இரா.சிந்தன்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது மாநாடு குறித்து மார்க்சிஸ்ட் இதழில் ஏற்கனவே எழுதியிருந்தோம். அந்த மாநாட்டில், ‘சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம் ஒரு புதிய வரலாற்றுக் கட்டத் தை எட்டியிருப்பதாக’ அக்கட்சி அறிவித்தது. மாநாட்டைத் தொடர்ந்து மார்ச் 3 முதல் 20 தேதி வரையில் நடைபெற்ற ‘இரண்டு அமர்வுகள்’ (சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, தேசிய மக்கள் மாநாடு) பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. இந்த முடிவுகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்தியாவுக்கு அண்டைநாடு: மிகப்பெரிய வளரும் நாடு; நம்மையொத்த மக்கள்தொகை கொண்ட நாடு என்ற காரணங்கள் மட்டுமல்லாமல், உலகின் புதிய மாற்றங்களை உள்வாங்கி முன் செல்லும் சோசலிச நாடு என்பதன் காரணமாகவும் சீனா நமது கவனத்தை ஈர்க்கிறது. சோசலிச நோக்கிலான திட்டமிடுதலும், திட்டத்தின் அடிப்படையில் உறுதியான செயல்பாடும்தான் சீனாவின் வளர்ச்சிக்கான அடிப்படைகளாகும். அந்த வளர்ச்சியின் காரணமாக சீன சமூகத்தில் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களையும், பன்னாட்டு அரங்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
நூற்றாண்டின் இரண்டு இலக்குகள்:
கார்ல் மார்க்ஸ் மெய்யறிவின் வறுமை புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘பாட்டாளி வர்க்கம் தன் அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாக மூலதனம் முழுவதையும் கைப்பற்றும். உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில் அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்த தொகையை முழு வேகத்தில் அதிகமாக்கும்.’ சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் புரிதலை உள்வாங்கியே செயல்படுகிறது.
1980களில் டெங் சியோ பிங் பேசும்போது “சோசலிசத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கு, பொருளாதார மேம்பாட்டில் நாம் மேற்கொள்ளும் சாதனைகளாலேயே முடியும். இந்த நூற்றாண்டின் இறுதியில், ஒப்பீட்டளவில் செழிப்பான நிலையை நம்மால் எட்ட முடிந்தால் அவர்கள் ஓரளவு நம்பிக்கை கொள்வார்கள். அடுத்த நூற்றாண்டின் மத்திம காலத்திற்குள் சீனத்தை மிதமாக வளர்ச்சியுற்ற சோசலிச நாடாக மாற்றியமைத்துவிட்டோமானால் அவர்கள் முழுமையான நம்பிக்கை பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள்” என்று கூறினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி தமக்கென வகுத்துக் கொண்ட இலக்குகளை சுருக்கமாக, ‘நூற்றாண்டின் இரண்டு இலக்குகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு மாநாட்டிலும் திட்டம் நோக்கிய தனது பயணத்தை ஆய்வுசெய்து சரிப்படுத்திக் கொண்டே கட்சி முன்னேறியிருக்கிறது. சீனத்தை மிதமான செழிப்புடன் கூடிய சமூகமாக (moderately prosperous society) வளர்த்தெடுப்பதுதான் அவர்களின் முதல் இலக்கு. 2020 ஆம் ஆண்டில் சீனா இந்த இலக்கை எட்டிவிடும். முதல் இலக்கின் சாதனைகளை அடித்தளமாகக் கொண்டு அடுத்த இலக்கை, அதாவது ‘சிறப்பான நவீன சோசலிச சமூகம்’ என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்” என்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி.
19வது மாநாட்டின் முடிவில், இரண்டாவது இலக்கினை, இருவேறு நிலைகளாகப் பகுத்திருக்கிறார்கள். அதன்படி 2020 முதலான 15 ஆண்டுகளில் அடிப்படையான சோசலிச நவீனமயத்தை நிறுவ வேண்டும் என்றும் அடுத்த 15 ஆண்டுகளில் செழிப்பான, வலிமையான, ஜனநாயகப் பண்புகள்கொண்ட, முன்னேறிய பண்பாட்டுச் சூழலை உடைய, நல்லிணக்கம் கொண்ட (harmonious), அழகிய நாடாக நவீன சீனத்தை கட்டமைக்க வேண்டும். அதாவது அவர்கள் ஏற்கனவே வரித்துக்கொண்ட கால அளவிலிருந்து 15 ஆண்டுகள் முன்கூட்டியே இதனைச் சாதிக்கமுடியும் என்கிறார்கள்.
சோசலிசத்தின் தொடக்க நிலை:
ஜி ஜின்பிங் பேசும்போது, ‘சீனா இன்னும் சோசலிசத்தின் தொடக்க நிலையிலேயே (primary stage of socialism) உள்ளது. உலகின் மிகப்பெரிய வளரும்நாடு என்ற அதன் நிலையில் மாற்றம் ஏதும் இல்லை’ எனக் குறிப்பிடுகிறார். எனவே முதலில் சோசலிசத்தின் தொடக்கநிலை என்றால் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்.
முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கி மாறிச் செல்லும் இடைநிலைக் கட்டமே சோசலிசம் என மார்க்சும் எங்கல்சும் கூறுகின்றனர். அதாவது சோசலிசத்தின் வழியாகவே, கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டம் உருவாகிறது. இந்தப் புரிதலில் இருந்துதான் ‘சோசலிசத்தின் தொடக்கநிலை’ என்ற கருத்துரு உருவானது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிக் காலகட்டத்தில் நிலவுகின்ற உற்பத்திச்சக்திகளின் வளர்ச்சிநிலையைப் பொறுத்து பல இடைக்கால நிலைகளை உருவாக்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 13 வது மாநாட்டில் இருந்து இது படிப்படியாக தெளிவுபடுத்தப்பட்டது. சீனப் புரட்சியின்போது, சீனா அரை நிலவுடமை-அரைக்காலனிய நாடாக இருந்தது. எனவே அதன் காரணமாக சீனத்தின் பொருளாதாரத்தை சோசலிசத்தை நோக்கி எடுத்துச் செல்லுதல் மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்பட முடியும். 1952 ஆம் ஆண்டில் சீனத்தின் தனிநபர் உற்பத்தி (per capita GNP) இந்தியாவை விடவும் குறைவாக இருந்தது. சோவியத் ஒன்றியம் 1928 ஆம் ஆண்டில் கொண்டிருந்த தனிநபர் உற்பத்தியில் ஐந்தில் ஒருபங்குக்கு அது சற்றே அதிகமாகும். எனவே, ஒரு நவீன சோசலிச சமூகமாக சீனாவை வளர்த்தெடுக்க குறைந்தது நூறு ஆண்டுகள் பிடிக்கும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிட்டது. இவ்வாறு மாறிச் செல்வதற்கான நடைமுறையையே ‘சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசத்தைக் கட்டமைத்தல்’ என அவர்கள் அழைத்தனர்.
பரிணமித்து எழுந்துள்ள முதன்மை முரண்பாடு:
சீனத்தில் நிலவும் முரண்பாடுகளைப் சீர்தூக்கிப்பார்த்தே கம்யூனிஸ்ட் கட்சி தனது உத்திகளை வகுத்துக் கொண்டிருக்கிறது. 1949 ஆம் ஆண்டுகளில் “மக்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும், நிலவுடைமைக்கும், கோமிண்டாங் சக்திகளின் மிச்சசொச்சங்களுக்கும் இடையிலான முரண்பாடு” முதன்மையானதாக மதிப்பிடப்பட்டது. 1981 ஆம் ஆண்டுகளில் “மக்களின் பொருளியல், பண்பாட்டு தேவைகளுக்கும் பின்தங்கிய சமூக உற்பத்திக்கும் இடையிலான முரண்பாடு” முதன்மையாக எழுந்தது.
தற்போது சீன சமூகத்தில் பரிணமித்திருக்கும் முதன்மை முரண்பாடு குறித்து கட்சி சீர்தூக்கிப்பார்த்துள்ளது. சீன மக்களுடைய அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்துவரும் போதிலும், அந்த நாட்டின் மக்களிடையே புதிய தேவைகள் உருவாகி வருகின்றன. மக்களின் பொருளியல் மற்றும் பண்பாட்டுத் தேவைகள் மட்டுமல்லாமல், ‘மக்களாட்சி, சட்டத்தின் ஆளுகை, நீதி – நேர்மை, பாதுகாப்புணர்வு மற்றும் சூழலியல்’ என தேவைகள் வளர்ந்து வருகின்றன. எனவே அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும்.
கடந்த ஆண்டுகளின் திட்டமிட்ட வளர்ச்சியின் காரணமாக சீனத்தின் உற்பத்தி சக்திகள் குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் சீனத்தின் பல பகுதிகள் உற்பத்தியில் உலகிற்கே முன்னோடியாக உள்ளன. எனினும், வட்டாரங்களுக்கு இடையிலும், சமூகப் பிரிவுகளுக்கு இடையிலும் வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளும், போதாமையும் நிலவுகின்றன.
எடுத்துக்காட்டாக குசோவ் பகுதியில் ஆண்டு சராசரி வருமானம் 15,121 யுவான். இந்தத் தொகை ஷாங்காயில் நிலவும் சராசரி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகும். மக்கள் சமூகக் குழுக்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். நகரங்களுக்கும், ஊர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், போக்குவரத்து வசதிகளில் முன்னேற்றம் என தேவைகள் ஒருபக்கம் எழும்போது – மற்றொரு பக்கம் தேவைகள் நிறைவடைந்த மக்களிடையே ஏற்கனவே குறிப்பிட்ட புதிய வேட்கைகள் உருவாகியுள்ளன. இவ்வாறு சீன சமூகத்தில் எழுந்துள்ள முதன்மை முரண்பாடு, சீனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தும்.
சீனாவை கட்டுப்படுத்த விரும்பும் சக்திகள்:
அதேபோல பன்னாட்டுச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். உலகின் மிகப்பெரிய நாடான சீனா தற்போது பல அளவுகோல்களில் வலிமையடைந்து வருகிறது. சீனா வலிமையடைவதனால் எழுகின்ற சவால்கள் முக்கியமானவை. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு உறுப்பினரான லீ ஷன்சூ இதுபற்றிக் குறிப்பிடும்போது, “பன்னாட்டுச் சக்திகள் பலவும் சீனாவைக் கண்டு கிலியடைகிறார்கள், (சீனாவை) கட்டுப்படுத்தி (contain) அல்லது கட்டாயப்படுத்தி நிறுத்த வேண்டும் என்கிற முடிவை அவர்கள் மேற்கொள்கின்றனர்” எனக் கூறுகிறார். அவர் குறிப்பிடுவது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் பயன்படுத்திய சொற்களைத்தான்.
சீனப் பொருட்கள்மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த சில கட்டுப்பாடுகளும், அதற்கு பதிலடியாக சீனா விதித்த கட்டுப்பாடுகளையும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவின் பங்குச்சந்தையில் கடும் விளைவுகளை இந்த முடிவு ஏற்படுத்தியது. இதுவொரு வணிக யுத்தமாக மாறிவிடக் கூடாது என்ற கருத்து சர்வதேச தளத்தில் எழுகிறது. 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகான உலகமய சூழலில், சீனா மெல்ல மைய அரங்கை நோக்கி நகர்வது புலப்படுகிறது.
எனவே சீனத்தின் உள்நாட்டு சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், பன்னாட்டுச் சூழலை எதிர்கொண்டு நிற்கவேண்டிய தேவை, நூற்றாண்டின் அடுத்த இலக்கினை நோக்கி மாறிச்செல்ல வேண்டிய தேவையும் – கட்சியின் இலக்குகளில் பகுப்பாய்வு மேற்கொண்டு மாற்றங்களைச் செய்வதற்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன.
நவீன மயமான சீன சமூகத்தை நோக்கி:
2020 ஆம் ஆண்டிலிருந்து, அடுத்த இலக்குக்கான பயணம் தொடங்குகிறது. சோசலிச நவீனமயத்தை நோக்கி சீனா முன்னேற வேண்டியுள்ளது. அதன் வழியே மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் புதிய வேட்கைகளை நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை எதிர்கொள்ளவும் வேண்டும். இதுபற்றி அக்கட்சியின் தலைவர்கள் குறிப்பிடும்போது, “இன்றுள்ள வளர்ந்த முதலாளித்துவ நாடுகள், நவீனமயத்தை எட்டுவதற்கு தொழிற்புரட்சிக்குப் பின்னர் 300 ஆண்டுகள் தேவைப்பட்டன. அதோடு ஒப்பிடுகையில் சீனா அளவிலும் வே கத்திலும் அளப்பரிய மாற்றத்தை சாதிக்க வேண்டியுள்ளது. பொருளாதாரம், அரசியல் விசயங்கள், பண்பாடு, சமூகம் மற்றும் சூழலியல் துறைகளின் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. இவை சமூகத்தை முன்னோக்கி செலுத்தும். மேலும் உத்தி அடிப்படையிலான முக்கியத்துவம் வாய்ந்தவை – இந்த வெற்றியை சாதிக்க தத்துவ, அரசியல் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை” என்கின்றனர்.
உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதும், அடிமைத் தளைகளில் இருந்து மக்களை விடுவிப்பதும், சுரண்டலை, பிரிவினைகளை ஒழிப்பதும் சோசலிசத்தின் அடிப்படைகளாகும். அதன் மூலமே வளர்ச்சியை அனைவருக்குமானதாக்க முடியும். இவ்விசயத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அடையும் முன்னேற்றம் ஒரு நாட்டின் சாதனையாக மட்டும் முடிந்து விடாது. மார்க்சிய – லெனினிய அடிப்படையில் அடைகிற வெற்றி என்ற வகையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் அது முக்கியமானது. உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அது அமைகிறது. விஞ்ஞான சோசலிசத்தின் உயிர்த்துடிப்பான முன்னுதாரணமாகவே சோசலிச நாடுகளின் வெற்றிகளைக் கருத வேண்டும்.
வலிமையான கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை:
அரசும் புரட்சியும் என்ற நூலில் தோழர் லெனின் குறிப்பிடும்போது, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் மேலாண்மை ‘முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி விட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல; முதலாளித்துவத்தை வர்க்கங்களில்லாத சமுதாயத்திலிருந்து கம்யூனிசத்திலிருந்து பிரித்திடும் வரலாற்றுக் காலகட்டம் முழுமைக்கும் தேவைப்படுகிறது’ என்கிறார். மேலும் அவர் அந்த இடைக்காலத்தில் உருவாகும் பலதரப்பட்ட அரசியல் வடிவங்களின் சாராம்சம் ‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே’ அதாவது மெய்யான ஜனநாயகமாகவே இருக்கும் என்கிறார்.
வலிமையானதும், மார்க்சியத்தில் பற்றுறுதி கொண்டதும், ஜனநாயக மத்தியத்துவ நெறிகளின் அடிப்படையில் இயங்குவதுமான கட்சி இல்லாமல் இது சாத்தியமில்லை. மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப கட்சியைத் தகவமைத்து, சோசலிச காலகட்டம் முழுமைக்கும் இடைவெளியில்லாத போராட்டங்களை நடத்த வேண்டும். அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது.
‘கட்சி நிறுவப்பட்ட தொடக்ககால இலக்குகளுக்கு உண்மையாக இருப்பது’ குறித்த பிரச்சாரத்தை, கட்சிக்குள் முன்னெடுக்க உத்தி வகுத்துள்ளனர். அதாவது அவர்கள் சோசலிச லட்சியங்களைக் குறித்த பிரச்சாரத்தினை உட்கட்சி முழுவதும் நடத்தவுள்ளனர். மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அசமத்துவ வளர்ச்சி என்ற சிக்கலை எதிர்கொள்வதில் குவிக்கப்படவுள்ளது. புதிய சவால்களை எதிர்கொள்ள புதிய சிந்தனைகளையும், புதிய அளவுகோல்களையும் கைக்கொள்ள வேண்டும் என உணர்ந்துள்ளனர்.
கட்சிக்குள் முன்னெடுக்கப்படும் மாற்றங்கள்:
சீன மக்களிடையே அதிகரித்து வரும் தேவைகளை நிறைவேற்றுவது ஒரு உயிர்த்துடிப்பான கட்சி இல்லாதபோது சாத்தியமில்லை. மக்களாட்சி, சட்டத்தின் ஆளுகை, நீதி – நேர்மை, பாதுகாப்புணர்வு மற்றும் சூழலியல் ஆகிய வேட்கைகளை கட்சி நிறைவேற்றியாக வேண்டும். அதற்கேற்ற வகையில், மார்க்சிய நோக்கில்,காலத்தில் முந்திச் செயல்படும் கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட வேண்டியுள்ளது. மக்கள் ஆதரவுடன், தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்ளும் தகுதியுடன், சோதனைகளை எதிர்கொண்டு அக்கட்சி முன்செல்ல வேண்டும். ஜனநாயக மத்தியத்துவத்தை உயர்த்திப் பிடித்து, கட்சிக்குள் நேர்மறையான, ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டை வளர்த்தெடுக்கவும், ஒருங்கிணைப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
அதேசமயம் சீன கட்சி மேற்கொண்டுள்ள சில மாற்றங்கள் உலக அரங்கில் விவாதத்தை கிளப்புவதாகவும் அமைந்திருக்கின்றன.
சீன கட்சியின் அமைப்புச் சட்டத்தில் ‘புதிய காலகட்டத்திற்கான சீன பண்புகளுடன் கூடிய சோசலிசம் குறித்த ஜி ஜின்பிங் சிந்தனைகள்’ என்ற வரிகளை இணைத்துள்ளனர். அது பற்றி லி ஷான்சு குறிப்பிடும்போது, “18வது தேசிய மாநாட்டிக்குப் பின்னர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவினால் கடைப்பிடிக்கப்பட்ட புதிய கருத்துகள், புதிய சிந்தனை மற்றும் தேசிய ஆளுகைக்கான புதிய உத்திகளையே அவ்வாறு குறிப்பிடுவதாக கூறுகிறார். மேலும் ஏற்கனவே அந்த நாட்டு கட்சியின் தலைமை ஜி ஜின்பிங் தலைமைக்கு ‘கோர்’ எனப்படும் முக்கிய தலைவர்களுக்கான இடத்தைக் கொடுத்தது. இதற்கு முன்பாக தோழர்கள் மாவோ, டெங் சியோபிங் ஆகியோர் கோர் என்ற இடத்தைப் பெற்றுள்ளனர்.
நூற்றாண்டுக்கான இரண்டு இலக்குகளில் இது மாறிச்செல்லும் காலகட்டம் என்பதால், ஒருவர் நாட்டின் தலைவராக நீடிக்கும் பதவிக்காலத்திற்கு இருந்த கட்டுப்பாடுகளை அகற்றியிருக்கின்றனர். இது தனிநபரிடம் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்குமா? என்ற கேள்விகளும் எழும்புகின்றன.
“இத்திருத்தங்கள், அரசமைப்பிலும் கட்சியிலும் செயல்படும் தலைவர்களுக்கு ஓய்வுகொடுக்கும் முறைமையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆயுள் காலத்திற்கும் பதவியில் நீடிக்கலாம் என்ற பொருளையும் தராது” என சீன பத்திரிக்கையான பீப்பிள்ஸ் டெய்லி தெரிவிக்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு முன் உள்ள நான்கு பரிசோதனைகள் மற்றும் நான்கு பேராபத்துகளைப் பட்டியலிட்டிருக்கிறது. ஆளுகை, பொருளாதார சீர்திருத்தம், சந்தைப் பொருளாதாரம் மற்றும் வெளியில் உள்ள சூழல் ஆகியவை கம்யூனிஸ்ட் கட்சிக்கு முன்னுள்ள நான்கு பரிசோதனைகள். தூண்டுகோல் இல்லாதது, திறமைக் குறைவு, மக்களின் ஈடுபாடின்மை, செயலின்மை/ஊழல் ஆகிவை நான்கும் பேராபத்துகளாகும்.
சீனத்தில் சோசலிசத்தை தக்கவைக்கும் சக்திககளின் போராட்டமாகத்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி தன் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிடுவதைப் போல, “சோசலிசத்தை வலிமைப்படுத்தி உறுதிப்படுத்த முன்நிற்கும் சக்திகளுக்கு உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்டுகளின் ஆதரவு என்றென்றைக்கும் இருக்கும். சீன கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிசத்தை வலிமைப்படுத்துவதில் எட்டும் ஒவ்வொரு சாதனையும், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தை முன்னேற்றுவதற்கான பங்களிப்புகளாகும்.”
Leave a Reply