ஜி. செல்வா
“லெனின்மட்டும் தான் புரட்சிக்கு வெளியே தனியாக நிற்பார். நாம் எல்லோரும் நம் சொந்த வழியில் செல்வோம்” இது லெனின் முன்மொழிந்து பேசிய ஏப்ரல்ஆய்வுரைகள் குறித்து பிளக்கனோவ் சொன்னது. இன்னும் ஒரு படி மேலே சென்று இவை அனைத்தும் “வெறும் பிதற்றல்” என்றார். இப்படியாய் புரட்சியின் திட்டம்குறித்து, நடைமுறை உத்தி குறித்து பழங்கருத்துக்களைக் கையாண்டவர்களை மார்க்சிய தத்துவ வெளியில் சித்தாந்த ரீதியாக அடித்து நொறுக்கி “புரட்சியினை நடைமுறையில் எதார்த்தமாக்கினார்” லெனின்.
இது எப்படிசாத்தியமாயிற்று?
சூழல் புரட்சிகரமாக மாறிவிட்டது என்பதை எப்படி உணர்வது?
ஒரு மார்க்சியவாதி நெருக்கடியான சூழல்களை எப்படி எதிர்கொள்வது?
கட்சியை, மக்களை புரட்சிகர இயக்கத்தில் எப்படி பங்கேற்கவைப்பது?
இப்படியாய் பல்வேறு வினாக்களை எழுப்பி தெளிவுபெற உலகப் புரட்சிகர சக்திகளுக்கு இன்றும் தோழர் லெனின்தான் ஆசானாகத் திகழ்கிறார். அவர் எழுதிய எழுத்துக்களை, நூல்களை நிதானமாகப் படித்து புரிந்து கொள்வது காலத்தின் தேவை. அதிலும் உலக அளவில் மார்க்சிய அறிஞர்கள் லெனினது எழுத்துக்களை இன்று பல்வேறு காலகட்டங்களாகத் தொகுத்து ஆய்வு செய்து வருகின்றனர். அப்படி பார்க்கும்போது 1917 பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இவ்வெழுத்துக்கள் தொகுக்கப்பட்டு பிரகாஷ் காரத் முன்னுரையோடு “லெனின் 1917” என்ற புத்தகத்தை லெப்ட்வேர்டு பதிப்பகம் வெளியிடுகிறது.
இக்காலகட்டத்தை அதாவது புரட்சிகரமான காலகட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் லெனினது எழுத்துக்களில் மிக முக்கியமானது ஏப்ரல் ஆய்வுரைகள் (April Thesis). இந்த ஆய்வுரைகளின் சாராம்சத்தை லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தபோதே கடிதங்கள் வாயிலாக கட்சி அணிகளுக்கு தெரிவித்தவண்ணம் இருந்தார். அது “தூரதேசத்திலிருந்து லெனினது கடிதங்கள்” (Letters from Afar) என தொகுக்கப்பட்டுள்ளது. ஆனால், லெனின் அனுப்பிய முதல் கடிதம் மட்டும்தான் அப்போது கட்சிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. மற்ற கடிதங்கள் அக்டோபர் புரட்சிக்குப் பின்புதான் அச்சாகியது. எனவே, ரஷ்யப் புரட்சியை உந்தித் தள்ளும் வினையூக்கியாக செயலாற்றியது ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’தான்.
ஆய்வுரைகள் உருவானதன் பின்னணி
ஒருநாள் மதிய உணவுக்குப் பிறகு லெனின் அவரது புகழ் பெற்ற நூல் ஒன்றினை எழுதுவதற்கான விவரங்களை சேகரிக்க நூலகம் நோக்கி செல்லத் தயாராகிறார். அப்போது அங்கு வந்த போலந்து நாட்டு இளம் புரட்சியாளர் மிஷிஸ்லா பிரான்ஸ்கி (Mieczyslaw Bronski) “உங்களுக்கு செய்தி தெரியாதா? ரஷ்யாவில் புரட்சி தொடங்கி விட்டது” என்கிறார். அப்போது லெனின் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் தலைநகரத்தில் இருந்தார். இச்செய்தி லெனினை உற்சாகம் கொள்ள வைத்துவிட்டது. உடனே ரஷ்யா செல்லத் தயாராகிறார். சுமார் 1981 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த லெனின் அடுத்த சில தினங்களிலேயே பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மீறி ரஷ்யா செல்கிறார். இப்பயணம் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க முக்கியமான கட்டுரையை ரஷ்யப் புரட்சி நூற்றாண்டு சிறப்பிதழில் ஃப்ரண்ட்லைன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்தப் பயணத்தின்போதுதான் லெனின் தனது ஆய்வுரைகளை வளர்த்தெடுக்கிறார். ஏப்ரல் மாதத்தில் அது முன்மொழியப்பட்டதால் ஏப்ரல் ஆய்வுரைகள் என அழைக்கப்படுகிறது. அப்போது முதல் உலக யுத்தம் (1914-1918) நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த யுத்தம் குறித்து எத்தகைய நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென முடிவெடுப்பதற்காக 1912-ல் சோசலிஸ்ட் கட்சிகளின் சர்வதேச காங்கிரஸ் விவாதிக்கிறது. அம்மாநாட்டின் முடிவாக முதலாம் உலக யுத்தம் ஏகாதிபத்தியங்களுக்கிடையே நாடு பிடிப்பதற்கான போட்டிதான். எனவே, சோசலிஸ்டுகள் இந்த யுத்தத்தைஆதரிக்கக் கூடாது. மேலும், உள்நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.
இம்மாநாட்டில் பங்கெடுத்த சோசலிஸ்ட் சக்திகள் தங்களது நாட்டுக்குத் திரும்பியவுடன், தங்களது நாட்டின் முதலாளித்துவ அரசியலுக்குப் பின்னால் போருக்கு ஆதரவாக அணிதிரண்டு நின்றனர். குறிப்பாக, அக்காலகட்டத்தில் மிகப்பெரும் செல்வாக்கு கொண்ட கட்சியாக ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி இருந்தது. 1906ஆம் ஆண்டு ஒரு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருந்த அக்கட்சி 1914 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டு பரந்துபட்ட செல்வாக்கைக் கொண்டிருந்தது. ஆனால், கார்ல் காவுட்ஸ்கி தலைமையிலான இக்கட்சிதான் முதலாம் உலக யுத்தத்தின்போது மிகத் துரோகமான முடிவினை எடுத்தது. ஜெர்மனி நாட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு யுத்தத்தின் நெருக்கடியை பயன்படுத்தாமல் அந்நாட்டு முதலாளி அரசுக்கு சாதகமாக முதலாம் உலகப் போரை ஆதரித்தது. இது சர்வதேச சோசலிச சக்திகளுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கியது. இத்தகைய கருத்துக்கள்தான் அன்று ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடமும் இருந்தது.
ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தின்படி லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் மட்டுமே செயலாற்றத் தொடங்கினர். ரஷ்யாவில் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. தொழிலாளர்களின் எழுச்சியை நசுக்க பெத்ரோகிராடிற்கு அனுப்பப்பட்ட ராணுவம் தொழிலாளர்களோடு கரம் கோர்த்துக் கொண்டது. புரட்சித் தீ பற்றி எரியத் தொடங்கியது. 300 ஆண்டுகள் அசைக்க முடியாத ஜார் ஆட்சியின் அதிகாரம் அகற்றப்பட்டது. போல்ஷ்விக்குகள் தெருவில் இணைந்து மக்களோடு போராடிக் கொண்டிருந்தபோதே 1917 பிப்ரவரி மாதம் ரஷ்ய முதலாளிகளின் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க மென்ஷ்விக்குகளும், சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் மிதவாத முதலாளிகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டனர். “சமாதானம், உணவு, சுதந்திரத்திற்கான மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி தனக்கு சாதகமாக, அதாவது புரட்சிக்கு எதிரான பாதையில் இடைக்கால அரசு செயல்படத் தொடங்கியது”.
இத்தருணத்தில்தான் 1917 பிப்ரவரி மாதத்தில் வெடித்த புரட்சி செய்திதான் தொலைதூர தேசத்தில் இருந்த லெனினை ரஷ்யா நோக்கி உந்தித் தள்ளியது. 1917 ஏப்ரல் 16 நள்ளிரவில் பெட்ரோகிராட் நகரத்திற்கு வந்து சேர்கிறார். லெனின் வந்ததும் புரட்சியின்முன்னேற்றம் முக்கியத்துவம் பெறத் தொடங்கி விட்டது. ரயில் பயணத்தின்போதே தயாரித்து வைத்திருந்த “இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்”ஆய்வுரைகளை போல்ஷ்விக்குகள் இருந்த கூட்டத்திலும், போல்ஷ்விக்குகள் மற்றும் மென்ஷ்விக்குகள் இருந்த கூட்டத்திலும் முன்மொழிந்து அவர் பேசுகிறார். இந்த உரைதான் பின்னர் ஏப்ரல் ஆய்வுரைகள் என அழைக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் எழுதிய “செயல் தந்திரம்” பற்றிய கடிதங்கள் “புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” ஆகியவற்றை இணைத்துத்தான் ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுரைகளைத்தான் பிளக்கனோவ் முதல் டிராட்ஸ்கி வரை எதிர்த்தனர். ஜெர்மன் ராணுவ அதிகார வர்க்கத்துடன் லெனினுக்கு தொடர்பு இருக்கிறது என ரஷ்ய முதலாளித்துவ கட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்தன. லெனினையும் அவரது தோழர்களையும் உறுதியாக எதிர்க்க வேண்டுமென மென்ஷ்விக்குகள் கூப்பாடு போட்டனர். ஆனால், நடந்தது என்ன? லெனினது கருத்துக்கள் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறை எதார்த்தமாக்கப்பட்டது.
இந்த ஆய்வுரைகள் புரட்சியின் தற்போதைய கட்டம், இடைக்கால அரசு குறித்த நிர்ணயிப்பு, சோசலிச புரட்சிக்கான வழிகாட்டுதல், அதற்காக மக்களை வென்றெடுக்கவும் விவசாயிகளை அணிதிரட்டுவதற்குமான வழிமுறைகள், கட்சி அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என பல்வேறு முக்கிய அம்சங்களை, கருதுகோள்களைக் கொண்டுள்ளது.
உலக யுத்தமும், புரட்சிகரமான தற்காப்புவாதமும்
முதலாம் உலக யுத்தம் குறித்த நிர்ணயிப்பின்படி செயல்படாததால் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பின்னடைவுக்குள்ளானது வரலாறு. ஆனால், லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் மட்டுமே இந்த யுத்தத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர். அது அவ்வளவு எளிதாக இருந்ததா? “யுத்தம் அவசியமானது”, “நாடு பிடிப்பதற்கான வழிமுறை அல்ல யுத்தம்” என்று பெரும்பான்மையான ரஷ்ய மக்கள் கருதினர்; கருத வைக்கப்பட்டனர்.
எனவே, இதற்கேற்றாற்போல் யுத்தத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் “புரட்சிகரமான தற்காப்பு” (Revolutionary Defense) என்ற நிலைப்பாட்டை இடைக்கால அரசாங்கம் எடுத்தது. இதை கடுமையாக எதிர்த்தார் லெனின். இந்த யுத்தமானது சந்தேகத்திற்கிடமின்றி கொள்ளைக்கார ஏகாதிபத்திய யுத்தம்தான் எனக் கூறினார். மூலதனத்திற்கும், யுத்தத்திற்குமுள்ள பிரிக்க முடியாத பிணைப்பைஎடுத்துரைத்து மூலதனத்தை தூக்கி எறியாமல் யுத்தத்திற்கு முடிவு கட்டாமல், உண்மையில் ஜனநாயக பூர்வமான சமாதானத்தை ஏற்படுத்துவது சாத்தியமல்ல என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென லெனின் வற்புறுத்தினார்.
‘புரட்சிகரமான தற்காப்பில்’ நம்பிக்கை கொண்டுள்ள வெகு மக்களின் நேர்மையை சந்தேகம்கொள்ளாமல் அவர்களை முதலாளிகள் ஏமாற்றுகிறார்கள் என்பதை மிகத் தீர்க்கமாக, விடாப்பிடியாக, பொறுமையாக மக்களிடம் எடுத்துக் காட்ட வேண்டியது அவசியம்.மேலும், இது போன்ற பிரச்சாரங்களை யுத்தத்தில் பணியாற்றிவரும் ரஷ்ய ராணுவவீரர்கள் மத்தியிலும் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டுமென்றார். ஏனெனில், அப்போது ரஷ்ய ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போர் வீரர்கள் பெரும்பாலும் கிராமப்புற விவசாயம் சீரழிக்கப்பட்டதால் பிழைப்பு தேடி ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களே. தற்காப்பு வாதத்திற்கு எதிரான இத்தகைய போராட்டம்தான் திட்டவட்டமான வெற்றியை கொடுக்கும் எனக் கூறும் லெனின், “ஒரு வேளை வேகமாக வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், வெற்றி எதார்த்தமாகவும், நீடித்ததாகவும் இருக்கும்” என்கிறார்.
புரட்சியின் தற்போதைய கட்டம்
நீண்ட, உதறியெறியப்பட்ட சந்தமாய்
சமகாலக் கவிஞர் கூட்டத்தால்
எள்ளி நகையாடப்படும் நான்
காலமெனும் மலைகளைத் தாண்டி வருகின்ற ஒன்றை
யாரும் காணாததைக் காண்கிறேன்
பட்டினிப் பட்டாளத்தால் மனிதனின் பார்வை
குறுக்கப்படும் அவ்விடத்தில்
புரட்சியின் முட்கிரீடம் தரித்த
1916ஐப் பார்க்கிறேன் நான்
புரட்சியை எதிர்பார்த்து அக்காலத்தின் சூழலை தனது கவிதையில் பிரதிபலிக்கிறார் கவிஞர் மயாகோவ்ஸ்கி. கலைஞனின் எதிர்பார்ப்பை கச்சிதமாக களத்தில் நிறைவேற்றுகிறார் புரட்சியாளர் லெனின்.
எப்படி?
மாறிவரும் சூழலையும், மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு புரட்சிக்கான கட்டத்தை தீர்மானிப்பது மிக முக்கியமானது. அதைத்தான் லெனின் செய்தார். “ரஷ்யாவில் இன்றைய நிலைமையின் சிறப்பம்சம் புரட்சி ஆரம்ப கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்கு மாற்றமடைய வேண்டி இருக்கிறது” என்கிறார் லெனின். அதாவது 1917 பிப்ரவரி மாதம் நடைபெற்ற புரட்சியில் அதிகாரத்திற்கு வந்த இடைக்கால அரசு புரட்சியின் முதற்கட்டமாகவும், சோசலிசத்தை நோக்கி மாறுவது இரண்டாவது கட்டம் எனவும் லெனின் வரையறுக்கிறார். “உழைக்கும் வர்க்கத்திற்கு இருக்க வேண்டிய வர்க்க விழிப்புணர்வு, ஸ்தாபன வலிமை இல்லாததால் புரட்சியின் முதல் கட்டம் முதலாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை கொடுத்தது. இரண்டாவது கட்டத்திலோ அதிகாரம் உழைக்கும் வர்க்கம்மற்றும் ஏழை விவசாயி கைகளுக்கு வரவேண்டும்” என்கிறார் லெனின். இத்தகைய முடிவுக்கு லெனின் வந்ததற்கான காரணங்களை புரிந்து கொள்வதன் மூலமாக உலகப் புரட்சிகர சக்திகள் தங்களது நாடுகளில் மார்க்சிய தத்துவத்தை சூழலுக்கு ஏற்றாற்போல் எப்படி பயன்படுத்துவது என்பதை புரிந்துகொள்ள முடியும். “ஒரு மார்க்சியவாதி சாத்தியப்பாடுகளிலிருந்து ஆரம்பிக்காமல் எதார்த்த நிலையிலிருந்து பார்க்க வேண்டும்” என்கிறார்.
மறுக்க முடியாத உண்மை என்ன வெனில், உண்மை நிகழ்ச்சிகளையும், எதார்த்தத்தின் கறாரான விபரங்களையும் ஒரு மார்க்சியவாதி கணக்கில் எடுக்க வேண்டும். நேற்றைய தத்துவங்களை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது. இந்தத் தத்துவத்தையும் மற்ற தத்துவங்களைப் போலவே பிரதானமாகவும், பொதுவாகவும்தான் கூற முடியும். வாழ்க்கையின் சிக்கலான அம்சங்களை ஸ்தூலமாக பரிசீ லிப்பது போலன்றி இது ஏறக்குறையத்தான் பரிசீலிக்கும்”. இவ்வாறு சொல்லும் லெனின், கத்தேயின் ஒரு மேற்கோளை சுட்டிக் காட்டுகிறார். “எனது நண்பனே! தத்துவம் நரைத்துப்போனது. ஆனால், வாழ்க்கை எனும் விருட்சம் பசுமையானது. சாகாவரமான வாழ்க்கை மரம்தான் பசுமையானது”. இதன்மூலம் வாழ்க்கை அனுபவத்தை, நடைமுறையை, தத்துவத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என சொல்லித் தருகிறார்.
புரட்சிக்கான பாதை
போல்ஷ்விக்குகளைத் தவிர அன்றிருந்த மற்ற அனைத்து சக்திகளும் இடைக்கால அரசான முதலாளித்துவ அரசின் மீது மாயையை உருவாக்கியவண்ணம் இருந்தன. இதை தகர்க்க வேண்டும் என்கிறார் லெனின். அதே நேரத்தில் இந்த அரசுக்கு மாற்றாக தொழிலாளர்கள்-விவசாயிகள் அடங்கிய சோவியத்துகள்தான் புரட்சிகரமான அரசு என வரையறைசெய்கிறார். இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில், தொழிலாளர்-விவசாயிகள் அடங்கிய சோவியத்துகளில் அப்பொழுது பெரும்பான்மையாக இருந்தவர்கள் ‘சோசலிஸ்ட் புரட்சியாளர்கள்’ தான். போல்ஷ்விக்குகள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனாலும், லெனின் இந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகள்தான் புரட்சிகரமான அரசாங்கத்தின் சாத்தியமான ஒரே ரூபமாகும் என்பதை வெகுஜனங்களுக்கு விளக்கிக்கூற வேண்டும் என்கிறார். ‘நாம் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் வரை தவறுகளை விமர்சித்து அம்பலப்படுத்துவதை மேற்கொள்ள வேண்டும். அரசாங்க அதிகாரம் அனைத்தும் தொழிலாளர் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்பதையும் கற்பிப்போம். அப்போதுதான் அனுபவத்தின்பேரில் மக்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வர்’. அதாவது முதலாளித்துவ அரசின் செல்வாக்கிலிருந்து மக்கள் விடுபடுவர் என லெனின் கூறுகிறார்.
அதேபோன்று தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் இவர்களின் பிரதிநிதிகள் கொண்ட சோவியத்துகளை மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை நாடெங்கிலும் கொண்ட குடியரசு அமைய வேண்டும். தற்போதுள்ள இடைக்கால அரசின் போலீஸ், ராணுவம், அதிகார வர்க்கம் ஒழிக்கப்பட வேண்டும். அதிகாரிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அவர்களை அப்பதவியிலிருந்து நீக்க உரிமை வேண்டும். அதுமட்டுமல்ல, லெனின் சொல்கிறார் அதிகாரிகளின் சம்பளம் ஒரு திறமையான தொழிலாளியின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.
உடனடியாக அனைத்து வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளோடு இணைக்கப்பட்டு அது தொழிலாளர்களின் பிரதிநிதிகளின் அதாவது சோவியத்துகளின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார் லெனின், அதே நேரத்தில் நமது உடனடி கடமை “சோசலிசத்தை புகுத்துவது அல்ல. சமூக உற்பத்திகளையும், உற்பத்தியாகும் பொருட்களின் விநியோகத்தையும் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்தின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதுதான்” என மிகப் பொருள்பொதிந்த கடமையை வரையறுக்கிறார்.
புரட்சிகர சக்தியான விவசாய வர்க்கம்
மார்க்சிய தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை லெனின் வழங்கியுள்ளார். அதில் மிக முக்கியமானது விவசாய வர்க்கத்தை புரட்சியின் அச்சாணியாக மாற்றியது. விவசாயப் போராட்டங்கள், கலகங்கள் பிரெஞ்சு புரட்சியின்போதும் நடைபெற்றது. ஆனால், போல்ஷ்விக் தலைமையிலான ரஷ்ய புரட்சியில்தான் அது மைய சக்தியாகமாறியது. அது லெனினால்தான் சாத்தியமானது. எப்படி?
ஜார் ஆண்ட ரஷ்ய அரசானது மிகப் பெரிய தேசம். அதன் ஒரு முனையானது ஜெர்மனியை ஒட்டி இருந்தது. தொழில் வளர்ச்சியடைந்த தொழிலாளர்களை மையப்படுத்திய பகுதியாக இருந்தது. மறுபகுதியானது பெரும்பாலும் விவசாயிகளை உள்ளடக்கி இருந்தது. இப்பகுதியானது ஆசிய கண்டத்தின் எல்லையை நோக்கி இருந்தது. இவ்விடத்தில்தான் லெனின் ஒரு பெரிய தேசத்தில் புரட்சியை உருவாக்க வேண்டுமெனில் ஏகாதிபத்திய-முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவசக்திகளால் சிக்கி சின்னாபின்னமாகி வரும் மக்களை புரட்சியின் அச்சாணியாக மாற்றுவதற்கான கருதுகோளை வளர்த்தெடுக்கிறார். “தொழிலாளர் கட்சி என்பதால் விவசாய (நில)திட்டத்தை முன்வைப்பதோடு மட்டுமின்றி ரஷ்யாவில் விவசாய புரட்சியின் நலன்களுக்கு உகந்த உடனடியாக நிறைவேற்றக்கூடிய நடைமுறைகளையும் முன்வைக்கவேண்டியது நமது கடமை” என கட்சி அணிகளுக்கு, கட்சிக்கு அறிவுறுத்துகிறார். “அசல் அதிகார வர்க்க புத்திமதிகளை முறியடிப்பதற்காக ஸ்தலங்களில் உள்ள விவசாய பிரதிநிதிகள் சோவியத்துகளின் முடிவுகள் பேரில் தாங்களாகவே விவசாய சீர்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்றும், உடனடியாக நில எஸ்டேட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் விவசாயிகளை கட்சி வற்புறுத்தவேண்டும்” எனக் கோருகிறார் லெனின். இதை அப்போது லெனின் மட்டும்தான் சொன்னார். மற்றவர்கள் எல்லாம் இப்போது நிலத்தை கைப்பற்ற வேண்டுமா? நிலச் சீர்திருத்தத்தை ஆரம்பிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், களமோ லெனின் சொன்னதை சாத்தியமாக்கியது.
விவசாய வர்க்கத்தை ரஷ்யப் புரட்சியின் அடிப்படையாக மாற்றியதன் மூலம் லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வற்றாத பங்களிப்பை செய்துள்ளார். அது மட்டுமல்ல, ஆசிய நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டுவதற்கான உந்து சக்தியாகவும் மாறினார் தோழர் லெனின்.
சமூக ஜனநாயக கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியதன் பின்னணி
தனதுஏப்ரல் ஆய்வுரைகளில் கட்சியின் கடமைகளாக லெனின் சுட்டிக்காட்டியதில் ஓர் அம்சம் கட்சியின் பெயரை மாற்றுவது. அதுவரை சமூக ஜனநாயகவாதிகளாக கம்யூனிஸ்டுகள் தங்களை அழைத்து வந்தனர். எனவே, அன்று சமூக ஜனநாயக கட்சி என்பது கம்யூனிஸ்ட் கட்சியாக கருதப்பட்டது. முதல் உலக யுத்தத்தின்போது சமூக ஜனநாயகத்தின் அதிகாரப்பூர்வமான தலைவர்கள் உலகெங்கிலும் சோசலிசத்திற்கு துரோகம் இழைத்துவிட்டு அந்தந்த நாட்டு முதலாளிகளின் பின்னால் அணிதிரண்டு விட்டனர். எனவே, சமூக ஜனநாயகம் என்ற வார்த்தை ‘நடுநிலையானவர்கள்’ என்ற பெயரில் அதிகார வர்க்கத்தின் சார்பானவர்களாக மாறியவர்களை குறிப்பிடும் தரம் தாழ்ந்த வார்த்தையாக மாறிவிட்டது. எனவே, “கம்யூனிஸ்ட் என்னும் பெயர் கட்சியின் இறுதி லட்சியத்தை சரியாக குறிப்பிடுவதால் சந்தர்ப்பவாதத்திற்கும், குறுகிய தேச வெறிக்கும் இடமளிக்காத வகையில் கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்றும், மேலும் புதிய அகிலத்தை அதாவது கம்யூனிஸ்ட் அகிலத்தை நிறுவ வேண்டும்” என்றும் லெனின் வழிகாட்டினார்.
நிறைவாக
இன்று உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை சாத்தியமாக்கி மனிதகுல வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக மாறிய புரட்சியை சாத்தியமாக்கியதற்கான கருதுகோள்களை உருவாக்கியது ஏப்ரல் ஆய்வுரைகள் என்றால் அது மிகையல்ல. 1917 ஏப்ரல் 24 முதல் 29 வரை பெட்ரோகிரேடில் நடைபெற்ற ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் மாநாட்டில் லெனின் முன்மொழிந்த ஆய்வுரைகள் ஏற்கப்பட்டது. இதில் 80 ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் சார்பாக 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்மாநாடு கட்சியின் அரசியல் ஒற்றுமைக்கும், ஒன்றுபட்ட சக்தியாவதற்கும் உதவி செய்தது மட்டுமின்றி ஒரு நாட்டில் சோசலிசம் வெற்றியடையும் வாய்ப்பு இருக்கிறது எனும் கூற்றையும் உறுதிபடுத்தியது.
லெனினது ஆய்வுரைகளை பிதற்றல் என்று பிளக்கனோவ் கூறியபோது லெனின் கூறினார்: “பாரிஸ் கம்யூன் அனுபவத்தை பற்றியும், தொழிலாளி வர்க்கத்திற்கு எத்தகைய அரசாங்க அமைப்பு தேவை என்பது குறித்தும் மார்க்சும், ஏங்கெல்சும் 1871, 1872, 1875 வருடங்களில் என்ன கூறினார்கள் என்பதை நினைவுபடுத்தி இணைத்து விளக்கிக் கூறுவதைவிட கூச்சலிடுவதும், திட்டுவதும் மிகவும் எளிதானது என்பதில் சந்தேகமில்லை”.
மேலும், நாம் உலகை மாற்றுவதற்காக நிற்கிறோம். கோடானுகோடி மக்களை இழுத்துள்ள கோடானகோடி மூலதனத்தின் நலன் சம்பந்தப்பட்ட ஏகாதிபத்திய உலக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நிற்கிறோம். மனித சமுதாயத்தின் சரித்திரம் கண்டிராத மிகப்பெரிய பாட்டாளி வர்க்க புரட்சியால்தான் இந்த யுத்தத்திற்கு முடிவு கட்டி உண்மையான ஜனநாயக சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.
இருந்தாலும், நம்மைக் கண்டு நாமே பயப்படுகிறோம். “அன்பான பழைய” சட்டையை தூக்கி எறிய கஷ்டப்படுகிறோம். கறை படிந்த சட்டையை தூக்கி எறிந்துவிட்டு லினன் சட்டை அணிவோம்” என்கிறார் லெனினது துணைவியும், தோழருமான குரூப்ஸ்கயா தனது நினைவுக் குறிப்புகளில். “நெருக்கடியான காலகட்டங்களில் ஆலோசனை தேவைப்படும் தருணத்தில் எப்போதும் லெனின் மார்க்ஸ், ஏங்கெல்சிடமே செல்வார். தான் எதிர்நோக்கும் சூழலில் மார்க்ஸ் இருந்தால் என்ன செய்வார்? எத்தகைய நிலைபாடு எடுப்பார்? என்ற அடிப்படையிலேயே லெனினும் செயல்படுவார். மார்க்சின் உண்மையான சீடன் லெனின்” என்கிறார்.
இப்படியாய் மார்க்சியத்தை தனது காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றாற் போல் வளர்த்தெடுத்து ரஷ்ய புரட்சியை சாதித்தார் லெனின்.
இந்தியாவில் பெரும்பகட்டோடு உருவாக்கப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் கொடூரங்களும், பலவீனங்களும் பளிச்செனத் தெரிய ஆரம்பித்து விட்டன. இதைப்பார்த்து உருவான இளைய தலைமுறை இக்கொள்கையின் விளைவுகளுக்கெதிராக எழுச்சியுடன் போராடிவருகிறது. சர்வதேச நிதி நிறுவனத்தால் திட்டமிட்ட சூறையாடல்களுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்களின் ஆதரவை அடித்தளமாகக் கொண்ட புரட்சிகர கட்சியை கட்டுவதன் மூலம், இந்திய மண்ணில் புரட்சியை சாதிக்க மார்க்சிடம் மார்க்சியம் பயில்வதும், லெனினிடம் லெனினியம் கற்பதும் நம் காலத்தின் அவசிய தேவை.
Leave a Reply