராட்டங்கள் ஆகியவற்றை எல்லாம் சந்தித்து வென்ற சோவியத் ஒன்றியம் 1928 இல் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிப்பாதையை துவக்கியது.

காலனி ஆதிக்கச் சுரண்டலின்றி, உழைப்பாளி மக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்து. ஏகாதிபத்தியத்தின் பன்முக பொருளாதார, அரசியல், தத்துவ, மற்றும் ராணுவ தாக்குதல்கள் அனைத்தையும் எதிர்கொண்டு, பன்னிரண்டே ஆண்டுகளில் – 1940இல் – உலகின் இரண்டாம் பெரும் தொழில்நாடாக உயர்ந்து சாதனை புரிந்தது, மையத்திட்டமிடலின் வழியில் பயணித்த சோவியத் ஒன்றியம். இது திட்டமிட்ட பொருளாதாரம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் மேம்பாட்டுக்கும் பெரும் பங்கு ஆற்ற முடியும் என்பதற்கு மிகச் சிறந்த வரலாற்று அனுபவம் ஆகும். இதன்பின் பல சோசலிச நாடுகளின் அனுபவங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இன்றும் மக்கள் சீனம் திட்டமிடுதலை அமலாக்கி வருகிறது. தனது வளர்ச்சி நிலைக்கு ஏற்றவகையிலும் பன்னாட்டு பொருளாதார நிலைமைகளை கணக்கில் கொண்டும் அவப்பொழுது  திட்டமிடல் முறைகளில் உரிய மாற்றங்களையும் மக்கள் சீன சோசலிச அரசு மேற்கொள்கிறது.

முதலாளித்துவத்தின் மீதான தாக்கம்

முதலாளித்வ உலகம் கடும் நெருக்கடியில் சிக்கி பெரும் வேலையின்மையைப் பிரச்சினையை 1930களில் எதிர்கொண்ட அதேகாலத்தில் வேலையின்மை என்ற கொடுமையை திட்டமிட்ட சோவியத் பொருளாதாரம் முற்றிலுமாக அழித்தொழித்தது. இது மேலை நாட்டு உழைப்பாளி மக்கள் மத்தியிலும் அறிஞர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திட்டமிட்ட பொருளாதாரம் சாத்தியமே இல்லை என்று கொக்கரித்து வந்த பொருளியல் அறிஞர்களின் கருத்துகள் தவறு என்பது பரவலாக உணரப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் மேலை நாடுகளை கதிகலங்க வைத்த பாசிச படைகளை செஞ்சேனை வீழ்த்தியதில் சோசலிச சோவியத் ஒன்றியத்தின் மையத்திட்டமிடல் சிறந்த பங்கு ஆற்றியது என்பதும் பரவலாக அறியப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பிற்பகுதியில் மேலை நாடுகள் அனைத்திலும் அரசுகள் திட்டமிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், இவை முதலாளித்வ அமைப்பின் லாப வெறிக்கு உட்பட்டே செய்யப்பட்டது. எனினும் பொருளாதாரத்தில் திட்டமிடுதல்  சாத்தியம் என்பதும் அவசியம் என்பதும் அங்கீகாரம் பெற்ற கருத்துகளாக ஆகின.  இரண்டாம் உலகப்போருக்குப்பின் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல முன்னணி முதலாளித்வ நாடுகளில் ஆற்றல் துறை, தொலைதொடர்பு துறை, பொதுப்போக்குவரத்து துறை ஆகியவை உள்ளிட்ட பல துறைகளில் நாட்டுடைமை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வியிலும் ஆரோக்கியத்திலும் அரசின் மையப் பங்கும் திட்டமிட்ட அணுகுமுறையின் அவசியமும் அங்கீகாரம் பெற்றன. இதன் அடிப்படையில் மையத்திட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

தேச விடுதலை இயக்கங்கள் மீதான தாக்கம்

திட்டமிட்ட அடிப்படையில் சோவியத் ஒன்றியம் சாதித்த சில முக்கிய விஷயங்கள்:

எழுத்தறிவின்மையை முற்றாக ஒழித்தது;

அனைத்து நிலைகளிலும் கல்விபெருதலை அனைவருக்கும் சாத்தியமாக்கியது;

மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திப் பாதுகாத்தது;

அனைவருக்கும் வேலை என்பதை உறுதிப் படுத்தியது.

இந்த சாதனைகள் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தேச விடுதலைக்காக போராடி வந்த பல காலனி நாடுகளின் போராளிகளையும் தலைவர்களையும் பெரிதும் கவர்ந்தது. உலகம் தழுவி ஆதிக்கம் செலுத்திவந்த ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ள முடியும் என்பதோடு, மையப்படுத்தப்பட்ட, திட்டமிட்ட பொருளாதார செயல்பாட்டின் மூலம் ஒரு நாடு வேகமாக வளர்ச்சி அடைய முடியும் என்பதையும் சோவியத் அனுபவம் மூலம் அவர்கள் உணர்ந்தனர். இரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம் சாதித்த மகத்தான வெற்றிக்கு திட்டமிட்ட சோசலிச பொருளாதாரம் ஒரு முக்கிய காரணம் என்பதையும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தேச விடுதலை இயக்கத் தலைவர்கள் உள்வாங்கிக்கொண்டனர்.

இந்தியாவில் திட்டமிடல்

மேற்கூறிய வரலாற்று உண்மைகள் இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த தருணத்தில் இந்தியா போன்ற நாடுகள் விடுதலை அடைந்த பொழுது  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய கருவியாக திட்டமிடுதலை அமல்படுத்த முனைந்ததில் மிகுந்த செல்வாக்கு வகித்தன. இந்தியாவைப் பொருத்த வரையில், சிறந்த பொறியியல் வல்லுனராக திகழ்ந்த மோட்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா 1930களின் துவக்க ஆண்டுகளிலேயே இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்கியிருந்தார். 1935 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் 1937ஆம் ஆண்டு நடந்த அன்றைய மாகாண கவுன்சில்களுக்கான தேர்தல்களில் பலமாகாணங்களில் இந்திய தேசீய காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.  அக்கட்சி, ஜவஹர்லால் நேரு தலைமையில் 1938 இல் ஒரு தேசீய திட்டக் குழுவை அமைத்தது. இந்தக் குழு அதன் காலத்தில் ஏறத்தாழ பத்து ஆண்டுகளில் 76 முறை கூடியது என்ற செய்தியும் இவற்றில் ஒரு அமர்வு தவிர மற்ற அனைத்து அமர்வுகளிலும் நேரு பங்கேற்றார் என்ற செய்தியும் தேச விடுதலை இயக்கம் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தது என்பதைக் காட்டுகின்றன.

இந்தியா விடுதலை அடைந்த பொழுது, தேசீய வாதிகளும் முற்போக்கு சக்திகளும் மட்டுமல்ல, டாடா, பிர்லா போன்ற பெரு முதலாளிகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடுதல் அவசியம் என்று கருதினர். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இப்பணிக்கென பெருமுதலாளிகளால் பணிக்கப்பட்ட ஆலோசகர் குழு 1946 இல் முன்வைத்த பம்பாய் திட்டம்  பின்னர் இந்திய அரசு 1950-51முதல்  1955-56 வரை  அமலாக்கிய முதலாம் ஐந்தாண்டு திட்டத்தை விட பெரிய அளவில் இருந்தது என்பதாகும். நமது நாடு விடுதலை பெற்ற காலத்தில் அரசியல் வேறுபாடுகளைத்தாண்டி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொது கருத்து இருந்தது. அதன்படி, ஐந்தாண்டு திட்டங்கள் போடுவதும் அமலாக்குவதும்  இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு  அவசியம். மேலும், தொழில்துறை, நிதித்துறை, மற்றும் மனிதவளத்துறை ஆகியவற்றில் கணிசமாக முதலீடுகளை மேற்கொள்ளும் பொதுத்துறை அவசியம் என்றும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. எனவே தான், 1950 இல் உருவாக்கப்பட்ட திட்டக்குழு மிக முக்கியம் என்று கருதப்பட்டது.

திட்டமிடுதல் மட்டுமே சோசலிசம் அல்ல

ஒன்றை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் பற்றிப் பேசுகையில், இந்திய நாட்டின் பொதுத்துறை சோசலிசத்தின் இலக்கணம் அல்ல. அதேபோல், இந்தியாவின் திட்டமிடுதலும் சோசலிசத்தின் இலக்கணம் அல்ல. மாறாக, இந்தியாவில் தனியார் துறை கம்பனிகளின் லாபத்தை உறுதிப்படுத்துவதே அரசின் திட்டமிடல் மற்றும் பொதுத்துறை கொள்கையாக இருந்தது. இதற்கென, ஆற்றல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, கல்வி, ஆரோக்கியம், கனரக இயந்திரங்கள் போன்ற அனைத்து முதலாளிகளுக்கும் தேவையான கட்டமைப்பு வசதிகளை குறைந்த விலையில் அவர்களுக்கு கிடைக்கச்செய்வதே அரசின் கொள்கையாக இருந்தது. முதலாளிகளின் லாபத்திற்கு அவசியமான பிரம்மாண்டமான கட்டமைப்பு முதலீடுகளை தனியார் துறை மேற்கொள்ள இயலாத/விரும்பாத நிலையில் அரசு இம்முதலீடுகளை மேற்கொண்டது. இதற்கென திட்டமிட்டு பிரதானமாக  மறைமுக வரிகள் மூலம் உழைக்கும் மக்களை சுரண்டியும் கடன்கள் மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறையை இட்டு நிரப்பியும் அரசு  வளங்களை திரட்டியது. இதனால் ஏற்பட்ட வளர்ச்சி பெரும் பகுதி உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்தவில்லை.

எனினும், சுதந்திர இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுய சார்பை வலுப்படுத்துவதில் பொதுத்துறையும் மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதலும் முக்கியமான பங்கு ஆற்றின. இந்த வலுவூட்டலில் சோவியத் ஒன்றியம் மற்றும் இதர சோசலிச நாடுகள் அளித்த உதவிகள் சிறப்பான பங்கை ஆற்றின. 1950களிலும் 1960களிலும்  மேலை ஏகாதிபத்திய நாடுகளுக்கும் சோசலிச நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பகை மூட்டி வந்த மேலை நாடுகளின் நடவடிக்கைகள் மீண்டும் ஒரு பெரும் யுத்தத்தில் உலகை ஆழ்த்தவில்லை என்றாலும், ஒரு நிரந்தர “பனிப் போர்” நிலைமையை ஏற்படுத்தின. பனிப்போர் அரசியலில் வளரும் நாடுகளின் ஆளும் வர்க்கங்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள விரும்பிய ஏகாதிபத்தியம், சோசலிச நாடுகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு செய்துவந்த பொருளாதார மற்றும் அறிவியல் தொழில்நுட்ப உதவிகளால் சோசலிசத்தின் செல்வாக்கு இந்த நாடுகளில் உயரும் என்று அஞ்சியது. இதனை எதிர்கொள்ள மேலை நாடுகளும் இந்தியாவின் தொழில் வளர்ச்சி முயற்சிகளுக்கு உதவிகள் அளிக்க வேண்டியதாயிற்று. எனினும், நமது நாட்டின் தற்சார்பு திறன்களை அழிப்பதிலும், அதன் பகுதியாக பொதுத்துறையை அழிக்கவும் அவர்கள் ஆர்வமாகவே இருந்தனர்.

இந்தியாவின் ஐந்தாண்டு திட்டங்கள்

இந்தியப் பெருமுதலாளிகளும் அரசும் திட்டமிடுதலை ஏற்றுக்கொண்டாலும், இந்திய அரசு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களை பாதுகாக்கும் வர்க்கத்தன்மை கொண்டிருந்ததால் சோவியத் ஒன்றியம் மற்றும் சோசலிச மக்கள் சீனம் போன்ற நாடுகளில் திட்டமிடுதல் எத்தகைய பங்கு ஆற்றியதோ அது இந்தியாவில் நிகழவில்லை. முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சி விகிதம் (காலனி ஆதிக்க காலத்துடன் ஒப்பிடுகையில்) அதிகரித்த போதிலும், 1966 இல் இந்திய பொருளாதாரம் உணவு நெருக்கடி, அன்னியச்செலாவணி நெருக்கடி மற்றும் அரசின் நிதி நெருக்கடி  ஆகிய மும்முனை நெருக்கடியை சந்தித்தது. இந்திரா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஐந்தாண்டு திட்டங்களை 1966 இல் இருந்து 1969 வரை நிறுத்தி வைத்தது. [1]

இந்தியாவில் திட்டமிடுதல் எதிர்கொண்ட அடிப்படை முரண்பாடு என்ன? ஒரு புறம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு பொதுத்துறை முதலீடுகளை கணிசமான அளவிலும் திட்டமிட்ட வகையிலும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதனை சாத்தியமாக்க முதலாளிகளிடம் இருந்தும் நிலப்பிரபுக்களிடம் இருந்தும் இதற்குத்தேவையான வளங்களை அவர்களின் வருமானம் மற்றும் சொத்துகளின் மீது வரிவிதித்து திரட்ட அதனால் இயலவில்லை. காரணம் இந்த அரசானது,  முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் அரசு. பெருமுதலாளிகள் தலைமையில் இயங்கும் அரசு. அவர்களுக்கு எதிராக செயல் படாது. மறுபுறம், மக்கள் மீது பலவகையான சரக்குவரிகளை – மறைமுக வரிகளை – சுமத்தி வளங்களை திரட்டிட அரசு முயன்றபோதிலும், இதனை ஒரு வரம்பிற்குமீறி செய்யவும் முடியாது. ஏனெனில், பொருளாதாரம் கிராக்கியின்றி ஸ்தம்பித்துவிடும், மேலும் வலுவான அரசியல் எதிர்ப்பும் கிளர்ச்சியும் கிளம்பும். இந்திய திட்டமிடுதலின் இத்தகைய அடிப்படை வர்க்க முரண்பாட்டின் காரணமாக திட்டமிடல் என்ற கட்டிடமே 1966 இல் சரிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நெருக்கடி சற்று சமாளிக்கப்பட்டபின், மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, அதாவது 1969-70 இல் துவங்கி 1973-74 வரைக்குமான ஐந்தாண்டுகளுக்கான நான்காம் ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.  பின்னர் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது என்று மூன்று அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்டங்கள் – இடையில் 1977-1979 ஜனதா கட்சி ஆட்சியில் ஒரு சிறுபின்னடைவுக்குப்பின் –  போடப்பட்டாலும், முதல் மூன்று ஐந்தாண்டு திட்டகாலத்தில் இருந்த முனைப்புடன் இவை செயல்படுத்தப்படவில்லை. 1972இல் நடத்தப்பட்ட நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் இடைக்காலப் பரிசீலனையில், திட்டத்தின் துவக்கத்தில் முன்வைக்கப்பட்ட இலக்குகள் பாதியாக குறைக்கப்பட்டன. பின்னர், திட்டத்தின் இறுதியில் இவற்றைக்கூட எட்ட முடியாமல் போனது.  ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்1974-75 இல் துவங்கி 1978-79 இல் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 1975இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தால் “உள்நாட்டுக்காரணங்களுக்காக” நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை செயலிழக்கச்செய்தது. திட்டம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு, நெருக்கடி நிலை காலத்தில் பிரதமரின் இருபது அம்ச திட்டமும் பின்னர் சஞ்சய் காந்தி முன்வைத்த ஐந்து அம்ச திட்டமும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, திட்டமிடுதல் கேலிக் கூத்தாக ஆக்கப்பட்டது.

எனினும் 1950 முதல் 1980 வரையிலான முப்பது ஆண்டுகளில், காலனி ஆதிக்க காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாகவே வளர்ந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது திட்டமிடுதல். திட்டமிடுதல், அரசின் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளிலும் முக்கியத்துவம் பெற்றது. இதன் அடிப்படையில் தான் ஏற்றுமதி – இறக்குமதி கொள்கைகள் நிர்ணயிக்கப்பட்டு, இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டில் உற்பத்தி செய்வது என்ற கொள்கை அமலாக்கப்பட்டது. பெரும் அளவில் பொதுத்துறை முதலீடுகள் கேந்திரமான துறைகளில் மேற்கொள்ளப்பட்டன. பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்ற, அனைத்து உற்பத்தித்துறைகளுக்கும் அவசியமான தொழில்துறை கட்டமைப்பு வசதிகள் தகவல் தொடர்பு, எரிசக்தி, போக்குவரத்து போன்ற துறைகளில் உருவாக்கப்பட்டன. நவீன நிதி துறை கட்டமைப்பும், கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கான கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டன. திட்டமிட்ட பெரும் பொதுத்துறை  முதலீடுகள், இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டில் உற்பத்தி, ஒரு வரம்பிற்கு உட்பட்ட நில உறவு மாற்றங்கள் ஆகியவற்றால் தான் 1950 முதல் 1980 வரையிலான காலத்தில் இந்தியப்பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு – ஜிடிபி – ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட நான்கு சதமானம் என்ற  வேகத்தில் அதிகரித்தது. எரிசக்தி, உருக்கு போன்ற துறைகளில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டது. இந்தியாவின் பெட்ரோலியம், பெட்ரோ-கெமிகல் மற்றும் வேதியல் துறைகள் இந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு  பெருமளவிற்கு விரிவடைந்தன. பசுமை புரட்சியின் சாதனைகள் அரசின் மையப்பங்கையும் திட்டமிடுதலையும் அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டவை. இதில் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொழில் துறை உற்பத்தியின் வேகமான வளர்ச்சியும் பன்மைத்தன்மையும்  திட்டமிடுதலால் சாத்தியமானது.  இவை அனைத்திலும் திட்டக்குழு மூலமாக மையத்திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியமான பங்கு ஆற்றியது. பொதுத்துறைக்கான மொத்த முதலீட்டு தொகை எவ்வாறு பல்வேறு துறைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், எந்தத்துறைகளுக்கு எத்தகைய முன்னுரிமை, இறக்குமதிக்கு மாற்று உற்பத்தியை சாதிப்பதற்கான யுக்திகள் நில உறவுகளில் வர வேண்டிய மாற்றங்கள் என அனைத்து முக்கிய பொருளாதார கொள்கைகளை தீர்மானிப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் திட்டக்குழு முக்கிய பங்கு ஆற்றியது.

தாராளமயத்தின் தாக்குதல்

1980களில் பன்னாட்டு நிதிமூலதனத்தின் கை உலக முதலாளித்வ பொருளாதாரத்தில் ஓங்கியது. இந்திய முதலாளித்வ வளர்ச்சியின் தன்மையும் இதன் தாக்கத்திற்கு உள்ளாகியது. இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மாறின. தாராளமய கொள்கைகள்   களத்திற்கு வந்தன. எனினும், 1980களில் பொதுத்துறை முதலீடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. திட்டமிடுதலும், பழைய மிடுக்குடன் இல்லாவிட்டாலும், வலுவிழந்து கொண்டிருந்தாலும், தொடர்ந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசாங்கம் தீவிர தாராளமய கொள்கைகளை அமலாக்கியது. பன்னாட்டு அரங்கில் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் சந்தித்த பின்னடைவும் வீழ்ச்சியும் பொருளாதாரத்தில் திட்டமிடுதலின் பங்கையும் அரசின் பங்கையும் விவாதப் பொருளாக்கின. தாராளமய கொள்கைகள் ஆதிக்கத்திற்கு வந்ததன் விளைவாக ஒட்டு மொத்த வளர்ச்சி திசைவழியை நிர்ணயிப்பதிலும் முதலீடுகளின் துறைவாரி, மற்றும் நாட்டின் பகுதிவாரி ஒதுக்கீடுகளை நிர்ணயிப்பதிலும் திட்டமிடுதலின் பங்கு பலவீனப்படுத்தப்பட்டது. 1990 – 1992 காலத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் கைவிடப்பட்டு, மீண்டும் 1992 – 93 இல் தான் எட்டாவது ஐந்தாண்டு திட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் திட்டமிடுதல் நிகழ்ந்தாலும் நடைமுறையில் ஒட்டு மொத்த கொள்கைகள் தாராளமய, தனியார்மய, உலகமய பாதையில் பயணித்ததால் ஒட்டுமொத்த வளர்ச்சியின் தன்மையையும் திசைவழியையும் நிர்ணயிக்கும் நடவடிக்கையாக அது அமையவில்லை.

தாராளமய காலத்திலும் கூட மாநிலங்களுக்கு இடையேயான நிதி ஒதுக்கீடுகளை இறுதிப்படுத்துவது, நலத்திட்டங்களை கண்காணிப்பது, பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் பற்றிய விவரங்களை கண்டறிந்து உரிய புள்ளிவிவரங்களை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துவது போன்ற பணிகளை திட்டக்குழு செய்து வந்தது. இடதுசாரி கட்சிகளின் ஆதரவால் முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த காலத்தில் திட்டக்குழுவின் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்திற்கான பல உப மற்றும் பணிக்குழுக்களில் முற்போக்காளர்களும் பங்கேற்று சில பயனுள்ள ஆலோசனைகளை பரிசீலனைக்குக் கொண்டுவர முடிந்தது.     ஆனால், தாராளமய கொள்கைகளுக்கு முழுமையான, தீவிரமான தத்துவார்த்த ஆதரவு, அறிவுத்தளத்தில் அதனை ஆதரிக்கும் வாதங்களை வலுவாக முன்வைப்பது, நடைமுறையில் தீவிர தாராளமயகொள்கைகளை ஆதரிப்பது என்று திட்டக்குழுவின் தன்மை முற்றிலும் மாறியது. இதனால் முன்பிருந்த சுய சார்பிற்கான தன்மையிலிருந்து திட்டக்குழுவின் தன்மை  முழுமையாக மாறிவிட்டது.

தாராளமய சூழலில் முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்க ஆட்சிக்காலத்தில் குறைந்த பட்ச பொது திட்டத்தில் இருந்த அனைத்து முற்போக்கு நடவடிக்கைகளையும் திட்டக்குழு எதிர்த்தது. உண்மையில், தேசீய ஆலோசனைக் குழு தான் சில சேமநல திட்டங்களை பரிந்துரைக்கும் அமைப்பாக திகழ்ந்தது.  திட்டக்குழுவும் நிதி அமைச்சகமும் இணைந்து  இவற்றை எதிர்த்தன. ஊரகவேலை உறுதி சட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.  அதேபோல் இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கொண்டுவரப்பட்ட தேசீய உணவு பாதுகாப்பு சட்டத்தையும் திட்டக்குழு நிதி அமைச்சகத்துடன் இணைந்து எதிர்த்தது. நாம் அதன் சட்ட வரைவை விமர்சித்தோம், ஆனால் அது வலுப்படுத்தப்படவேண்டும் என்ற கோணத்தில் இருந்து!

இதில் எழுகின்ற கேள்வி என்னவென்றால் திட்டக்குழு ஏன் இவ்வாறு ஆனது என்பதாகும். இதனை கீழ்க்கண்ட வாறு பார்க்கலாம். நரசிம்ம ராவ் அவர்களின் தலைமையிலான அரசாங்கம் 1991இல் துவங்கிய தாராளமயப் பாதையில் அடுத்த ஐந்து ஆண்டுகள் பயணித்தது. அடுத்து  இரு தேசீய ஜனநாயக  அரசாங்கங்கள் 1998-2004 காலத்தில் இதன் அமலாக்கத்தை தீவிரப்படுத்தின. இந்தப்பயணத்தின் விளைவாக எந்த நோக்கங்களுக்காக திட்டக் குழு  துவக்கப்பட்டதோ அவை புறக்கணிக்கப்பட்டு படிப்படியாக திட்டக்குழு தாராளமய பேரிரைச்சலில் கலக்கும் நிலைக்கு இட்டுச்சென்றது.  இது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை.

தொடரும் …

அடுத்த பகுதி2 responses to “திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 1”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: