வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …


ஜான் பெல்லாமி ஃபாஸ்டர்

[பிரிட்டனில் 1949 மே முதல் வெளியீட்டைத் துவக்கிய, மார்க்சீய சித்தாந்த மாதப் பத்திரிக்கையான புகழ் பெற்ற “மன்த்லி ரிவ்யூ” பத்திரிக்கையின் ஆசிரியராக தற்போது ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் இருந்து வருகிறார். இவர் ஓரிகன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியறும் கூட. மார்க்சீயத்தின் அடிப்படையில் சூழலியல் பற்றிய ஆய்வுகளில் பெயர் பெற்றவராக விளங்கி வருகிறார். சூழலியல் பற்றிய கேள்விகளுக்கு மார்க்சீயத்தின், குறிப்பாக மார்க்சின் எழுத்துக்களின், அடிப்படையில் புதிய விளக்கங்கள் உருவாகி வருவதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். பிரண்ட் லைன் இதழில் வெளியான அவரது   நேர்காணலின் ஒரு பகுதி இங்கே இடம்பெறுகிறது ]

வளர்சிதை மாற்றப் பிளவு பற்றிய மார்க்சின் கோட்பாடு எனும் அவரது புகழ் பெற்ற கட்டுரை, சமூகவியலுக்கான அமெரிக்க சஞ்சிகை ஒன்றில் பிரசுரமானது. இதில் வளர்சிதை மாற்றப் பிளவு எனும் கோட்பாட்டினை அவர் அறிமுகம் செய்துள்ளார். இவ்வார்த்தைக் கோர்வையே மார்க்ஸ் உருவாக்கியதுதான். முதலாளித்துவ அமைப்பின் கீழ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் ஏற்படக்கூடிய, அழிவை ஏற்படுத்தக்கூடிய, மாற்றங்களை நோக்கிய செயல்முறைகளை, வெளிப்படுத்தும் வகையில் வளர்சிதை மாற்றப் பிளவு என்பதை அவர் கையாண்டார். தவிர உலகெங்கிலும் சூழலியல் பற்றிய அவரது புதிய விளக்கமானது சூழலியல் பற்றிய கேள்விகளை மார்க்சீயத்துடன் தத்துவார்த்த அடிப்படையில் இணைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குகிறது.சூழலியல் பற்றிய the vulnerable planet a short history of environment எனும் ஃபாஸ்டரின் சமீபத்திய புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இன்றைய தினம் சூழலியலில் உருவாகியுள்ள சிக்கல்கள் யாவும் முதலாளித்துவ பொருளாதார அமைப்புடன் நெருக்கமானதாக, அதன் ஒரு பகுதியாக, இருந்து வருவதை தனது ஆய்வில் மையப்படுத்தியதன் விளைவாக இந்த புத்தகம் சர்வதேச அளவில் பெரும் கவனிப்பை பெற்று வருகிறது. ஃபாஸ்டரைப் பொறுத்தமட்டில் உலகளாவிய சூழலியல் பேரபாயம் என்பது முழுமையாக வியாபித்து நிற்கும் நெருக்கடியாகும். இது முதலாளித்துவத்தின் விளைவால் உருவானது. இதன்பொருட்டு முதலாளித்துவ அமைப்பில் முழுமையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. சூழல் பாதுகாப்பு என்பது முதலாளித்துவத்துடன் இணக்கமாக இருக்கக் கூடியதல்ல என்று அவர் கூறுகிறார். இதன் பொருட்டு ஜெர்மன் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் ரோஸா லக்ஸம்பர்க்கை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். மனித குலத்தின் முன்னே தெரிவு செய்வதற்கு சோஷலிசம் அல்லது அதற்கு எதிரான மறுமுனை ஆகிய இரண்டு வழிமுறைகளே உள்ளது என்று ஃபாஸ்டர் எச்சரிக்கிறார்.

மனித குலத்திற்கும் இயற்கைக்குமான உறவு பற்றி பொருள்முதல்வாத விளக்கத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தனது திறனாய்வை அவர் ஆதாரமாககொள்கிறார். நீடித்த சோஷலிச மாற்றுக்கு இது தவிர்க்கவியலாது என்பதை அவர் வலியுறுத்துகிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையின் அம்சமான வளர்சிதை மாற்றப் பிளவு என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள நெருக்கத்தில் உருவாகக் கூடியது. இதை மனித சமூகத்திற்கு இணக்கமாய் ஒத்திசைவாய் மாற்றுவது என்பது முன் சொல்லப்பட்ட மாற்று சமூகத்தில்தான் சாத்தியமாகும் என்று ஃபாஸ்டர் கருதுகிறார்.

ஜிப்சன் ஜான் மற்றும் ஜிதேஷ் ஆகியோர் ஃபாஸ்டருடனான நேர்காணலில் சூழலியல் பற்றி பல்வேறு வினாக்களை எழுப்பியதும் அவர் அளித்த விளக்கமும் ப்ரண்ட் லைன் இதழில் வெளியாகின அவை இங்கே தரப்படுகின்றன.

1999-ல் வெளியிடப்பட்ட வளர்சிதை மாற்றப் பிளவு பற்றிய மார்க்சின் கோட்பாடு எனும் உங்களது புகழ் பெற்ற ஆய்வுரையில் மட்டுமின்றி 2000-ல் வெளியான மார்க்சீய சூழலியல் எனும் நூலிலும் அனைவரும் அறியத்தக்க வகையில் வளர்சிதை மாற்றப் பிளவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். மார்க்சும் எங்கெல்சும் இயற்கை பற்றி என்னதான் செய்துள்ளனர்? அவர்களின் அன்றைய கருத்துக்கள் இன்றைக்கு பொருத்தமானதாக இருக்க முடியுமா?

வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கருத்துருவும், இயற்கை பற்றிய பொருள்முதல்வாத கருத்துருவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளதை பொருள்முதல்வாதிகள் என்ற அடிப்படையில் மார்க்சும் எங்கெல்சும் கண்டறிந்தனர். மேலும் இயக்கவியல் அடிப்படையில் அவர்கள் கண்டறிந்து இரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எபிகூரசின் இயற்கை பற்றிய பண்டைய பொருள்முதல்வாத தத்துவம் குறித்த மார்க்சின் ஆய்வு சிறப்பு வாய்ந்தது. சுhநnளைஉhந ஷ்நவைரபே எனும் ஜெர்மானிய இதழொன்றில் அவர் ஆசிரியர் பொறுப்பில் இருக்கையில் வெளியிடப்பட்ட அவரது முதல் கட்டுரை, பொருள் குவிப்பில் முக்கியத்துவம் வகிக்கும் வனத்திருட்டு பற்றியதாகும். அவரது பொருளாதார தத்துவக் குறிப்புகளில் இயற்கை மட்டுமின்றி, உழைப்பும் அந்நியமாவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. தவிர பாகோனின் விதி குறித்து ஆதாரமான விமர்சனத்தை க்ரண்டிரிஸ் அளிக்கிறது. அதாவது இயற்கையின் தனித்துவம் வாய்ந்த விதிகளை ஏற்பதன் மூலம் இயற்கையை வெல்ல முடியும் என்பதே பாகோனின் கருத்தாகும்.

“காரல் மார்க்சின் சூழலியல் சோஷியலிசம்” எனும் தனது புத்தகத்தில் கோஹைசைட்டோ மார்க்சின் பிந்திய கால வாழ்வில் சூழலியல் பிரச்னைகள் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்ததை வெளிப்படுத்தியுள்ளார். எங்கெல்சைப் பொறுத்த மட்டில் அவரது மகத்தான படைப்பான, முடிவு பெறாத “இயற்கையின் இயக்கவியல்” என்ற நூலில் எழுதியுள்ளார்.

சமூகத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பினை அறியும் வகையில் இயற்கையின் உலகளாவிய வளர்சிதை மாற்றம், சமூக அடிப்படையில் வளர்சிதை மாற்றம், வளர்சிதை மாற்றப் பிளவு ஆகிய கருத்துக்களை மார்க்ஸ் பயன்படுத்திக் கொண்டார். தவிர சூழலியலில் நவீன முறைகளையும் அவை இதே வகையில் மேம்படக்கூடும் என்பதையும் அவர் எதிர்பார்த்தார். இவ்வகையில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் வளர்சிதை மாற்றத்தை நியாயமான விதத்தில் முறைப்படுத்துவது என சோஷலிசத்தை வரையறை செய்துள்ளதோடு, மனிதனுக்கு தேவைப்படக் கூடியவற்றை நிறைவு செய்யும் அதே நிலையில் சக்தியை பாதுகாப்பதாகவும் சோஷலிசம் அமையும் என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு தனி நபருக்கும் புவி சொந்தமானதல்ல. அல்லது இக்கோளத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் சொந்தமானதல்ல. அவர்கள் எதிர்வரும் சந்ததியினருக்காக இதை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதை நலிவுறாதிருக்கச் செய்வதோடு இதை தங்களின் குடும்பச் சொத்தாக மேம்படுத்திடவும் வேண்டும்.
முதலாளித்துவத்திற்கும் சூழலியலுக்கும் இடையிலான தொடர்பினை புரிந்து கொள்ளும் வகையில் உறுதிமிக்க ஆதாரம் அதுவும் அறிவியல் ரீதியில் அளித்திருப்பதைப்போல் வேறு எந்த ஆய்வுரையும் அளிக்கவில்லை என்று என்னால் உறுதியாக வாதிட முடியும். ஆயினும் இது திறனாய்வில் ஒரு வழிமுறைதான். நாம் இவற்றுடன் வேறு பலவற்றையும் இணைத்திட வேண்டும். நமது காலத்திய பிரத்தியேக வரலாற்றுத் தன்மையினை பிரதிபலிக்கும் வகையில் நாம் அறிந்திருக்கக்கூடிய சூழலியல் மாற்றங்கள் சமூக உறவுகள் பற்றியும், சூழலியலில் உருவாகியுள்ள சிக்கல்கள் பற்றியும் மனித ஞானம் விரிவு பெற்றமை அதன் செயல் திறன் குறித்தும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தொழில் முதலாளித்துவம் உச்சாணி நிலையில் இருக்கையில் பல்வேறு மேற்கத்திய சிந்தனையாளர்கள் அமைப்பின் மீது சீற்றம் கொண்டு இயற்கையின்பால் காதல் வயப்பட்டவர்களாய் அழகியலோடு அவற்றை வெளிப்படுத்தினர். உண்மையிலேயே அவர்கள் இயற்கையின்பால் பழைய நிலைமைக்கு திரும்புதல் என்ற வாதத்தை முன்நிறுத்தினர். முதலாளித்துவம் குறித்தான இத்தகைய விமரிசனங்களிலிருந்தும் சூழலியலில் அது ஏற்படுத்தக்கூடிய தீங்குகள் பற்றியும் மார்க்ஸ் எத்தகைய முறையில் வேறுபட்டிருந்தார்?

இயற்கை அழகியல் புரட்சி எனில் இயற்கையின்பால் திரும்புதல் எனும் ரூசோவின் கருத்தையும், ஷெல்லி, வொர்ட்ஸ்வொர்த் போன்ற இயற்கையின் மீது காதல் கொண்ட அழகியல் கவிஞர்களையும் அல்லது முந்திய காலங்களில் செயல்பட்ட தோரே போன்ற இயற்கை பாதுகாப்பாளர்களையும் கருத்தில் கொள்ளமுடியும். இவர்களின் கருத்தோட்டங்கள் இயற்கையின்பால் திரும்புதல் எனும் ஒரு வகைப்பட்ட வாதத்தை எழுப்பியது உண்மையே. மாறாக இவற்றை முந்திய நிலைக்கு திரும்பிச் செல்லுதல் எனும் அறைகூவலுக்கு பதிலளிப்பதாக கருதமுடியாது. முதலாளித்துவ சமூகத்தின் உயரிய விளைவுகளுக்கு மாற்றாக விவரணம் செய்வதற்குரிய பொருளாக முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் இருப்பினும் இதை அச்சு அசலாக ஏற்கலாகாது. இயற்கையின் முதலாளித்துவ பேரழிவு பற்றிய இயற்கை அழகியல் விமரிசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படத்தான் வேண்டும். ஏனெனில் உலகை பண மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பிடுதல் எனும் சார்லஸ் டிக்கன்ஸ் காலத்திய சமூக உணர்வோட்டத்தை இந்த அழகியல் விமரிசகர்கள் கொண்டுள்ளனர்.

சூழலியல் பற்றிய மார்க்சின் அணுகுமுறை இந்த இயற்கை அழகியலாளர்களைக் காட்டிலும் அவர் காலத்திய பொருள்முதல்வாத அறிவியலைச் சார்ந்து இருந்தது என்பது உண்மையே. இந்த அறிவியலே சூழலியல் பற்றிய கருத்தோட்டங்களின் வளர்ச்சிக்கான துவக்கமாகவும், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தாக்கம் சூழலியலில் விளைவிக்கக் கூடிய பேரழிவினை உணரத் தக்கதாகவும் அமைந்தது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதி என்ற அடிப்படையில் இந்தப் பிரச்னையில் மார்க்ஸ் அதீத கவனம் செலுத்தினார். இயல்பாக இருந்து வரக்கூடிய இயற்கை நிலையை முதலாளித்துவம் ஒரு சீரான முறையில் சீரழித்து வருவதை தனது வளர்சிதை மாற்றப் பிளவு பற்றிய கோட்பாட்டில் ஆய்வுக்கு உட்படுத்தினார். பல்வகையில் தாக்கத்தை விளைவிக்கக் கூடிய சிக்கலான கோட்பாடு என்ற அடிப்படையில் வளர்சிதை மாற்றக் கோட்பாட்டினை அவர் பயன்படுத்திக் கொண்டோதடன்றி சூழலியல் முறையின் மேம்பாட்டினையும் எதிர்நோக்கினார்.

மார்க்ஸ் ஷெல்லியை மெச்சுபவராக இருப்பினும் மார்க்சின் சூழலியல் என்பது இயற்கை அழகியல் மரபில் உருவானதல்ல. மாறாக அறிவியலானது பொருள்முதல்வாதம், இயக்கவியல் ஆகியவற்றிலிருந்து உருப்பெற்றதாகும். (மார்க்சீய சூழலியல் அறிஞரும், ஃபாஸ்டருடன் இணைந்தும் தனித்துவமாகவும் மார்க்சீய சூழலியல் பற்றிய பல்வேறு நூல்களின் ஆசிரியருமான) பால் பர்கெட் வெளிப்படுத்தியதைப் போன்று மனித குலத்தின் நீடித்த வளர்ச்சிப் போக்கு என்பதே சோஷலிசத்தின் சிறப்பம்சம் என்பதை மார்க்ஸ்அடையாளப்படுத்தியுள்ளார்.

உங்களைப் போன்ற மார்க்சீய அறிஞர்கள் பருவநிலை மாற்றம் சுற்றுச் சூழல் பேரழிவு போன்றவை முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டு வருகின்றனர். முதலாளித்துவத்தால் மனித குலத்தின் வாழ்நிலையை நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளக்கூடிய இத்தகைய பேரழிவினை எப்படி உருவாக்க முடிகிறது?

முதலாளித்துவம் என்று சொல்லப்படும் தற்போதைய பொருளாதார சமூக அமைப்பு முறை உலகின் அனைத்து சூழல் வடிவங்களை மட்டுமின்றி, மனித குலத்தின் வாழ்விடமாக இருக்கக்கூடிய ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் அச்சுறுத்தி வருவது என்பது உண்மையே. மேலும் இது இன்றைய தினம் எழுந்துள்ள கேள்வியல்ல. சமகால அறிவியல் துறை அனைத்துமே இவற்றை அறிந்துள்ளது.

2017 நவம்பரில் 184 நாடுகளைச் சார்ந்த 15000 அறிவியலாளர்கள் மனித குலத்திற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர். ஏற்கனவே விடுத்த எச்சரிக்கைதான் புதுப்பிக்கப்பட்டது.

இங்கே வினாவொன்று எழுகிறது. முதலாளித்துவத்தின் இயக்க விதிகளில் இந்த அமைப்பு முறைக்குள் பூண்டோடு அழிவது தவிர்க்கவியலாது என்ற கருத்தோட்டத்தை உருவாக்கக்கூடியது ஏதேனும் உள்ளதா என்பதே அது. ஆம் என்பதே இதற்கான விடையாகும்.

முதலாளித்துவத்தின் கீழ் “குவித்திடு, குவித்திடு” என்பதே விதியாக உள்ளது என்பதை மார்க்ஸ் முன் வைத்தார். “மோசேயின் மந்திரச்சொல்லாக மட்டுமின்றி, தீர்க்கதரிசிகள் கூறிச்சென்றதும் இதைத்தான்”. (மூலதனத்தில் மார்க்ஸ் இது போன்ற பைபிள் வசனங்களையும், கதைகளையும் நகையுணர்வுடன் சுவைபடக் கையாண்டுள்ளது அதிசயத்தக்கதாகும். உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவது பற்றி விவரிக்கையில் சொல்வதாவது: “பழைய கதைதான். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். இவ்வாறு பெற்றுக் கொண்டே போனார்கள்”)

மூலதனக் குவிப்பு என்றும் உயர்நிலையிலேயே தொடர்வதைக் காட்டிலும் வேறெதுவும் இந்த அமைப்பின் கீழ் முக்கியத்துவத்தைப் பெறுவதில்லை. இதன் பொருட்டு தங்கு தடையற்ற மடைகடந்த பொருளாதார வளர்ச்சி தேவைப்படுகிறது. மேலும் இருக்கக்கூடிய அனைத்தையும் சந்தைப் பொருட்களாக்கும் தேவையும் உள்ளது. இது உலகை வெறும் பணப் பரிவர்த்தனை பின்னல் என்ற கருத்துக்கு தள்ளுகிறது. இது பிரபஞ்சத்தின் உயிர்வேதியியல் செயல்பாடுகளில் தகர்வையோ அல்லது பிளவையோ உருவாக்குவதற்கு வழி வகுக்கிறது. இன்றைய தினம் அமைப்பு சார்ந்த சூழலியல் வல்லுனர்களைப் போலவே இச்சிக்கலை மார்க்சும் வளர்சிதை மாற்றப் பிளவாக அன்றே கருத்தில் கொண்டிருந்தார்.

தமிழில்: ராமச்சந்திர வைத்தியநாத்
நன்றி: பிரண்ட்லைன்

 

One thought on “வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s