மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 2


வெங்கடேஷ் ஆத்ரேயா

முந்தைய கட்டுரை: பகுதி 1

உலகளாவிய நிதிமூலதன ஆதிக்கமும் வளரும் நாடுகளும்
கடந்த இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதியில் ஏகாதிபத்திய அமைப்பு பின்னடைவுகளை சந்தித்தது. 1914இல் துவங்கி 1918 வரை தொடர்ந்த முதல் உலகப்போர் ஏகாதிபத்திய நாடுகளை பலவீனப்படுத்தியது. ரஷியாவில் 1917 இல் வெடித்த சோசலிசப் புரட்சி  அதுவரை பெரும் தடையின்றி உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த முதலாளித்வ அமைப்புக்கு எல்லைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து 1930களில் முதலாளித்வ நாடுகளை கவ்விப்பிடித்த தொழில் மந்த நிலை, 1939 முதல் 1945 வரை நிகழ்ந்த இரண்டாம் உலகப்போர், (இப்போரில் சோவியத் ஒன்றியமும் மேலை நாட்டு  கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் தொழிலாளிவர்க்கமும் ஆற்றிய பெரும் பங்கு) ஆகியவை ஏகாதிபத்திய வல்லரசுகளையும் அமைப்பையும் பலவீனப்படுத்தியிருந்தன.  மேலும் இரண்டாம் உலகப்போரைத்தொடர்ந்து வலுவான சோஷலிச முகாம் உருவானதும், காலனி ஆதிக்க அமைப்பு உலகெங்கும் தகர்க்கப்பட்டதும் ஏகாதிபத்தியத்திற்கு வலுவான பிரச்சனைகளை ஏற்படுத்தியது. விடுதலை பெற்ற பல முன்னாள் காலனி நாடுகளில் திட்டமிடுதல் மற்றும் பொதுத்துறை மூலம் சுய சார்பான வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை அதனால் எளிதில் தடுக்க முடியவில்லை.

வலுவான ஒரு சோஷலிச முகாம் இருந்தவரையில் ஏகாதிபத்தியம் நிலைமைகளை மாற்றுவதில் வெற்றி அடைய முடியவில்லை. எனினும் ஏகாதிபத்தியம் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (IMF) போன்ற அமைப்புகள் மூலம் பல நாடுகளின் திட்ட அமைப்புகளையும் செயல்முறைகளையும் ஊடுருவவும் அவற்றின் மீது செல்வாக்கு செலுத்தவும் தொடர்ந்து முயன்றது.  1950 முதல் 1980 வரையிலான காலத்தில் இம்முயற்சிகள் ஓரளவுக்குத்தான் பயன் தந்தன. ஆனால் 1980களில் துவங்கி வேகமாக நிலைமைகள் மாறின.
1980களில் பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கம் ஏற்பட்டது. நிதிமூலதன ஆதிக்கத்தின்கீழ் மூன்று இலக்குகள் குறிவைக்கப்பட்டன. மேலை நாடுகளில் தொழிலாளிவர்க்க இயக்கங்களை முடக்க தாராளமய தத்துவமும்  கொள்கைகளும் பெரிதும் உதவின. வளரும் நாடுகள் கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டு, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகள் மூலம் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் என்ற பெயரில் தாராளமய கொள்கைகள் திணிக்கப்பட்டு இந்நாடுகளும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கும் நிலை எண்பதுகளில் உருவானது. எண்பதுகளின் இறுதியில், தொண்ணூறுகளின் துவக்கத்தில்  சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட பெரும் பின்னடைவும் சிதைவும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு களம் அமைத்துக்கொடுத்தது.

இந்த நிலைமையை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இழந்த காலனி நாடுகளை மீண்டும் தனது பொருளாதார கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏகாதிபத்தியம் களம் இறங்கியது. பல யுக்திகளைக் கையாண்டது. வளரும் நாடுகளின் நிதி அமைச்சகங்களிலும் மையத்திட்ட அமைப்புகளிலும் உலக வங்கியிலிருந்தும்  பன்னாட்டு நிதியத்திலிருந்தும் ‘நிபுணர்’கள் பெருமளவில் புகுத்தப்பட்டனர். இதேபோல், வளரும் நாடுகளின் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், அரசு உயர் அதிகாரிகள் போன்றோரை மேலை நாட்டு பல்கலைக்கழகங்களில் தாராளமய தத்துவத்தையும் அணுகுமுறையையும் கற்றுக்கொண்டு  உள்வாங்க வைத்து, பின்னர் அவர்களை இந்த நாடுகளின் முக்கிய பொருளாதாரம் சார்ந்த அமைச்சகங்களில் பொருத்தும் நடவடிக்கையும் நடந்தது.  இந்த நாடுகள் மேலை நாட்டு ஆலோசகர்கள், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஆலோசகர்கள் போன்றோர் பரிந்துரைத்த கொள்கைகளை அமலாக்கியதால் கடன்வலையில் சிக்கின.  சிக்கிய வளரும் நாடுகள் மீது “கட்டமைப்பு சீர்திருத்தங்கள்”  என்ற பெயரில் தீவிர தாராளமய வழிமுறைகள் எண்பதுகள் முழுவதும் பின்னர் திணிக்கப்பட்டன.

இத்தொடர் ஏகாதிபத்திய செயல்பாடுகள் வளரும் நாடுகள் பலவற்றிலும் தாராளமய தத்துவத்தின் மேலாதிக்கத்தை உருவாக்கின. திட்டமிடுதலை பலவீனப்படுத்தவும் பின்னர் இல்லாமல் செய்யவும் இம்மேலாதிக்கம் பெரிதும் உதவியது. இந்தியாவைப்பொறுத்தவரையில் திட்டமிடுதலுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு என்பதை பார்த்தோம். விடுதலை இயக்கத்தில் முன்வைக்கப்பட்ட இந்திய நாட்டின் சுய சார்பு, மக்கள் வாழ்வில் முன்னேற்றம், இவற்றை சாத்தியப்படுத்தும் வளர்ச்சி என்பதற்கு திட்டமிடல் அவசியம் என்பதில் இருந்த கருத்தொற்றுமையை அழித்தொழிப்பது அத்துணை எளிதாக அமையவில்லை. 1970களின் பிற்பகுதியில் நெருக்கடி நிலைக்குப்பின் வந்த ஆர் எஸ் எஸ் ஆதரவாளர்கள் இடம் பெற்ற ஜனதா ஆட்சியிலேயே திட்டமிடுதலை கைவிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை வெற்றி அடையவில்லை. ஆனால் எண்பதுகளில்  துவங்கி, பின்னர் 1990களில் முழுமையாக இந்திய பொருளாதாரத்தில் செல்வாக்கு பெற்ற தாராளமயப்பாதை இன்று திட்டக்குழுவையும் திட்டமிடுதலையும் முற்றிலுமாக அழித்துள்ளது.
இடதுஜனநாயக அரசுகளும் திட்டமிடுதலும்  
இந்திய அரசியல் சாசனத்தில் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மிகவும் குறைவு. கடந்த எழுபது ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் அவை மேலும் சுருக்கப்பட்டுள்ளன. இந்நிலை மாற வேண்டும் அதற்கான நமது போராட்டங்களும் நடவடிக்கைகளும் வலுப்பெற வேண்டும். எனினும் இந்தக் குறுகிய அதிகார வரம்பிற்குள் நின்றுகொண்டே  மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது மற்றும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்கள் திட்டமிடுதலில் பல சாதனைகளைப் புரிந்துள்ளனர்.

மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இடது ஜனநாயக கட்சிகளின் காலங்களில் மாநில திட்டக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. கேரளத்தில் உலகின் கவனத்தையே ஈர்த்த “மக்கள் திட்டம்” என்ற கீழிருந்து திட்டமிடுதலை துவக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை முழுமையாக ஈடுபடுத்தி, பெரும் மக்கள் இயக்கம் அமலாக்கப்பட்டது. இன்றும் கேரளாவிலும் திரிபுராவிலும் மாநில திட்டக்குழுக்கள் முனைப்புடன் இயங்குகின்றன. பல புதிய முன்முயற்சிகளையும் களப்பரிசோதனைகளையும் செய்து, பின் உரிய விவரங்களை சேகரித்து, கொள்கைகளையும் திட்டங்களையும் செழுமைப்படுத்தவும் அமலாக்கவும் அவை பங்களிக்கின்றன.  அவற்றின் அனுபவம் திட்டமிடுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன. அதேபோல் திட்டமிடுதலும் அமலாக்குதலும் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் அல்ல. இவை அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகள். நமது ஆட்சியில் இவற்றின் முற்போக்கு அரசியல் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திட்டமிடுதலில் மையத்திடமிடுதலுக்கும் பங்கு உண்டு. அதே சமயம், அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, திட்டங்களும் மக்கள் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டு அமலாக்கப்படவேண்டும் என்ற படிப்பினைகளை இடது ஜனநாயக அரசாங்கங்களின் திட்டமிடும் முயற்சிகள் உணர்த்தியுள்ளன.
திட்டமிடுதலின் தொடரும் அவசியம்
தாராளமயமாக்கப்பட்ட ஒரு பொருளாதாரத்தில் திட்டக்குழுவிற்கோ திட்டமிடுதலுக்கோ பயனும் பங்கும்  இல்லை என்ற கருத்து சரியல்ல. இந்தியா போன்ற விரிந்து பரந்த நாட்டில், ஒரு சமஷ்டி (கூட்டமைப்பு) அமைப்பில், மாநிலத்திற்கு மாநிலம் ஏராளமான வேறுபாடுகளும் பிரத்யேக நிலைமைகளும் உள்ளன. தாராளமய காலத்திலும்கூட  இத்தகைய பொருளாதாரத்தில் துறைவாரியாகவும் பகுதிவாரியாகவும் வளங்களை ஒதுக்கீடு செய்வது என்ற சவால் உள்ளது. இது குறுகிய கால திட்டமிடுதல், தொலைநோக்கு திட்டமிடுதல் ஆகிய யுக்திகள் மூலம் சந்திக்கப்படுவது அவசியம். இதேபோல் மாநிலத்திற்கு வேறுபடும் ஸ்தூலமான நிலைமைகளை கணக்கில் கொண்டு நலத்திட்டங்களை உருவாக்குவதற்கும் திட்டமிடல் உதவும். இவற்றின் அமலாக்கத்தை கண்காணித்து அனுபவ அடிப்படையில் பொருத்தமான மாற்றங்களை பரிந்துரைக்கவும் திட்டமிடல் உதவும். ஆனால் தாராளமயத்தின் இயல்பே அனைத்து அதிகாரங்களையும் நிதி அமைச்சகத்தில் மையப்படுத்துவதும் எல்லா முடிவுகளையும் நிதிமூலதன நலன் என்ற நோக்கில் காண்பதும் ஆகும். ஒரு நாட்டு அரசின் அனைத்து முடிவுகளும் பன்னாட்டு நிதி மூலதனத்தின் நலன் சார்ந்து இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏகாதிபத்தியம் கொடுத்துக்கொண்டே இருக்கும் இன்றைய சூழலில்  இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் திட்டமிடுதலை ஒரு அரசு ஆணை மூலமே முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் திட்டக்குழுவை கலைத்ததிலும் வியப்பு இல்லை.

இன்றைய அரசுக்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திட்டக்குழுவின் அணுகுமுறையை பெரிதும் மாற்றி இருந்தது என்பதைப் பார்த்தோம். பெரும்பாலும் தாராளமய கொள்கைகளைத்தான் அது பரிந்துரைத்தது. சேமநலத்திட்டங்களை எதிர்த்தது. இப்பொழுது மோடி அரசு அதற்கு ஒருபடி மேலே சென்று திட்டக்குழுவையே அழித்துவிட்டது. இங்கே இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். இன்றைய ஆட்சியாளர்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் தத்துவார்த்த பின்புலத்திற்கும் நமது நாட்டின் விடுதலை போராட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் எந்தப் பங்கும் கிடையாது. 1977-79 கால ஜனதா அரசிலும், 1998 -2004 தேசீய ஜனநாயக கூட்டணி அரசிலும் இன்றைய பா ஜ க அரசிலும் உள்ள பொதுவான அம்சம் என்பது மேலை ஏகாதிபத்தியத்துடன் நெருக்கம், தீவிர வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகள் என்பதாகும்.

திட்டக்குழுவை கலைத்தபின் நிதி ஆயோக் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் ஒரு மிக மோசமான அம்சம் என்னவென்றால், இது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட அமைப்பாகும். முன்பு இருந்த திட்டக்குழு ஒரு முழுமையான ஜனநாயகத்தன்மை கொண்டது அல்ல என்பது உண்மைதான். அதன் உறுப்பினர்களை மத்திய அரசே தீர்மானித்தது. மத்திய மாநில அரசுகளுக்கிடையே நிலவும் மிகவும் அசமத்துவமான நிதி அதிகாரப்பகிர்வு சூழலில் பழைய திட்டக்குழுவின் முன்பு மாநில அரசுகள் சென்று நிதி ஒதுக்கீடுகள் பெற மண்டியிடும் நிலைமைகள் இருந்தன. இவை மோசமான நிலைமைகள் தான். ஆனால் நிதி ஆயோக்  ஏற்பாடு அதைவிட மோசம். பழைய திட்டக்குழு ஏற்பாட்டிலாவது திட்டம் தேசீய வளர்ச்சிக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியிருந்தது. தேசீய வளர்ச்சிக்குழுவில் மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்கள். ஆனால் நிதி ஆயோக் பிரதமருக்கு மட்டுமே தனது ஆலோசனைகளை முன்வைத்து ஒப்புதல் பெற வேண்டும். இது இந்தியாவின் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிதி மூலதனத்திற்கும் ஏற்புடைய ஏற்பாடு.

தாராளமயம் என்பது நிதிமூலதனத்தின் நலன்களை பாதுகாக்கும் தத்துவமும் நடைமுறையும் ஆகும். சமகாலத்தில் இந்தியாவின் ஏகபோக முதலாளிகள் பன்னாட்டு மூலதனத்துடன் நெருக்கமாக உறவு கொண்டுள்ளனர். மோடி தலைமையிலான பா ஜ க அரசாங்கம் இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்களை மிகுந்த ஈடுபாட்டுடன் பாதுகாத்துவருகிறது. பெரும்பாலும் பன்னாட்டு நிதி மூலதனத்தின் சேவகனாகவும் செயல்பட்டு வருகிறது.  இந்த ஆட்சி திட்டக்குழுவை கலைத்தததை இக்கோணத்தில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.2 responses to “திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 2”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: