காந்தியின் பல்வேறு முகங்கள் …


-வெ. ஜீவகுமார்

.எம்.எஸ் தனது தனிச்சிறப்பான மார்க்சியப் பார்வையுடன் மகாத்மாவும் அவரது இசமும்என்ற புத்தகத்தை 1955-56 ஆண்டுகளில் எழுதினார். டி.ஜி.டெண்டுல்கர் எழுதிய காந்தி சரிதைக்கு விமர்சனமாக எழுதிய கட்டுரைகள் அவை.

காந்தியை ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக மட்டும் இ.எம்.எஸ் பார்க்கவில்லை. காந்தி தன்னை மக்களோடும், அவர்களின் வாழ்வோடும், உணர்வுகளோடும், விருப்பங்களோடும் இணைத்துக்கொண்டார் எனக் குறிப்பிட்ட இ.எம்.எஸ் காந்திய இயக்கத்தின் முரண்பாடுகளையும், சிக்கல்களையும் தெளிவாக்கினார். ஒரு இயந்திரகதியான புரிதல் கூடாது என்றார்.

காந்தியின் சமூகக் கண்ணோட்டம் பிற்போக்கான பல கூறுகளைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்தான் நவீன ஜனநாயக இயக்கத்தை நோக்கி கிராமப்புற ஏழை மக்களை ஈர்க்கும் நபராகவும் இருந்தார். இந்த முரணைக் குறிப்பிடும் தோழர் இ.எம்.எஸ்., தேசிய ஜனநாயக இயக்கத்திற்கு தலைமை தாங்கிய முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்துடன் கொண்டிருந்த தொடர்பு எனும் நிஜ அரசியல் வாழ்வில் இருந்த முரண்பாட்டின் வெளிப்பாடே அது என்கிறார்.

காந்தியை மதிப்பிடுவது சுலபமான பணி அல்ல ஏனென்றால் அவருடைய ஆளுமை மிகச் சிக்கலானது. தோழர் இ.எம்.எஸ் குறிப்பிடும்போது தேசிய இயக்கத்திற்கு உத்வேகம் தந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் மக்களை எழுச்சி கொள்ளச் செய்தவரென்றோ அல்லது தேசிய இயக்கம் புரட்சிகரப் பாதையில் வளர்வதைத் தடுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்த எதிர் புரட்சிக்காரர் என்றோ அவரைப் பற்றிய மதிப்பீட்டிற்கு வந்துவிட இயலாது என்கிறார்.

காந்தி இந்திய சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான ஒரு தலைமை கொடுத்தார். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிகரமான அரசியல் உத்தியாகவும், தந்திரமாகவும் காந்தியம் அமைந்தது. அதே சமயம் மனித இயல்புகளைப் புத்துயிர் பெறச் செய்திடும் முறையாகவும், சமூகச் சித்தாந்தமாகவோ காந்தியம் வடிவம் பெறவில்லை.

காந்தி என்றால் அகிம்சை, கத்தியின்றி, மோதல்களின்றிய போராட்ட வடிவத்தின் பிரதிநிதி என்று பார்ப்பது போதுமான பார்வை அல்ல.”சௌரி சௌராவில் மக்கள் வன்முறையில் ஈடுபட்டதும் ஒத்துழையாமை உள்ளிட்ட  போராட்டங்களைத் திரும்பப் பெற்றவர், மாகாண காங்கிரஸ் அரசாங்கங்கள் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவற்றை ஆதரிக்கத் தயங்காதது ஏன்?” என்ற கேள்வியை இ.எம்.எஸ் எழுப்புகிறார். காந்தியை, மார்க்சியக் கண்கொண்டு பார்க்கும்போது நாம் காந்தியை அவரின் வர்க்க சார்பு தன்மையில் இருந்தே விளங்கிக் கொள்ள முடியும்.

காந்தி முதலாளி வர்க்கத்தின் விருப்பமாக இருந்தார். உழைப்பாளி மக்களை பிரிட்டிசாருக்கு எதிராக ஒன்றுபடுத்தினார். அதே சமயம் அவர்களை முதலாளித்துவ எல்லைக்குள் கட்டுப்படுத்தினார்.

காந்தியத்தை மார்க்சியலெனினியத்தின் அடிப்படையில் மதிப்பிடும்போது முதலாளித்துவ தத்துவம், நடைமுறை என்ற வகைகளில்  அதன் சாதக, பாதகங்களை கணக்கிற் கொள்ளவேண்டும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூமிதான இயக்கத்தின்போது நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு, 1970 களில் சர்வாதிகார எதிர்ப்பு என தேச சுதந்திரம், விவசாய சீர்திருத்தங்கள், ஜனநாயகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக காந்தியம் போராடியுள்ளது. அதே நேரத்தில் அதன் இருண்மைவாத (இருமைவாத?) சமூகக் கலாச்சாரக் கண்ணோட்டத்தின் காரணமாக மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு தடையாகவும் அது மாறியது. காந்தியத்திற்கு எதிரான கொள்கைரீதியான , தத்துவார்த்த ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்கிறார் இ.எம்.எஸ்.

காந்தியத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையிலான வேறுபடும், மற்றும் ஒன்றுபடும் புள்ளிகளைக் கண்டறிவதுடன், நேர்மறை அணுகுமுறையும் இ.எம்.எஸ்ஸிடம் இருந்தது. அவர் தேசிய இயக்கத்தை புரிந்துகொள்ள, மார்க்சிய அணுகுமுறையை படைப்பாக்கத்துடன் பயன்படுத்தினார் என்கிறார் வரலாற்றறிஞர் கே.என்.பணிக்கர்.

நாம் அந்த அணுகுமுறையைக் கற்று, மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பின்னணியில் கீழ்க்கண்ட ஜீவகுமார் கட்டுரையை வாசிக்க வேண்டுகிறோம்.

– ஆசிரியர் குழு

சுதந்திர தினம் பற்றி காந்தி பின்வருமாறு கூறினார். “…இன்று பரிபூரண சுதந்திர தினம். இதை கொண்டாடுவது நாம் பார்த்ததும் அனுபவிக்காததுமான சுதந்திரத்துக்காக போராடிய காலத்தில் பொருத்தமானது. இப்போது நாம் அதை பெற்றுவிட்டோம். நமக்கு ஆசா பங்கம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு இல்லாவிட்டாலும் எனக்காவது…?”

காந்தி விட்டுச்சென்றவை ஏராளம். அவற்றை தொகுத்தால் ஒற்றுமையும், முரண்பாடும் மிகுந்திருக்கும். காந்தி சாகலாம். காந்தியம் என்றென்றும் இருக்கும் என்று 1931களில் காந்தி கூறினார். 1936-லோ காந்தியம் என்ற ஒன்று இல்லை. எனக்குப்பின்னால் அதைவிட்டுச் செல்லவில்லை என்றும் கூறினார்.

பலாத்காரமுறையில் சுதந்திரம் பெறுவதை விட தனிப்பட்ட முறையில் நான் யுகக்கணக்கில் காத்திருப்பேன் என்று காந்தி பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் குறிப்பிட்டார். செல்வர்கள் ஏழை எளியோருடன் உடைமைகளை பங்கிட்டுக்கொள்ள வேண்டும். தவறினால் ஒரு பயங்கர ரத்த புரட்சிக்கு ஒரு நாள் அவர்கள் தயாராகியே தீர வேண்டும்  என்றும் மற்றொரு தருணத்தில் குறிப்பிட்டார்.

சோவியத் புரட்சியின் (1917)காலங்களில்தான் இந்திய அரசியலில் காந்தி நுழைகிறார். முன்னதாக தென்னாப்பிரிக்காவில் இந்தியர் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து போராடினார். இந்தியாவில் தம் அரசியல் வாழ்வின் துவக்கத்தில் காந்தி பிரிட்டன் விசுவாசியாக இருந்ததாக சத்திய சோதனையில் எழுதுகிறார். தம் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்கு ராஜ வாழ்த்து கீதம் கற்றுக்கொடுத்தார். ஒவ்வொரு இந்தியருக்கும் ஆங்கிலேயர் மீதான ராஜ விசுவாசத்தையும் மரியாதையும் உருவாக்கியதாக காந்தி எழுதுகிறார்.

காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தும் தருணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும் உருவாகிக் கொண்டு இருந்தது. எனினும் காந்தியை விட கம்யூனிஸ்ட்களிடம் பிரிட்டிஷ் அரசு கடுமை காட்டியது. 1920களில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றும் முன்பே பிரிட்டிஷ் உளவுத்துறை கொல்கத்தாவில் போல்ஷ்விக்குகளுக்கு எதிரான அதிகாரிகளை நியமித்தது. வாராந்தர அறிக்கையின் மூலம் கம்யூனிச நடவடிக்கைகளை கண்காணித்தது. கான்பூர், பெஷாவர் என தொடர்ச்சியாக சதி வழக்குகள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக ஜோடிக்கப்பட்டன.

1929ல் மீரட் சதி வழக்கு புனைந்து கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டனர். 31பேர் கைதாகினர். அப்போது இர்வின் பிரபு பிரிட்டிஷ் துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார். வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். கம்யூனிஸ இயக்கத்திற்கு பலத்த அடி தர வேண்டும் என்றும் பணித்தார். கம்யூனிஸ்ட் கட்சி தடைகளை சந்தித்தது. மறுபுறம் காந்தி மிக மென்மையாக தமது அணுகுமுறைகளைக் கையாண்டார். பிரிட்டிஷ் ஆட்சியிடம் ஆர அமர ஒத்துப்போக வேண்டும். அவர்களின் சீர்திருத்தங்களை குத்தலாக குறை சொல்லக்கூடாது என்று 1919ல் காந்தி கூறினார்.

சம்பரான் கிளர்ச்சியின் போது காந்தி ராஜ விசுவாசி என்ற மரியாதையான விளம்பரம் பிரிட்டிஷ் தரப்பில் தமக்கு இருந்ததாக காந்தி குறிப்பிடுகிறார். பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பிரத்யேக அணுகுமுறையில் விடுதலை போராட்டத்தை வெகுசனப்படுத்தினார். முதலில் அவர் விவசாயிகளை ஈர்த்தார். 06-12-1916ல் காசி இந்து சர்வகலா சாலை தொடக்கவிழாவில் காந்தி பங்கேற்றார். கூட்டத்துக்கு வந்துள்ள சீரான் சீமாட்டிகளே இவ்வளவு நகைகள் அணிந்து வந்துள்ளீர்கள் இதெல்லாம்  இந்நாட்டு விவசாயிகளிடமிருந்து வந்த பணம் தானே என்று கேட்டார். இந்தியாவிற்கு விமோசனம் வழங்குபவர்கள் டாக்டர்களோ, வக்கீல்களோ, பெரிய நிலச்சுவான்தார்களோ இல்லை. விவசாயிகள் மட்டுமே என்றார். 1917களில் சம்பரான் விவசாயிகளிடம் அவர் சென்றார். ஜீவகாருண்ய தேசிய சேவை என்ற நோக்கில் தான் நுழைவதாக கூறுகிறார்.எனினும் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் எந்த கிளர்ச்சியும் அரசுக்கு எதிராகவே திரும்பும். சம்பரானிற்கு பிறகு அவரின் அடுத்த ஈடுபாடு அகமதாபாத் மில்தொழிலாளர் போராட்டம் ஆகும். 1917ல் அகமதாபாத்தில் ஆலை தொழிலாளர் சங்கம் தொடங்கினார். அகில இந்திய நூற்போர் சங்கம், அகில இந்திய கிராம கைத்தொழில் நிர்மாண சங்கம் ஆகியவற்றையும் தொடங்கினார். 1928ல் காங்கிரஸ் கமிட்டி காரியாலயத்தின்  கிளையாக தொழிலாளர் ஆராய்ச்சி இலாக்காவை  துவக்கினார். என்னதான் வீணை வாசித்தாலும் சந்தனம் குலைத்து பூசினாலும் போராட்டங்களை ஒடுக்கத்  தான் அரசு இயந்திரம் முயற்சிக்கும். பிரிட்டனின் பாஷையும் அதுதான். வேறு வழியின்றி காந்தியின் போராட்டத்தின் மொழியும் மாறுகிறது. மாணவர்களை விடுதலைப்போராட்டத்திற்கு அழைத்தார்.

‘இந்திய இளைஞர்களை அவர்களின் அடிமைத்தனத்தின் கோட்டைகளிலிருந்து அதாவது  பள்ளிக் கூடங்களில் கல்லூரிகளிலிருந்து வெளியேறி வருமாறு 1920ல் நான் அழைத்தேன். அடிமை விலங்குடன் கல்வி கற்றலைவிட சுதந்திரத்திற்காக கல் உடைத்து வாழ்வது எவ்வளவோ மேல்…..” என காந்தி குறிப்பிட்டார்.

காந்தியின் வியூகத்தில் பெண்களை பெருமளவில் ஈடுபடுத்தினார். தமது ஆசிரமத்து பெண்கள் மூலம் கிராமத்து பெண்களை எளிதில் அணுக முடிந்தது.

பெண்களின் முழு பங்களிப்பு இல்லாத  சுயராஜ்ஜியத்தால் நமக்கு பலன் இல்லை. பரிசுத்தமான மனமும் இதயமும் கொண்ட பெண்களின் கால்களில் விழுந்து கூட ஒருவர் வணங்கலாம் அப்படிப்பட்ட பெண்கள் பொது வாழ்வில் ஈடுபட நான் விரும்புகிறேன் என்று காந்தி கூறினார்.

காந்தி திரட்டிய இன்னொரு பிரிவினர் மலைவாழ் மக்கள் ஆவார். தேசிய சிறுபான்மையினர் ஆதிவாசி சேவா சங்கம்மூலம் அவர்களை போராட்டத்தில் இணைத்தார். அரிஜன சேவா சங்கத்தை 30 மாநிலங்களிலும் அமைத்தார். மக்களிடம் மேலும் நெருக்கமாக மொழியையும் காந்தி ஆயுதமாக்கினார். தம் இளமையில் ஒவ்வொரு இந்து ஆணும்,பெண்ணும் சமஸ்கிருதத்தை நன்றாக படித்து இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தார். பின்பு மொழி குறித்த அவரின் நிலையை காலத்திற்கு ஏற்ப மாற்றினார். கல்வி பயின்று விட்டு காந்தி திரும்பும் போது சூரத் நகரில் காந்திக்கு வரவேற்பு தரப்பட்டது. அதில்  ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. முற்றிலும் குஜராத்திகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் வேறுமொழியில் பேசுவதை ஆட்சேபித்தார். இதே போல் 20-09-1927ல் திருச்சி தேசிய கல்லூரியில் காந்திக்கு வரவேற்பு விழா நடந்தது. சமஸ்கிருத மொழியில் அவரை வரவேற்றனர். காந்தி சமஸ்கிருதம் தெரிந்தவர்களை கை தூக்க சொன்னார். சொற்ப அளவிலே கை தூக்கினர். அனைவருக்கும் புரியும் மொழியில் வரவேற்புரையை தயாரித்து இருக்க வேண்டும் என்று காந்தி அறிவுறுத்தினார். காந்தியின் எதிர்மறையான அம்சங்களை பரிசீலிக்கும் முன்னால் அவர் நடத்திய போராட்டங்களை சுருக்கமாக தொகுக்கலாம். காந்தி முதலில் அறைகூவல் விடுத்த பெரிய நிகழ்வு 1919 ரௌலட் சட்டத்திற்கு எதிரானது ஆகும். இந்த போராட்டம்          வேகம் பிடித்த போது இமாலய தவறு நடந்து விட்டதாக காந்தி போராட்டத்தை நிறுத்தினார்.

1920ல் ஒத்துழையாமை இயக்கம், 1922 சௌரிசௌரா சம்பவம், 1930ல் சட்ட மறுப்பு இயக்கம் என ஆவேசமான போராட்டங்களை காந்தி அறிவித்தார். வீதிகளில் மக்கள் திரளும் போது திடீரென பின்வாங்கும் நிகழ்வுகள் நடந்தன. இத்தகு சந்தர்ப்பங்களில் கடலும் உப்பும் போராட்டத்தின் அடையாளமாக மாறிவிடுகிறது.  காந்தியின் உப்புச் சத்தியாகிரகம் பற்றி ஆச்சாரிய கிருபாளினி காந்தி  தயாரித்தது உப்பு அல்ல புரட்சி என்று எழுதினார். உப்பு என்ற வார்த்தை ஒரு பிரளயத்தை உருவாக்குவதாக அமைகிறது. யூதேயாவின் உப்பு கடல் துவங்கி மத்திய தரைக்கடலை ஒட்டிய பெனிக்யோவின் சீதோன் வரை பல்லாயிரம் கிலோமீட்டர்  நடந்து சென்று இயேசு தப்பித்ததாக பைபிளில் உண்டு.

உணர்ச்சிவயப்பட்ட சூழலில் டிசம்பர் 31,1921க்குள் சுயராஜ்யம் கிடைக்காவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று காந்தி கூறினார். அந்த தருணங்களில் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தார். கிளர்ச்சிகள் வலுத்தன. சுயராஜ்யம் என் நாசிகளில் நாறுகிறது  என்று  காந்தி அதிர்ச்சி தந்தார். 1930ல் கார்வால் கிளர்ச்சியில் இந்து, முஸ்லீம் சிப்பாய்கள் இணைந்தனர். மக்களைச் சுட மறுத்தனர். காந்தி இதனை ஏற்கவில்லை. இப்போராட்டங்கள் பிரிட்டனுக்கு பெரும் திகிலை தந்தன.

காந்தி தம்மை சுத்திகரித்து கொண்ட ஒன்றாக அறியப்படுவது இந்துத்துவா குறித்த அவரின் நிலை ஆகும். இதிலும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்தார். 1925ல் லஜபதிராய் தலைமையில் இந்து மகா சபை கூட்டம் நடந்தது. அதில் தன்னை சனாதனி இந்து என கூறிக்கொண்டார். மேலும் பிராமண மதமே இந்து சமயத்தின் பெருமைக்கு காரணம் என்றும் பிராமணியத்தின் சாம்பலில் பிராமணர் அல்லாதோர் வளர முயற்சிக்க கூடாது என்றும் காந்தி கூறினார். பின்னால் காந்தி நல்ல மாற்றத்தை தருவித்தார். 1927 இலங்கையில் சிங்களர் மத்தியில் காந்தி பேசினார். ‘மகிந்தரையும் பௌத்தத்தையும் உங்களுக்கு தந்தமைக்கு இந்தியா பெருமைப்படுகிறது. அதே சமயம் சாதி வேறுபாடு என்ற சாபத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக இந்தியா வெட்கப்படுகிறது….

தீண்டாமை ஒழிப்போடு சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தமாட்டேன்” என்றார். அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையான துப்புரவு தொழிலாளர்களுக்கு காந்தி அதிக முக்கியத்துவம் கொடுத்தார். 1943ல் காந்தி கூறியது. இறுதியில் ஒரே சாதிதான் இருக்க வேண்டும். பங்கி(துப்புரவாளர்) என்ற அழகிய பெயருக்குரியது அது. அதாவது எல்லா அழுக்குகளையும் நீக்கி சீர்திருத்துபவர். அந்நிலை விரைவில் வரவேண்டும் என்றார். பங்கிகளின் ஆட்சி உருவாக வேண்டும் என்ற காந்தி 02-06-1947ல் ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் பின்வருமாறு பேசினார்.

‘இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஒரு தலித் பெண்ணாக இருக்க வேண்டும்.” மற்றொரு நிகழ்ச்சியில் காந்தி கூறியது. ‘நான் சர்வாதிகாரியாக ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படி நான் சர்வாதிகாரி ஆனால் வைசிராயின் வீட்டு கழிப்பறைகளை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளி வீட்டுக்கு போய் அவர்களின் கழிவறையை சுத்தம் செய்வேன்” என்றார். ஒரு கிறிஸ்தவ ஆதிதிராவிடரின் மலத்தை சுத்தம் செய்ய தன் மனைவியை பணித்தார். நாவிதர் தொழிலாக இருந்தாலும் ஒழுங்காக கற்றுக்கொள் என்று தம் மகன் ராமதாஸிடம் கூறினார். தோல் செருப்பு தைத்தல், முடி வெட்டுதல் ஆகியவற்றில் காந்தி தேர்ச்சி பெற்று இருந்தார், தீண்டாமை கொடுமைகளில் காந்தி சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒரு தருணத்தில் காந்தி பின்வருமாறு கூறினார். ‘அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறினால் நாம் தான் காரணம். அவ்வளவு அநியாயம் செய்துள்ளோம். அவர் செருப்பால் அடித்தாலும் வாங்கி கொள்ள வேண்டியது தான்”…

காந்தியின் கருத்துகளை பயில்வதும் விவாதிப்பதும் ஒரு புள்ளியில் முடிவது இல்லை. உதாரணமாக விதவை திருமணம் பற்றி கூறலாம். நவஜீவன் பத்திரிக்கையில் வாசகர் கேள்விக்கு காந்தி பதில் அளித்தார். 15வயதுக்கு குறைந்த விதவைகள் 3 ½ லட்சம் பேர் இந்த தொகையை படிப்போர் அழுவர். இதற்கு தீர்வு பால்ய விவாகத்தை நிறுத்துவதும் 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுள்ள கைம்பெண்களும் புனர் விவாகம் செய்து கொள்ள இடம் தருவதும் ஆகும்.”

இதை கூறிவிட்டு காந்தி தொடர்ந்து எழுதுகிறார்.  ‘இந்த உபாயங்களை விருப்பம் உள்ளோர் அனுசரிக்கலாம். எனக்கு இவற்றை அனுசரிக்க விருப்பம் இல்லை. எமது குடும்பத்தில் பல விதவைகள் உள்ளனர் .அவர்கள் புனர் விவாகம்  பற்றி யோசிக்கமாட்டார்கள். நானும் அவர்களை மறுமணம் செய்து கொள்ளும்படி கேட்க விரும்பவில்லை.”

எனினும் 09-09-1927ல் காந்தியின் மாற்றத்தை உணரமுடிகிறது. அன்று சென்னையில் மாதர்கள் கூட்டம் நடந்தது. டாக்டர் முத்துலெட்சுமி, ருக்மணி இலட்சுமி ஆகியோர் இதனை நடத்தினர். அதில் 16 வயது நிரம்புவதற்கு முன் பெண்களுக்கு திருமணம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இளம் விதவைகள் மறுமணம் செய்வதை ஆதரிப்பதாகவும் காந்தி பேசினார்.

காந்தியின் கருத்துகளில் ஏற்ற இறக்கங்கள், மாறுதல்கள் இருந்து கொண்டே இருந்தன. வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் அவரின் பல வளர்சிதை மாற்றங்களை நாம் கண்ணுறலாம்.

காந்தியின் நிருபர்கள் சந்திப்பு 07-08-1942ல் நடந்தது. இந்த சந்திப்பு வித்தியாசமாக இருந்தது. இந்த போராட்டத்தில் நீங்கள் கைதாவீர்களா? என்று காந்தியிடம் நிருபர்கள் கேட்டனர்..” இல்லை இந்தமுறை நானாக கைதாகும் பிரச்சனையே எழவில்லை. அப்படியே  செய்யப்பட்டாலும் உண்ணாநோன்பு போன்ற பழைய முறைகளை கையாளுவேனா? இல்லையா? என்பதை இப்போது ஒன்றும் கூற முடியாது” என்று மர்மமாக காந்தி பதில் கூறினார். 1943க்கு பிறகு 1947வரை அநேகமாக அவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் என்றே கூறலாம்.

இன்னும் உச்சத்தில் காந்தி சொன்னார்.

‘பிரிட்டிஷ் அரசாங்கம் முன் கூட்டியே என்னை கைது செய்தால் நான் கைதான இரண்டு வாரங்களுக்குள்ளேயே நாடு முழுக்க இறுதி போராட்டம்  துவங்கி விடும். அந்த போராட்டம் துவங்கிய உடனேயே பலாத்காரச் செயல்கள் நாடு தழுவிய அளவில் வெடிக்கும். இந்த முறை அப்படிப்பட்ட பலாத்காரப்புரட்சி ஏற்பட்டால் நான் அதனை பொருட்படுத்த மாட்டேன்.

மேலும் நியூஸ் கிரானிக்கிள் என்ற பத்திரிக்கையில் காந்தியின் அறிக்கை வெளிவந்தது. ஒரு வெகுசன இயக்கத்தில் பலாத்கார போராட்டங்களும் செயல்களும் உட்பட்டவை தான், அங்கீகரிக்கப்பட்டவைதான் என காந்தி கூறியிருந்தார்.

காந்தியிடம் இந்த நிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. வெடிமருந்து கிடங்குள்ள கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்தது போன்ற நிலையில் 1947 மார்ச்சில் இந்தியா இருந்தது என்று மவுண்ட் பேட்டனின் செயலக தலைமை அதிகாரி இஸ்மே குறிப்பிட்டார். இதற்கு காரணம் பிப்ரவரி 18 1946ல் பம்பாயில் நடந்த ராயல் இந்திய கப்பற்படையில் எழுச்சி ஆகும். பம்பாயில் தல்வார் கப்பலில் 20 ஆயிரம் மாலுமிகள் ஒன்று திரண்டனர். கப்பலின் கொடி கம்பங்களில் பறந்த யூனியன் ஜாக் கொடியை அகற்றினர். அவற்றினிடத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கொடிகளை பறக்க விட்டனர். புரட்சி ஓங்குக என்ற முழக்கம் கேட்டது. ஏறத்தாழ ஒரு வாரம் இந்த கிளர்ச்சி நீடித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடுநடுங்கியது. காந்தியும் இதனை ஏற்கவில்லை. அராஜகம் என்றும் சிவப்பு அழிவு என்றும் இதனை காந்தி வர்ணித்தார். அகிம்சையை மீறி இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்த ஒரு பாவகரமான  சேர்க்கை என இதனை குறிப்பிட்ட காந்தி இந்தியாவை ஒரு வெறி கூட்டத்திடம் ஒப்படைக்க முடியாது என்றார்.  இந்திய கப்பல் படை மாலுமிகள் இதனை எதிர்பார்க்கவில்லை. வேலை நிறுத்த கமிட்டி தலைவர் போராட்டத்தை முடித்துக்கொண்டு பின்வருமாறு அறிவித்தார்.

‘நாங்கள் சரணடைகிறோம்-பிரிட்டனிடம் அல்ல.

எங்கள் தாயகமான இந்தியாவிடம்”.

காந்தி தடுமாறிய போது அவருக்கு எதிராக இந்தியாவில் கிளர்ச்சிகளும் நடந்தன. வட்டமேசை மாநாட்டிற்கு காந்தி புறப்பட்டபோது பம்பாயில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பகத்சிங் தூக்கிடப்பட்ட போது காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கராச்சி காங்கிரஸில் இளைஞர்கள் கருப்பு மலர்களோடும் கருப்பு கொடிகளோடும் திரண்டனர்.

காந்தியிடம் தடுமாற்றங்கள் ஏன்?

‘ஒரு சகாப்தத்தின் தத்துவத்தை விட அதன் பொருளாதாரமே ஆராய்ச்சிக்கு சரியான மூலஸ்தானம்” என்று ஏங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.

மதிநுட்பம் உள்ளவன் மிகுதியாக லாபம் ஈட்டுவதை நான் அனுமதிப்பேன். தன் ஆற்றல்களை பயன்படுத்துவதில் இருந்து நான் அவனை தடுக்க மாட்டேன் என்று காந்தி கூறுகிறார்.பெற்றோர் ஆகிய முதலாளிகள் குழந்தைகளான தொழிலாளர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தர்மகர்த்தா கொள்கையை பிரச்சாரம் செய்தார். ராம ராஜ்யம் பற்றி பேசிய அவர் வர்க்க போராட்டம் இந்திய தன்மைக்கு அந்நியமானது என கூறினார்.

எனினும் இந்த கட்டமைப்புக்குள் மனிதநேயம் போற்றுவதிலும் மத கலவரங்களை தடுப்பதிலும் உறுதி காட்டினார். லெனின், காந்தியை டால்ஸ்டாய் என்ற  எழுத்தாளரின் ஆழ்ந்த மாணவன் என அழைத்தார். தீண்டாமை கொடுமைகளுக்கு  எதிராகவும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் அவர் காட்டிய பிடிவாதம் மதவெறியர்கள் அவர் உயிருக்கு உலை வைப்பதில் முடிந்தது. 1930ல் தீண்டாமைக்கு எதிரான அரிசன  யாத்திரை ஒன்றில்  புனா நகர மன்ற வரவேற்பில் முதல் கொலை சதி நடந்தது. கடைசியில் 1948 ஜனவரி 30ல் காந்தியின் உயிரை கோட்சேயின் குண்டுகள் குடித்தன.

ஆதாரங்கள்:

  1. சத்திய சோதனை-காந்தி
  2. இந்திய வரலாறு -இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
  3. இன்றைய இந்தியா-ரஜினி பாமிதத்
  4. பாரதியார் கட்டுரைகள்
  5. காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்- அ.மார்க்ஸ்
  6. இடது திருப்பம் எளிதல்ல- விஜய் பிரசாத்
  7. தமிழ் இந்து கட்டுரைகள்-12-09-2015, 29-01-2016
  8. மகாத்மா ஓர் மார்க்சீய மதிப்பீடு-எஸ்.ஏ. டாங்கே, ஹிரேன் முகர்ஷி, சர் தேசாய், மோஷித்சென்.

One thought on “காந்தியின் பல்வேறு முகங்கள் …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s