கார்ல் மார்க்ஸ் 200 பிறந்த தினக் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதிலும், தமிழகத்திலும் நடைபெற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஏராளமான கிளைகளில் மார்க்ஸ் குறித்து தோழர் லெனின் எழுதிய கட்டுரை வாசிக்கப்பட்டது.
இம்முயற்சிக்கு நவின தொழில்நுட்ப உதவிகளை மார்க்சிஸ்ட் இதழின் வழியே செய்தோம். சுமார் 3000 தரவிறக்கங்கள் மூலம் ஒலிக் கோப்புகள் மற்றும் எழுத்துக் கோப்புகள் பெறப்பட்டன. தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. மார்க்ஸ் வாசிப்பை கொண்டாட்டத் துடன் முன்னெடுத்துவரும் தோழர்களுக்கு வாழ்த்துகள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, லண்டனில் உள்ள மார்க்ஸ் நினைவு நூலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இரண்டு தலைப்புகளில் உரையாற்றினார். இந்தியாவில் ஜனரஞ்சகவாத தேசியம் குறித்த அவருடைய உரை, தமிழில் தரப்படுகிறது.
இந்துத்துவம் முன்நிறுத்துகிற தேசியத்தையும், பாசிசத்திற்கு பிறகான உலக சூழலில் அதன் தாக்கத்தையும் இக்கட்டுரை விவரிக்கிறது. தமிழில் தோழர் இரா.சிந்தன் வழங்கியுள்ளார்.
முதலாளித்துவ சமூகம் பிறப்பித்த தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டி, அரசியல்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்த மார்க்ஸின் கருத்துக்களை முன்வைத்து தோழர் பி.டி.ரணதிவே 1985-ம் ஆண்டில் எழுதியிருந்த கட்டுரையை அடியொற்றி தோழர் அன்வர் உசேன் எழுதியுள்ள கட்டுரை இந்த இதழில் வெளியாகியுள்ளது.
தொழிற்சங்க முன்னணியில் பணியாற்றுவோர் மட்டுமல்லாது, மார்க்சிஸ்டுகள் அனைவருமே படித்து உள்வாங்கவேண்டிய கட்டுரை அது.
மகாராஷ்ட்ர மாநில விவசாயிகளின் வீரஞ்செறிந்த நீண்ட பயணம் குறித்த கட்டுரையை சென்ற மாத இதழில் விரிவாக வெளியிட்டோம். அந்தப் போராட்டத்தின் பின்னணியில் நிலவும் அடிப்படை தத்து வார்த்த அம்சங்களை விளக்கி தோழர் அஷோக் தவாலே எழுதிய கட்டுரையை தோழர் வீ. பா. கணேசன் தமிழில் வழங்கியுள்ளார்.
கட்சித் திட்டம் பற்றிய கட்டுரைத் தொடரில் மதச் சார்பின்மை குறித்த அம்சங்களை தோழர் என். குணசேகரன் முன்னெடுத்து வைத்துள்ளார்.
மன்த்லி ரிவ்யூ மாத இதழின் ஆசிரியர் ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் இன்றைய சூழல் நெருக்கடியின் பின்னணியில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் மார்க்சியம் குறித்த கருத்துக்களை முன்வைத்த பேட்டி(யின் இரண்டாம் பகுதி) இந்த இதழில் வெளியாகிறது. தோழர் ராமச்சந்திர வைத்யநாத் இதை தமிழில் வழங்கியுள்ளார்.
பின் அட்டையில் கார்ல் மார்க்ஸ் குறித்து தோழர் எங்கல்ஸ் நிகழ்த்திய இறுதி உரை இடம்பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்களை ஒவ்வொரு மாதமும் கூட்டுவதில் தோழர்கள் முன்முயற்சி எடுத்திடக் கோருகிறோம். சந்தா சேர்ப்பு, வாசிப்பு இரண்டிலும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. நவீன வசதிகளை பயன்படுத்திப் பார்த்து கருத்துக்களை தெரிவித்திடுங்கள் எனக் கோருகிறோம்.
- ஆசிரியர் குழு