மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)


(ஒலி: தேவி ப்ரியா)

என். குணசேகரன்

உண்மையான மதச்சார்பின்மை கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி திகழ்கிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை பேணிக்காக்க உறுதி கொண்ட அரசாக புரட்சிக்குப் பிறகு அமையும்  மக்கள் ஜனநாயக அரசு செயல்படும்.

கட்சித் திட்டம் மதச்சார்பின்மை கோட்பாடு பற்றிய  அழுத்தமான நிர்ணயிப்புக்களைக் கொண்டுள்ளது. புரட்சிக்கு பிறகு அமையும் அரசு எவ்வாறு செயல்படும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்ட காலத்தில் இந்து, இஸ்லாமிய உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடினர். இதனால்தான் இந்தியா காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. இந்த ஒன்றுபட்ட போராட்டத்தினால் மதச்சார்பின்மை நெறி மக்களிடையே வளர்ந்தது.

ஆனால் விடுதலைக்குப் பிறகு வந்தவர்கள் இந்த கோட்பாட்டிற்கு துரோகம் இழைத்தனர்.

கட்சித் திட்டத்தில் “V – அரசு கட்டமைப்பும் ஜனநாயகமும்” என்ற தலைப்பில் முதலாளித்துவ அரசு எவ்வாறு மதச்சார்பின்மை கோட்பாட்டை நீர்த்துப்போக செய்து அழித்து வருகிறது, உண்மை விரிவாக விளக்கப்படுகிறது;

“….அரசியலையும், மதத்தையும் முற்றாக பிரிப்பது என்பதற்குப் பதிலாக அரசு மற்றும் அரசியல் வாழ்க்கையில் அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் சமமாக தலையிடுவதற்கான சுதந்திரம் என்பதே மதச்சார்பின்மையின் பொருள் என மக்களை நம்ப வைக்க முயல்கின்றனர்…” என்று அழுத்தமாக ஆட்சியாளர்கள் மீது கட்சித் திட்டம் குற்றம் சாட்டுகிறது.

இதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1986-ஆம் ஆண்டு தனது சரியும் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், தேர்தல் ஆதாயத்திற்காகவும் அயோத்தியாவில் வழிபாடு எதுவும் நடக்காமல் இருந்த பாபர் மசூதியின் கதவுகளை திறந்து விட்டு இந்துக்களின் ஆதரவினை பெற முயன்றார். இதுதான் வகுப்புவாத வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது.

இதுபோன்று, இதுவரை வந்த இந்திய ஆட்சியாளர்கள் அனைவரும் அவ்வப்போது மதச்சார்புடன் நடந்து வந்துள்ளனர்.  “மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை உறுதியுடன் எதிர்ப்பதற்கு பதிலாக, முதலாளி வர்க்கம் அதற்கு சலுகை வழங்கி வலுப்படுத்துகிறது” என்று இதனை கட்சித் திட்டம் குறிப்பிடுகிறது.

அரசியல் ஆதாயத்திற்கு அரசியலிலும், அரசாங்க செயல்பாட்டிலும் மதத்தை பயன்படுத்திக் கொள்ளும் அரசுகளாக, கடந்த காலங்களில் இருந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் இருந்து வந்துள்ளனர்.

பாஜக இன்றுள்ள மதச்சார்பின்மை கொள்கையை ஒழிக்க கங்கணம் கொண்டுள்ளது. “மதவெறி மற்றும் பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான கூட்டம் வளர்ந்து மத்தியில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளதால் மதச்சார்பின்மை அடித்தளத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசு, நிர்வாகம், கல்வி அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை மதவெறி மயமாக்க திட்டமிட்ட வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று கட்சித் திட்டம் கூறுவது இன்றைய நிலைமைக்கும் முழுமையாகப் பொருந்தும்.

இந்துத்துவ முயற்சிகள் இயல்பாகவே சிறுபான்மை மதவெறியை வலுப்படுத்துகின்றன. இதனை  கட்சித் திட்டம் “பெரும்பான்மை மதவெறியின் வளர்ச்சி சிறுபான்மை மதவெறி சக்திகளை வலுப்படுத்தும், … நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கும்” என்று எச்சரிக்கிறது.

ஊசலாட்டமற்ற நிலை

முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசை தூக்கியெறிந்துவிட்டு மலரும் மக்கள் ஜனநாயக அரசு மதச்சார்பின்மைக் கோட்பாட்டை எவ்வாறு அமலாக்கிடும் என்பதனை கட்சித் திட்டம் விளக்குகிறது, “மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்-( VI)” என்ற தலைப்பில் மதச்சார்பின்மை பற்றிய கட்சியின் அணுகுமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

முதலில் மக்களுக்கு தெளிவான ஒரு உறுதிமொழியை கட்சி திட்டம் தெளிவாக்குகிறது.

“மதச்சார்பின்மைக் கோட்பாடுகளை தொய்வின்றி செயலாக்க வேண்டும் என்பதற்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்த நமது கட்சி உறுதி பூண்டுள்ளது. மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து ஒரு சிறு விலகல் ஏற்பட்டால் கூட அதை அம்பலப்படுத்துவதோடு போராடவும் வேண்டும்.”(xv).

இது மதச்சார்பின்மையில் முதாளித்துவ கட்சிகளுக்கு இருப்பது போன்ற  ஊசலாட்டம் மக்கள் ஜனநாயக அரசில் இருக்காது என்பதனை தெளிவுபடுத்தும் கூற்று.

மதத்திற்கு எதிரானதா ?

மதச்சார்பின்மை எனும் கொள்கை மதத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து நீடித்து வருகிறது. குறிப்பாக கம்யூனிஸ்டுகளைக் குறி வைத்து இந்து மதவாதிகள் மட்டுமல்லாது, இஸ்லாமிய, இதர சிறுபான்மை மதவாதிகளும் இந்த பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு எழுதினார்:  “மார்க்சிய லெனினியவாதிகள் தெளிவாக சொல்லுவது இதுதான்; மதத்தினை  அரசியல் நோக்கத்திற்கு, தேர்தல் உள்ளிட்ட தருணங்களில் பயன்படுத்துவதை எதிர்க்கிற அதே நேரத்தில், மக்களின் மத உணர்வுகளை அவர்கள் மதிக்கின்றனர்; மக்களின் மத உணர்வுகள் அவர்கள் புண்படும் வகையில் எதையும் அவர்கள் செய்வதில்லை…”

இதே அணுகுமுறை கட்சித் திட்டத்திலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

“.. ஒவ்வொரு மதத்தினரின் உரிமைகளை – அது பெரும்பான்மை மதமாக இருந்தாலும் சரி, அல்லது சிறுபான்மை மதமாக இருந்தாலும் சரி – அல்லது எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் சரி அவர்களது உரிமைகளை கட்சி பாதுகாக்கும்.”

அரசின் செயல்பாட்டில் மதம் தலையிடாது என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

. “.அதே நேரத்தில் பொருளாதாரம், அரசியல் மற்றும் நிர்வாகம் போன்ற நாட்டின் வாழ்க்கையில் மதம் ஊடுருவும் எந்த வடிவத்தையும் கட்சி எதிர்த்துப் போராடும். பண்பாடு, கல்வி மற்றும் சமூகத்தில் மதச்சார்பற்ற, ஜனநாயக மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிக்கும். மதவெறி அடிப்படையிலான பாசிச போக்குகளின் ஆபத்து வலுப்பெற்று வருவதை எதிர்த்து அனைத்து நிலைகளிலும் அரசின் மதச்சார்பற்ற தன்மை உறுதி செய்யப்படும். நாட்டின் அரசு மற்றும் அரசியல் வாழ்வு தொடர்பான விவகாரங்களில் மத நிறுவனங்களின் தலையீடு தடை செய்யப்படும். மத ரீதியான சிறுபான்மையோர் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களுக்கு எதிரான எத்தகைய பாரபட்சமும் தடுக்கப்பட போராடும்.”

மூகத் தளத்தில் பண்பாட்டுப்பணி

அதே போன்று சமூகத் தளத்தில் செய்ய வேண்டிய கடமை பற்றியும்  கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

“ஜனநாயக, மதச்சார்பற்ற அணுகுமுறை கொண்ட ஒரு புதிய முற்போக்கான மக்கள் பண்பாட்டை வளர்த்தெடுக்க நமது மக்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை மக்கள் ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கம் உரமூட்டி வளர்க்கும்.”(xx)

ஆக, இந்திய நாட்டில் உள்ள கட்சிகளிலேயே, மிக அறிவியல்ரீதியான பார்வையுடன், மதச்சார்பின்மை குறிக்கோளை மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி காட்டும் பாதையே சரியானது என்பதை வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது.

இன்றைய நிலையில் இந்துத்துவா சக்திகளால் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எதிர்த்த போராட்டம் முக்கியமானது. அரசு, சமூகம் இரண்டு தளத்திலும் இது தீவிரப்படுத்த வேண்டும்.

சமூகத்தில் மதச்சார்பின்மை கலாச்சாரம் வலுப்படுகிறபோதுதான் புரட்சியை முன்னெடுக்கும் வர்க்கங்கள் கொண்ட மக்கள் ஜனநாயக அணி வலுப்பெறும்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: