அன்பான தோழர்களே, ஜூன் மாத மார்க்சிஸ்ட் இதழ் உங்கள் கைகளில் உள்ளது. நெய்தல் நிலத்தில் விரிக்கப்படும் கார்ப்பரேட் வலை குறித்து விவரிக்கும் கட்டுரை தமிழகத்தின் கடலோர நிலப்பரப்பில் லாப வெறி மட்டுமே இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்படும் திட்டங்களையும், அதனால் அப்பகுதிகளில் எழுந்துவரும் புதிய முரண்பாடுகளையும் நம் கவனத்திற்கு தொகுத்துத் தருகிறது. மக்கள் இயக்கங்களைக் கட்டமைக்கவும், உள்ளூர் அளவில் தலையீடு செய்யவும் உதவியான அக்கட்டுரையை முனைவர் அ.பகத்சிங் எழுதியுள்ளார்.
சூழலியல் சிக்கல்களும், பொருளாதார வளர்ச்சியும் குறித்த வி.பி. ஆத்ரேயாவின் கட்டுரை மேற்கண்ட நிலைமைகளோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டிய ஒன்றாகும். மூலதனத்தின் பெருக்கத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, இயற்கையை ஒட்டச் சுரண்டும் நடவடிக்கைகளை மார்க்சியம் தொடக்கம் முதலே எதிர்த்துவருகிறது. நவீன தாராளமயத்தை எதிர்த்த நம் போராட்டத்தில், சூழலியல் நோக்கு, பிரிக்கவியலாத பகுதியாகும்.
அண்மையில் நடந்துமுடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை விளக்கி இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் நிலைப்பாட்டை விளக்கி உ.வாசுகி எழுதியுள்ள கட்டுரை, வரும் 3 ஆண்டுகளில் கட்சி செல்லவேண்டிய பாதையை விளக்குவதாக அமைந்திருக்கிறது. என்.குணசேகரனின் கட்டுரை ஸ்தாபன அறிக்கையின் பகுதிகளில் இருந்து பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்து பெறப்பட்ட படிப்பினைகளை வாசகர்களுக்குத் தருகிறது.
உயர்கல்வி நிலை குறித்த கட்டுரையை பேராசிரியர் கிருஷ்ணசாமி எழுதியுள்ளார். உயர்கல்வித்துறை பல வேகமான மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் நிலையில் இவ்விசயத்தில் நம் விவாதங்களை மேம்படுத்திக்கொள்ள இக்கட்டுரை உதவும்.
கேள்வி பதில் பகுதி, 15 ஆம் நிதி ஆணையம் பற்றி விளக்குகிறது. தென்னக நிதியமைச்சர்கள், பாஜக அல்லாத மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் என இருவேறு சந்திப்புகள் அண்மையில் நடந்ததைப் பார்த்தோம். மாநில அரசுகள் நிதிப் பங்கீட்டில் பெற்றுவந்த பங்கினை மேலும் வெட்டிச் சுருக்கும் இந்த முயற்சி குறித்து வி.பி.ஆத்ரேயா தனது பதிலில் விளக்குகிறார்.
பல மாவட்டங்களில் வாசகர் வட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதன் செய்தி அறிந்தோம். புதிய தொடர்பு எண்கள் வரப்பெற்றுள்ளன. விரைவில் இணையத்திலும், அடுத்தடுத்த இதழ்களிலும் புதிய எண்கள் இடம்பெறும். வாசகர் வட்ட விவாதங்களை தொகுத்து ஆசிரியர் குழுவுக்கு அனுப்புங்கள். சந்தா சேர்ப்பிலும் வாசகர் வட்டங்களில் பங்களிப்பு தேவைப்படுகிறது, ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
- ஆசிரியர் குழு